வெள்ளி, 30 டிசம்பர், 2022

தியான யோகம் 6.39 - 6.41

||6.39|| தனது சந்தேகத்தை நீக்குமாறு அர்ஜுனனின் கோரிக்கை:

एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशेषत:

त्वदन्य: संशयस्यास्य छेत्ता ह्युपपद्यते ।। ३९ ।।

ஏதந்மே ஸம்ச1யம் க்ருஷ்ண சே2த்துமர்ஹஸ்யசே1ஷத:  

த்வத3ந்ய: ஸம்ச1யஸ்யாஸ்ய சே2த்தா ஹ்யுபபத்3யதே ।। 39 ।।


कृष्ण  க்ருஷ்ண  கிருஷ்ணா   मे  மே  என்னுடைய   एतत्  ஏதத்  இந்த   संशयं  ஸம்ச1யம்  சந்தேகம்   

अशेषत:  அசே1ஷத:   மிச்சமில்லாமல்    छेत्तुम्   சே2த்தும்  அறுக்க   अर्हसि  அர்ஹஸி  தகுந்தவர் ஆவீர்   

त्वत् अन्य:  த்வத் அந்ய:  உம்மை விட வேறு ஒருவர்  अस्य संशयस्य  அஸ்ய ஸம்ச1யஸ்ய  சந்தேகத்தை   

छेत्ता  சே2த்தா  சிதைப்பவர்   हि उपपद्यते   ஹி உபபத்3யதே  இல்லவே இல்லை.  


கிருஷ்ணா, நீங்களே எனது இந்த சந்தேகத்தை அறவே அறுக்க தகுந்தவர். உங்களையன்றி இந்த ஐயத்தை நீக்குபவர் வேறு யாருமில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.


விளக்கம்:

தேவர்கள், ரிஷிகள் ஆகிய மேலோர் யாரும் இந்த ஐயத்தை நீக்குதலில் உங்களுக்கு நிகராக மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் சர்வக்ஞனான ஈஷ்வரன். ஆகவே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் என அர்ஜுனன் கேட்கிறான்.


=> அனைத்தும் அறிந்தவர்:

சர்வக்ஞனான ஈஷ்வரனாக கிருஷ்ணர் இருப்பதால், தனது இந்த கேள்விக்கு பகவானைத் தவிர வேறு யாரும் பதில் சொல்ல முடியாது என அர்ஜுனன் நினைக்கிறான். ஏனெனில், ஆத்மஞானத்தை அடையாத சந்யாசி இறந்த பின்னர், அவனுக்கு என்ன கதி நேரும் என்பது ஈஷ்வரனுக்கு மட்டுமே தெரியும்.

சே2த்தாஎனில் வெட்டுபவன் அல்லது அகற்றுபவன். இங்கு ஐயத்தை அகற்றுபவரைக் குறிக்கிறது. கிருஷ்ணர் ஒருவரே அர்ஜுனனின் சந்தேகங்களை முற்றாகப் போக்க வல்லவர். வேறு யாராக இருந்தாலும், ‘சாஸ்திரம் இப்படித்தான் சொல்கிறதுஎன்றுதான் கூற முடியும். ஆனால் நான்காவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கூறியதுபோல சாஸ்திரத்தையே துவக்கியவர் கிருஷ்ணர். ‘நான் இந்த அழியாத யோகத்தை விவஸ்வானுக்கு பகர்ந்தேன், அதை அவர் மனுவுக்கு உரைத்தார்இமம் விவஸ்வதே யோக3ம் ப்ரோக்தவாந் அஹம் அவ்யயம் விவஸ்வாந் மநவே ப்ராஹ’. எனவே, ஈஷ்வரனாகிய கிருஷ்ணருக்கு அது என்னவென்று தெரியும். மேலும் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் முன்பே பல பிறவிகள் முடிந்துவிட்டன; இந்த பிறப்புகள் அனைத்தும் அவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் அர்ஜுனனுக்கு தெரியாது என சுலோகம் 4.5-ல் பகவான் கூறியிருந்தார்.

இதிலிருந்து, மரணத்திற்குப் பிறகு ஒரு ஆன்மாவுக்கு என்ன நடக்கும் என்பது கிருஷ்ணருக்குத் தெரியும், ஆகவே அதைப் பற்றி பேசுவதற்கு சரியான நபர் அவரே என்று அர்ஜுனன் உறுதியாக நினைக்கிறான். மேலும் அர்ஜுனன் இங்கே தன் குருவைப் புகழ்ந்து பேசுகிறான், கிருஷ்ணருக்கு நிகராக இங்கு எவரும் இல்லை, தன் சந்தேகத்தை முற்றாக நீக்கக்கூடியவர் அவர் ஒருவரே. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவனுடைய கேள்விக்கு பதிலளிக்க வேறு யாருக்கும் இங்கு தகுதி இல்லை என்பது அர்ஜுனனின் எண்ணமாக இருந்தது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

அவதார புருஷரால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை. ஜீவனையும் ஆத்மாவையும் பற்றிய சூக்ஷமமான பிரச்சினைகளையெல்லாம் அவர் வெகு சுலபமாகத் தீர்த்துவிடுகிறார். அவருடைய போதனைகளை ஒரு சிறு குழந்தைகூடத் தெரிந்துகொள்ளும். அவர் கற்பகோடி காலங்களாகச் சேர்ந்துள்ள அக்ஞானத்தை அகற்றும் ஒளியையுடைய திவ்விய ஞான சூரியன் ஆவார்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.40 || பகவானின் உறுதிமொழி:

श्रीभगवानुवाच

पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते

हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति ।। ४० ।।

ஸ்ரீப43வாநுவாச

பார்த2 நைவேஹ நாமுத்ர விநாச1ஸ்தஸ்ய வித்3யதே  

ஹி கல்யாணக்ருத்கச்1சித்3து3ர்க3திம் தாத 3ச்ச2தி ।। 40 ।।


श्री भगवान् उवाच   ஸ்ரீ 43வாந் உவாச  ஶ்ரீ பகவான் சொன்னது

पार्थ  பார்த2  பிரிதாவின் மைந்தா   तस्य  தஸ்ய  அவனுடைய   विनाश:   விநாச1:  அழிவானது   

इह   இஹ  இம்மையிலும்      இல்லை  अमुत्र   அமுத்ர  மறுமையிலும்  

एव विद्यते  ஏவ வித்3யதே  இல்லவே இல்லை  तात  தாத  மைந்தா  हि   ஹி   நிச்சயமாக   

कल्याणकृत्  கல்யாணக்ருத்  மேலான செயலை செய்தவன்  कश्चित्  கச்1சித்  யாரும்   

दुर्गतिं து3ர்க3திம்  துர்கதியை/கீழ்மையை   गच्छति   3ச்ச2தி   அடைவதில்லை.


பார்த்தா, அவனுக்கு இம்மையிலோ மறுமையிலோ அழிவென்பதில்லை. நலஞ்செய்வோன் எவனும் நலிவுறுதல் இல்லையப்பா.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.


விளக்கம்:

அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் இனிவரும் சுலோகங்களில் பதிலளிக்கிறார். சென்ற பகுதியில் விளக்கப்பட்டத்தை போல, இரு மார்க்கத்திலிருந்தும் நழுவிய சந்யாசிக்கு, இங்கே இந்த உலகத்திலும், இஹ, அல்லது வேறு எந்த உலகத்திலும், அமுத்ர, கண்டிப்பாக அழிவென்பது இல்லவே இல்லைவிநாச1: ஏவ வித்3யதே, என்கிறார். இவன் முயற்சியிலிருந்து வீழ்ந்தவனாக(அயதி) இருந்தபோதிலும் சாஸ்திரத்தில் சிரத்தையுடன் இருந்த காரணத்தினால் வாழ்க்கையில் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

இங்கு அழிவு என்பது, விவாதிக்கப்படுபவன் முன்பு இருந்ததை விட மோசமான, தாழ்வான பிறப்பைப் பெறுகிறான் என்பதைக் குறிக்கிறது. ஆனால் அது அவ்விதம் நடக்காதென கிருஷ்ணர் இங்கு உறுதியளிக்கிறார். இவன் மேலான வாழ்க்கை வாழ்ந்துள்ளதால், கல்யாணக்ருத், கண்டிப்பாக மேலான பிறப்பே உண்டாகும் என்கிறார்.  

கல்யாணஎன்றால் மோக்ஷம்; இது ஈஷ்வரனைப் பற்றிய புரிதலைக் குறிக்கிறது. எல்லாவற்றையும் துறந்து சந்யாச வாழ்க்கை வாழ்ந்ததன் மூலம் இவன் மோக்ஷத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்துள்ளான். இப்படிப்பட்டவனுக்கு கண்டிப்பாக மோசமான கதி ஏற்படாது - து3ர்க3திம் 3ச்ச2தி.

மேலான செயல், அறச் செயலைச் செய்த எவனொருவனும், கச்1சித், கீழான நிலையை எவ்வுலகிலும் பெறுவதில்லை. குறைந்த பட்சம் தனது திரட்டப்பட்ட கர்மபலனைப் பொறுத்து ஒரு பிறப்பிலிருந்து அடுத்த பிறப்பிற்கு என பயணித்து புதிய உடலைப் பெறுகிறான். ஆனால் மோக்ஷத்தை நோக்கி அடியெடுத்து வைத்த ஒருவனுக்கு, உண்மையில் அதற்குமுன் அவன் செய்த எல்லா காரியங்களும் பயனளித்து விட்டதாகவே பொருள். கவனத்தை தன் பக்கம் திருப்பிய ஒருவனுக்கு அதிலிருந்து திரும்புதல் என்பது இருக்கப் போவதில்லை.


=> மேலான செயலைச் செய்தவன்(கல்யாணக்ருத்):

பொதுவாக, மனிதர்கள் அனாத்மாவையே பிந்தொடர்கின்றனர், ஆத்மாவை அல்ல. உதாரணமாக, அனாத்மாவான உடல் மற்றும் மனம் தொடங்கி பணம், பதவி, அதிகாரம், குடும்பம் என அனைத்தின் மீதான கவனிப்பும் அனாத்மாவைப் பற்றியதாகவே உள்ளது. மேலும் இம்மையோ அல்லது அடுத்த பிறவியின் நோக்கில் மறுமையோ, ஒருவனின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துதலும் அனாத்மாவைப் பற்றியதே. இவ்விதம் மக்கள் அனைவரும் அனாத்மாவை கவனித்துக்கொள்வதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்; அதற்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்!

சரியானதைச் செய்கிறேனா?’ என எப்பொழுது ஒருவன் தன்னையே கேள்வி கேட்க தொடங்குகிறானோ அப்பொழுது அவன் ஆத்மாவை கவனிக்க ஆரம்பிக்கிறான். இது எல்லோரிடமும் நடைபெறுவதில்லை. இப்படிப்பட்டவன் அதில் வெற்றியடைந்தாலும் இல்லாவிட்டாலும், அவனது வழியை ஏற்கனவே கண்டுபிடித்தவனாகிறான். சாதாரணமாகப்படுவதை கேள்வி கேட்பவனாலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடைய முடியும். மோக்ஷத்தை நோக்கி அடியெடுத்துவிட்டதால் இவன்கல்யாணக்ருத்எனப்படுகிறான்

கல்யாணஎன்றால்மங்களகரமானது’. எனவே, மோக்ஷம் என்பதுகல்யாண’. பிரம்மச்சரிய வாழ்க்கைநிலையின் முடிவையும் இல்லறத்தின் மங்களகரமான தொடக்கத்தையும் குறிப்பதால் திருமணமும் கல்யாணம் என்று அழைக்கப்படுகிறது. கிரஹஸ்தம் ஒருவனை மிகவும் மங்களகரமான மோக்ஷத்திற்கு தயார்படுத்துகிறது. வாழ்க்கையின் இறுதிப் போட்டியான மோக்ஷம் எனும் கல்யாணத்தை அடைய, திருமணம் என்பது ஒரு சாதனையாக ஆகிறது.

எனவே இங்கு கர்மயோகியோ அல்லது சந்யாசியோ எவராக இருப்பினும் மோக்ஷத்திற்கான காரியத்தில் ஈடுபடுவதால்கல்யாணக்ருத்ஆகிறார். இவர்களுக்கு கண்டிப்பாக முன்னேற்றம் உண்டு. ஒரு தவளையின் உடலோ, சொர்க்கமோ அல்லது வேறு எதையும் எடுக்கக் காத்திருக்கும் கர்மங்கள், இனி தன்னை வெளிப்படுத்த வாய்ப்பில்லை. எப்பொழுது ஒருவன்கல்யாணக்ருத்ஆகிறானோ அப்பொழுது அவனது முழு வரிசையும், முழு ஓட்டமும் மாறுகிறது. அதேசமயம் வெறுமனே இந்த ஓட்டதோடு பயணிக்கும் ஒருவனுக்கு, திரட்டப்பட்ட அனைத்து வினைப்பயன்களும்(கர்மா) வெளிப்பட சமமான வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட கர்மாக்களின் வெளிப்பாட்டிற்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது, அது நிறைவேறும் வாய்ப்பு அதிகரித்து அதற்குண்டான பிறவி அவனுக்கு உண்டாகிறது.

ஒருவன் இந்த ஓட்டத்தை மாற்றும்போது வரிசையும் மாறியாக வேண்டும். எனவே சிரத்தையுடன் ஞானத்தை பின்தொடர்பவனுக்கு, அவன் மோக்ஷத்தை(கல்யாண) அடையும்வரை, மற்ற எல்லா வினைப்பயன்களும் காத்திருக்கத்தான் வேண்டும். முக்தியை அடைந்தபின் அவனது அனைத்து கர்மாக்களும் கரைந்துவிடுகின்றது. எனவே, ‘நான் செயல்செய்பவனா, கர்த்தாவா?’ என்பது சாதாரண கேள்வியல்ல. ஏனெனில் ஒருவன் கர்த்தாவாகும் போது அவன் நல்ல மற்றும் கெட்ட செயல்களைச் செய்கிறான்; இதனால் புண்ணியம் மற்றும் பாபம் எனும் வினைப்பயனை சம்பாதிக்கிறான். ஆனால் இங்கே, அந்த கர்த்தாவே கேள்விக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் கேள்வியே ஒருவனைகல்யாணக்ருத்ஆக்குவதால், அதைக் கேட்ட எவரும் மோசமான முடிவை அடைவதில்லை.


=> தந்தை-குரு:

கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனைதாதஎன்று அழைக்கிறார், இது ஒரு தந்தை அல்லது மகனுக்கு இடையே உள்ள நெருக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் அன்புடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஒரு தந்தை என்பவன் தன் மகனின் வடிவில் தன்னை பாதுகாத்துக் கொள்பவன். மகன் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், தானும் மகிழ்ச்சியாக இருக்கிறான்; மகன் வெற்றி பெறும்போது தந்தையும் வெற்றி பெற்றதாக உணர்கிறான். எனவே மகனுக்கு என்ன நடக்கிறதோ, அது தகப்பனுக்கும் ஏற்படுவதால் இருவருக்குமிடையில் இடைவெளி இல்லாமல் ஆகிறது. இந்த காரணத்திற்காக தந்தை மற்றும் மகன் இருவரும்தாதஎன்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆனால் இங்கு அர்ஜுனன் கிருஷ்ணரின் தந்தையோ மகனோ கிடையாது. இருப்பினும் அவர் அர்ஜுனனைதாதஎன அழைக்கிறார். அதை இரு வகையில் விசாரிக்கலாம்

(i) படைத்தவனின் நோக்கில் கிருஷ்ணர் இங்கு தந்தை(ஜனக_जनक) ஆகிறார். உடலை உருவாக்கும் தந்தையை தேஹ-ஜனக என்றும் ஞானத்தை உருவாக்கும் தந்தையை வித்யா-ஜனக என்றும் கூறலாம். சான்றோனாகிய ஆசிரியர்(ஆசார்ய) ஒருவனுக்கு முழுமையான மறுபிறப்பை ஞான வடிவில் தருபவராக இருப்பதால், அவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார். எனவே கிருஷ்ணர் தன்னை தந்தையாகக் கொண்டு அர்ஜுனனைமைந்தாஎன அழைக்கிறார்.

(ii) ‘தாதஎன்றால் தகப்பன். தந்தையே பிள்ளையாக பரிணமிப்பதால் பிள்ளையை அப்பா என்று அழைப்பது வழக்கம். தகப்பனுக்குப் பிள்ளை போன்றவன் குருவுக்கு சிஷ்யன். ஆகையால் அன்பின் பொருட்டு குரு சிஷ்யனை மைந்தா என்றோ அப்பா என்றோ அழைப்பது முறை. இங்கு பகவானது கிருபை சுரப்பதற்கு இச்சொல் ஒரு சான்றாகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரு மனிதனுடைய எண்ணத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கபடி அவனுக்குச் சன்மானம் கிடைக்கிறது. ஈசுவரன் பக்தர்கள் விரும்புவனவற்றையெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் போன்றவன்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.41 || சந்தேகத்திற்கான நேரடியான பதிலை கூற ஆரம்பிக்கிறார்:

प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वती: समा:  

शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते ।। ४१ ।। 

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா சா1ச்1வதீ: ஸமா:  

சு1சீநாம் ஸ்ரீமதாம் கே3ஹே யோக3ப்4ரஷ்டோऽபி4ஜாயதே ।। 41 ।।


योगभ्रष्ट:  யோக3ப்4ரஷ்ட:  யோகத்தினின்று வழுவியவன்  

पुण्यकृतां  புண்யக்ருதாம்  புண்ணியம் செய்தவர்களுடைய  लोकान्   லோகாந்  லோகங்களை  

प्राप्य  ப்ராப்ய  அடைந்து   शाश्वती: समा:  சா1ச்1வதீ: ஸமா:  நீடித்த வருடங்கள்   

उषित्वा  உஷித்வா  வசித்திருந்து   शुचीनां   சு1சீநாம்    பண்பாடுடைய/தூய்மையுடைய   

श्रीमतां  ஸ்ரீமதாம்  செல்வத்தையுடைய   गेहे  கே3ஹே  வீட்டில்   अभिजायते  அபி4ஜாயதே  பிறக்கிறான்.


யோகத்தினின்று வழுவியவன் புண்ணியம் செய்தவர் உலகங்களையடைந்து, அங்கு நெடுங்காலம் வாழ்ந்திருந்து தூய்மையுடைய செல்வந்தர் வீட்டில் பிறக்கிறான்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.


விளக்கம்:

=> மூன்று விதமான மனிதர்களின் கதி(இம்மையிலும் மறுமையிலும்):

(1) ஞான நிஷ்டையை அடைந்த ஞானி:

    இம்மையில் தன்னிடத்தில் நிறைவாக வாழ்ந்து கொண்டிருப்பான்ஆத்மந்யேவாத்மனா துஷ்ட:. தனது சுய சொரூபத்தை புரிந்த அவன், பிராரப்தம் முடிவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றான்தாவதேவ சிரம் யாவந்ந விமோக்ஷயே. மரணத்திற்கு பின்னர் வேறு லோகங்கள் என எங்கும் போகாத, அதாவது கதியில்லாத(அகதி:) நிலையை அடைந்து ப்ரம்மனாகவே ஆகின்றான்; மீண்டும் பிறவாத விதேஹ முக்தியை அடைகின்றான்.

(2) சாதாரண மனிதர்களின் நிலை(சாமாண்ய ஜாநாநாம் கதி:):

    இவர்கள் இறைவனை வழிபட விரும்புபவர்களாகவும், ஆனால் தத்துவத்தில் ஆர்வமின்மையால் உபதேசத்தை கேட்க விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள். தர்மப்படி வாழ்ந்து அதிக புண்ணியத்தை ஈட்டினால் சொர்க்க லோகம் உள்ளிட்ட சுகத்தை கொடுப்பதாக கூறப்படும் ஏழு லோகங்களில் ஒன்றை அடைகிறார்கள்அதர்ம வாழ்க்கை வாழ்ந்து அதிக பாபத்தை ஈட்டியவர்கள் நரகத்திற்கு செல்கிறார்கள். தங்களது கர்மபலனுக்கு ஏற்றார்போல் லோகங்களை அடைந்து, அங்கு ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்து, பின்னர் சஞ்சித கர்மத்திலிருந்து தொகுக்கப்பட்ட வினைப்பயனை பொறுத்து வேறொரு உடலுடன் அவர்கள் மீண்டும் பிறக்கிறார்க்ள்.

(3) யோகப்ரஷ்டன்

      புண்ணியம் வேண்டாம் என கர்மங்களைத் துறந்து ஞான மார்க்கத்திற்கு சென்று, அங்கும் மனதின் வாசனைகளால் ப்ரம்மத்தில் நிலைபெறாமல் இறந்தவன் யோகப்ரஷ்டன்

(i) வேதத்தை கேட்டல் மற்றும் அதை புரிந்து கொள்ள முயற்சித்தல் என இந்த ஞானத்தின் பாதையில் சென்ற இவனுக்கு உண்மையில் அதிக புண்ணியம் கிடைக்கிறது. வேதம் பகவானின் சொல். அதை பிந்தொடருபவர்கள் கண்டிப்பாக புண்ணியத்தையே அடைகிறார்கள்

(ii) மேலும் அடுத்த ஜென்மமாக கண்டிப்பாக இவனுக்கு மனித ஜென்மமே கிடைக்கிறதுநர ஜென்ம ப்ராப்தி:. இவனது புண்ணியம், சஞ்சித கர்மம் வெளிப்படாமல் நிறுத்தி வைப்பதால், மீண்டும் மனிதப் பிறவி வாய்க்கிறது.

(iii) முந்தய ஜென்மத்தில் எந்த அளவு பக்குவமடைந்து வீழ்ந்தானோ, அந்த பக்குவத்துடனே பிறக்கின்றான், அதாவது எந்த இடத்தில் விட்டானோ அதிலிருந்தே தொடர்வான். கொஞ்ச காலத்திலேயே இந்த பக்குவத்தை அடைந்து சாதனையை தொடர ஆரம்பிக்கின்றான்.


=> பகவானின் பதில்:

யோகத்திலிருந்து வீழ்ந்தவன் மோக்ஷத்தை மட்டுமல்லாமல், இம்மை மற்றும் மறுமை என இரு உலகங்களையும் இழக்க நேரிடும் என அர்ஜுனன் நினைத்தான். இந்த சந்தேகத்திற்கு பகவான் இங்கு நேரடியான பதிலை கூற ஆரம்பிக்கிறார், அதாவது இஹ-லோகம் மற்றும் பரலோகம் ஆகியவைகளைக் குறித்து இந்த சுலோகத்தில் உரைக்கிறார். ‘புண்யக்ருதாம் லோகாந்என்பது தர்ம வாழ்க்கை வாழ்ந்தவர்கள், புண்ணியத்தை உண்டாக்கும் நல்ல செயல்களைச் செய்தவர்கள் பெறும் லோகங்களைக் குறிக்கிறது. மரணத்திற்குப் பின் அவன் இப்படிப்பட்ட உலகங்களைப் பெற்று, மிக நீண்ட காலம் அங்கேயே வாழ்வான்சா1ச்1வதீ: ஸமா:, என்கிறார் கிருஷ்ணர்.

அர்ஜுனனால் கற்பனை செய்யப்பட்டவனை பகவான் இங்குயோக3ப்4ரஷ்ட’, யோகத்திலிருந்து வீழ்ந்தவன் என அழைக்கிறார். உண்மையில், அந்த நபர் ஒருப்4ரஷ்டஅல்ல. சென்ற சுலோகத்தில் பார்த்ததைப் போல மோக்ஷத்தை நோக்கி அடியெடுத்து வைத்தவனுக்கு வீழ்ச்சி என்பது இல்லை. ஆனால் அர்ஜுனனின் மனதில் அந்த எண்ணம் இருந்ததால் பகவானும் அதே நோக்கில்யோக3ப்4ரஷ்டஎன்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எனவே யோகப்ரஷ்டன் இந்த அறிவைப் பின்தொடர்வதற்கு உகந்த சூழ்நிலையில் பிறக்கிறான், அபி4ஜாயதே, என்று அர்ஜுனனிடம் கூறுவதன் மூலம் அந்த நபரின் எந்தவிதமான வீழ்ச்சியையும் மறுக்க விரும்புகிறார்.


=> சாதகமான சூழல்:

ஆகவே கிருஷ்ணர், புண்ணிய லோகங்களில் வாழ்ந்து பின்னர் மீண்டும் இப்பூலோகத்தில் யோகப்ரஷ்டன் பிறக்கும் அந்தச் சூழலைசு1சீநாம் ஸ்ரீமதாம் கே3ஹேஎன்ற வார்த்தைகளால் விவரிக்கிறார், அதாவது செல்வமும் கலாச்சாரமும் கொண்ட ஒருவனின் வீட்டில் பிறக்கின்றான். ஸ்ரீமத் என்ற சொல், செல்வம் மற்றும் நல்ல வசதியைக் குறிக்கிறது. ஏழ்மையில் பிறந்த ஒருவனுக்கு அன்றாட வாழ்க்கை மற்றும் குடும்ப முன்னேற்றம் போன்ற கடமைகளை நிறைவேற்றுவதிலேயே முழு காலமும் கழிந்துவிடும். செல்வம் ஒருவனை கடமையிலிருந்து விடுவிக்கின்றது. பண்பாட்டுடன் கூடிய செல்வம் ஒருவனுக்கு அலங்காரம் ஆகிறது; மாறாக பண்பாடில்லாத செல்வம் அலங்கோலம் ஆகிறது.

இங்குசு1சீஎனும் சொல்லின் மூலம் தர்ம வாழ்க்கையில் உறுதி, நல்லொழுக்கம், பண்பாடு மற்றும் கலாசாரம் வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் திருடுதல், பிறரை ஏமாற்றுதல், குற்றச் செயலின் மூலம் பணம் சம்பாதித்தல் போன்ற அதர்ம வாழ்க்கையின் மூலமும் ஒரு வீட்டில் செல்வம் மிகுதியாக இருக்கும். அத்தகைய வீடு ஞானத் தேடலுக்கு உகந்ததல்ல. ‘சு1சீநாம் கே3ஹேஎன்பது நற்பண்புகளிலும் தர்மநெறியிலும் மதிப்பு கொண்ட ஒரு குடும்பத்தைக் குறிக்கிறது. இங்கு பிறக்கும் யோகப்ரஷ்டன், சில குறிப்பிட்ட பண்புகளை எளிதில் அடைய ஏதுவான சூழ்நிலையாக அது அமைகிறது

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை அல்லது தாயை உடைய குடும்பம் போன்ற பண்பாடற்ற சூழ்நிலை தவறான தொடக்கமாக கருதப்பட்டாலும் அங்கு அறிவுத்தேடல் ஏற்பட வாய்ப்பில்லை என்று அர்த்தமல்ல. ஒருவேளை அவன் ஏதேனும் வினைப்பயனை கழிக்கும் பொருட்டு அங்கு பிறந்திருந்தால் அதுவும் ஒரு நல்ல தொடக்கமாகவே அமைகிறது.

இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், தவறான தொடக்கத்திலிருந்து வெளியேறுவது மிகவும் கடினம். அதேசமயம், ஆரம்பம் சாதகமாக இருக்கும் இடத்தில், யோகப்ரஷ்டன் தனது மோக்ஷ பயணத்தைத் தொடரலாம். தான் ஆரம்பித்ததை நிறைவேற்றும் பொருட்டு, வாழ்க்கையின் தொடக்க காலங்களிலேயே சிலர் ஒரு சந்யாசிக்கான அடையாளங்களைக் காட்டுவர். அனுகூலமான சூழ்நிலைகள் அவனை வழிபாட்டு வாழ்க்கை வாழவும், ஈஷ்வரனை தொடர்ந்து சிந்திக்கவும் உதவி செய்கிறது. இந்த ஈஷ்வர ஸ்மரணம், இறை சிந்தனை என்பது ஈஷ்வரனின் சொரூபம், மெய்ப்பொருளாக இருப்பது எது, எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் என்ன போன்றவற்றைக் குறிக்கின்றது.

இதிலிருந்து இவனுக்கு, இம்மையிலோ அல்லது மறுமையிலோ கேடு என எதுவுமில்லை என்பதை நாம் அறியலாம். இந்த வாழ்க்கைக்கு திரும்பி வந்தாலும், அவன் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறான். அவனது நாட்டத்தை எளிதாக்க, அறிவைப் பெறுவதற்கு மிக உகந்ததாக இருக்கும் ஒரு சிறந்த இடத்தில் அவனது பிறப்பு இருக்கும்.


பின்வரும் சுலோகத்தில் கிருஷ்ணர் யோகப்ரஷ்டனுக்கான வேறொரு வாய்ப்பை பற்றிக் குறிப்பிடுகிறார்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------