சனி, 25 டிசம்பர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.34 - 4.35

||4.34|| முக்தியை கொடுக்கும் ஞானத்தை எங்கிருந்து, எப்படிப் பெற வேண்டும்?

तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया

उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिन: ।। ३४ ।। 

தத்3வித்3தி4 ப்ரணிபாதேந பரிப்ரச்1நேந ஸேவயா

உபதே3க்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வத3ர்சி1: ।। 34 ।।


प्रणिपातेन   ப்ரணிபாதேந  நமஸ்கரித்தும்   परिप्रश्नेन   பரிப்ரச்1நேந  முறையாக கேள்வியைக் கேட்டும்   

सेवया   ஸேவயா  பணிவிடை செய்தும்   तत्   தத்   அந்த ஞானத்தை    विद्धि   வித்3தி4  அறிந்துகொள்   

तत्त्वदर्शिन:  தத்த்வத3ர்சி1:  தத்துவத்தை அறிந்த   ज्ञानिन:   ஜ்ஞாநிந:  ஞானிகள்   ते   தே  உனக்கு  

ज्ञानम्   ஜ்ஞாநம்  ஞானத்தை   उपदेक्ष्यन्ति  உபதே3க்ஷ்யந்தி  உபதேசிப்பார்கள்.


பணிந்தும், கேட்டும், பணிவிடை செய்தும் நீ அதை அறிக. தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.


விளக்கம்:

எல்லாவித கர்மங்களைக் காட்டிலும் உயர்வானதாகக் கூறப்பட்ட ஞானத்தை பெறுவதற்கு எத்தகைய மனப்பாங்கு வேண்டுமென இங்கு கூறுகிறார். சுலோகத்தில் பகவான், ‘அறிந்து கொள்தத் வித்3தி4என்கிறார். அதாவதுஇந்த ஞானம் யாரிடமிருந்து, எந்த உபாயத்தின் மூலம் பெறப்பட வேண்டும் என்று அறிக’. மேலும் இந்த அறிவை பெறுவதற்கான ஆரம்பகட்ட வழிமுறையாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.


(1) ப்ரணிபாதேந இதன் அர்த்தம் சரியான பாவனையுடன் கீழே விழுந்து வணங்குவது. பொதுவாக பல விதமான நமஸ்கார முறைகள் வழக்கத்தில் உள்ளன. உதாரணமாக, குனிந்து குருவின் பாதத்தை தொட்டு வணங்குவது, அல்லது இரு கைகளையும் கூப்பி தலையை மட்டும் சிறிது குனிந்தவாறு மரியாதையை தெரிவிப்பது போன்றவை. ‘அஸ்டாங்க நமஸ்காரம்என அழைக்கப்படும் ஒருவித முறையில், தலை, மார்பு, உடல் பாகம், முழங்கால், கைகள், கால்கள், மனம் மற்றும் ஒருவரின் வார்த்தைகள்(விழும்போதுதங்களை வணங்குகிறேன்என கூறுவது) - உள்ளிட்ட உடலின் எட்டு அங்கங்களும் தரையைத் தொட வேண்டும். முழு உடலும் தரையைத் தொடுவதால் இதுதீர்க்க நமஸ்காரம்எனவும் அழைக்கப்படுகிறது.

உடலினால் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதன் மூலம் சிஷ்யன் தனது மனதையும் அஹங்காரத்தையும் சமர்ப்பிக்கிறான்.


(2) பரிப்ரச்1நேநகற்பிக்கப்படும் சூழலை கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் பொருத்தமான கேள்விகளைக் கேட்டல், ‘பரிப்ரச்நஎனப்படுகிறது. பந்தம்-மோக்ஷம், ஆத்மா-அனாத்மா குறித்த முறையான கேள்விகளைக் கேட்பதால் தனது மனபரிபாகத்தை அவன் தெரிவிக்கிறான். சாதன சதுஷ்டய சம்பந்நனாக, அதிகாரித்துவத்தை அடைவதால் சரியான கேள்விகளைக் கேட்கும் தகுதியையடைகிறான்.


(3) ஸேவயாகுருசேவையின் மூலம் சிஷ்யன் தனது ராக-த்வேஷம் முதலிய மன அசுத்தங்கள் நீங்கப் பெறுகிறான். சிஷ்யனானவன்தீப்த சிரா:’ - தலையில் தீப்பிடித்தவன் நீரைத் தேடி ஓடுவதைப் போல, சம்சாரத்தில் தவித்து வைராக்கியத்தால் தூண்டப்பட்டு குருவிடம் வருகிறான். ‘நீ ப்ரம்மன்; எல்லையற்றவன்என்ற குருவின் உபதேசம் முதலில் அனுபவத்திற்கு முரண்பாடாக இருந்தபோதிலும், குருவின் மீதுள்ள சிரத்தையே அவனை வழிநடத்தும். குருசேவையின் போது குருவிடமுள்ள ஞானத்தின் பலனைப் பார்ப்பதால் சிரத்தை உண்டாகிறது.

இவ்விதம் உடல், மொழி, மனம் ஆகிய முக்கரணங்களும் குருவிடம் அர்ப்பித்து, சிஷ்யனானவன் ஞானத்தையும் அதற்கான உபாயத்தையும் அறிகிறான். குருபக்தி, அர்ப்பணிப்பு, ஞானத்தை அடைவதில் காட்டப்பட்ட தீவிரம் இவற்றின் மூலம் வெல்லப்பட்ட குருவின் கருணையினால் இந்த ஞானம் அடையப்படுகிறதுஅத்தகையவனிடத்து குரு கருணைகூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிக்கிறார்ஜ்ஞாநிந: ஜ்ஞாநம் உபதே3க்ஷ்யந்தி. இங்குஜ்ஞாநிந:என பன்மையில் கூறப்படுவது, அனைத்து குருமார்களையும் குறிப்பிடும் பொருட்டு அல்லது மரியாதை நிமித்தமாக எனலாம்.


=> எப்படிப்பட்ட குரு?

ஞாநிந:எனும் சொல் ச்1ரோத்ரியனைக் குறிக்கிறது; அதாவது முறைப்படி சாஸ்திரம் பயின்றவர்கள். எனில், அவருக்கு ஒரு குரு இருக்க வேண்டும். பதவாக்ய ப்ரமாந : இலக்கணம், பூர்வ மீமாம்ஸா என்பது வாக்கிய ஞானத்தையும்(பத வாக்ய), தர்க்க சாஸ்த்திரம் என்பது ப்ரமாணத்தையும் குறிக்கிறது. இதிலிருந்து வியாகரணம், மீமாம்ஸா மற்றும் தர்க்க ஞானத்துடன் முறையாக வேதாந்தம் கற்றவன், ‘ச்1ரோத்ரியன்ஆவான்.

தத்த்வத3ர்சி1:எனும் சொல் ப்ரம்ம நிஷ்டனை, நிதித்யாசனம் மூலம் ஞானத்தில் நிலைபெற்றவனைக் குறிக்கிறது. எவனொருவன் தன்னை, உலகத்தை மற்றும் கடவுளை பற்றிய உண்மையை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதுபோலத் தெளிவாகப் பார்க்கிறானோ அவனேதத்த்வத3ர்சி1:’. மேற்கூரிய தகுதியையுடைய ச்ரோத்ரியன், ப்ரம்ம நிஷ்டனாக இருப்பான் என கூறமுடியாது. யாருக்கு ப்ரம்மஞானம் பூர்த்தியாயிருக்கிறதோ அவரே சிஷ்யனுக்கும் ப்ரம்மஞானத்தைப் புகட்ட வல்லவராவார்

* மூன்று வகையாக குருவை பிரிக்கலாம்:

(1) உத்தம குரு:ஸ்ரோத்ரிய ப்ரம்ம நிஷ்டன்.

(2) கேவல ச்ரோத்ரியன் - (ப்ரம்ம நிஷ்டையில்லாத)ஸ்ரோத்ரியன் மட்டும்.

(3) கேவல ப்ரம்ம நிஷ்டன் - (ஸ்ரோத்ரியமில்லாத) ப்ரம்ம நிஷ்டன் மட்டும். ‘கேவலஎன்பது மட்டும் எனப் பொருள்படும்; அதாவது ஸ்ரோத்ரியனாக இல்லாத ப்ரம்ம நிஷ்டனாக மட்டும் இருப்பவரை குறிப்பது. இவ்வகைக்கு உதாரணம் ரமணர் போன்றோர். பல ஜென்மங்களின் தவத்தால் மனத்தூய்மையடைந்த காரணத்தினால் இவர்கள் ஒரு சில வாக்கியம் அல்லது ஒரு முத்திரை(தக்ஷிணாமூர்த்தி-சனகாதி முனிகள்) மூலம் ஞானத்தை அடைந்தவர்கள். இவர்கள் உத்தமமானவர்களாக இருந்தபோதிலும், குரு எனும் போது படிப்படியான உபதேசம் இவர்களிடமிருந்து சிஷ்யர்களுக்கு கிடைக்காது.

இம்மூன்று வகையினரில், முதலாவதாக கூறப்பட்டுள்ள ஸ்ரோத்ரிய ப்ரம்ம நிஷ்டனை பகவான் இந்த சுலோகத்தில் குருவாகக் குறிப்பிடுகிறார். குருவானவர் ஸ்ரோத்ரினாகவும் ப்ரம்ம நிஷ்டனாகவும் இருத்தல் வேண்டும். ஒரு குருவிடமிருந்து முறைப்படி சாஸ்திரம் பயின்ற காரணத்தினால் அவர் அதை கற்பிக்கும் வழிமுறையை அறிந்திருப்பார். மேலும் ஒரு ப்ரம்ம நிஷ்டனே, ‘தத்வமஸிஉள்ளிட்ட மஹாவாக்ய உட்பொருளை தன்னகப்படுத்தி அதில் நிலைத்திருப்பான். இத்தகையவர்கள் கற்பிக்கும்போதே கற்பித்தல் சரியாக நடைபெறும்

(1) மற்றும் (3)-ல் குறிப்பிடப்பட்ட குரு இருவரும் உத்தம புருஷர்கள் ஆவர். (2)-ல் குறிக்கப்படும் குருவிடம், சாஸ்த்திரம் கற்றல் மட்டும் நடந்துள்ள காரணத்தினால் எந்த பண்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஞானம் இல்லாமல் போகிறது. இவர்களால்அஹம் ப்ரம்மாஸ்மிஎனும் மஹாவாக்கியத்தை, சாஸ்திரம் கூறுவதாக, பரோக்ஷ ஞானமாகத்தான் கற்பிக்க முடியுமே தவிர உணரப்பட்ட உண்மையாக பகிர முடியாது. ஆகவே குருவின் அடிப்படையில் நோக்கினால் சிறந்தவர்களின் வரிசை முதலில் (1), பிறகு (2) இறுதியில் (3) எனும்படி தொகுக்கலாம்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரனுடைய ரகஸியங்களை அறிய வேண்டுமென்ற தீவிர புத்தி உனக்கு இருக்குமானால், அவ்வீசுவரனே ஸத்குரு ஒருவரை உன்னிடம் அனுப்புவார். பக்தனே, குருவைத் தேட வேண்டிய விஷயத்தில் உனக்குக் கவலையேவேண்டாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------

||4.35|| ஞான பலன் - மோஹ நாசம்:

यज्ज्ञात्वा पुनर्मोहमेवं यास्यसि पाण्डव  

येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि ।। ३५ ।। 

யஜ்ஜ்ஞாத்வா புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட3

யேந பூ4தாந்யசே1ஷேண த்3ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ2 மயி ।। 35 ।।


पाण्डव  பாண்ட3  பாண்டவா  यत् ज्ञात्वा   யத் ஞாத்வா  எதையறிந்து  पुन:  புந:  மறுபடியும்  एवं  ஏவம்  இப்படி  मोहं   மோஹம்  மோஹத்தை   यास्यसि  யாஸ்யஸி   அடையமாட்டாய்   येन  யேந  எதனால்  

अशेषेण   அசே1ஷேண   மீதியில்லாமல்  भूतानि   பூ4தாநி  எல்லா உயிர்களை  अात्मनि   ஆத்மநி  உன்னிடத்திலும்  अथो   அதோ2 அப்படியே  मयि  மயி  என்னிடத்திலும்  द्रक्ष्यसि   த்3ரக்ஷ்யஸி  பார்ப்பாய்.


பாண்டவா, அந்த ஞானத்தைப் பெற்றபின் நீ இப்படி மயக்கமடைய மாட்டாய். இதனால் எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும் என்னிடத்திலும் காண்பாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.


விளக்கம்:

=> ஞானத்தின் உயர்வு:

முந்தய சுலோகத்தில் விளக்கப்பட்ட குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானத்தின் பலன் சுலோகம் 35 முதல் 37 வரை பேசப்படுகிறது. இந்த சுலோகத்தில் பகவான், ஞானத்தின் பலனாக மோஹத்தின் நாசத்தை கூறுகிறார். பொருள்களை உள்ளபடி காணாதிருப்பது மோஹம் அல்லது மயக்கம் எனப்படும். அதாவது ஒரு விஷயத்திற்கு அதற்குண்டான மதிப்பை விட அதிக மதிப்பை, இருத்தலை கொடுத்தல் மோஹம். உதாரணமாக தோற்றத்திற்கு தெரிவதை உண்மையாக இருப்பதாக நினைத்தல்; இருபது ரூபாய் மதிப்புடைய ஒரு பொருளை மோஹத்தினால் இருநூறு ரூபாய் கொடுத்து வாங்குதல் போன்றவற்றைக் கூறலாம். பொதுவாக மோஹத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) தர்மாதர்ம ப்4ரம: - எது தர்மம், எது அதர்மம் என்பதில் மயக்கம்.

2) ஆத்ம-அனாத்ம ப்4ரம: - எது ஆத்மா, எது அனாத்மா என்பதில் மோஹம்.

இந்த சுலோகத்தில் பகவான் இரண்டாவதான மோஹத்தைக் குறிப்பிடுகிறார். இரண்டற்ற ஆத்மாவை பலவாகப் பார்ப்பது, ஆத்மா தேய்கிறது என்றும் அழியக்கூடியது என்றும் நினைப்பது, நான் செயல் செய்பவன், அனுபவிப்பவன் என எண்ணுவது போன்றவை இதில் அடங்கும். நான் ஞானத்தை தேடுபவன், மோக்ஷத்தை விரும்புபவன் எனும் பாவனையும்கூட ஆத்ம அறியாமையினால் உண்டான மோஹமே. சுருக்கமாக கூறிவதானால், சத்தியமாக இருக்கும் ஆத்மாவை விட்டுவிட்டு, தோற்றமாக காட்சியளிக்கும் அனாத்மாவிடம்நான்என்கிற புத்தி, மோஹம் எனப்படும். இங்கு கிருஷ்ணர், இந்த ஞானத்தை அடைந்தால் இவ்விதமான மோஹத்தை மீண்டும் அடையமாட்டாய் பாண்டவாபுந: மோஹம் யாஸ்யஸி, என்கிறார்

ஒருமுறை சென்ற மோஹம் மீண்டும் ஏன் திரும்புவதில்லை? ஏனெனில் இவ்வகையான மோஹம் தனது சுயத்தை பற்றிய அறியாமையினால் பிறந்த குழப்பம். இக்குழப்பத்திற்கான காரணம் நீக்கப்பட்டவுடன், விளைவும் நீங்கிவிடுவதால் அதே தவறு மீண்டும் நடைபெறாது.


 => அடையப்பட்ட ஞானம் இழக்கப்படுவதில்லை:

அறியாமை ஆத்மஞானத்தினால் நீக்கப்படுகிறது. ஒருமுறை அடையப்பட்ட ஞானமானது என்றும் நீங்குவதில்லை. இதனாலேயே இழக்கப்பட்ட அறியாமை மீண்டும் திரும்புவதில்லை. உதாரணமாக மாம்பழத்தை பற்றி ஒரு கணம்கூட அறியாமையுடன் இருக்க முடியுமா? ஏற்கனவே அறிந்த மாம்பழத்தை பற்றிய அறியாமை, ஒருவனுக்கு ஒருபோதும் நிகழாது. மாம்பழம் என்றவுடனேயே மனதில் அதுகுறித்த எண்ணம்(உருவம், சுவை, வாசம்…) ஸ்புரிக்கும். அதுபோல ஆத்மஞானத்தை அடைந்த ஒருவன் மீண்டும் தன்னைப் பற்றிய அறியாமையில் விழமுடியாது.


=> அனைத்தையும் தன்னிடத்திலேயே பார்த்தல்:

மேலும் பகவான், இந்த ஞானத்தின் பலனாக மீதமில்லாமல் எல்லா உயிர்களையும் உன்னிடத்தில் பார்ப்பாய், அர்ஜுனாயேந பூ4தாநி அசே1ஷேண ஆத்மநி அதோ2 மயி த்3ரக்ஷ்யஸி, என்கிறார்.

தன்னால் பார்க்கபடுகின்ற அனைத்து உயிர்களையும் தன்னிடத்திலேயே பார்ப்பான். ஏன்? ஆத்மஞானத்தினால் கர்த்ருதுவ(செயல் செய்பவன் நான்) மற்றும் போக்த்ருதுவ(அனுபவிப்பவன் நான்) புத்தி நீங்கிவிடுவதால் அவனே அறிபவனாகவும், அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும் ஆகிறான். ஆகவே அவன் தன்னை எதிலும் சம்பந்தப்படாத ஒரு தூய்மையான பிரக்ஞையாகப் பார்க்கிறான். வெளியில் தோன்றிக் கொண்டிருக்கின்ற நாமரூபத்திற்கு(பெயர்கள்-வடிவங்கள்), இந்த பிரக்ஞையிடமிருந்து வேறாக எந்த சுயாதீனமான இருப்பும் இல்லை. அறிபவன், அறியப்படும் பொருள் மற்றும் அறிவு இவைகள் எதுவும் பிரக்ஞையிலிருந்து வேறானதாக இல்லை. ஏனெனில் எல்லாவற்றின் இருத்தலும், ‘ஸத்’, பிரக்ஞையின் இருத்தலேயாம். இருப்பவை அனைத்தையும் பிரக்ஞையாக, ஆத்மாவாக, ப்ரம்மனாக பார்ப்பதை கிருஷ்ணர், ‘அனைத்தையும் உன்னுள் காண்பாய்என வெளிப்படுத்துகிறார்.

எல்லாவற்றின் இருத்தலும் பிரக்ஞையாகிய உனது இருத்தலுக்கு வேறாக இல்லாததால் நீயே அனைத்துமாகவும் இருக்கிறாய். எனில் ஈஷ்வரனும் உன்னிலிருந்து வேறானவராக இருக்கமுடியாது. அதனாலேயே பகவான், ‘நீ உன்னில் எல்லாவற்றையும் பார்ப்பதால், நீ என்னில் எல்லாவற்றையும் பார்ப்பாய்’ — பூ4தாநி ஆத்மநி அதோ2 மயி த்3ரக்ஷ்யஸி, எனக் கூறி ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை செய்கிறார். இவ்வித ஜீவ-ஜீவ அபேதமும், ஜீவ-ஈஷ்வர அபேதமும் ஞானத்தின் உச்சம்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒன்றென உணர்வது ஞானம்; பலவாகக் காண்பது அக்ஞானம்.

-------------------------------------------------------------------------------------