திங்கள், 30 அக்டோபர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.19 - 9.20

||9.19|| மேலும் ஈஷ்வரனின் மஹிமை தொடர்கிறது

तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि

अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ।। १९ ।।

தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்3ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி

அம்ருதம் சைவ ம்ருத்யுச்1 ஸத3ஸச்சாஹமர்ஜுந ।। 19 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   अहं तपामि  அஹம் தபாமி  நான் வெப்பந்தருகிறேன்   

अहं वर्षं  அஹம் வர்ஷம்  நான் மழையை   उत्सृजामि  உத்ஸ்ருஜாமி  பெய்விக்கிறேன்   

निगृह्णामि   நிக்3ருஹ்ணாமி   தடுக்கிறேன்    अमृतं   அம்ருதம்   சாகாமையும்    

मृत्यु:   ம்ருத்யு: ஏவ   சாவும்   सत् असत्  ஸத் அஸத்  ஸ்தூலமும் சூக்ஷமும்   अहम् एव  அஹம்  நானே

   

அர்ஜுனா, நான் வெப்பந்தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும் தடுக்கவும் செய்கிறேன்; மரணமின்மையும் மரணமும் ஸ்தூலமும் சூக்ஷமும் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான்.


விளக்கம்:

=> நியதிகள் நான்:

அஹம் தபாமிநான் வெப்பந்தருகிறேன். சூரியனைக் கொண்டு இவ்வுலகிற்கு நானே வெப்பத்தை கொடுக்கிறேன்; சக்தியூட்டுகிறேன்; உலகை ஒளிரச் செய்கிறேன். சூரிய வெப்பம் காரணமாக நீரானது ஆவியாகி, பின்னர் மழையாக மாறுகிறது. இது ஒரு சுழற்சி.

அஹம் வர்ஷம் உத்ஸ்ருஜாமி  நான் மழையை பெய்விக்கிறேன்; நிக்3ருஹ்ணாமி நிறுத்தி வைக்கிறேன். நானே மழையை ஆளும் நியதியாக மழையை பெய்விக்கவும் நிறுத்தவும் செய்கிறேன், என்கிறார் பகவான். குறிப்பாக இந்தியாவில் இந்த நியதியைப் பார்ப்பது எளிது. எட்டு மாதங்கள் நான் மழையைத் தடுத்து, பிறகு பருவமழை காலம் என்றழைக்கப்படும் நான்கு மாதங்களில் நான் மழையைப் பொழிகிறேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நான் பருவநிலை. இயற்கை நியதிகளின்படி, பருவங்கள் என்பது நாம் கணிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. எந்த நியதியினால் இது சாத்தியப்படுகிறதோ அந்த நியதியாக நானே உள்ளேன் என்கிறார் கிருஷ்ணர்


=> மரணமும் மரணமற்ற தன்மையும் நான்:

   அம்ருதம் நான் மரணமற்ற தன்மையாக, சாகாமையாக இருக்கிறேன். எந்த புண்ணியத்தினால் தேவர்கள் ஒரு குறிப்பிட்ட அழியாமையையும் ஆனந்தத்தையும் அடைகின்றனரோ அந்த புண்ணியம் நான்.

ம்ருத்யு: ஏவ நான் மரணமாக இருக்கின்றேன். எந்த புண்ணிய பாபத்தினால் எல்லா உயிரினங்களும் தோன்றி பின் இறக்கின்றனவோ அந்த மரண நியதியாக நான் இருக்கின்றேன். அவரவர்களின் கர்மபலனுக்கு ஏற்றாற் போல தேவர்கள் சாகாமையும், நரர் சாவையும் பெறுகின்றனர். இறப்பும் இறவாமையும் சில வேளைகளில் விருப்பையும் வேறு சில வேளைகளில் வெறுப்பையும் தருகின்றன. ஆகவே, ஜீவனை ஞானத்துக்குப் பக்குவப்படுத்துதற்குத் தேவர்களுடைய இறவாமையும் மனிதர்களுடைய இறப்பும் மாறி மாறி பயன்படுகின்றன.


=> காரண-காரியம்:

ஸத் அஸத் ஸத் மற்றும் அஸத் நான். மரம், இலை, பானை போன்ற கண்ணுக்கு தெரியும் வடிவத்தை கொண்ட நாமரூபங்கள், அதாவது ஸ்தூலமாக இருப்பவைகள் ஸத் எனப்படும். இங்கு அஸத் என்பது சூன்யம் அல்ல. நாமரூபங்கள் வெளிப்படுவதற்கு முன்பு இருந்த நிலை அஸத் ஆகும். எனவே வெளிப்பட்ட நிலை ஸத் என்றும் வெளித்தோற்றத்திற்கு வராத நிலை அஸத் என்றும் கூறப்படுகிறது. வேறு விதத்தில், விளைவுகளான காரியங்கள் ஸத் மற்றும் காரணம் அஸத். எனவே காரணமும் காரியமும் நான் என்கிறார் பகவான். இந்த முறையின் மூலமாக காரண-காரிய-வாதம் சுட்டிக்காட்டப்பட்டு, ப்ரம்மனாகவுள்ள அவரே ஸத்யம் என்றும் தோன்றிக் கொண்டுள்ள மற்றவை அனைத்தும் காரணத்திலிருந்து வேறாக இல்லாத காரியம் ஆகையால் மித்யா என்றும் கூறுகிறார்.   

ஆனால் காரண-காரிய-வாதம் என்பதை சிருஷ்டியின் நிலைபாட்டிலிருந்தே பேசமுடியும். எனவேதான், நான் காரணமும் அல்ல காரியமும் அல்ல என்கிற நோக்கில், ‘ஸத் அல்ல அஸத் அல்லஎன்று வேறொரு சுலோகத்தில் கூறப்போகிறார். அதே நேரத்தில் காரணமும் காரியமும் நானே என இங்கு கூறுகிறார். முரண்பாட்டைப் போல தென்படும் இவ்வகையான சிந்தனைகளை நாம் தொடர்ந்து பார்த்து வருவதால், இதிலுள்ள நுண்மையைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம். ‘நான் காரணம் மற்றும் நானே காரியம்என்பது ஏற்றிவைத்தல், அத்யாரோபம். ‘நான் காரணமும் அல்ல காரியமும் அல்லஎன்பது நீக்குதல், அபவாதம். அறியாமையின் காரணமாக இல்லாததை இருப்பதாக நாம் ஏற்கனவே முடிவு செய்து வைத்துவிட்டதால், ஆத்மாவின் சொரூபத்தை சரியாக புரிந்துகொள்ள இரண்டையும் சொல்லியாக வேண்டும்.  

இனி அடுத்த இரு சுலோகத்தில் பகவான், ஆத்மாவின் சொரூபத்தை அறியாதவர்கள் ஆனால் வேதங்கள், வேள்வி சடங்குகள், பிரார்த்தனைகள் மற்றும் மறுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி பேசுகிறார். அதற்கும் கொஞ்சம் முதிர்ச்சி தேவைதான், ஆனால் விவேகத்தை அடைவதற்கு அது போதுமானதாக இல்லை எனக் கூறுகிறார்

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.20|| போகப்பிரியர்களின் பாங்கு:

त्रैविद्या मां सोमपा: पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते

ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ।। २० ।।

த்ரைவித்3யா மாம் ஸோமபா: பூதபாபா 

யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க3திம் ப்ரார்த2யந்தே  

தே புண்யமாஸாத்3 ஸுரேந்த்3ரலோக

மச்1நந்தி தி3வ்யாந்தி3வி தே3வபோ4கா3ந் ।। 20 ।।


त्रैविद्या:  த்ரைவித்3யா:  மூன்று வேதங்களை அறிந்தவர்   यज्ञै:  யஜ்ஞை:  யாகங்களால்   मां  மாம்  என்னை    इष्ट्वा  இஷ்ட்வா  பூஜித்து    सोमपा:  ஸோமபா:  சோமபானம் செய்தவர்கள்    

पूतपापा:  பூதபாபா:   பாபத்திலிருந்து விடுபட்டவர்கள்    स्वर्गतिं  ஸ்வர்க3திம்  சுவர்க்கத்தை    

प्रार्थयन्ते  ப்ரார்த2யந்தே  வேண்டுகின்றனர்   ते  தே  அவர்கள்   

पुण्यम् सुरेन्द्रलोकम्  புண்யம் ஸுரேந்த்3ரலோகம்  புண்ணியமான தேவேந்திரலோகத்தை    

साद्य  ஆஸாத்3  அடைந்து    दिवि  தி3வி  சொர்க்கத்தில்   

दिव्यान् देवभोगान्  தி3வ்யாந் தே3வபோ4கா3ந்  திவ்யமான தேவ போகங்களை   

अश्नन्ति  அச்1நந்தி  அனுபவிக்கிறார்கள்.


மூன்று வேதங்களை அறிந்தவர், யாகங்களால் என்னை பூஜித்து, சோமபானம் செய்து பாபத்தினின்று விடுபட்டவர்களாகி சொர்க்கத்தை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திரலோகத்தை அடைந்து சுவர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான், ஸகாம பக்தர்களின் கதியை குறித்துப் பேசுகிறார். ஒரு குறிப்பிட்ட பலனை விரும்பி பக்தி செலுத்துபவர்கள் ஸகாம பக்தர்கள் எனப்படுகின்றனர்.

யாரால் மூன்று வேதங்களான ரிக், யஜுர் மற்றும் சாம ஆகியவை படிக்கப்படுகின்றனவோ அவர்கள்த்ரைவித்3யா:எனப்படுகின்றனர். இந்த வேதங்கள் ஒவ்வொன்றும் வித்யா, அவைகள் மூன்றும் சேர்ந்துத்ரிவித்யாஆகிறது. இம்மூன்றையும் படித்தவர்கள்த்ரைவித்3யா, அவற்றை எப்படி உச்சரிப்பது மற்றும் சடங்குகளை எவ்வாறு செய்வது முதலியவற்றை அறிந்தவர்கள் ஆவர்


=> விளக்கமான மொழிபெயர்ப்பின் அவசியம்:

நேரடியான மொழிபெயர்ப்பு எப்படி தவறாக வழிநடத்தும் என்பதற்குஸோமபா:எனும் இச்சொல் ஒரு சிறந்த உதாரணம். த்ரைவித்3யா: ஸோமபா: பூதபாபா: — இதன் மொழிபெயர்ப்பு, ‘மூன்று வேத சாஸ்திரங்களையும் அறிந்தவர்கள், சோம பானத்தைக் குடித்து தங்களின் பாபங்களைச் சுத்தப்படுத்துகிறார்கள்என்பதாகும். இதிலிருந்து, வெறும் சோமத்தை அருந்தி அவர்கள் பாபத்திலிருந்து விடுபட்டார்கள் எனப் பலர் புரிந்து கொண்டார்கள். ஆனால் இங்கு சொல்லப்படுவது அதுவல்ல. எனில் இதை எவ்விதம் புரிந்து கொள்வது? சோமத்தை அருந்துபவர்கள்ஸோமபாஆவர். புண்ணிய லோகங்களை அடையசோம-யாகம்என்றவொரு வேள்விச்சடங்கு உள்ளது. அந்த வேள்வியில், சோம எனப்படும் கொடியின் சாற்றை இறைவனுக்கு அவியாக படைத்து எஞ்சியதை பிரசாதமாக அருந்துவார்கள். எனவே சோம-யாகத்தில் பங்கேற்றவர்கள்ஸோமபாஎனப்படுவர். அதாவது வெறுமனே சோம பானத்தைக் குடிப்பவர்களாக அல்லாமல், சோம-யாகத்தைச் செய்து அதன் பிரசாதமாக சோமத்தை அருந்தியவர்கள்ஸோமபாஎன்பதே சரியான விளக்கமாகும்

அத்தகையவர்கள்பூதபாபா:பாபத்திலிருந்து தூய்மையடைந்தவர்கள் ஆகிறார்கள். இங்கு தூய்மை என்பது விருப்பு-வெறுப்பிலிருந்து விடுபடுதலைக் குறிக்கவில்லை; ஒப்பீட்டளவில் தவறான காரியங்களிலிருந்து விடுபடுதலைக் குறிக்கிறது. சாஸ்திரத்தின் மீதுள்ள சிரத்தையின் காரணமாக, ‘நிஷித்த-கர்மஎன்றழைக்கப்படும் அதர்மமான மற்றும் செய்யக்கூடாத காரியங்களை இவர்கள் செய்வதில்லை. ஆனால் ஆசையினால் தூண்டப்பட்டு விரும்பியதை அடைவதற்கான காமிய கர்மங்களைச் செய்கிறார்கள். இருப்பினும் தர்மமான மற்றும் வைதிகத்திற்கு உட்பட்டு இக்கர்மங்களைச் செய்வதால் தவறேதுமில்லை. மேலும் அவர்கள் அன்றாடம் கட்டாயமாக செய்ய வேண்டிய கடமைகளான நித்திய கர்மத்தையும், அவ்வப்பொழுது செய்ய வேண்டிய சமயச் சடங்குகளான நைமித்திக கர்மத்தையும் செவ்வனே செய்கிறார்கள். இது அவர்கள் செய்யக்கூடிய தவறான செயல்களின் விளைவுகளை சுத்தப்படுத்திவிடுகிறது. மேலும் சோம-யாகத்தின் மூலம் சொர்க்கம் செல்லத் தடையாகவுள்ள பாபத்தை நீக்கி தூய்மையடைந்தவர்கள் ஆகிறார்கள்.

=> சொர்க்கத்தை வேண்டிப் பெறுகின்றனர்:

மாம் யஜ்ஞை: இஷ்ட்வா ஸ்வர்க3திம் ப்ரார்த2யந்தேயாகங்களால் என்னை பூஜித்து சொர்க்கத்தை வேண்டுகின்றனர். அவர்கள் இந்திரன், வருணன், அக்னி போன்ற தேவதைகளின் வடிவங்களை ஆவாகனம் செய்வதன் மூலம் பரமேஷ்வரனான என்னை வேண்டிக்கொள்கின்றனர். அக்னிஷ்டோம முதலிய வேதச் சடங்குகளின் மூலம் என்னிடம் என்ன கேட்கின்றனர்? சொர்க்கத்தை பலனாக வேண்டுகிறார்கள். அங்கு நீண்ட காலம் மூப்படையாமல் இருக்கலாம் போன்ற இனிமையான அனுபவங்கள் நிறைய இருப்பதாக வேதத்தின் பூர்வ பாகத்திலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. எனவே எதைப் பற்றியும் பெரிதாகச் சிந்திக்காமல் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக அவர்கள் என்னிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்

தே புண்யம் ஸுரேந்த்3ரலோகம் ஆஸாத்3  — அவர்கள் புண்ணியமான தேவேந்திரலோகத்தை அடைகிறார்கள். தேவர்களின் தலைவனாகவுள்ள இந்திரன் வசிக்கின்ற இந்திர-லோகத்தை, அதாவது சொர்க்கத்தை அடைகிறார்கள். யாகங்கள் உள்ளிட்ட வேதச்சடங்குகளினாலும், தங்களின் நற் கர்மங்களினாலும் பெறப்பட்ட புண்ணியத்தின் விளைவாக அங்கு செல்வதால் அது புண்ணிய-லோகம் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு சென்றதும், அவர்கள் என்ன செய்கிறார்கள்?

தி3வி தி3வ்யாந் தே3வபோ4கா3ந் அச்1நந்திசொர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள். மனிதர்களால் அடையமுடியாத, தேவர்கள் அனுபவிக்கும் இன்பங்களை சொர்க்கத்தில் அடைகிறார்கள். அங்கு புலனுறுப்பு முதன்மையாக கருதப்படுவதால் இசை நடனம் உள்ளிட்ட புலனின்பங்கள் பிரதானமானவைகளாக உள்ளன. பூலோகத்திலும் இசையும் நடனமும் இருந்தபோதிலும் வழக்கத்திற்கு மாறான, அறியப்படாத மற்றும் நுண்மையான அனுபவங்களை அடைகிறார்கள்.

ஆனால் இதிலுள்ள குறையை பகவான் அடுத்த சுலோகத்தில் கூறுகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------