புதன், 28 செப்டம்பர், 2022

தியான யோகம் 6.16 - 6.17

||6.16|| பஹிரங்க சாதனை:

नात्यश्नतस्तु योगोऽस्ति चैकान्तमनश्नत:

नचातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन ।। १६ ।।

நாத்யச்1நதஸ்து யோகோ3ऽஸ்தி சைகாந்தமநச்1நத:  

சாதிஸ்வப்நசீ1லஸ்ய ஜாக்3ரதோ நைவ சார்ஜுந ।। 16 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா  तु  து  ஆனால்  अत्यश्नत:  அத்யச்1நத:  மிகைபட உண்பவனுக்கு   

योग: अस्ति யோக3: அஸ்தி  யோகம் கூடுவதில்லை   एकान्तम्   ஏகாந்தம்  ஒன்றுமே   

अनश्नत:   அநச்1நத:   உண்ணாதவனுக்கும்       இல்லை   

अति स्वप्न शीलस्य   அதி ஸ்வப்ந சீ1லஸ்ய  மிகைப்பட உறங்குபவனுக்கும்  

जाग्रत: एव   ஜாக்3ரத: ஏவ   அதிகமாக விழித்திருப்பவனுக்கும்       இல்லை.


அர்ஜுனா, அளவு கடந்துண்பவனுக்கு யோகமில்லை. ஒன்றுமே உண்ணாதவனுக்கும் தியானம் கைகூடாது. மிகைப்பட உறங்குபவனுக்கும் மிகைப்பட விழித்திருப்பவனுக்கும் யோகமில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.


விளக்கம்:

வாழ்க்கையில் யோகி எத்தகைய நியமங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் அல்லது தியானம் கைகூடத் தேவையான பஹிரங்க சாதனைகளாக எதைச் சொல்லலாம் என்பதற்கான விடை வருகிறது. சீரான வாழ்க்கைமுறை, அதாவது எல்லா விதத்திலும் அளவாக சமமாக இருத்தல் தியானயோக வாழ்க்கைக்கு முக்கிய நியமம் ஆகிறது. இதற்கான உதாரணங்களாக இந்த சுலோகத்தில் உணவு மற்றும் உறக்கத்தை எடுத்துக் கொண்டு பகவான் விளக்கமளிக்கிறார்.

வீணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்துபோகும். மிக இளக்கினால் அதில் ஓசைவராது. உடலோ வீணை போன்றது. உணவு, உறக்கம் இவைகளில் மிகைபடுதலும் குறைபடுதலும் கூடாது. அந்தந்த சரீரத்துக்கு ஏற்ற உணவு எது, அளவு எது என்பதை அவரவரே தீர்மானம் செய்ய வேண்டும்.

உணவின் சாத்விக, ராஜஸ, மற்றும் தாமச அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவன் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதை பதினேழாவது அத்தியாயத்தில் பகவான் விளக்கிப் பேசுவார். இந்த சுலோகத்தில் உணவின் அளவுகளில் உள்ள உச்சநிலைகள் தியானத்திற்கு ஏற்றதாக இருக்காது என்பதை மட்டும் தெரிவிக்கிறார். மிகைபட உண்பதால் சோம்பலும், குறைவாக உண்ணும்போது உடல் மெலிவும் உண்டாகிறது. போதுமான அளவு உணவு உட்கொள்ளாதவனிடம் உள்ள உடற்சோர்வு ஒருவனை இயற்கையாகவே தியானத்தில் அமர முடியாமல் செய்யும். அதேபோல மிகையாக உணவு புசித்தவனிடம் உண்டாகும் மந்தத்தன்மை அவனிடம் தியானத்திற்கு எதிரான மனநிலையை தூக்கத்தை உருவாக்கும். எனவே தியானிக்க விரும்புபவன் உண்ணும் உணவில் ஒரு குறிப்பிட்ட அளவுமுறையை கையாளுதல் வேண்டும்.

முந்தைய அத்தியாயங்களில் நாம் ஏற்கனவே பார்த்ததுபோல அரை வயிறு உணவு, கால் வயிறு நீர் மற்றும் கால் வயிறு காற்றோட்டத்துக்கு இடம் கொடுத்து உணவு புசித்தல் சிறந்தது. இந்த எல்லைகளைக் கடப்பவனுக்கு தியானம் நடைபெறாது. ஆகவே மிகையாக உண்பவனுக்கும் சரி, சரியாகச் சாப்பிடாதவனுக்கும் சரி, யோகம் இல்லை; தியானம் இல்லையோக: நாஸ்தி, என்கிறார் கிருஷ்ணர். இங்கு யோகம் என்பது நாம் ஏற்கனவே பார்த்த சகுண-ப்ரம்ம-தியானம் மற்றும் நிர்குண-ப்ரம்ம-தியானம் என இரண்டையும் குறிக்கிறது


=> சரியான அளவு உறக்கம்:

உணவைப் போலவே உறக்கமும் ஒருவனின் அன்றாட செயல்பாடுகளுக்கு அடித்தளமாக விளங்குகிறது. உறக்கம் உடலைப் புதுப்பித்துத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் மிகைபட்ட அல்லது குறைபட்ட உறக்கம் தமோ குணத்தை வளர்க்கிறது. அதனால் தியானம் தடைபடுகிறது.

விழித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் உறக்கம் வரும் அளவுக்கு தூங்குபவர்கள் உண்டு. அதிக உறக்கம், மிகையான உணவு மற்றும் 

உடற்பயிற்சியின்மை போன்றவைகள் இந்நிலையை உருவாக்கும். எனவே பகவான் அதிக நேரம் உறங்கிப் பழகியவனுக்கு(அதி ஸ்வப்ந சீ1லஸ்ய) தியானம் இல்லையோக: நாஸ்தி, என்கிறார். அதேசமயம் எப்போதும் விழித்திருப்பவனாய், தேவையான அளவு ஓய்வு எடுக்காமல் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்பவனுக்கும் தியானம் கைகூடாது என்கிறார். ஏனெனில் குறைவான அளவு ஓய்வெடுப்பவர்களின் உடல், தியான நேரத்தின்போது தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ள முயற்சிக்கும்; இதனால் தியான நேரத்தில் உறங்கிப் போகும் பிரச்சினை வரும்

  ஆகையினால் அதிக நேரம் உறங்குபவர்கள் மற்றும் குறைவாக உறங்குபவர்கள் என இரு தரப்பினரும் தியானத்தின்போது தூங்குகிறார்கள். எனவே அவர்கள் இருவருக்கும் யோகம் இல்லை, தியான வாழ்க்கை இல்லை என்கிறார் கிருஷ்ணர். அப்படியானால் இந்த யோகம் எப்படி, யாருக்கு அமையும்? பதில் அடுத்த சுலோகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்குச் சஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ள வேண்டும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.17|| யோக சித்தி கைகூடும் முறை:

युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु

युक्तस्वप्नावबोधस्य योगो भवति दु:खहा ।। १७ ।।

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு  

யுக்தஸ்வப்நாவபோ34ஸ்ய யோகோ3 4வதி து3:2ஹா ।। 17 ।।


युक्त हार विहारस्य    யுக்த ஆஹார விஹாரஸ்ய  உண்பதிலும் உடற்பயிற்சியிலும் அளவுடன் இருப்பவனுக்கு  कर्मसु  கர்மஸு  தன் கடமைகளைச் செய்வதில்  युक्त चेष्टस्य   யுக்த சேஷ்டஸ்ய  அளவுடன் ஈடுபடுபவனுக்கு   युक्त स्वप्न अवबोधस्य   யுக்த ஸ்வப்ந அவபோ34ஸ்ய   உறங்குவதையும் விழித்திருப்பதையும் அளவுடன் செய்பவனுக்கு   योग:  யோக3:  யோகமானது   दु:खहा  து3:2ஹா  துக்கத்தைப் போக்குவது    

भवति  4வதி  ஆகிறது.


மிதமாய் உண்டு உடற்பயிற்சி செய்பவனுக்கு, அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகுப்பவனுக்கு யோகம் துன்பத்தை துடைப்பதாகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.


விளக்கம்:

தியானம் கைகூடத் தேவையான சீரான வாழ்க்கைமுறைக்கு சில உதாரணங்களை பகவான் இந்த சுலோகத்தில் அளிக்கிறார். இங்குயுக்தஎன்பதற்குஅளவானஎன்று பொருள்; அதாவது அனைத்து செயல்பாடுகளிலும் சரியான விகிதாசாரத்தை கடைப்பிடிக்கும் பாவனையைக் குறிக்கிறது.

இங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவன்யுக்த ஆஹார விஹாரஸ்ய’, உண்பதிலும் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு போன்ற மற்ற நடவடிக்கைகளிலும் சரியான அளவை கடைப்பிடிப்பவனாக; ‘யுக்த சேஷ்ட கர்மஸுதன் கடமைகளைச் செய்வதில் அளவுடன் ஈடுபடுபவனாக; மேலும்யுக்த ஸ்வப்ந அவபோ34ஸ்யசரியான அளவு உறக்கத்தையும் விழிப்பையும் கொண்டவனாக உள்ளான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முறைமைபடுத்தப்பட்ட ஒழுக்கமான வாழ்க்கையைப் பின்பற்றுபவனாக அவன் தனது வாழ்க்கையையே ஒரு யோகமாக, துக்கத்தை அழிக்க வல்லதாக ஆக்குகிறான். இத்தகையவனுக்கு யோகம் துயரத்தை நீக்கும் சாதனமாக ஆகிறது; அதாவது தியானம் கைகூடுகிறது - யோக3: து3:2ஹா 4வதி.


=> ஆவேசமான செயல்கள்:

சங்கரர் தனது விசாரத்தில்யுக்த ஆஹார விஹாரஸ்யஎன்ற கூட்டுச் சொல்லை விளக்கும்போது, ஆஹார - ஆஹ்ரீயதே இதி ஆஹார:, ஒருவனால் உட்கொள்ளப்படும் எதுவும் ஆஹாரம் எனக் குறிப்பிடுகிறார். இது உணவைக் குறிக்கிறது. ‘விஹாரஎன்பதை நடப்பது ஓடுவது நீந்துவது போன்ற நகர்தலை உள்ளடக்கிய செயல்கள் என விளக்குகிறார். இதிலிருந்து எவனொருவனுக்கு இந்த ஆஹார மற்றும் விஹார இரண்டும் சரியான அளவுகளில் உள்ளதோ அவனே யுக்த ஆஹார விஹார என்றழைக்கப்படுகிறான். எனில் எந்தவொரு செயலும் ஆவேசத்துடன் தன்னை ஆட்டிப்படைக்க இவன் அனுமதிப்பதில்லை.

சிலர் தங்களது உணவை திட்டமிடுதலிலும், வேறு சிலர் உடற்பயிற்சி செய்வதிலும், மேலும் சிலர் புதிய புதிய இடங்களுக்கு பயணிப்பதிலும் என அவைகளையே வாழ்க்கையின் பிரதான குறிக்கோள்களாகக் கொண்டு ஆவேசத்துடன் அச்செயல்களில் ஈடுபடுவர். இதுபோன்ற, ஒரு குறிப்பிட்ட செயலுக்கு அதிக காலம் கொடுத்து அதை தன்னை ஆட்டிப்படைக்க விடக்கூடாது. எனவேதான் கிருஷ்ணர் எந்த செயலாக இருந்தாலும் அது அளவுடன் இருக்க வேண்டும், இல்லையெனில் ஆஹார விஹாரத்திலேயே முழு வாழ்க்கையும் கழிந்துவிடும் என்கிறார்.


=> செயல் குறித்த பதற்றம்:

கடமையாகச் செய்யும் செயலும் அளவுடனே இருக்கவேண்டும். நிறைய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனுக்கு அதுகுறித்த பதற்றமும், நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற கவலை கலந்த ஏக்கமும் சூழ்ந்தவனாக மனவழுத்தத்துடனேயே இருப்பான். ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய விரும்பினால் கவனச் சிதறலின் காரணமாக எதுவும் உருப்படியாக நடக்காது. ஒரு செயலை செய்துகொண்டிருக்கும் போது இனியொரு செயலைப் பற்றிய நினைவு வரும். இதை நிறுத்திவிட்டு அதை செய்ய ஆரம்பித்து, இடையே மீண்டும் வேறொரு செயலைக் குறித்த சிந்தனை என எதுவும் முழுதாக செய்யப்படாமல் இருக்கும். இத்தகையவர்கள்அயுக்த சேஷ்டஸ்ஆவர். ஆனால் இங்கு குறிப்பிடப்படும்யுக்த சேஷ்ட கர்மஸு’, தனது ஒவ்வொரு கர்மங்களையும் சரியான விகிதாசாரத்தில் செய்வதால் அதில் ஆழ்ந்து, முழு கவனத்துடன் ஈடுபடுகிறான். அவனிடம் ஆவேசமோ பதற்றமோ இருப்பதில்லை. இதனால் அவன் எதையும் விழிப்புணர்வுடன் செய்யும் பாவனையை அடைகிறான். இது அவனுக்கு ஞானத்தை அடைவதற்கானப் பக்குவத்தை கொடுக்கிறது.


=> விழிப்பும் உறக்கமும்:

அடுத்ததாக, இங்கு விவாதிக்கப்படும் நபர், உறங்குவதையும் விழித்திருப்பதையும் சரியான விகிதத்தில் அளவுடன் செய்வதால்யுக்த ஸ்வப்ந அவபோ34என்றழைக்கப்படுகிறான். இங்கு, இவ்வளவு நேரம்தான் என ஒரு பொதுவான வரையறையை நாம் கொடுத்துவிட முடியாது. அவரவர்களின் உடலமைப்பு, வளர்ப்பு முறை மற்றும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றார்போல் அது ஒருவருக்கொருவர் மாறுபடும். ஐந்து மணிநேரம் மட்டுமே உறக்கம் தேவை என்பவர்களும் உள்ளனர்; அதே சமயம் சிலருக்கு ஆறு மணி நேரம் தூக்கம் தேவைப்படாலாம்; வேறு சிலருக்கு ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் தேவையான ஒன்றாக இருக்கலாம். ஒருவேளை அரை மணி நேரம் அல்லது நாற்பத்தைந்து நிமிடங்கள் என தூங்கும் நேரத்தை சிறிது மாற்றலாம். ஆனால் இதை விட அதிகமாக வழக்கத்தை மாற்றும்போது அது முழு நாளையும் பாதிப்பதாக அமைந்துவிடும்; அவனைப் பித்துபிடித்தவனைப் போலாக்கி, முற்றிலும் அன்றைக்குப் பயனற்றவனாக ஆக்கிவிடும்! ஆகவே தனிப்பட்டவனின் உடல் இயல்பிற்கு ஏற்றார்போல அவனுடைய விழிப்பும் உறக்கமும் இருக்கட்டும். ஆனால் அது அவனுக்கு அதிகப்படியாகவோ, குறைவானதாகவோ இல்லாமல் சரியான அளவில் இருக்கவேண்டும் அவ்வளவே.


=> துயரத்தை நாசமாக்குவது எது?

மேற்கூறிய வகையில் சீரான விகிதாசாரத்தை உள்ளடக்கிய வாழ்க்கை வாழ்பவனுக்கு யோகம் உண்டாகிறதுயோக3: 4வதி. அந்த யோகம் ஞானத்தின் வடிவில் துக்கத்தை நீக்குவதாக உள்ளது, து3:2ஹா. தனது சுயத்தின் இயல்பான தன்மையைப் பற்றிய புரிதல், தன்னறிவு மற்றும் சுயத்தின் துயரமற்ற சொரூபத்தை காண்பது என இந்த ஞானமானது துக்கத்தை அழிக்கிறது. இந்த அறிவு இங்கே யோகம் என்றழைக்கப்படுகிறது. அதாவது அறிவின் மூலம் துயரத்தை நீக்கும் சாதனமாக தியானம் அமையும்; கைகூடும். சங்கரர் தனது பாஷ்யத்தில்து3:2ஹாஎன்ற சொல், அனைத்து வகையான துயரங்களையும் குறிப்பதாக விளக்குகிறார், ஸர்வ-ஸம்சார-துக்க.

எனவே அனைத்து விதமான துயரங்களையும் அழிக்கும் இந்த அறிவின் தேடலில் ஒருவனின் வாழ்க்கை அர்ப்பணிக்கப்படட்டும். அதிகமாகச் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, மிகைபட அல்லது குறைபட உறங்குவது, அதிக உடற்பயிற்சி செய்வது அல்லது செய்யாமல் இருப்பது போன்ற பிற விஷயங்களில் முழுவதுமாக மூழ்கிக் கிடக்க வேண்டாம்.


=> அடிப்படைத் தேவைகள்:

ஒருவனது வாழ்வில் கண்டிப்பாக உடல் சம்பந்தப்பட்ட சில ஒழுக்கங்கள் இருக்கவேண்டும், ஆனால் அது சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். உதாரணமாக யோகாசனம் மற்றும் பிராணயாமம் போன்ற பயிற்சிகள் பயனுள்ளவைகள்தான்; ஆனால் முழு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணிக்கக் கூடாது. இங்கு சொல்லப்படும் கருத்து என்னவெனில், கடைபிடிக்கப்படும் எந்தவொரு ஒழுக்கமும் புறக்கணிப்போ அல்லது அதிகப்படியாகவோ இல்லாமல் சரியான விகிதத்தில் மிதமாக செய்யப்பட வேண்டும் என்பதே ஆகும்

காளிதாசர் மனித உடலை மோக்ஷத்தைப் பெறுவதற்கான அடிப்படைச் சாதனமாக வரையறுக்கிறார், शरीरं अाद्यं खलु धर्मसाधनम्. ஆகவே உடலின் ஆரோக்கியம் இன்றியமையாதது. எனவே சாப்பிடுதல் உறங்குதல் மற்றும் சரியாக உடற்பயிற்சி செய்தல் போன்ற ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் அனைத்தும் ஒருவனால் சரியாகச் செய்யப்பட வேண்டும். அதாவது அடிப்படைத் தேவைகளைப் பொருத்தவரையில் ஒருவன் அலட்சியமாக இருக்கக்கூடாது


=> எவ்வளவு காலம்?

தியானத்துடன் கூடிய ஒழுக்கமான வாழ்வினால் பெறப்படுவது என்ன? அதற்கு எவ்வளவு காலமாகும்? என்ற கேள்வி ஒருவனின் மனதில் எழலாம். வெளித்தோற்றத்தில் கடினமானதாகத் தென்படும் இதுபோன்ற ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ளும் முன்பு பொதுவாக மக்கள், ‘என்ன? எப்போது?’ என்ற கேள்விகளைக் கேட்பது வழக்கம்தான். ஆனால் இங்கு அவன் அடைவது தன்னையே என்பதால், சுயத்தை அடைந்த ஒருவன் அடைய வேறெதுவும் இல்லாததால் அவன் மிகப்பெரிய சுதந்திரத்தை அடைகிறான்

மேலும் இதுவே வாழ்க்கையாகிப் போவதால் இங்குஎப்போது அடையப் போகிறேன்என்பதற்கான கால வரையறை எதுவுமில்லை. மற்ற அனைத்தும் விஷயங்களும் இவ்வாழ்க்கைக்கு துணைபுரிவதாக மாறுகிறது. எனவே அதற்கேயுரிய காலத்தை எடுத்துக் கொண்டு இந்த அறிவைப் பற்றிய தெளிவு வளர்கிறது. ஆனாலும் இதில் காலம் ஒரு பொருட்டல்ல, ஏனெனில் இந்தப் பயணம் எல்லா வழிகளிலும் இனிமையானதாகவே இருக்கிறது.

விரும்பத்தகாத ஒன்று செய்யப்பட வேண்டியதாக இருக்கும்போது மட்டுமே, ‘எவ்வளவு காலம் இதைச் செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி எழும். ஆனால் ஆத்ம-வித்யா, தன்னைப் பற்றிய அறிவாக, ஒருவன் எவ்வளவு அற்புதமானவன் என்பதைச் சொல்லும் ஞானமாக இருப்பதால் அது எல்லா விதத்திலும் சுகமானதாக உள்ளது. ஆகவே இங்கு எவ்வளவு காலம் என்ற கேள்வி அடிபட்டுப்போகிறது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------