ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.29 - 2.30

 ।।2.29।। ஆத்ம ஞானத்தின் பெருமை:

अाश्चर्यवत्पश्यति कश्चिदेनं अाश्चर्यवद्वदति तथैव चान्य:

अाश्चर्यवच्चैनमन्य: शृणोति श्रुत्वाप्येनं वेद चैव कश्चित् ।। २९

ஆச்1சர்யவத்பச்1யதி கச்1சிதே3னம்

ஆச்1சர்யவத்3வத3தி ததை2 சான்ய:

ஆச்1சர்யவச்சைனமன்ய: ச்1ருணோதி

ச்1ருத்வாப்யேனம் வேத சைவ கச்1சித் ।। 29


कश्चित्    கச்1சித்  ஒருவன்  एनम्    ஏனம்  இந்த ஆத்மாவை  अाश्चर्यवत्   ஆச்1சர்யவத்  ஆச்சரியமானது போல  पश्यति   பச்1யதி  காண்கிறான்  तथा एव   ததா2 ஏவ   அங்ஙனமே  अन्य:  அன்ய:  இனியொருவன் 

अाश्चर्यवत्    ஆச்1சர்யவத்  ஆச்சரியம் போல    वदति   வத3தி  பேசுகிறான்   अन्य:   அன்ய:   வேறொருவன் एनम्    ஏனம்  இந்த ஆத்மாவை  अाश्चर्यवत्    ஆச்1சர்யவத்  ஆச்சரியம் போல    शृणोति   ச்1ருணோதி கேட்கிறான்   कश्चित्     கச்1சித்   மற்றும் ஒருவன்   श्रुत्वा अपि   ச்1ருத்வா அபி  கேட்டாலும்   

एनम्    ஏனம்  இந்த ஆத்மாவை  एव वेद   ஏவ வேத3  அறிகிறதேயில்லை.


ஒருவன் இந்த ஆத்மாவை ஆச்சரியமானது போல காண்கிறான், அங்ஙனமே இனியொருவன் ஆச்சரியம் போல பேசுகிறான், வேறொருவன் ஆச்சரியம் போல கேட்கிறான், மற்றொருவன் கேட்டும் இந்த ஆத்மாவை அறிகிறதேயில்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இந்த ஆத்மாவை

வியப்பென ஒருவன் காண்கிறான்,

வியப்பென ஒருவன் சொல்லுகிறான்,

வியப்பென ஒருவன் கேட்கிறான்,

கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.


விளக்கம்:


=>கடோபநிஷத்தில் கூறப்பட்ட மந்திரத்தின் ஒரு கருத்தை விளக்குகிறார்.

   ~> ஆத்மன: து3ர்போ34த்வம்(अात्मन: दुर्बोधत्वम्) - ஆத்ம தத்துவத்தை க்ரஹிப்பது சுலபமல்ல.

   ~> குரு சிஷ்ய து3ர்லபத்வம்(गुरु शिष्य दुर्लभत्वम्) - இத்தத்துவத்தை உபதேசிக்கும் குருவும், அதை அறிய விருப்பும் சிஷ்யனும் அரிது.


=> வியப்பிற்குரியது ஆத்மா:

ஆச்1சர்யம்(अाश्चर्य) - வியப்புக்குரியது; அசாதாரணம்; கடினம்; அரிதானது. பொதுவாக, எல்லா விஷயங்களிலும், அறிபவனாகியநான்இதை அறிகின்றேன் என அறிபவனிடமிருந்து அறியப்படும் பொருள் வேறானதாக இருக்கும். ஆனால் ஆத்ம விஷயத்தில், அறியப்பட வேண்டிய ஆத்மாவை அறிபவனாக அறிய வேண்டியுள்ளதால் இந்த ஞானம் அசாதாரணம்; ஆத்ம ஞானம் ஆச்சர்யம்

சாஸ்திர விசாரத்திற்கு பின், ‘ நான் புதிதாக எதையும் தெரிந்து கொள்ளவில்லைஎன்ற அறிவு கிடைக்கிறது. அதாவது எவனொருவன் இதுவரை எல்லாவற்றையும் அறிந்தானோ, எவன் நான்நான்என சொல்லும் போது அதன் அர்த்தமாக இருந்தானோ அதுவே ஆத்மா. ஆகவே புதிதாக எதையும் தெரிந்து கொள்ளவில்லை என உணர்தல் ஆச்சர்யம். ஆத்ம ஞானி ஆச்சர்யம்.

ஒரு பொருளுக்கு ஏதாவது குணமிருந்தால், செயலிருந்தால், சம்பந்தமிருந்தால் அதை விளக்கலாம். ஆனால் நிர்குணமான, வாக்கினால் விளக்கிக் கூற முடியாத ஆத்மாவை விளக்குதல் ஆச்சர்யம். ஆகவே ஆத்ம ஞான உபதேசம் ஆச்சர்யம்.

எல்லா விதத்திலும் ஆத்மா ஆச்சரியமானதாகவே உள்ளது. எல்லையற்ற ஸத்-சித்-ஆனந்தமான ஆத்மா, எந்த மாற்றத்தையும் அடையாமல் நாம-ரூப மயமான இவ்வுலகை தோற்றுவித்துள்ளது. எல்லா நாமரூபங்களும் ப்ரம்மமே. ஆத்மாவாகிய நீ ப்ரம்மாக இருக்கிறாய் என உபதேசிக்கும் குரு ஆச்சர்யம்.

இயற்கையாகவே எல்லா ஜீவராசிகளும் இருமை எனும் ஸம்ஸாரத்துடனே பிறக்கிறார்கள். விடுதலை அடைய வேண்டும் என்ற விருப்பமும் சுபாவமாகவே உள்ளது. ஆனால் அதற்கான சாதனம் சாஸ்திரத்தை கேட்டல் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே கேட்டல்(ஸ்ரவணம்_श्रवणम्) ஆச்சர்யம். கேட்பவர்கள் ஆச்சர்யம்.


=> இங்கு கிருஷ்ணர், சிலர்(கச்1சித்) இந்த ஆத்மாவை(ஏனம்) ஆச்சர்யத்தை போல(ஆச்1சர்யவத்) பார்க்கிறார்கள்(பச்1யதி) என ஆரம்பித்து, வேறு எவையெல்லாம் இவ்விஷயத்தில் வியப்பிற்குரியதாக இருக்கிறது என கூறுகிறார். இங்கு பார்த்தல் என்பதன் பொருள் அறிதல். ., கேட்டுப் பார்த்தாயா? என்பது கேட்டு அறிந்தாயா? என பொருள். ஆகவே, இந்த ஆத்மாவை அறிதல் ஆச்சர்யமானதாக பார்க்கிறார்கள்(ஏனம் கச்1சித் ஆச்1சர்யவத் பச்1யதி) என்றும் அல்லது ஆச்சர்யத்தை போல சிலரே இந்த ஆத்மாவை அறிகிறார்கள்(ஆச்1சர்யவத் கச்1சித் ஏனம் பச்1யதி) என்றும் பொருள் கூறலாம். இதைப் போலவே ஆத்ம உபதேசமும், அதை உபதேசிப்பவரும், அதை கேட்பவனும் ஆச்சர்யம். மேலும், இந்த முழு உபதேசத்தைக் கேட்டும்(ச்1ருத்வா அபி) ஆத்மாவை(ஏனம்) புரிந்து கொள்ளாதவனையும்( ஏவ வேத3) பகவான் வியப்பானவனாகவே சொல்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வேதங்கள், தந்த்ர சாஸ்திரங்கள், புராணங்கள் ஆகிய உலகிலுள்ள எல்லாக் கிரந்தங்களும் வாயினின்று துப்பிய சோற்றைப்போல் எச்சிலாகிவிட்டன என்று சொல்லலாம். ஏனெனில், அவைகள் அடிக்கடி மனிதர்களுடைய வாயினால் உச்சரிக்கப்படுகின்றன. அகண்ட ஸ்வரூபமான பிரம்மமோ அப்படி ஒருபோதும் எச்சிலானதில்லை. ஏனென்றால், இதுவரையில் வார்த்தைகளால் அதை விவரித்துச்சொல்ல ஒருவராலும் முடியவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------------

।।2.30।। மேற்கூரிய ஆத்ம-அனாத்ம விவேகத்தின் முடிவுரை:

देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत

तस्मात् सर्वाणि भूतानि त्वं शोचितुमर्हसि ।। ३०

தே3ஹீ நித்யமவத்4யோऽயம் தே3ஹே ஸர்வஸ்ய பா4ரத

தஸ்மாத் ஸர்வாணி பூ4தானி த்வம் சோ1சிதுமர்ஹஸி ।। 30


भारत    பா4ரத  பாரதா  सर्वस्य देहे   ஸர்வஸ்ய தே3ஹே  எல்லாருடைய தேஹத்திலும்  अयम्    அயம்  இந்த  

देही   தே3ஹீ  தேஹத்தை உடைய ஆத்மா   नित्यम्   நித்யம்  எப்போதும்  अवध्य:    அவத்4:  அழிக்கப்படாதது   तस्मात्  தஸ்மாத்  ஆகையினால்  त्वं   த்வம்  நீ  सर्वाणि भूतानि    ஸர்வாணி பூ4தானி  எல்லா உயிரினங்களைக் குறித்து  शोचितुम्    சோ1சிதும் துக்கப்பட   अर्हसि     அர்ஹஸி  அர்ஹதை கிடையாது.


பாரதா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப்படாதவன். ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன், ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா.


விளக்கம்:

=> துக்க காரணம் எதுவுமில்லை:

க்ருஷ்ணர், ஸ்லோகம் 11-லிருந்து தான் கூறியதை சுருங்கச் சொல்லி முடிவுரை செய்கிறார். தேஹத்தை உடைய உயிரினங்களுக்குள்(ஸர்வஸ்ய தே3ஹே) உள்ள தேஹீயான ஆத்மா(தே3ஹீ) எப்போதும் அழிக்கப்பட முடியாதது(நித்யம் அவத்4:). தனது கூற்றை நிரூபிக்கும் எல்லாவித விவாதத்தையும் செய்துவிட்டார். உடல் அநித்யமானது ஆகையால் அதனுடைய மரணத்தை தடுக்க முடியாது. மேலும் தேஹியான நித்ய-ஆத்மாவை எப்போதும் அழிக்க முடியாது. ஆகவே பாரமார்த்திக நிலை மற்றும் வ்யாவஹாரிக நிலை என்ற இவ்விரு விதத்திலும் சோகப்பட எந்தக் காரணமுமில்லை என கூறி அர்ஜுனா, எல்லா உயிரினங்களைக் குறித்து(ஸர்வாணி பூ4தானி) நீ வருந்தத் தேவையில்லை(த்வம் சோ1சிதும் அர்ஹஸி) என்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

யாரோ தன்னை துண்டு துண்டாக வெட்ட வருவதாக ஒருவன் கனவு காண்கிறான். பயந்து போய் உளறிக் கொண்டு அவன் விழிக்கின்றான். கதவு உட்பக்கமாகவே தாளிடப்பட்டிருப்பதையும், உள்ளே யாருமில்லை என்பதையும் அறிகிறான். என்றாலும் அவன் நெஞ்சு சற்றுநேரம் வரையில் படபடத்துக் கொண்டேயிருக்கும். இது தேஹத்தின் மீது கொண்டுள்ள அபிமானத்தின் அடையாளமாம்.

-------------------------------------------------------------------------------------