சனி, 28 நவம்பர், 2020

ஸாங்கிய யோகம் 2.3 - 2.4

||2.3||

क्लैब्यं मा स्म गम: पार्थ नैतत्त्वय्युपपद्यते

     क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ।। ।।


க்லைப்3யம் மா ஸ்ம 3: பார்த்த நைதத்த்வய்யுபபத்3யதே

      க்ஷுத்3ரம்ஹ்ருத3யதெளர்பல்யம் த்யக்த்வோதிஷ்ட பரந்தப ।। 3 ।।


पार्थ  பார்த்த  பார்த்தா    क्लैब्यं  க்லைப்3யம்  அலியின் தன்மையை    मा स्म गम:  மா ஸ்ம 3:  அடையாதே    एतत्  ஏதத்  இது    त्वयि த்வயி  உன்னிடத்தில்    उपपद्यते  உபபத்3யதே  பொருந்தாது    परन्तप  பரந்தப  எதிரியை வாட்டுபவனே    क्षुद्रं  க்ஷுத்3ரம்  இழிவான    हृदयदौर्बल्यं ஹ்ருத3யதெளர்பல்யம்  உள்ளத் தளர்வை    त्यक्त्वा  த்யக்த்வா துறந்துவிட்டு    उत्तिष्ठ  உத்திஷ்ட  எழுந்திரு.


ஹே பார்த்த! அலியின் தன்மையை அடையாதே. உன்னிடத்தில் இது பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, மனதின் பலஹீனத்தை விட்டுவிட்டு எழுந்திரு.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பார்த்தா பேடித்தன்மை அடையாதே! இது நினக்குப் பொருந்தாதுஇழிபட்ட மனத்தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரை சுடுவோனே!


விளக்கம்: 

ஆண்மையை இழந்து பேதைப்போல் நடந்துகொள்பவன் அலி ஆகின்றான். அர்ஜுனன் பெற்ற பண்பும் பயிற்சியும் அப்படிப்பட்டவைகள் அல்ல. மகாதேவனோடு போர்புரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகுதூரம். இங்கு பகவான், ‘அர்ஜுனா, உனது மனத்தளர்ச்சியை துறந்து விடுஎன பண்பாக கூறினாலும்எதிரிகளை வாட்டுபவன்(பரந்தப)’ என சொல்வதன் மூலம் அர்ஜுனன் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை நினைவுபடுத்திஎழுந்திரு(உத்திஷ்ட)’ என ஒருவிதத்தில் ஆணையிடுகிறார்.

ப்ரக்ருதி புருஷதத்துவத்தில், ப்ரக்ருதியை சார்ந்திதுக்குமளவு ஒருவன் அலியாகின்றான். புருஷதத்துவத்தை பற்றுமளவு ஆண்மை வளர்கிறது. வலிவும் ஆத்ம போதமும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இங்கு பகவான் பலவீனத்தை அடியோடு நிராகரிக்கிறார். नायमात्मा बलहीनेन लभ्य: இந்த ஆத்மா பலஹீனனால் அடையப்படுவதன்று - என்னும் உபநிஷத் வாக்கியம் பகவானது போதனைக்கு மூலமந்திரமாகிறது. உடல் வலிவு, உள்ளத்தில் உறுதி, ஆத்மசக்தி ஆகியவைகள் பலத்தின் வெவ்வேறு வடிவங்கள்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பாலில் ஊறவைத்த நெற்பொரிபோன்று வழ வழ கொள கொளவென்று இருப்பவன் வாழ்க்கையில் எதற்கும் உதவான். உறுதிப்பாடே வடிவெடுத்திருப்பவன் வீரன். அவன் எதையும் சாதிக்க முடியும்.

----------------------------------------------------------------------------------

||2.4||

अर्जुन उवाच

कथं भीष्ममहं सङ्खये द्रोणं मधुसूदन

          इषुभि: प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन ।। ।।

அர்ஜுன உவாச

கத2ம் பீ4ஷ்மமஹம் ஸ்ங்க்2யே த்2ரோணம் மது4ஸூத3

இஷுபி4: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூத3  ।। 4 ।।


अरिसूदन  அரிஸூத3  பகைவரைக் கொல்பவரே  

मधुसूदन  மது4ஸூத3  மது என்ற அரக்கனைக் கொன்றவரே   

अहं  அஹம்  நான்   सङ्खये  ஸங்க்2யே  யுத்தத்தில்   पूजार्हौ  பூஜார்ஹெள பூஜிக்கத்தக்க   

भीष्मम् பீ4ஷ்மம்  பீஷ்மரையும்     द्रोणं च  த்2ரோணம்   துரோணரையும்     इषुभि:  இஷுபி4:  பாணங்களால்   कथं  கத2ம்  எப்படி  प्रतियोत्स्यामि   ப்ரதியோத்ஸ்யாமி   எதிர்த்துப் போர்புரிவேன்


பகைவரைக் கொல்பவரே! மதுவைக் கொன்றவரே! பூஜைக்குரிய பீஷ்மரையும் துரோணரையும் எப்படி இந்த யுத்தத்தில் பாணங்களால் எதிர்த்துப் போர்புரிவேன்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

அர்ஜுனன் சொல்கிறான்

மதுசூதனா! பீஷ்மனையும், துரோணணனையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியர். பகைவரை யழிப்போய்!


விளக்கம்: 

அர்ஜுனன் கண்ணனை மதுசூதனா அரிசூதனா என அழைப்பதிலிருந்து, ‘நீங்கள் அரக்கர்களையும் பகைவர்களையும் அழித்துள்ளீர்கள், ஆனால் நானோ போற்றுதற்குரிய குருமார்களை எதிர்த்து போர் புரியுமிடத்தில் நின்று கொண்டுள்ளேன்என்பதை சுட்டிக் காட்டுகிறான். அர்ஜுனனின் வில்வித்தை ஆசான் துரோணரையும், பாட்டனாரான மதிப்பிற்குரிய பீஷ்மரையும் எதிர்த்து விவாதம் செய்வதே தகாது. அத்தகையவர்களை போரில் எதிர்த்து வில்லெடுத்து அடிக்க துணிவு எப்படி உண்டாகும்




----------------------------------------------------------------------------------