செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.15 - 4.17

||4.15|| அத்தாட்சியைக் கூறி அர்ஜுனனுக்கு அறிவுரை:

एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभि:  

कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वै: पूर्वतरं कृतम् ।। १५ ।। 

ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி4:

குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ।। 15 ।।


एवं   ஏவம்  இவ்விதம்  ज्ञात्वा   ஜ்ஞாத்வா  அறிந்து  पूर्वै: मुमुक्षुभि: अपि  பூர்வை: முமுக்ஷுபி4: அபி  முன்னாளைய முமுக்ஷுக்களாலும்  कर्म कृतम्  கர்ம க்ருதம்  கர்மம் செய்யப்பட்டது  तस्मात्   தஸ்மாத்  ஆகவே  त्वं  த்வம்  நீ   पूर्वै:  பூர்வை:  முன்னோர்களால்  पूर्वतरं   பூர்வதரம்  முன்னாளில்  कृतम्   க்ருதம்  செய்யப்பட்ட  

कर्म एव  கர்ம ஏவ  கர்மத்தையே   कुरु   குரு  செய்.


இவ்விதமறிந்து முன்னாளைய முமுக்ஷுக்களும் கர்மம் செய்தனர். ஆகையால் நீயும் முன்னாளில் முன்னோர் செய்தபடி வினையாற்றுவாயாக


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.


விளக்கம்:

கிருஷ்ணரை, இறைவனை, ‘இந்த முறையில் அறிவதுஏவம் ஜ்ஞாத்வாஎன்பது முந்தைய சுலோகத்தில் கூறப்பட்டதை மீண்டும் இங்கு பொறுத்திப் பார்த்தலைக் குறிக்கிறது. ‘செயல்கள் என்னை பாதிக்காதுமாம் கர்மாணி லிம்பந்தி’. மேலும் எந்தவிதமான கர்மபலனிலும் எனக்கு ஆசையோ, ஏக்கமோ இல்லை என கிருஷ்ணர் கூறியிருந்தார். ஈஷ்வர உபாதிக்கும், ஜீவ உபாதிக்கும் பொதுவானதாக விளங்கும் ஆத்மா பூர்ணமானது, ஆகவே அது எதனோடும் ஒட்டுவதில்லை; சேர்க்கையில்லை, அஸங்கமானது. இவ்விதமாக தன்னை அறிந்தவர் யார்? அவர்கள் எதைப் பெறுகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? என்பதை பகவான் இங்கு கூறுகிறார்

யார் இந்த அறிவைப் பெறுகிறார்கள்? இந்த அத்தியாயத்தின் பத்தாவது சுலோகத்தில் பகவான், பலர் ஏற்கனவே இந்த வழியில் தன்னை வந்தடைந்ததாக சுட்டிக்காட்டினார். அங்கு அவர் அனைவரையும் குறிக்கவில்லை. முக்தியை நாடுபவர்களை, முமுக்ஷுக்களை மட்டுமே கூறினார். அதை இங்கு மீண்டும் உறுதிப்படுத்துகிறார்பூர்வை: முமுக்ஷுபி4:. இந்த அறிவினால் அத்தகையவர்களுக்கு கிடைப்பது என்ன? செயல்கள் அவர்களைப் பிணைப்பதில்லை. கர்மபலனுக்காக அவர்கள் ஏங்குவதில்லை. இந்நிலையே உண்மையில் முக்தி.  


=> இந்த அறிவானது செயலைத் தடுப்பதில்லை:

இதற்கு முன், இந்த அறிவைப் பெற்ற முமுக்ஷுக்கள், அது கிடைத்தவுடன் என்ன செய்தார்கள்? அவர்களும் செயலில் ஈடுபட்டனர்முமுக்ஷுபி4: அபி கர்ம க்ருதம். எனவே கிருஷ்ணர் அர்ஜுனனையும் அவ்வாறே செயல் செய்ய வேண்டுமென அறிவுறுத்துகிறார்தஸ்மாத் கர்ம க்ருதம். இதன் பொருள் அர்ஜுனன் சந்யாசம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதாகும். இந்த சுலோகத்திற்கான தனது பாஷ்யத்தில், அர்ஜுனன் வெறுமனே அமைதியாக உட்கார்ந்து கொள்வதோ அல்லது சந்யாசம் மேற்கொள்வதோ கூடாது என சங்கரர் விளக்கமளிக்கிறார். அர்ஜுனன் முமுக்ஷுவாக இருக்கும் பட்சத்தில், முன்னாட்களில் ஏற்கனவே இந்த அறிவைப் பெற்ற முமுக்ஷுக்களைப் போலவே அவனும் செய்யவேண்டிய கர்மத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்பூர்வை: பூர்வதரம் க்ருதம்


=> முமுக்ஷு:

முமுக்ஷுஎன்ற வார்த்தையின் பயன்பாடு இங்கே மிகவும் பொருத்தமானது. முக்தியை அடைய விரும்புபவன் முமுக்ஷு. அறியாமையுடன் கூடிய, தனது அறியாமையை உணர்ந்த மற்றும் அதிலிருந்து விடுதலை பெற விரும்பும் இவன், அதற்கான ஞானத்தைப் பெற வேண்டும். ஆகவே ஏற்கனவே இப்பாதையில் பயணித்தவர்களைப் போலவே, சிரத்தையுடனும் விசுவாசத்துடனும் கர்மத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் மனத்தூய்மை அடைந்து, ஞானத்தை அடைவதற்கானத் தகுதியை அடைய வேண்டும். ஆத்மஞானத்தை அடைந்தவனும்கூட தனது பிராரப்த கர்மத்தின் காரணமாக, லோக-ஸங்கரஹத்திற்காக (உலக நன்மைக்காக) தொடர்த்து கர்மத்தில் ஈடுபடுகிறான் என மூன்றாம் அத்தியாயத்தில், 3.20-ல் ஏற்கனவே பார்த்தோம். இதிலிருந்துமுமுக்ஷுஎனும் சொல் இங்கு, ஞானத்தை அடைய முயன்று கொண்டிருப்பவர்களையோ அல்லது ஞானத்தை அடைந்த ஜீவன்முக்தர்களையோ குறிக்கலாம். அர்ஜுனன் தன்னை ஞானியாக எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது அக்ஞானியாக எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டிலுமே கர்மம் செய்தாக வேண்டும். செய்யப்பட வேண்டியதைச் செய்வதன் மூலம் ஒருவன் எதையும் இழக்க மாட்டான்.  


=> செயலின்மை ஒருபோதும் முக்திக்கு வழிவகுக்காது:

செயலின்மை தன்னை முக்திக்கு இட்டுச் செல்லும் என அர்ஜுனன் நினைத்துவிடக்கூடாது என்பதில் கிருஷ்ணர் உறுதியாக இருந்தார். அதேசமயம், கர்மமே ஒருவனுக்கு மோக்ஷத்தை அளிக்காது என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே பார்த்தபடி, கர்மத்தை கர்மயோகமாக செய்வதால் அந்த-கரண-சுத்தி, மனத்தூய்மை கிடைக்கிறது. இது ஞானத்தை பெறுவதற்கானத் தகுதியை மனதுக்கு அளிக்கிறது. ஆகவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ‘கர்மம் செய்யாமை எந்த வகையிலும் உதவாதுஎன்பதாகும்

செயலற்ற தன்மை என்ற கருத்தைச் சுற்றி நிறைய குழப்பங்கள் இருக்கக்கூடும் என்பதால், கிருஷ்ணபகவான் ஒரு புதிய பகுதியைத் இங்கே தொடங்குகிறார். அதில் அவர் செயல் மற்றும் செயலற்ற தன்மையின் உண்மையான அர்த்தத்தை விளக்குகிறார்

-------------------------------------------------------------------------------------------------------------------

||4.16|| கர்ம தத்துவம்:

किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिता:  

तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ।। १६ ।। 

கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:

தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽசு1பா4த் ।। 16 ।।



किं  கிம்  எது  कर्म   கர்ம  செயல்   किं   கிம்  எது  अकर्म   அகர்ம  செயலின்மை   इति   இதி  எனும்  

अत्र  அத்ர  இந்த விஷயத்தில்  कवय: अपि  கவய: அபி  ஞானிகள்கூட   मोहिता:  மோஹிதாகுழப்பத்தை அடைகிறார்கள்  यत्   யத்  எதை   ज्ञात्वा   ஜ்ஞாத்வா  அறிந்து  अशुभात्   அசு1பா4த்  கேட்டிலிருந்து/சம்சாரத்திலிருந்து  मोक्ष्यसे  மோக்ஷ்யஸே   விடுபடுகிறாயோ   तत्    தத்  அதை   कर्म  கர்ம  கர்மத்தை   

ते  தே  உனக்கு   प्रवक्ष्यामि   ப்ரவக்ஷ்யாமி  பகர்வேன்.


செயல் எது, செயலின்மை எது என்பதில் ஞானிகளே தடுமாற்றமடைகின்றனர். எதைக் கர்மமென்று அறிந்து கேட்டினின்று விடுபடுவாயோ அதை உனக்குப் பகர்வேன்.



சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எது தொழில்; எது தொழிலல்லாததுஎன்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.


விளக்கம்:

இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பொருள், கர்ம; செயல். ‘கவய:என்பது கவியின்(‘கவி_कवि) பன்மையைக் குறிக்கிறது; இது பொதுவாக கவிஞர், தீர்க்கதரிசி அல்லது இறைவன் எனப் பொருள்படும். மேலும் கவி என்பதுமேதாவிஎனும் அர்தத்தில், அறிவுபூர்வமாக பெரிய சாதனையைப் படைத்தவரை, நன்கு விஷயமறிந்த ஒரு நபரை குறிக்கலாம். இந்த சுலோகத்தில், ‘கவய:என்பது விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர்களையும், அதன் விவரங்களைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடியவர்களையும் குறிக்கிறது. இத்தகையவர்களும் கூட, செயல்(கர்ம) மற்றும் செயலின்மை(அகர்ம) விஷயத்தில் குழப்பமடைகின்றனர் என்று கிருஷ்ணர் கூறுகிறார். உடலைக் கொண்டு ஓயாது வேலை வாங்குவதுதானே செயல் என அவசரப்பட்டு முடிவு கட்டிவிட முடியாது.   


=> எது செயல்? எது செயலின்மை?

தகவலறிந்த மேதாவிகளும் கூட இவ்விஷயத்தில் குழப்பத்தை அடைவதால், செய்யப்படும் செயலைகர்மஎன்றும் செயலற்ற தன்மையைஅகர்மஎன்றும் வெறுமனே கருத முடியாது. எளியதான இந்த அணுகுமுறையே ஒருவனுக்கு சரி என்றும் தோன்றலாம். எனவேதான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ‘கர்ம என்றால் என்ன? என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்தே கர்ம ப்ரவக்ஷ்யாமிஎன்கிறார். இங்கு கர்ம என்பதுகர்ம மற்றும்அகர்ம இரண்டையும் குறிக்கிறது. இதை சங்கரர் தனது பாஷ்யத்தில் உறுதிப்படுத்துகிறார்(கர்ம அகர்ம _कर्म अकर्म ). கர்மத்தை புரிந்து கொள்ள, அகர்மமும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் எதையறிவதனால் ஒருவன் தீங்கிலிருந்து(அசு1பா4த்), அதாவது சம்சாரத்திலிருந்து விடுபடுகிறானோயத் ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே கர்மமும் கர்மமின்மையும் சரியாக புரிவது அவசியமாகிறது.  

நன்றாக முடிவடைந்த ஒன்றைக் குறிக்கசு14என்பது மிகவும் அழகான சொல். பொதுவாக இதை ஒரு புத்தகத்தின் இறுதியில் காணலாம். ‘முடிந்ததுஎனில் புத்தகம் முடிந்துவிட்டது என்று அர்த்தம்; ‘சுபம்எனில் அது நன்றாக முடிந்தது என்று பொருள். மங்களமானது, நல்லது அனைத்தும் சுபம் என்றும், அதற்கு நேர்மாறாக நல்லதல்லாதது, தீங்கு விளைவிப்பது அசுபம் என்றும் பொருள். இங்கு சங்கரர், அசுபம் என்பது சம்சாரத்தை குறிப்பதாகக் கூறுகிறார். சம்சாரம் அசுபம், அது மோக்ஷத்தில் முடிவிற்கு வருகிறது. மோக்ஷமே சுபம். அமங்களமான சம்சாரத்தின் இறுதிப் போட்டியானது, சுபமாக முடிவு பெற்று ஒருவன் விடுதலையடைதல், முக்தியடைதல்அசு1பா4த்  மோக்ஷ்யஸே, எனப்படுகிறது.

இனியொரு கோணத்திலும்அசுபம்எனும் சொல்லை அணுகலாம். ஒருவனுக்கு சந்தேகம் என ஏதேனுமிருந்தால் அது அவனைப் பற்றிக் கொண்டு, பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். ஆகவே, சந்தேகங்கள் அசுபம். எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் அதை ஒரு முடிவிற்கு கொண்டு வரலாம். இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியது எது? கர்ம மற்றும் அகர்மத்தின் தன்மை.


=> அனைத்துவித புரிதல்களும் ஆத்மாவில் முடிகிறது:

கர்மங்களைப் புரிந்துகொள்வது என்பது ஆத்மா மற்றும் அனாத்மாவை பற்றிய புரிதலே. உண்மையில் எந்தவொரு தலைப்பை பற்றிய முழுமையான புரிதலும் எப்போதுமே ஆத்மாவில்தான் முடிவடையும். சாந்தி, சுகம், துக்கம், உலகம், பெயர் அல்லது வடிவம்(நாமரூபம்_नामरूप), மனம் மற்றும் அதன் இயல்பு என எதை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலும், அது இறுதியில் ஆத்மாவில் ஒடுக்கத்தை அடைகிறது. இதனாலேயே நாம் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். இவைகளனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

ஆகவேசெயல்_கர்மபற்றிய அனைத்து சந்தேகங்களும் நீங்கும் போது, அதனால் விளையும் சம்சாரமும் நீக்கப்படுவதால் அது மோக்ஷத்தில் முடிவடைகிறது. இருதயத்தின் முடிச்சான அறியாமை அவிழ்க்கப்படும் போது, அனைத்து சந்தேகங்களும் வீழ்ந்து விடுகிறது. ஈஷ்வர மற்றும் ஜீவனின் ஆதாரமான பரமாத்மா, ப்ரம்ம புரிந்து கொள்ளப்படும் போது ஒருவனின் கணக்கில் நிற்கும் அனைத்து கர்மங்களும் அழிக்கப்படுகின்றனயத் ஜ்ஞாத்வா அசு1பா4த்  மோக்ஷ்யஸே

-------------------------------------------------------------------------------------

||4.17|| தெரிந்து கொள்ளப்பட வேண்டியது:

कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं विकर्मण:  

अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गति: ।। १७ ।। 

கர்மணோ ஹ்யபி போ3த்34வ்யம் போ3த்34வ்யம் விகர்மண:

அகர்மணச்1 போ3த்34வ்யம் 3ஹநா கர்மணோ 3தி: ।। 17 ।।


हि   ஹி   ஏனென்றால்  कर्मण: अपि   கர்மண: அபி  கர்மத்தைப் பற்றியும் 

बोद्धव्यं   போ3த்34வ்யம்  தெரிந்து கொள்ள வேண்டும்   विकर्मण: விகர்மண:   விலக்கப்பட்ட கர்மத்தைப் பற்றியும்  बोद्धव्यं   போ3த்34வ்யம்  தெரிந்து கொள்ள வேண்டும்   अकर्मण:   அகர்மண:   அகர்மத்தைப் பற்றியும்  बोद्धव्यं   போ3த்34வ்யம்  தெரிந்து கொள்ள வேண்டும்   कर्मण:  கர்மண:  கர்மத்தின்   

गति:  3தி:  போக்கு/தத்துவம்  गहना   3ஹநா  அறிதற்கரியது.


கர்மத்தின் தத்துவம் தெரிய வேண்டும். விலக்கப்பட்ட கர்மத்தைப் பற்றியும், செயலற்ற தன்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். கர்மத்தின் போக்கு அறிதற்கரியது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.


விளக்கம்:

இங்கு பகவான் முதலில்செயல்_கர்ம’, இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். (1) செய்யவேண்டிய செயல்_கர்ம; இன்னதைச் செய் என்று சாஸ்திரம் விதித்துள்ளது, கர்மம். (2) செய்யக்கூடாத செயல்_விகர்ம. இன்னதைச் செய்யாதே என்று சாஸ்திரம் விலக்கியிருப்பது, விகர்மம். இது நிஷித்34 கர்மம்(निषिद्ध कर्म) என்றும் அழைக்கப்படும். செய்யவேண்டியவை நிச்சயமாக அறியப்பட வேண்டும், அதேசமயம் செய்யக்கூடாதவையும் அறியப்பட வேண்டும். மேலும் செயலில் ஈடுபடாது இருத்தலே, செயலற்ற தன்மை என ஒருவன் நினைத்தால், அந்தச் செயலின்மையின் தத்துவமும் அறியப்பட வேண்டும்

இந்த கர்ம தத்துவம் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியது அல்ல. கடினமானது; பெருங்குழப்பத்தை கொடுக்கக்கூடியது3ஹநா. ஆகவே அது தெளிவாக விளங்காத பட்சத்தில், சரியான ஒளியைக் கொண்டு அதன் மீதுள்ள மூடுபனியை விலக்க வேண்டும். கர்மத்தின் தன்மையை புரிந்து கொண்டால் மட்டுமே யதார்த்தமான ப்ரம்மத்தை சரியாக புரிந்து கொள்ளமுடியும்

இவ்வாறாக முந்தய சுலோகத்திலும், இங்கும் கர்ம தத்துவத்தை கிருஷ்ணர் அறிமுகப்படுத்தினார். இனிவரும் ஒரு சில சுலோகங்களில் கர்ம மற்றும் அகர்மத்தின் இயல்புகளைக் கூறுகிறார். விகர்மத்தை குறித்த விரிவான விசாரம் அத்தியாயம் 16 மற்றும் 17-ல் செய்யப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------