சனி, 30 ஜூலை, 2022

தியான யோகம் 6.4 - 6.5

||6.4||எப்பொழுது ஒருவன் யோகாரூடனாகிறான்?

यदा हि नेन्द्रियार्थेषु कर्मस्वनुषज्जते

सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते ।। ।।

யதா3 ஹி நேந்த்3ரியார்தே2ஷு கர்மஸ்வநுஷஜ்ஜதே । 

ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகா3ரூட4ஸ்ததோ3ச்யதே ।। 4 ।।


यदा  யதா3  எப்பொழுது   इन्द्रिय अर्थेषु   இந்த்3ரிய அர்தே2ஷு  இந்திரிய விஷயங்களில்  

अनुषज्जते   அநுஷஜ்ஜதே  பற்று வைக்காது   कर्मसु   கர்மஸு  வினையாற்றுதலில் விருப்பம் கொள்ளாது  सर्व सङ्कल्प सन्न्यासी   ஸர்வ ஸங்கல்ப ஸந்ந்யாஸீ   எல்லா எண்ணங்களையும் விட்டுவிடுகிறவன்  

तदा हि   ததா3 ஹி   அப்பொழுதுதான்   योग रूढ:   யோக3 ஆரூட4:  யோகாரூடன் என்று   

उच्यते   உச்யதே சொல்லப்படுகிறான்.


எப்பொழுது ஒருவன் இந்திரிய விஷயங்களில் பற்றில்லாமல், வினையாற்றுதலில் விருப்பமற்று எண்ணங்களை விட்டொழிக்கிறானோ, அப்பொழுதுதான் யோகாரூடன் என்று சொல்லப்படுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன்யோக நிலையில் ஏறியவன்என்று சொல்லப்படுகிறான்.


விளக்கம்:

யோகத்தில் நிலைபெற்றவன் யோகாரூடன் என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். இங்கு பகவான் அத்தகைய யோகாரூடனின் லக்ஷணத்தை வரையறுக்கிறார். அவன் அனைத்து இந்திரிய விஷயங்களிலும், இந்த்3ரிய அர்தே2ஷு, வைதிக மற்றும் லெளகிகம் உள்ளிட்ட  அனைத்துவித செயல்களிலும், கர்மஸு, பற்றற்றவனாக தீர்க்கமான மனதுடன் வைராக்கியத்தையும் மனநிறைவையும் அனுபவிக்கிறான்.


=> எப்பொழுது ஒருவன் யோகாரூடனாகிறான்?

(i) வைராக்கியம் மற்றும் முமுக்ஷுத்வம் தீவிரமாகி முழுமையை அடையும் போது,

(ii) மனதிலுள்ள ஆசைகள் முழுமையாக நீங்கும்போது,

(iii) பொருட்களினிடத்தில் பிரயோஜன புத்தி(இது எனக்கு இவ்விதத்தில் பிரயோஜனப்படும் எனும் பற்று) இல்லாமல் போகும்போது,

(iv) மனதிலுள்ள ரஜோகுணம் கர்மத்தை தூண்டிக்கொண்டேயிருக்குமாகையால், அதை சத்வகுணப் பிரதானமாக மாற்றி அதன் கர்மப்பற்றை நீக்கும்போது.

பெரும்பாலானோர் வைராக்கியம் எனும் சொல்லை வெறுப்பு என்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வர். ஆனால் உண்மையில் அது ஒரு பொருளின் மீதுள்ள உதாசீன பாவனையைக் குறிக்கிறது. அப்பொருளின் இருப்பிலும் இல்லாமையிலும் மனதில் நிலவும் சமநிலை அதன் மீதான வைராக்கியத்தைக் காட்டுகிறது.


=> கர்தவ்ய புத்தி:

கர்மத்தைப் பொருத்தவரை தன்னை ஒரு செயல் செய்பவனாக யோகாரூடன் நினைப்பதில்லை. அதாவது, ‘இதை நான் செய்ய வேண்டும், அதைச் செய்து என் நிலையை மேம்படுத்தப் போகிறேன்என்று நினைக்கும் மனம் அவனிடம் இல்லை; கர்தவ்ய-புத்தி இல்லை.

மறுபுறம், ஒரு கர்மயோகியானவன் இந்த கர்தவ்ய புத்தியைக் கொண்டிருக்கிறான் - ‘இது என்னால் செய்யப்பட வேண்டும், அதனால் நான் அதைச் செய்கிறேன்என்ற மனப்பான்மை கர்மயோகம்.

இங்கே கிருஷ்ணர், யாருக்கு செய்பவன் என்பது இனி பொருந்தாதோ அந்த யோகாரூடனைப் பற்றி பேசுகிறார். உண்மையில், வேதம் இப்படிப்பட்டவனைப் பற்றி பேசவே இல்லை; அது கர்த்தாவாக தன்னை நினைப்பவனிடம் மட்டுமே, ‘ செயல் செய்பவனே, கர்த்தாவே, இந்த செயலைச் செய், இந்த பலனைப் பெறுவாய்எனக் கூறுகிறது. ஆகவேதான் கர்தவ்ய புத்தி உள்ளவன், தன்னை செயல் செய்பவனாக நினைப்பவன் இதற்கு செவி சாய்க்கிறான். அதேசமயம், தன்னை அகர்த்தாவாக அடையாளம் கண்டுகொண்டவன் இதை பொருட்படுத்த மாட்டான். இதையே பகவான் இங்கு, கர்மஸு அநுஷஜ்ஜதே, என்ற வெளிப்பாட்டின் மூலம் கூற விழைகிறார். கர்தவ்ய புத்தி இல்லையாதலால் எந்தவித கர்மத்தோடும் யோகாரூடனுக்கு எந்த பற்றும் இல்லை. எனவே, ‘இதை அடைவதினால் மேம்பட்டவனாகிவிடுவேன்போன்ற இந்திரிய விஷயங்கள் குறித்த சிந்தனைகள் தூண்டப்படுவதில்லை. ஆகையினால் அவன் செய்வதற்கு என எதுவுமில்லாமல் போகிறது.

இந்த சுலோகத்திற்கான பாஷ்யவிளக்கத்தில் சங்கரர், நித்ய-நைமித்திக-காம்ய-ப்ரதிசித்த எனும் கூட்டுசொல்லை பயன்படுத்தி, மக்கள் பொதுவாகச் செய்யும் பல்வேறு வகையான கர்மங்களைக் குறிப்பிடுகிறார். நாம் ஏற்கனவே பார்த்தது போல, நித்ய கர்மங்கள் என்பது தினமும் செய்ய வேண்டிய வேத சடங்குகள் மற்றும் நைமித்திக கர்மங்கள் என்பது எப்போதாவது செய்ய வேண்டிய சடங்குகள். சந்ததி, ஆரோக்கியம், செல்வம் அல்லது சொர்க்கம் போன்ற சில ஆசைகளை நிறைவேற்ற செய்யப்படும் வைதிக கர்மங்கள், காம்ய கர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பிரதிசித்த கர்மங்கள் என்பவை சாஸ்திரங்களால் தடைசெய்யப்பட்டவை

தன்னை அகர்த்தாவாக அறிந்து கர்தவ்ய புத்தியை நீக்கியவனாதலால், வேதப்பூர்வமாகக் கட்டளையிடப்பட்ட செயலாக இருந்தாலும் அல்லது அது உலகியல் இயல்பைக் கொண்டதாக இருந்தாலும் அந்த கர்மத்திலோ மற்றும் அதனுடைய பலனிலோ யோகாரூடனுக்கு எவ்வித பற்றும் இல்லை.


=> சங்கல்பத்தை துறந்தவன்:

இவ்விதத்தில் ஒருவன்ஸர்வ ஸங்கல்ப ஸந்ந்யாஸீஆகின்றான். ‘நான் செய்பவன், கர்த்தா, நான் அனுபவிப்பவன், போக்தாபோன்றவை சங்கல்பங்கள். மேலும், விஷயே ப்ரீதி புத்தி: ஸங்கல்ப: - ஒரு பொருளின் மீதுள்ள சுகம் கொடுக்கிறது எனும் பாவனை சங்கல்பமாகும். இந்த மனப்பான்மையுடன் பொருளைச் சிந்திக்கும்போது ஆசை உறுதியானதாக மாறுகிறது. இத்தகைய பாவனைகளை விட்டவனாக அவன் அனைத்து கர்மங்களையும் துறக்கிறான். இந்நிலைக்கு பின் அவன் எது செய்தாலும் அது பிராரப்தத்தினாலேயே நடைபெறுகிறது

  உண்மையில் கர்மம் தன்னளவில் யாரையும் பிணைப்பதில்லை; அதற்கு அந்த சக்தி கிடையாது. அந்த குறிப்பிட்ட செயலைச் செய்வதன் மூலம் இதை சாதிக்கலாம்; இதை அடையலாம் என்ற எண்ணமே ஒருவனை செயலுடன் பிணைக்கிறது. இவ்விதமான அனைத்து எண்ணங்கள் மற்றும் கற்பனைகளிலிருந்து விடுபட்டவன் ஸர்வ ஸங்கல்ப ஸந்ந்யாஸீ என அழைக்கப்படுகிறான்.

சங்கற்பத்தினின்றே ஆசையும் செயலும் வடிவெடுக்கின்றன’ - மனு II-2.

ஆசையே, உனக்குப் பிறப்பிடம் எது என்பதை நான் அறிகிறேன். சங்கற்பத்திலிருந்து நீ உதித்துள்ளாய். உன்னை நான் சங்கற்பிக்காமல் விட்டுவிடுகிறேன். நீ நிர்மூலமாய்ப் போய்விடுவாய்’ - சாந்திபர்வம் 177-25.


பிராணன் போனால் இந்திரியங்கள் ஒடுங்குவதுபோல சங்கல்பம் போனால் ஆசையும் கர்மமும் அடிபட்டுப்போகின்றன. அனைத்து செயல்களையும் கைவிடுவது என்பது எல்லாவித ஆசைகளையும் கைவிடுவதைக் குறிக்கிறது, ஏனெனில் அவற்றைத் தூண்டும் ஆசைகளை விடாமல் ஒருவனால் அனைத்து செயல்களையும் விட்டுவிட முடியாது. மேலும், ‘நானே பூரணமானவன்என்று அறியாதவரை ஆசைகளை விடமுடியாது. இதை அறிந்து, செய்பவன் எனும் பாவனை நீங்கும்போதுதான் ஆசைகளைத் துறப்பது சாத்தியமாகிறது. இங்ஙனம் ஒருவன் யோகாரூடன் ஆகும்போது சம்சார துக்களினின்று விடுபட்டு ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை உன்னதத்துக்குக் கொண்டுவருகிறான்.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஆசைகளாகிய பெருங்காற்றினால் சித்தமாகிய ஆகாசம் அலைக்கழிக்கப்படும்வரையில், ஈசுவரனாகிய ஒளியை அங்குக் காண இயலாது. ஈசுவரனுடன் ஐக்கியமாகி சாந்தமாக இருக்கும் மனதில்தான் அந்த திவ்விய தர்சனம் தோன்றும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.5|| பஹிரங்க சாதனையாக சுயமுயற்சியைக் கூறுகிறார்:

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत्

त्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: ।। ।।

உத்34ரேதா3த்மநாத்மாநம் நாத்மாநமவஸாத3யேத்  

ஆத்மைவ ஹ்யாத்மநோ 3ந்து4ராத்மைவ ரிபுராத்மந : ।। 5 ।।


त्मना  ஆத்மாநா  ஆத்மாவைக் கொண்டு(தன்னால்त्मानं  ஆத்மாநம்  ஆத்மாவை(தன்னை)   

उद्धरेत्   உத்34ரேத்  உயர்த்திக் கொள்   त्मानम्   ஆத்மாநம்  ஆத்மாவை(தன்னை)  

अवसादयेत्   அவஸாத3யேத்  தாழ்த்திக் கொள்ளக் கூடாது   हि  ஹி   ஏனென்றால்   

त्मा एव   ஆத்மா ஏவ  ஆத்மாவே(தானே)   त्मन:  ஆத்மாநஆத்மாவுக்கு(தனக்கு)   

बन्धु:  3ந்து4:  நண்பன்   त्मा एव   ஆத்மா ஏவ  ஆத்மாவே(தானே)   

त्मन:  ஆத்மாநஆத்மாவுக்கு(தனக்கு)   रिपुரிபு:  பகை.


தன்னால் தன்னை உயர்த்திக் கொள்க. தன்னைத் தானே இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்; தானே தனக்குப் பகை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் பஹிரங்க சாதனையாக ஒரு சாதகனின் சுய முயற்சியைக் குறிப்பிடுகிறார். அதாவது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும், தன்னை அழித்துக் கொள்ளவோ அல்லது அழிக்க அனுமதிக்கவோ வேண்டாம் என்பது மிகத் தெளிவாக இதில் கூறப்படுகிறது. ஆத்மா, தானே, தனக்கான பெரும் நலம்விரும்பியும், சிறந்த உதவியாளனும் ஆவான். ஏனெனில் ஒருவன் தனக்குள்ள தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின்(free will) மூலம் தெரிவுசெய்த செயல்களினால், தனக்குத் தானே நன்மை செய்து, அதற்கான பயனைத் தானே அடைகிறான்.


இந்த சுலோகத்தில்ஆத்மாஎன்ற சொல், இயல்பிலேயே ஏற்கனவே சம்சாரப் பெருங்கடலில் இருக்கும் ஒரு தனிமனிதனை, நம்மைக் குறிக்கிறது. ஒருவன் திடீரென்று இந்த சம்சாரத்திற்குள் நழுவி விழுவதில்லை; அதனுடனேதான் சேர்ந்து பிறக்கின்றான். எனில் அதிலிருந்து எப்படி வெளியேறுவது? என்ற கேள்விக்கு  ‘ஆத்மாநா_ஆத்மாவினால்’, தன்னால், தனது சுயத்தினால் என்பதை பதிலாகத் தருகிறார் பகவான். ஒருவன் தன்னையும் தனது வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளையும் கேள்வி கேட்பதன் மூலமாக, அதிலுள்ள கட்டமைப்பையும் குழப்பங்களையும் மறுமதிப்பீடு செய்வதன் மூலமாக இது நடைபெறுகிறது.  


=> தானே தனக்கு நண்பன்:

தவறான மற்றும் முறையற்ற முன்னுரிமைகளே அனைத்து பிரச்சனைகளுக்கும் முதன்மையான காரணியாகிறது. எனவே, ஒருவன் வாழ்க்கை குறித்த தனது மதிப்பீடுகளை மறுசீரமைக்கும்போது அவனது முன்னுரிமைகள் சரியானதாக மாறுகிறது. இந்த விசாரணையை (விசாரம்) ஒருவன் தன்னிடத்தில் மட்டுமே செய்யமுடியும்ஆத்மாநா ஏவ. எது சரி தவறு, என்ன செய்ய வேண்டும் மற்றும் செய்யக் கூடாது என்பதான இந்த விசாரம் ஒருவனின் பார்வையை, அறிவாற்றலை மாற்றத்திற்கு உட்படுத்துகிறது. இது விசாரணையின் ஒரு படி

அடுத்த கட்ட விசாரத்தில் அவன் சில சூழ்நிலைகளில், தனக்கு உருவாகும் உதவியற்ற நிலைமையை அடையாளம் காண்கிறான். இதுவே பிரார்த்தனை மனப்பான்மையை அவனுக்குள் கொண்டுவருகிறது. இவ்வித மனப்பாங்கினால் அவன் கர்மயோக வாழ்க்கைமுறைக்குள் செல்கிறான்.

அறிவைப் பெற குருவை நாடுவதும் அவனது முயற்சியினாலேயே நடக்கிறது. இவ்விதமாக எல்லா வழிகளிலும், ஒருவன் தன்னைத்தானே மேம்படுத்துதல் நிகழ்கிறது. அதனால்தான் கிருஷ்ணர் இங்கு ஒருவனின் நண்பனாக நலம்விரும்பியாக அவனையே கூறுகிறார்ஆத்மா ஏவ ஆத்மாந: 3ந்து4:.

அடுத்ததாக நிதித்யாசனம் எனும் சாதனை வரை வந்த ஒரு முமுக்ஷுவுக்கு, சாஸ்திரம் குரு மற்றும் பகவான் என வேறு யாரும் உதவ முடியாது. அந்த குறிப்பிட்ட சாதனைக்கு அவனைத் தவிர வேறெந்த தடையுமில்லை. ஆகவேதான் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என இங்கு அறிவுறுத்துகிறார்

மனக் கட்டுப்பாட்டு விஷயத்தில் ஒரு சாதகன் தோல்வி மேல் தோல்வியைச் சந்திக்க நேரிடும். அந்நேரத்தில் தன்னைக் குறித்த தாழ்வு மனப்பான்மை ஒருவனைத் தாக்கும். இவ்வித தோல்வியில் மனம் தளராது அப்பயிற்சியைத் தொடர சுயமுயற்சியின் அவசியத்தை இவ்விதமாக வலியுறுத்துகிறார்.


=> மூன்றுவித அணுகிரஹம்:

ஒரு ஆத்ம சாதகனுக்கு மூன்றுவித அணுகிரஹம் தேவை.

(1) ஈஷ்வர க்ருபா

(2) குரு க்ருபா

(3) ஆத்ம க்ருபா

இந்த சுலோகத்தில்ஆத்ம க்ருபாவிளக்கப்படுகிறது; அதாவது நம்முடைய அணுகிரஹம்(கிருபை) நமக்குத் தேவை. யாரொருவனுக்கு அவனுடைய இந்திரியங்கள் கட்டுப்பட்டிலுள்ளதோ அவனுக்கு அவனுடைய கிருபை உள்ளது எனச் சொல்லப்படுகிறது


=> நண்பன் அல்லது பகைவன்:

சம்சாரத்திலிருந்து மேலெழ ஒரு சாதகன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலில் மூழ்கிப்போகாது தன்னைத் தானே மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டும். தன்னைத் தாழ்த்திக் கொள்ளலாகாது. கவனக் குறைவினால் மீண்டும் அனாத்மாவில் வீழ்ந்து விடலாகாது. உந்தப்பட்டு ஆத்ம விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்போது இந்திரிய விஷயத்தில் வீழ்ந்து விடாதே; பஹிர்முகமாகி விடாதே என அறிவுறுத்துகிறார். நிதித்யாசன சாதனையில் அவனுடைய முன்னேற்றத்திற்கு அவனே காரணமாகின்றான். அவனேதான் அவனுக்கு நண்பன்; இல்லையெனில் அவனே அவனுக்கு எதிரியுமாகின்றான்.

அறியாமையினால் அல்லது சரியான வாழ்க்கை வாழாமையினால் மனிதன் தன்னையே கெடுத்துக்கொள்கிறான். அப்படித் தன்னையே கெடுப்பதால் தனக்குத்தானே பகைவனாகிறான். நல்வாழ்க்கை வாழ்ந்து தன்னை மேலெடுப்பவன் தனக்கே தோழனாகிறான். தனக்குத் தன்னிலும் மிக்கதொரு நண்பனோ அல்லது பகைவனோ எவ்வுலகிலும் இல்லை என்பதை அறிபவன் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பேருண்மையை அறிபவனாகிறான்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------