திங்கள், 19 ஜூன், 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.14 - 8.15

||8.14|| எப்படி மனதை லயப்படுத்துவது?

अनन्यचेता: सततं यो मां स्मरति नित्यश:

तस्याहं सुलभ: पार्थ नित्ययुक्तस्य योगिन: ।। १४ ।।

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச1:

தஸ்யாஹம் ஸுலப4: பார்த3 நித்யயுக்தஸ்ய யோகி3: ।। 14 ।।


पार्थ  பார்த3  பார்த்தா   अनन्यचेता:  அநந்யசேதா:  வேறு எண்ணமின்றி    :  :  யார்   

नित्यश:  நித்யச1:  நெடிது   सततं  ஸததம்  இடையறாது   

मां स्मरति  மாம் ஸ்மரதி  என்னை நினைக்கின்றானோ   तस्य  தஸ்ய  அந்த   

नित्य युक्तस्य  நித்ய யுக்தஸ்ய  ஒருநிலைப்பட்ட   योगिन:  யோகி3:  யோகிக்கு   

अहं सुलभ:  அஹம் ஸுலப4நான் எளிதில் அகப்படுகிறேன்.


பார்த்தா வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது நினைக்கின்றானோ, அந்த ஒருநிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா.

விளக்கம்:

அப்யாஸத்தின் அவசியத்தை பற்றி பகவான் இந்த சுலோகத்தில் பேசுகிறார்

=> வேறு எண்ணமில்லாதவன்:

அநந்யசேதா:எனில் வேறு இடத்தில் செல்லாத மனதை உடையவன் என்பது பொருள். தனது சுயத்தை தவிர வேறு எந்தப் பொருளின் மீதோ அல்லது தேவதையின் மீதோ மனம் இல்லாதவன் அநந்யசேதஸ் எனப்படுகிறான். இந்த குறிப்பிட்ட வெளிப்பாட்டை கீதையில் பல இடங்களில் காணலாம். ‘அந்யஎனில் மற்றொன்று. ஆகவே, ‘அந்யசேதஸ்எனில் தர்மம், அர்த்தம், காமம் போன்ற அனாத்ம விஷயத்தில், அதாவது தன்னைத் தவிர வேறொன்றின் மீது மனதைக் கொண்டவன். ஈஷ்வரனைத் தன்னிலிருந்து வேறான ஒருவராக பார்ப்பவனும் இதில் அடக்கம். ஆகையினால் ஈஷ்வரனைத் தன்னிலிருந்து வேறானவராக அல்லாமல் தனது சுயமாகவே பார்ப்பவன் அநந்யசேதஸ் ஆகின்றான்.

ஸததம்எனில் இடையறாது, எப்பொழுதும் என்பது பொருள். ஸததம் : மாம் ஸ்மரதி - எப்பொழுதும் என்னை நினைப்பவன். இங்குஸ்மரண_நினைவுகூர்தல்எனும் சொல், ஏற்கனவே ஒருவன் அறிந்ததை மனதுக்கு கொண்டுவர வேண்டுமென்கிற நோக்கில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது சாஸ்திர சிரவணத்தை நினைவுப்படுத்துதலைக் குறிக்கின்றது. ஸத்சங்கம், விசாரம், மநநம் மற்றும் இன்னும் அதிக சிரவணத்தின் மூலம் ஈஷ்வரனைப் பற்றிய தொடர் சிந்தனையில் இருப்பதைக் குறிக்கின்றது.


=> ஏன் இவ்வாறு கூறப்படுகின்றது?

தேஹ-ஆத்ம-புத்தியிலிருந்து விடுபடும்பொருட்டு இந்த தொடர் சிந்தனை வலியுறுத்தப்படுகின்றது. சாதகன் ஒருவன் சாஸ்திர உபதேசத்தைப் பெற்று அதைப் பகுப்பாய்வு செய்த பின்னரும் நான் இந்த உடல் எனும் தேஹ-ஆத்ம-புத்தி உள்ளது. பழக்க தோஷத்தின் காரணமாக அது எளிதில் செல்வதில்லை. இவ்வகையான நோக்குநிலைக்கும் குழப்பநிலைக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு சாதாரண குழப்பத்திற்கு ஒருமுறை மட்டுமே தெளிவுபடுத்த வேண்டும், பிறகு அந்த சந்தேகம் நீங்கிவிடும். ஆனால் பழக்கத்தினால் உருவான பிழைக்கு மீண்டும் மீண்டும் திருத்தம் தேவைப்படுகின்றது. இங்கு இந்த தேஹ-ஆத்ம-புத்தி, அதாவதுஉடல் நான்என்பது அத்தகையதொரு பிழையாகும். அதனால்தான் சாஸ்திர விசாரத்தினால் குழப்பம் தீர்ந்த பின்னரும் ஒருவனுக்கு சிக்கல் தொடர்ந்து நீடிக்கின்றது. வாழ்நாள் முழுவதும்இந்த உடல்தான் நான்என்ற எண்ணத்துடன் வாழ்ந்த ஒருவனுக்குதத் த்வம் அஸிஎன்றவுடன் அந்த பழக்கம் எப்படி அகலும்? இந்த நோக்குநிலை செல்ல வேண்டுமெனில்நான் ப்ரம்மன்என்ற தொடர் சிந்தனை தேவை. இந்த ஸ்மரணமே ப்ரம்ம-அப்யாஸம் எனப்படும்

ஸததம்என்ற சொல்லைப் போன்றேநித்யச1:என்பதும் எப்பொழுதும் என்ற பொருளையே தருகின்றது. ஆகவே இவை இரண்டிற்குமான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இங்குஸததம்என்ற சொல்லை பகவான், தொடர்ந்து - இடையறாது - இடைவெளி இல்லாமல், என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார். அதாவது நிதித்யாசனம், சிந்தித்தல், கற்பித்தல், விவாதித்தல் மூலம் தொடர்ந்து ஸத்சங்கத்திலேயே இருந்து ஈஷ்வரனை இடையறாது நினைப்பவனை இச்சொல் சுட்டுகிறது எனப் பார்த்தோம். ஆனால் இந்த தொடர்ச்சி, ஒரு நாள், ஒரு வாரம் அல்லது மேலும் சில நாட்கள் எனவும் புரிந்து கொள்ளப்படலாம். ஆகவே பகவான்நித்யச1:எனும் வார்த்தையின் மூலம் நெடிது - நீண்ட காலம், எனக் கூற விரும்புகிறார். நீண்ட காலம் எனில் எவ்வளவு காலம்? எப்பொழுது தனது உண்மை சொரூபத்திலிருக்க ஒருவனுக்கு நிதித்யாசனம் தேவைப்படவில்லையோ அதுவரை என்பது பொருள். ஆகவேதான்நித்யச1:எனும் சொல்லிற்குஎப்பொழுதும்என்பதற்கு பதிலாகநீண்ட காலத்திற்குஎன்பது பொருளாக இங்கு கொடுக்கப்படுகின்றது


=> அடைவதற்கு சுலபமானவர்:

அந்த யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்தஸ்ய யோகி3: அஹம் ஸுலப4:, என்கிறார் பகவான். ‘ஸுலப4:எனில் சிரமங்கள் எதுவுமில்லாமல், சுலபமாக, எளிதில் என்பது பொருள். பகவானை எப்படி எளிதில் அடையமுடியும்

வாழ்க்கையில் விரும்பும் ஒன்றைச் சாதிக்க கண்டிப்பாக முயற்சி தேவை. முயற்சி தேவை என்றவுடனேயே அது சுலபமாகக் கருதப்படுவதில்லை. ப்ரம்மம் எல்லையற்றது என்பதால் அடைவதற்குள்ளேயே அதிகபட்ச ஆதாயமாகப் பார்க்கப்படுவது ப்ரம்மம். அதிக ஆதாயத்திற்கு அதிக முயற்சி தேவை என்பதுதானே நியாயம். ஆனால் இங்கு மிகப்பெரிய ஆதாயம் எளிதில் பெறப்படும் எனக் கூறப்படுகிறது.

அனைத்து பிரியத்திற்கும் ஆதாரமான ப்ரம்மத்தை பெற ஒருவன் ப்ரம்மத்தில் வசித்தல் வேண்டும் என்கிறார் பகவான். விருப்பத்திற்குரிய ஒன்றில் இருக்க என்ன முயற்சி தேவைப்படும்? குறைந்த பட்சம், அது ஒரு பொருளாக இருந்தால், அதை மனதில் கொண்டுவர சில முயற்சிகள் செய்யவேண்டும். ஆனால் இங்கு அது தனது சுயமாகவே இருப்பதால் எந்த முயற்சியும் தேவைப்படுவதில்லை. பொதுவாக, விருப்பமல்லாத விஷயத்தை செய்வது மிக கடினமாகத் தெரியும். ஆனால் ஆத்மா பரமேஷ்வரனாகவே இருப்பதால் இதைவிட விருப்பத்திற்குரியது என வேறெதுவும் இல்லை. இந்த முழுமையில், இந்த இயல்பில் பொருந்தி இருத்தல் என்பது மிகவும் ஆனந்தமான விஷயமாக இருப்பதால் இங்கு கடினம் என எதுவுமில்லை.

மேலும் இங்கு எதுவும் புதிதாக தயாரிக்கப்படுவதில்லை. இது ஏற்கனவே அடையப்பட்ட மெய்ப்பொருள், சித்த வஸ்து(सिद्ध वस्तु). இந்த உண்மையை புரிந்துகொள்ளுதலும் அங்கீகரித்தலும் மட்டுமே போதுமானது. இங்கு எந்த உற்பத்தியும் நடப்பதில்லை; புதிதாக எதுவும் சேர்க்கப்படுவதோ, பழையது எதுவும் நீக்கப்படுவதோ இல்லையாதலால் அடைவதற்கு சுலபமானது.


=> யார் அந்த யோகி?

நித்ய யுக்தஉறுதியான பொருந்திய மனதையுடையவன், ஒருநிலைப்பட்ட மனதையுடையவன். அதாவது, முழு கட்டுப்பாட்டிலுள்ள மனதை கொண்டவனாதலால் அது எளிதில் பகவானிடம் ஒடுக்கத்தை அடைகிறது. இப்படிப்பட்ட மனதைப் பெறும்வரையில் அவன் சாஸ்திர சிரவணத்தை மேற்கொள்கிறான். தனது விருப்ப எண்ணத்தைப் பயன்படுத்தி நிதித்யாசனத்தில் ஈடுபட்டு, ஆத்ம சொரூபத்தில் லயித்துப் பழகுகிறான். தொடர் பயிற்சியினால் பழக்க தோஷங்களை வென்றவனாக, பழைய வாசனைகளிலிருந்து விடுதலை அடைந்தவனாக, எந்தவித விருப்ப எண்ணத்தையும் பயன்படுத்தாமலேயே இயல்பாக ஆத்ம சொரூபத்தில் பொருந்தி இருக்கும் நிலையை அடைகிறான் யோகி. வேறு எங்கும் செல்லாத மனதை உடையவனாக(அநந்யசேதா:), தன்னிலிருந்து வேறாக இல்லாத பரமேஷ்வரனை அடைகிறான்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவானை நோக்கி நாம் ஓர் அடிவைத்தால் அவன் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.15|| மோக்ஷத்தின் மஹிமை:

मामुपेत्य पुनर्जन्म दु:खालयमशाश्वतम्

नाप्नुवन्ति माहात्मान: संसिद्धिं परमां गता: ।। १५ ।।

மாமுபேத்ய புநர்ஜந்ம து3:கா2லயமசா1ச்1வதம்  

நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்3தி4ம் பரமாம் 3தா: ।। 15 ।।


माहात्मान:  மஹாத்மாந:  மஹாத்மாக்கள்   माम् उपेत्य  மாம் உபேத்ய   என்னை அடைந்து   

दु:खालयम्   து3:கா2லயம்  துன்பத்தின் இருப்பிடம்   अशाश्वतम्  அசா1ச்1வதம்  நிலையற்றது    

पुनर्जन्म  புநர்ஜந்ம  மறுபிறப்பை   प्नुवन्ति   ஆப்நுவந்தி  அடைகிறதில்லை   

परमां संसिद्धिं  பரமாம் ஸம்ஸித்3தி4ம்  மேலான லக்ஷியத்தை   गता:  3தா:  அடைந்துள்ளனர்.


மஹாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்திற்கு இருப்பிடமும்   நிலையற்றதுமாகிய மறுபிறப்பை எடுப்பதில்லை; அவர்கள் மேலான லக்ஷியத்தை அடைந்துள்ளனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார்.


விளக்கம்:

=> பரம்பொருள் சொரூபமாக தன்னை அறிந்தவன்:

   மாம் உபேத்ய என்னை அடைந்து. இங்குஉபேத்யஎன்பது ஒரே இயல்புடையது என்ற பொருளில் அடைதலைக் குறிக்கின்றது. அதாவது அடைவதும் அடையப்படுவதும் வேறுவேறு பொருளாக இருந்தால், ஒன்று மற்றொன்றின் தன்மையை எடுத்துக்கொள்ள முடியாது. அவைகளுக்கே உண்டான சொந்த குணங்கள் இருப்பதனால் ஏதாவதொன்றின் குணமோ அல்லது இரண்டினுடைய குணங்களுமோ அழிக்கப்பட்டுவிடும். இந்த சூழலில்அடைதல்எனக் கூற முடியாது

ஒருகால் ஒரு பொருள் உண்மையில் இனியொரு பொருளாகவே இருக்கிறது என வைத்துக் கொள்வோம்; இதில் பிரிவினை அல்லது வேறுபாடு என்பது அறியாமையினால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதுபோலத்தான், இங்கும் ஈஷ்வரனும் ஜீவனும் பிரிவதற்கு அறியாமையே காரணம். அனாத்மாவை ஆத்மாவாக ஏற்றிவைத்துப் பழகியதும் அறியாமையின் விளைவாகவே நடந்துள்ளது. நிதித்யாசனத்தின் மூலம் பரமேஷ்வரனிடம் லயித்துப் பழகுதல், இந்த அறியாமையையும் ஏற்கனவேயுள்ள தவறான பழக்கத்தையும் நீக்கும் பொருட்டே ஆகும். மற்றபடி, ஈஷ்வரன், பரமாத்மா ஏற்கனவே அடையப்பட்ட ஒன்று என்பதனால் ஈஷ்வரனுடனான இந்த அடைதல்(உபேத்ய) சாத்தியப்படுகிறது


=> மறுபிறப்பு:

அவர்களுக்கு மறுபிறப்பு இல்லைபுநர்ஜந்ம ஆப்நுவந்தி, என்கிறார் பகவான். புனர்ஜென்மத்திற்கான அடைமொழிகளைக் கொடுப்பதன் மூலம் அதன் தன்மையை பகவான் இந்த இரு வார்த்தைகளில் எடுத்துரைக்கிறார். (1) து3:கா2லயம்துன்பத்திற்கு இருப்பிடம், (2) அசா1ச்1வதம்நிலையற்றது.

இனியொரு பிறவிக்கு என உண்மையில் யாரும் பயப்படுவதில்லை; அதில் அனுபவிக்கும் வேதனைக்காகவே பயம் உண்டாகிறது. ஒருகால் நல்ல சூழ்நிலையாக இருக்கும்பட்சத்தில் பிறப்பு என்பது விரும்பத்தக்கது என ஒருவன் நினைக்கலாம். ஆனால் ஒருவனின் பிறப்பிற்கு காரணம் அறியாமை என்பதனால், அவன் எந்த உருவத்தில் இருந்தாலும் அதே மாதிரியான போராட்டத்தையே எதிர்கொள்கின்றான். எனவேதான் பகவான் இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறார்.

ஒவ்வொரு பிறவியும் துன்பத்தின் உறைவிடம் - து3க்க ஆலயம். ஆலயம் எனில் இடம், இருப்பிடம், உறைவிடம் என்பது பொருள். ‘து3க்கஎனில் துன்பம், வலி ஆகும். பொதுவாக ஒரு மனிதனுக்கு மூன்று வகையான துன்பம் பேசப்படுகின்றது.

    (1) ஆத்யாத்மிகம் - தனது உடல், மனம் மற்றும் புலன்களால் ஏற்படும் துன்பம்.

    (2) ஆதிபெளதிகம் - ஒருவனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளால் அல்லது உயிரினங்களால் ஏற்படும் துன்பம்.

    (3) ஆதிதெய்விகம் - இயற்கையினால், அறியப்படாத சக்திகளினால் உண்டாகும் துன்பம்

இந்த துயரத்திற்கெல்லாம் இருப்பிடமாகத் திகழ்வது நமது உடல். ஒவ்வொரு பிறப்பும் பிராரப்தத்திற்கு ஏற்றதொரு உடலை நமக்கு அளிக்கின்றது. எப்படிப்பட்ட உடலும் இந்த மூன்றுவித துயரத்திற்கும் உறைவிடமாக இருக்கின்றது. அப்படியெனில், சொர்க்கலோகத்திற்கான உடல் எந்தவொரு துயரத்திற்கும் ஆளாகாது என்கிற நோக்கில், ஒருவன் சொர்க்கத்தை விரும்புவதாக வைத்துக்கொள்வோம். இதற்காகவே பகவான்அசா1ச்1வதம்-நித்தியமற்றதுஎனும் வார்த்தையை இங்கே உபயோகிக்கிறார். ஒருவன் விண்ணுலகைப் பெற்றாலும், அது நித்தியமானது அல்ல; அதற்கான புண்ணியம் தீர்ந்தவுடன் அவன் இந்த துக்கத்திற்குட்பட்ட உடலுடன் மறுபிறவி எடுக்க வேண்டும்


=> மஹாத்மாக்கள்:

எனில் இவ்வகையான பிறப்பு மற்றும் மறுபிறப்பிலிருந்து விடுபட்டவர்கள் யார்? மஹாத்மாந:, மஹாத்மாக்கள். மஹா + ஆத்மா - மேலான மனதை அடைந்தவர்கள்; தனது சுயத்தை பரப்ரம்மமாக அறிந்தவர்கள். அறியாமையினால் இழந்ததை அறிவினால் அடைந்த மாமனிதர்கள் ஆவர். அவர்கள் மேலான லக்ஷியத்தை அடைந்துள்ளனர்பரமாம் ஸம்ஸித்3தி4ம் 3தா:. இது மோக்ஷத்தைக் குறிக்கின்றது. ஸம்ஸித்3தி4 எனில் லக்ஷியம், வெற்றி. பரமா எனில் லக்ஷியங்களிலேயே மிக உயர்ந்தது, மேலானது என்பது பொருள். எனவே மோக்ஷம் மட்டுமே மேலான புருஷார்த்தம், அதை அடைதலே உண்மையான வெற்றி. அத்தகையதொரு வெற்றியை மஹாத்மாக்கள் அடைகின்றனர்.

இறைவனைப் பெறுவது எளிது எனினும் அதன் பலன் அதிகபட்ச ஆதாயத்தை கொடுப்பதாக இருக்கின்றது. மறுபுறம், ஒரு லோகத்தைப் பெறுவது கடினம் மற்றும் அதன் பலன் துக்க-ஆலயமான உடலைக் கொடுக்கின்றது. பிந்தையதைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு மோசமான சமரசம் ஆகும். ஜென்மம் சுகம் துக்கம் என அனைத்தும் நிலையற்றது. இந்த உடலை போகத்தை அனுபவிக்கும் பொருட்டு பயன்படுத்தும்போது அது துக்காலயம் எனவும், அதையையே மேலான புருஷார்த்தத்தை அடைவதற்கான சாதனைக்கு பயன்படுத்தும்போது அது தேவாலயம் எனவும் சாஸ்திரம் கூறுகிறது. போக-புத்தி தோன்றும்போது வைராக்கியத்தை தூண்டும் பொருட்டு அனைத்து பொருள்களிலும் உள்ள தோஷத்தை பார்த்துப் பழகுதல் தோஷ திருஷ்டி ஆகும். வைராக்கியம் அதிகரித்து அது வெறுப்பு எனும் எல்லையைத் தொடும்பொழுது, சாஸ்திர ஞானத்தைக் கொண்டுவந்து அனைத்தையும் ஈஷ்வரனாகப் பார்த்தல் ஈஷ்வர திருஷ்டி ஆகும்

முந்தைய சுலோகங்களில், ‘என்னை தனது சுயமாக உணர்ந்த ஞானிகள் இனியொரு பிறவியை அடைய மாட்டார்கள்’, என கிருஷ்ணர் கூறினார். இதை உணராத மற்றவர்களின் நிலை என்ன? அவர்கள் எங்கு செல்கிறார்கள்? என்பதை இனிவரும் சுலோகத்தில் விளக்குகிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------