சனி, 9 ஜனவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.21 - 2.22

 ।।2.21।। ஆத்மா காரியத்தை செய்விப்பவன் அல்ல( ந ஹேது கர்த்தா):

वेदाऽविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।

कथं स पुरुष: पार्थ कं घातयति हन्ति कम् ।। २१

வேதா3ऽவிநாசி1னம் நித்யம் ய ஏனமஜமவ்யயம் ।

கதம் ஸ புருஷ: பார்த்த3 கம் கா4தயதி ஹந்தி கம் ।। 21


पार्थ  பார்த்த3   பார்த்தா    य:   ய:  யார்    एनम्   ஏனம்   இந்த(ஆத்மாவை)  

अविनाशिनं   அவிநாசி1னம்  நாசமற்றதாக   नित्यं  நித்யம்  என்றுமுள்ளதாக   अजम्  அஜம்   பிறவாததாக   

अव्ययम्  அவ்யயம்  குறையாததாக  वेद   வேத3   அறிகிறானோ   

स:  पुरुष:   ஸ: புருஷ:  அப்புருஷன் (அந்த ஞானியானவன்)    कथं   கதம்  எப்படி  कं   கம்   யாரை   

हनति   ஹந்தி  கொல்லுகிறான்   कं  கம்  யாரை  घातयति   கா4தயதி கொல்லச்செய்கிறான்.


பார்த்தா, இந்த ஆத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக் கொல்வான், யாரைக் கொல்விப்பான்? 


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இப் பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்று முளது — இங்ஙன முணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்ப தெவனை?


விளக்கம்:

=> ஆத்மா அகர்த்தா:

க்ருஷ்ணர், ஆத்மா எந்தச் செயலையும் செய்பவனாகவோ(subject), எந்தவொரு செயலுக்கும் பொருளாகவோ(object) இல்லை என முந்தய ஸ்லோகங்களில் கூறியதை இங்கு சுருங்கச் சொல்கிறார். மேலும் அது உடலுக்கு ஏற்படும் 6 வித மாற்றங்களுக்கு(षड् भाव विकार)  உட்படாததால் நாசத்தை அடையாதது(அவிநாசி1) எனவும், நாசத்தை அடையாமல் என்றுமிருப்பதால் நித்யமானது(நித்யம்) எனவும், பிறவாதது(அஜம்), குறையாதது(அவ்யயம்) எனவும் கூறுகிறார். இந்த ஆத்மஞானத்தை உடையவனே உண்மையில் ஆத்மாவை அறிபவன். 

இப்படிப்பட்ட ஞானி அகங்காரமற்றவனாதலால் எந்தச் செயலுக்கும் ‘நான் கர்த்தா’ என்ற உணர்ச்சி அவனுக்கு வருவதில்லை. ஒரு வினையும் ஆத்ம ஞானியைச் சாராது என்பதற்கு சான்றாகக் கொல்லுதல், கொல்வித்தல் எனும் இரண்டு கொடிய செயல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஞானியானவன் யாரைக் கொல்லுகிறான்?(கம் ஹந்தி) யாரைக் கொல்லச்செய்கிறான்?(கம் கா4தயதி). இங்கு ‘கொல்லுதல்’ என்பது யுத்தகளம் என்னும் சூழ்நிலை பொருட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இது பேசுதல், நடத்தல், படித்தல் போன்ற ஒருவன் செய்யும் செயலைக் குறிப்பதாக சங்கரர் தனது உரையில் கூறுகிறார். 

 இரண்டு விதமான கர்த்தா உண்டு. 

(1) செயலை செய்பவன்(கர்த்தா_कर्ता)

(2) இனியொருவனை ஒரு கார்யத்தை செய்ய வைப்பவன்(ஹேது கர்த்தா_हेतु कर्ता/காரயிதா_कारयिता). உ. தந்தை மகனை படிக்கச் செய்தல்.

இங்கு பகவான், ஆத்மா இவையிரண்டும் அல்ல எனக் கூறகிறார். ஞானி ஆத்மாவை, தான் என அறிந்த காரணத்தினால், ஆத்மாவின் லக்ஷணம் ஞானிக்கு செல்கிறது.

=> ஸர்வ கர்ம சந்யாசி:

ஸர்வ-கர்ம-சந்யாசியிடம், ‘நான் செய்கிறேன்’ என்ற கர்த்ருத்வ-புத்தி(कर्तृत्व बुध्दि ) இல்லை. மனதைப் பின்னனியாகக் கொண்டு புலன்கள் அந்தந்த செயல்களில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. ஆகவே செயல் செய்து கொண்டிருந்த போதிலும், ‘நான் கர்த்தா அல்ல’ என்ற அறிவுடனே இருக்கின்றான். இந்த விவேகத்துடன் கூடியவன் ‘வித்வான்’ என்றழைக்கப்படுகிறான். இவனுடைய ப்ரார்த்தனை, யோகம், நற்பண்புகளுக்கான சாதனை மற்றும் தனது சந்யாச வாழ்க்கையும் கூட ஸர்வ-கர்ம-சந்யாசத்தில் முழுமையை அடைகிறது. தனது உரையில் சங்கரர், இதற்கு பிறகு, கர்மபலத்தை எதிர்பார்த்து அவன் எந்த கர்மத்திலும் ஈடுபடுவதில்லை என்கிறார். அவனுடைய எல்லாவித வழிபாடும் இந்த கண்டறிதலில் முழுமை பெறுவதாகவும், இதை கண்டறியவே அனைத்து கர்மங்களும் செய்யப்பட்டதாகவும் கூறி வேதாந்த சாஸ்திரத்தை கர்ம சாஸ்திரத்துடன் இணைக்கிறார். இந்த பலனுக்காகவே கர்மயோகம். ஸர்வ-கர்ம-சந்யாசமே உண்மையான சந்யாசம். 

சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்ம-சந்யாசத்திற்கான சடங்குகள் செய்யப்படாமல், க்ரஹஸ்த வாழ்க்கை முறையில் இருந்துகொண்டும், ஒருவன் ஸர்வ-கர்ம-சந்யாசியாக ப்ராரப்த கர்மத்தை தொடர முடியும். உதாரணமாக வேந்தனான ஜனகர், ஞானத்திற்குப் பிறகும் எந்த பாதிப்புமின்றி ராஜ்ஜியத்தை தொடர்ந்து ஆட்சி புரிந்தார். ஆகவே ஜனகரைப் போன்று தனது கடமையை தொடர்ந்து செய்து கொண்டும் அல்லது சந்யாசத்தை மேற்கொண்டும் ஞானத்தை பின்பற்றலாம். ஞானியாக இருப்பதற்கும் வெளித்தோற்றத்தில் அவனது செயலுக்கும் சம்பந்தமிருக்க வேண்டிய அவசியமில்லை என சங்கரர் உரையில் விளக்குகிறார். ப்ராரப்த கர்மத்தினால் சில குறிப்பிட்ட செயல்கள் நடைபெறலாமே தவிர, எந்த கர்மபலத்திற்காகவும் அவன் செயல் செய்வதில்லை. இக்கருத்து கீதா-சாஸ்திரத்தில் பல இடங்களில் கூறப்படுகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரு சாதுவானவர் ஜன நெருக்கமுள்ள தெருவழியே போய்க் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாய் ஒரு துஷ்டனுடைய காலை மிதித்துவிட்டார். அப்பொல்லாதவன், தாங்க முடியாத கோபத்தினால் சிறிதும் இரக்கம் காட்டாமல் சாதுவை மிகைப்பட தாக்கி அடித்தான். சாது பிரக்ஞையற்றுத் தரையில் விழுந்தார். அதைக் கேள்விப்பட்டு வந்த சிஷ்யர்கள் அவருக்கு பணிவிடை செய்து சரீரப் பிரக்ஞை வரும்படிச் செய்தார்கள். சாது கொஞ்சம் கண் திறந்துப் பார்த்தார். சிஷ்யர்களில் ஒருவர் அவரிடம், ‘சுவாமி, இப்போது தங்களுக்கு குற்றேவல் புரிவது யார் என்று தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘இந்தச் சரீரத்தை அடித்த கை இப்போது இதற்குப் பணிவிடை பண்ணுகிறது’ என்று சாது பதில் கூறினார். உண்மையான ஞானிக்கு மித்ரன் என்றும் சத்ரு என்றும் அடிப்பவனென்றும் அடிபடுபவனென்றும் வித்தியாசமே கிடையாது.


-----------------------------------------------------------------------------------------------------------------------

।।2.22।। ஆத்மா மாற்றத்தை அடையாதது (நிர்விகார:)

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि ।

तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही।। २२

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா2 விஹாய

நவானி க்3ருஹ்னாதி நரோऽபராணி।

ததா21ரீராணி விஹாய ஜீர்ணாந்-

யன்யானி ஸம்யாதி நவானி தே3ஹீ ।। 22


नर:  நர:  ஒரு மனிதன்  यथा   யதா2  எப்படி  जीर्णानि  ஜீர்ணானி  பழைய(பழுதுபட்ட) 

वासांसि   வாஸாம்ஸி  ஆடைகளை  विहाय  விஹாய விட்டுவிட்டு   अपराणि   அபராணி  வேறு  

नवानि   நவானி  புதியதை  गृह्णाति  க்3ருஹ்னாதி  எடுத்துக் கொள்கிறானோ  तथा  ததா2   அப்படியே   

देही   தே3ஹீ  தேஹத்தை உடையவன்(ஆத்மா)  जीर्णानि   ஜீர்ணானி  பழைய  शरीराणि  1ரீராணி  சரீரங்களை  विहाय  விஹாய  விட்டுவிட்டு   अन्यानि  அன்யானி   வேறு  नवानि   நவானி  புதியதை  

संयाति  ஸம்யாதி  அடைகிறான்.   


பழுதுபட்ட பழைய துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் வேறு புதிய துணிகளைப் போட்டுக் கொள்வதைப் போல ஆத்மா பழைய சரீரங்களை விட்டுவிட்டு வேறு புதியதை அடைகிறான்.


பாரதியின் மொழிபெயர்ப்பு : 

நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்து விட்டு, மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான். 


விளக்கம்:

=> உடையை போன்றது உடல்:

இங்கு க்ருஷ்ணர், உதாரணத்தின் மூலமாக ஆத்மா அழியாமல் என்றும் நித்யமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். எவ்விதம்(யதா2) என்பது உதாரணத்தின் தொடங்கத்தை குறிக்கிறது; மனிதன் தனது பழைய ஆடைகளை கைவிட்டு புதியதை அணிகின்றான்(ஜீர்ணானி வாஸாம்ஸி விஹாய அபராணி நவானி க்3ருஹ்னாதி). பொதுவாக பழைய ஆடை என்பது குறிப்பிட்ட மனிதர்களைப் பொறுத்து மாறுபடும். சிலர் ஒரிரு வருடம் உபயோகித்த ஆடைகள் பழையது என்பர், ஒரு சிலர் அந்த ஆடையின் நிறம் மாறும் வரை அல்லது அது கிழியும் வரை அதை பழையதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருவனந்தபுரத்து ராஜா, ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு புதிய உடையை தான் அணிய வேண்டும் என்பதால் ஒரு நாள் அணிந்தது அவரை பொருத்தவரையில் பழையது. ஆகவே பழையது அல்லது உபயோகப்படாதது என்பது அவரவர்களுடைய தகுதியை, சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது.  

அவ்விதம் சரீரத்தை உடையவனான ஆத்மா(ததா2 தே3ஹீ) பழைய உடலை கைவிட்டு புதியதை அடைகிறான்(ஜீர்ணானி 1ரீராணி விஹாய அன்யானி   நவானி ஸம்யாதி). சரீர(शरीर) எனும் சொல் சிதைவுக்குட்பட்டது எனப் பொருள்படும். உடலானது வயது முதிர்வு, நோய் அல்லது சரியாக பராமரிக்கப்படாதது என பல்வேறு காரணங்களால் பழையதாகவோ உபயோகப் படாததாகவோ(ஜீர்ண) மாறலாம். ஏன் விபத்து, கொலை, தற்கொலை போன்றவைகளும் உடலை அழித்து உபயோகமற்றதாக ஆக்குகிறது. உடல் மூப்பின் காரணமாக மரணமடையும் போது பழைய உடல் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் குழந்தையின் மரணம், இளவயதில் நோயினால் இறப்பு இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? கர்ம வினை; ப்ராரப்த கர்மம். 


=> ப்ராரப்த கர்மம்:


      சஞ்சித கர்மம் —> ப்ராரப்த கர்மம் —> ஆகாமி கர்மம்


சஞ்சிதத்திலிருந்து வெளிப்படும் ஒரு சிறு பகுதி ப்ராரப்தம். சஞ்சிதத்தில் சேர்ந்த அனைத்து பாவ புண்ணியங்களையும் ஒரே உடலில் தீர்க்க முடியாது.  ஆகவே  ஒரு குறிப்பிட்ட சுக துக்கத்தை தீர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட உடல் கொடுக்கப்படுகிறது. ஆகவே ப்ராரப்த கர்மத்தை தீர்க்க ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது. நம் முயற்சிக்கு அப்பாற்பட்டதான விஷயங்கள் இதன் மூலமே கிடைக்கின்றன (உ.: பெற்றோர், உடல், ஆண்-பெண், ஆயுட்காலம்….).

ஒரு ஜீவன் சூக்ஷம சரீரத்திலிருந்து ஸ்தூல சரீரத்தை தேர்ந்தெடுக்க பாப புண்ணியம் வெளிப்பட்டிருக்க வேண்டும். அந்த வெளிப்பட்ட பாப புண்ணியங்கள் ப்ராரப்த கர்மம் எனப்படும். சிறு பகுதியான இவை தீரும் போது ஸ்தூல சரீரம் விடப்படுகிறது. இப்போது சூக்ஷம சரீரத்தில் வேறுவித பாப புண்ணியங்கள் வெளிப்பட அது வேறொரு ஸ்தூல சரீரத்தை அடையும். 

ஆகவே ப்ராரப்த கர்மத்தினாலேயே ஒரு ஜீவாத்மா குறிப்பிட்ட தேஹத்துடன் பிறந்து, அதன் நோக்கம் நிறைவடைந்தவுடன் அதை விடுகிறது. 

இதிலனைத்தும் தேஹத்தை உடையவனான(தே3ஹீ) ஆத்மா மாறாமல் சாக்ஷியாக இருக்கிறது. ஆகவே உண்மையில் இக்காரியத்தை ஆத்மா செய்வதில்லை. ஜடமான சூக்ஷம சரீரம் இதை செய்த போதிலும், ஆத்மாவின் அணுக்ரஹத்தினால் நடைபெறுவதால் இது ஆத்மாவினால் செய்யப்படுவது போலத் தெரிகிறது. ஆத்மாவின் இருப்பில் சூக்ஷம சரீரம் இக்காரியத்தை செய்கிறது. ஸ்தூல, சூக்ஷம சரீரம் மாறும் போது ஆத்மாவிற்கு மாற்றம் கிடையாது.

தேஹம் என்பது அழிவிற்கு உட்பட்டது. அது திடீரென்று ஒரு நாள் மரணிப்பதில்லை, சதா அழிந்து கொண்டிருப்பது. ஆனால் தேஹியை அழிக்க முடியாது. இவ்விரு உண்மையைத் தெளிவாக புரிந்து கொண்டால், சோகத்திற்கான காரணம் என எதுவுமில்லை— ‘அசோ1ச்யான் அன்வசோ1ச: த்வம் துயரப்படத்தகாதவர் பொருட்டு  துயரப்படுகிறாய்’ என்பதற்கான பகவானின் விளக்கம் தொடர்கிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பாம்பும் அதன் மேல்சட்டையும் வெவ்வேறானவை. அதுபோல ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை.

-------------------------------------------------------------------------------------