திங்கள், 27 பிப்ரவரி, 2023

ஞானவிக்ஞான யோகம் 7.13 - 7.14

||7.13|| துன்பத்திற்கான காரணம்:

त्रिभिर्गुणमयैर्भावैरेभि: सर्वमिदं जगत्

मोहितं नाभिजानाति मामेभ्य: परमव्ययम् ।। १३ ।। 

த்ரிபி4ர்கு3ணமயைர்பா4வைரேபி4: ஸர்வமித3ம் ஜக3த்

மோஹிதம் நாபி4ஜாநாதி மாமேப்4: பரமவ்யயம் ।। 13 ।।


एभि: त्रिभि: र्गुणमयै:  ஏபி4: த்ரிபி4: கு3ணமயை:  இந்த மூவித குணங்களாலாகிய   

भावै:  பா4வை:  வஸ்துக்களினால்  इदं सर्वम् जगत्  இத3ம் ஸர்வம் ஜக3த்  இவ்வுலகமெல்லாம்   

मोहितं  மோஹிதம்  மோஹத்தை அடைந்து   एभ्यஏப்4இவைகளினின்று   परम्  பரம்  மேலான   

अव्ययम्  அவ்யயம்  அழியாத   माम्   மாம்  என்னை   अभिजानाति  அபி4ஜாநாதி  அறிவதில்லை.


இம் முக்குணங்களாலாகிய வஸ்துக்களினால் இவ்வுலகமெல்லாம்   மயங்கிப் போய், இவைகளுக்கு மேலாகிய அழியாத என்னை அறிவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.


விளக்கம்:

=> சம்சார காரணம்:

இந்த சுலோகத்தில் பகவான் மனிதனின் துயரத்திற்கானக் காரணத்தை சொல்கிறார். முன் சுலோகத்தில் கூறப்பட்டதுபோல உலகிலுள்ள அனைத்தும் பகவானின் சொரூபமெனில் துயரமும் பகவானின் சொரூபமா? துயரம் எங்கிருந்து வந்தது? என்பதற்கான விடையாக இந்த சுலோகம் வருகிறது. துயரம் என்பது எனது மேலான(பரா) மற்றும் கீழான(அபரா) ப்ரகிருதியை சரியாகப் புரிந்து கொள்ளாததனால் வந்தது. அறியாமையினாலும் விவேகசக்தி இல்லாமையினாலும் இந்த இரண்டு ப்ரகிருதிகளையும் மனிதன் கலந்து புரிந்து கொண்டுவிட்டான்.


=> பிரித்துப் பார்க்கும் அறிவை மனிதன் ஏன் இழந்தான்?

எனது கீழான ப்ரகிருதியான மாயையின் முக்குண மாறுதலினால் உண்டான வஸ்துக்களினால் புத்தியானது கவரப்பட்டதனால், மனிதன் மோஹத்தை அடைந்து விட்டான். குண வேறுபாட்டினால் உண்டான விருப்பு வெறுப்பு ஆகியவைகளின் வசப்பட்டிருப்பவன் உலகப் பொருட்களை வெவ்வேறு மனப்பான்மையுடன் பார்க்கிறான். எவ்விதம் சினிமாப் படக்காட்சியைக் காண்பதில் கண்ணும் கருத்துமாயிருப்பவன் அத்தோற்றத்திற்கு அடிப்படையாயிருக்கும் திரையைப் பற்றி நினைப்பதில்லையோ, அவ்விதம் நிறைபொருளாய், பேரறிவாய் எங்கும் வியாபித்து, அனைத்தையும் தன்னகத்து அடக்கியிருக்கும் சித்-சொரூபத்தை முக்குணத்தில் வசப்பட்டவன் அறிவதில்லை.

அவிசார்ய பர்யந்தம் ரமணீயம் ஜகத்(अविचार्य पर्यन्तं रमणीयं जगत्) - விசாரம் செய்யாதவரை உலகம் மிக அழகாக, கவர்ச்சிக்குரியதாக உள்ளது. அதாவது, விசாரம் செய்யப்படும்போது தான் உலகம் அதன் கவர்ச்சியை இழக்கிறது.


=> முக்குணங்களின் மாறுபாடுகளினால் தோன்றியவைகள்:

ஏபி4: த்ரிபி4: கு3ணமயை: பா4வை: எனில் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களின் மாற்றங்களில் உண்டானவைகள், என்று பொருள்படும்.

விருப்பம்(ராக) என்பது சத்வம் மற்றும் ரஜஸ் இரண்டிலிருந்தும் பிறக்கிறது. அதாவது சத்வத்திலிருந்து பிறந்த ஆசைகள் சாத்விக-ராக என்றும் ரஜஸிலிருந்து பிறப்பவைகள் ராஜஸிக-ராக என்றும் கூறப்படும். உதாரணமாக, கீதையைப் படிக்க வேண்டும் எனும் விருப்பம் சாத்விகம். எந்தவொன்றை பற்றிய அறிவையும் அறிய விரும்பும் ஆசை சாத்விகமாகும். பெயர், புகழ் மற்றும் அதிகாரம் ஆகியவற்றிற்கான ஆசையும், அதையொட்டி உண்டாகும் வெறுப்பும்(துவேஷ) ராஜஸிகமானது. குழப்பம்(மோஹ) தமஸிலிருந்து பிறக்கிறது. தமஸ் என்பது அறியாமை; அறியாமை எனும் காரணத்திலிருந்து தோன்றும் விளைவுகுழப்பம்ஆகும். அனைத்துவித தவறான மற்றும் சிந்தனையற்ற மதிப்பிற்கும் மதிப்பீட்டிற்கும் தமஸ் ஆதாரமாக அமைகிறது. அத்தியாயம் பதினாங்கில் பகவான், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பார்; அங்கு இதை மீண்டும் விசாரம் செய்யலாம்.  


=> மோஹம்:

இத3ம் ஸர்வம் ஜக3த், இந்த முழு உலகமும், இந்த மூன்று குணங்களின் மாற்றங்களால் மோஹத்தை(மோஹிதம்) அடைந்துள்ளது, என்கிறார் பகவான். இங்கு, இந்த முழு உலகம் எனும் சொல் அதிலுள்ள பல்வேறு பொருட்களைப் பற்றிக் குறிக்கவில்லை என சங்கரர் தனது விளக்கத்தில் கூறுகிறார். ஏனெனில் உண்மையில் அவைகளினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆகவே அவர் இந்த இடத்தில்ப்ராணி-ஜாத’, எனும் சொல்லைச் சேர்ப்பதன் மூலம் உயிரினங்கள், மனிதர்கள் என்ற பொருளைக் கொடுக்கிறார்.

மோஹித எனில் குழப்பம், மோஹம் அதாவது பிரித்தரியும் புத்தி இல்லாமையைக் குறிக்கிறது. எது நித்தியமானது - எது நித்தியமற்றது என்ற பாகுபாட்டைச் சரியாக அறியாததே ஒருவனுடைய வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிப்பதிலுள்ள குழப்பத்திற்கும், குறிக்கோளாக ஆகப்போகும் தேடுதலில் (புருஷார்த்தம்) இருக்கின்ற குறைப்பாட்டிற்கும் அடிப்படையாகிறது. மேலும் ஆத்மா-அனாத்ம பற்றிய குழப்பமும் உள்ளது. எனவே, ஒவ்வொரு கட்டத்திலும் இது மோஹத்தினால் உண்டாகும் சிக்கலாகவே உள்ளது.


=> தன் சொரூபமாக ஈஷ்வரனை அறிவதில்லை:

யாரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை - மாம் அபிஜானாதிஎன்கிறார் கிருஷ்ணர். இம்முக்குண மாற்றங்களினால் மோஹமடைந்ததனால், நான் அவர்களிடமிருந்து வேறுபட்டவனாக இல்லாவிட்டாலும், அவர்கள் என்னை அடையாளம் காணவில்லை. இங்கு, அந்தநான்என்பதன் தன்மை என்ன என்பதை கிருஷ்ணர் மேலும் கூறுகிறார், நான் பரம் அவ்யயம். பரம் எனில் மேலான, அதாவது அனைத்து குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாகவும் ஆனால் அனைத்து குணங்களின் இருத்தலுக்கு ஆதாரமாகவும் இருப்பவன். குணங்கள், குணங்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு காரணமானவன். மூன்று குணங்களில் இருந்து விடுபட்டவனாக என்னை மக்கள் அடையாளம் காணவில்லை.

அவ்யயம் என்றால் தேயாதது, இறப்பற்றது. எனில் பிறப்பற்ற தன்மையும் இதில் அடங்கும். எனவே, பிறப்பிலிருந்து தொடங்கி இறப்பு வரையிலான ஆறுவித மாற்றங்களிலிருந்து விடுபட்டவன் என சங்கரர் இங்கு விளக்கம் கூறுகிறார். அதாவது பிறத்தல் (ஜாயதே), இருத்தல்(அஸ்தி), வளர்தல்(வர்ததே), மாற்றத்தை அடைதல்(விபரிணமதே), தேய்தல்(அபக்ஷீயதே) மற்றும் மடிதல்(வினஷ்யதி) எனும் ஆறுவித மாற்றங்கள்(ஷட்-பா4-விகார) இல்லை என்பது பொருள்.

முக்குண மயமான வஸ்துக்களினால் ஏமாற்றப்பட்டவர்களாக அவர்கள், எவ்வித மாற்றமுமற்று, அழியாது, பரமாக இருக்கின்ற என்னை அறிவதில்லை. மாயைக்கு உட்பட்டு அவர்களின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றுவதில் மும்மரம் காட்டுவதால், அனைத்து உயிரினங்களின் ஆத்மாவாக இருக்கும் என்னை அவர்கள் அடையாளம் காண்பதில்லை.

பிறகு எப்படி ஒருவன் இந்த மாயையிலிருந்து விடுபடுவது? இத்தகைய இறைவனை யார் அடையாளம் காண்பது? என்பதற்கான விடையை பகவான் அடுத்த சுலோகத்தில் கூறுகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மனித ரூபமாக விளையாடுபவன் ஈஷ்வரனே. அவன் ஒரு செப்படி வித்தைக்காரன் போலாவான். ஜீவன், ஜகத் என்ற மாயைத் தோற்றமெல்லாம் அவனுடைய பெரிய வித்தைகள். செப்படி வித்தைக்காரன் மட்டுமே உண்மை. வித்தைகள் எல்லாம் மாயை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

||7.14|| மாயையின் லக்ஷணமும் துயரத்தை நீக்கும் உபாயமும்:

दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया

मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते ।। १४ ।।

தை3வீ ஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா

மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே ।। 14 ।।


हि  ஹி  உண்மையில்   एषा  ஏஷா  இந்த    मम   மம  என்னுடைய    गुणमयी  கு3ணமயீ  குணங்களால் ஆகிய   दैवी  தை3வீ  தெய்வத்தை சார்ந்திருக்கும்  माया  மாயா  மாயை   दुरत्यया   து3ரத்யயா  தாண்ட முடியாதது   

ये  யே  யார்   माम् एव  மாம் ஏவ  என்னையே   प्रपद्यन्ते   ப்ரபத்3யந்தே  சரணடைகின்றனரோ   ते  தே  அவர்கள்  एतां मायां   ஏதாம் மாயாம்  இந்த மாயையை   तरन्ति  தரந்தி   தாண்டுகின்றனர்.


குணங்களால் ஆகியதும் என்னைச்(ஈஷ்வரனை) சார்ந்திருப்பதுமானஎன்னுடைய இந்த மாயையானது உண்மையில் தாண்டமுடியாதது; யார் என்னையே சரணடைகின்றனரோ அவர்கள் இந்த மாயையை தாண்டுகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் மாயையின் சில லக்ஷணங்களைக் கூறி, அதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தையும் கூறுகிறார்.

முதலில் பகவான், உண்மையில் என்னுடைய இந்த மாயையைக் கடப்பது கடினம்ஏஷா மம மாயா து3ரத்யயா ஹி, என்கிறார். மனதின் முக்குண மாற்றங்களில் மயங்கிப் போன நம்மால் ஈஷ்வரனுடனான நம் ஐக்கியத்தை உணர முடிவதில்லை.

மேலும், இந்த மாயையானது இறைவனுக்கு உரியது(தை3வீ) என்றும், குணங்களுடன் கூடியது(கு3ணமயீ) என்றும் கூறுகிறார். சென்ற சுலோகங்களில் விசாரித்ததை போல மனதினுடைய நிலைகள் அனைத்தும் மாயையினுடைய குணங்களின் தயாரிப்புகளாகவே உள்ளன; அதாவது சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றிலிருந்து தோன்றியவைகள். எனவே மாயா - கு3ணமயீ, முக்குணங்களைக் கொண்டது. ஈஷ்வரனை அங்கீகரிப்பதைத் தடுக்கும் மனநிலைகளாக வெளிப்படுவது இந்த மாயையே ஆகும். அதைக் கடக்க வேண்டும்; யதார்த்தத்தை அப்படியே பார்க்க வேண்டும்.

மேலும் மாயை தை3வீ, அதாவது ஈஷ்வரனுடையது; அவரைச் சார்ந்திருப்பது. மாயைக்கு அடிப்படையாக இருப்பது பரமேஷ்வரன். எனவேதான் அது அவரைப் பாதிக்காது; அது அவருக்கு ஒரு சக்தியாக மாறுகிறது.


=> மாயை:

* லக்ஷணங்கள்:

(1) மாயா - யா மா ஸா மாயா, எது இல்லையோ அது மாயை.

(2) தைவீ - ஈஷ்வரனைச் சார்ந்து இருப்பது. சுதந்திரமாக இருக்க முடியாதது, நிழலைப் போல.

(3) குணமயீ - மூன்று குணத்துடன் கூடியது. சத்வம் - அறிதல், ரஜஸ் - செயல்படுதல், தமஸ் - செயல்படாதிருத்தல்.

(4) துரத்யயா - வெல்வதற்கு கடினமானது.

* மாயையின் இரு சக்திகள்:

(1) ஆவரண சக்தி - இருப்பதை மறைத்தல்

(2) விக்ஷேப சக்தி - ஒன்றை தோற்றிவைத்தல்

இருப்பதை மறைத்து, இனியொன்றை தோற்றிவைத்தல் மாயையின் சக்திகளாக உள்ளன. மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தெரியும் பாம்பு இதற்கான சரியான உதாரணம். இருக்கின்ற கயிற்றை மறைத்து இல்லாத பாம்பு தோற்றுவிக்கப்படுகிறது; மேலும் பளீர் சூரியஒளியில், இருக்கின்ற சிப்பி மறைக்கப்பட்டு இல்லாத வெள்ளி தோற்றுவிக்கப்படுகிறது. அதுபோல மாயையின் ஆவரண சக்தியினால், இருக்கின்ற ப்ரம்ம தத்துவம் மறைக்கப்பட்டு, விக்ஷேப சக்தியினால் இந்த உலகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஜீவனிடம் செயல்படும் மாயையின் ஆவரண சக்தியே அவித்யா(அறியாமை) எனப்படும். பகவானிடம் மாயையின் விக்ஷேப சக்தி மட்டுமே செயல்படும்; அதன் ஆவரண சக்தி செயல்படாது.   


=> கடினம் ஆனால் சாத்தியம்:

இந்த மாயையைக் கடப்பது சாத்தியமில்லாமல் போவதில்லை என்றாலும்கூட, அது கடினம் என்பதை இங்கே கிருஷ்ணபகவான் ஒப்புக்கொள்கிறார். சிரமம் என்னவெனில், குணாதிசயங்களின் மயக்கத்தில் மூழ்கியிருக்கும் ஒருவனால் அவற்றைக் கடக்க முடிவதில்லை. குணங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திப் பார்க்காமல் ஒருவனால் மனதின் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருக்கும் அவற்றை அடையாளம் காண முடியாது. ஆனால் மாயையின் அல்லது குணங்களின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கொண்டு குணங்களைத் தன்னிலிருந்து வேறாகப் பார்த்தல் என்பது மிகவும் கடினமான சூழ்நிலைதான்


=> உபாயம்:

மாயையைக் கடப்பது கடினம் எனக் கூறியபோதிலும் அதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தையும் பகவான் இங்கு கூறுகிறார், என்னை மட்டுமே நாடுபவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். என்னை மட்டுமே பின்தொடர்பவர்கள், என்னைச் சரணடைபவர்கள் - யே மாம் ஏவ ப்ரபத்3யந்தே, அவர்கள் கடக்கிறார்கள்தே தரந்தி, இந்த மாயையை - ஏதாம் மாயாம்

இந்தமாம்என்ற சொல்லுக்கு பாஷ்யத்தில் சங்கரர், தனது இயல்பையுடையவன்(ஸ்வாத்ம-பூதம்), அனைத்தின் சுயமாக இருப்பவன்(ஸர்வ-ஆத்மா) என விளக்கமளிக்கிறார்.

இங்குஏவஎன்ற சொல்லை மூன்று விதமாக உபயோகிப்பதன் மூலம் மூன்றுவித விளக்கங்களைப் பெறுகிறோம்:

   (1) யார் என்னையே (மாம் ஏவ) சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைக் கடக்க முடியும் - யே மாம் ஏவ ப்ரபத்3யந்தே தே ஏதாம் மாயாம் தரந்தி.

   (2) யார் என்னைச் சரணடைகிறார்களோ அவர்கள்தான்(தே ஏவ) இந்த மாயையைக் கடக்க முடியும்

   (3) என்னைச் சரணடைந்து தான்(ப்ரபத்3யந்தே ஏவ) அவர்கள் மாயையைக் கடக்க முடியும்.

மாயையின் மயக்கத்திலேயே இருந்து கொண்டு, அதைக் கடக்கும் வழியைத் தேடினால் அது இயலாது. தீர்வு தேடுகிறோம் என்ற பெயரில் அவர்கள் மாயையின் மயக்கத்தில் இருந்து விடுவார்கள். எனவே அவர்கள் என்னை மட்டுமே தேட, சரணடைய வேண்டும். அப்போதுதான் அவர்களால் மாயையின் பிடியிலிருந்து வெளிவர முடியும்.


=> சரணாகதி:

சரணாகதி = சரணம் + ஆகதி.

சரணம் மற்றும் கதி எனப் பிரிக்கும்போது, சரண் அடைதலே வழி எனப் பொருள்படுகிறது. சரணம் எனில் ஒப்படைத்தல், உதவியை நாடுதல், பாதுகாப்பு, இருப்பிடம் என்று பொருள். கதி எனில் வழி, மார்க்கம். எனவே பகவானை சரணடைதல் என்பது பகவானிடம் ஒப்படைத்தலை, அவரின் உதவியை பாதுகாப்பை நாடுதலை, அவரையே இருப்பிடமாக கொள்ளுதலைக் குறிக்கிறது

பொதுவாக மக்கள், முயற்சிக்கான ஒரு மாற்றாக சரணாகதியை எடுத்துக் கொள்கின்றனர். முயற்சியை கைவிட்டு பகவானை சரணடையும் தவறான நோக்கு உள்ளது. முயற்சியில்லாமல் எதையும் அடைய முடியாது. முயற்சி பலனைக் கொடுக்கும்வரை தடையில்லாமல் செல்ல பகவானை அடைக்கலம் ஆக்குவது சரணாகதி எனப்படும். முயற்சியில் வெற்றியைப் பெற பகவானிடம் உதவியை நாடுதல், தோல்வி குறித்த எண்ணம் ஏற்படுத்தும் மனச்சோர்வை கவலையைக் களைய பகவானிடம் ஒப்படைத்தல் சரணாகதி. எனவே சரணாகதி என்பது முயற்சிக்கான மாற்று வழி அல்ல என்பதை புரிந்துகொள்வது மிக அவசியம்.


=> சரணடைதல் எனும் பாவனை:

சரணடைதல் என்பது ஒரு செயல் அல்ல; அது ஒரு பாவனை. வாழ்க்கையின் வெற்றி தோல்விகளில் ஒருவனுக்கு இருக்க வேண்டிய பாவனை. ‘நான்எனும் அஹங்காரத்திற்கு மேலாகவுள்ள ஒரு சக்தியை உணர்தல் அல்லது அஹங்காரத்திடம் இருக்கும் முழு பலகீனத்தை பார்த்தல் சரணாகதி. ‘நான் தான் வெற்றி அடைந்தேன்’, ‘நான் தடைகளை நீக்கினேன், என்னால் முடியும்என்கிற அஹங்காரத்துடன் மனநிறைவை அடைவதோ அல்லது சம்சாரத்தை, மாயையைத் தாண்டுவதோ இயலாது. அஹங்காரத்திற்கு அந்த சக்தியில்லை; அந்த சக்தி ஈஷ்வரனிடமே உள்ளது என்பதை புரிந்து அவரிடம் உதவியை நாடுதல் சரணாகதி ஆகும்.

இந்த அஹங்கார விஷயத்தில் இரண்டு அறிவு ஒருவனுக்கு இருக்க வேண்டும்:

  (1) அறிவில் போதாமை - என் அறிவு மட்டுமே எனக்கு வழிகாட்டாது.

  (2) பலத்தில் போதாமை - மாயையைக் கடக்கும் சக்தி என்னிடமில்லை; நான் பலகீனமானவனாக உள்ளேன்.

இந்த அறிவினால் ஒருவனிடம் பிறக்கும் பாவனை சரணாகதி.


=> ஈஷ்வரனிடத்தில் சரணடைதல் என்றால் என்ன?

ஈஷ்வரன், வேத ரூபத்தில் தர்மமாக உள்ளார். வாழ்க்கையின் நெறியாக, நியதியாக இருக்கும் தர்மமே ஈஷ்வரன். வேத வாக்கியத்தை, அதில் கூறப்பட்டுள்ள தர்மத்தை முழுமையாக நம்புதல் வேண்டும். ஒருவனின் தனிப்பட்ட அனுபவத்தையும் பக்குவத்தையும் பொறுத்து அவனுடைய புத்தியானது எதை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். ஆனால் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்தை நம்புதல், அதன்படி செயல்படுதல் சரணாகதி ஆகிறது

நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், நான் என்னை நேசிக்குமளவு பகவானும் என்னை நேசிக்கிறார். பகவான் எனக்காக அனைத்தையும் முடிவு செய்கிறார். எனக்கு உண்மையில் என்ன வேண்டுமென்பது என்னைவிட பகவானுக்கு நன்கு தெரியும். நான் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஈஷ்வரனின் சங்கல்பம்; வெற்றியும் தோல்வியும் அவரின் பிரசாதம். பகவானின் திட்டத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று புத்தியை அமைதியாக வைத்திருத்தல் சரணாகதி ஆகும்

சரணடைவதினால் வரும் சக்தியினால்தான் மாயையைக் கடக்க முடியும். ‘உமது விருப்பத்திற்கு எனது வலிமையை அன்புடன் ஒப்படைப்பதற்கு எனக்கு வலிமை கொடுங்கள்என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.

சரணாகதி பயத்தினால் தோன்றுவது அல்ல; அது அறிவினால், விசாரத்தினால் தோன்றுவது ஆகும். நம் சக்தியை இறைவனிடம் சமர்பித்துவிட்டால், பகவானின் சக்தியுடன் நம் சக்தி ஐக்கியமாவதால், பகவானினுடைய முடிவில்லாத சக்தியே எஞ்சியுள்ளது. தனிப்பட்ட ஒருவனின் அஹங்காரத்தை காட்டிலும் இது கோடி மடங்கு பலம் வாய்ந்தது. இந்த பலத்தினாலேயே மாயையை வெல்ல முடியும்

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

திவ்விய மாதாவை நம்மால் ஏன் காணமுடியவில்லை? அவள் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்தி, பிறர் கண்ணிற்படாமல் தான்மட்டும் எல்லாவற்றையும் பார்க்கும் உயர்குலத்துதித்த ஸ்திரீ போன்றவளாவாள். அவளுடைய உண்மையான பக்தர்கள் மட்டும், மாயையாகிய திரையைத் தாண்டி, சமீபத்தில் சென்று, அவளைத் தரிசிக்கின்றனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------