புதன், 27 ஜனவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.31 - 2.34

 ।।2.31।। கடமையிலிருந்து வழுவக் கூடாது:

स्वधर्ममपि चावेक्ष्य विकम्पितुमर्हसि

धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत् क्षत्रियस्य विद्यते ।। ३१

ஸ்வத4ர்மமபி சாவேக்ஷய விகம்பிதுமர்ஹஸி ।।

4ர்ம்யாத்3தி4 யுத்3தா4ச்ச்2ரேயோऽந்யத் க்ஷத்ரியஸ்ய வித்3யதே ।। 31


स्व-धर्मम्    ஸ்வ-4ர்மம்  விஷேஷ தர்மத்தை(ஒருவனது கடமை

अवेक्ष्य अपि   அவேக்ஷய அபி   நோக்குமிடத்தும்   विकम्पितुम्     விகம்பிதும்  நடுங்க    

अर्हसि   அர்ஹஸி  அர்ஹதை கிடையாது   हि  ஹி  ஏனென்றால்   

धर्म्यात् युद्धात्    4ர்ம்யாத்  யுத்3தா4த்  தர்மத்திலிருந்து விலகாத யுத்தத்தைக் காட்டிலும்  

क्षत्रियस्य   க்ஷத்ரியஸ்ய  க்ஷத்திரியனுக்கு  अन्यत्  அன்யத்  வேறு  श्रेय:   ச்1ரேய:  சிறப்பு  

विद्यते     வித்3யதே   இல்லை.


ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது. அறப்போரைக் காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஸ்வதர்மத்தை கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.


விளக்கம்:

=> தர்மம்:

      சாமான்ய தர்மம் (அனைவருக்கும் பொதுவானது):

* அஹிம்சை, சத்தியம், திருடாமை, தூய்மை.

      விஷேஷ தர்மம் அல்லது ஸ்வ தர்மம்  (காலத்துக்கு காலம், மனிதனுக்கு மனிதன் மாறுபடும்) :

* வானப்ரஸ்தம் - கடமைகளைத் துறத்தல், தவம்

* க்ஷத்ரியன் - நாட்டைக் காத்தல்


எந்த மனிதன் எந்தச் செயலுக்கு நன்கு தகுதியுடையவனாகிறானோ அச்செயல் அவனது ஸ்வ-தர்மம்; அதாவது ஒருவனது கடமை அவனது ஸ்வதர்மம் ஆகிறது. விஷேஷ(ஸ்வ) தர்மம் சாமான்ய தர்மத்தோடு முரண்பட்டால், சாமான்ய தர்மத்தை த்யாகம் செய்ய வேண்டும்


=> முந்தய ஸ்லோகங்களில் அர்ஜுனன் தர்மத்தைக் குறித்தும், போரின் விளைவாக சமுதாயத்தில் குழப்பம் நேரிட வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தான். அதற்கு பதிலளிக்கும் விதமாக க்ருஷ்ணர் இங்கு ஒருவன் தனது கடமையை, ஸ்வதர்மத்தை செய்வதில் நடுங்குதல் கூடாது(விகம்பிதும் அர்ஹஸி) என்கிறார். அறம் காத்தல் அரசனின் ஸ்வதர்மம். க்ஷத்ரியனான அர்ஜுனன், பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தை தர மறுத்த துரியோதனனின் அதர்மத்தை தொடர அனுமதித்தல் கூடாது. தர்மத்தை நிலைநாட்டும் தனது கடமையை, நிறைவேற்றும் பொருட்டு நடைபெறும் இந்த தர்ம-யுத்தத்தை விட ஒரு க்ஷத்ரியனுக்கு வேறு சிறப்பு எதுவும் கிடையாது(க்ஷத்ரியஸ்ய அன்யத் ச்1ரேய: வித்3யதே).

---------------------------------------------------------------------------------------------------------

।।2.32।। தர்ம யுத்த வாய்ப்பே அரிது:

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्

सुखिन: क्षत्रिया: पार्थ लभन्ते युद्धमीदृशम् ।। ३२

யத்3ருச்ச2யா சோபபன்னம் ஸ்வர்க3த்3வாரமபாவ்ருதம்

சுகி2: க்ஷத்ரியா: பார்த்த2 லப4ந்தே யுத்34மீத்3ருச1ம் ।। 32


पार्थ   பார்த்த2  பார்த்தா  यदृच्छया   யத்3ருச்ச2யா  தற்செயலாய் उपपन्नं   உபபன்னம்  நேர்ந்துள்ள  

अपावृतम्   அபாவ்ருதம் திறந்துள்ள   स्वर्गद्वारम्   ஸ்வர்க3த்3வாரம் சொர்க்கவாயில்  

ईदृशम्   ஈத்3ருச1ம்  இதுபோன்ற   युद्धम्  யுத்34ம் யுத்தம்  सुखिनசுகி2அதிர்ஷ்டமுடைய  

क्षत्रिया:   க்ஷத்ரியா:  க்ஷத்ரியர்கள் தான்   लभन्ते   லப4ந்தே  அடைகிறார்கள்.


பார்த்தா, தற்செயலாய் நேர்ந்ததும், திறந்த சொர்க்கவாயில் போன்றதுமான இதுபோன்ற யுத்தத்தை அதிர்ஷ்டமுடைய க்ஷத்ரியர்களே அடைகிறார்கள்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது, இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்ப முடையார்.


விளக்கம்:

=> கடமையை செய்தலின் பலன்:

தர்ம சாஸ்திரப்படி, ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையை சரியாகவோ விபரீதமாகவோ செய்தால் அது அவனுக்கு ஒரு குறிப்பிட்ட கர்ம-பலத்தை கொடுக்கிறது. நேரடியாக கண்முன்  அனுபவிக்கும் பலன் த்ருஷ்ட பலன் எனவும், பிற்காலத்தில் அனுபவிக்கும் பொருட்டு நம் கணக்கில் சேர்க்கப்படும் கண்ணிற்கு தெரியாத பலன் அத்ருஷ்ட பலன் எனவும் கூறப்படும். மேலும் தனது கடமையை சரியாக செய்து மரணமடைந்தவன் அதன் பலனாக சொர்க்கத்தை அடைவான் என உறுதி கூறுகிறது

யத்3ருச்சா2 என்பது தற்செயல், அதாவது நமது எதிர்பார்ப்போ அல்லது விருப்பமோ இன்றி தற்செயலாய் நடப்பது. இங்கு க்ருஷ்ணர், உனது கடமையை முறையாகச் செய்தால் சொர்க்கம் பலன். ஆகவே பார்த்தா, உனது எதிர்பார்ப்பில்லாமல் தற்செயலாய் உனக்காக சொர்க்கவாயில் திறந்துள்ளது(ஸ்வர்க3த்3வாரம் அபாவ்ருதம்). இது போன்ற யுத்தம் அதிர்ஷ்டமுடைய க்ஷத்ரியர்களுக்குத் தான் கிடைக்கும்(ஈத்3ருச1ம் யுத்34ம் சுகி2: க்ஷத்ரியா: லப4ந்தே) என்கிறார்.

இது போன்ற தற்செயலாய் வந்தமையும் அனுகூலமான காலம் எல்லா மனிதர்களுக்கும் எப்போதாவது வந்தமைய வாய்ப்புள்ளது. இதை பயன்படுத்த தெரிந்து கொள்பவனே இவ்வுலகில் சீரும் சிறப்பும் அடைகிறான். இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்தாமல் போனால் வரும் விளைவு குறித்து இனி எச்சரிக்கிறார்.

-------------------------------------------------------------------------------------

।।2.33।। ஸ்வதர்மத்தை செய்யாததன் விளைவு:

अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं करिष्यसि  

तत: स्वधर्मं कीर्तिं हित्वा पापमवाप्स्यसि ।। ३३

அத2 சேத்த்வமிமம் 4ர்ம்யம் ஸங்க்3ராமம் கரிஷ்யஸி

தத: ஸ்வத4ர்மம் கீர்த்திம் ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ।। 33


अथ चेत्   அத2 சேத்  ஒருகால்   त्वम्  த்வம்  நீ   इमं  இமம் இந்த   धर्म्यं सङ्ग्रामं   4ர்ம்யம் ஸங்க்3ராமம்  தர்மத்திற்குட்பட்ட யுத்தத்தை   करिष्यसि  கரிஷ்யஸி  செய்யவில்லை எனில்   ततததஅதனால்  

स्वधर्मं कीर्तिं   ஸ்வத4ர்மம் கீர்த்திம்    உனது தர்மத்தையும் புகழையும்    हित्वा   ஹித்வா  இழந்து   

पापम्  பாபம்   பாபத்தை   अवाप्स्यसि   அவாப்ஸ்யஸி    அடைவாய்.


ஒருகால் இந்த தர்மத்திற்குட்பட்ட யுத்தத்தை நீ செய்யவில்லை எனில் அதனால் ஸ்வதர்மத்தையும் புகழையும் இழந்து பாபத்தை அடைவாய்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

அன்றி நீ இந்த தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்று பாவத்தை யடைவாய்.


விளக்கம்:

=> இத்தகைய போர் புரிவதன் மூலம் பாபத்தை தான் அடைவேன் என அர்ஜுனன் கூறியிருந்தான். அதற்கு பதிலுரைக்கும் விதமாக க்ருஷ்ணர், நீ இந்த அறப்போரை(4ர்ம்யம் ஸங்க்3ராமம்) செய்யாமற் போனால் உனது கடமையிலிருந்து வீழ்ந்தவனாகின்றாய். இது உனக்கு பாபத்தையே அடைவிக்கும்; உனது புகழையும் அழிக்கும் என்கிறார்.

=>  அதர்மத்தை செய்பவன் கேட்டை அடைகிறான். தனது கடமையாக வரும் தர்மத்தைத் தக்க தருணத்தில் செய்யாதவன் அதனினும் பெருங்கேட்டை அடைகிறான். தகுந்ததைச் செய்யாமையால் வரும் தீங்கானது, தகாததைச் செய்வதால் வரும் தீமையைவிடப் பெரிது.

-----------------------------------------------------------------------------------------

।।2.34।। கடமையை செய்யாததன் இஹ லோக விளைவு:

अकीर्तिञ्चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्

सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ।। ३४

அகீர்த்திம் சாபி பூ4தானி கத2யிஷ்யந்தி தேऽவ்யயாம்

ஸம்பா4விதஸ்ய சாகீர்த்திர்மரணாத3திரிச்யதே ।। 34


अपि   அபி   மேலும்  भूतानि  பூ4தானி உயிர்கள்(மானுடர்கள்ते  தே  உன்னை  

अव्ययाम्   அவ்யயாம்  எப்போதும்  अकीर्तिं   அகீர்த்திம்  இகழ்ந்து  कथयिष्यन्ति  கத2யிஷ்யந்தி  பேசுவார்கள்   सम्भावितस्य  ஸம்பா4விதஸ்ய போற்றுதலுக்குரிய ஒருவனுக்கு  अकीर्तिஅகீர்த்தி: தூற்றுதல் 

मरणात्    மரணாத்  மரணத்தை காட்டிலும்       நிச்சயமாக   

अतिरिच्यते   அதிரிச்யதே   அதிகமானது(மோசமானது).


மானுடர்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள். போற்றுதலுக்குரிய ஒருவனுக்கு தூற்றுதல் மரணத்தை காட்டிலும் இழிவே


பாரதியின் மொழிபெயர்ப்பு :

உலகத்தார் உனக்கு மாறாத வசையு முரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்ன ரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?


விளக்கம்:

=> இகழுடன் வாழ்தல் கொடிது:

பூ4தானி என்பது உடனிருக்கும் மற்ற மனிதர்களைக் குறிக்கும். அதாவது போர்களத்திலிருக்கும் வீரர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கூட அர்ஜுனனைப் பற்றிய அவரவர்களின் சொந்த கருத்துக்களுடன் கூடிய அனைத்து விதமான கற்பனைக் கதைகளை உரைப்பார்கள்(கத2யிஷ்யந்தி). இவ்வாறு வேகமாக பரவும் இந்த வதந்திகளையும் வசவுகளையும்(அகீர்த்தி:) மக்கள் இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து பேசுவார்கள்(அவ்யயாம்). அர்ஜுனனைப் போன்ற புகழுடன் கூடிய ஒருவனுக்கு அபகீர்த்தியுடன் வாழ்வதென்பது நிச்சயமாக மரணத்தைக் காட்டிலும் கொடியது(அகீர்த்தி: மரணாத் அதிரிச்யதே).  

-------------------------------------------------------------------------------------