புதன், 30 ஆகஸ்ட், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.1 - 9.2

ஒன்பதாம் அத்தியாயம்

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 

[राजविद्याराजगुह्ययोग:]

||9.1|| அறிமுக உரை:

श्रीभगवानुवाच

इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे

ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ।। ।। 

ஸ்ரீப43வாநுவாச

இத3ம் து தே கு3ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே  

ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽசு1பா4த் ।। 1 ।।


श्रीभगवान् उवाच  ஸ்ரீப43வாந் உவாச  ஶ்ரீ பகவான் சொன்னது

अनसूयवे  அநஸூயவே  பொறாமைப்படாத   ते तु  தே து  உனக்கே    इदं  இத3ம்  இந்த     

गुह्यतमं  கு3ஹ்யதமம்  மிக ரகசியமான   विज्ञानसहितं  விஜ்ஞாநஸஹிதம்  அனுபூதியோடு கூடிய    

ज्ञानं  ஜ்ஞாநம்  ஞானத்தை  प्रवक्ष्यामि  ப்ரவக்ஷ்யாமி  உரைக்கிறேன்    यत्  யத்  எதை    

ज्ञात्वा   ஜ்ஞாத்வா  அறிந்து    अशुभात्  அசு1பா4த்  தீமையிலிருந்து   मोक्ष्यसे   மோக்ஷ்யஸே  விடுபடுவாய்.


எதை அறிந்து தீமையிலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடு கூடிய அந்த மிக ரகசியமான ஞானத்தைப் பொறாமைப்படாத உனக்கு சொல்லுகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.


விளக்கம்:

=> தலைப்பிற்கான அறிமுகம்:

வக்ஷ்யாமிஎனில்நான் விளக்குகிறேன்என்று பொருள். இதில்ப்ரஎன்ற முன்னொட்டு கொடுக்கப்பட்ட வினைச்சொல்லின் பொருளை இன்னும் மேம்படுத்துவதாகிறது. எனவேப்ரவக்ஷ்யாமிஎனில்நான் விரிவாக தெளிவாக விளக்குகிறேன்’.

எதை விளக்குகிறேன் என்கிறார் பகவான்? ‘இத3ம்_ இந்தஎன்ற சொல்லினால் அதை குறிக்கிறார். புது அத்தியாயத்தை தொடங்கும் பகவான்இந்தஎன்ற சொல்லை உபயோகிப்பது, ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒரு தலைப்பு இப்பொழுது மேலும் விவரிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. இங்குஇத3ம்என்பது ப்ரம்ம-ஞானத்தை குறிக்கிறது. இரண்டாவது அத்தியாயத்தில் ஆரம்பித்து எட்டாம் அத்தியாயம் வரை படிப்படியாக விளக்கப்பட்ட ப்ரம்மத்தைப் பற்றிய அறிவை இங்கு மேலும் விரித்துரைக்கப் போகிறேன் என்பதாக இச்சொல்லை பயன்படுத்துகிறார்.


=> ‘துஎன்ற சொல்லின் முக்கியத்துவம்:

துஎனும் சொல், இதுவரையில் அவர் விவாதித்த பிரம்ம-லோக ப்ராப்தி மற்றும் க்ரம-முக்தி ஆகியவற்றிலிருந்து, இப்பொழுது ஆரம்பிக்கும் தலைப்பை வேறுபடுத்திக் காட்டுகிறார் என்பதைக் குறிக்கிறது. பிரம்ம-லோகம் மற்றும் க்ரம-முக்தியைப் போல இறந்தபின் அடையப்பட வேண்டியதாக அல்லாமல், பகவான் இங்கு விளக்கயிருக்கிற இந்த அறிவு இப்பொழுதே பெறப்பட வேண்டியது, என்பதே அந்த வேறுபாடு. ஏற்கனவே ப்ரம்மமாக இருக்கும் ஒருவன் அதை அறிய ஏன் பிரம்ம-லோகத்திற்குச் செல்வதற்காக காத்திருக்க வேண்டும்? ஆத்ம-ஞானத்தை அடைதலை ஒத்திப்போடுதல் என்பது மடமை வாய்ந்தது

தனது சுயத்தைப் பற்றிய தெளிவான ஞானமே உடனடி விடுதலைக்கான ஒரே வழி என சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார். இது ஓர் எளிய அறிவு. இதில் எந்த அனுபவமும் இல்லை; எந்தவொரு குறிப்பிட்ட நிலையும் அடையப்படுவதில்லை. ‘துஎன்ற சொல்லினால் வேறுபடுத்திக்காட்டப்படும் இந்த அறிவே மோக்ஷத்திற்கான நேரடி வழிமுறையென(சாக்ஷாத் மோக்ஷ-ப்ராப்தி-சாதன) பல்வேறு ஸ்ருதிகள் மற்றும் ஸ்ம்ருதிகளை அவர் மேற்கோள் காட்டி விவரிக்கிறார்.


=> யார் தகுதியுடையவன்?

தே அநஸூயவே இத3ம் ப்ரவக்ஷ்யாமிஅஸூயா இல்லாத உனக்கு நான் இதை தெளிவாகச் சொல்கிறேன். ‘அநஸூயவேஎன்பது மற்றவர்களின் குறையைப் பேசி மகிழும் கீழ்மை இல்லாதவனைக் குறிக்கிறது. மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையோ அல்லது சாதனைகளையோ ஏற்றுக்கொள்ள முடியாததன் வெளிப்பாடாக இது வந்தமைகிறது. பொதுவாகஅஸூயாஎனில் பொறாமை என்று பொருள்; எனவே, ‘அநஸூயாஎன்பது பொறாமையற்றவன் என்ற அர்த்தமுடையதாகிறது. ஆனால் இங்கு சங்கரர், பிறரின் தோஷத்தை கூறி மகிழ்தல், நற்பண்புகள் இருக்கும் இடத்தில் ஒரு குறையைக் காணுதல் அஸூயை, குணேஷு தோஷ தர்ஷணம், என்கிறார். எனவே அந்த கீழ்மையான குணமில்லாதவன் அநஸூயா ஆகின்றான்.

இனியொருவரின் குறையை அறிந்து கொள்ளுதல் வேறு; ஆனால் அதை மற்றவர்களிடம் கூறி மகிழ்தல் என்பது வேறு. ‘தோஷ தர்ஷணம் பண்டித லக்ஷணம்என்று சொல்வார்கள். ஒருவனிடம் இருக்கின்ற குறை அல்லது நிறையை கண்டறிதல் என்பது புத்தியின் இயல்பான செயல் ஆகும். அதில் தவறேதுமில்லை. அப்பொழுதுதான் நமது குறையை நாம் கண்டறிந்து களைய முடியும். ஆனால் இனியொருவரின் குறையில் நாம் குளிர்காய்தல் என்பது கீழான செயலாகும். அப்படிப்பட்ட குணக்குறை எதுவுமற்றவன் என்பதாக பகவான் அர்ஜுனனைஅநஸூயவேஎன அழைக்கிறார். அநஸூயா எனும் ஒரு குணமானது, பன்னிரண்டு மற்றும் பதின்மூன்றாவது அத்தியாயங்களில் பகவான் பேசப்போகும் அத்வேஷம், அமானித்வம், அதம்பித்வம், அஹிம்சை, க்ஷாந்தி, ஆர்ஜவம் போன்ற மற்ற எல்லா குணங்களையும் ஒருங்கே குறிக்கிறது. அதாவது அநஸூயா என்ற இந்த ஒரு வார்த்தையால் அனைத்தும் குறிக்கப்படுவதாகிறது. அவை அர்ஜுனனை இந்த ஞானத்திற்குத் தகுதிப்படுத்துகின்றன.


=> மிகப்பெரிய ரகசியம்:

இந்த ஞானத்தை பகவான், ‘கு3ஹ்யதமம்’, மிக மிக ரகசியமானது என்கிறார். ‘கு3ஹ்யஎனில் ரகசியம், இதில்தமம்என்ற பின்னொட்டு அதிலேயே மிக உயர்ந்த தரத்தைக் குறிக்கிறது. அதாவது, இது

(i) மேலானது, உயர்ந்தது

(ii) அரிதானது 

(iii) கவனமாக கையாளப்பட வேண்டியது

(iv) தகுதியுடையவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட வேண்டியது.

இந்த ஞானம் ஏன் மிகப்பெரிய ரகசியம் என்பதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன:

   -> கற்பித்த போதிலும் புரியாதது:

இந்த ஞானம் எவ்வளவு முறை சொல்லப்பட்ட போதிலும் அரிதாகவே புரிந்து கொள்ளப்படுவதால், வெளிப்பட்டாலும் அது ரகசியமாகவே உள்ளது. அப்படியே புரிந்து கொள்ளப்பட்டாலும், அதை உட்கிரஹித்து தன்மயமாக்குதலை தடுக்கும் பல தடைகள் இருப்பதால் இது மிகப்பெரிய ரகசியம், கு3ஹ்யதமம். இதற்கான முதிர்ச்சியை அடைவது என்பது வாழ்க்கையில் ஒருவன் சாதிக்கக்கூடிய மிகப்பெரிய விஷயம் ஆகிறது

   -> நாமறிந்த ப்ரமாணத்தினால் அறியமுடியாதது:

அறிவை அடைய பயன்படும் கருவி ப்ரமாணம் ஆகும். இந்த ஞானம் மிக ரகசியமானது என்பதற்கான மற்றொரு காரணம், இதை புலனுணர்வு அல்லது அனுமானம் போன்ற நாம் அறிந்த எந்த ப்ரமாணத்தின் மூலமோ அல்லது அனுபவத்தின் மூலமோ அடைய இயலாது. இரு வகையான புலனுணர்வுகள் உள்ளன. (1) இந்திரிய-ப்ரத்யக்ஷ, புலன் உறுப்புகளால் உணர்தல்; உதாரணம் கண்கள் எனும் புலனுறுப்பினால் படிக்கப்படும் புத்தகம் (2) சாக்ஷி-ப்ரத்யக்ஷ, மனதின் நேரடி உணர்தல்; சுகம் துக்கம் போன்ற மனதின் நிலைமைகளை சாக்ஷியாக அறிவது. அனைத்திற்கும் சாக்ஷியாக விளங்கும் ப்ரம்ம, மேற்கூரிய இருவகையான ப்ரத்யக்ஷத்திற்கும் உட்பட்டது அல்ல. தெளிவாகச் சொல்வதானால், ப்ரம்ம எந்தவொரு பொறிக்காட்சிக்கோ, புலனுணர்வுக்கோ, அனுமானத்திற்கோ அல்லது அனுபவத்திற்கோ உட்படாதது. எனவே இந்த ப்ரம்ம-ஞானம், கு3ஹ்யதமம். சாஸ்திர வாக்கியங்களின் மூலம் அடையப்படும் இந்த அறிவை பெறுவதற்கான ப்ரமாணம், சப்த ப்ரமாணம் ஆகும். எனவே நம்மால் நேரடியாக அறியப்படும் எந்தவொரு ப்ரமாணத்தின் மூலமும் அறியமுடியாததாலும், மற்றும் சாஸ்திர உபதேசத்தினால் மட்டுமே பெறக்கூடியது என்பதாலும் இது கு3ஹ்யதமம்.

   -> மிகவும் மதிப்புமிக்கது:

இந்த ஞானத்தை மிக பெரிய ரகசியமாக மாற்றும் மற்றொரு விஷயம் அதன் மதிப்பு. எது புனிதமானதோ அல்லது விலைமதிப்பற்றதோ அது எப்போதும் ரகசியமானது. பெரிய மரகதத்தை மேஜை மேல் காகித எடைகல்லாக வைத்திருக்க முடியாது. சிறிது நேரத்தில் அது காணாமற் போய்விடும். விலைமதிப்பற்ற அல்லது அரிதான எதுவும் ரகசியமாக வைக்கப்படுகிறது. எனவே அரியதிலும் அரியதான இந்த ஞானம் மிக ரகசியம் என்று சொல்லப்படுகிறது.


=> அமங்களத்திலிருந்து விடுதலை:

விஜ்ஞாநஸஹிதம் ஜ்ஞாநம் தே ப்ரவக்ஷ்யாமிஅனுபூதியோடு கூடிய ஞானத்தை உனக்கு உரைக்கிறேன். அதாவது, நான் வெறுமனே ப்ரம்ம இருக்கிறது என்று ஒரு ஞானத்தை கூறப்போவதில்லை. நீயே அந்த ப்ரம்மமாக இருக்கிறாய் என்று நிரூபிக்கப் போகிறேன், என்கிறார். ‘விஜ்ஞாநஎனில் நேரடியான ஞானம் ஆகும்

நான் ப்ரம்மமாக இருக்கிறேன் எனும் ஞானத்தினால் அவன் அசுபமான அனைத்திலிருந்தும் விடுபடுகிறான்அசு1பா4த் மோக்ஷ்யஸே. ‘அசு14எனில் மங்களமற்றது. துக்கம், போதாமை, சிறுமை போன்ற சுயத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ள அனைத்துவித அடிமைத்தனத்திலிருந்தும், சுருங்கச் சொல்லின் சம்சாரத்திலிருந்தும் விடுபடுகிறான்

சு14எனில் மங்களகரமானது, முற்றிலும் நன்மையானது ஆகும். பொதுவாக நல்ல மங்களமான முடிவைக் குறிக்கும் நோக்கில் புத்தகம் அல்லது கடிதத்தின் முடிவில்சுபம்என எழுதப்படுவது வழக்கம். எனவேஅசுபம்எனில் நல்ல முடிவு அல்ல என்பதாகிறது. ஒருவன் மரணமடைந்து இந்த உடலை விட்டு வெளியேறும்போது, அங்கு ஒரு முடிவு ஏற்பட்டாலும் அது மீண்டும் தொடங்குவதால் அது சுபமானது அல்ல; அதுவே சம்சாரம். அதிலிருந்து விடுதலை அடைதல் மோக்ஷம், மோக்ஷ்யஸே. அசுபம் என்பது சந்தேகம் என்றும் பொருள்படும். எனவே, இந்த ஞானத்தினால் அவன் எல்லாவித சந்தேகங்களிலிருந்தும் விடுபடுகிறான் என்பதும் பொருளாகிறது

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.2|| அந்த ஞானத்தின் சிறப்பு:

राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम्

प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ।। ।।

ராஜவித்3யா ராஜகு3ஹ்யம் பவித்ரமித3முத்தமம்  

ப்ரத்யக்ஷாவக3மம் 4ர்ம்யம் ஸுஸுக2ம் கர்துமவ்யயம் ।। 2 ।।


इदं  இத3ம்  இந்த ஞானம்    राजविद्या  ராஜவித்3யா  ஞானத்திற்கு ராஜா  

राजगुह्यं  ராஜகு3ஹ்யம்  ரகசியங்களுள் அரசன்    उत्तमम् पवित्रम्   உத்தமம் பவித்ரம்  தூய்மை தருதலில் தலைசிறந்தது    प्रत्यक्ष अवगमं  ப்ரத்யக்ஷ அவக3மம்  கண்கூடாக உணர்தற்குரியது   

धर्म्यं  4ர்ம்யம்  தர்மத்தோடு கூடியது   कर्तुम्  கர்தும்  செய்தற்கு   सुसुखं  ஸுஸுக2ம்  மிக எளியது    

अव्ययम्  அவ்யயம்  அழிவற்றது.


இந்த ஞானம் அனைத்து ஞானங்களுள் ராஜா; மறைபொருளுள் அரசன்; தூய்மை தருதலில் தலை சிறந்தது; கண்கூடாக உணர்தற்குரியது; தர்மத்தோடு கூடியது; செய்தற்கு மிக எளியது; அழிவற்றது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் குறிப்பிடப்பட்ட ஞானத்தினுடைய பெருமை இங்கு பேசப்படுகிறது. இதற்காக பகவான் ஏழு அடைமொழிகளைப் பயன்படுத்துகிறார். அவைகளின் விளக்கத்தை ஒவ்வொன்றாகக் காணலாம்.


(1) ராஜ வித்யா:

முன் சுலோகத்தில் பயன்படுத்தப்பட்ட ஞானம் என்பது, இங்குவித்3யாஎனக் கூறப்பட்டுள்ளது. ஞானம் மற்றும் வித்யா இந்த இரு சொற்களின் வினையடிகளின் பொருளும் ஒன்றே, அறிதல். ஒருவனை சம்சாரத்திலிருந்து  விடுவிக்கும் இந்த அறிவு, அவனால் அடையப்படுகின்ற மற்ற எல்லா அறிவிலிருந்தும் கண்டிப்பாக வேறுபட்டதாக ஆகிறது. எனவே அனைத்து விதமான வித்யைக்குள்ளும் இது ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஒரு ராஜ்ஜியத்தில், பல குடிகளுக்கு மத்தியில் ராஜா என்பவர் அதிகபட்ச மற்றும் இறுதி அதிகாரத்தை உடையவர். இந்த அறிவு ராஜா என அழைக்கப்படுவதற்கான சில காரணங்களை விசாரிக்கலாம்.

   -> மாற்றமடையாதது:

        ஆத்ம-ஞானத்தை தவிர மற்ற எல்லா அறிவிலும், ஏற்கனவே அறிந்ததை விட அறியப்பட வேண்டியது எப்பொழுதும் மீதமிருக்கும். சில சமயங்களில் அதற்கான விஷயம் மாறும்பொழுது அந்த அறிவும் மாற்றத்தை அடையும். அதாவது ஏற்கனவே இருந்த அறிவு பொய்யாக்கப்பட்டுவிடும், நீக்கப்பட்டுவிடும், பா3தி4. இந்த உலகைப் பொறுத்தவரையில் அனைத்துமே மாற்றத்திற்குட்பட்டது. ஒரு தனிமனிதனின் வயது மற்றும் குணங்களில் ஏற்படும் மாற்றம் தொடங்கி, மண் முதல் விண் வரை ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்றார்போல அறிவுத் துறைகளிலும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டேயுள்ளது. மாற்றத்திற்குட்படாது என்பது ஞானத்தின் வரையறை ஆகும். இங்கு பகவானால் கூறப்படும் இந்த அறிவு எப்பொழுதும் மாறாமலிருப்பது, அழியாதது. எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத வித்யை ஆகையால் எல்லா வித்தையைகளுள் இது ராஜா.

   -> சுயமாக பிரகாசிப்பது:

சங்கரர் தனது பாஷ்யத்தில்ராஜாஎன்ற சொல்லின் வினையடியிலிருந்து(ராஜ்) வருவிக்கப்பட்ட பொருளைத் தருகிறார், பிரகாசித்தல். ஒரு குறிப்பிட்ட ராஜ்ஜியத்தில் உள்ள மக்களில் ராஜா மகிமை வாய்ந்தவராகவும் தனது உரிமையில் அதிகாரம் மிக்கவராகவும் உள்ளார். இதனால் அவர் வேறு யாரையும் சார்ந்திராமல் தானே பிரகாசிப்பவராகவுள்ளார். அதுபோல, இங்குள்ள அனைத்து விஷயங்களிலும் ஆத்மா மட்டுமே சுயமாக பிரகாசிப்பது ஆகும். இந்த ஸ்வயம்-பிரகாச சுயத்தைப் பற்றிய அறிவு அனைத்து அறிவுக்கும் ராஜாவாகிறது. ஏனெனில் ஒருவனின் புத்தியால் வெளிப்படுத்தப்படும் மற்ற அனைத்து வகையான அறிவும், ஆத்மா எனப்படும் இந்த ஒளிரும் காரணியைச் சார்ந்துள்ளது. ஆனால் இது, சுயமாக ஒளிர்ந்து தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது, ஸ்வயம் ராஜதே.

   -> ஸத்யம்:

இந்த ஞானத்தை தவிர மற்றவை அனைத்தும் மித்யா-ஞானம் ஆகும். விழிப்புநிலையின் அடிப்படையில் வியாவஹாரிக ஸத்யத்தை சார்ந்தது. ஆனால் பாரமார்த்திக ஸத்யத்தைப் பற்றிய இந்த ஞானம் மற்றெல்லாவித அறிவிற்கும் ராஜாவாகிறது.

   -> பிரிவுகளற்றது:

மற்ற அனைத்து அறிவும் ஞாத்ரு-ஞான-ஞேய-பேதத்தை, அதாவது அறிபவன், அறியப் பயன்படும் கருவி, அறியப்படும் பொருள் எனும் வேறுபாட்டை நிலைநிறுத்துகின்றன. இதனால் ஒருவன் வரையறுக்கப்பட்ட தனிமனிதனாக, நியாயமான பிரச்சினைகளைக் கொண்ட ஒரு சம்சாரியாகத் தெரிகிறான். தன்னை இறப்பிற்குட்பட்டவனாக, பாலினம், வயது, நிறம், இனம் போன்ற வரம்பிற்குட்பட்டவனாக நினைக்கிறான். இந்த வேறுபாடுகள் அனைத்தும் மேற்கூறப்பட்ட மூன்றுவித பிரிவினாலேயே கொண்டுவரப்பட்டவை. எனவே இந்த பிரிவு என்பது சாதாரணமானது அல்ல; சம்சாரத்தை உண்டு பண்ணுவது

இந்த மூவகைப் பிரிவு, ஒருவனது சொந்த மனதின் தன்மையைப் பற்றி அறியும் உளவியல்துறை உட்பட நாம் காணும் அனைத்துவிதமான அறிவுத் துறையிலும் உள்ளது. ஆனால் இங்கு பகவானால் கூறப்படும் இந்த ஞானத்தில் இப்பிரிவுகள் இல்லை. ஒருவனின் சுயம் என்பது அறியப்படும் ஒரு பொருள் அல்ல. சுயத்தை அறிபவனும், சுயமும் ஒன்றே. மேலும் சுயத்திலிருந்து வேறான எந்தவொரு கருவியும் சுயத்தை அறிய முடியாது, அதாவது சுயத்தை சுயமே அறியும். எனவே இந்த ஞானத்தில், அறிபவன்-கருவி-அறியப்படும் பொருள் எனும் பிரிவுகள் ஒடுக்கத்தை அடைகின்றன

   -> முழுமையானது:

இந்த பிரபஞ்சத்தில் இனியொன்றோடு தொடர்பில்லாத எந்தவொன்றும் இல்லை. எதுவும் அதனளவில் முழுமையானது கிடையாது. ஆகவே எந்தவொன்று அறியப்படும்போதும், அது சம்பந்தப்பட்ட அறியாத ஒரு பகுதி கண்டிப்பாக எஞ்சியிருக்கும். இங்கு ஆத்மா மட்டுமே முழுமையானது; குணங்களற்றது. எனவே ஆத்ம-ஞானம் மட்டுமே ஞானம், வித்யா. மற்றவை அனைத்தும் குணங்களுடன் கூடியது; முழுமையாக அறிய முடியாதது, ஆகவே அவித்யா.  

   -> திருப்திகரமானது:

மற்ற எந்த அறிவும்(வித்யா) மனதை நிறைக்காது. ஓர் அறிவை முழுமையாக அறிய முயற்சிப்பவனுக்குத் தான் தெரியும் உண்மையில் அறிந்துகொள்ள இன்னும் எவ்வளவு பாக்கியிருக்கிறதென்று. தனது ஆய்வுக் கட்டுரையின் ஒவ்வொரு வரியும்கூட இனியொரு ஆராய்ச்சிப் பொருளாக இருக்கலாம் என்பதை முனைவர் பட்டம் பெற்றவர் அறிவார். எனவே எந்தவொரு அறிவும் முழுமையாக அறியப்படாததால் அவற்றிலிருந்து திருப்தி உண்டாவதில்லை. மேலும் மேலும் என மனமானது தேடிக் கொண்டே இருக்க எண்ணுகிறது. தவிர, ஒப்பீடு மற்றும் அஹங்காரத்தின் காரணமாகவும் மற்ற அறிவு திருப்தியை அளிப்பதில்லை. ஆனால் எளிமையான திருப்தியின் அடிப்படையில் ஆத்ம-ஞானமே முதன்மையானது

ஒவ்வொரு அதிருப்தியும் அறிபவனுடையநான்எனும் அஹங்காரத்தைக் குறிக்கிறது. தன்னில் அதிருப்தியை அடைவது மூளையல்ல. ‘நான் அதிருப்தியில் இருக்கிறேன்என்பதில்நான்என்பது அஹங்காரத்தை மையமாகக் கொண்டது. அதை அகற்ற முடியாது; ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவின் வெறும் தோற்றமே, மித்யா ரூபமே இந்த அஹங்காரம் என புரிந்து கொள்ளப்படும்போது அது பொய்யாக்கப்படுகிறது. இதனால் சுயம் என்பது வரம்பிற்குட்பட்டது என்ற கருத்து நீங்குகிறது. எனவே இது ராஜ-வித்யா.


(2) ராஜ குஹ்யம்:

இந்த ஞானம் சென்ற சுலோகத்தில்கு3ஹ்யதமம்’, ரகசியங்களுள் மிக மேலானது என பகவானால் வர்ணிக்கப்பட்டது. இங்கும் அதே பொருளில், ‘ராஜகு3ஹ்யம்எனும் சொல்லினால் இது குறிக்கப்படுகிறது, ரகசியங்களில் ராஜா. எனவே அங்கு நம்மால் விசாரிக்கப்பட்ட அனைத்து காரணங்களும் இங்கும் பொருந்தும். சரியான தகுதியுடையவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்படுவது. பொறிக்காட்சி, புலனுணர்வு, அனுமானம் மற்றும் அனுபவம் என நாமறிந்த ப்ரமாணங்களால் இதை அறிய முடியாது. இந்த அறிவு மிகவும் மதிப்பு வாய்ந்தது. எனவே இது ரகசியங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது


(3) தூய்மை தருதலில் தலைசிறந்தது:

மேலும் இந்த ஞானமே மேலான தூய்மைபடுத்தும் கருவியாக உள்ளதுபவித்ரம் இத3ம் உத்தமம், என பகவான் கூறுகிறார். ‘பவித்ரம்எனில் தூயதாக்குவது என்பது பொருள். பல வகையான சுத்திகரிப்பு சாதனங்கள் உள்ளன. ஒருவன் விடுபட நினைக்கும் குற்ற உணர்வு, அக மற்றும் புறக் காயங்கள், சோம்பல், விரக்தி, தள்ளிப்போடுதல், துன்பம் போன்றவற்றிற்கு பிரார்த்தனை, பிராயச்சித்தங்கள், சடங்குகள், ஒழுக்க நெறிகள், சிகிச்சைகள் ஆகியவைகளால் உதவிகள் கிடைக்கின்றன. இவைகள் தூய்மைபடுத்தும் சாதனங்கள் ஆகும். ‘பாவகஎன்று அழைக்கப்படும் நெருப்பும் கூட நன்கு அறியப்பட்ட தூய்மைப்படுத்தும் சாதனம் ஆகும். இவைகளுள் மேலான பரிசுத்தமாக்கும் சாதனமாக ஆத்ம-ஞானம் உள்ளது, ஏனெனில் இது தூய்மையானது மற்றும் தூய்மையற்றது என்ற கருத்துபடிமத்தையே நீக்குகிறது. இந்த ஞானம் ஒன்று மட்டுமே அனைத்து சம்சாரத்திற்கும் காரணமான அஹங்காரத்தை கையாளுகிறது. ‘நான் அஹங்காரம் அல்ல; நான் பரப்ரம்மம்எனும் இந்த ஞானம், இந்த ஜென்மத்தில் செய்த அனைத்து காரியங்களிலிருந்தும் ஒருவனை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், அவனது கணக்கில் நிற்கும் முந்தைய வாழ்க்கையின் அனைத்து புண்ணிய பாபங்களையும் நீக்குகிறது. இவ்விதம், எண்ணற்ற பிறப்புகளை அதன் மூலகாரணமான புண்ணிய பாபத்துடன் சேர்த்து நொடியில் பஷ்பமாக்குவதால் இது தலைசிறந்த தூய்மைபடுத்தும் சாதனம் என சங்கரர் கூறுகிறார். ஆயிரக்கணக்கான பிறவிகளில் திரட்டப்பட்ட முழு சஞ்சித-கர்மத்தையும் அதன் வேருடன் சேர்த்து இந்த ஞானம் எரித்து விடுகிறது எனில் இதைவிட பவித்ரமான ஞானம் வேறென்ன இருக்கமுடியும்!


(4) கண்கூடாக உணர்தற்குரியது, நேரடியாக அனுபவிக்கக் கூடியது:

சொர்க்கம் அல்லது வைகுண்டம் போன்று பின்னர் சரிபார்க்கப்பட வேண்டிய மறைமுக அறிவாக இல்லாமல், இந்த ஞானம் நேரடியாக உடனடியாக உணரக்கூடியதுப்ரத்யக்ஷ அவக3மம், என்கிறார் பகவான். உதாரணமாக, ஸ்படிகத்தை பற்றிய அறிவு ஏற்பட வேண்டுமெனில், ‘இது ஸ்படிகம்என சொல்லப்படும்போது, ஸ்படிகத்தை பற்றிய அறியாமையை அகற்றும் ஒரு சிந்தனை, வ்ருத்தி, உண்டாகவேண்டும். இந்த எண்ணம் உண்டாக அந்த ஸ்படிகம் பார்க்கப்பட வேண்டும். அதேபோல, சுயத்தை பற்றிய அறியாமை அகல, ஒருவனிடம் சுயத்தை பற்றிய சரியான வ்ருத்தி உண்டாகவேண்டும். சாஸ்திர உபதேசத்தின் மூலம் இந்த வ்ருத்தியானது உருவாக்கப்படுகிறது. சுய அறிவுக்கான வ்ருத்தி உண்டாகும்போது, தன்னை கிரஹிக்க ஏதுவாக சுயமானது எப்போதும் தயாராக இருப்பதால், நேரடி ஞானம் ஏற்பட்டு சுய-அறியாமை அழிக்கப்படுகிறது. எனவே இது வைகுண்டம் போல அல்லாமல், இங்கேயே இப்பொழுதே அனுபவிக்கக் கூடியது

ப்ரத்யக்ஷ அவக3மம்என்ற சொல்லானது ஞான பலனைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது மன சாந்தி, மன நிறைவு, பயம் நீங்குதல், குரோதம் நீங்குதல் போன்ற பலன்களை இங்கேயே நேரடியாக அனுபவிக்க முடியும்


(5) தர்மத்திற்கு உட்பட்டது

      மனிதன் தனது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில விதி-நிஷேதங்களை, அதாவது இதைச் செய்யவேண்டும்-இதைச் செய்யக் கூடாது போன்ற நிபந்தனைகளை சாஸ்திரம் அளிக்கிறது. ஆனால் ஞானி இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் எனக் கூறப்படுகிறது. எனில் இந்த ஞானம் தர்மத்திற்கு முரண்பாடானதா? என்ற கேள்வி வரலாம். ஆகையால் பகவான், ‘இல்லை, இது தர்மத்தோடு கூடியது- 4ர்ம்யம்எனக் கூறுகிறார்

ஞானத்துக்கு தேவையான குணங்களாக பகவானால் பதிமூன்றாம் அத்தியாயத்தில் கூறப்பட்ட தற்பெருமையின்மை(அமானித்வம்), தருக்கின்மை(அதம்பித்வம்), அஹிம்சை, பொறுமை, நேர்மை, குரு சேவை, தூய்மை, ஸாதனத்தில் விடாமுயற்சி, தன்னடக்கம் முதலிய குணங்களை உடையவன் எப்படி தர்மத்திற்கு எதிரானவனாக இருக்க முடியும்? கண்டிப்பாக இல்லை. தர்மம் அவனுக்கு மிக இயல்பானதாக, சொரூபமாக மாறிவிடுகிறது. சுயத்தை பற்றிய தெளிவையுடைய அவனுக்கு அன்பு, அனுதாபம், இரக்கம், நட்பு, பகிர்தல் போன்றவை தன்னிச்சையான குணங்களாக ஆகிவிடுகின்றன. தன்னை பூரணமானவனாக அறிந்த ஒருவன் தர்மத்திற்கு எதிராகச் செல்ல வேண்டிய எந்த அவசியமுமில்லை. ஏனெனில் அவன் பெறுவதற்கு என எதுவும் இல்லை

பொதுவாக ஒவ்வொரு தவறான செயலுக்கும் பின்னாலும் பயத்துடனோ அல்லது பேராசையுடனோ கூடிய ஒருவன் இருக்கிறான். சுய-அறியாமை காரணமாக இந்த பயம் அல்லது பேராசை உண்டாகிறது. ஆனால் ஆத்ம-ஞானம் இந்த அறியாமையை நீக்கிவிடுவதால் அதர்மம் எப்படி தலைதூக்கும். எனவே தர்மம் இயல்பானதாக ஆகிவிடும். தன்னறிவும் தர்மமும் ஒன்றாகச் செல்கின்றன; ஆகவே இந்த ஞானம் தர்மத்தோடு கூடியது, 4ர்ம்யம்


(6) செய்தற்கு மிக எளியது:

அதிக பலனையடைய  அதிகபட்ச முயற்சி செய்யவேண்டும் என்பது சாதாரண நியமம். பகவான் இந்த ஞானத்தை ராஜ-வித்யா, ராஜ-குஹ்யம், பவித்ரம் என்றெல்லாம் விவரித்திருப்பதால் அதை அடைவது மிக கடினமானது என ஒருவன் அச்சப்படலாம். அதை நீக்கும் வகையில் பகவான் இது அனுஷ்டிக்க சுலபமானது, ஸுஸுக2ம் கர்தும், என்கிறார். ஏனெனில் இங்கு ஒருவன் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை; தெரிந்து கொள்ள வேண்டியது மட்டுமே செய்யப்பட வேண்டியதாக உள்ளது. கோரமான தவமோ அல்லது அஷ்டமஹா சித்திகளை அடைதலோ தேவையில்லை. ஆத்மா என்பது ஸத்-சித்-ஆனந்த சொரூபம் என்ற உபதேசத்திற்கு ஒருவன் தனது புத்தியை வெளிப்படுத்துவது மட்டுமே செய்யப்பட வேண்டியது. சுயத்தை வெளிப்படுத்தும் செயலை சாஸ்திர ப்ரமாணம் கவனித்துக் கொள்கின்றது. மற்றபடி இங்கு செய்யப்பட எதுவுமில்லை, ஆதலால் ஸுஸுக2ம் கர்தும்.

போதுமானவளவு தகுதியிருப்பின், எந்தவொரு அறிவும் அடைவதற்கு எளிமையானதே. ஆத்ம-ஞானத்திற்கு மனமுதிர்ச்சி தகுதியாகிறது, அதிகாரித்வம். அன்றாட வாழ்வில் கிடைக்கின்ற தினசரி அனுபவங்களே ஒருவன் இந்த முதிர்ச்சியை அடைவதற்கு போதுமானதாக உள்ளது. அது தனது பழக்க வழக்கம், நடத்தை மற்றும் சிந்தனைக்கு அவன் எந்தவளவு கவனம் கொடுக்கின்றான் என்பதைப் பொறுத்தது. சுற்றமும் சமூகமும் ஒருவனுக்கு அளிக்கும் விரக்தியையும், அதனால் தூண்டப்படும் கோபத்தையும் கவனமாக கையாளும்போது முதிர்ச்சி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக ஆகிறது. இப்படி முதிர்ச்சியை அடைந்த ஒருவனுக்கு இந்த ஞானம், செய்தற்கு எளிதானது, ஸுஸுக2ம் கர்தும்


(7) அழிவற்றது:

    ‘வ்யயஎனில் செலவு, தேய்வு என்று பொருள். ‘அவ்யயஎனில் தேயாதது, அழியாதது. இரு விதத்தில் இது அழியாதது என்பதை புரிந்து கொள்ளலாம்.

(i) செய்தற்கு மிக எளியது என பகவான் கூறினார். எளிதில் அகப்பட்டது எளிதில் சென்றுவிடுமோ என்ற ஐயம் வரலாம். ஆனால் மனிதன் அடைந்த ஆத்ம-ஞானம் அழிவற்றது, அவ்யயம்; காலத்தையும் கடந்த பெருநிலையாம் அது. ஏனெனில் இந்த ஞானத்திற்கான வஸ்து அழியாதது. ஞான-வ்ருத்தி என்பது அழியக்கூடியது, ஆனால் ஆத்ம-ஞானம் என்பது அவ்யயம். ஆத்மா காலத்திற்கு அப்பாற்பட்டது, நித்யம். எனவே ஆத்மாவைப் பற்றிய அறிவும் நித்யம்.

(ii) மேலும் மற்ற கர்மங்களைப் போலல்லாமல், இது தேயாத அழியாத பலனைக் கொடுக்கிறது.

இந்த ஞானத்தின் சிறப்பை விவரிக்க இங்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகள்ராஜவித்3யாராஜகு3ஹ்யம், உத்தமம் பவித்ரம், ப்ரத்யக்ஷ அவக3மம், ஸுஸுக2ம் கர்தும், அவ்யயம்வெறும் புகழ்ச்சிக்காக கூறப்பட்டவை அல்ல. இவை ஒவ்வொன்றும் முற்றிலும் உண்மை. உண்மையைக் கூறுவதானால், இந்த வார்த்தைகள் அனைத்தும் கூட போதாது. எவ்விதத்தில் வர்ணித்தாலும் அது குறைவானதாகவே இருக்குமளவு மகத்துவம் வாய்ந்தது இந்த ஞானம்

எனினும், அர்ஜுனனின் முழு கவனத்தைப் பெறவும் மற்றும் இந்த ஞானத்தின் தன்மையைப் பற்றிய அறிவைக் கொடுக்கவும், பகவான் இங்கு இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்

---------------------------------------------------------------------------------------------------------------------