சனி, 2 ஜனவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.17 - 2.18

 ।।2.17।। ஆத்மா எல்லா இடத்திலும் இருப்பது(ஸர்வக3த: _सर्वगत:) [அனாத்மா ஒரு இடத்தில் மட்டும் இருப்பது]: 


अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।

विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ।। १७

அவினாசி1 து தத்3வித்3தி4 யேன ஸர்வமித3ம் ததம் ।

வினாச1மவ்யயஸ்யாஸ்ய ந கச்1சித்கர்துமர்ஹதி  ।। 17


येन  யேன  எதனால்   इदं सर्वम् இத3ம் ஸர்வம்  இவை அனைத்தும்(இவ்வுலகம்)  

ततम्   ததம்  வியாபிக்கப்பட்டுள்ளதோ   तत्   தத் அது   तु  து  உண்மையில்  

अविनाशि  அவினாசி1  அழியாதது  विद्धि  வித்3தி4  என அறிவாயாக   

अस्य अव्ययस्य  அஸ்ய அவ்யயஸ்ய  இந்த மாறாத்தன்மையுடையதற்கு   विनाशम्    வினாச1ம் நாசத்தை  

कश्चित्  கச்1சித் யாரும்   कर्तुं  கர்தும் செய்ய   अर्हति   அர்ஹதி  முடியாது.


இவ்வுலகெலாம் பரவிய அந்த தத்துவத்தை அழியாதது என அறிவாயாக. இந்த அழியாப்பொருளை அழிக்க யாருக்கும் அர்ஹதை கிடையாது. 


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இவ்வுலக முழுதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்றதென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.


விளக்கம்:

=> ஸத்-அஸத் ஸம்பந்தம்:

இங்கு ‘தத்’ அது என்பது, முன் ஸ்லோகத்தில்(2.16) சொல்லப்பட்ட உண்மையை அறிந்த ஞானிகளால் புரிந்துகொள்ளப்பட்ட அபாவமற்ற(இல்லாமையற்ற) ‘ஸத்’ - த்தை குறிக்கிறது. இந்த உலகம் முழுமையும் வியாபித்துள்ள ஸத்-ஆத்மா அழிவற்றது(அவினாசி1). மாற்றத்திற்குட்பட்டு அழியும் காரணத்தினால் இவ்வுலகம் அஸத்(மித்யா).

ஸத் என்பது அஸத்திலிருந்து வேறுபட்டதாகவும், அதே சமயத்தில் அஸத் ஸத்திலிருந்து வேறுபடாததாகவும் இருக்கிறது. அதாவது ஸத் -த்திற்கு வேறானதாக மித்யாவான அஸத்திற்கு இருப்பு கிடையாது. ஸத்-தை சார்ந்தே மித்யா உள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட பானையின் இருத்தல் களிமண்ணை சார்ந்து இருப்பதை போல. களிமண்ணை நீக்கிவிட்டால் அங்கு பானை என்ற ஒன்று இல்லை.

அதாவது மித்யா ஸத்-தை சார்ந்தும், ஆனால் ஸத் மித்யாவை சாராமலும்(independent) இருக்கிறது.  


=> மாறாத்தன்மையுடையது(அவ்யயம்):

       வ்யயம்(व्ययम्)- தேய்வு, செலவு, சீர்கேடு;

‘ஸத்’ அவ்யயம்; தேயாதது, அழியாதது. அனைத்தும் ஸத்-தினால் வ்யாபிக்கப்பட்டுள்ளதால் இதை அழிக்க, இதற்கு வேறான ஒன்று இல்லை. ஸத் வஸ்து ‘ஏகம் அத்3விதீயம் (एकम् अद्वितीयम्)-சாந்தோக்ய உபநிஷத்’— இரண்டாவதற்றதாக, ஒன்றாக இருப்பது. ஆகவே ஸத்-தை அழிக்க, தேய்வை உண்டுபண்ண இரண்டாவதான எதுவும் இங்கு இல்லை. ஆகவேதான் இங்கு கிருஷ்ணர், இதற்கு நாசத்தை செய்ய யாராலும் முடியாது என்கிறார். எவ்வளவு உயிரினங்கள், பொருட்கள், செயல்கள், சூழ்நிலைகள் இருந்த போதிலும் 

ஸத்-ஆத்மா இருமையற்றது; ஏகம். 

சங்கரர் தன்னுடைய உரையில், ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவை எல்லாம் வல்ல ஈஷ்வரனாலும் கூட அழிக்க முடியாது என்கிறார். ஏனெனில் ஈஷ்வரனே ஆத்மாவாக இருக்கிறார். 

ஆத்மா = ப்ரம்மன்; ஈஷ்வரா = ப்ரம்மன். ஆகவே, ஆத்மாவும் ஈஷ்வரனும் ஒரே ப்ரம்மன் தான். ஈஷ்வரனுக்கும் ஆத்மாவுக்குமிடையில் செய்பவன்-செய்யப்படும் பொருள் என்கிற சம்பந்தம்(कर्तृ-करण सम्बन्ध) இல்லை, இரண்டும் ஒன்றே. ஆனால் பக்தன் என்று எடுத்துக்கொண்டால், ஆத்மாவை உடல், மனம், உணர்வுடன் சேர்த்து அறிவதால், ‘கடவுள்-பக்தன்’ அல்லது ‘படைத்தவன்-படைக்கப்பட்டவன்’ என்ற சம்பந்தம் ஏற்படுகிறது. இங்கு ஈஷ்வரன் தனது பக்தர்களை அருளுதல், தண்டித்தல் மற்றும் அழித்தல் நடைபெறும்.

ஒருவன் தற்கொலை செய்து கொள்வதை போல், தனது ஒரு கையை கொண்டு மற்றொரு கையை வெட்டுவது போல், ஆத்மா தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமே என ஒருவன் வாதாடினால், ஆத்மா அங்கங்கள் அற்றது. தேயாதது(அவ்யயம்).


=> ஆகாசத்தில் சிறிதும் பெரிதுமாக தோன்றும் மேகங்கள், ஆகாசத்தை கூட்டவோ, குறைக்கவோ அல்லது பிளவுபடுத்துவோ முடியாது. அதுபோல சிதாகாசத்தில்(அறிவு வெளியில்) தோன்றி மறையும் இவ்வுலகத்தினால், சிதாகாசத்தை கூட்டவோ, தேய்க்கவோ இயலாது. அது அனைத்திற்கும் சாக்ஷியாக இருப்பது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யும் போது குருவானவர் பிரம்மம், மாயை என்பன இரண்டென்பதைச் சுட்டிக்காட்டத் தமது இரண்டு விரல்களை முதலில் நீட்டினார். பின்னர் ஒரு விரலை மடக்கிக் கொண்டு மாயை மறைந்ததும் பரபிரம்மத்தைத் தவிர வேறொன்றும் நிலைத்திருப்பதில்லை யென்பதைக் கற்பித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

।।2.18।। ஆத்மா கூடஸ்த நித்யம்(कूटस्थ नित्यम्); ஆத்மா அனுபவத்திற்கு வராதது(அப்ரமேயம் _अप्रमेयम्)[அனாத்மா அறியப்படுவது]


अन्तवन्त इमे देहा नित्यस्योक्ता: शरीरिण: ।

अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ।। १८

அந்தவந்த இமே தே3ஹா நித்யஸ்யோக்தா:  ச1ரீரிண: ।

அனாசி1நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்3யுத்4யஸ்வ பா4ரத ।। 18 


नित्यस्य   நித்யஸ்ய   என்றும் இருப்பதாய்  अनाशिन:   அனாசி1ன:  நாசமற்றதாய்   

अप्रमेयस्य  அப்ரமேயஸ்ய  அனுபவத்திற்கு வராததாய்; அளவிட முடியாததாய்   

शरीरिण:    1ரீரிண:  சரீரத்தை உடையவனுக்கு(ஆத்மாவுக்கு)   इमे   இமே  இந்த   देहा  தே3ஹா:  உடல்கள்   अन्तवन्त:  அந்தவந்த:  முடிவுடையவைகளாக   उक्ता:   உக்தா:  சொல்லப்படுகின்றது   

तस्मात्   தஸ்மாத்    ஆகவே   भारत   பா4ரத   பாரதா    युध्यस्व  யுத்4யஸ்வ   யுத்தம் செய். 


நித்யமாய், நாசமடையாததாய், அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் இவ்வுடல்கள் யாவும் அழியும் தன்மையுடையதாக சொல்லப்படுகிறது. ஆகவே பாரதா, யுத்தம் செய்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஆத்மா சாதன்; அழிவற்றான்; அளவிடத் தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால், பாரதா, போர் செய். 


விளக்கம்:

=> ஸ்தூல உடல் மித்யா:

மனித உடலை ஒரு கோணத்தில், எலும்புக் கூடு, தோல், சதை, இரத்தம், செல்கள், டி.என்.ஏ இவற்றின் சேர்க்கை எனலாம். இனியொரு கோணத்தில், புரதம், கொழுப்பு, நீர்சத்து, மாவுச்சத்து மற்றும் தாதுப்பொருட்களின் சேர்க்கை எனலாம். இவைகள் ஒவ்வொன்றும் இனியொன்றை சார்ந்துள்ளதால் இந்த ஸ்தூல உடல் மித்யா. வேதாந்தத்தின் பார்வையில் எடுத்துக்கொண்டாலும் உடலானது, பஞ்ச பூதங்களைச் சார்ந்துள்ளது. ஆகவே மித்யா. 

உடல் காரியம்(product). ஒரு காலத்தில் தோன்றி, மாற்றத்திற்கு உட்பட்டு, முடிவை அடைகிறது. இங்கு பகவான், தனது உடல் உட்பட, அவர்களின் முன் நின்றிருந்த அனைத்து உடல்களையும் சுட்டிக்காட்டி, ‘இந்த உடல்கள் முடிவுடையவைகள்(அந்தவந்த:)’ என்கிறார்.

இந்த உடல்கள் யாருடையது? ஸத்-வஸ்துவான ஆத்மாவே, இந்த உடலுக்கு இருத்தலையும், பிரக்ஞையையும் கொடுக்கிறது. ஆத்மாவின் அறிவு சொரூபத்தை சூக்ஷம உடல் ப்ரதிபிம்பிப்பதால், ஸ்தூல சரீரமும் உணர்வை அடைகிறது. ஆகவே சரீரம், அதில் வசித்துக்கொண்டிருக்கும் ஆத்மாவை சார்ந்தது.

இந்த ஸ்லோகத்தில் உடலைக் குறித்து 2 சொற்கள் உள்ளன-     இந்த உடல்கள் ( இமே தே3ஹா:) பன்மையிலும், சரீரத்தை உடையவன் ( 1ரீரிண:) ஒருமையிலும் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்திற்குட்பட்டு முடிவை அடையும் இந்த அனைத்து உடல்கள் பன்மையிலும், ஆனால் என்றுமுள்ள மாற்றமடையாத ஆத்மா ஒன்றுதான் என்பதை ஒருமையிலும் குறிப்பிடுகிறார்.

இங்கு ஒரே வரியில் பகவான், மூன்று மெய்மையை உணர்த்துகிறார்.

(1) உடல்கள் பலவாக இருப்பினும் ஆத்மா ஒன்று தான். (2) ஒவ்வொரு உடலிற்குப் பின்னும் இருக்கின்ற ஆத்மா முடிவற்றது. (3)ஆத்மா அழியாதது.


=> ஆத்மா தானாக விளங்குவது (ஸ்வத-ஸித்34: _स्वतःसिद्ध):

சங்கரர் தனது உரையில், வேதம் முதலிய ப்ரமாணங்களால் அறியப்பட, ஆத்மா அறியப்படும் பொருளாக இல்லை என்கிறார். பிறகு இதில் வேத சாஸ்திரங்களின் பங்கு தான் என்ன? நாம் ஏன் அதை கற்க வேண்டும்? ஆத்மாவைப் பற்றிய தவறான புரிதலை நீக்குவதாலேயே வேதம் ப்ரமாணமாகிறது.

உண்மையில் பரப்ரம்மமான ஆத்மா தானாக விளங்குவது(ஸ்வத-ஸித்34ம்). ஸ்வத-ஸித்த-ஆத்மாவின் இந்த சொரூபத்தை தவறாக ஜீவனாக, செயல் செய்பவனாக(கர்த்தா), இன்பத்தை அனுபவிப்பவனாக(போ4க்தா) புரிந்துகொண்டுள்ளோம். ஒவ்வொரு ஜீவனின் இந்த இயற்கையான முடிவு அறியாமையினால்(அவித்யா) ஏற்படுகிறது. இந்த அவித்யையினால், சுய அடையாளத்தை தவறாக ஜீவாத்மாவின் மீது ஏற்றிவைத்துளோம். இந்த குழப்பத்தையே சாஸ்திரம் நீக்குகிறது. அறியாமையினால் ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ள தவறான புரிதலை நீக்கும் திறன் கொண்டதாகையால் சாஸ்த்திரம் ப்ரமாணம் எனும் நிலையை அடைகிறது.

சாஸ்திரம் ஆத்மாவை அறியப்படும் பொருளாக கூறுவதில்லை. தானாக விளங்குவதான(அபரோக்ஷம்) இந்த ப்ரம்ம-ஆத்மாவினாலேயே மற்றவை அனைத்தும் விளங்கிக் கொண்டிருக்கின்றன என சங்கரர் சாஸ்திரத்தை மேற்கோள்காட்டுகிறார். இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ணர், அனைத்து உடல்களும் அழிவிற்குட்பட்டது என்றும், உடலை வசிப்பிடமாக கொண்ட ஆத்மாவை அழியாதது என்றும் குறிப்பிடுகிறார். ஏனெனில் ஆத்மா அறிபவன்; அறியப்படும் பொருள் அல்ல - அப்ரமேயம். அதாவது, அனைத்து அறியப்படும் பொருளும் அழிவிற்குட்பட்டது. அறியப்படும் பொருளாக இல்லாத காரணத்தினால் ஸ்வத-ஸித்த-ஆத்மா என்றுமிருப்பது(நித்யம்). காலத்தினால் வரையறுக்க இயலாத காரணத்தினால் அது அழியாதது(அனாசி1ன:)


=> மோக்ஷ-சாஸ்திரம்:

ஒருவேளை அர்ஜுனன், பீஷ்மரின் ஆத்மாவை அழிக்க நினைத்தால் அது இயலாது. அதுபோல, பீஷ்மரின் உடலை மரணமடையாமல் தடுக்க நினைத்தால் அதுவும் இயலாது. இங்கு க்ருஷ்ணர், ‘போர் புரி’ என அர்ஜுனனுக்கு ஆணையிடவில்லை. ஏற்கனவே போர் புரியும் பொருட்டே அர்ஜுனன் தனது முழு சேனையுடன் யுத்த களத்திற்கு வந்துள்ளான். அங்கு அவன் மோஹத்தினாலும் சோகத்தினாலும் செய்வதறியாது தவிக்கின்றான், சரணடைகின்றான். பகவான் இங்கு அவனது சோகத்தை நீக்கி, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய் என சொல்கிறார். ஒருவனது கடமை எதுவோ, தர்மம் எதுவோ அதைச் செய்ய சொல்கிறார். போர் புரியச் சொல்வதால், கீதா சாஸ்திரத்தை கர்ம காண்டத்தை போல பல்வேறு சடங்குகளையும் அதன் பலன்களையும் கூறும் ப்ரவ்ருத்தி-சாஸ்திரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அர்ஜுனனின், சோகத்தின் மூலக்காரணமாக விளங்கிய அறியாமையை நீக்குவதால் இது நிவ்ருத்தி-சாஸ்திரம், மோக்ஷ-சாஸ்திரம்.


=> கடமையை செய்வதன் பலன்:

கடமை(ஸ்வதர்மம்) —> மனத்தூய்மை —> ஆத்மாவை பற்றிய ஞானத்திற்குத் தகுதி —> ஆத்ம ஞானம் —> மோக்ஷம்.

-------------------------------------------------------------------------------------