வியாழன், 27 ஜனவரி, 2022

ஸந்யாஸ யோகம் 5.1 - 5.2

ஐந்தாம் அத்தியாயம்

ஸந்யாஸ யோகம் [सन्न्यासयोग:]


||5.1|| அர்ஜுனனின் சந்தேகம்:

अर्जुन उवाच

सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं शंससि

यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् ।। ।।

அர்ஜுந உவாச

ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோக3ம் 1ம்ஸஸி । 

யச்ச்2ரேய ஏதயோரேகம் தந்மே ப்3ரூஹி ஸுநிச்1சிதம் ।। 1 ।।


अर्जुन उवाच   அர்ஜுன உவாச  அர்ஜுனன் சொன்னது

कृष्ण  க்ருஷ்ண  கிருஷ்ணா   कर्मणां  கர்மணாம்  கர்மங்களை  सन्न्यासं  ஸந்ந்யாஸம்  விட்டுவிடுதலையும்  

पुन:  புந:  மீண்டும்   र्योगं   யோக³ம்   அதைக் கையாளுதலையும்/கர்மயோகத்தையும்   

शंससि  1ம்ஸஸி  புகழ்கிறீர்கள்   एतयो:  ஏதயோ:  இவ்விரண்டினுள்   यत् யத் எது   

श्रेय:  ச்1ரேய:  சிறந்ததோ  तत् एकम्  தத் ஏகம்  அந்த ஒன்றை सुनिश्चितम्  ஸுநிச்1சிதம்  நிச்சயித்து   

मे ब्रूहि  மே ப்3ரூஹி  எனக்கு சொல்லுங்கள்.


அர்ஜுனன் சொன்னது:

கிருஷ்ணா, கர்மத்தை துறக்கவும், பின்பு அதைக் கையாளவும் சொல்லுகிறீர்கள். இவ்விரண்டினுள் எந்தவொன்று சிறந்ததோ அதை நிச்சயித்து எனக்கு சொல்லுங்கள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.


விளக்கம்:

நான்காவது அத்தியாயத்தில் 18, 19, 21, 22, 24, 32, 33, 37, 41 முதலிய சுலோகங்களில் கர்ம சந்யாசத்தைப் பகவான் வற்புறுத்தினார். அதே அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றார். முரண்படுகின்ற இவ்விரண்டையும் எவ்விதம் புரிந்துகொள்வது என அர்ஜுனனுக்கு ஐயம் ஏற்பட்டது. ஞானமே இறுதி லக்ஷியமெனில், ஞானத்தினால் அனைத்து கர்மங்களும் விடப்படுகிறதெனில், ஞானத்தை அடையும் பாதையில் கர்மத்தின் மூலமாக ஞானத்தை அடைவதற்கு பதிலாக, நேரடியாக அதற்கென இருக்கும் வாழ்க்கைமுறைக்கு செல்வதுதானே உகந்தது? என்ற சந்தேகமும் எழுந்தது.


=> ‘ஸந்யாஸசப்தத்தின் சொல்லிலக்கணம்:

ஸந்யாஸஎன்பதுஅஸ்வினையடியிலிருந்து தோன்றியது. சமஸ்கிருத மொழியில், வினையடி தா4து(धातु:) என்றழைக்கப்படும். ‘அஸ்என்ற வினையடியை வினைச்சொல்லாக்கும் போதுஅஸ்யதிவிட்டுவிடுதல் என்ற பொருள்தருகிறது. ‘ஸம்மற்றும்நிஆகியவை முன்னொட்டுக்கள். இது சமஸ்கிருத மொழியில்உபசர்க3என்றழைக்கப்படும்.

   அஸ்யதி (अस्यति) - தூக்கி எறிதல்; விட்டுவிடுதல்.

   நி (नि) - நிச்சயமாக

   ஸம் (सम्) - நன்கு (முழுமனதுடன்)

  ஸம் + நி + அஸ்யதி = நன்கு நிச்சயமாக விடுதல்

ஆகவே அனைத்தையும் முழுமையாக நிச்சயமாக துறத்தல் சந்யாசம் எனப்படுகிறது. பொதுவாக சந்யாசம் என்பது நான்காவது ஆஸ்ரமத்தை குறிப்பதாகவே பயன்படுத்தப்படுகிறது


=> ஒருவன் ஏன் சந்யாச ஆஸ்ரமத்தை எடுத்துக் கொள்கிறான்?

இரண்டு காரணத்திற்காக இது நடைபெறுகிறது.

(1) ஞானத்தினால் (ஞானாத்_ज्ञानात्) -> வித்3வத் ஸந்யாஸ:

(2) வைராக்கியத்தினால் -> விவிதி3ஷா ஸந்யாஸ:

(1) வித்3வத் ஸந்யாஸ:, இது ஞானி எடுக்கும் சந்யாசம். அதிக விவகாரத்திலிருக்கும் ஒருவனுக்கு நிஷ்டை கடினமானதாக இருக்கும். ஏற்கனவே ஞானம் அடையப்பட்டு விட்டதால் அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்த ஞானி, ஞானத்தில் நிலைபெற(ஞானநிஷ்டார்த்தம்) லெளகிக விவகாரத்தை துறக்கிறான். மேலும் பிராரப்தம் ஒத்துழைக்கும்போது இது நடைபெறுகிறது; கண்டிப்பாக சந்யாசத்திற்குச் சென்றேயாக வேண்டும் என்று தன்னைக் கட்டாயப்படுத்திக் கொள்வதில்லை. இந்த சந்யாஸத்தின் தன்மையைப் பார்க்கும்போது, ‘நான் அகர்த்தாஎன்ற ஞானத்தினால் அவன் ஏற்கனவே எல்லா கர்மத்தையும், கர்த்தா என்ற பாவனையும் துறந்து விட்டதனால், இது சாத்ய ரூபமானது; பலன் ரூபமானது. இங்கு ஞானி மனதினால் அனைத்து கர்மத்தையும் துறந்துவிட்டதனால்ஸர்வ கர்ம த்யாக:நடைபெறுகிறது.


(2) விவிதி3ஷா ஸந்யாஸ:, உலக இன்பத்தில் வைராக்கியம் ஏற்பட்ட அக்ஞானி ஞானத்தை அடையும் பொருட்டு எடுத்துக் கொள்ளும் சந்யாசம் இது. ஆகவே ஞானத்திற்காகவும், தனக்குண்டான வைராக்கியத்தை காப்பாற்றவும், மன சஞ்சலம் நீங்கவும், சித்த சமாதானத்திற்காகவும், சாதனைகளை நிறைவு செய்யும் பொருட்டும் இந்த வாழ்க்கைமுறையை எடுத்துக் கொள்கிறான். இந்த சந்யாசத்தின் தன்மை சாதன ரூபமானது; அதாவது வித்3வத் சந்யாசத்திற்கு, விவிதி3ஷா சந்யாசம் சாதனையாகிறது எனலாம். இங்கு வேத சடங்குகளின் துணைக் கொண்டு கடமைகளை ஒருவன் தியாகம் செய்கின்றான். எனினும் அனைத்து கர்மங்களும் முற்றிலும் விடப்படுவதில்லை. தன்னை தூய்மையாக வைத்திருத்தல், ஜபம் போன்ற சந்யாச ஆஸ்ரமத்திற்கேயுண்டான கர்மங்கள் அவனுக்கு உண்டு. சங்கரர் இதைகர்ம ஏகதேச த்யாக:என்கிறார்



வித்3வத் ஸந்யாஸ:

விவிதி3ஷா ஸந்யாஸ:

யார் எடுப்பது?

ஞானி

அக்ஞானி

எதன் பொருட்டு?

ஞான நிஷ்டைக்காக

ஞானத்திற்காக

ஏன்?

* அதிக விவகாரத்திலிருந்து விலக

  • வைராக்கியத்தை காப்பாற்ற,

  • சாதனைகளை நிறைவு செய்ய

தன்மை:

* பலம் ரூபமானது

* ஸர்வ கர்ம த்யாக:

* சாதன ரூபமானது

* கர்ம ஏகதேச த்யாக:

* சில கர்மங்கள்தான் தியாகம் செய்யப்படும்.


=> அர்ஜுனனின் சந்தேகம் என்ன?

அர்ஜுனன் பிச்சையெடுத்து உண்பதே மேல்(2.5) என சந்யாசியாக மாற விரும்புவதை வெளிப்படுத்தியபோது, ​​அவன் துறவு வாழ்க்கைமுறையை மட்டுமே மனதில் வைத்துப் பேசினான். பிரச்சனைகளால் நிறைந்துள்ள இந்த சாதாரண வாழ்க்கைமுறையை வெறுமனே துறக்க விரும்பினான். பின்னர் பகவானின் உபதேசத்திலிருந்து சந்யாஸ வாழ்க்கைக்கான அடிப்படை காரணத்தை அறிந்தவனாக, தான் ஒரு ஞானி அல்ல, அதற்கான அறிவு தன்னிடம் இல்லை, ஆகவே அதை அடைய சந்யாச வாழ்க்கைமுறையே சிறந்தது என நம்பினான் அர்ஜுனன்.

ஆகவே, ‘சந்யாசமே முக்தி என சந்யாசத்தை புகழ்ந்து இறுதியில் மீண்டும் என்னை கர்மயோகத்தை எடுத்துக் கொள்ள சொல்லி ஏன் கிருஷ்ணா சொல்கிறீர்?’ என்பது அர்ஜுனனின் கேள்வியாக உள்ளது. அர்ஜுனன் தான் செய்ய வேண்டியதை தீர்மானிக்கும் முன் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள விரும்புனான். எனவேதான் அதே கேள்வியை வேறு வேறு கோணங்களில் மீண்டும் மீண்டும் கேட்கிறான். மூன்றாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில்(3.1), ‘கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்ததென்பது உங்களது கருத்தெனில், கேசவா, என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்?’, என்றான்.

இப்போது இரண்டு அத்தியாயங்களுக்கு பின்னர், ஐந்தாம் அத்தியாயத்தின் தொடக்கத்திலும் சற்று வித்தியாசமாக சொன்னாலும்

 அதே கேள்வியையே மீண்டும் கேட்கிறான். பனிரெண்டு மற்றும் பதினெட்டு அத்தியாயங்களிலும் இதே கேள்வியை வேறொரு கோணத்தில் கேட்கப்போகிறான்

முந்தய அத்தியாயங்களில் பகவான் வித்3வத் சந்யாசத்தைப் பெருமையாகப் பேசினார். ஆனால் அர்ஜுனனோ, வித்3வத் மற்றும் விவிதி3ஷா எனும் இவ்விரு சந்யாசத்தையும் சேர்ந்து புரிந்து கொண்டதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. கண்ணன், சந்யாசம் மற்றும் கர்மயோகம் இரண்டையும் புகழ்ந்தார்; ஆனால் இப்போதுகர்மயோகத்தை எடுத்துக் கொள்யோக3ம் ஆதிஷ்ட2என்கிறார். ஆகையால் சந்யாசம் அல்லது கர்மயோகம் இரண்டில் எது சிறந்தது என ஒன்றை நிச்சயித்துக் கூறுமாறு பகவானைக் கேட்கிறான்ஏகம் ஸுநிச்1சிதம் ப்3ரூஹி.


=> ஞானத்திற்கும் கர்மயோகத்திற்குமிடையில் தெரிவுசெய்யும் வாய்ப்பு உள்ளதா?

ஞானத்தினால் கர்மங்களைத் துறக்கும் ஞான-கர்ம-சந்யாசமான, வித்வத் சந்யாசத்திற்கும் கர்மயோகத்திற்கும் இடையில், இது அல்லது அது என ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளதா? எனில் கண்டிப்பாக இல்லை. ஏனெனில் இதில் ஒன்று வழிமுறையாகவும்(சாதனை) மற்றொன்று இறுதி பலனாகவும்(சாத்யம்) உள்ளது. இது ரிஷிகேஷை அடைவதற்கும் அதற்கான பயணத்தை மேற்கொள்வதற்கும் இடையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு போன்றது. பயணிக்காமல் ஓர் இடத்தை அடையமுடியாது. ஒன்று சாதனம்; இனியொன்று சாத்யம். அதுபோல கர்மயோகம் சாதனம்; ஞான-கர்ம-சந்யாசம் சாத்யம்

அதேசமயம், கர்மயோகம் மற்றும் விவிதிஷா சந்யாசம் என இந்த இரண்டு வாழ்க்கைமுறைகளுக்கும் இடையே தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வித்வத் சந்யாசம், ஞானத்தின் பலனாக இருப்பதால் அது தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்கு அப்பாற்பட்டது. ஞான-கர்ம-சந்யாசி என்பவன் ஜனகராஜாவைப் போல ஒரு நாட்டையே ஆளும் மன்னனாக இருக்கலாம். ஒரு ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக அரசியல்வாதியாக தனது தினசரி செயல்பாடுகளிலும் அரச நடவடிக்கைகளிலும் ஈடுபட்டபோதிலும் அவர் கர்த்தா அல்ல என்ற அறிவுடன் ஞான-கர்ம-சந்யாசியாக இருந்தார். ஆகவே ஞான-கர்ம-சந்யாசியாக இருக்க சந்யாசியாக மாறவேண்டிய அவசியம் இல்லை.

கர்மயோகம் மற்றும் விவிதிஷா சந்யாசத்திற்குமிடையில் தெரிவு செய்யும் வாய்ப்பு இருந்தபோதிலும், அர்ஜுனன் கர்மயோகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் தெளிவாக கூறினார்(4.42). 


=> எது சிறந்தது?

கர்மத்தில் அகர்மத்தை பார்த்தல் எனும் அறிவே மோக்ஷம் எனில் அர்ஜுனன் அப்படிப்பட்ட அறிவை அடையும் பாதையில் செல்ல விரும்பினான். ஆகவேநான் அகர்த்தாஎனும் அறிவை அடைய, அனைத்து கர்மங்களையும் துறக்கும் வாழ்க்கைமுறையே உகந்ததாக தோன்றியது. ஏனெனில் சந்யாச ஆஸ்ரமத்தில்தான் பல பாத்திரங்களாக பங்கு வகித்தல் மிகக் குறைவு; சந்யாசியாக மற்றும் சிஷ்யனாக மட்டும் இருந்தால் போதுமானது; குறைந்தபட்ச நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டதாக இருப்பது இது. ஆனால் கர்மயோக வாழ்க்கைமுறையிலோ பாத்திரங்களும் அதற்கேயான கடமைகளும் அதிகம். மகனாக, கணவனாக, தந்தையாக, நண்பனாக, அண்டை வீட்டாராக, குடிமகனாக என பாத்திரங்கள் விரிந்துகொண்டே செல்கிறது. இந்த அனைத்து கடமைகளையும் உரிய காலத்தில் உரிய விதத்தில் செய்வதே கர்மயோகமாதலால் சந்யாச வாழ்க்கைமுறையே மோக்ஷத்திற்கு சிறந்த வழி என அர்ஜுனன் எண்ணியிருந்தான். இவ்விரு வாழ்க்கைமுறையையும் அங்கீகரித்து இறுதியில் தன்னை கர்மயோகத்தை எடுத்துக்கொள் என கிருஷ்ணர் கூறியதால் குழப்பமடைந்தவனாக, இவையிரண்டில் தனக்கு சிறந்த ஒன்றை சொல்லுமாறு பகவானைக் கேட்கிறான். ‘சிறந்ததுஎன்பதிலிருந்து தனக்கு மோக்ஷத்தை(ஷ்ரேயஸ்) எது அளிக்குமோ அதை கூறமாறு கேட்பது தெளிவாகத் தெரிகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------

||5.2|| பகவானின் பதில்:

श्रीभगवानुवाच

सन्न्यास: कर्मयोगश्च नि:श्रेयसकरावुभौ

तयोस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते ।। ।।

ஸ்ரீப43வாநுவாச

ஸந்ந்யாஸ: கர்மயோக3ச்1 நி:ச்1ரேயஸகராவுபௌ4

தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ3 விசி1ஷ்யதே ।। 2 ।।


श्रीभगवान् उवाच   ஸ்ரீப43வான் உவாச   ஶ்ரீ பகவான் சொன்னது

सन्न्यास:  ஸந்ந்யாஸகர்மத்தை துறத்தலும்  कर्मयोग:   கர்மயோக3:  கர்மயோகத்தை அனுஷ்டித்தலும்   उभौ உபெள  இரண்டும்   निश्रेयसकरौ   நிச்1ரேயஸகரெள  சிறப்பைத் தருபவைகள்   तु   து  எனினும்   कर्मसन्न्यासात् கர்மஸந்ந்யாஸாத் கர்ம சந்யாசத்தைவிட  कर्मयोग:  கர்மயோக3:  கர்மயோகம்   

विशिष्यते  விசி1ஷ்யதே  மேலானது/உகந்தது.


கர்ம சந்யாசம், கர்மயோகம் இரண்டும் சிறப்பைத் தருபவைகள் எனினும் கர்ம சந்யாசத்தைவிட கர்மயோகம் மேலானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.


விளக்கம்:

ச்1ரேயஸ்என்ற சொல்லுக்குசிறந்ததுஎன்ற பொருள் இருந்தபோதிலும், அது மோக்ஷம் என்பதையும் குறிக்கிறது எனப் பார்த்தோம். ‘நிச்1ரேயஸ்என்பதும் மோக்ஷம் என்ற அர்த்தத்தையே தருகிறது. எது மோக்ஷத்திற்கு வழிவகுக்கிறது? இதற்கு பகவான், ‘சந்யாசம் மற்றும் கர்மயோகம் இரண்டும் மோட்சத்திற்கு வழிவகுக்கும்என்கிறார்

இரண்டில்இது அல்லது அதுஎனத் தெரிவுசெய்ய முதலில் இவ்விரண்டின் தன்மையையும் நன்கு புரிந்துகொள்வது அவசியம். ஒருவனின் மன முதிர்ச்சியையும், தகுதிகளையும் பொறுத்து, இவ்விரு வாழ்க்கை முறையிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறை ஒருவனுக்கும், அதேசமயம் மற்றொன்று இனியொருவனுக்கும் சாதகமாக இருக்கலாம். இரண்டுமே ஞானயோகத்திற்கு பாதையாக, சாதனமாக இருப்பதால் இவையிரண்டும் சமமான அந்தஸ்து கொண்டவைகளே.

மூன்றாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில்(3.3), கிருஷ்ணர் கர்மயோகம் மற்றும் ஞானயோகம் என்ற இரு வாழ்க்கை முறை(த்3விவிதா4 நிஷ்டா2) இருப்பதாகக் கூறியிருந்தார். ஞானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வாழ்க்கைமுறை ஞானயோகம் என்றும் கர்மத்துடன் சேர்ந்து ஞானத்தை பிந்தொடர்தல் கர்மயோகம் என்றும் அங்கு ஏற்கனவே பார்த்துள்ளோம். தற்போது விசாரம் செய்துகொண்டிருக்கும் இந்த சுலோகத்திலும் பகவான் இந்த இரண்டு வாழ்க்கை முறையையும் சமமாகவே குறிப்பிடுகிறார்


=> எதைத் தேர்ந்தெடுப்பது?

சந்யாசம் மற்றும் கர்மயோகம் இரண்டும் மோக்ஷத்திற்கு இட்டுச் செல்லுமெனில் எதை தேர்வு செய்வது? எது எளிதானதாகப் படுகிறதோ அதை தேர்ந்தெடுப்பதே மனித இயல்பு. மேலோட்டமாக பார்க்கும்போது, கடமைகள் அனைத்தையும் துறக்கும் அல்லது மிகக் குறைவான கர்மங்களை மட்டுமே கொண்ட சந்யாசம்தான் எளிது எனத் தோன்றும். ஆனால் தன்னை தயார்படுத்திக் கொள்ளாத பட்சத்தில், நிச்சயமாக இவ்விரண்டில் சந்யாசம் மிகவும் கடினமானது. இக்கருத்தை தெளிவுபடுத்தும் விதமாக இங்கு பகவான் கர்மயோகமே சிறந்தது(கர்மயோக3: விசி1ஷ்யதே) எனக் கூறுகிறார்.


=> பகவான் ஏன் கர்மயோகம் மேலானது என கூறுகிறார்?

(1) உலகம் கொடுக்கின்ற போகத்தில் விருப்பமில்லாத தன்மை வைராக்கியம் ஆகும். இது சந்யாசிக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய முக்கியமானத் தகுதி. பொதுவாக, இந்த வைராக்கியம் கர்மயோகத்தின் பலனாகக் கிடைப்பது. ஆகவே விவேகம் இருந்தும் மனோபலம் இல்லாதவர்கள் கர்மயோகத்தை கடைபிடித்து வைராக்கியத்தை அடைவதுதான் சிறந்தது. ஆகவே கர்மயோகமே மேலானது என்கிறார் பகவான்.

(2) சம்ஸ்காரங்களின் தூண்டுதலால் சில ஆசைகள் வெளிப்படும்போது தர்மத்திற்குட்பட்டு அதை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கர்மயோகிக்கு உள்ளது. ஆனால் முழுமையடையாத வைராக்கியத்துடன் சந்யாச ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தவன் அத்தகைய ஆசைகளை அடையும் வழியில்லாமல், தன்னை முழுமையாக தூய்மைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இழக்கிறான். இத்தகையவனைமித்யாசார:என சுலோகம் 3.6-ல் பகவான் ஏற்கனவே வர்ணித்துள்ளார். கர்மேந்திரியங்களை மட்டும் அடக்கி, விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருப்பவனை பொய்யொழுக்கமுடையவன் என்கிறார். இவன் பற்று இருந்தும் அனுபவிக்க முடியாமல் அசுத்தமானவனாக ஞானத்தை அடையும் தகுதியை இழக்கிறான். சித்த சுத்தி என்பது சந்யாசம் மற்றும் கர்மயோகம் இரண்டிற்கும் பொதுவானதாக இருந்தாலும், கர்மயோகம் என்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான அடித்தளமாக விளங்குகிறது. ஆகவே மித்யாசாரனாக மாறுவதிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற கர்மயோகமே மேலானது என்கிறார் பகவான்.

(3) யார் எதற்கு தகுதியுடையவர்களாக இருக்கிறார்களோ, அதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு பதிலுரைக்க வேண்டும். ‘அதிகாரி அனுரூபம் உத்தரம் வஸ்தவ்யம்என்றொரு நியாயம் உள்ளது. எது உகந்தது அல்லது சிறந்தது எனும் கேள்விகளுக்கு, கேட்பவனின் தகுதியைப் பொறுத்து பதில் கூறப்பட வேண்டும். மேலும் எப்பொழுதும் விதிவிலக்கை எடுத்துக்காட்டாக கூறாமல் பொதுவானதைச் சொல்லவேண்டும்.

(4) விவிதிஷா சந்யாசம் இரண்டாகப் பிரிக்கப்படலாம்:

(i) பூரண வைராக்கியத்துடன் எடுக்கும் சந்யாசம்.

(ii) முழு வைராக்கியமில்லாமல் எடுக்கும் சந்யாசம்.

தீவர வைராக்கியத்தினால் சந்யாசம் மேற்கொள்பவர்களை இங்கு பகவான் குறிப்பிடவில்லை. சங்கரர், புத்தர் போன்றோரும்கூட விவிதிஷா சந்யாசத்தை எடுத்துக் கொண்டவர்களே; அதாவது முழு வைராக்கியத்துடன் சந்யாசத்தை எடுத்துக்கொண்டு பிறகுதான் ஞானத்தை அடைந்தனர். சங்கரர்ஆபத்-சந்யாசம்எடுத்துக்கொண்டார் என்பதை நாம் 3.3-ல் பார்த்துள்ளோம். எனினும் சந்யாசத்திற்கு பிறகு ஞானத்தை அடைந்ததால் ஒருவகையில் இதை விவிதிஷா சந்யாசம் என்றும் கூறலாம். எனவே அத்தகையவர்களை பகவான் இங்கு குறிப்பிடவில்லை. மந்தமான  வைராக்கியமுடையவர்களுக்கு கர்மயோகம்தான் சிறந்தது, பாதுகாப்பானது என்கிறார்.

-------------------------------------------------------------------------------------