சனி, 22 மே, 2021

கர்மயோகம் 3.17 - 3.19

 ||3.17|| மோக்ஷ சொரூப விளக்கம்:

यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानव:

अात्मन्येव सन्तुष्टस्तस्य कार्यं विद्यते ।। १७ ।। 

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதா3த்மத்ருப்தச1 மாநவ:  

ஆத்மந்யேவ ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் வித்3யதே ।। 17 ।।


तु  து  ஆனால்   : मानव:   : மாநவ:   எந்த மனிதன்   अात्मरति:   ஆத்மரதி:  தன்னிடத்தில் இன்புற்று अात्मतृप्त: एव   ஆத்மத்ருப்த: ஏவ   தன்னிடத்திலேயே திருப்தியுடையவனோ  

अात्मनि एव   ஆத்மனி ஏவ   தன்னிலேயே   सन्तुष्ट:   ஸந்துஷ்ட:   சந்தோசஷமடைந்தவனாய்   

स्यात्  ஸ்யாத்  இருக்கின்றானோ   तस्य   தஸ்ய  அவனுக்கு   कार्यं   கார்யம்  செய்ய வேண்டிய கடமை   

विद्यते    வித்3யதே   இல்லை.


ஆனால் தன்னிடத்தில் இன்புற்று, தன்னிடத்திலேயே திருப்தியடைந்து, தன்னில் மகிழ்ந்திருப்பவனுக்கு செய்ய வேண்டியது எதுவும் கிடையாது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.


விளக்கம்:

முறையான கர்மத்தினாலேயே ஜகத் சக்கரம் சுழல்கிறது எனில் அனைவரும் கர்மத்தில் ஈடுபட்டேயாக வேண்டுமா? இவ்விதிக்கு விலக்கானவர் யாருமில்லையா? கர்மத்தினாலேயே மோக்ஷத்தை அடைந்து விட முடியுமா? பகவான் ஏற்கனவே கர்மயோகம் நேரடியாக ஞானத்தை கொடுப்பதில்லை என கூறியிருந்தார். இது போன்ற சந்தேகங்களுக்கு இங்கு கிருஷ்ணர் பதில் கூறுகிறார்

கர்மயோகம் மனத் தூய்மைக்கான சாதனம். ஞானமே மோக்ஷத்திற்கான நேரடி சாதனம். அதாவது இதில் செய்தாக வேண்டிய(कर्तव्य) செயல் என எதுவுமில்லை. ஞானத்தை அடைவதென்பது ஒரு செயல் அல்ல; அதை செய்து முடித்தவுடன் ஞானம் கிடைப்பதற்கு. இது மனதில் உண்டாகும் அறிவு. இந்த ஞானம், ‘செய்பவன்(कर्ता)’ எனும் அந்தஸ்தை அழித்துவிடுகிறது. செய்பவன் இல்லாமல் செயல் இல்லை. ஆகவே இவன் கர்மமற்றவன் ஆகின்றான்

இந்த சுலோகத்தில் து(तु) எனும் சொல், கர்மயோகியாக இருப்பவனைக் காட்டிலும் வேறானவன், அதாவது ஞானியைக் குறிக்கிறது. அல்லது முன் சுலோகங்களில் சொல்லப்பட்ட யக்ஞம் முதலிய செயல்களைச் செய்பவனைக் காட்டிலும் வேறான கர்மமற்றவனைக் குறிக்கிறது. இங்கு கர்மமற்றவன் என்பது ஆத்ம ஞானத்தையுடைய ஸாங்கியர்கள்; சந்யாசிகள். இவனுக்கு ஆத்மாவாகிய தன்னைக் குறித்து எந்தவொரு சந்தேகமோ, தவறோ அல்லது தெளிவற்ற அறிவோ இல்லை. இரண்டாவது அத்யாயத்தில் நம்மால் ஏற்கனவே பார்க்கப்பட்ட ஆத்ம ஞானத்தில் நிலைபெற்ற ஸ்தித ப்ரஞனுக்கே தன்னால் தனக்குள்ளேயே மகிழ்திருத்தல் சாத்தியமாகிறது


=> ஆத்ம நிஷ்டனின் மனநிலை:

முன் சுலோகங்களில் கர்மயோகத்தின் முக்கியத்துவம் சொல்லப்பட்டதை தொடர்ந்து, இங்கு மோக்ஷத்தின் சொரூபத்தை, ஞானியின் மனநிலையை பகவான் வர்ணிக்கிறார். இப்படிப்பட்ட மனநிலை வரும் வரை ஒருவன் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என்பது மறைபொருள்.

* ஆத்ம ரதி: -> ரதி - போகம், சுகம்; நம் கட்டுக்குள் உள்ள பொருட்களினால் அடையப்படும் சுகம். ஆத்ம ரதி - ஞானி தன்னை நினைக்கும் போது அவன் அடையும் சுகம். அவனுடைய சுகத்திற்கு பொருளோ, சூழ்நிலையோ அல்லது குறிப்பிட்ட நபரோ தேவையில்லை. தன்னுடைய இருப்பே தனது சுகத்திற்கு காரணமாக அமைகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தன்னை அவன் நீக்கிக் கொள்ள மாட்டான்.

ஒருவனுக்கு தன் மீது ஏற்படும் வெறுப்பையே, அவன் உலகத்திடமும், மற்றவர்களிடமும் ஏற்றி வைக்கிறான். ஆகவேதான் உன்னை நீ நேசிக்க நேசிக்க, மற்றவர்களையும் அதிகம் நேசிப்பாய் என சொல்லப்படுகிறது.

* ஆத்மத்ருப்த: -> தன்னிடத்தில், தான் கையாளுகின்ற பொருட்களில் திருப்தியாக இருத்தல். தன் வீடு, எதிர்வரும் சூழ்நிலை, சந்திக்கும் மனிதர்கள், தன் உடல், அதில் உண்டாகும் நோய் என தன்னால் கையாளப்படும் எதிலும் எந்தக் குறையையும் பார்க்காமல் திருப்தியாக இருத்தல்

* ஆத்மனி ஏவ ஸந்துஷ்ட: -> தன்னை மகிழ்விக்க வெளியிலிருந்து எதுவும் தேவையில்லை. தன்னிடத்திலேயே இன்புற்றிருப்பான். பொதுவாக, சாமானிய மனதில் நிறைவாக இருப்பான்


=> மகிழ்ச்சியின் வரையறை:

யோகியானவன், தனது அலைபாயும் மனதை மூலப்பொருளாக எடுத்துக் கொண்டு அதை ஒழுங்குப்படுத்தி சுகத்தை அடைகிறான். போகி, வெளியுலகை மூலப்பொருளாகக் கொண்டு விருப்பமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சுகத்தை அடைகிறான். ரோகியோ நோயுடன் கூடியவனாக, உலகப் பொருட்களையும், மனதையும் கையாள முடியாத அளவில், சுகத்தை குறித்த ஏக்கம் கொண்டவனாக வாழ்நாளைக் கழிக்கின்றான். இவர்கள் மூவரும் ஏதாவது ஒரு மாற்றத்தைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைய எத்தனிக்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு வேதனை தருவதாக, முடிவற்ற பிரச்சனையுடன் கூடியதாக மாறிவிடுகிறது. ஆனால்நான் பூரணமானவன்என்ற அறிவில் நிஷ்டை பெற்ற ஆத்ம-ஞான-நிஷ்டனாலேயே தன்னிடத்தில் திருப்தியை அடையமுடியும். அவனுக்கு வேறாக எந்த பொருளும் அவனை திருப்திபடுத்தத் தேவையில்லை

பிரகிருதி கர்ம சொரூபம். ஆத்மாவிற்குக் கர்மம் இல்லை. மனதோ பிரகிருதியின் கூறுபாடாகையால் அதனிடத்து ஓயாது கர்மம் நடந்துகொண்டிருக்கிறது. மனம் உலகப் பொருள்களை புலன்கள் வாயிலாகப் பற்றும்போது அதன் கர்மம் அதிகரிக்கிறது. அது ஆத்மாவைப் பற்றும்போது அதன் கர்மம் ஓய்கிறது. அதன் கர்மங்களில் கடைசியானது ஆத்மாவைப் பற்றுதல் என்ற கர்மம். ஆத்மா ஆனந்த சொரூபம். ஆகையால் ஆத்மாவைப் பற்றும் மனதில் நிலைத்த இன்பமும், திருப்தியும், மகிழ்வும் உண்டாகின்றன. ஆத்மாவைச் சார்ந்து ஆத்மாவில் லயமாவது ஒப்பற்ற கர்மமாகிறது. ஆகவே ஆத்மாவில் ஒடுங்கியிருக்கும் மனதிற்கு கர்மமில்லை


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டின் சேர்க்கையானது ஒரு கடிகாரத்தில் மணிக்கொரு தரம், மணியைக் காட்டும் முள்ளும், நிமிஷத்தைக் காட்டும் முள்ளும் சேர்வதை ஒக்கும். சாதாரணமாக அவை தனித்திருப்பினும் தகுதியான சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் ஒன்று சேரும். அங்ஙனம் ஜீவாத்மா பரமாத்மாவைச் சேர வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------

||3.18|| எவ்வித எதிர்பார்ப்பும் அற்ற நிலை:

नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन  

चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रय: ।। १८ ।।

நைவ தஸ்ய க்ருதேநார்தோ2 நாக்ருதேநேஹ கச்1சந  

சாஸ்ய ஸர்வபூ4தேஷு கச்1சித3ர்த2வ்யபாச்1ரய: ।। 18 ।।


तस्य  தஸ்ய  அவனுக்கு   इह  இஹ  இங்கு   कृतेन  க்ருதேந  கர்மம் செய்வதால்   

अर्थ:   அர்த2:   பிரயோஜனம் இல்லை  अकृतेन   அக்ருதேந  கர்மம் செய்யாமையினால்   

कश्चन  கச்1சந  யாதொரு(நஷ்டமும்)   एव   ஏவ   இல்லை       மேலும்   अस्य  அஸ்ய  அவனுக்கு   सर्वभूतेषु   ஸர்வபூ4தேஷு  எல்லா உயிர்களிடத்திலும்    कश्चित्  கச்1சித்   ஏதாவது    

अर्थव्यपाश्रय:   அர்த2வ்யபாச்1ரய:  பிரயோஜனத்திற்காக சார்ந்திருத்தல்       இல்லை.


இங்கு அவனுக்கு கர்மம் செய்து ஒன்றைப் பெறுதலும், செய்யாது எதையாவது இழத்தலும் கிடையாது. ஏதாவது பொருளை நாடி உயிர்களைச் சார்ந்திருப்பதும் அவனுக்கில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.


விளக்கம்:

=> ஞானியின் எதிர்பார்ப்பற்ற மனநிலை:

ஆத்மாவை அடைந்தவன் பூர்ணானந்தத்தை அடைந்தவன் ஆகிறான். அதற்குமேல் அவன் பெறவேண்டியது ஒன்றுமில்லை. பெற்ற அப்பரமானந்தத்தை இழப்பதும் கிடையாது. ஆகையால் புல் முதல் பிரம்மா வரை எந்த உயிர்களிடத்தும் எவ்விதமான தயவையும் அந்த ஆத்மஞானி எதிர்பார்ப்பதில்லை

ஞானி தனது முழு வாழ்க்கையை அப்படியே பிராரப்தத்திடம் முழுமையாக ஒப்படைத்து விடுகிறான். எதையும் எதிர்க்காமல், வருவதை ஏற்றுக் கொள்கிறான். மேலும் விதிப்பயன் உள்ள வரை உணவு, உறைவிடம் என அனைத்தையும் விதிப்பயனே கொடுப்பதால் அவன் சரீரத்திற்கு என எந்தச் செயலையும் செய்ய வேண்டியதில்லை. சரீரத்தை பாதுகாக்கவோ, அதைச் சுற்றியுள்ள பொருளைப் பாதுகாக்கவோ, விலாஷத்திற்காகவோ, மனதின் சலிப்பை நீக்கவோ, பொழுதை போக்கவோ அவன் எதையும் செய்ய வேண்டியதில்லை. சொர்க்கத்திற்காகவோ, நற்கதிக்காகவோ அவன் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஏற்கனவே அடைந்து விட்ட காரணத்தினால் சித்த சுத்திக்காக கர்மயோகமோ, அல்லது ஞானத்திற்காக ஞானயோகமோ தேவையில்லை. மற்றவர்களைக் கரைதேற்ற செய்யவேண்டியது ஏதேனும் உண்டா? எனில், அவன் அத்வைதி(இரண்டற்றவன்); ஆகவே மற்றவர்கள் கிடையாது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தனக்குள் தானே பூர்ணானந்தத்தை அனுபவிப்பது ஈஷ்வர தரிசனத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். சமுத்திரத்தின் மேற்பரப்பில் அலைகள் சுருண்டோடுகின்றன. ஆனால் அதன் கீழுள்ள ஆழமான நீர்த்தொகுதியோ அசைவற்றிருக்கிறது.

-------------------------------------------------------------------------------------

||3.19|| சாதன தசையில் இருப்பவன் செய்ய வேண்டியது:

तस्मादसक्त: सततं कार्यं कर्म समाचर

असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुष: ।। १९ ।। 

தஸ்மாத3ஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர

அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: ।। 19 ।।


तस्मात्   தஸ்மாத்  ஆகவே   असक्त:  அஸக்த:  பற்றற்றவனாக   सततं    ஸததம்  எப்பொழுதும்   

कार्यं  கார்யம்  செய்ய வேண்டிய   कर्म  கர்ம  கர்மத்தை  समाचर   ஸமாசர   நன்கு செய்   

हि    ஹி   ஏனென்றால்   असक्त:  அஸக்த:  பற்றில்லாமல்   कर्म   கர்ம   கடமையை  

अाचरन् पूरुष:  ஆசரன் பூருஷ:  செய்து கொண்டிருப்பவன்   परम्   பரம்  மேண்மையை(மோக்ஷத்தை)   

अाप्नोति   ஆப்நோதி  அடைகிறான்.


ஆகையினால் எப்பொழுதும் பற்றற்றவனாக செய்ய வேண்டிய கடமையை நன்கு செய்வாயாக. ஏனென்றால் பற்றில்லாமல் கர்மத்தை செய்பவன் பெருநிலையை அடைகிறான்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.


விளக்கம்:

=> ஆகவே அர்ஜுனா கடமையைச் செய்:

இந்த சுலோகத்தின் தொடக்கமானஆகவே(தஸ்மாத்)’ எனும் சொல் எதைக் குறிக்கிறது? சென்ற சுலோகத்தில்தான் பகவான், ஞானி கர்மம் செய்து ஒன்றைப் பெறுதலும், செயல் செய்யாது எதையாவது இழத்தலும் கிடையாது என கூறினார். அர்ஜுனனோ, ‘ஆகவே அர்ஜுனா, எதையும் செய்ய வேண்டாம்!’ என்னும் அறிவுரையை அவரிடமிருந்து எதிர்பார்த்திருப்பான். ஆனால் அப்படி எதையும் கூறாமல், இங்கு கர்மம் செய்தலைப் பற்றி பேசுகிறார் கிருஷ்ணர். ஞானம் என்பது செயலினால் அடையப்படுவதல்ல என்று ஏற்கனவே தெளிவாக விளக்கியிருந்தார். ‘ஞானத்தை அடைவாயாக, ஆனால் செய்ய வேண்டிய செயலை நிச்சயம் செய்என்கிறார். பகவானின் இந்த உபதேசம் முரண்பாடாக தெரிந்த போதிலும் நன்கு விசாரித்துப் பார்க்கும் போது உண்மை புலப்படும். ஏற்கனவே ஞானத்தை அடைந்த ஒருவன் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆனால் அந்த ஞானம் ஏற்படும் வரை, செய்யப்பட வேண்டிய கடமையை நன்கு செய். ‘ஆகவே(தஸ்மாத்)’ எனும் சொல் இந்த முடிவுரையைக் குறிக்கிறது

மேலும் ஞானத்தை அடைய இரண்டு விதமான வாழ்க்கை முறையை சுலோகம் 3.3 -ல் கூறியிருந்தார், கர்மயோகம்(கர்மயோகே3) மற்றும் ஞானயோகம்(ஜ்ஞாநயோகே3). இவை இரண்டுமே மோக்ஷம் என்னும் முடிவை நோக்கியே செல்கிறது. இவற்றில் உனக்கு உகந்ததான ஒன்றை தேர்ந்தெடுத்தல் சிறந்தது என்றார். அதன்படி அர்ஜுனனுக்கு கர்மயோகமே பொருத்தமானது என்பது பகவானின் கருத்து. ‘ஆகவே(தஸ்மாத்)’ கர்மயோகத்தில் ஈடுபட்டவனாய் ஞானத்தையும் பின் தொடர்க என்கிறார்

இறுதியில் கீதையின் பதினெட்டாவது அத்யாயத்தின் முடிவில் தான் அர்ஜுனன்எது செய்யப்பட வேண்டுமோ அதை நான் செய்கிறேன்என கூறி யுத்தத்தை ஆரம்பித்தான்

போரில் பாண்டவர்கள் வெற்றியை அடைந்திருந்த போது, அர்ஜுனனின் மகன் அபிமன்யு முதல் திரௌபதியின் ஐந்து புத்திரர்கள், பீஷ்மர், திரோணர், கர்ணன், துரியோதனன் மற்றும் அவனது அனைத்து சகோதரர்கள் உட்பட பலர் உயிர் விட்டிருந்தனர். இந்த அழிவிற்குப் பிறகு அர்ஜுனன் மிகுந்த சோகத்தில் இருந்தான். அப்போது அர்ஜுனன் மீண்டும் ஒருமுறை இந்த ஞானத்தை உபதேசிக்குமாறு வேண்டினான். அர்ஜுனன் திரும்பவும் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக கண்ணன், உத்தர கீதை என்னும் பெயரில் மீண்டுமொரு கீதையை உபதேசித்தார். 'உத்தர' என்றால், பின்னால் வருவது

அர்ஜுனன் இந்த ஞானத்தை அடைய வேண்டும் என புரிந்து கொண்டான். யுத்த களத்திற்கு மத்தியில் அவனால் பகவானின் உபதேசத்தை கேட்க மட்டுமே முடிந்தது. அவரின் ஒவ்வொரு கருத்தையும் சிந்தித்து பகுத்தாராயும் சூழலில் அவன் அங்கு இல்லை. செயலின் மூலமே அவன் அச்சூழ்நிலையைக் கடக்க முடியும். ஆகவேதான் பகவான் உன்னுடைய க்ஷத்திரியக் கடமையான தர்மத்தைக் காத்தலைச் செய். விருப்பு வெறுப்பில்லாமலும், பலனை எதிர்பாராமலும் செய்யும் செயலினால் மனத் தூய்மை ஏற்படுகிறது. மனம் தயாரானவுடன் உண்டாகிற அறிவினால் ஒருவன் மோக்ஷத்தை அடைகிறான்.


=> ‘எனக்கென்ன பயன்?’ பாவனை:

கர்ம பலனில் பற்றில்லாமல் செயலில் ஈடுபடும் பாவனையை பகவான் இங்கு மீண்டும் நினைவுபடுத்துகிறார். வானத்தில் வட்டமிடும் பெருங்கழுகானது தனது பறத்தலையும், மிதந்து ஊர்தலையும் சுகமாக அனுபவிப்பதைப் போல தெரிந்தாலும் அதனுடைய கண்களும், அலகும் எப்பொழுதும் கீழ்திசை நோக்கியே ஏதேனும் இறந்த எலியோ அல்லது இரையோ கிடைக்கிறதா என்பதிலேயே குறியாக இருக்கும். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதனுடைய கண்கள் இரையை நோக்கியே இருக்கும். மனிதர்களிடமும் இந்த பாவனையை பரவலாகப் பார்க்கலாம். கிடைக்கும் பயனை அடிப்படையாகக் கொண்டே காரியத்தில் இறங்கும் ஒருவனால், எதிர்பார்ப்பில்லாமல் ஏன் ஒருவன் ஒரு விஷயத்தை செய்கிறான் என புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆகவே பற்றில்லாமல் கர்மம் செய்வதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் கூற வேண்டியிருக்கிறது. மேலும் விருப்பு வெறுப்பு மட்டுமே எப்பொழுதும் ஒருவனது செயலைத் தூண்டத் தேவையில்லை. தர்மம் மற்றும் அதர்மம் பொருட்டும் கர்மம் செய்யப்படட்டும். ஆகவே(தஸ்மாத்) அர்ஜுனா, செய்ய வேண்டியதை தயவு செய்து செய் என்கிறார் பகவான்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உலகம், ஈஷ்வரன் இந்த இரண்டையும் ஒன்றுபடுத்துவது எப்படி? அதோ தச்சன் மனைவியைப் பார். அவள் எத்தனைக் காரியங்களில் கருத்தாயிருக்கிறாள்! உரலில் இருக்கும் அவலை ஒரு கையால் கிளறிவிட்டுக்கொண்டு, மற்றொரு கையால் குழந்தையை அணைத்துப் பால் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். அதே சமயத்தில் அவல் வாங்க வந்த ஒருவரிடம் பேரம் பேசிக்கொண்டு மிருக்கிறாள். இப்படி அவள் பல வேலைகளைக் கவனித்தாலும் அவளுடைய மனது மட்டும், உலக்கையானது கையில் விழுந்து காயமுண்டாக்காமலிருக்க வேண்டும் என்ற விஷயத்தில் நிலைத்திருக்கிறது. உலக வாழ்க்கையில் நீ ஈடுபடு. ஆனால் ஈஷ்வரனை மட்டும் எப்போதும் நினைத்துக்கொண்டிரு. ஒருபோதும் அவனுடைய மார்க்கத்தை விட்டுப் புறம்பே போகாதே

-------------------------------------------------------------------------------------