திங்கள், 28 நவம்பர், 2022

தியான யோகம் 6.30 - 6.31

||6.30|| ஆத்ம தர்ஷணமும் ஈஷ்வர தர்ஷணமும் ஒன்று எனக் கூறுகிறார்

यो मां पश्यति सर्वत्र सर्वं मयि पश्यति

तस्याहं प्रणश्यामि मे प्रणश्यति ।। ३० ।। 

யோ மாம் பச்1யதி ஸர்வத்ர ஸர்வம் மயி பச்1யதி

தஸ்யாஹம் ப்ரணச்1யாமி மே ப்ரணச்1யதி ।। 30 ।।


:  :   யார்   मां  மாம்  என்னை    सर्वत्र   ஸர்வத்ர  எல்லாவற்றினிடத்திலும்  पश्यति  பச்1யதி  பார்க்கிறானோ  मयि   மயி   என்னிடத்தும்   सर्वं  ஸர்வம்  எல்லாவற்றையும்   पश्यति   பச்1யதி   பார்க்கிறானோ   

तस्य  தஸ்ய  அவனுக்கு  अहं  அஹம்  நான்  प्रणश्यामि   ப்ரணச்1யாமி  மறைவதில்லை   

:   :  அவனும்   मे  மே  எனக்கு   प्रणश्यति   ப்ரணச்1யதி   மறைவதில்லை.


யார் என்னை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை; அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.


விளக்கம்:

ஜீவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என்றால் இனி அவர்களுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதற்கான விடையாக இந்த சுலோகம் வருகிறது. ஆத்ம தர்ஷணமும் ஈஷ்வர தர்ஷணமும் ஒன்றே எனக் கூறப்படுகிறது. அதாவது தன்னை அனைவரிடத்திலும் பார்த்தலும், பகவானை அனைவரிடத்திலும் பார்த்தலும் ஒன்றே


=> ஈஷ்வர தர்ஷணம்:

முந்தைய சுலோகத்தில் எடுத்துரைக்கப்பட்ட அதே ஆத்ம தர்ஷணம் இங்கு வேறு வார்த்தையில் மீண்டும் கூறப்பட்டுள்ளது. சென்ற சுலோகத்தின் வெளிப்பாடான, ஸர்வபூ4தஸ்த2ம் ஆத்மாநம், என்பது இங்கு தன்னிலை தன்மையில் சொல்லப்படுகிறது, அதாவது எல்லா உயிர்களிடத்திலும் என்னை அடையாளம் காணும் ஒருவன்: மாம் பச்1யதி ஸர்வத்ர, என்கிறார் பகவான்.

இங்குஎன்னைமற்றும்நான்என்பது அர்ஜுனனினுடைய ரதத்தின் சாரதியாகவுள்ள கிருஷ்ணனைக் குறிக்கவில்லை. தேரில் அமர்ந்திருக்கும் இந்த கிருஷ்ணன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தபோதிலும், அவர் அர்ஜுனனுடன் பேசும்போது தன்னை எல்லா இடங்களிலுமுள்ள ஒருவராக குறிப்பிடுகிறார்ஸர்வ-பூதஸ்த-ஆத்மா. எங்கெல்லாம் உயிர்கள், பூத, இருக்கின்றதோ அங்கெல்லாம் அதன் இருத்தல் என்னிலேயே இருக்கிறது என்கிறார். இந்தஎன்னில்என்பது ஆத்மாவைக் குறிக்கிறது

எனவேஸர்வ-பூ4தஸ்த2ம்-ஆத்மாநம்என்ற சொற்களை, இங்கு ஈஷ்வரன் எனப் பொருள்படும்மாம்என்ற சொல்லைக் கொண்டு மாற்றுவதன் மூலம் பகவான், ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்குமான வேற்றுமையின்மையை, ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை அமைதியாக நிலைநாட்டுகிறார். என்னை, ஈஷ்வரனை அனைத்துயிர்களின் ஆதாரமாக(அதிஷ்டான) பார்ப்பவன், தன்னை, ஆத்மாவிலிருந்து வேறாக இல்லாத ஈஷ்வரனாக பரமாத்மாவாக அறிகிறான்

மேலும் இங்கு கிருஷ்ணர், அனைத்தும் என்னில் உள்ளதுஸர்வம் மயி ஏவ, என்கிறார். அதாவது எல்லாவற்றிற்கும் நான் காரணமாக அதிஷ்டானமாக உள்ளேன் என்கிறார்

இவ்விதமாக இங்கு விசாரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நபர், தன்னை அனைத்து உயிரினங்களிலும் மற்றும் அனைத்து உயிரினங்களில் தன்னையும் அடையாளம் காண்கிறான். இந்த சுலோகத்திற்கும் சென்ற சுலோகத்திற்குமுள்ள ஒரே வேறுபாடு, ஆத்மா என்ற சொல்லிற்கு பதிலாகஎன்னைஎன்ற தன்னிலை தன்மை சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் பார்த்தோம். எனவே இவ்விரு சொல்லிற்கும் இங்கே எந்த வித்தியாசமும் இல்லை. அனைத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவை அனைத்திலும் பார்க்கும் ஒருவன், அனைத்திலுமுள்ள ஈஷ்வரனாகிய என்னையும் மற்றும் என்னிலுள்ள அனைத்தையும் அடையாளம் காண்கிறான். எல்லா உயிர்களின் ஆதாரமாக இருப்பவன் நான்தான், எல்லா உயிர்களின் இருத்தலும் என்னிடத்தில் இருப்பைக் கொண்டுள்ளன.


=> தனிப்பட்டவரா ஈஷ்வரன்?

ஈஷ்வரன் தனிப்பட்டு விளங்குபவரா எனில், உண்மையில் ஈஷ்வரனுக்கும் ஜீவனுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஈஷ்வரனே அனைத்துமாக இருப்பதால், அவர் எப்படி ஆத்மாவாக விளங்கும் பிரக்ஞையுணர்விலிருந்து வேறானவராக இருக்கமுடியும்? ப்ரம்ம, சைத்தன்ய-ஆத்மா எல்லையற்றது, வரையறுக்கப்படாதது எனில் ஈஷ்வரன் என சொல்லிக் கொள்ளும் ஒருவர் இதிலிருந்து தனியாக நிற்க கண்டிப்பாக எந்த வாய்ப்புமுமில்லை. இந்த உடல் மற்றும் இந்த மனதின் உண்மைத்தன்மையை ஆராயும்போது அதனுடைய இருத்தலாக இருப்பது ஒரேயொரு மெய்ப்பொருள். அந்த மெய்ப்பொருளின் சொரூபமாக இருப்பது பரப்ரம்ம, சைத்தன்ய-ஆத்மாவைத் தவிர வேறில்லை

சாஸ்திரம் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டிலிருந்து ஈஷ்வரனைப் பற்றியும் ஜீவனைப் பற்றியும் பேசுகிறதே தவிர இருப்பதெல்லாம் பரம்பொருள் ஒன்றேயாம். உபாதி என்ற நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது மட்டுமே ஜீவன் மற்றும் ஈஷ்வரன் வேறுபாடு உள்ளது. இவற்றின் ஆதாரமான பரமாத்மாவை(ஸத்ய-வஸ்து) அங்கீகரிப்பதன் மூலம் மட்டுமே இந்த இரண்டின் ஒடுக்கும் சாத்தியப்படுகிறது. ஆகவே, ‘நான் இறைவன்_அஹம் ஈஷ்வர:என்று இறைவன் கூறும்போதும், ‘நான் தனிமனிதன்_அஹம் ஜீவ:என்று ஜீவன் கூறும்போதும், இதில்நான்_அஹம்என்பது பொதுவானதாகவும் மற்றும் இங்கு காணப்படும் வேறுபாடு மித்யாவாகவும் உள்ளது; அதாவது இந்த வேறுபாடு முற்றிலும் பொதுவான அம்சமான ஸத்யத்தை சார்ந்துள்ளது. வேறுபாடு மட்டுமே இங்குள்ள பிரச்சினையே தவிர, ஸத்யத்தை சார்ந்திருப்பதால் மித்யா என்பது வேறொரு தனி விஷயமாக இல்லை. தனது இருத்தலுக்கு மெய்ப்பொருளை சார்ந்திருப்பதால் இந்த முழு பிரபஞ்சமும் மித்யா; மேலும் இந்த மெய்ப்பொருள் என்பது, ‘நான்என அனைவராலும் குறிப்பிடப்படுவதாக இருப்பது. எனவே, ஒரு கொசு உட்படநான்என்று சொல்லும் எவரும் பரப்ரம்மம் மட்டுமே. தனது உண்மைத்தன்மையை அறியாதவனும் பரப்ரம்மமே. நீ அதுவாக உள்ளாய் எனக் கூறும்தத் த்வம் அஸிஎனும் வாக்கியத்தின் பொருள், இப்பொழுதும் நீ பரப்ரம்மமாகவே உள்ளாய் என்பதாகும்; அதாவது இது பின்னர் அடையக்கூடிய ஒன்று அல்ல, ஏற்கனவே அடையப்பட்டிருப்பது என்பதைக் குறிக்கிறது.


=> இந்த திருஷ்டியின் பலன்:

எனில் இந்த தரிசணத்தின் பலன் என்ன? கிருஷ்ணர் இங்கேயும் வாக்கியத்தில் தன்னிலைத் தன்மையைப் பயன்படுத்துகிறார்; இது தன்னை ஈஷ்வரனாகக் கொண்டு பேசுகிறார் என்பதைக் குறிக்கிறது. இந்த பார்வை கொண்டவனுக்கு நான் தொலைவில் இருப்பதில்லைதஸ்ய அஹம் ப்ரணச்1யாமி. அதாவது நான் அவனுக்கு எங்கோ அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு மறைப்பொருளாக, அவனை விட்டு விலகி இருப்பவனாக எப்போதும் ஆவதில்லை. ஏனெனில் ஈஷ்வரனே ஆத்மாவாக இருப்பதால், என்னைத் தவிர அவர்கள் எதையும் பார்ப்பதில்லை.

மேலும் அவனும் என்னை விட்டு விலகுவதில்லை: மே ப்ரணச்1யதி. அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை; அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை. இது திடீரென உருவான ஒரு நிலை கிடையாது. இது இவ்விதமே எப்பொழுதும் இருந்தபோதிலும் அது அவனுக்கு முன்பு தெரியவில்லை. அறியாமை எனும் தடையை மீறி வந்ததனால் இப்பொழுது அவன் அதை உணர்ந்துள்ளான்

பொதுவாக இறைவன் ஒரு திரைக்குப் பின்னால் இருப்பதைப் போலக் காட்டப்படுகிறார். இதனால் அவர் நம்மை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும் ஆனால் நாம் அவரை பார்க்க முடியாது என்பதுபோலவும் எண்ணம் மனதில் உண்டாகிறது. ஆனால் இந்த சுலோகத்தில் கிருஷ்ணர், இறைவனைப் பார்ப்பதைத் தடுக்கும் திரை என எதுவுமில்லை என்று கூறுகிறார். அறியாமை மட்டுமே அப்படிப்பட்ட திரையாக இருக்கிறது மற்றும் அது ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டதால் இனி எந்த தடையும் இல்லை. ஆகவே முழுமையான பரமாத்ம தரிசணம் கிடைக்கின்றது. அனைத்தும் ஆத்மாவில் ஒடுங்குகிறது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரே வஸ்துவான சர்க்கரையினால் பக்ஷி போலவும், மிருகம் போலவும் வேறு வேறு உருவங்களைக் கொண்ட மிட்டாய் செய்யக்கூடும். அதுபோல ஆனந்த சொரூபியாகிய ஒரே கடவுள் பலவித நாமரூபங்களால் பலவித கால தேசங்களில் ஆராதிக்கப்படுகிறான்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.31|| ஞானியே உயர்ந்த பக்தன்:

सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थित:

सर्वथा वर्तमानोऽपि योगी मयि वर्तते ।। ३१ ।।

ஸர்வபூ4தஸ்தி2தம் யோ மாம் 4ஜத்யேகத்வமாஸ்தி2:  

ஸர்வதா2 வர்தமாநோऽபி யோகீ3 மயி வர்ததே ।। 31 ।।


:  :  யார்   सर्वभूतस्थितं  ஸர்வபூ4தஸ்தி2தம்  எல்லா உயிர்களிடத்தும் இருக்கிற   मां  மாம்  என்னை   

एकत्वम्   ஏகத்வம்  ப்ரம்மம் ஒன்றே எனும் தத்துவத்தில்  स्थित:  ஆஸ்தி2:  நிலைத்திருந்து   

भजति  4ஜதி  வழிபடுகிறானோ   : योगी  : யோகீஅந்த யோகியானவன்    

सर्वथा वर्तमान: अपि  ஸர்வதா2 வர்தமாந: அபி  எப்படியிருந்த போதிலும்   मयि   மயி  என்னிடத்தில்   

वर्तते  வர்ததே  இருக்கின்றான்


இருப்பது ஒன்றே எனும் தத்துவத்தில் உறுதிகொண்டு, எல்லா உயிர்களிடத்தும் இருக்கிற என்னை வழிபடும் யோகி, எப்படியிருந்த போதிலும் என்னிடத்து இருப்பவன் ஆகின்றான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.


விளக்கம்:

எல்லா உயிர்களிடத்தும் இருக்கின்ற ஆத்ம தத்துவம் ஒன்றே; தன்னை அத்தகைய ஆத்மாவாக அறிந்ததனால் அவன் ஈஷ்வரனிடமிருந்து வேறானவனாக இல்லை என்ற பார்வையையுடைய யோகியை பற்றிய விவாதம் இங்கும் தொடர்கிறது

அனைத்து உயிர்களிடத்தும் நிலைத்திருப்பவராக ஈஷ்வரனை பார்ப்பவன்மாம் ஸர்வபூ4தஸ்தி2தம் யோ 4ஜதி. இதனால் தனது சுயமும் பரமேஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாததாகிறது. இவ்விதம் ஈஷ்வரனை பிளவற்ற ஒற்றை தத்துவமாக அடையாளம் கண்டு, அந்த தரிசணத்தில் உறுதிகொள்ளும் யோகியானவன், ஏகத்வம் ஆஸ்தி2:, எப்படி வாழ்ந்தபோதிலும் அவன் ஈஷ்வரனுடன் இருக்கின்றான்ஸர்வதா2 வர்தமாந: அபி : யோகி மயி வர்ததே. ‘அவன் என்னிடத்திலேயே இருக்கின்றான்என்கிறார் பகவான்.


=> தரிசணத்தை இழத்தல் சாத்தியமா?

இந்த தரிசணத்தை பெற்றபின் அது எப்பொழுதாவது இழக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சுலோகம் அமைகிறது. இந்த தரிசணத்தை அடைந்த பின்னும், ஒருவன் நாளுக்குள் நாள் இந்த இருமை உலகில் வியவஹாரம் செய்து வாழ்வதால், ஒருகால் அவன் ஆத்மாவை இழக்க நேரிடுமா? என்ற சந்தேகம் வரலாம். ‘இல்லைஎன பதிலளிக்கிறார் கிருஷ்ணர். அவன் எதைச் செய்தாலும், பார்ப்பது, கேட்பது, பேசுவது, நடப்பது என எதுவாக இருந்தாலும், மேலும் பிரம்மச்சாரியாகவோ, கிரஹஸ்தராகவோ, சன்னியாசியாகவோ என எந்த வழியில் வாழ்ந்தாலும், ஆணோ பெண்ணோ, இளைஞனோ முதியவனோ என எப்படி இருந்தாலும் - ஸர்வதா வர்தமாந: அபி - இந்த தரிசணம் எஞ்சியிருக்கிறது. ஒருவனது வாழ்க்கை நிலை மற்றும் தொழில் முதலியவை அவனது பிராரப்தத்தை பொறுத்தது. எனவே அவனுடைய பிராரப்தம் எப்படி இருந்தாலும் அவன் என்னிடத்தில் இருக்கின்றான்மயி வர்ததே; என்னிடத்திலிருந்து விலகாதவனாக, ஜீவன் முக்தனாக, வாழும்போதே விடுதலையை அடைகிறான். இந்த விடுதலையே, மோக்ஷமே, ஆத்ம தரிசணத்தின் பலனாக கிடைப்பதாகும். அவனுடைய இந்த தரிசணத்திற்கு பிராரப்த கர்மம் எவ்விதத்திலும் தடையாக இருக்காது. மோக்ஷம் என்பது செயல்களை அல்லது சூழ்நிலைகளை மாற்றிக் கொள்வதல்ல; ஒருவன் எதை செய்தாலும், எங்கு இருந்தாலும் திருப்தியுடன் இருக்க வேண்டும்; நிபந்தனையின்றி அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


=> ஈஷ்வரனை நம்புபவர்களுக்கு அவர் தொலைவில் இருக்கிறார்:

இதிலிருந்து அடையப்படும் முடிவு என்னவெனில், ஈஷ்வரன் என்பவர் தனியொருவனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஒரு நபர் அல்ல —  ஈஷ்வர: பரோக்ஷ:. ஈஷ்வரனின் இருப்பு வெறுமனே ஒரு நம்பிக்கையாக இருக்கும் வரை, அவர் நேரடியாக அறியமுடியாதவராக, தொலைபொருளாக ஆகிறார். இது சமஸ்கிருதத்தில்பரோக்ஷஎன்றழைக்கப்படும். பரோக்ஷம் என்பது ஊகிக்கப்படுவது, நம்புவது அல்லது அனுமானிக்கப்படுவதை குறிக்கும். உதாரணமாக நெருப்பை நேரடியாகப் பார்க்காவிட்டாலும், புகையைப் பார்ப்பதன் மூலம் அங்கு நெருப்பு இருப்பதாக அனுமானம் செய்யப்படுவதைக் கூறலாம். எந்த ஒரு பொருளின் இருப்பு நேரடியாக இல்லாமல் அனுமானத்தின் மூலம் அடையப்படுகிறதோ, அது பரோக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.

அதேசமயம், புலனுறுப்புகளால் நேரடியாக அடையப்படும் எதுவும் - உதாரணமாக பார்த்து, கேட்டு, நுகர்ந்து, சுவைத்து அல்லது தொட்டு உணரப்படும் எதுவும்ப்ரத்யக்ஷம்எனப்படும். அதாவது நேரடியாக உணர்தலை ப்ரத்யக்ஷம் என்றும் ஊகத்தின் மூலமோ அல்லது வேறுவிதத்திலோ மறைமுகமாக அடைதலை பரோக்ஷம் என்றும் கூறுகிறோம்.

ஈஷ்வரன் ப்ரத்யக்ஷமா? அல்லது பரோக்ஷமா? இறைவன் ப்ரத்யக்ஷமாக இருக்க முடியாது. ஏனெனில் அவரை நேரடியாக, ஒரு பொருளைப் போல உணர முடிந்தால், அவர் என்னிடமிருந்து வேறானவராக, அனாத்மாவாக ஆகிறார். ஈஷ்வரன் அனாத்மாவாக, எனக்கு ஒரு பொருளாக இருக்க முடியாது. அனாத்மா என்பது சைத்தன்யமாகிய ஆத்மாவை முழுதும் சார்ந்துள்ளது என ஏற்கனவே பார்த்தோம். இதனால் ஈஷ்வரன் அனாத்மாவாக மித்யாவாகவும்நான்ஆத்மாவாக ஸத்யம் என்றும் ஆவேன். இந்த காரணத்தினால் இறைவன் அனாத்மாவாக, புலன்களுக்கான ஒரு உணர்பொருளாக ப்ரத்யக்ஷமாக ஆகமுடியாது. மேலும் அவரை உணர்வுறுப்பின் அடிப்படையில் அனுமானிக்கவும் முடியாது. அவ்வாறு செய்யப்படுமாயின் அது, ‘ஈஷ்வரன் இருக்கிறார் என நம்புகிறேன்எனக் கூறி அவரை பரோக்ஷமாக்குவதாக ஆகிறது.

ஈஷ்வரன் இருக்கிறார் என நம்புபவர்கள் ஆஸ்திகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள், சாஸ்திரத்தை பிரமாணமாக கொண்டு ஈஷ்வரன் இருக்கிறார் என நம்புகிறார்கள். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவைகள் சரிபார்க்கப்பட முடியாவிட்டாலும், அவர்களின் நம்பிக்கை காரணமாக பிரமாணம் எனும் நிலையை அதற்கு கொடுக்கிறார்கள். தங்களது கருத்துக்களை ஆதரிக்கும் சில தர்க்கங்களை அதிலிருந்து எடுத்துக் கொண்டு ஈஷ்வரனை அங்கீகரிக்கிறார்கள். இவ்விதம் வைக்கப்படும் இந்த நம்பிக்கை, இந்த ஏற்பு, பரோக்ஷ-ஞானம் எனப்படும்


=> நேரடியான ஞானம்:

ஆனால் இந்த சுலோகத்தில் விவாதிக்கப்படும் அறிவு என்பது பரோக்ஷ-ஞானம் அல்ல. ஆத்ம அறிவை பெற்றவன், தனது சுயத்தைப் பற்றிய அறிவைப் பெற்றவன் என்பதால் அது நேரடியான ஞானமாக(அபரோக்ஷ-ஞானம்) ஆகிறது. எதன் துணையுமில்லாமல் நேரடியாக விளங்குதல் அபரோக்ஷம் எனப்படும். இப்படிப்பட்டவன், ‘நானே அனைத்துமாக இருக்கின்றேன்; என்னிடமிருந்து வேறானதாக எதுவுமில்லைஎன்ற தீர்மானத்திற்கு வருகின்றான். இங்கு பகவான்நான்எனக் கூறும்போது, அது ஸத்யம்-ஞானம்-அனந்தம்-ப்ரம்மமான பரப்ரம்மத்தை, மற்றவைகளனைத்தும் எதைச் சார்ந்து தங்களது இருப்பை கொண்டுள்ளதோ அந்த தூய பிரக்ஞையுணர்வைக் குறிக்கிறது. இந்த ஸத்யம்-ஞானம்-அனந்தம்-ப்ரம்மமே ஆத்மாவாக, ஒருவனது சுயமாக இருப்பது. இவ்விதத்தில் ப்ரம்மமாகிய ஈஷ்வரனுக்கும் ப்ரம்மமாகிய எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாததால், நான் அவருக்கு பரோக்ஷமாக ஆவதில்லை; அவரும் எனக்கு பரோக்ஷமாக ஒருபோதும் ஆவதில்லை. ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்கும் இடையேயான இந்த வேறுபாடின்மையையே(அபேத) அத்வைதம் என அழைக்கிறோம். இந்த ஜீவ-ஈஷ்வர ஐக்கியமே சென்ற சுலோகத்திலும் சுட்டிக் காட்டப்பட்டது


ஆத்ம-ஞானம் என்பது நினைவாற்றல் சார்ந்ததல்ல. ஞாபக சக்தியை சார்ந்திருக்கும் அறிவை மட்டுமே மறக்கவோ அல்லது எந்நேரமும் இழக்கவோ முடியும். ஆனால் ஆத்ம ஞானம் என்பது தன்னைப் பற்றிய அறிவு. சுய-அறியாமை என்பது இந்த ஆத்மஞானத்தினால் அழிக்கப்பட்டு, சுயமானது ப்ரம்மத்துடன் சமப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே ஒருமுறை பெறப்பட்ட இந்த அறிவு ஒருபோதும் இழக்கப்படுவதில்லை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வாஸ்தவமான ஞானம் வாய்த்தவன் ஈசுவரன் வெகு தூரத்திலிருப்பதாகக் காண்பதில்லை. ‘அவன்என்று எட்ட இருப்பது போல் இல்லாமல்இதுஎன்று இங்கே அவனுடைய உள்ளத்திலேயே இருப்பதாக அவன் உணர்கிறான். ஈசுவரன் எல்லாரிடத்திலும் இருக்கிறான். ஆகவே தேடுபவர்களுடைய காட்சிக்கு அவர்களிடமே அவ் ஈசுவரன் தென்படுகிறான்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------