திங்கள், 24 ஏப்ரல், 2023

ஞானவிக்ஞான யோகம் 7.29 - 7.30

||7.29|| ஈஷ்வரனை உபாசிப்பவர் அறிவது யாது?

जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये

ते ब्रह्म तद्विदु: कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम् ।। २९ ।। 

ஜராமரணமோக்ஷாய மாமாச்1ரித்ய யதந்தி யே  

தே ப்3ரஹ்ம தத்3விது3: க்ருத்ஸ்நமத்4யாத்மம் கர்ம சாகி2லம் ।। 29 ।।


जरा मरण मोक्षाय  ஜரா மரண மோக்ஷாய  மூப்பிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபடுவதற்கு   

माम् श्रित्य  மாம் ஆச்1ரித்ய  என்னை வழிபட்டு   ये यतन्ति  யே யதந்தி  யார் முயற்சி செய்கிறார்களோ   

ते  தே  அவர்கள்    तत् ब्रह्म  தத்3 ப்3ரஹ்ம  அந்த ப்ரம்மத்தையும்   

कृत्स्नम् अध्यात्मम्  க்ருத்ஸ்நம் அத்4யாத்மம்  அத்யாத்மம் முழுதையும்     

अखिलम् कर्म   அகி2லம் கர்ம   கர்மம் அனைத்தையும்    विदु:  விது3:  அறிகின்றனர்.


மூப்பிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபடுவதற்கு என்னை வழிபட்டு முயற்சி செய்கின்றவர்கள் அந்த ப்ரம்மத்தையும், அத்யாத்மம் முழுதையும் கர்மம் அனைத்தையும் அறிகின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர்அதுஎன்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.


விளக்கம்:

முதுமை மற்றும் இறப்பிலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்பவர்கள்ஜரா மரண மோக்ஷாய யே யதந்தி, என்னிடம் அடைக்கலமடைந்து ப்ரம்மத்தை அறிகின்றனர்மாம் ஆச்1ரித்ய தத்3 ப்3ரஹ்ம விது3:. யாரொருவனும் விரும்பத்தகாத ஒன்றிலிருந்து விடுபட நினைக்கிறானே தவிர விருப்பத்திற்குரியதிலிருந்து அல்ல. முதுமை என்பது யாருக்கும் விருப்பத்திற்குரியது அல்ல ஏனெனில் வயோதிகமானது மரணம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது. ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருப்பதனால், கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் மரணத்திற்கு ஒரு வருட நெருக்கத்தையே காட்டுகிறது. இது முதுமையின் பிரச்சனை. மேலும் முதுமையில் உடல் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக ஒருவனை விட்டு விலகத் தொடங்குகின்றன. பார்த்தல் கேட்டல் போன்ற புலனுறுப்புகளின் செயல்பாடுகள் முன்பு இருந்ததைப்போல இல்லாமல் தேய ஆரம்பிக்கின்றன. உடலின் மற்ற பகுதிகளும் தனது செயல்திறனை குறைத்துக் கொண்டு சிதைய ஆரம்பிக்கும். ஒன்றை நினைவு கூர்தல் மிகப் பெரிய பணியாக மாறும். அஜீரணக் கோளாறு தொடங்கி மூட்டு வலி வரை அனைத்துவித உடல் உபாதைகளும் உண்டாகும். எனவே இந்த முதுமையையும், இது அருகில் காட்டும் நிச்சய மரணத்தையும் யாரும் விரும்புவதில்லை


=> சிக்கலைக் கண்டறிதல்:

முதுமை மற்றும் மரணம் என்பது ஒருவனின் பிறத்தல் வளர்தல் தேய்தல் மரணித்தல் போன்ற உடல் மாற்றங்களையும், செயல் செய்பவனாக அனுபவிப்பவனாக அவன் அடையும் இன்பம் துன்பம் போன்ற மன மாற்றங்களையும் குறிக்கிறது. நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள அனைத்துக் கருத்துக்களும் இவற்றின் அடிப்படையிலேயே உள்ளன. இந்த முதுமையிலிருந்துதான் நாம் விடுதலையடைய விரும்புகிறோம்.

இந்த விடுதலைக்கான தீவிர ஆசை, ‘நான் முதுமைக்கும் மரணத்திற்கும் உட்பட்டவன்என்ற முன்முடிவிலிருந்து பிறக்கிறது. இந்த கருத்து இருக்கும் வரை இந்த விடுதலை ஆசை இருக்கிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்பது ஒவ்வொருவரும் அறிந்த உண்மையாகையால், அது ஒரு உதவியற்ற நிலையை உருவாக்குகிறது. இது இயற்கையாகவே ஒரு பயத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துகிறது. இந்த வயோதிகத்தையும் மரணத்தையும் தடுக்க முடியாது எனினும் ஒருவன் நினைத்தால், அவனது உதவியே அவனை பயத்திலிருந்து விடுவிக்கும்.  

ராக-த்வேஷங்களின் மயக்கத்திலிருந்து விடுபட்ட ஒருவன், இதைப் பகுத்துணர்ந்து உண்மையான தீர்வைத் தேடும் மனதுடன் பரமாத்மாவை நாடுகிறான். வயோதிகத்திலிருந்து மட்டுமல்ல இந்த சிக்கலிலிருந்து, அதாவதுநான் மரணத்திற்குட்பட்டவன்என்ற கருத்திலிருந்து வெளியேற நினைக்கிறான்

=> மரணத்திலிருந்து விடுதலை:

  என்னைச் சரணடைந்து அவர்கள் முயற்சி செய்கிறார்கள்மாம் ஆச்1ரித்ய யதந்தி. ‘மாம்_நான்என்பது ஈஷ்வரனைக் குறிக்கின்றது. தங்களது அனுபவங்களை ஆராய்வதன் மூலம் விருப்பு-வெறுப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலிருக்கின்ற நிலையாமையை அவர்கள் உணர்கிறார்கள். இதன்மூலமாக ராக-த்வேஷத்தின் கட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். பாபச் செயல்களை செய்யும் போக்கிலிருந்தும் ஏற்கனவே விடுபட்டுவிட்டதால், பகுத்தறியும் விவேக சக்தியை பெற்றவர்களாக பரமேஷ்வரனை அறியும்பொருட்டு, தன்னிலிருந்து வேறாக இல்லாத ஈஷ்வரனை அறியும்பொருட்டு அவரின் அருளை நாடுகிறார்கள். இதற்காக அவர்கள் முயற்சி செய்கிறார்கள் - யதந்தி.

எப்படிப்பட்ட முயற்சிகளின் மூலம் இதைச் செய்கிறார்கள்? சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனத்தின் மூலம் மனதை என்னிடத்தில் வைத்தவர்களாக ஆகிறார்கள். முன்பு விருப்பு-வெறுப்பிற்குரிய பொருள்களில் மூழ்கியிருந்த மனதை இப்போது சாஸ்திர விசாரமானது பரமேஷ்வரனின் மீது நிலைத்திருக்க வழிவகுக்கிறது. உதாரணமாக, பற்பல வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட பொருட்களின் விலைப்பட்டியலை புரட்டும்போது மனதை கவனியுங்கள். நாம் முன்னர் அறிந்திராத பல விருப்பங்கள் வெளிப்பொங்குவதைக் கவனிக்கலாம். திடீரென்று வெளிக்கிளம்பும் ஆசையை, அதன் தேவையை காணமுடியும். இது ஒருவகை மனம். மேலும் உபநிஷத் அல்லது கீதையின் பக்கங்களைப் படிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். இந்த மனம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. ஒரு நிறைவான ஒடுங்கிய மனதை உணரலாம்இதனால்தான் சாஸ்திரம் என்பது மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டும். ‘தத் த்வம் அஸிஎன்ற ஒரு விஷயம் மட்டுமே புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனினும் இந்த தத்துவ சிந்தனையில் அதிக காலம் மனதை இருக்கச் செய்யவே சிரவணம் எனும் சாஸ்திர விசாரத்தைச் செய்கிறோம். இதிலேயே சந்தேகங்களைத் தீர்க்கும் மநநமும் இயல்பாகவே நடக்கிறது. இதன்மூலமாக ஒருவித நுண்ணறிவு, வஸ்து-ஞாநம் ஏற்படுகிறது. நிதித்யாசன தியானத்தின் மூலம் இந்த ஞானம் உறுதியையும் தெளிவையும் அடைகிறது

சிரவண, மநந, நிதித்யாசனத்தில் நேரத்தை செலவிடுவது என்பது பரமேஷ்வரனைச் சிந்திப்பதைக் குறிக்கிறது. இதையே ப்ரம்மாப்4யாஸம் என்கிறோம். தத் சிந்தநம் தத் கதநம் அந்யோந்யம் தத் ப்ரபோதநம்அதை(ப்ரம்ம விஷயத்தை) சிந்திப்பது, அதையே பேசுவது, சக மாணவர்கள் உள்ளிட்டோரிடம் அதை குறித்து கலந்துரையாடுவது, அனைத்தும் ப்ரம்மாப்4யாஸம் ஆகும். இதனால் அடையப்படும் உறுதியான சிந்தனை, ஒடுக்கம் போன்றவை பரமேஷ்வரனிடம் வசித்தலை(பரமேஷ்வர-ஆச்ரய) குறிக்கிறது. இதுவே ஈஷ்வரனிடம் சரணடைதல் எனப்படுகிறது.


=> ஈஷ்வரனை சரணடைந்ததன் பலன்:

அவர்கள் - தே, அந்த ப்ரம்மத்தை - தத்3 ப்3ரஹ்ம, அறிகிறார்கள் - விது3:. விசாரத்தின் வடிவில் ஈஷ்வரனை சரணடைந்தவர்கள் அதன் பலனாக அவர்களிடமிருந்து வேறாக இல்லாத என்னை, அந்த ப்ரம்மத்தை அறிகிறார்கள். இங்குதத்என்பது இந்த முழு படைப்பிற்கும் காரணமான ஸத்யம்-ஞானம்-அனந்தம் ப்ரம்மத்தை குறிப்பதால் என்னை சரணடைந்தவன், இயல்பாகவே அனைத்தையும் அறிகிறான்

இந்த வாக்கியத்தை மீண்டும் ஒருமுறைப் பார்ப்போம். என்னிடம் அடைக்கலமாகி அவர்கள் முயற்சி செய்கிறார்கள்(மாம் ஆச்1ரித்ய யதந்தி). இதனால் அவர்களுக்கு கிடைப்பது என்ன? நான் பரமாத்மாவாக இருப்பதனால் என்னிடம் சரணடைந்தவர்கள் அந்த ப்ரம்மத்தை அறிகிறார்கள்(தே விது3: தத்3 ப்3ரஹ்ம). இதுயதந்திஎன்ற சொல்லின் பொருளை மிகத் தெளிவாக காட்டிக் கொடுக்கிறது. அதாவது அவர்களின் முயற்சி அறிவை அடைவற்காகவே உள்ளது. இந்த அறிவு, முதுமை மற்றும் மரணத்திலிருந்து விடுதலையை அடைவிக்கின்றது(ஜரா மரண மோக்ஷாய). இதிலிருந்து விடுதலைக்கு, மோக்ஷத்திற்கு தேவையானது அறிவு மட்டுமே என்பது தெளிவாகிறது. ஆனால் அறிவதன் மூலமாக மட்டும் ஒருவன் எப்படி மரணத்திலிருந்து தப்பிக்க முடியும்? அனைத்து ஞானிகளும் மரணித்து விட்டார்களே! அதாவது அவர்களின் உடல்கள் சென்றுவிட்டனவே! எனில் ஞானி ஒருபோதும் மரணிப்பதில்லை ஏனெனில் அவர் பரப்ரம்மமாக உள்ளார். ‘ஞானியை நானாகவே கருதுகிறேன்என பகவான் சுலோகம் 7.18 - ல் கூறிகிறார். எனவே ஞானி பகவானிலிருந்து வேறாக இல்லை, எனவே மரணமில்லை, அழிவில்லை


=> அத்யாத்மமும் கர்மமும்:

சிரவண, மநந, நிதித்யாசனம் எனும் முயற்சியின் மூலம் என்னை சரணடைந்த ஞானி ப்ரம்ம தத்துவம் மட்டுமின்றி மேலும் சிலவற்றை அறிவதாக பகவான் கூறுகிறார். இந்த சுலோகத்தில் தொடங்கி அடுத்த சுலோகம் வரை மொத்தம் ஏழு சொற்களை அறிமுகப்படுத்தி, இவைகளை ஒரு ஞானி அறிவதாகக் கூறுகிறார். அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்க, அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இந்த ஏழு சொற்களையும் விளக்குகிறார். ப்ரம்மத்தை பற்றிய தெளிவான ஞானத்தினால் அவர்கள் அத்யாத்மம் முழுதையும் அறிகிறார்கள்க்ருத்ஸ்நம் அத்4யாத்மம். அதாவது ப்ரம்மத்தை முழுவதுமாக தனது சுயசொரூபமாக அறிகிறார்கள். ‘க்ருத்ஸ்நஎனில் மொத்தமாக, முழுவதுவாக என்று பொருள். ‘அத்4யாத்மம்எனில் ஆத்மாவை, ஒருவனின் சுயத்தைக் குறிக்கின்றது, ப்ரத்யகாத்மா. ப்ரத்யகாத்மாவான தன்னை அந்த ப்ரம்மத்தோடு ஐக்கியப்படுத்திப் பார்க்கிறான். இதனால் அவர்கள் கர்மத்தையும் நன்றாக அறிகிறார்கள்கர்ம அகி2லம். ‘நான் எந்தச் செயலையும் செய்வதில்லை, எதையும் செய்விப்பதுமில்லைஎன்று புரிந்து கொள்கிறான். அதே நேரத்தில், கர்மங்கள் என் முன்னிலையில் நடைபெறுகின்றன என்ற கர்மத்தின் உண்மை முழுவதையும் புரிந்துகொள்வதால்அகிலஎன்ற சொற்பிரயோகம் உள்ளது. இதைப் பற்றிய மேலும் விளக்கத்தை நாம் அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||7.30|| ஏழு சொற்களின் தொடர்ச்சி:

साधिभूताधिदैवं मां साधियज्ञं ये विदु:  

प्रयाणकालेऽपि मां ते विदुर्युक्तचेतस: ।। ३० ।।

ஸாதி4பூ4தாதி4தை3வம் மாம் ஸாதி4யஜ்ஞம் யே விது3:  

ப்ரயாணகாலேऽபி மாம் தே விது3ர்யுக்தசேதஸ: ।। 30 ।।


:  :  யார்   मां  மாம்  என்னை    साधिभूतं साधिदैवं साधियज्ञं   ஸாதி4பூ4தம் ஸாதி4தை3வம் ஸாதி4யஜ்ஞம்   அதிபூதம், அதிதெய்வம், அதியக்ஞத்துடன் கூடியவனாகவும்   विदु:  விது3:  அறிகிறார்களோ   

युक्तचेतस: ते  யுக்தசேதஸ: தே  யோகத்தில் நிலைநின்ற மனதையுடைய அவர்கள்   

प्रयाणकाले अपि   ப்ரயாணகாலே அபி   சாகும் தருவாயிலும்   मां विदु:  மாம் விது3:  என்னை அறிகின்றனர்.


யார் என்னை அதிபூதத்துடனும் அதிதெய்வத்துடனும் அதியக்ஞத்துடனும் கூடியவனாக அறிகிறார்களோ, யோகத்திலே நிலைநின்ற மனதையுடைய அவர்கள், சாகும் தருவாயிலும் என்னை அறிகின்றனர்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் அறிமுகப்படுத்த ஆரம்பித்த ஏழு சொற்களின் தொடர்ச்சி இங்கு கொடுக்கப்படுகிறது. அதிபூதமாக அதிதெய்வமாக அதியக்ஞமாக ஈஷ்வரனாக என்னை அறிகிறான்ஸாதி4பூ4தம் ஸாதி4தை3வம் ஸாதி4யஜ்ஞம் யே விது3:, என்கிறார் பகவான். இங்கு அதிபூதம் போன்ற சொற்களுடன் இணைக்கப்பட்டுள்ள முன்னொட்டுஎன்பதுசேர்த்துஎன்ற பொருளைத் தருகிறது. அதாவது, ‘அதிபூதத்துடன் கூடியவனாக என்னை அறிபவன்என்பது பொருள். அவர்கள் என்னை பூதங்களுடன் கூடிய உலகத்தின் வடிவில் இருப்பவனாக, அதி4பூ4, அனைத்து தேவதைகளாக, அதி4தை3, அறிகிறார்கள். மேலும் யக்ஞமாகவும், அதி4யஜ்ஞம், என்னை அங்கீகரிக்கிறார்கள். இந்த மூன்று சொற்களின் விளக்கத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்


=> மரண காலம்:

யோகத்தில் நிலைநின்ற மனதையுடைய இவர்கள், அதாவது ஈஷ்வர ஞானத்தில் எந்த தடைக்காரணிகளும் இல்லாத இந்த யுக்தசேதஸ:, மரண காலத்திலும் என்னை அவ்விதமே அறிகிறார்கள்ப்ரயாணகாலே அபி மாம் விது3:. பொதுவாக மரண காலத்தில் மனக்குழப்பமடைவது மாந்தரது இயல்பு. ஆனால் தனது சுயத்தை ஈஷ்வரனாக அறிந்த ஞானிக்கு அத்தகைய குழப்பம் அல்லது மறதி என்பது வருவதில்லைவிஸ்மரணம் நாஸ்தி. இறக்கும் தருவாயிலும் கூட அவர்கள் என்னை அறிகிறார்கள். இந்த வாக்கியத்தில் வரும்அபி_கூடஎன்ற சொல்லின் பொருள் இதுதான். மரணத்தின் போது உபாசகர்கள் உட்பட பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக ஞாபகமறதி இருந்தாலும், ஞானிகளுக்கு இந்த விஸ்மரணம் இல்லை. இருப்பதெல்லாம் இறைவனே, எல்லாம் சிவமயம் என்பதை அவர்கள் மறப்பதில்லை. எப்படி இது சாத்தியம்? அனைத்துமாக இருக்கின்ற ப்ரம்மத்தை தனது சுயமாக அறிவதனால் இது சாத்தியமாகிறது. சுய-அறிவை நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லை. சுய-அறியாமை நீக்கப்பட வேண்டும் அவ்வளவே. சுயம் என்பது எல்லா காலத்திலும் தானாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த அறிவைத் தடுக்கும் தடைகள் எதுவுமில்லாத இந்த யுக்தசேதஸ:, மரண நேரத்திலும் என்னை அவ்விதமே அறிகிறான்.  

அத்யாத்மம், கர்மம், அதிபூதம், அதிதெய்வம் மற்றும் அதியக்ஞம் போன்றவற்றை ப்ரம்மமாக அறிந்த ஞானிக்கு, ஈஷ்வனுக்கும் அவனுக்கும் இடையேயான ஐக்கிய-ஞானம் மரணத்தின் போதும் பாதிக்கப்படாமல் உறுதியாக நிற்கிறது. அவர்கள் இங்கு வாழும்போதும் உடல் வீழ்ந்த பின்பும் முக்தனாக இருக்கின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे ज्ञानविज्ञानयोगो नाम सप्तमोऽध्याय: ।।

ஓம் தத் ஸத் ।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 ஞாநவிக்ஞாநயோகோ3 நாம ஸப்தமோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஞானவிக்ஞானயோகம் என்ற ஏழாம் அத்தியாயம்.

---------------------------------------------------------------------------------------------------------------------

ஞானவிக்ஞானயோகம் - சாரம்:

  1. ஈஷ்வர சொரூபம், பக்தியோகம், சரணாகதி அறிமுகம் [1 - 3]

  2. ஈஷ்வர சொரூப விளக்கம் [4 - 7]

  3. ஈஷ்வர விபூதி [8 - 12]

  4. சம்சார காரணம் [13]

  5. மாயை லக்ஷணம், சரணாகதி [14]

  6. பக்தர்கள் [15 - 16]

  7. பக்தர்களுக்குள் உள்ள படிகள் [17 - 19]

  8. ஷகாம பக்தர்களின் பூஜை நியமங்கள் [20 - 23]

  9. பரா ப்ரக்ருதியின் சொரூபம் [24 - 26]

  10. சம்சாரத்தின் தோற்றம், மோக்ஷத்திற்கான படிகள் [27 - 28]

  11. ஞானி ஏழு தத்துவத்தை அறிந்துள்ளான் [29 - 30]

---------------------------------------------------------------------------------------------------------------------