புதன், 26 அக்டோபர், 2022

தியான யோகம் 6.22 - 6.23

||6.22|| அடுத்த இரு லக்ஷணங்கள்:

यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं तत:

यस्मिन् स्थितो दु:खेन गुरुणापि विचाल्यते ।। २२ ।।

யம் லப்3த்4வா சாபரம் லாப4ம் மந்யதே நாதி4கம் தத:

யஸ்மிந்ஸ்தி2தோ து3:கே2 கு3ருணாபி விசால்யதே ।। 22 ।।


यं   யம்   எதை   लब्ध्वा  லப்3த்4வா  அடைந்து   तत: अधिकं  தத: அதி4கம்  அதைக் காட்டிலும் அதிகமான   

अपरं लाभं  அபரம் லாப4ம்  வேறு லாபத்தை   मन्यते   மந்யதே  நினைக்கவில்லையோ   

यस्मिन्   யஸ்மிந்  எதில்   स्थित:  ஸ்தி2:  நிலைத்திருந்து   गुरुणा  கு3ருணா  மிகப்பெரிய  

दु:खेन अपि  து3:கே2 அபி  துக்கத்தாலும்   विचाल्यते   விசால்யதே  அசைக்கப்படுவதில்லையோ;


எதை அடைந்து அதிலும் மிக்கதொரு வேறு லாபத்தை நினைப்பதில்லையோ; எதில் நிலைத்திருந்து பெருந்துக்கத்தாலும் அசைக்கப்படுவதில்லையோ;


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ


விளக்கம்:

இங்கு பகவான் மேலும் இரு மோக்ஷ லக்ஷணத்தை எடுத்துரைக்கிறார்

(5) நிரதிஷய லாப: (அதற்குமேல் அடைய முடியாதவளவு அடையும் லாபம்) :

எதை அடைந்து அதிலும் மிக்கதொரு வேறு லாபத்தை ஒருவன் நினைப்பதில்லையோ;’

பொதுவாக, மனித வாழ்க்கையில் எதை அடைந்தாலும், அதற்கு மேல் அடைய வாய்ப்புள்ளது. முதலில் அடையப் பெறாத உலகப் பொருள் ஒன்று பெரியதாகத் தோன்றும்; அடைந்தவுடனே அது சிறியதாகிவிடும். பிறகு அதனினும் பெரியதாக வேறு ஒரு பொருள் தோன்றுகிறது. மேலும் நம் மனமானது சில காலம்தான் ஒரு லாபத்தில் சுகித்திருக்கும். பின்னர், அது இயல்பாக அதிக லாபத்தை அடைவதற்கு ஏங்கும். இப்படி இவ்வுலகம் தருகிற நிலையற்ற இன்பம் ஒரு பொருளிலிருந்து மாறி இனியொரு பொருளுக்குப் போய்க் கொண்டேயிருக்கிறது. அனாத்ம லாபங்கள் என்பது அதிஷயத்துடன் கூடிய லாபங்கள்; இங்குஅதிஷயம்என்கிற சமஸ்கிருத சொல்லுக்குஅதற்குமேல் அடையக்கூடிய வாய்ப்புள்ளஎன்பது பொருள். எனவே அதற்குமேல் அடையக்கூடிய வாய்ப்புள்ளதால், இந்த உலகத்தில் எதைக் கொடுத்தும் ஒருவனை திருப்திப்படுத்த இயலாது

எனில் அடையப்படுவதற்கான முடிவு எது? எனும்போது அதற்கான பதில், ஆத்ம லாப: —  ‘ஆத்ம லாபாத் பரம் லாபம்’. தன்னை அடைவதே அனைத்திலும் மேலான லாபம். அகண்ட சச்சிதானந்த ஆத்மாவை பெற்ற பிறகு அதற்குமேல் பெறுதற்கு ஒன்றுமில்லை. பிரபஞ்சத்திற்கு அப்பால் உள்ள பரப்ரம்மத்தை அடைந்த பிறகு, அதற்கு ஒப்பானது ஒன்றும் உலகில் தென்படுவதில்லை.

இங்கு அடைதலை அல்லது ஆதாயத்தை குறிக்கும்லப்3த்4வாஎனும் சொல், உண்மையில்ஞாத்வாஎன்ற பொருளில் அறிதலைக் குறிக்கிறது. சுயத்தின் சொரூபமே ஆத்யந்திக சுகம் என்பதால், தன்னையறிதலே, ஆத்ம ஞானமே இங்கு ஆதாயம். எனவே அனைத்துமாகவுள்ள ஆத்மாவை அடைந்த ஒருவன், எதையும் சார்ந்திராத முடிவில்லாத சொரூப சுகத்தை பெறுவதால், அதற்கும் மேலானதாக அடைய(அபரம் லாப4ம்) வேறொன்று இருப்பதாக அவன் நினைப்பதில்லை, மந்யதே.

இவ்விதம் எதை அடைந்ததன் விளைவாக மனமானது இயல்பாகவேஇதற்குமேல்எனக் கேட்கும் எண்ணதிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறதோ அதுவே மோக்ஷம். உலக விவகாரத்தில் ஏற்படும் வெற்றி-தோல்வி, முன்னேற்றம்-பின்னடைவு போன்றவற்றிற்கும் எனது மன நிறைவிற்கும் சம்பந்தம் கிடையாது எனும் நிலை மோக்ஷம். அவனுக்கு ஏதேனும் பெரிய சோகம் ஏற்பட்டால் என்ன ஆகும்? அந்த நபரின் ஆனந்தத்திற்கு இடையூறு ஏற்படாதா? எனில் இல்லை. அதில் நிலைத்திருப்பவன்(யஸ்மின் ஸ்தித:), ஆத்ம அறிவில் நிலைபெற்றிருப்பவன் சில பெரிய சோகங்களால் கூட பாதிக்கப்படுவதில்லை.


(6) துக்க அவிசாலநம் (துக்கத்தினால் அசையாமல் இருத்தல்) :

  எதில் நிலைத்திருந்து பெருந்துக்கத்தாலும் அசைக்கப்படுவதில்லையோ;’

துயரத்தினால் தத்துவத்திலிருந்து வீழாமலிருத்தல் இங்கு மோக்ஷத்திற்கான இலக்கணமாகிறது. இது நாம் நான்காவதாக பார்த்ததத்துவ நிஷ்டாஎனும் லக்ஷணத்தின் நீட்சி எனக் கூறலாம். பொதுவாக துக்கம் அதிகரிக்கும்போது உடலில் மனதில் அபிமானம் அதிகரிக்கும். சாதாரணமாக பெரிதாக கவனம் செலுத்தப்படாத உடலுறுப்புகளில் ஏதேனும் நோய் ஏற்படும்போது, தலைவலி கால்வலி மூட்டுவலி எனும்போது அது நமது கவனத்தை அதிகம் ஈர்க்கும். உளச் சிக்கலின் போது மனமானது அதிக கவனத்தை ஈர்க்கும். எத்துயரமும் இல்லாதபோது தத்துவத்தில் நிற்பது சுலபமானதாக இருக்கலாம். ஆனால் மோக்ஷ நிலையையடைந்த ஞானி, எந்தவிதமான துக்கம் ஏற்படினும் ஞானத்திலிருந்து அவன் அசைவதில்லை. ஆத்ம சொரூபத்தில் நிலைத்த ஞானிக்கு துக்கமெல்லாம் உடல் சம்பந்தமானவைகள். பிரம்மானந்தத்தில் திளைத்திருப்பவர்களுக்குத் தேகவுணர்ச்சி வருவதில்லை. நிழல் போன்று தேகம் யோகியைச் சார்ந்திருக்கிறது. நிழலைக் கத்தியால் வெட்டுவதால் மனிதனுக்குத் துன்பம் வருவதில்லை. அதுபோல தேகத்தைச் சிதைப்பதால் ஆத்மஞானிக்குத் துன்பம் வருவதில்லை. பிராரப்தத்தின் படி உடலானது அதற்கான பலனை அனுபவிக்கிறது; நான் சாக்ஷி சொரூபம் என்ற ஞானத்தில் நிலைத்தவனாக அவன் அசைவதில்லை


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சரீரத்தில் அனுபவிக்கும் துன்பங்களும் இன்பங்களும் எப்படிப் பட்டவையாயினும் உண்மையான பக்தனுக்கு ஞானம், பக்தி இவைகளின் மஹிமையும் சக்தியும் ஒருபோதும் குறைவதில்லை. பாண்டவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் எவ்வளவு கொடியனவாக இருந்தன! என்றாலும் ஒரு நிமிஷங்கூட அவர்களுடைய ஞான ஒளி மங்கினதில்லை.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.23|| ஏழாவது மோக்ஷ லக்ஷணம்:

तं विद्याद् दु:खसंयोगवियोगं योगसञ्ज्ञितम्

निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा ।। २३ ।।

தம் வித்3யாத்3து3:2ஸம்யோக3வியோக3ம் யோக3ஸம்ஜ்ஞிதம்  

நிச்1சயேந யோக்தவ்யோ யோகோ3ऽநிர்விண்ணசேதஸா ।। 23 ।।


तं   தம்  அதை   दु: संयोग वियोगं   து3:2 ஸம்யோக3 வியோக3ம்   துக்கத்தின் சேர்க்கையிலிருந்து பிரிதல்   योग सञ्ज्ञितम्   யோக3 ஸம்ஜ்ஞிதம்  யோகம்(மோக்ஷம்) என்று சொல்லப்பட்டதாக   

विद्यात्   வித்3யாத்  தெரிந்துகொள்ள வேண்டியது   अनिर्विण्णचेतसा   அநிர்விண்ணசேதஸா  தளராத நெஞ்சத்துடன்   योग:  யோகோ3: அந்த யோகம்   निश्चयेन   நிச்1சயேந  நிச்சயமாய்   

योक्तव्य:  யோக்தவ்ய:  பயில வேண்டும்.


துக்கத்தின் சேர்க்கையிலிருந்து பிரிந்து கொள்தலே யோகம்(மோக்ஷம்) எனப்படுவதாக தெரிந்து கொள்க. தளரா நெஞ்சத்துடன் உறுதியாகத் தொடர்ந்து அந்த யோகத்தைப் பயிலுக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.


விளக்கம்:

இங்கு பகவான் ஏழாவதான மோக்ஷ லக்ஷணத்தை கூறி, இப்படிப்பட்ட மோக்ஷத்திற்கு தியானம் மிக அவசியமான ஒன்று என்ற அறிவுரையை அளிக்கிறார்.

(7) துக்க ஸம்யோக வியோகம் (துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விலகுதல்) :

துயரத்தின் சேர்க்கையிலிருந்து பிரிதல் மோக்ஷம் என்று சொல்லப்படுவதாக தெரிந்து கொள்க’.

மனிதன் உண்மையில் சுக சொரூபி. அறியாமையினால் தன்னைத் துக்கதோடு இணைத்துக் கொண்டிருக்கிறான். வருவிக்கப்பட்ட துக்கத்தை விலக்கிவிட்டால் தனது எதார்த்தநிலை விளங்குகிறது. கனவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவனை அதிலிருந்து பிரித்து அதாவது எழுப்பி, விழிப்பு நிலையோடு யோகம் செய்துவைத்தல் அதாவது சேர்த்து வைத்தலை உதாரணமாகக் கூறலாம்.


=> ‘யோகம்என்பதன் பொருள்:

யுஜ்என்ற வினையடியிலிருந்து வரும்யோகஎனும் சொல் இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளதுயோஜன மற்றும் நிரோத. ‘யோஜனஎன்றால் இரண்டு விஷயங்களை சேர்ப்பதை அல்லது ஒன்றிணைப்பதைக் குறிக்கிறது. ‘நிரோதஎன்பது கட்டுப்படுத்துதல், நிறுத்துதல் அல்லது ஆள்தலைக் குறிக்கிறது. பதஞ்சலி தனது யோக சாஸ்திரத்தில் இந்த இரண்டாவது பொருளிலேயே யோகத்தை வரையறுக்கிறார். ‘யோக: சித்த-வ்ருத்தி-நிரோத:’, அதாவது யோகம் என்பது ஒருவன் தனது சிந்தனையை கட்டுப்படுத்துதலை ஆள்தலைக் குறிப்பதாகக் கூறி, யோகம் என்பது தன்னளவில் ஒரு ஒழுக்கம் என்கிறார். யோகம் என்ற வார்த்தைக்கு இணைத்தல் அல்லது கட்டுப்படுத்துதல் என்ற இந்த இரு அர்த்தங்களும் கீதையில் பயன்படுத்தப்படுகிறது. எனவே எதன் அடிப்படையில் இந்த பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சிறிது விசாரிக்கலாம்.

இங்கு, மனமானது நிதித்யாசனத்தின் மூலம் ஆத்மாவைச் சிந்திப்பதால், ஆத்மாவுடன் மனம் ஒன்றியிருப்பது போலத் தெரிகிறது. ஆத்மா தியானிக்கப்படும் பொருளாக, ‘த்யேயஆகிறது. இதில் மனம், தியானப் பொருளான ஆத்மாவுடன் இணைவதால், இரண்டையும் இணைத்து ஒன்றுபடுத்தும் முயற்சி யோகம் என்றழைக்கப்படுகிறது.


=> விபரீத லக்ஷணம்:

ஒன்றிணைக்கப்பட்ட இரு பொருட்கள், அவற்றின் பிணைப்பு காரணி நீடிக்கும் வரை மட்டுமே இணைந்திருக்கும்; பிணைப்பு தேயும்போது அது மீண்டும் இரண்டாகிவிடும். இங்கேயும், தியானத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட மனம் மற்றும் ஆத்மா இரண்டில், மனமானது வெளிவிஷயங்களால் கவரப்படும்போது அது ஆத்மாவிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்புள்ளது. புலன்களைக் கவர்ந்த புறப்பொருட்கள் வ்ருத்தியின் மூலமாக இதைச் செய்கின்றன. மேலும் புலன்கள் அமைதியாக இருக்கும்பட்சத்தில் ஒருவனின் சித்தத்திலுள்ள பதிவுகள் அல்லது பழைய ஞாபகங்கள் இந்த பிரிக்கும் பணியைச் செய்வதால், ‘யோகம்என்ற சொல் இதுவரையில் இணைத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ‘யோகம்என்ற வார்த்தையில் மேற்கூரிய சிக்கல் இருப்பதால், கிருஷ்ணர் அச்சொல்லை இங்கு அதனுடைய எதிர் அர்த்தத்தில் மறுவரையறை செய்கிறார். இவ்விதம் செய்யப்படும் மறுவரையறைவிபரீத-லக்ஷணம்எனப்படும். இதில் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஒன்று, மறுவரையறை செய்யப்பட்டு அதன் வரம்பெல்லைகள் தகர்க்கப்படுகின்றன.

இதுவரையில் கிருஷ்ணர், யோகம் என்ற சொல்லை ஒரு வரையறைக்குட்பட்ட பொருளில் பயன்படுத்தி வந்தார். இப்போது அதே  சொல்லை அதன் எதிர்ப்பொருளில் முன்வைக்கிறார். இங்கு யோகத்தை, ‘ஸம்யோக3 வியோக3ம்என்று வரையறுக்கிறார். ‘ஸம்யோகஎன்பது யோகம் என்ற சொல்லின் பொருளையே கொண்டிருக்கிறது எனினும் அதன் முன்னொட்டுஸம்என்பது மிகவும் நன்றாக இணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. ‘ஸம்என்ற முன்னொட்டைவிஎன்ற முன்னொட்டைக் கொண்டு மாற்றும்பொழுது கிடைக்கும்வியோகம்முற்றிலும் எதிர்ப் பொருளை வெளிப்படுத்துகிறது - விலகுதல். எனவேஸம்யோகஎன்பதற்கு இணைத்தல் அல்லது சேர்த்துவைத்தல் என்றும் வியோகம் என்பது பிரித்தல் அல்லது விலகுதல் என்றும் பொருள்படும்.


=> யோகத்தின் மறுவரையறை:

இந்த சுலோகத்தில் பகவான் யோகம் என்பதைது3:2 ஸம்யோக3 வியோகம்’, துயரத்தின் சேர்க்கையிலிருந்து பிரிதல் எனக் கூறி, இதையே யோகம் என்றும் இந்த யோகத்தை ஒருவன் அறிந்து கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார்.

துக்கத்துடனான தொடர்பு வெறுமனே யோகமாக அல்லாமல், ஸம்யோகமாக இருப்பதாகக் கூறப்படுவதிலிருந்து, அது நன்கு இணைக்கப்பட்டுள்ளதை பகவான் சுட்டிக் காட்டுகிறார். இதன்மூலம் அதிலிருந்து வெளிவருவது அதாவது பிரிவதும்(வியோகம்) கடினமான ஒன்றாகவே இருக்கிறது என்பதை உணர்த்துகிறார்

ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குட்பட்ட உடல்-மனதைநான்என ஒருவன் அடையாளப்படுத்திக் கொள்வதால், அவன் தன்னை வரையறைக்குட்பட்டவனாகமனிதன், அழியக்கூடியவன், நோயுற்றவன், தேய்ந்து கொண்டிருப்பவன், நிறைவற்றவன் என முன்னிறுத்திக் கொள்கிறான். இதனால்நான் துயரத்துடன் கூடியவன்- துக்கி, சம்சாரிஎன்ற முடிவிற்கு வருகின்றான். இவ்வகையில் ஆத்மாவான ஒருவன், துக்கியான அனாத்மாவுடன் ஸம்யோகத்தை உருவாக்குவதால்ஆத்ம-அனாத்ம-ஸம்யோகம், உண்டாகிறது.


=> அறியாமை சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறது:

ஆத்மா தூய பிரக்ஞை சொரூபம்; உண்மையில் ஆத்மாவுக்கு எதனோடும் ஸம்யோகம் இல்லை. ஆனால் அறியாமையினால் ஸம்யோகம் சாத்தியமாகிறது. அறியாமை(அவித்யா) சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் திறன் கொண்டது. கயிற்றில் பாம்பையும், பாலைநிலத்தில் கானல்நீரையும் அதனால் உருவாக்க முடியும். விவேகமின்மையால் தோன்றும் இந்த அறியாமையே ஆத்மாவிற்கும் அனாத்மாவிற்கும் சம்பந்தத்தை தோற்றுவித்து, துக்க-ஸம்யோகத்தை உருவாக்குகிறது

அறியாமையினால் உண்டான இத்தொடர்பை அறிவினால் மட்டுமே நீக்க முடியும். சுயமல்லாத ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சுய-அடையாளம், சுய-இழப்பு மற்றும் சுய-குழப்பம் முதலியவைகளை பகுத்தறியும் விவேகத்தால் மட்டுமே தீர்க்கமுடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆத்மாவை ஆத்மா என்றும் அனாத்மாவை அனாத்மா என்றும் அனாத்மா என்பது ஆத்மா அல்ல என்றும் ஒருவன் அறிந்து கொள்ளவேண்டும்.


=> பிரித்தல் எவ்விதம்

ஆத்மாவும் அனாத்மாவும் ஒரே மெய்மையை அனுபவிக்கும் இரு தனித்தனி விஷயங்கள் எனில் மோக்ஷம் என்ற ஒன்று சாத்தியமில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ இந்த அனாத்மா எப்பொழுதும் ஆத்மாவிலிருந்து பிரிக்கப்படுவதில்லை. கயிற்றில் தெரியும் பாம்பு தன் இருப்புக்கு கயிற்றை சார்ந்துள்ளதைப் போல, தங்கத்தை சார்ந்துள்ள வளையலைப் போல, ஆத்மாவைச் சார்ந்தே அனாத்மா தோன்றிக் கொண்டிருக்கிறது. அனாத்மாவிற்கென சுதந்திரமான இருத்தல் கிடையாது. அதேசமயம் ஆத்மா எதையும் சார்ந்து இல்லை; சுதந்திரமானது. பார்க்கப்போனால், ஆத்மாவைச் சார்ந்து தோன்றிக் கொண்டிருக்கும் அனாத்மா என்பதும் உண்மையில் ஆத்வாகவே இருக்கிறது. எனவே துக்கியான, சம்சாரியான அனாத்மாவை ஸ்தூலமாகவோ அல்லது அனுபவ பூர்வமாகவோ பிரிக்க முடியாது. இங்கு பிரித்தல், வியோகம் என்பது அறிவின் அடிப்படையில் நடைபெறும் ஒன்று - ஞாநேந வியோக:. இவ்விதமாகதுக்கத்துடனான தொடர்பை விட்டு விலகுவதே யோகம் என அறிக’, து3:2 ஸம்யோக3 வியோக3ம் யோக3ம் வித்3யாத், என்கிறார் பகவான்.

ஒன்றை தூக்குவதை விட அதை கைவிடுவது எவ்விதம் எளிதானதோ அதுபோல துக்கத்திலிருந்து விலகுதல் என்பதும் எளிதானதாகத் தான் இருக்கவேண்டும். ஆனால் இங்கு சிக்கல் என்னவெனில், கைவிடப்பட வேண்டியது ஒருவனின் அறியாமையாக இருப்பதால், உடல் மனதின் மீது கொண்டநான்என்ற தவறான புரிதலாக இருப்பதால் அது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து சரணடைந்து விடலாமே என ஒருவன் நினைக்கலாம். ஆனால் இங்குநான்என்பது அஹங்காரத்தை சரணடைய விரும்புகிறது. இந்த அஹங்காரம் என்பது தன்னைப் பற்றி அவன் கொண்டுள்ள தவறான அடையாளம் என்பதால் அதைப் பொய்யாக்கும் வரை அங்கு சரணடைதல் நிகழ்வதில்லை. தானெனல் எனும் இந்த அஹங்காரத்தை பொய்யாக்குதலே ஞானம் என்றும் சரணாகதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு விவாதிக்கப்படும் யோகமும் இதுவே. எனவே இந்த யோகமானது ஒருவனால் கண்டிப்பாக பயிற்சி செய்யப்பட வேண்டும் யோகோ3: நிச்1சயேந யோக்தவ்ய:


=> தளராத மனதின் அவசியம்:

அறியாமை சம்பந்தப்பட்டிருப்பதால், தன்னைப் பற்றிய கருத்துக்களைக் கைவிடுவது கடினமான ஒன்றுதான். அதே சமயம், அறியாமையை அழிப்பது மட்டுமே செய்யப்பட வேண்டியிருப்பதால் அது எளிதானதாகவும் இருக்கிறது. ஒருவனது மனம் தயாராக இல்லையெனில் அறியாமையை அழிப்பதென்பது மிகக் கடினம். துக்கத்தை விலக்க வேதாந்தத்தை தேடிவரும் ஒரு சாதகன் விவேகம், வைராக்கியம், சம-தமம், மற்றும் முமுக்ஷுத்வம் போன்ற அனைத்து தகுதிகளையும் முழு அளவில் கொண்டிருக்க வேண்டியதில்லை. அத்தகையவர்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றனர். ஒழுக்கம் மற்றும் தர்மத்துடன் கூடிய சீரான வாழ்க்கைமுறையும், கர்மயோகமும் ஒருவனுக்கு தேவையான தகுதியைப் படிப்படியாக அளிக்கிறது. எனவே இத்தகு வாழ்க்கையை பின்பற்றும் ஒருவன், உற்சாகத்துடன் வேதாந்தம் பயிலும்போது சுயத்தின் ஆனந்த சொரூபத்தை அவனால் புரிந்து கொள்ளமுடிகிறது

இந்த அறிவை எவ்வாறு பின்பற்றுவது? ‘நிச்1சயேந’ -  பகுத்தறியும் விவேகத்துடன் எது உண்மையானது எது உண்மையற்றது என்பதை உறுதியாக அறிந்து கொள்வதன்மூலம் இந்த அறிவு புரிந்து கொள்ளப்பட வேண்டும். மேலும், கிருஷ்ணர் கூறுகிறார், ‘அநிர்விண்ண சேதஸா’, அதாவது மனச்சோர்வு, விரக்தி மற்றும் அலட்சியம் இல்லாத மனதுடன் இந்த யோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்.


=> பகவானின் அறிவுரை:

இந்த சுலோகத்தின் இரண்டாவது வரியை இனியொரு கோணத்தில் விசாரம் செய்யலாம். இந்த அத்தியாயத்தின் இருபதாவது சுலோகத்தில் தொடங்கி இதுவரை ஏழு மோக்ஷ லக்ஷணம் விசாரம் செய்யப்பட்டது. இந்த மோக்ஷத்தை ஒருவன் அடைய தியானம் மிக அவசியம் என்கிறார். விபரீத பாவனை எனும் மனதின் பழைய வாசனைகளிலிருந்தும் தவறான புரிதலிருந்தும் விடுபட வேதாந்தத்தின் மூலம் பெறப்பட்ட ஞானம் நிதித்யாசனம் செய்யப்பட வேண்டும். உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் இந்த யோகத்தை மேற்கொள்ள வேண்டும்நிச்1சயேந, என்றும் வலியுறுத்துகிறார்.

தியான பலன் விரைவில் வருவதில்லை. மேலும் அதை புதிதாகச் செய்பவனுக்கு, மனமானது ஆரம்பத்தில் அதிக விக்ஷேபத்தை கொடுத்து தியானத்தை கடினப்படுத்த முயற்சிக்கும். இதனால் பலன் எதுவும் கிடைக்கவில்லையே என்ற சோர்வு வரும். இதையையே பகவான் இங்குஅநிர்விண்ண சேதஸாஎன்ற வெளிப்பாட்டில் விளக்குகிறார். இதற்கு சோர்வடையாதிருத்தல், மனம் தளராதிருத்தல் அல்லது முயற்சியை விடாமலிருத்தல் என்பது பொருள். அகமகிழ்வுடனும் குன்றாத ஊக்கத்துடனும் யோக சாதனம் செய்பவனுக்கே அது கைகூடும். ஒருவன் தனது நிஜ சொரூபத்தை அணுவதற்கு இத்தகைய மனத்தகுதி முற்றிலும் அவசியமாகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பாத்திரத்தின் அடியில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் வரையில், அதிலுள்ள பால் கொதித்துப் பொங்கும். நெருப்பை எடுத்துவிட்டாலோ, பொங்குதல் நின்றுவிடும். அதுபோல சாதன மார்க்கத்தில் இருக்கும்வரையில்தான் புதிய சாதகனது மனம் குதூகலத்தால் பொங்கும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------