।।2.25।।
अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ।। २५
அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே ।தஸ்மாதே3வம் விதி3த்வைனம் நானுசோ1சிதுமர்ஹஸி ।। 25
अयम् அயம் இது(இந்த ஆத்மா) अव्यक्त: அவ்யக்த: வெளித்தோற்றத்திற்கு வராதது(புலன்களால் அறிய முடியாது) अयम् அயம் இது(இந்த ஆத்மா) अचिन्त्य: அசிந்த்ய: சிந்தனைக்கு எட்டாதது
अयम् அயம் இது(இந்த ஆத்மா) अविकार्य: அவிகார்ய: மாறுபடாதது उच्यते உச்யதே சொல்லப்படுகிறது तस्मात् தஸ்மாத் ஆகவே एवम् ஏவம் இங்ஙனம் एनम् ஏனம் இதை विदित्वा விதி3த்வா அறிந்து अनुशोचितुम् அனுசோ1சிதும் துயரப்படுவதற்கு न अर्हसि ந அர்ஹஸி அர்ஹதை(அவசியம்) இல்லை.
இந்த ஆத்மாவானது புலன்களால் அறிய முடியாதது, சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என சொல்லப்படுகிறது. ஆத்மாவை இவ்விதம் அறிந்து துயரத்தை அகற்று.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படா திருக்கக் கடவாய்.
விளக்கம்:
=> வருந்துவது பொருந்தாது:
வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள, புலன்களால் அறியக்கூடிய ஒரு பொருள் வ்யக்தம்(व्यक्त:) எனப்படும். பகவான் இங்கு ஆத்மா புலன்களுக்கு விஷயமாக இல்லாதது(அவ்யக்த:) என்றும் மனதிற்கும் இது விஷயமாக இல்லை(அசிந்த்ய:) என்றும் கூறுகிறார். இது பாகங்கள்(அவையவம்) மற்றும் தன்மைகள் அற்றதாக இருப்பதால் மாற்றமடையாதது(அவிகார்ய:) என சாஸ்திரம் அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது(உச்யதே). ஸத், சித் மற்றும் ஆனந்தம் ஆத்மாவின் தன்மைகள் தானே என ஒருவன் கேட்டால், அது தன்மைகள் அல்ல, லக்ஷணங்கள். அதாவது அதன் இயல்பு, சொரூபம். தன்மை வேறு சொரூபம் வேறு. ஒரு பொருளின் தன்மையை மாற்றலாம் ஆனால் சொரூபத்தை மாற்ற இயலாது.
உடல் மனதை ‘நான்’ என நினைத்து, ஒருவன் தன்னை மரணத்திற்குட்பட்டவனாக, செயல் செய்பவனாக, விஷயங்களை அனுபவிப்பவனாக, சுக-துக்கத்துடன் கூடியவனாக, ஒரு சமயம் மகிழ்ச்சியையும் மறு சமயத்தில் சோகத்தையும் அனுபவிப்பவனாக தவறாக புரிந்துள்ளான். மேற்கூரிய ஸ்லோகங்களிலிருந்து ஆத்மாவை ஸத்-சித்-ஆனந்தமயமானவனாக அறிந்து தனது தவறான புரிதலை கைவிட வேண்டும். கிருஷ்ணர் அர்ஜுனனிடம், சோகப்பட எக்காரணமும் இல்லை (அனுசோ1சிதும் ந அர்ஹஸி) என்கிறார். ந அர்ஹஸி—இதன் நேரடிப்பொருள் ‘உனக்கு தகுதி இல்லை’. ஆத்மாவிற்கு மரணமில்லை என அறிந்த பின் துயரப்பட ஒருவனுக்கு எந்த தகுதியும் இல்லை.
பீஷ்மர் மற்றும் த்ரோனர் மரணத்தை குறித்த அர்ஜுனனின் துயரத்திற்கு கிருஷ்ணர் ஆத்மா உண்மையில் அழிவதில்லை. ஆகவே அதற்காக நீ துயரப்படத் தேவையில்லை என பதிலளித்தார். ஒருகால் அர்ஜுனனின் சோகம் அவர்களுடைய அனாத்மாவை குறித்தது எனில் அதற்காகவும் நீ வருந்தத் தேவையில்லை என வரும் ஸ்லோகங்களில் பதிலுரைக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ப்ரம்மம் எப்படிப்பட்டது? அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஸமுத்திரத்தைப் பார்த்திராத ஒருவனுக்கு அது இப்படிப்பட்டதென்று சொல்லும்படி வேறொருவனை நியமித்தால், அவன் ‘அது பெரிய நீர்ப்பரப்பு; எங்குப் பார்த்தலும் ஜலந்தான்’ என்று மட்டுமே சொல்லக்கூடும்.
---------------------------------------------------------------------------------------------------------------।।2.26।। ஆத்மா நித்ய வஸ்துவல்ல என்று வைத்துக் கொண்டாலும் வருந்த தேவையில்லை:
अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् ।
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि ।। २६
அத2 சைனம் நித்யஜாதம் நித்யம் வா மன்யஸே ம்ருதம் ।
ததா2பி த்வம் மஹாபா3ஹோ நைவம் சோ1சிதுமர்ஹஸி ।। 26
महाबाहो மஹாபா3ஹோ பெரிய தோள்களையுடையவனே
अथ च அத2 ச ஒருவேளை एनम् ஏனம் இந்த ஆத்மா नित्यजातं நித்யஜாதம் என்றும் பிறப்பதாகவும்
नित्यं நித்யம் எப்பொழுதும் मृतम् वा ம்ருதம் வா இறப்பதாகவும் मन्यसे மன்யஸே நினைக்கிறாய்
तथा अपि ததா2 அபி அப்பொழுதும் கூட त्वं த்வம் நீ एवम् ஏவம் இவ்வாத்வாவைக் குறித்து
शोचितुम् சோ1சிதும் துயரப்பட न अर्हसि ந அர்ஹஸி தகுதியற்றவனாவாய்.
ஒருவேளை இந்த ஆத்மா என்றும் பிறந்து என்றும் மடிவதாக நீ நினைத்தால், அப்பொழுதும் கூட, பெரிய தோள்களையுடையவனே இவ்வாத்வாவைக் குறித்து நீ வருந்துதல் பொருந்தாது.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுர் துயருறல் தகாது.
விளக்கம்:
=> வருந்துதல் தகாது:
‘நித்யவஸ்து என எதுவும் இல்லை’ என்பது சார்வாக(லோகாயத) மதத்தினரின் கோட்பாடு.
'ஒரு பேச்சுக்காக' என சொல்வதைப் போல பகவான் இங்கு அதை எடுத்துக் கொள்கிறார். ஒருவேளை ஆத்மா எப்பொழுதும் பிறப்பதாக வைத்துக்கொண்டாலும்(அத2 ச ஏனம் நித்யஜாதம்) அப்பொழுதும் மரணத்தை குறித்து சோகப்பட எதுவுமில்லை. பீஷ்மர் மற்றும் மற்றவர்கள் அனைவரும் வேறொரு உருவத்தில் மீண்டும் பிறப்பார்கள். ஆத்மா எப்பொழுதும் இறப்பதாகக் கொண்டால்(நித்யம் ம்ருதம் வா), மரணத்தை குறித்து ஏன் அழ வேண்டும்? மரணிக்கும் தன்மையுடையது மரணித்தே தீரும் என்ற உண்மை புரிந்தால் அதிலும் துயரப்பட உனக்கு எந்த தகுதியும் இல்லை(த்வம் சோ1சிதும் ந அர்ஹஸி).
-------------------------------------------------------------------------------------जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ।। २७
ஜாதஸ்ய ஹி த்4ருவோ ம்ருத்யுர்த்4ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச ।
தஸ்மாத3பரிஹார்யேऽர்த்தே2 ந த்வம் சோ1சிதுமர்ஹஸி ।। 27
जातस्य हि ஜாதஸ்ய ஹி பிறந்தவனுக்கோ मृत्यु: ம்ருத்யு: மரணம் ध्रुवं த்4ருவம் நிச்சயம்
मृतस्य च ம்ருதஸ்ய ச இறந்தவனுக்கும் जन्म ஜன்ம பிறப்பு ध्रुवं த்4ருவம் நிச்சயம்
तस्मात् தஸ்மாத் ஆகவே अपरिहार्ये अर्थे அபரிஹார்ய அர்த்தே2 பரிகாரம் செய்துகொள்ள(மாற்ற) முடியாத விஷயத்தில் त्वं த்வம் நீ शोचितुम् சோ1சிதும் துக்கப்பட न अर्हसि ந அர்ஹஸி தகுதியற்றவனாவாய்.
பிறப்பவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் நிச்சயமெனில் நீக்க முடியாத இவ்விஷயத்தில் நீ வருந்துவது பொருத்தமாகாது.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
பிறந்தவன் சாவதுறுதி யெனில், செத்தவன் பிறப்ப துறுதி யெனில், இந்த விலக் கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதி யன்று.
விளக்கம்:
=> பொதுவிதி:
இது இன்னும் முக்தியடையாதவர்கள் குறித்து பகவான் கூறும் கருத்தாகும். ஆசையிருக்கும் வரை பிறப்பதும் இறப்பதும் இயல்பு. கர்மவினையின் படி வருகிற சாவை தடுக்க யாராலும் இயலாது. ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரங்களும், தீர்க்கதரிசிகளும் கூட பிறந்ததன் பொருட்டு மரணத்தை அடைந்தவர்களே. பிறந்த உடல் மரணத்தை அடைந்தே தீரும்(ம்ருத்யு: த்4ருவம்).
இங்கு கிருஷ்ண பகவான் வாழ்க்கையின் பொதுவிதியைக் கூறி, மாற்றமுடியாத விஷயத்தை(அபரிஹார்ய அர்த்தே2) குறித்து வருந்தாதே என்கிறார்.
ஒரு சூழ்நிலையை மாற்ற இயலுமா இயலாதா என கணிக்க முடியாத நெருக்கடியான தருணங்களில், ஏதேனும் செய்து அதை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் மாற்ற முடியாது என்ற அறிவு கிடைக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே சிறந்தது. ஒருவனுடைய துயரத்திற்குக் காரணம் அந்த சூழ்நிலையல்ல. அதனை ஏற்றுக் கொள்ளாத மனநிலை.
-------------------------------------------------------------------------------------।।2.28।। ஜென்ம மரண லக்ஷணம் கூறப்படுகின்றது:
अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ।। २८
அவ்யக்தாதீ3னி பூ4தானி வ்யக்தமத்4யானி பா4ரத ।
அவ்யக்தநித4னான்யேவ தத்ர கா பரிதே3வனா ।। 28
भारत பா4ரத பாரதா भूतानि பூ4தானி ஜீவராசிகள்(உயிர்கள்)
अव्यक्तादीनि அவ்யக்தாதீ3னி துவக்கத்தில் தென்படாதவைகளாகவும்
व्यक्तमध्यानि வ்யக்தமத்4யானி இடையில் வெளித்தோற்றத்திற்கு வந்தவைகளாகவும்
अव्यक्तनिधनानि एव அவ்யக்தநித4னானி ஏவ இறுதியில் காணப்படாதவைகளாகவும் இருக்கின்றன
तत्र தத்ர அந்த விஷயத்தில் का கா என்ன परिदेवना பரிதே3வனா துக்கம்.
பாரதா, உயிர்கள் முதலில் தோற்றத்திற்கு வராதவைகளாகவும், இடையில் தென்படுபவைகளாகவும், இறுதியில் தென்படாதவைகளாகவும் இருக்கின்றன. இதைக் குறித்து என்ன துக்கம்?
பாரதியின் மொழிபெயர்ப்பு :
பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதி தெளிவில்லை. இதில் துயர்ப் படுவதென்னே?
விளக்கம்:
=> அவ்யக்தமே மூலம்:
ஜென்ம - உற்பத்தி; தோன்றும் அனைத்திற்கும் காரணம் என ஒன்று கண்டிப்பாக இருக்கும். உதாரணம், பானைக்கு களிமண் போல. காரணம் என்பது ஜென்மத்திற்கு(தோற்றத்திற்கு) முன் உள்ள நிலை. அந்நிலையிலிருந்து எந்த ஒன்று வேறுபாட்டை அடைகின்றதோ அது ஜென்ம(manifestation) எனப்படும். உதாரணமாக, விதை காரண நிலை; அதிலிருந்து தளிர், வேர், இலை மற்றும் கிளை போன்ற வேறுபாட்டுடன் வெளிவருவது வ்யக்தம்; ஜென்ம. இது புலன்களால் அனுபவிக்கப்படும் நிலை.
அவ்யக்தம் = வெளித்தோற்றத்திற்கு வராமலிருக்கும் நிலை.
ஆகவே,
அவ்யக்தம் —> வ்யக்தம் = ஜென்மம்
வ்யக்தம் —> அவ்யக்தத்திற்குள் செல்வது = மரணம்
உடலின் வ்யக்தத்திற்கு ஆதாரமாக இருப்பது பஞ்ச பூதங்கள். மரணத்திற்குப் பின் உடல் பஞ்ச பூதமாக மாறுகிறது. சரீரத்தின் தோற்றம், ஸ்திதி மற்றும் லயம் பஞ்ச பூதத்தில் நடைபெறுகிறது. சூக்ஷம சரீரம் காரண சரீரத்தில் ஒடுங்குகிறது.
பகவானிடம் ப்ரபஞ்சம் ஒடுங்குதல் அவ்யக்தம் எனப்படும். உண்மையில், உலகில் எந்த ஒன்றிற்கும் நாசம் என்பதே கிடையாது. உருமாற்றமே நடைபெறுகிறது. இந்த மாற்றத்தையே நாம் தோற்றம் என்றும், மரணம் என்றும் கூறுகிறோம். இல்லாத ஒன்றை யாராலும் உருவாக்க முடியாது. இருக்கும் ஒன்றே வெளித்தோற்றத்திற்கு வருகிறது, தோற்றத்திலிருந்து ஒடுக்கத்தை அடைகிறது. மரணம் என்பதும், ஜென்மம் என்பதும் கிடையாது. எல்லாவற்றிற்கும் அவ்யக்தம் ஒரே மூலம். ஆகவே துயரப்பட வேண்டிய அவசியமில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------