திங்கள், 3 மே, 2021

கர்மயோகம் 3.10 - 3.12

 ||3.10|| இறைவன் வகுத்துக் கொடுத்த வாழ்க்கை முறை:

सहयज्ञा: प्रजा: सृष्ट्वा पुरोवाच प्रजापति:

अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक् ।। १० ।। 

ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:

அநேந ப்ரஸவிஷ்யத்4வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமது4க் ।। 10 ।।


पुरा    புரா  ஆதியில்(சிருஷ்டியின் துவக்கத்தில்)   प्रजापति:   ப்ரஜாபதி:   பிரஜாபதியானவர்   

सहयज्ञा: ஸஹயஜ்ஞா:  யக்ஞத்தோடுகூட/கர்மயோக வாழ்க்கை முறையோடு   

प्रजा:  ப்ரஜா:  பிரஜைகளை   सृष्ट्वा   ஸ்ருஷ்ட்வா  படைத்து    अनेन   அநேந   இதனால்    

प्रसविष्यध्वम्    ப்ரஸவிஷ்யத்4வம்  விருத்தியடையுங்கள்   एष:  ஏஷ:   இது   :  :  உங்களுக்கு    

इष्ट-कामधुक्   இஷ்ட-காமது4க்   இஷ்டமானதை கொடுப்பதாக[காமதேனுவாக]   

अस्तु   அஸ்து    இருக்கட்டும்   उवाच  உவாச    சொன்னார்.


சிருஷ்டியின் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே மனிதர்களைப் படைத்து, “இதனால் விருத்தியடையுங்கள்; இது உங்களுக்கு காமதேனு ஆகட்டும்என்றார்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.


விளக்கம்:

=> (1) யக்ஞம் = வேள்வி எனில்,

சிருஷ்டி கர்த்தாவான, அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் பிரம்மதேவர் இங்கு ப்ரஜாபதி என்று அழைக்கப்படுகிறார். ‘ஆதியில் பிரம்மதேவர் கூறினார்எனும் இந்த வாக்கியம் வேதத்தைக் குறிக்கிறது. வேதம் எனும் அறிவு, மனிதனால் எழுதப்பட்டது அல்ல. அது பண்டைய ரிஷிகளுக்கு இறைவனால் வெளிக்காட்டப்பட்டதாக பார்க்கப்படுகிறது. தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு வழிகாட்டியாக வேதம் கொடுக்கப்பட்டது. அதில் அவர் யக்ஞங்களை உருவாக்கி, ஒவ்வொருவரையும் அவரின் சூழ்நிலைக்கு ஏற்றார் போல்  இச் சடங்குகளைச் செய்யுமாறு கட்டளையிட்டார்.

=> வாழ்வின் எல்லா கால கட்டத்திற்குமான வேத சடங்குகள்:

அக்காலத்தில் பல வைதிக சம்பிரதாயங்கள், திருமணம் முடித்த ஒருவன்(பதி_पति) தன் மனைவியுடன்(பத்னி_पत्नि) சேர்ந்து செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கும். வேள்விகளைச் செய்வது கணவனாக இருந்தாலும் அதற்கு மனைவியின் ஒப்புதல் அவசியம். ஆகவேதான் பெண்ணுடன் கைகோர்த்து தனது வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் திருமண நிகழ்வு, யாகம் வளர்த்து சமயச் சடங்காக செய்யப்படுகிறது. மேலும் தாயின் கருவிலுள்ள குழந்தையின் பாதுகாப்பிற்காகவும் நன்மைக்காகவும் செய்யப்படும் சடங்கு முதல் குழந்தை பிறந்தவுடன் செய்வது, பெயர் சூட்டும்நாம-கரணசடங்கு, காது குத்தும் சடங்கு என திருமண வயது வரை இவை தொடர்கின்றன. வேத கால நோக்கில் கூறினால் குழந்தை சடங்குகளுடன் பிறந்து சம்பிரதாயங்களினால் பேணப்படுகிறது. விடியலில் தொடங்கி, மதியம், சூரிய அஸ்தமனம் என தினந்தோறும் செய்தாக வேண்டிய ஹோமங்களும் உள்ளன. அதன் பின்னர் கிரஹஸ்தத்தில் செய்யப்பட வேண்டிய யக்ஞங்கள் என சமய வாழ்க்கைக்கு அர்ப்பணித்த வைதிகர்களுடைய வாழ்க்கையே யக்ஞ சொரூபம். இதையே பகவான் இந்த சுலோகத்தில் சிருஷ்டி துவக்கத்தில் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்தார்(புரா ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா) என கூறுகிறார்.

ப்ரஸவஎன்பது வளர்தலை, விருத்தியடைவதைக் குறிக்கிறது. முதலில் அஹம், நான் என்பதில் வாழ்க்கை தொடங்குகிறது. பிறகு யக்ஞத்தை பிரதானமாகக் கொண்டு மணம் முடித்து இரண்டாக மாறி, அங்கிருந்து மூன்று நான்கு என விருத்தியடைகிறது. இவ்விதத்தில் வேதத்தில் யக்ஞங்களைக் கொடுத்து, “இந்த யக்ஞத்தினால் விருத்தியடையுங்கள். இது உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யும் காமதேனு பசுவாக இருக்கட்டும்என்று கூறினார்.

=> விரும்பியதைக் கொடுக்கும் காமதேனு:

இங்கு பகவானால் குறிப்பிடப்படும் காமதேனு பசு வசிஷ்ட முனிவரிடம் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட வந்த மன்னர் விஸ்வாமித்ரர், பசியுடன் கூடிய தனது படைப் பரிவாரங்களுடன் வசிஷ்டரின் குடிசையைக் கண்டார். அங்கு சென்ற மன்னரை வரவேற்ற வசிஷ்டர், அனைவருக்கும் கணநேரத்தில் விருந்தளித்தார். இது எப்படி சாத்தியம் என வியந்த அரசர், அங்கிருந்த காமதேனு பசு மூலமே இத்தகைய இனிய விருந்தை முனிவரால் தர முடிந்தது என்பதைத் தெரிந்து கொண்டார்.   

அந்த தெய்வீக பசுவை தனக்கு தருமாறு அரசர் கேட்டார். அப்போது வசிஷ்டர் அவரிடம், ‘நான் பசுவைக் கொடுத்தாலும் இது க்ஷத்திரியரான உங்களுக்கு எந்த பலனையும் கொடுக்காது. ஏனெனில் இது பிரம்மரிஷிகளுக்கு மட்டுமே அற்புதத்தை நிகழ்த்தக் கூடியதுஎன்றார். பிரம்மரிஷி, அதாவது பிரம்ம ஞானத்தை அறிந்தவன், அனைத்தையும் அடைந்தவனாகிறான் என்ற கருத்தை இக்கதை உருவகப்படுத்துகிறது. வசிஷ்டரிடம் இருந்த பிரம்ம ஞானம் விஸ்வாமித்ரரிடம் இல்லை. விருப்பத்தை நிறைவேற்றும் வசிஷ்டரின் இந்த காமதேனு பசு ஞானத்தை குறிக்கிறது. எங்கும் வ்யாபித்து, எல்லாமாகவும் விளங்கும் ப்ரம்மத்தை ஆத்மாவாக அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகிறான்; அடைந்தவனாகிறான். ஆகவே இங்கு கிருஷ்ணர்  கூறுகிறார்ப்ரம்ம ஞானமே காமதேனுவாக ஆகட்டும்; அனைத்து விருப்பத்தையும் அது நிறைவேற்றட்டும்.

=> (2) யக்ஞம் = கர்மயோகம் எனில்,

முன் ஸ்லோகத்தில்(3.10) யக்ஞத்தை இறைவனுக்காக செய்யப்படும் கர்மம் என பார்த்தோம். தியாகம் செய்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பலனில் பற்றில்லாது இறைவன் பொருட்டு செய்யும் செயல், கர்மயோகம் ஆகிறது. யக்ஞ: - யாகத்தின் மூலம் விட்டுக் கொடுத்தல், பகிர்தல்

கர்மயோக வாழ்க்கை முறையுடன் வாழலாம் என்ற அறிவுடன்(யஜ்ஞா: ஸஹ) சிருஷ்டியின் துவக்கத்தில்(புரா) மனிதர்களைப் படைத்து(ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா), ‘இந்த கர்மயோக வாழ்க்கையின் மூலம் மேன்மையடையுங்கள்(அநேந ப்ரஸவிஷ்யத்4வம்). இந்த வாழ்க்கைமுறை உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுப்பதாகட்டும்(ஏஷ: : இஷ்ட-காமது4க் அஸ்து)’ என்றார் பிரஜாபதி(ப்ரஜாபதி: உவாச).

* கர்மயோக வாழ்க்கையின் மூலம் ஞானயோகத்திற்கு செல்லுதல் எனும் மேன்மை கிடைக்கிறது. ஞான யோகத்தின் மூலம் ஆத்ம ஞானத்தை அடைந்து அவன் அனைத்து விருப்பத்தையும் அடைந்தவனாகிறான்

----------------------------------------------------------------------------------------------------------------------

||3.11|| எப்படி யக்ஞம் நமக்கு வேண்டியதைக் கொடுக்கிறது:

देवान्भावयतानेन ते देवा भावयन्तु :  

परस्परं भावयन्त: श्रेय: परमवाप्स्यथ ।। ११ ।। 

தே3வாந்பா4வயதாநேந தே தே3வா பா4வயந்து :  

பரஸ்பரம் பா4வயந்த: ச்1ரேய: பரமவாப்ஸ்யத2 ।। 11 ।।


अनेन   அநேந  இந்த யக்ஞத்தால்/ இந்த கர்மயோகத்தால் देवान्   தே3வாந்  தேவர்களை   

भावयत    பா4வயந்த  வளரச்செய்யுங்கள்/வழிபடுங்கள்   ते देवा:  தே தே3வா:  அந்த தேவர்கள்   

:  :   உங்களை   भावयन्तु   பா4வயந்து   வளர்க்கட்டும்/அணுகிரஹம் செய்யட்டும்   

परस्परं भावयन्तபரஸ்பரம் பா4வயந்த:   ஒருவரையொருவர் வளர்த்து/நன்மை செய்து   

श्रेय:   ச்1ரேய:   நன்மையை   अवाप्स्यथ   அவாப்ஸ்யத2  அடைகிறவர்களாவீர்கள்.


இதனால் தேவர்களைப் பேணுங்கள், தேவர்கள் உங்களைப் பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.


விளக்கம்:

யக்ஞத்தின் மூலமாக அனைவரும் வளருங்கள் என முந்தய சுலோகத்தில் கூறியதை விரிக்கிறார் பகவான். அதாவது வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்களினால் ஈஷ்வரனின் அம்சங்களான தேவதைகள் எவ்விதத்தில் திருப்திபடுத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்.   

சூரியன் உலகிற்கு கிடைத்த ஒரு ஆசிர்வாதம் என்பதில் ஐயமில்லை. இம்மண்ணில் வாழும் ஒவ்வொரு உயிரும் சூரிய ஒளியினால் போஷிக்கப்படுபவைகளே. இந்த ஜடமான அக்னிப் பந்தை தெய்வம் என கூற முடியாது. ஆனால் சூரியனை, எங்கும் நிறைந்திருக்கும் கடவுளின் அங்கமாக பார்க்கும் போது அது தேவதையாகிறது. இது போலவே நீர், வருண தேவதையாக; காற்று, வாயு தேவனாக; நெருப்பு, அக்னி தேவனாக பார்க்கப்படுகிறது. இவ்விதத்திலேயே நம்மைச் சுற்றியுள்ள பூமி, ஆகாசம் என அனைத்தும் ஏன் காலமும் கூட நமக்கு ஆசி வழங்கும் தேவதையாக பார்க்கப்படுகிறது. இயற்கை சூழலை, சூழியலை மதித்தல் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட பார்வை. அது அவனுடைய உணர்வுத்திறனை பொறுத்தது. அண்ட சக்திகளை இறைவனின் அங்கமாக கிரஹித்தல் இன்னும் சூக்ஷமமானதாகப் பார்க்கப்படுகிறது

நம் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக விளங்கும் இந்த பஞ்ச பூதத்திற்கும், சூரிய சந்திரனுக்கும் நம் மதிப்பையும், நன்றியையும் வழிபடுதல் வாயிலாக காட்டுகிறோம். நீரைப் படையலாக கொடுத்து பேணப்பட்ட மாமரம் ஒருவனுக்கு மாங்கனியைத் தருகிறது. இதுபோல வேள்வி, யாகம், படையல் என வழிபாட்டுமுறை வேறுபடலாம். மழை, உணவுப் பயிர்கள், உடல் ஆரோக்கியம், வலிமை, மனத் தூய்மை போன்ற பலன்களை இத் தேவதைகள் கொடுத்து, பரஸ்பரம் பேணுதல் நடைபெறட்டும் என்கிறார் பகவான்

=> தேவர்கள் = இந்திரியங்கள்,

சரீரத்திலுள்ள புலன்களுக்கு தேவர்கள் என்ற பெயர் உண்டு. சில நாட்கள் உடலுக்கு உணவு கொடுக்காமல் இருந்தால் புலன்கள் தங்களது சக்தியை இழந்து பலகீனமடைகின்றன. மறுபடியும் உணவு கொடுக்கும் போது அவைகள் தத்தம் வேலைகளில் செவ்வனே ஈடுபடுகின்றன. புலன்கள் ஒழுங்காக வேலை செய்யும் போது வாழ்க்கை இனிதே நடைபெறுகிறது. இப்படி உடல் வாழ்பவர் இந்திரியங்களைப் பேண, இந்திரியங்கள் அவர்களைப் பேண பரஸ்பரம் உதவியால் நன்மை வந்தடைகிறது

=> தேவர்கள் = மேலோர்,

மேதக்க செயலில் ஈடுபடும் சான்றோர்க்கு தேவர் என்று பெயர். கைம்மாறு கருதாமல் இவர்களுக்கு துணைபுரிகின்றவளவு இச்சான்றோரின் சகாயம் கிடைக்கும். சமூகத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்கு தேவையானதை சமூகத்தார் எடுத்து வழங்குவதை கண்கூடாகப் பார்க்கலாம்

=> தேவர்கள் = இயற்கை/தேவதைகள், யக்ஞம் = கர்மயோகம்

கர்மயோகத்தினால்(அநேந) தேவர்களை வழிபடுங்கள், இயற்கையை போற்றுங்கள்(தே3வாந் பா4வயந்த). தேவர்கள் உங்களுக்கு இயற்கையின் மூலமாக அணுகிரஹம் செய்யட்டும்(தே தே3வா: பா4வயந்து). தெய்வத்தை முழுமனதோடு ஆராதித்தால் அத்தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம்மனிதனை வந்தடைகின்றன. பிறர்க்கு மனிதன் எதை எடுத்து வழங்குகிறானோ அதையே இயற்கையானது எடுத்து பன்மடங்கு அதிகமாக அவனுக்கு வழங்குகிறது. இப்படிப் பரஸ்பரம் பேணுதல் என்ற யாகத்தால் எல்லோர்க்கும் நன்மையே வந்தமைகிறது.

* धर्मो रक्षति रक्षित:_ தர்மோ ரக்ஷதி ரக்ஷித: => நம்மால் காப்பாற்றப்பட்ட தர்மம் நம்மைக் காப்பாற்றும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||3.12|| பிறரைப் பேணாதார் யார்?

इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविता:

तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव : ।। १२ ।। 

இஷ்டான் போ4கா3ந் ஹி வோ தே3வா தா3ஸ்யந்தே யஜ்ஞபா4விதா:

தைர்த3த்தாநப்ரதா3யைப்4யோ யோ பு4ங்க்தே ஸ்தேந ஏவ : ।। 12 ।।


यज्ञभाविता:   யஜ்ஞபா4விதா:   யக்ஞத்தினால் பேணப் பெற்ற   देवा:   தே3வா:  தேவர்கள்   

इष्टान् भोगान्   இஷ்டான் போ4கா3ந்  விரும்பிய போகங்களை  :   :  உங்களுக்கு   

दास्यन्ते   தா3ஸ்யந்தே  கொடுப்பார்கள்  हि   ஹி  அங்ஙனம்   तै: दत्तान्   தை:  3த்தாந்  அவர்களால் கொடுக்கப்பட்டதை   एभ्य:  ஏப்4:  இந்த தேவதைகளின் பொருட்டு  अप्रदाय  அப்ரதா3  அளிக்காது, கைம்மாறு செய்யாது   :  :  யார்   भुङ्क्ते   பு4ங்க்தே  அனுபவிக்கின்றானோ    :   :  அவன்   

स्तेन: एव   ஸ்தேந: ஏவ   திருடனேயாவான்.


யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு விரும்பிய போகங்களைக் கொடுப்பார்கள். அங்ஙனம் அவர்களால் கொடுக்கப்பட்டதை அவர்களுக்குக் கைம்மாறு அளிக்காது நுகர்பவன் திருடனேயாவான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

  வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.


விளக்கம்:

=> அங்கீகாரமும் நன்றி தெரிவித்தலுமே யக்ஞம்:

இங்கு பகவான், இறைவனுக்கென எதையும் வழங்காமல், அவரால் பலனாக கொடுக்கப்பட்டதை நுகர்பவன் திருடன் என்கிறார். பிறருக்கு சொந்தமானதை எடுத்துக் கொண்டு பதிலுக்கு எதையும் கொடுக்காமல் ஓடி ஒழிபவன் திருடன். கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பதுங்குபவன் ஏமாற்றுக்காரனாகிறான். ஈஷ்வரனின் அம்சமாக விளங்கும் பிரபஞ்சத்திடமிருந்து நாம் உயிர் வாழத் தேவையான நீர், காற்று, உணவு போன்றவற்றை தொடர்ந்து பெறுகிறோம். இதற்கான நம் மதிப்பையும் நன்றியையும் தெரிவிப்பதே நுண்ணிய வாழ்க்கை தரத்தை குறிக்கும். தேவர்களாகப் பார்க்கப்படும் இந்த சக்திகளுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை; நாம் எதையும் கொடுக்காவிடினும் அவைகள் தத்தம் கடமைகளைச் செய்யும். ஆனால் பெற்றுக் கொண்ட பொருளுக்கு பதிலாக ஒன்றைத் திருப்பி கொடுப்பது, குறைந்தபட்சம் நன்றியையும் மதிப்பையும் காட்டுவது ஒருவன் வாழும் வாழ்க்கையின் ஆழத்தை, நுண்ணுணர்வை பிரதிபிம்பிக்கிறது. ஆகவே இத்தேவர்களுக்கு நமது நன்றியை யக்ஞத்தின் வாயிலாக சமர்ப்பிக்கிறோம். இந்த ஆழமான நன்றியுணர்வு மனத்தூய்மைக்கு வித்தாகிறது. அனைத்தையும் இறைவனாக பார்ப்பவன் ராகத்வேஷத்தின் பிடியிலிருந்து விரைவில் விடுபடுகிறான். இவ்விதம் வேதத்தில் கூறப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி தர்ம வாழ்க்கை வாழ்பவன், அந்தகரண சுத்தியுடன் விரும்பிய போகங்களை அனுபவிக்கிறான். எதையும் திருப்பிச் செய்யாது எடுத்துக் கொள்வதில் மட்டும் குறியாயிருப்பவன் திருடனேயாவான்

=> பிறரைப் பேணாதார் யார்?

உலகில் பிறந்தது முதல் ஒருவன் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளும் பிறர் செய்த யாகத்தின் பயனாகும். பிறந்த குழந்தையை பாதுகாப்புடன் பேணுதல் பெற்றோரின் யாகம். இளைஞனாக அவன் பெறும் கல்வி, ஆசிரியர்களின் யாகம். உண்ண உணவு, குடியிருக்க வீடு, பிரயாண வசதிகள், விதவிதமான இன்ப நுகர்ச்சிகள் யாவும் மற்றவர்கள் செய்த யக்ஞத்தின் பயனே. இனி, தன்னுடைய வாழ்க்கை உலகுக்கு எப்படிப் பயன்படுகிறது என்பதை சிந்தித்து, செய்கின்ற செயல் பிறருக்கு பயன்படும்படி விரிக்குமளவு அது வேள்வியாக வடிவெடுக்கிறது. அதிகம் பெற்று, சிறிது வழங்கியவன் கடன்பட்டவனாகிறான். உலகுக்கென எதையும் செய்யாது உலகத்திலிருந்து எல்லாம் தனக்காகவென்று ஏற்றுக் கொள்ளுதலிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பவன் திருடனாகிறான்

=> ஆசை :

நாம் விரும்பும் போகங்களை அடைவதற்காக செய்யப்படும் காம்ய கர்மத்திலும் கூட பின்வரும் இரண்டு பாவனைகள் இருக்க வேண்டும்

1. பிரசாத புத்தி

2. பகிர்ந்து அனுபவித்தல்

=> ஆசையை நீக்க மூன்று படிகள்:

1. தர்மமில்லாத ஆசைகளை விடுதல்

2. தர்மத்திற்குட்பட்ட ஆசையை முறையாக ஒழுங்குப்படுத்துதல்

3. முறைப்படுத்தப்பட்ட ஆசையை பந்தப்படுத்தாத ஆசையாக மாற்றுதல்.

----------------------------------------------------------------------------