ஞாயிறு, 27 ஜூன், 2021

கர்மயோகம் 3.31 - 3.34

 ||3.31|| கர்மயோகத்தின் மேண்மை மற்றும் பலன்:

ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवा:  

श्रद्धावन्तोऽनसूयनतो मुच्यनते तेऽपि कर्मभि: ।। ३१ ।। 

யே மே மதமித3ம் நித்யமநுதிஷ்ட2ந்தி மாநவா:

ச்1ரத்3தா4வந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி4: ।। 31 ।।


ये मानवा:  யே  மாநவாஎந்த மனிதர்கள்  मे  மே  என்னுடைய  इदं मतम्  இதம் மதம்  இந்த கோட்பாட்டை   श्रद्धावन्त:  ச்1ரத்3தா4வந்த:   நம்பிக்கை உடையவர்களாய்   अनसूयनत:   அநஸூயந்த:   பொறாமைப்படாதவர்களாய்    नित्यम्   நித்யம்   எப்பொழுதும்    अनुतिष्ठन्ति  அநுதிஷ்ட2ந்தி  பின்பற்றுகிறார்களோ  ते अपि   தே அபி   அவர்கள்கூட    कर्मभि:   கர்மபி4:  கர்மங்களிலிருந்து   

मुच्यनते  முச்யந்தே   விடுபடுகிறார்கள்.


என்னுடைய இக்கருத்தை யார் எப்பொழுதும் நம்பிக்கையுடனும், பொறாமைப்படாதும் பின்பற்றுகிறார்களோ அவர்கள்கூட கர்மங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.


விளக்கம்:

=> சிரத்தையுடையவனாய்(ச்1ரத்3தா4வந்த:) :

சிரத்தை(ச்1ரத்3தா4) என்பது ஒரு மனிதனின் மீதோ அல்லது ஒரு கோட்பாட்டின் மீதோ முழுமனதுடன் நாம் வைக்கும் நம்பிக்கையைக் குறிக்கிறது. எடுத்துக் கொண்ட காரியத்தில் கண்ணாயிருத்தல், பணிந்திருத்தல், வணக்கம் காட்டுதல், விசுவாசம் பூணுதல் போன்றவை சிரத்தையில் அடங்குகின்றன. உதாரணமாக பகவத்கீதையினிடத்தில் சிரத்தை கொள்ளுதல் என்பது அதில் அறிவுக்கு எட்டும் பகுதிகளைப் பாராட்டுதலும், எட்டாத பகுதிகள்கூடத் தனக்கு நன்மை பயப்பனவென்று விசுவாசம் வைத்தலுமாம்

மேலும் சிரத்தை என்பது சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள வாக்கியத்தை விரித்து விளக்கும் குருவின் மீதுள்ள முழு விசுவாசத்தைக் குறிக்கும். குருவினுடைய உபதேசம், நம் அனுபவத்திற்கு முரண்பாடாகத் தெரிந்த போதிலும், அதை சந்தேகிக்காது, அப்படியே ஏற்றுக் கொண்டு, விசாரத்தின் மூலம் அதிலுள்ள உண்மை புரிய சிரத்தையெனும் பண்பு மிக அவசியமாகிறது. இப்பண்பே ஞானயோகப் பாதையை தொடர தேவையான மனப்பான்மையை அளிக்கிறது. ஆகவேதான் சாதன சதுஷ்டய சம்பத்தியை உள்ளடக்கிய அதிகாரித்துவத்தில் சிரத்தை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பகவான் உபதேசித்த கர்மயோகக் கோட்பாட்டில் எப்பொழுதும் முழுசிரத்தை வைத்து அதை பின்பற்றுபவன் கர்மங்களிலிருந்து விடுபடும் தகுதியடைகிறான்.


=> பொறாமைபடாதவனாய்(அநஸூயந்த:) :

அநஸூயந்த:என்பதை சரியாகப் புரிந்து கொள்ளஅஸூயா(असूया)’ மற்றும்மாத்ஸர்ய(मात्सर्य)’ எனும் இரு சமஸ்கிருத வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.  

* தன்னால் அடைய முடியாத வெற்றி, செல்வம், அறிவு மற்றும் திறமை போன்ற மேண்மையை மற்றவர்கள் அடைவதைக் கண்டு சகியாத மனநிலைக்கு பொறாமையென்று(மாத்ஸர்ய) பெயர். சமஸ்கிருதத்தில் இது, ‘பரோத்க்ருஷ்டம் த்ருஷ்ட்வா ஜாயமாந: சந்தாப: மாத்ஸர்ய:எனப்படுகிறது. ‘சந்தாப:என்பது துக்கம், சோகம் அல்லது மனதில் தோன்றும் ஒருவிதமான சங்கடம், பொறுமுதலைக் குறிக்கிறது. ஒரு மனிதனின் சிறந்த குணங்களையெல்லாம் இது தேய்த்துவிடுகிறது. பொறாமையினால் மனக் கொதிப்படைந்தவன் அந்தக் கணத்தில் தன்னையே இழக்கிறான். மாறாக, மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்பவன் தானும் முன்னேற்றத்தை அடைகிறான்

* அஸூயா(असूया)- மற்றவர்களுடைய குறையை அதிகமாகப் பேசுதல். தற்பெருமையைப் பேசுவதிலும், மற்றவர்களின் குறையை பெரிதாகக் கூறுவதிலும் மகிழ்பவர்கள், ‘அஸூயந்த:’- ‘குணேஷு தோஷ தர்சணம்’. ஓரிடத்தில் என்ன குறை அல்லது நிறை இருக்கிறது என தெரிந்து கொள்வதில் தவறில்லை. அது புத்தியின் இயல்பு. சுபாவமாகவே புத்தியானது அதை கிரஹித்துவிடும். ஆனால் அதை பேச்சினால் வெளிப்படுத்தி அதன் மூலம் சுகம் காணுதல் கீழான குணமாகிறது

கர்மயோகத்தைப் பற்றிய பகவானின் கருத்தை எந்த மனிதர்கள் நம்பிக்கையுடனும், பொறாமைப்படாதும், மற்றவர்களைக் குறைகூறி சந்தோஷப்படாமலும் எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ அவர்கள்  கர்ம பந்தத்திலிருந்து விடுதலை அடைகிறார்கள்(கர்மபி4: முச்யந்தே). அதாவது கர்மம் கொடுக்கின்ற பாப புண்ணித்திலிருந்து விடுபட்டு முக்தியை அடைகிறார்கள்

கர்மயோகமே முக்தியை அடைவிக்காது என ஏற்கனவே பார்த்தோம். ஆனால் கர்மயோகத்தின் மூலம் தன்னைத் தூய்மைபடுத்திக்கொண்டவனே ஞானயோகத்திற்கானத் தகுதியை அடைகிறான். ஆகவே கர்மயோகமே ஆத்ம ஞானத்திற்கான நுழைவாயில். எனில், கர்மயோகத்தில் கால் வைத்தவர்களை அது முக்தி வரை அழைத்துச் செல்லும் என்பதாக அதன் மேண்மையை பகவான் இங்கு ஸ்துதி செய்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தப்பு வழியையும் மூட பக்தியையும் பற்றி பலர் பேசிக் கொண்டு வித்யா கர்வமடைகின்றனர். ஆனால் உண்மையான பக்தன் தனக்கு ஈசுவரன் எப்போதும் உதவிபுரிவதைக் காண்பான். அவன் சிலகாலம் வரையில் தப்பு வழியில் போயிருந்தாலும் பாதகமில்லை. அவனுக்கு என்ன வேண்டுமென்பதை ஈசுவரன் அறிகிறான். கடைசியில் அவ் ஈசுவரன் பக்தனுடைய இஷ்டத்தைப் பூர்த்தி செய்து வைக்கிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||3.32|| கர்மயோகத்தைப் பின்பற்றாதவர்களின் நிலை:

ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम्

सर्वज्ञानविमूढांस्तान् विद्धि नष्टानचेतस: ।। ३२ ।। 

யே த்வேதத3ப்4யஸூயந்தோ நாநுதிஷ்ட2ந்தி மே மதம்  

ஸர்வக்ஞாநவிமூடா4ம்ஸ்தாந்வித்3தி4 நஷ்டாநசேதஸ: ।। 32 ।।


तु  து   மற்று/மேலும்   ये  யே  எவர்   मे  மே   என்னுடைய    एतत् मतम्   ஏதம் மதம்   இந்தக் கொள்கையை   अभ्यसूयन्त:   அப்4யஸூயந்த:  இகழ்பவர்களாய்   अनुतिष्ठन्ति   அநுதிஷ்ட2ந்தி   பின்பற்றவில்லையோ   सर्व-ज्ञान-विमूढान्   ஸர்வ-ஞாந-விமூடா4ந்   எல்லா ஞானத்திலும் மூடர்களாய்   

अचेतस:   அசேதஸ:  விவேகமில்லாதவர்களாய்    तान्    தாந்   அவர்கள்   

नष्टान्   நஷ்டாந்   நஷ்டத்தை அடைந்தவர்களாக   विद्धि   வித்3தி4   அறிக.


என்னுடைய இக்கொள்கையை யார் இகழ்ந்து பின்பற்றவில்லையோ, எவ்வித ஞானமும் விவேகமுமில்லாத அம்மூடர்களை நஷ்டத்தை அடைந்தவர்களாக அறிந்து கொள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.


விளக்கம்:

=> கர்மயோகத்தைப் பின்பற்றாதவர்களின் நிலை:

மாற்றுக் கருத்தை விமர்சனம் செய்வதன் மூலம், தனது கருத்தை தெளிவாக வெளிப்படுத்தும் உத்தியை, கீதை முழுவதும் பல இடங்களில் பகவான் பிரயோகிக்கிறார் — ‘து(तु) - மறுபுறம்; மாறாக’. உதாரணமாக, ‘இதை பின்பற்றினால் நீ பயனடைவாய்என கூறுவார். பின், ‘இதை பின்பற்றவில்லையெனில் இந்த குறிப்பிட்ட சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்என்பார். இங்கும் இச்சொல்லை பகவான் இக்காரணத்திற்காகவே உபயோகித்துள்ளார்

பகவான் சென்ற சுலோகத்தில், தனது கருத்தை பின்பற்றுபவர்கள் கர்மங்களிலிருந்து விடுபடுகிறார்கள் என கூறியிருந்தார். அவர்களுக்கு மாறாக, தனது உபதேசத்தை பின்பற்றாதவர்கள் குறித்து இங்கு பேசுகிறார்

ஞானயோகம் அல்லது சந்யாசம் போன்றவை இவர்களுக்கு கடினமானதாக இருக்கலாம், ஆனால் கர்மயோகம் கண்டிப்பாக அநுசரிக்கக்கூடிய ஒன்றே. அதற்கு பதிலாக இவர்களோ, தங்களது விருப்பு வெறுப்பை தீர்ப்பதற்கான செயலிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். உண்மையில் அது தங்களுக்கு அவசியமானதா என்பதையும் கூட ஆராயாமல், மனதில் உதிப்பதையெல்லாம் நிறைவேற்றும் பொருட்டு வினையாற்றுகிறார்கள். இரண்டு விதமான அறிவு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகிறது

  (1) எது லக்ஷியம்

  (2) அந்த லக்ஷியத்தை எப்படி அடைவது; அதாவது அடையும் பாதை.

பிரதானமான இவ்விரு அறிவும் அற்றவர்களாய் அவர்கள் எல்லா ஞானத்திலும் மூடர்களாய் திகழ்கிறார்கள்


=> மனித வாழ்க்கையே விவேகப் பிரதானம்:

மனித வாழ்க்கை பகுத்தறியும் திறனை, விவேகத்தை மையமாகக் கொண்டது. உதாரணமாக ஒரு நாய்க்கு குரைக்கத் தோன்றினால் அது இயற்கையாக அச்செயலை உடனே செய்கிறது; குரைக்கிறது. இப்போது குரைக்கலாமா? இவ்விடம் அதற்கு தகுந்ததா? என்றெல்லாம் அது யோசிக்கத் தேவையில்லை. மாறாக, நமக்கு கூச்சலிட வேண்டுமென்ற உணர்வெழுகிறது எனில், பகுத்தறியும் புத்தியுடன் அச்செயலை தவிர்க்கும் எல்லாவிதமான சுதந்திரமும் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே மனிதனின் வாழ்க்கை வாழ, விவேக புத்தியானது பயன்படுத்தப்பட வேண்டும். இச் சுலோகத்தில் தங்களுடைய விவேகத்தை உபயோகிக்காதவர்களை பகவான் விமர்சிக்கிறார். இவர்கள் பொறாமையினால் பீடிக்கப்பட்டவர்களாய்(அஸூயா) பகவானின் கருத்தை பின்பற்றாது, அதில் குறைகள் கூறி(அப்4யஸூயந்த:) புறக்கணிப்பதோடு, தங்களின் வாழ்க்கையை நியாயப்படுத்த முடிவில்லா வாதங்களைச் செய்கிறார்கள். கர்மயோகத்தின் கீழ் வரும் குடும்ப மற்றும் சமூக பொறுப்புகளை செய்யாது ஏமாற்றி, சமூகமும் நாடும் தங்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என கூச்சலிடுகிறார்கள். இந்த சுயநலவாதிகள், சொந்த நலனில் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்களாய் தர்ம மற்றும் அதர்ம விஷயத்திலும், எது சரி? எது தவறு? என்பதிலும் குழப்பத்தை அடைகிறார்கள்(விமூடா4ந்). மேலும் ஆத்ம அனாத்ம விஷயத்திலும், எது நிலையானது நிலையற்றது என்பது குறித்தும் விமூடர்களாக(அசேதஸ:) உள்ளனர். மனித இலக்குகளாக உள்ள தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என அனைத்து அறிவுகளிலும் மூடர்களாகவே உள்ளனர். ஏன் சாப்பிடுவதிலும் கூடஎன்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிட கூடாது, எவ்வளவு சாப்பிடலாம் போன்றவற்றில் சரியான அறிவற்றவர்களாக உள்ளனர். இவ்வாறாக அனைத்து மட்டங்களிலும் சரியான புரிதலில் குழப்பத்தை கொண்டுள்ளார்கள் என்பதைஸர்வ-ஞாந-விமூடா4ந்குறிக்கிறது. ஒருவன் பணம் பதவியை அடைந்த போதிலும் அது அவனின் உண்மையான தேவையாகிப் போன நிம்மதியையும் மனநிறைவையும் கொடுத்ததா என விவேகத்தின் பார்வையில் சிந்தித்தல் வேண்டும். அவன் தனது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பணயம் வைத்தே பணத்தை அடைந்திருப்பான். முரண்களுக்கும், உறக்கமற்ற இரவுகளுக்கும் விலையாகப் பணத்தை சம்பாதித்திருப்பான். இவ்விதமான லாபத்தில் புதைந்திருக்கும் பெரு நஷ்டத்தை, மன முதிர்ச்சியடைந்த விவேகியே தெளிவாக உணர்கிறான். கர்மயோகத்தைப் பின்பற்றாதவனாய், கிடைத்தற்கரிய இம்மனித சரீரத்தின் காலத்தை நஷ்டப்படுத்துவதால்(நஷ்டாந்) நாசத்தை அடைகிறான். இதே கருத்தை பகவான் 2.62, 2.63 - ல் வேறு கோணத்தில் வெளிப்படுத்தியிருப்பார். ‘ப்ரணச்1யதி’, அவன் அழிகிறான் என பிரயோகித்திருப்பார். அதாவது, ‘பொருள்களை நினைப்பதால் அவைகளிடத்து பற்றுண்டாகிறது. பற்று ஆசையாக மாறி, அதிலிருந்து கோபம் தோன்றுகிறது. இதனால் மனக்குழப்பம். குழப்பத்தால் நினைவின்மை. நினைவு நாசத்தால் புத்திநாசம். புத்தி நாசத்தால் அழிந்து போகிறான்என்றார்.

தீயில் கையை வைத்தால் அது சுடும். அதே அக்கினியை முறையாகப் பயன்படுத்தினால் அதைக் கொண்டு சமைக்கலாம். இதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் நஷ்டத்தையடைகிறார்கள். அதுபோலவே ஆத்ம தத்துவங்களை அறிந்து அவைகளுக்கேற்றபடி வாழ்க்கை வாழாதவர்கள் நஷ்டத்தையும் கேட்டையும் அடைகிறார்கள்


=> சுபாவம்:

சங்கரர் தனது பாஷ்யத்தில் சில கேள்விகளை முன் வைக்கிறார். கிருஷ்ணர் தனது உபதேசத்தை இவ்வளவு தெளிவாக விளக்கிய பின்னரும் ஏன் மக்கள் இதை பின்பற்றுவதில்லை? தர்க்கத்திற்குட்பட்டு அனைத்து வாதத்தையும் மிக கவனமாக முன் வைத்து, அதற்கான நியாயத்தை தெளிவுபடுத்தியும் ஏன் மக்கள் இதை பின்பற்றாமல் வேறு வாழ்க்கை முறையை தொடர்கிறார்கள்? ஒருவரின் குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு காரணமாக அவரின் சுபாவத்தை, இக்கேள்விக்கு பதிலாக கூறுகிறார். கழுதை கனைப்பதும், பசிக்காக சிங்கம் கொல்வதும் அதனது இயல்பு. அது போலவே மனிதனும் தனது கடந்தகால அனுபவத்தினாலோ விதிப்பயனினாலோ ஒரு குறிப்பிட்ட இயல்பை கொண்டுள்ளான். இந்த சுபாவமே ஒரு மனிதனின் எல்லா செயலிற்கும் அடிப்படையாக அமைகிறது. அடுத்த இரண்டு சுலோகங்கள் இதை அழகாக விளக்குவதாக அமைந்துள்ளது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பூனையானது தனது குட்டிகளைப் பற்களால் பிடிக்கும் போது அக்குட்டிகளுக்குத் தீங்குண்டாவதில்லை. ஆனால் அது ஓர் எலியை அப்படிப் பிடிக்குமானால் அவ்வெலி உடனே இறக்கின்றது. இதைப் போலவே மாயையானது மற்றவர்களை வருத்துவதாயினும் பக்தனை ஒருபோதும் துன்புறுத்தாது.

-------------------------------------------------------------------------------------

||3.33|| ஏன் அனைவரும் கர்மயோகப்படி வாழ்வதில்லை?

सदृशं चेष्टते स्वस्या: प्रकृतेर्ज्ञानवानपि

प्रकृतिं यान्ति भूतानि निग्रह: किं करिष्यति ।। ३३ ।।

ஸத்3ருச1ம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்க்ஞாநவாநபி

ப்ரக்ருதிம் யாந்தி பூ4தாநி நிக்3ரஹ: கிம் கரிஷ்யதி ।। 33 ।।


ज्ञानवान् अपि  ஞானவாந் அபி   ஞானியும் கூட   स्वस्या:   ஸ்வஸ்யா:  தன்னுடைய   

प्रकृते:  ப்ரக்ருதே:  சுபாவத்திற்கு(இயல்பிற்கு)   सदृशं  ஸத்3ருச1ம்  தக்கபடி   

चेष्टते   சேஷ்டதே  செயல்படுகிறான்   भूतानि   பூ4தாநி  உயிர்கள்   प्रकृतिं  ப்ரக்ருதிம்   இயல்பை   

यान्ति   யாந்தி   பின்பற்றுகின்றன  निग्रह:   நிக்3ரஹ:   தடையானது   किम्   கிம்  என்ன   

करिष्यति   கரிஷ்யதி  செய்யும்?


ஞானியும் கூட தன் இயல்பிற்கு ஏற்றவாறு செயல்படுகிறான். உயிர்கள் தங்களின் இயல்புப்படி செயல்படுகின்றன. இயல்பை தடுப்பதனால் ஆவதென்ன?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.


விளக்கம்:

=> பிரகிருதி என்றால் என்ன?

பொதுவாக பிரகிருதி என்பது மாயையை குறிக்கும் சொல். ஆனால் இங்கு அது சுபாவத்தைக் குறிக்கிறது; ஒருவரின் இயல்பு, இயற்க்கை அல்லது தன்மை. பூர்வ ஜென்மங்களில் செய்த தர்ம அதர்மத்தின் அல்லது புண்ணிய பாபத்தின் பதிவுகளினால்(ஸம்ஸ்கார_संस्कार) தோன்றிய வாசனைக்குஸ்வபாவம்(स्वभाव)’ என்று பெயர்

पूर्व जन्म कृत धर्माधर्म संस्कार: वर्तमान जन्म अभिव्यक्त

(பூர்வ ஜென்ம க்ருத தர்மாதர்ம ஸம்ஸ்கார: வர்தமாந ஜென்ம அபி4வ்யக்த:)

  ஒவ்வொரு ஜீவனின் மனதிலும் அந்தப் பதிவுகள் உள்ளன. இந்த ஜென்மத்தில் வெளிப்படும் அந்தப் பதிவுகளே ஒருவருடைய சுபாவம் ஆகிறது. ஒரே பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகள் வெவ்வேறு இயல்புடன் இருப்பதைக் காணமுடியும்

இங்கு பகவான் உயிர்கள் அனைத்தும் தத்தம் இயல்புடனே தோன்றியுள்ளன என்கிறார். ஞானியும் கூட சுபாவத்தின் அடிப்படையியேலே(ஞானவாந் அபி ப்ரக்ருதே: ஸத்3ருச1ம்) தனது வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஒருவர் அந்தர்முக திருஷ்டியிலேயே ஆழ்ந்து செல்கிறார். மற்றொருவர் பகிர்முக திருஷ்டியில் அனைத்தையும் கடவுள் மயமாக இந்திரியங்களைக் கொண்டு பொருள்படுத்துகிறார். ஒருவர் பக்தியில் பிரியமுடையவர். வேறு ஒருவர் ஞான விசாரத்தில் சாந்தியை பெறுகிறார். இப்படி இயல்புக்கேற்றபடியே ஞானியும் கூட செயல்படுகிறார்.

பல ஜென்மாந்திரங்களின் வாசனையினூடே வசப்பட்டு பிரகிருதியில் கட்டுண்டு கிடக்கும் பாமரர்கள் அவர்களின் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியைக் கெடுப்பதற்கு ஒப்பாகும். அப்படி வளர்ச்சியை வீணாக்காமல் இயல்புக்கு ஏற்றபடி வினையாற்றி முன்னேற்றமடைய அவர்களைத் தூண்ட வேண்டும்.   

ஆத்ம ஞானியானவர், ஆத்ம ஞானத்தை அடையும் பாதையில் தனது அதர்ம சுபாவத்தை நீக்கி விட்டார். தர்ம பிரகிருதி மட்டுமே இப்போது அவரிடம் எஞ்சியுள்ளது. அதை அவர் விடுவதோ, கட்டுப்படுத்த வேண்டுமென நினைப்பதோ இல்லை. பொறாமை, கோபம், அகம் மற்றும் புறத்தூய்மையின்மை, பொய்யுரைத்தல், வஞ்சம் முதலிய அதர்ம சுபாவம் அதாவது அசுர குணங்களை(ஆசுரி சம்பத்), நீக்கப்பட வேண்டிய குணங்கள் என அத்தியாயம் 16-ல் பகவான் விரிவாக எடுத்துரைக்கிறார்.  

ஒவ்வொரு மரம், செடி, கொடி, பறவைகள், விலங்கினங்கள், மனிதர்கள் மற்றும் ஞானிகளும் கூட அவரவர்களின் பிரகிருதிக்கு ஏற்றபடி செயல்படுகின்றனர்ப்ரக்ருதிம் யாந்தி பூ4தாநி. இந்தச் சுபாவத்தை தடுப்பதனால் என்ன ஆகப் போகிறது?(நிக்3ரஹ: கிம் கரிஷ்யதி) எனும் கேள்வி இங்கு ஆட்சேபத்தை குறிக்கிறது. அதாவது ஒருவரின் இயல்பை தடுத்து என்ன பலன்! ஏனெனில் சுபாவமாக எழும் சம்ஸ்காரங்களைத் தடுக்க இயலாது

     ஒவ்வொரு மனிதனும் தனது சுபாவத்தைப் பின்பற்றுவதே அவனது போக்கு எனில் சுயமுயற்சிக்கு இடமில்லையே. இதைச் செய், இதைச் செய்யாதே என சாஸ்த்திரம் ஆணையிடுவதிலும் அர்த்தமில்லையே. இயல்பாக எழும் இந்த ஐயத்திற்கான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கடவுளைப்பற்றிச் சிந்திக்கத் தம்மால் சிறிதும் இயலவில்லையென்று ஓர் அறிஞர் ஶ்ரீ ராமகிருஷ்ணரிடம் முறையிட்டார். தாம் முன்னேற்றமடைவதற்கு உபாயம் ஏதாவது உண்டா என்று கேட்டார். அம்மனிதருக்கு விருப்பமானவர் யார் என்று ஶ்ரீ ராமகிருஷ்ணர் விசாரித்தார். தாம் யாரையும் நேசிப்பதில்லை என்றும், ஓர் ஆட்டுக்குட்டியை மட்டும் அன்புடன் பாராட்டி வந்ததாகவும் அவர் விடை கொடுத்தார். அப்படியானால் அந்த ஆட்டுக்குட்டியை கடவுளாகக் கருதி அதன் மீது தியானத்தைச் செலுத்தும்படி ஶ்ரீ ராமகிருஷ்ணர் சொன்னார். அங்ஙனம் செய்த அம்மனிதர் முன்னேற்றமடைந்தார்

-------------------------------------------------------------------------------------

||3.34|| முந்தய சுலோககத்தின் ஆட்சபத்திற்கான விடை:

इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ

तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ ।। ३४ ।।

இந்த்3ரியஸ்யேந்த்3ரியஸ்யார்தே2 ராக3த்3வேஷௌ வ்யவஸ்தி2தௌ

தயோர்ந வச1மாக3ச்சே2த்தௌ ஹ்யஸ்ய பரிபந்தி2நௌ ।। 34 ।। 


इन्द्रियस्य   இந்த்3ரியஸ்ய   இந்திரியங்களுக்கு   इन्द्रियस्य अर्थे   இந்த்3ரியஸ்ய அர்தே2   விஷயங்களில்   

राग-द्वेषौ   ராக3-த்3வேஷௌ   விருப்பு வெறுப்புகள்  व्यवस्थितौ   வ்யவஸ்தி2தௌ  அமைந்திருக்கின்றன   

तयो:   தயோ:  அவைகளினுடைய   वशम्   வச1ம்  வசத்தை(பிடியை)   अागच्छेत्    ஆக3ச்சே2த்  அடையக்கூடாது   हि   ஹி  நிச்சயமாக   तौ  தெள  அவ்விரண்டும்   अस्य   அஸ்ய  அவனுடைய    

परिपन्थिनौ   பரிபந்தி2நௌ   எதிரிகள்.


இந்திரியங்களுக்கு விஷயங்களில் விருப்பு வெறுப்பானது கண்டிப்பாக உண்டு. அவைகளுக்கு வசப்படலாகாது. அவைகளே அவனுக்கு எதிரிகள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.


விளக்கம்:

=> சென்ற சுலோகத்தின் தொடர்ச்சி:

இங்குஇந்த்3ரியஸ்யஎனும் சொல், இருமுறை தொடர்ந்து கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இந்த பிரயோகத்திற்குவீப்சா(वीप्सा)’ என்று பெயர். ‘இந்த்3ரியஸ்ய அர்தே2’ - குறிப்பட்ட புலனுக்கான விஷயம்; ‘இந்த்3ரியஸ்யஎன திரும்பச் சொல்லப்படுவது ஒவ்வொரு புலனுக்கான விஷயங்கள் என்பதைக் குறிக்கிறது. ‘ஒவ்வொன்றின்எனும் அர்த்தத்தை இருமுறைக் கூறுதல் உணர்த்துகிறது

ஒவ்வொரு இந்திரியத்திற்கும் அதனுடைய விஷயங்களில் விருப்பு வெறுப்பு உள்ளது. இந்த சுலோகத்தில் முழு கீதையின் உளவியலை கூறும் முக்கிய திறவுகோல் உள்ளது. உண்மையில், விஷயங்களில் புலன்களுக்கு தங்களுக்கென்ற வெறுப்போ அல்லது விருப்பமோ கிடையாது. அது வெறும் கருவியாக மட்டுமே செயல்படுகிறது. அவ்விஷயம் தனக்கு பிடித்தமானது அல்லது பிடித்தமானதல்ல என்பதை தனிப்பட்ட நபரின் சுபாவமே முடிவு செய்கிறது. உதாரணமாக மல்லிகை பூவின் வாசத்தை எடுத்துக் கொண்டால் தலைவலி, காசு விரயமாதல், சிற்றின்ப நுகர்ச்சியை ஞாபகமூட்டுதல் முதலிய பல காரணங்களுக்காக வெறுப்பவர் உளர். அதன் நறுமணத்தை முன்னிட்டும், அம்பிகையின் ஆராதனையை முன்னிட்டும், இன்ப நுகர்ச்சியை முன்னிட்டும் போற்றுபவர் பலர் உளர். ஒரே விஷயத்தை சிலர் விரும்புகின்றனர்; சிலர் வெறுக்கின்றனர். இவ்விதம் இந்திரியங்கள் வாயிலாக உணரப்படும்கேட்டல்(शब्द), தொடுதல்(स्पर्श), பார்த்தல்(रूप), சுவைத்தல்(रस) மற்றும் நுகர்தல்(गन्ध) போன்ற அனைத்து விஷயங்களிலும் வெவ்வேறு படித்தரங்களில் விருப்பு வெறுப்புகள் வளர்க்கப்படுகின்றன. ஆழ்மனதில் வெளிப்படும் விருப்புவெறுப்பின் தொகுதியே ஒவ்வொரு ஜீவனது இயல்பு ஆகிறது. இந்த சுபாவப்படியே ஒவ்வொரும் செயல்படுகிறார்கள் என்று சென்ற சுலோகத்தில் கிருஷ்ணபகவான் கூறியிருந்தார்.


=> முந்தய சுலோகத்தினால் மட்டும் வரும் அனர்த்தம்

  முந்தய சுலோகத்தை மட்டும் தனியாக பொருள்படுத்தும் போது கீழ்கண்ட இரண்டு விதமான தோஷங்கள் வருகிறது. அதை ஆனர்தக்யம்(आनर्थक्य) என்கிறோம்; பொருளற்றதன்மை, ஆட்சேபம் அல்லது முரண்.

(1) சாஸ்த்ரஸ்ய ஆனர்தக்யம் - சாஸ்த்திரம் உபயோகமில்லாமல் போகிறது. இதைச் செய், இதைச் செய்யாதே என சாஸ்த்திரம் ஆணையிடுவதில் அர்த்தமில்லாமல் போகிறது.

(2) ப்ரயத்னஸ்ய ஆனர்தக்யம் - சுயமுயற்சி இல்லாமல் போகிறது.

ஆகவே அதை இந்தச் சுலோகத்தோடு சேர்த்து(3.33 & 3.34) புரிந்து கொள்வதன் மூலம் அதன் அர்த்தமற்ற தன்மையை களைய வேண்டும்


=> அனர்தத்தை களையும் படிகள்:

* மனதிலுள்ள சம்ஸ்காரங்கள் காரணமாகவே விருப்பு வெறுப்பானது அந்தந்த சூழ்நிலைகளில் வெளிப்படுகின்றன.

* அனைத்து விருப்பு வெறுப்புகளும் செயலாக(ப்ரவ்ருத்தி_प्रवृत्ति) மாறுவதில்லை. கணக்கற்ற ராகத்வேஷங்கள் மனதில் உதித்த போதிலும், சில ராகத்வேஷங்களே செயலாக வடிவெடுக்கின்றது. ஆகவே, விருப்பு வெறுப்பு செயலாக மாற வேண்டுமெனில் இடையில் ஓர் உதவி தேவைப்படுகிறது. இதையே நாம்விவேக பிரயத்னம்என்கிறோம், அறிவின் துணைக் கொண்டு செய்யும் முயற்சி

* நம் முயற்சி மற்றும் இந்த ஜென்மத்தில் நாம் அடைந்துள்ள அறிவு இவையிரண்டும் ராகத்வேஷத்திற்கு உதவி செய்தால் அது செயலாக வெளிப்படுகிறது. அதாவது ஒரு பொருளின் மீது விருப்பம் உண்டாகிறது என வைத்துக் கொள்வோம். அப்பொருள் குறித்த அறிவோ, அதை அடைய முயற்சியோ இல்லையெனில் அந்த விருப்பம் செயலாக மாறுவதில்லை. எவ்வளவோ விருப்பம் குறித்த எண்ணங்கள் நம் மனதை கடந்து செல்வதை நாம் பலமுறை உணர்ந்திருப்போம்

* ஆகவே நம் சம்ஸ்காரங்களினால்(பதிவுகளினால்) தோன்றும் இந்த எண்ணங்கள், நம்முடைய உதவியில்லாமல் நேரடியாக செயல்பட முடியாது. சுபாவத்தினால் எழும் விருப்பு வெறுப்பை செயல்படுத்துவதும், செயல்படுத்தாமல் விடுவதும் நமது தனிப்பட்ட சுதந்திரம்(free will). 

* சம்ஸ்காரங்கள் குறித்த இந்த விசாரத்தில் இரு நுண் கருத்துக்களைச் சரியாக புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது

[1] மனதில் வரும் விருப்பு வெறுப்பை தெரிவு செய்யும் வாய்ப்பு ஒருவனுக்குக் கிடையாது. இப்படிப்பட்ட விருப்பம் மட்டுமே எழ வேண்டும் என நிர்பந்திக்க முடியாது. சுபாவமாக அது தோன்றுகிறது

[2] எனினும் அந்த எண்ணங்களை நாம் அங்கீகரிக்காத வரை அது செயலாக மாறுவதில்லை

உதாரணமாக, சாஸ்திரம் படித்த ஒருவனின் மனதில் உதித்த அதர்ம சம்ஸ்காரத்தை அவன் தனது விவேகம் மற்றும் சுயமுயற்சியின் துணைக் கொண்டு ஒடுக்கி, நல்ல பதிவுகளை மட்டும் செயலுக்கு கொண்டு வருகிறான்

மனம் ஓர் அழகான கருவி. அதன் இயல்பில் குறுக்கிடாமல், அதை சிந்திக்க அனுமதிக்கும் வரை ஒருவனது சிக்கல் குறைவாகவே இருக்கும். அதை வன்முறைக்குட்படுத்தி கட்டுபடுத்த நினைத்தால் அது மனக்கலக்கத்திற்கு வழிவகுக்கும். ராகத்வேஷத்தை தடுப்பது நம் நோக்கமல்ல. அதைஎன்னுடையதுஎன ஏற்று, விவேகத்தை பயன்படுத்தாமல் செயல்படுத்த எத்தனிப்பதே தவறு. நமது கவனம் அது செயலாக மாற்றத்தக்க எண்ணம்தானா? என்பதில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ராகத்வேஷத்தில் வீழாமல், செய்யப்பட வேண்டியதை செய்வதும், செய்யக்கூடாததை தவிர்ப்பதுமே கர்மயோகம். விருப்ப எண்ணத்தினால் தூண்டப்படாமலும், வெறுப்பினால் விலகாமலும் சமத்துவம் பாவித்தல் கர்மயோகம். ஆகவே அர்ஜுனா, மனதில் எழும் ராகத்வேஷத்தினால் குழப்பமடையாமல் உன் ஸ்வதர்மத்தை செய். பகவான் இந்த சுலோகத்தில் ராகத்வேஷங்கள் உண்டாவது இயற்கை. ஆனால் அதன் வசத்தில் நீ சென்றுவிடாதே(வச1ம் ஆக3ச்சே2த்) என்கிறார். மோக்ஷப் பாதையில் செல்பவர்களுக்கு இவையிரண்டும்(தெள) வழிப்பறித் திருடர்களாக(பரிபந்தி2நௌ) அமைகின்றன. அவர்களின் ஞானம் என்னும் செல்வத்தை இவைகள் கொள்ளை கொண்டுவிடுகின்றன.

பிரகிருதியை மாற்ற முடியாது என்று கூறிய கிருஷ்ணர், ஆனால் அவர்களாக விரும்பினால் விவேகம் மற்றும் பிரயத்னத்தின் மூலம் தங்களுடைய குணத்தை மாற்றியமைக்கலாம் என்றும் உணர்த்துகிறார். அத்தியாயம் 6-ல், சுலோகம் 35 மற்றும் 36-ல், இது போன்ற மேலும் ஒரு விசாரம் நடக்கிறது. அங்கு அர்ஜுனன் பகவானிடம், தாங்கள் புகட்டிய யோகத்தில் உறுதியாக நிற்க, இந்த அலைகின்ற மனதினால் முடியுமென தோன்றவில்லை என்கிறான். அதற்கு பகவான், மனதின் சுபாவமே அலையும் தன்மையுடையது, கட்டுப்படாதது. எனினும் தொடர்முயற்சியினாலும் வைராக்கியத்தினாலும் அதை அடக்க முடியும் என்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

காமம், குரோதம் முதலிய சத்ருக்களை எப்போது நாசம் செய்ய முடியும் என்று கேட்டதற்கு பரமஹம்ஸர் சொன்னதாவது:-  இவ்வித ஆசாபாசங்கள் உலகத்தையும் உலக விஷயங்களையும் பற்றியனவாக இருக்கிறவரையில் சத்ருக்களாகத்தான் இருக்கும். அவைகள் ஈசுவர விஷயமாக மாறினால் மனிதனுக்கு நற்றுணைகளாகும். ஏனெனில் அவைகள் அவனை ஈசுவரனிடம் அழைத்துச் செல்கின்றன. உலக விஷயங்களிலுள்ள ஆசையை கடவுளிடத்து ஆசையாக மாற்ற வேண்டும். மக்களிடத்து உண்டாகும் கோபத்தை, கடவுள் தரிசணம் கிட்டவில்லையேயென்று அவரிடம் காட்ட வேண்டும். இம்மாதிரி எல்லா ஆசாபாசங்களையும் மாற்றுக. அவைகளை அழிக்க முடியாது. ஆனால் நல்வழியில் திருப்பமுடியும்.

-------------------------------------------------------------------------------------