செவ்வாய், 12 ஜனவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.23 - 2.24

 ।।2.23।। ஆத்மா அழியாதது(அவிநாசி), நிஷ்பிரபஞ்சப் பொருள்:

नैनं छिन्तन्ति शस्त्राणि नैनं दहति पावक:

चैनं क्लेदयन्त्यापो शोषयति मारुत: ।। २३

நைனம் சி2ன்தந்தி 1ஸ்த்ராணி நைனம் 3ஹதி பாவக:

சைனம் க்லேத3யன்த்யாபோ சோ1ஷயதி மாருத: ।। 23


शस्त्राणि   1ஸ்த்ராணி  ஆயுதங்கள்  एनम्  ஏனம் இதை(ஆத்மாவை

छिन्तन्ति   சி2ன்தந்தி வெட்டுவதில்லை  पावक:  பாவக:  நெருப்பு  एनम्  ஏனம் இதை(ஆத்மாவை)  

दहति   3ஹதி எரிப்பதில்லை  अापஆபநீர்   एनम्  ஏனம்  இதை(ஆத்மாவை)  

क्लेदयन्ति  க்லேத3யன்தி  நனைப்பதில்லை  मारुत:   மாருத:   காற்றும்  

शोषयति   சோ1ஷயதி  உலர்த்துவதில்லை.


ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டுவதில்லை. நெருப்பு இதை எரிப்பதில்லை. நீர் நனைப்பதில்லை. காற்றும் உலர்த்துவதில்லை


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது, நீர் இவனை நனைக்காது. காற்றுலர்த்தாது.


விளக்கம்:

=> பஞ்ச பூதங்களினால் ஆத்மா அழிவதில்லை:

இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ணர், நாசத்தை உண்டாக்கும் சில வழிமுறைகளை கூறி இவைகள் எதுவும் ஆத்மாவை பாதிக்காது என்கிறார். முதலில் ஆயுதங்கள். பூமியை உபாதான காரணமாக(material cause) கொண்டு உருவாக்கப்படும் இவைகள் 2 வகைப்படும். (1) அம்பு, குண்டு போன்ற ஒருவருடைய கையிலிருந்து விடுவிக்கப்படும் ஆயுதங்கள் அஸ்திரம்(अस्त्र) என்றும் (2) கத்தி, சுத்தியல் போன்ற கையில் பிடித்து உபயோகிக்கும் ஆயுதங்கள் சஸ்திரம்(शस्त्र) என்றும் கூறப்படும். இங்கு சொல்லப்பட்ட 1ஸ்த்ராணி எனும் சொல் இவ்விரு வகையையும் குறிக்கும்

ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டாது( சி2ன்தந்தி).

தீயானது(பாவக:) ஸ்தூல உடலை எரிக்கலாம், ஆனால் ஆத்மாவை எரித்து அழிக்க முடியாது. சூக்ஷம சரீரத்தையே தீயினால் அழிக்கமுடியாது எனும்போது ஆத்மாவை பற்றி என்ன சொல்லமுடியும்! மேலும், நீரானது ஆத்மாவை நனைக்கவோ(க்லேத3யன்தி) மூழ்கடிக்கவோ முடியாது. காற்றினால் ஆத்மாவை உலர்த்த முடியாது( சோ1ஷயதி) என இங்கு பகவான் காற்று, நெருப்பு, நீர், பூமி இந்த நான்கு பூதங்களினாலும் ஆத்மா நாசமடைவதில்லை என்கிறார். பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் பொதுவாகவே எதற்கும் நாசத்தை கொடுப்பதில்லை.

ஸ்தூல மற்றும் சூக்ஷம நிலையில் பஞ்ச பூதங்களே இவ்வுலகமாக தோன்றிக் கொண்டிருக்கின்றது என சாஸ்திரம் கூறுகிறது. சூக்ஷம பூதங்களிலிருந்து மனம், இந்திரியங்கள், ப்ராணன்கள், சித்தம் மற்றும் அஹங்காரம் ஆகியவைகளும், ஸ்தூல பூதங்களிலிருந்து ஸ்தூல உடல் மற்றும் ஸ்தூல உலகமும் தோன்றியதாக கூறுகிறது


=> அழிவின் இயல்பு:

ஒரே மெய்மை தளத்தில் உள்ள பொருட்களே ஒன்றையொன்று பாதிக்கும். உதாரணமாக, ஒரே நிஜத்தில் உள்ள ஆயுதம் ஸ்தூல சரீரத்தை தாக்கலாம், காயமடையச் செய்யலாம் அல்லது அழிக்கலாம். ஒருவேளை, எப்படியாவது ஆயுதத்தை கொண்டு மரத்தின் நிழலை வெட்ட நினைத்தாலோ அல்லது கல்லின் நிழலைக் கொண்டு நாயை அடிக்க நினைத்தாலோ அது கண்டிப்பாக முடியாது. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு மெய்மையைச் சார்ந்தது. ஆத்மா பாரமார்த்திக சத்யம். வ்யாவஹாரிக சத்யத்தில் இருக்கும் இந்த தோற்றங்களினால் அதிஷ்டானமான ஆத்மாவை என்ன செய்துவிட முடியும்!

மேலும் எந்தவொரு பொருளும் தனது இருப்புக்கு இனியொன்றை சார்ந்தே உள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட பானை அதன் இருப்புக்கு களிமண்ணை சார்ந்தும், களிமண் அணுக்களைச் சார்ந்தும், அணுக்கள் எலக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்களைச் சார்ந்தும் உள்ளது. ஆகவே எந்தவொன்றும் மற்றதைச் சார்ந்து இருப்பதோடு, அந்த மற்றது ஒருவருடைய கருத்தை அல்லது எண்ணத்தை பொருத்து அமைகிறது. இறுதியில் எண்ணம் ப்ரக்ஞையை சார்ந்தது. ப்ரக்ஞை எதையும் சாராதது. எதையும் சாராமல், தானாக விளங்கிக் கொண்டிருக்கும்ஸத்ஆத்மாவினாலேயேஅஸத்’-தான சிருஷ்டி முழுமையும் விளங்கிக் கொண்டிருக்கிறது. ‘ஸத்’-தை அஸத் எப்படி அழிக்க முடியும்?!

சைத்தன்யத்தின் ஒரேயொரு மூலமான ஆத்மாவினாலேயே இந்த உலகம் காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆத்மா(‘நான்’) தவிர மற்றவை அனைத்தும் அறியப்படும் பொருள்(objects). மனம், புலன்கள், உடல் மற்றும் இவ்வுலகம் என்னால் அறியப்படுபவை. அறியப்படும் பொருளினால் அறிபவனை அறிய முடியாது. சைத்தன்யத்தினால் விளங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் சைத்தன்யத்தையே எப்படி அழிக்க முடியும்?!


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஆத்மா ஒன்றினோடும் பந்தப்பட்டதன்று. இன்ப துன்பம், பாப புண்ணியம் முதலியன ஒருபோதும் ஒருவிதத்திலும் ஆத்மாவைச் சார்வதில்லை. ஆனால் அவைகள், சரீரமே தாங்களென்று கருதியிருப்போரைச் சார்கின்றன. புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்காது


-------------------------------------------------------------------------------------------------------------------

।।2.24।। ஆத்ம தத்துவத்தின் ஸாரம்:

अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव

नित्य: सर्वगत: स्थाणुरचलोऽयं सनातन: ।। २४

அச்சே2த்3யோऽயமதா3ஹ்யோऽயமக்லேத்3யோऽசோ1ஷ்ய ஏவ

நித்ய: ஸர்வக3: ஸ்தா2ணுரசலோऽயம் ஸனாதன: ।। 24


अयम्   அயம் இது(இந்த ஆத்மாअच्छेद्य:   அச்சே2த்3:  வெட்டப்படாதது  अयम्   அயம்  இது(இந்த ஆத்மாअदाह्यஅதா3ஹ்ய:   எரிக்கப்பட முடியாதது अक्लेद्य:   அக்லேத்3:  நனைக்கப்பட முடியாதது   

अशोष्य: एव   அசோ1ஷ்ய: ஏவ   உலர்ததப்படவும் முடியாதது   अयम्   அயம்  இது(இந்த ஆத்மா)   

नित्यநித்ய:   என்றுமுள்ளது   सर्वगतஸர்வக3:  எங்கும் நிறைந்தது   स्थाणुஸ்தா2ணு:   ஸ்திரமானது  अचलஅசல:   அசையாதது    सनातनஸனாதன:  எப்போதுமிருப்பது(அநாதி).     


இந்த ஆத்மா வெட்டப்படாதவன்; தகனமடையாதவன்; நனையாதவன்; உலர்பவனுமல்லன்; இவ்வாத்மா நித்யமானவன், எங்கும் நிறைந்தவன், ஸ்திரமானவன், சலனமில்லாதவன், எப்பொழுதுமிருப்பவன்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன், நித்யன்; எங்கும் நிறைந்தவன், உறுதி யுடையான், அசையாதான். என்று மிருப்பான்.


விளக்கம்:

=> எப்பொழுதுமிருப்பது:

இல்லாத ஒன்றை அழிக்க முடியாது. உதாரணமாக, ‘மலடியின் மகன்’- குழந்தை பெற முடியாதவளின் மகனை எவ்விதத்திலும் அழிக்க முடியாது. அதாவது அங்கு மகன் என்ற ஒருவன் இல்லை. அதுபோல, வெட்டவோ நனைக்கவோ எரிக்கவோ முடியாது எனில் அப்படி ஒரு பொருள் இல்லையோ-சூன்யம்-இல்லாமை என்ற சந்தேகம் வரலாம். இந்த ஸ்லோகத்தில், க்ருஷ்ணர் உபயோகிக்கும் இது(அயம்) என்ற சொல் தானாக இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவை குறிக்கிறதே தவிர இல்லாத ஒன்றைஇதுஎன கூறமுடியாது. ‘நான் இருக்கின்றேன்என்பதை ஒருவன், புலன்களினாலோ அனுமானத்தினாலோ அல்லது எடுத்துக்காட்டை கொண்டோ அறியத் தேவையில்லை. அது தானாக விளங்குவது, ஸ்வத-சித்தம்(स्वत-सिद्ध).

அறியப்படும் பொருளாக இல்லாத ஆத்மா வெட்டப்படாதது(அச்சே2த்3:), எரிக்கப்படாதது(அதா3ஹ்ய:), நனைக்கப்படாதது(அக்லேத்3:), உலர்ததப்படாதது(அசோ1ஷ்ய:) என மீண்டும் இங்கு பகவான் கூறுவது, இது சூன்யம் அல்ல எனும் நோக்கில்

காலத்தினால் வரையறுக்கப் படாத நித்யமான இந்த ஆத்மா எல்லா இடத்திலும் வ்யாபித்திருப்பது(ஸர்வக3:). எங்கும் நிறைந்திருந்து போவதற்கு புதிய இடமில்லாததால், ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நகராது ஸ்திரமாய்(ஸ்தா2ணு:) இருப்பது. அப்படியெனில் மரங்களைப் போல் ஒரே இடத்தில் நின்று அசைந்து கொண்டிருப்பதா? என்ற கேள்வி வரும்போது, அது அசையாதது(அசல:). மேலும் க்ருஷ்ணர், ஆத்மா சநாதனம்(ஸனாதன:) என்கிறார். காரணமற்றது, உண்டுபண்ணப்படாதது. அது எப்பொழுதுமிருப்பதாகிறது

வார்த்தையால் விளக்க முடியாத ஆத்மாவை, வார்த்தைகளைக் கொண்டு விளக்க முற்படும்போது, ஏதேனும் ஒரு விளக்கம் அர்ஜுனனின் உள்ளத்தில் படிந்து அவனது துக்கத்தை நீக்கலாம். அக்ஞானத்தால் மனிதன் துக்கத்தை வருவித்துக் கொண்டு தனது மேண்மைகளை இழக்கின்றான். அக்கீழ்மை வேண்டப்படுவதன்று என அறிவுறுத்துவதற்கே வாசுதேவர் இத்தனைவித விளக்கங்களைக் கையாளுகிறார்.

-------------------------------------------------------------------------------------