செவ்வாய், 5 ஜனவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.19 - 2.20

।।2.19।। ஆத்மா அகர்த்தா, அபோக்தா(अकर्ता, अभोक्ता) [அனாத்மா கர்த்தா, போக்தா]:


य एनं वेत्ति हन्तारां यश्चैनं मन्यते हतम्

उभौ तौ विजानीतो नायं हन्ति हन्यते ।। १९

ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யச்1சைனம் மன்யதே ஹதம் ।

உபெள4 தெள ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ।। 19


य:  ய:  யார்   एनं  ஏனம்   இந்த ஆத்மாவை   हन्तारां  ஹந்தாரம்  கொலை செய்பவனாக   

वेत्ति  வேத்தி   அறிகிறானோ       மேலும்   य:  ய:  யார்   एनं  ஏனம்   இந்த ஆத்மாவை    

हतम्    ஹதம்  கொல்லப்பட்டவன் என்று   मन्यते   மன்யதே  நினைக்கிறானோ   

उभौ तौ   உபெள4 தெள  அவ்விருவரும்  विजानीत:   ந விஜானீத:  அறியவில்லை  

अयम्   அயம்  இந்த ஆத்மா  न हन्ति   ஹந்தி   கொல்வதில்லை  

न हन्यते  ந ஹன்யதே  கொல்லப்படுவதில்லை.


இந்த ஆத்மாவைக் கொலை செய்பவன் என அறிபவனும், கொல்லப்பட்டவன் என்று நினைப்பவனும் இருவரும் அறியவில்லை. இந்த ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இவன் கொல்வா னென்று நினைப்போனும், கொல்லப் படுவானென்று நினைப்போனும் — இருவரும் அறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலை யுண்பது மில்லை.


விளக்கம்:

=> உபநிஷத் வாக்கியம்:

தான் கூறும் கருத்துக்களை உறுதிப்படுத்தும் விதமாக கீதையில் பகவான் ஆங்காங்கு ப்ரமாண-க்ரந்தமான உபநிஷத்தை மேற்கோள்காட்டுகிறார். அந்த வரிசையில் ஸ்லோகம் 19 மற்றும் 20 கடோபநிஷத்திலிருந்து கூறப்பட்டுள்ளது. கீதையில் வேறொரு இடத்தில் க்ருஷ்ணர், ‘வேதங்களினால் அறியப்படுபவனாக நானே இருக்கின்றேன்’ என கூறுகிறார். கீதை முழுதும் க்ருஷ்ணர் ஈஷ்வரனாகவே பேசுகிறார். நாம் அதை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, முழு ஸம்வாதமும் க்ருஷ்ண உருவத்திலிருக்கும் ஈஷ்வரனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே நடப்பதாகவே வ்யாஸர் அருளுகிறார். ஈஷ்வரனாக, க்ருஷ்ணர் தனது உபதேசத்தை நிரூபிக்க தேவையில்லையெனினும், கீதை ஒரு குறிப்பிட்ட காலத்தில், க்ருஷ்ணரின் மனதிலிருந்து தோன்றியதால் ஸ்ம்ருதி எனும் நிலையை பெறுகிறது. எந்தவொரு ஸ்ம்ருதியும் ஸ்ருதி வாக்கியத்திற்கு இசைந்ததாக இருக்க வேண்டும். இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் விதமாக, பல இடங்களில் பகவான் உபநிஷத்துக்களை, முக்கியமாக கடோபநிஷத்தை மேற்கோளாக சுட்டிக்காட்டுகிறார்.


=> ஆத்மா அகர்த்தா:

இந்த ஸ்லோகத்தில், இந்த (ஏனம்) எனும் சொல் 2.18-ல் விளக்கப்பட்ட நித்யமான, அப்ரமேயமான, தோன்றிக்கொண்டிருக்கும் எல்லா அஸத்திற்கும் ஆதாரமாக, தானாக விளங்கும் ‘ஸத்’-தான ஆத்மாவைக் குறிக்கிறது. 

எவனொருவன் ஆத்மாவை கொல்பவனாக, அதாவது கொலை என்னும் செயலில் ஈடுபடுபவனாக(கர்த்தாவாக) பார்க்கின்றானோ; மேலும் எவனொருவன் ஆத்மாவை கொல்லப்படுபவனாக, அதாவது கொலை செய்யப்படும் பொருளாக(கர்மமாக) பார்க்கின்றானோ; இவ்விருவரும் ஆத்மாவை அறியவில்லை (உபெள4 தெள ந விஜானீத:). ஆத்மா கொல்லும் செயலைச் செய்வதுமில்லை, கொலையாவதுமில்லை. அது கொலைகாரனுமல்ல, கொல்லப்படுபவனுமல்ல ( ஹந்தி ந ஹன்யதே). ஆத்மா அகர்த்தா(செயல் செய்யாதவன்). 

ஆத்மா செயலில் ஈடுபடுபவனாகவோ, செயலுக்கான பொருளாகவோ இல்லை. அகர்த்தாவின் மீது செயல் செய்பவனெனும் தன்மை(கர்த்ருத்வம்_कर्तृत्वम्) ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் புரிந்துகொள்ள சந்யாசத்தை பற்றிய ஒரு சிறிய விசாரம் உதவலாம்.

சந்யாசம் இரண்டுவகை. (1) சந்யாச வாழ்க்கைமுறை  (2) ஸர்வ-கர்ம-சந்யாசம்.

சந்யாச வாழ்க்கையில், சந்யாசியானவன், வேதம் ஒருவனுக்கு விதிக்கும் அனைத்துவிதமான நித்ய நைமித்திக கர்மத்திலிருந்து விடுபடுகிறான். இது கர்ம-சந்யாசம். இவ்வகையான கர்ம-சந்யாசம் ஒருவனது கர்த்ருத்வத்தை நீக்குவதில்லை. ஆனால் ஸர்வ-கர்ம-சந்யாசம் என்பது, ‘நான்’ எனும் ஆத்மாவை செயலற்றவனாக, செயலிலிருந்து விடுபட்டவனாக அறிவது. ‘நான் எந்த செயலையும் செய்பவன் அல்ல’, ‘நான் அகர்த்தா’ எனும் ஞானம் ஒருவனை எல்லா கர்மங்களிலிருந்தும் விடுவிக்கிறது. இந்த சுதந்திரமே இங்கு சந்யாசம். இந்த ஞானத்துடன் கூடிய கர்த்தா, செயல் செய்தபோதிலும் அவன் அகர்த்தா.

க்ருஷ்ணரின் உபதேசம், வ்யாஸரின் படைப்பு, சங்கரரின் உரை அல்லது எந்தவொரு ஞானியும் செயல் செய்யும் போது கர்த்தா ஆகின்றான்; ஆனால் ஞானமடைந்த கர்த்தா. அதாவது ஆத்மாவாகிய தன்னை, ஞானி ஒருகாலும் கர்த்தா என தவறாக கொள்ளாத நிலையில் இருப்பான். 

=> ஒரு செயலை செய்து முடித்தவுடன், நம்முள்ளிருந்து ‘நான் தான்  இதைச் செய்தேன்’ என்ற எண்ணம் எழுகிறது. இது அஹங்காரம்; கர்த்தா. பாப புண்ணியத்தின் விளைவான சுக, துக்கங்கள் கர்த்தாவைச் சேர்ந்தது. உரிய காலத்தில் ஈஷ்வரன் அவற்றை கர்த்தாவிடம் சேர்க்கிறார். அவற்றை அனுபவிக்கும் போது ஒருவன் போக்தா ஆகிறான்.

கர்த்தா —> போக்தா —> ஸம்ஸாரி. 

ஆத்மா —> அகர்த்தா  —> அபோக்தா —> அஸம்ஸாரி.


=> எப்படி ஜடமான அனாத்மா கர்த்தா?

ஆத்மாவின் ஞான சொரூபமானது அனாத்மாவான மனதில் சேதனத்துவத்தை(அறிவை) ப்ரதிபிம்பத்தை போல உண்டு பண்ணுகிறது. உ. கண்ணாடியில் சூரியனின் ப்ரதிபிம்பத்தை போல. இதனால் ஜடமான மனம் ஆத்மாவைப் போல சேதனத்துவத்தை அடைகிறது. இப்போது மனம் கர்த்தா, போக்தா ஆகிறது.

ஸ்தூல, சூக்ஷம சரீரத்தை, ‘நான்’ என எண்ணுவது அஹங்காரம். மாறுபடும் தன்மையுடையது சரீரம். மாறாப் பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைத்தன்யம். தோன்றிய மேகம் மறையும் போது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி உடல் அழியும் போது ஆத்மா அழிவதில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------------

।।2.20।। ஆத்மா விகாரமற்றது:


न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूय: ।

अजो नित्य: शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ।। २०

ந ஜாயதே ம்ரியதே வா கதா3சின்

நாயம் பூ4த்வாப4விதா வா ந பூ4ய: ।

அஜோ நித்ய: சா1ச்1வதோऽயம் புராணோ 

ந ஹன்யதே ஹன்யமானே ச1ரீரே ।। 20


अयम्  அயம்  இந்த(ஆத்மா)  कदाचित्  கதா3சித்  ஒருபோதும்   न जायते   ந ஜாயதே  பிறப்பதில்லை  

वा   வா  அல்லது  न म्रियते   ந ம்ரியதே  இறப்பதில்லை  वा  வா  அல்லது  भूत्वा   பூ4த்வா  இல்லாதிருந்து  

भूय:   பூ4ய:  மீண்டும்  भविता   4விதா  உண்டாவதில்லை [ வேறு மொழிபெயர்ப்பு: भूत्वा   பூ4த்வா  உண்டாகி   भूय:   பூ4ய:  மீண்டும்  भविता   4விதா  இல்லாமற்போவது    கிடையாது]  

अज:  அஜ:   பிறப்பற்றது  नित्य:   நித்ய:  என்றுமிருப்பது(இறப்பற்றது)  

शाश्वत:  சா1ச்1வத:  தேயாதது(தொடர்ந்திருப்பது)  पुराण:  புராண:  வளராதது(புதியதாகவே இருப்பது)  

शरीरे हन्यमाने  1ரீரே ஹன்யமானே   உடலானது கொல்லப்பட்டாலும்  अयम्  அயம்  இந்த ஆத்மா 

न हन्यते  ந ஹன்யதே  கொல்லப்படுவதில்லை.


இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று. [இருந்து பிறகு இறந்து போவதன்று.] இந்த ஆத்மா பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. உடலானது கொல்லப்பட்டாலும் இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

  இவன் பிறப்பது மில்லை. எக்காலத்திலும் இறப்பது மில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவது மில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப் படான்.


விளக்கம்:

=> உடலானது கீழ்கண்ட 6 வித மாற்றங்களுக்கு(षड् भाव विकार) உட்பட்டது.

(1) அஸ்தி(अस्ति ) - இருத்தல்( பிறப்பிற்கு முன்; கர்ப்பத்தில்)

(2) ஜாயதே(जायते ) - பிறத்தல்

(3) வர்த்ததே (वर्धते) - வளர்தல்

(4) விபரினமதே ( विपरिणमते) - மாறுதல்

(5) அபக்ஷீயதே ( अपक्षीयते) - தேய்தல்

(6) வினஷ்யதி ( विनश्यति) - மாய்தல்

இந்த விகாரங்கள் ஆத்மாவுக்கு இல்லை.


=> ஆத்மா மாறாதது(அவிக்ரிய_ अविक्रिय):

ஆத்மா எப்போதும், எவ்விதத்திலும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஸ்ருதியிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. முன் ஸ்லோகம் அனுஷ்டுப் சந்தத்திலும்(மீட்டரில்), இந்த ஸ்லோகம் த்ரிஷ்டுப் மீட்டரிலும் கூறப்பட்டுள்ளது. உச்சாடனத்திற்கு எளிதான அனுஷ்டுப் சந்தத்திலேயே மகாபாரதம் மற்றும் இராமாயண ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

இங்கு க்ருஷ்ணர், ஆத்மா பிறப்பதில்லை(ந ஜாயதே), இறப்பதில்லை (ந ம்ரியதே); அதாவது பிறப்பு, இறப்பு எனும் இந்த இருவித மாற்றம் ஆத்மாவிற்கு இல்லை என்கிறார்.

பொதுவாக இரண்டு வகையான தோற்றம் கூறப்படும். (1) ஏற்கனவே இல்லாத ஒன்று இருத்தலுக்கு வருவது(अभाव -> भाव). உதாரணமாக பானை. (2) ஒரு வடிவத்திலிருந்து இனியொரு வடிவத்திற்கு மாறுதல்(भाव -> भाव). உதாரணமாக விதை என்னும் வடிவம் முளைவிட்டு செடியாக மாறுதல். ஆத்மாவிற்கு இந்த இருவித மாற்றமும் இல்லை. 

அடுத்த வரியான ‘நாயம் பூ4த்வாப4விதா வா ந பூ4ய:’, 2 விதமாக பொருள் கூறலாம். சங்கரரும் தன் உரையில் கீழ்கண்ட இரு பொருள் விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆத்மா ஒருகாலத்தில் தோன்றி, பின் இல்லாமல் போவதில்லை ( பூ4த்வா பூ4ய: ந 4விதா ந). முன்னொரு காலத்தில் இல்லாமலிருந்து மீண்டும் இப்போது இருந்துகொண்டிருப்பதாகவும் இல்லை( ந பூ4த்வா பூ4ய: ப4விதா ந). அதாவது கடந்த காலத்தில் இல்லாமல் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இல்லாமல் போகப் போவதுமில்லை. 

இல்லாமலிருந்து, இருத்தலுக்கு வருவதை பிறப்பு என்றும், இருந்துகொண்டிருப்பது, இல்லாமல் போவதை இறப்பு என்றும் கூறுகிறோம். ஆத்மாவுக்கு இவையிரண்டும் இல்லாததால், இது பிறப்பற்றது(அஜ:). மரணமற்ற காரணத்தினால் காலத்திற்கு அப்பாற்பட்டு, என்றுமிருப்பது(நித்ய:). நதியானது தொடர்ந்து மாற்றத்தை அடைந்து கொண்டே நித்யமாக இருக்கிறது. இது ப்ரவாக நித்யம் எனப்படும். இந்த சாத்தியத்தை நீக்கி, ஆத்மா எப்போதும் மாறாமல், என்றுமிருப்பது என்பதை சாசுவதம்(சா1ச்1வத:) என்ற சொல் குறிக்கிறது. இங்கு ஆத்மாவைக் குறிக்கும் இனியொரு சொல்லான புராண:, பொதுவாக புராதனமானது எனப் பொருள்படும். ஆனால் இங்கு, புதியது என்பது பொருள். 

  *  पुरा एव नव: पुराण: (புரா ஏவ நவ: புராண:) - முன்னமிருந்தே புதியது. 

அதாவது வளராதது, தேயாதது, எப்போதும் புதியதாகவே இருப்பது. மேலும் உடல் அழியும் போதும், ஆத்மா அழியாதது( 1ரீரே ஹன்யமானே ந ஹன்யதே). எந்தவொன்று குணத்துடன் கூடியதாக உள்ளதோ அதுவே வளர்தல், தேய்தல், ஒளிர்தல், மங்குதல், வீங்குதல் மற்றும் சுருங்குதல் போன்ற மாற்றத்தை அடையும். உதாரணமாக, நிறம் ஒன்றின் குணமாக இருக்கும் பட்சத்தில் அது மங்கலாம் அல்லது வேறு நிறமாக மாறலாம். ஆனால் எந்தவித குணமோ, அங்கங்களோ, பிரிவுகளோ இல்லாத ஆத்மா, எப்போதும் புதியதாகவும், எந்த செயலிலும் ஈடுபடாத அகர்த்தாவாகவும்(अकर्ता), செயலுக்கு உட்பட்டு மாற்றத்தை அடையும் பொருளாக இல்லாத அகர்மமாகவும்(अकर्म) இருப்பதால் ஆத்மா சோகத்திற்கான மூலம் அல்ல(अशोच्य). 

சங்கரர் இந்த ஸ்லோகத்திற்கான உரையை, ஸ்தூல உடலில் காணப்படும் 6 விகாரங்கள் அற்றது ஆத்மா என்றும், க்ருஷ்ணர் இந்த அனைத்து விதமான மாற்றத்தையும் நிராகரிப்பதாகவும் கூறி முடிக்கிறார். 



-------------------------------------------------------------------------------------