ஞாயிறு, 23 ஜூலை, 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.20 - 8.21

||8.20|| பரப்ரம்ம தத்துவத்தின் விளக்கம்:

परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातन:

: सर्वेषु भूतेषु नश्यत्सु विनश्यति ।। २० ।।

பரஸ்தஸ்மாத்து பா4வோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந:  

: ஸர்வேஷு பூ4தேஷு நச்1யத்ஸு விநச்1யதி ।। 20 ।।


तु  து  ஆனால்   तस्मात् अव्यक्तात्  தஸ்மாத் அவ்யக்தாத்  அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும்   

परபர:  மேலான   अन्य:  அந்ய:  வேறு தன்மையுடைய    अव्यक्त:  அவ்யக்த:  அவ்யக்தமாய்    

सनातन:  ஸநாதந:  என்றுமுள்ள   :  :  எது   भाव:  பா4:  உளதோ   :  அது   

सर्वेषु भूतेषु  ஸர்வேஷு பூ4தேஷு  எல்லா உயிர்களும்   नश्यत्सु   நச்1யத்ஸு அழியும்போதும்    

विनश्यति  விநச்1யதி  அழிகிறதில்லை.


ஆனால் அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான வேறு தன்மையுடைய அவ்யக்தமொன்று உள்ளது. உயிர்களெல்லாம் அழியும்பொழுதும் அது அழிகிறதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது.


விளக்கம்:

சுலோகம் இருபது முதல் இருபத்தி இரண்டு வரை பரப்ரம்ம தத்துவம் விளக்கப்படுகிறது. முந்தைய சுலோகத்தில் பகவான், அனைத்தும் தோன்றாநிலைக்குள் ஒடுங்கி, வெளித்தோற்றமிலா நிலையிலிருந்து பின் மீண்டும் வெளித்தோற்றத்திற்கு வருவதாகக் கூறுகிறார். ஜீவர்கள் அநித்யமானவர்கள் எனக் கூறும்போது, உபாதி எனப்படும் இந்த நாமரூபம்தான் அநித்யம். மரணம் எனும் ஸ்தூல சரீர அழிவின்போது, சூக்ஷம சரீரம் தொடர்கிறது. மேலும் பிரளத்தில் சூக்ஷம சரீரமும் அழியும்போது காரண சரீரம் எஞ்சுகிறது. இனி, பரப்ரம்மத்துடன் ஒப்பிடும்போது இந்த காரண சரீரமும் அநித்யம் ஆகின்றது

ஆத்ம-வஸ்து மட்டுமே நித்யம். நான் ஜீவன் என ஒருவன் கூறும்போது, ‘நான்என்பது உண்மையில் ஆத்மா. அதாவது ஆத்மாவும், ஜீவத்துவம் அல்லது நாமரூபம் எனப்படும் தனித்தன்மையும் சேர்ந்தது ஜீவன்; ஆத்மா + நாமரூபம் = ஜீவன். இதில் ஜீவத்துவம் என்பது அறியாமையின் விளைவாக ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்டது என்பதால் அது அநித்யம், மித்யா. ஒரு ஜீவனின் உண்மையான சொரூபமான ஆத்மா, நித்யம். இந்த மெய்ப்பொருளின் இருப்பைச் சார்ந்தே அனைத்தும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. சார்ந்து இருப்பது மித்யா என்பதால் உண்மையில் இருப்பது ஆத்மாவிலிருந்து வேறாக இல்லாத பரம் ப்ரம்ம மட்டுமே


=> மூன்று தத்துவங்கள்:

(1) ஜகத் -> வ்யக்தம். வெளித்தோற்றத்திற்கு வந்ததாகவுள்ள இந்த உலகம் அனைத்தும்வ்யக்தம்என்றழைக்கப்படுகின்றது. காரியமான இது அனுபவத்திற்குரியது.

(2) காரண ரூப ஜகத் -> அவ்யக்தம். பிரம்மா உட்பட தோன்றியுள்ள அனைத்தும் தோன்றாநிலைக்குச் செல்லும்போது அவ்யக்தம் என்று பெயர் பெறுகிறது. இது வெளித்தோற்றத்திற்கு வராத மாயையிலிருக்கின்ற காரணநிலை ஆகும். காரணநிலை என்பதால் தோன்றுவதற்கு தயாராக இருக்கின்ற நிலை; சிருஷ்டிக்கு முந்தைய நிலை

(3) பரப்ரம்மம் -> அவ்யக்தம். இது விகாரமடையாத அவ்யக்தம். இதனிடம் எப்பொழுதும் எந்தவொரு மாற்றமும் உண்டாவதில்லை.

இதில் காரண ரூபமான அவ்யக்தத்தை அடைதல் பிரளயம் ஆகிறது. பரப்ரம்மமான அவ்யக்தத்தை அடைதல் மோக்ஷம் ஆகிறது. இந்த முகவுரையுடன் சுலோகத்தின் விளக்கத்தைப் பார்க்கலாம்.

அந்த காரண ரூபமான அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான, வேறான தன்மையுடைய, நித்தியமான அவ்யக்த தத்துவம் ஒன்று உள்ளதுதஸ்மாத் அவ்யக்தாத் து பர: அந்ய: ஸநாதந: அவ்யக்த:, என்கிறார் பகவான்.  


=> ‘துஎன்பதன் முக்கியத்துவம்:

துஎனும் சொல் இரு விஷயங்களை வேறுபடுத்திக் காட்டும் நோக்கில்ஆனால்’, ‘அதனால்’, ‘அதேசமயம்எனும் அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு புதிய தலைப்பை அறிமுகப்படுத்த மற்றும் ஏற்கனவே கூறப்பட்டவைகளிலிருந்து இனி வருவதை வேறுபடுத்திக் காட்ட இச்சொல்லே பயன்படுத்தப்படும். இங்கு அது மற்ற அனைத்திலிருந்தும் பரப்ரம்மத்தை வேறுபடுத்திக் காட்டும் நோக்கில் வந்துள்ளது. அனைத்தையும் அவ்யக்தத்திற்குள் சுருக்கி, அதிலிருந்து மேலானதாக இனியொரு வஸ்து உள்ளது, தஸ்மாத் து பர:, எனக் கூறுகிறது. இந்த வஸ்துவைப் போல வேறு எதுவுமில்லை என்பதை காட்டுகிறது

காரணநிலையான அவ்யக்தத்திற்குள் அனைத்தையும் சுருக்கியபின், அதிலிருந்து வேறொன்றாக இருக்கிறது என ஒன்றைக் கூறும்போது அது இல்லாத தன்மையுடையது(அபா4:) என ஒருவன் நினைக்கலாம். ஆகவே விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட இந்த வஸ்து இல்லாதது அல்ல என்பதைக் காட்டும்விதமாக பகவான்பா4:_இருக்கிறதுஎனும் சொல்லை பயன்படுத்துகிறார். என்றுமுள்ளது என்பது பரப்ரம்மத்தின் இயல்பு.   


=> ஒரு குழுவின் உறுப்பினரல்ல:

ஒரு பொருள் மற்றொன்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் அது அந்த வேறுபடுத்தப்பட்ட பொருளின் அதே குழுவைச் சேர்ந்ததாக இருக்கலாம். உதாரணமாக சட்டை துண்டு புடவை போன்றவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தாலும், அவை அனைத்தும் துணிகள் எனும் வகையினுள் அடங்குகின்றன. இவ்விதம் ஒரே குணாதிசயம் இருப்பின் அதை சாலக்ஷண்ய(सालक्षण्य) என அழைக்கிறோம். இங்கு காரணநிலையிலிருந்து வேறானது(அவ்யக்தாத் பர:) என கூறுவதிலிருந்து அது அனைத்திலிருந்தும் வேறானதாக ஆகிறது. எனினும் இங்கு சாலக்ஷண்யத்தின் சாத்தியத்தை நீக்கவேண்டியது அவசியமாகிறது. அதாவது லோகம் அல்லது தேவர்கள் உட்பட எந்தக் குழுவின் கீழும் ப்ரம்மத்தை வகைப்படுத்த முடியாது. இதை காட்டும் நோக்கில் பகவான், ‘அந்ய:எனும் சொல்லை, இது முற்றிலும் வேறானது என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார். இது நாம் பொதுவாக புரிந்து கொள்வதிலிருந்து மாறுபட்ட வகையில் முற்றிலும் வேறானது. இது இல்லாதது அல்ல; இது இந்த நொடி மட்டும் இருப்பதில்லை; இது இருக்கின்றது, அதே நேரத்தில் மற்ற எல்லாவற்றிலிருந்தும் வேறானதாக இருக்கின்றது. அது என்ன?

அது அவ்யக்த:, வெளித்தோற்றத்திற்கு வராதது, ஆகையால் இந்திரியங்களால் அறியப்படாதது. பகவான்பா4:என்று கூறியதிலிருந்து அதுஇருக்கிறதுஎன்பது விளங்குகிறது. ஆனால் அவ்யக்தம் எனும் சொல்லிருந்து புலன்களுக்கு எட்டாதது என்பதும் தெளிவாகின்றது. இதுவே புலன்களுக்கு மூலக்காரணமாக இருக்கிறதாகையால் இதை ஒலியாகவோ, உருவமாகவோ அல்லது வண்ணமாகவோ அறியமுடியாது.


=> அழியாதது:

ஸநாதந:எனில் என்றுமிருப்பது என்று பொருள். இது காரண-காரியத்திற்கு அப்பாற்பட்டது ஆகையால் காலத்தால் வரையறுக்கப்படாதது. இது முன்பு இருந்தது, இப்பொழுது இருக்கிறது, பின்னர் இருக்கும்; இது காலமற்றது. இதற்கு அப்பால் என எதுவுமில்லை; நாம் அடையக்கூடிய அல்லது கற்பனை செய்யக்கூடிய அனைத்தும் இந்த அவ்யக்தத்திற்குள் இருப்பவை. இது பார்ப்பவனின் சொரூபமாகவே இருப்பது, த்ருக் -சொரூப, இது பரம் ப்ரம்ம

காலத்திற்கு அப்பாற்பட்டது என்பதால் இது எப்பொழுதும் அழியாதது. எல்லா உயிர்களும் அழியும்போதும் அழியாததுஸர்வேஷு பூ4தேஷு நச்1யத்ஸு விநச்1யதி

ஒரு ஜீவனுக்கு மோக்ஷம் என்பது இங்கு சொல்லப்பட்ட இந்த அவ்யக்தத்தை அடையும்போதுதான் கிடைக்கிறது. அதுவரையில் பிரம்மாவின் ஆயுளே முடிந்தாலும், ஜீவனானவன் மாயை என்ற அவ்யக்தத்தில் ஒடுங்கினாலும், மீண்டும் மீண்டும் பிறந்து சம்சாரத்தை அனுபவிக்கிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.21|| இந்த அவ்யக்தமே பரமபதம் :

अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहु: परमां गतिम्

यं प्राप्य निवर्तन्ते तद्धाम परमं मम ।। २१ ।।

அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் 3திம்

யம் ப்ராப்ய நிவர்தந்தே தத்3தா4 பரமம் மம ।। 21 ।।


अव्यक्त:  அவ்யக்த:  அவ்யக்தம்    अक्षर அக்ஷர  அக்ஷரம்    इति उक्त:  இதி உக்த:  என்று சொல்லப்படுகிற    

तम्  தம்  அதை    परमां गतिम्  பரமாம் 3திம்  பரமகதி என்று    हु:  ஆஹு:  சொல்லுவர்   

यं प्राप्य  யம் ப்ராப்ய  எதை அடைந்து    निवर्तन्ते  நிவர்தந்தே  திரும்பி வருவதில்லையோ   

तत्  தத்  அது    मम  மம  என்னுடைய   परमं धाम  பரமம் தா4  பரமபதம்.    


அவ்யக்தம், அக்ஷரம் என்று சொல்லப்படுவதைப் பரமகதி என்று சொல்லுவர். எதை அடைந்து திரும்பி வருவதில்லையோ அது என்னுடைய பரமபதம்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.


விளக்கம்:

அவ்யக்தம் எனில் புலன்களுக்கு எட்டாதது எனப் பார்த்தோம். அக்ஷரம் எனில் அழியாதது

பரப்ரம்மம் எப்பொழுதுமே இந்திரியங்களுக்கு எட்டாததாகவும் அழியாததாகவும் இருக்கிறது. தோன்றாநிலையிலுள்ள பிரகிருதியும், அதாவது வெளித்தோற்றத்திற்கு வராத மாயையும் அவ்யக்தம் என்று சொல்லப்படுகிறது. பரப்ரம்மமும் அவ்யக்தம் என்று சொல்லப்படுகிறது என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். ஆனால் இரண்டிற்குமுள்ள பொருள் வேற்றுமையை கருத்தில் கொள்ள வேண்டும். பிரகிருதி க்ஷரம் அல்லது அழியும் தன்மையது. ப்ரம்மமோ அக்ஷரம். பிரகிருதியில் ஒடுங்குபவைகள் திரும்ப தோன்றுகின்றன. ப்ரம்மத்தில் ஒடுங்குபவைகள் திரும்பி வருவதில்லை. இந்த ப்ரம்மம், ஒருவனின் சுய சொரூபத்திலிருந்து, ஆத்மாவிலிருந்து வேறானதாக இல்லை. அழியக்கூடிய அனைத்து வடிவங்களிலும் இருப்பவனாக, உண்மையில் ஒருபோதும் அழிவடையாமல் ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக இருக்கும் அந்த பரப்ரம்மத்தை அடைதல் பரமகதி எனப்படுகிறது.


=> பரமகதி:

அவ்யக்த: அக்ஷர இதி உக்த: தம் ஆஹு: பரமாம் 3திம் அவ்யக்த-ஆத்மா அக்ஷர, அழியாதது. அது காலத்திற்குட்படாதது என்பதால் எவ்வித மாற்றத்தையும் அடையாதது. சாஸ்திரம் தெரிந்தவர்கள் அதையே பரமகதி எனக் கூறுகிறார்கள். நாம் வெற்றிகரமாக செய்துமுடிக்கும் எந்தவொரு சாதனையும், அல்லது சென்று சேரும் எந்தவொரு இடமும் 3தி, அதாவது முடிவு என்றழைக்கப்படும். விஷ்ணு-லோகம், பிரம்ம-லோகம் முதலியவைகள் சம்சாரி-ஜீவனின் கதி ஆகும். யார் இந்த லோகங்களுக்கெல்லாம் செல்ல விரும்புகிறானோ அவனின் சுயசொரூபமே, ஆத்மாவே, ப்ரம்மமே இங்கு உண்மையான கதி எனச் சொல்லப்படுகிறது.

இது எப்படி சாத்தியம்? நான் எப்படி எனக்கே கதி ஆக முடியும்? குழப்பத்தில் இருப்பவனுக்கு உண்மையைக் கண்டறிதலே முடிவு என்பதால், குழம்பிய ஜீவர்களுக்கு தன் சொரூபத்தின் மெய்ப்பொருளை அறிதலே கதி ஆகிறது. இதுவே மிக உயர்ந்த கதி(பரமா 3தி) என்றும் சொல்லப்படுகின்றது. மோக்ஷம் என்கிற இந்த பரமகதிக்கு இணையான முடிவு இல்லை. லோகம் என்கிற பெயரில் அடையப்படும் எந்தவொரு கதியும் மீண்டும் சம்சாரத்திற்கே இட்டுச் செல்லும். ஞானத்தின் மூலம் அடையப்பட்ட விவேகத்தை உபாயமாகக் கொண்டு அடையப்படும் அவ்யக்த-ஆத்மா எனும் கதியே அடையப்படுவதில் மேலானது.      


=> பரமபதம்:

இது ஏன் பரமகதி என்று அழைக்கப்படுகிறது? ஏனென்றால், இதை அடைந்து, அவர்கள் திரும்பி வருவதில்லையம் ப்ராப்ய நிவர்தந்தே. தன்னிலிருந்து வேறான ஒன்றை அடையும்போது திரும்பி வந்துதான் ஆகவேண்டும். ஆனால் இங்கு மோக்ஷம் என்பது தனது சுயசொரூபமாகவே இருப்பதால் அதை அடைந்தவன் திரும்பி வருவது இல்லை

அது என்னுடைய பரமபதம், எனது மேலான இருப்பிடம்மம பரமம் தா4, என்கிறார் பகவான். உண்மையில் ஆத்மாவே எனது உறைவிடம்(தா4) என்கிறார்; அதை அடைதலே மிக உயர்ந்த கதி(பரமா 3தி) ஆகும். பொதுவாக பரமகதி என்பது ஒரு இடத்தை அடைதல் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கலாம். சாஸ்திரமும்கூட சொர்க்கத்தை விருப்பத்திற்குரிய இடமாகப் பேசுகிறது. ஆனால் எந்தவொரு லோகமும் மறுபிறப்புடையவைகள் ஆதலால் பகவான் இங்கு சுயத்தை அடைதலே, அதாவது நீ உன்னை அடைதலே மேலான கதி என்கிறார். ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக விளங்கும் உன்னைத் தாண்டிய சொர்க்கம் என எதுவுமில்லை. அதுவே என்னுடைய மேலான உறைவிடம் என்கிறார். நான் உனது புத்தியில் வசிக்கிறேன்; ஞானத்தின் மூலமாக அந்த ஆத்மாவை அடைதலே என்னை அடைவதற்கான ஒரே வழி; அதுவே மோக்ஷம்; அதுவே பரமகதி; அதுவே பரமபதம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------