செவ்வாய், 30 ஜனவரி, 2024

விபூதி யோகம் 10.10 - 10.11

||10.10|| ஈசனின் அணுகிரஹம்:

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्

ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ।। १० ।।

தேஷாம் ஸததயுக்தாநாம் 4ஜதாம் ப்ரீதிபூர்வகம்

3தா3மி பு3த்3தி4யோக3ம் தம் யேந மாமுபயாந்தி தே ।। 10 ।।


सततयुक्तानां  தேஷாம் ஸததயுக்தாநாம்  எப்பொழுதும் யோகம் பயிலுபவர்களுக்கு   

प्रीतिपूर्वकम्  ப்ரீதிபூர்வகம்  அன்புடன்   भजतां  4ஜதாம்  வழிபடுபவர்களுக்கு/நாடுபவர்களுக்கு   

तेषां  தேஷாம் அவர்களுக்கு   तं  தம்  அந்த    बुद्धियोगं  பு3த்3தி4யோக3ம்  புத்தியோகத்தை   

ददामि  3தா3மி  தருகிறேன்    येन  யேந  அதனால்   ते  தே  அவர்கள்   

माम्  மாம்  என்னை   उपयान्ति  உபயாந்தி   வந்தடைகிறார்கள்.


என்றும் யோக முயற்சியோடு அன்புடன் என்னை நாடுபவர்களுக்கு புத்தியோகத்தை வழங்குகிறேன். அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் கூறியபடி பக்தி செய்கிறவர்களிடத்து பகவான் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை இங்கு விவரிக்கிறார்.

=> எப்படிப்பட்ட பக்தர்கள்?

தேஷாம் ஸததயுக்தாநாம்எப்பொழுதும் யோகம் பயிலுபவர்கள், என்றும் ஈஷ்வரனிடம் பொருந்தியவர்கள், எப்பொழுதும் உறுதியுடன் இருப்பவர்கள். இந்த முறையில் ஈசனை நாடுபவர்களை முன்புநித்யயுக்தஎன்று அழைத்தார், இங்குஸததயுக்தஎன அழைக்கிறார். காலை அல்லது மாலை என ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமல்லாமல், சதா சர்வ காலமும் ஈஷ்வரனை நாடுபவர்கள் இங்கு விவரிக்கப்படுகிறார்கள். இவர்கள், அனைத்தின் ஆதாரமாக விளங்கும் அந்த ஒரு மெய்ப்பொருளைத் தேடுவதை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல் தங்களது வாழ்க்கையாகக் கொண்டவர்களாக உள்ளனர். இதைவிட மதிப்பிற்குரியதாக அவர்கள் எதையும் பார்க்காததால், அவர்களின் முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன. வெளிவிஷயங்களைப் பற்றிய எல்லா ஆசைகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு, என்றும் தன்னை ஈசனிடம் பொருத்தியவர்களாக இருக்கிறார்கள்.

ப்ரீதிபூர்வகம் 4ஜதாம்  அன்புடன் வழிபடுபவர்கள், பக்தியுடன் நாடுபவர்கள். இத்தகையவர்கள் ஈஷ்வரனைப் பற்றிய அறிவின்மீது நேசம் கொண்டவர்களாய் அன்புநிறைவோடு பஜிக்கிறார்கள். தெரிந்து கொள்ள ஒன்று இருக்கிறது என்று தெரிந்தவுடன், அதை அறிய முயற்சி செய்யாமல் ஒருவனால் இருக்க முடியாது. அந்த முயற்சி ஆசையாக மாறும். அறிவைத் தேடும் அந்த ஆசை ஒரு கட்டத்தில் தீவிர இச்சையாக, அன்பாக மாறுகிறதுஜிக்ஞாஸா. ஆர்வமும் முயற்சியும் அன்பாக மாறியவுடன் அவர்கள் மகிழ்வையும்(ரமந்தி), திருப்தியையும்(துஷ்யந்தி) அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். ஆசை என வரும்போது அதை நிறைவேற்றுவதில் தடைகள் இருப்பதனால் அது வலிகளைத் தருகின்றது. ஆனால் அது அறிவின் மீதான காதலாக மாறியவுடன் அது மகிழ்ச்சிக்குரியதாக ஆகிறது; தடைகள் கணக்கில் வருவதில்லை.


=> புத்தியோகம்:

இவ்விதம் அன்புடன் நாடுபவர்களுக்கு, நான் அந்த புத்தியோகத்தைக் கொடுக்கிறேன்தேஷாம் தம் பு3த்3தி4யோக3ம் 3தா3மி, என்கிறார் பகவான். ‘பு3த்3தி4யோக3ம்என்பது ஈஷ்வரனைப் பற்றிய பார்வையை, ஆத்ம-ஞானத்தை, சரியான அறிவை(ஸம்யக்-தர்ஷனம்) குறிக்கின்றது. ஆகவே என்னை அன்புடன் நாடுபவர்களுக்கு, நான் அந்த புத்தி யோகத்தை, மெய்ப்பொருள் தரிசனத்தை கொடுக்கிறேன்; அதன் மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள், அவர்கள் என்னுடன் ஐக்கியமாகிறார்கள்யேந தே மாம் உபயாந்தி, எனக் கூறுகிறார்

நான் எனது தெளிவான தரிசனத்தை கொடுக்கிறேன்என பகவான் கூறுவது ஒரு வகையில் வெறும் வெளிப்பாடே ஆகும். இந்த ஞானத்தின் விஷயமாக உள்ள ஈஷ்வரனே ஆத்மாவாக இருப்பதனால், இங்கு கொடுத்தல் பெறுதல் என எதுவுமில்லை. பரமேஷ்வரனிலிருந்து சுயம் வேறானதாக இல்லை என்கிற இந்த அங்கீகாரமே, இந்த ஞானத்தை அடைதலே அவனை ஈஷ்வரனிடம் சேர்க்கிறது

இருப்பினும் இவை அனைத்திலும் இறைவனின் கருணை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஏனெனில் இந்த தெளிவான பார்வையைப் பெறுததில் தடைகள்(பிரதிபந்தங்கள்) ஏராளம். பகவானை நாடும் ஜிக்ஞாசுவும் ஒரு வகையில் பக்தன் என்பதால் அவனுக்கு தேவையான அருள் நிச்சயம் கிடைக்கும் என்கிறார் பகவான்


சுவாமி சித்பவானந்தர்:

சர்க்கரையை நாவில் வைத்தால் அது தித்திக்கிறது என்பது தெரிகிறது. பிறகு அந்தச் சர்க்கரையை என்னென்ன வகைப் பட்சணங்களாகச் செய்தால் அதன் சுவையை நன்கு ரசிக்கலாம் என்று அறிவது சர்க்கரையைப் பற்றிய புத்தியோகமாகிறது. அதுபோல, உள்ளன்போடும் உறுதியாகவும் யோகத்தில் நுழைபவர்களுக்கு இறைவனது மஹிமை கொஞ்சம் விளங்குகிறது. அது யோகத்துக்கு இன்னும் தூண்டுகோலாகிறது. பகவான் தந்துகொண்டே வருகிற புத்தியோகத்தால் அவருடைய சொரூபம் மேலும் மேலும் அறியப்படுகிறது. அவருடைய சொரூபத்தைத் தொடர்ந்து அறியுமளவு பக்தன் இன்னும் அதிகமாகப் பகவானைச் சார்ந்து நிற்கிறான். இங்ஙனம் புத்தியோகத்தின் மூலம் பக்தி வளர்கிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரு சிறு துவாரத்தின் வழியாக ஒரு இருட்டறைக்குள் ஒரு கிரணம் வெளிச்சம் வருகிறது. அவ்வறைக்குள் இருப்பவனுக்கு வெளிச்சத்தைப் பற்றிய அபிப்பிராயமானது அந்த கிரணத்தின் அளவுக்குத் தகுந்தபடிதானிருக்கும். கதவுகளிலும் ஜன்னல்களிலும் துவாரங்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமான வெளிச்சம் வரும். அதைப் பற்றிய அறிவும் அதிகரிக்கும். அக்கதவுகளையும் சாளரங்களையும் நன்றாகத் திறந்துவிட்டால் வெளிச்ச மயமாக அவ்வறை இருப்பதை அவன் காண்பான். ஆனால் வெட்ட வெளியில் நிற்பவனோ வெளிச்சத்திலேயே இருக்கிறான். அதுபோல, பக்தர்களுடைய சுபாவத்துக்கும் சக்திக்கும் தகுந்தபடி ஈஷ்வரன் தன்னைத் தோற்றுவித்தருள்கிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.11|| புத்தியோகத்தினால் பக்தன் அடையும் நன்மை:

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तम:

नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता ।। ११ ।।

தேஷாமேவாநுகம்பார்த2மஹமஜ்ஞாநஜம் தம:

நாச1யாம்யாத்மபா4வஸ்தோ2 ஜ்ஞாநதீ3பேந பா4ஸ்வதா ।। 11 ।।


तेषाम्  தேஷாம்  அவர்களுக்கு    अनुकम्पार्थम् एव  அநுகம்பார்த2ம் ஏவ  கருணையினாலேயே   

त्म भावस्थ:  ஆத்ம பா4வஸ்த2:  அவர்கள் உள்ளத்தில் வீற்றிருந்து   अहम्  அஹம்  நான்    

भास्वता  பா4ஸ்வதா  பிரகாசிக்கின்ற   ज्ञानदीपेन  ஜ்ஞாநதீ3பேந  ஞானதீபத்தினால்   

अज्ञानजं  அஜ்ஞாநஜம்  அக்ஞானத்திலிருந்து பிறந்த   तम:  தம:  இருளை   

नाशयामि  நாச1யாமி  நாசம் செய்கிறேன்.


நான் அவர்களுக்கு அருளால் இரங்கி, உள்ளத்தில் வீற்றிருந்து, மெய்ஞ்ஞானச்சுடர் விளக்கால் அக்ஞானத்துதித்த ஆரிருளை அகற்றி விடுகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் பகவானால் கூறப்பட்ட புத்தியோகம் எனும் பலன் இங்கு விளக்கப்படுகிறது. இந்த புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது எனும் கேள்விக்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது

தேஷாம்அவர்களுக்கு, அதாவது ஈஷ்வரனை மட்டுமே நாடும் பக்தர்களுக்கு, பகவான் புத்தியோகத்தின் மூலம் மோக்ஷம் எனும் சிரேயஸை(நன்மையை) கொடுக்கிறார். அது எப்படி?

அநுகம்பார்த2ம் ஏவகருணையினாலேயே தரப்படுகிறது. அவர்கள் என்மீது கொண்ட தூய பக்தியினால் உண்டான கருணையின் காரணமாக இந்த சிரேயஸ் தரப்படுகிறது. எவ்விதமாக அது கொடுக்கப்படுகின்றது?


=> உள்ளத்தில் வசிப்பவன்:

ஆத்ம பா4வஸ்த2:அவர்களின் உள்ளத்தில் வீற்றிருந்து கொடுக்கப்படுகிறது. இங்குஆத்மாஎன்பது அந்தக்கரணமான மனதையும், ‘பா4வஸ்த2என்பது வ்ருத்தி எனக் கூறப்படும் எண்ண-மாறுதல்களையும் குறிக்கின்றது. இதன் நேரடியான பொருள், மனதில் எண்ணத்தில் வீற்றிருப்பவன் ஆகும். இந்த சொல்லின் மூலம் பகவான் சென்ற சுலோகத்தில், ‘நான் தருகிறேன்3தா3மி’, எனக் கூறியதன்பொருட்டு எழக்கூடிய தவறான கருத்தை நீக்குகிறார். பொதுவாக, ‘நான் தருகிறேன்என்பது எங்கோ அமர்ந்திருக்கும் ஈஷ்வரன் நமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நமக்கு அருளுகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் நமக்கும் ஈஷ்வரனுக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை வைத்துக் கொள்ளும் போக்கு வந்துவிடுகிறது. அதை முறியடிக்கும் விதமாக இங்கு, ஆத்ம பா4வஸ்த2: அஹம், சாதகனின் ஒவ்வொரு எண்ணத்திலும்  பரமாத்மாவாக அடையப் பெறுபவன் நான், என்கிறார் பகவான். ஒருவனின் மனதில் தோன்றும்நான், நான், நான்எனும் எண்ணத்தில், தூய பிரக்ஞையின் வடிவில் உள்ளேன்; அவனது சுய சொரூபமாக ஒளிர்கிறேன், என்கிறார்

ஒவ்வொரு எண்ணத்தின் சாரமாக விளங்கும் பரமேஷ்வரனான நான் அழிக்கிறேன்நாச1யாமி, என்கிறார். தீவிர அர்ப்பணிப்பு மற்றும் பக்தியின் காரணமாக ஜிக்ஞாசுவின் மனதில் ஒரு சாதகமான நிலை உருவாக்கப்படுகின்றது. கருணை அல்லது அருள் என்றழைக்கப்படும் அந்த அனுகூலமான நிலையில் நான் நாசம் செய்கிறேன். எதை அழிக்கிறார்

அஜ்ஞாநஜம் தம:அக்ஞானத்திலிருந்து பிறந்த இருளை அழிப்பதாகக் கூறுகிறார். பொதுவாக, அக்ஞானமும் இருளும் ஒன்றாகச் சொல்லப்படும். ஏனெனில் எப்படி இருளில் எதுவும் தெரியாதோ அதுபோல அக்ஞானத்திலும் எதுவும் தெரிவதில்லை. ஆனால் இங்கு, அறியாமையின் விளைவாக தோன்றிய மோஹத்தை இருள் எனக் கூறுகிறார். விவேகம் இல்லாத தன்மை, பகுத்தறிவற்ற நிலை, தவறான அறிவு அல்லது மித்யா ஞானம் இங்கு இருள் எனப்படுகிறது. அதாவது உடல்-மனம்-புலனுணர்வைநான்என எடுத்துக் கொள்ளும் தவறான கருத்து பகவானால் அழிக்கப்படுகிறது. எப்படி நீக்குகிறார்?

ஜ்ஞாநதீ3பேந பா4ஸ்வதா —  பிரகாசிக்கின்ற ஞானதீபத்தினால் மோஹம் எனும் இருளானது நாசம் செய்யப்படுகிறது. தர்ம-அதர்ம, நித்ய-அநித்ய மற்றும் ஆத்ம-அனாத்ம விஷயத்தில் இருக்கின்ற குழப்பம் அல்லது மயக்கம், மோஹம் எனப்படும். இந்த மோஹத்தை அழிக்க எந்த ஆயுதமும் தேவையில்லை. அறிவு எனும் எளிய விளக்கை ஏற்றுவது மட்டுமே போதுமானது. அறியாமையும் அதன் விளைவான மோஹமும் முழுப்பிரச்சினையாக புத்தியில் இருக்கும்போது, எந்த இருண்ட மூலையையும் விட்டு வைக்காத அறிவுச்சுடர் மட்டுமே போதுமானது. அறியாமையின் நிழல்களையும் விட்டு வைக்காத அந்த ஞானச் சுடரினால் நான் அழிக்கிறேன் என்கிறார்.


=> அடைவதும் இழப்பதும்:

இந்த வாழ்க்கையில் பொதுவாக நாம் அடையும் எந்தவொன்றையும் இழந்துதான் ஆகவேண்டும். பட்டியலிட ஆரம்பித்தால் செல்வம், பதவி, ஆரோக்கியம், புகழ், உடல் என அது நீண்டு கொண்டே செல்லும். இவற்றில் நாம் அடைவது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது:

 (1) அடையாததை அடைவது(சாத்4யஸ்ய சித்3தி4:)

 (2) அடைந்ததை அடைவது(சித்34ஸ்ய சித்3தி4:)

அதுபோல, இழப்பதும் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகிறது:

 (1) நாசத்தை அடைவதால் இழப்பது - .கா., செல்வம், ஆரோக்கியம், உடல்

 (2) இல்லை(இழந்தது) என்ற எண்ணத்தினால் இழப்பது

வேதாந்தத்தில், இந்த இரண்டாவது வகைக்கு உதாரணமாக ஒரு பிரபலமான கதை உள்ளதுபத்தாவது மனிதன். ஆற்றைக் கடக்கும் பத்து மனிதர்களில் ஒருவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக அதன் குழுத் தலைவன் நினைக்கிறான். எண்ணிக்கையின் போது தன்னை விட்டுவிட்ட காரணத்தினால் இந்தப் பிழை நேர்கிறது. ஆகவே இங்கு பத்தாவது மனிதனாக அவனே இருந்தபோதிலும் அதைப் பற்றிய அறியாமையினால் அவன் பத்தாவது மனிதனை இழக்கிறான். அந்த பத்தாவது மனிதன் நான்தான் என்ற அறிவு அவனது அறியாமையை நீக்கி இழந்த பத்தாவது மனிதனை திரும்பத் தருகிறது. ஆகவே அறியாமையினால் இழந்த ஒன்றை அறிவினால்தான் அடையமுடியும்

கர்மம்(செயல்) என்பது ஒன்றை உற்பத்தி செய்யும்காரகம். ஞானம் என்பது இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்ஞாபகம். ஈஷ்வரனை அடைதல் என்பது கர்மத்தினாலா? அல்லது ஞானத்தினாலா? என்ற கேள்விக்கு விடையாக இங்கு, என்னைப் பற்றிய அறியாமையை நீக்கி என்னை அடைவிக்கிறேன் என்கிறார். எனவே,

ஈஷ்வர ஞானம் = ஈஷ்வர அக்ஞான நிவ்ருத்தி = ஈஷ்வர ப்ராப்தி.

ஈஷ்வர ஞானத்தை அடைதலே ஈஷ்வரனை அடைதல் ஆகின்றது. ஒவ்வொருவரின் ஆத்மாவாகவும் இருக்கின்ற ஈஷ்வரனை அறியாமையினால் இழந்துள்ளோம். அந்த அறியாமை நீக்கப்படும்போது, ஆத்ம சொரூபமாகவேயுள்ள ஈஷ்வரனை அடைகிறோம். நம்மிடம் ஏற்கனவே இருக்கின்ற, ஆனால் இல்லை என்ற எண்ணத்தினால் மட்டுமே இழந்த ஈஷ்வரனை, ஞானத்தினால் மீண்டும் அடையப்பெறுகிறோம்சித்34ஸ்ய சித்3தி4:. எனவேதான் பகவான் இங்கு, சாதகனின் உள்ளத்தில் வீற்றிருந்து, அறியாமையிலிருந்து தோன்றிய மோஹமெனும் இருளை ஞானச்சுடர் விளக்கால் நாசம் செய்கிறேன் என்கிறார்.   

=> ஞானச்சுடர்:

ஞானத்தின் தீபமானது எண்ணெய் விளக்கின் வெளிச்சத்திற்கு ஒப்புமையாகக் கூறப்படுகிறது. இந்த உருவகத்தை தனது பாஷ்யத்தில் சங்கரர் அழகாக விளக்குகிறார். எரியும் விளக்கிற்கு சில விஷயங்கள் இன்றியமையாததாகின்றனஎண்ணெய், திரி, சுடர், சரியான அளவு காற்று மற்றும் ஆக்ஸிஜன்

விவேகம் எனும் இந்த விளக்கிற்கு பக்தியிலிருந்து வரும் மனத்திருப்தியே எண்ணெய் ஆகின்றது. மதிப்பு மற்றும் சரணாகதியுடன் கூடிய அன்பே பக்தி எனப்படும். இத்தகைய பக்தி மனதில் ஒரு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் உருவாக்கி மனதை நிறைக்கின்றது. விளக்கின் திரியானது இப்படிப்பட்ட பக்தியெனும் எண்ணெயில் தோய்க்கப்பட வேண்டுமெனக் கூறுகிறார்

ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ் சரியான அணுகுமுறையுடன் பயிலப்பட்ட சாஸ்திரம் மற்றும் கடைபிடிப்பட்ட ஒழுக்கநெறி இவைகளினால் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள புத்தியானது இந்த தீபத்திற்கான திரியாகிறது. பலத்த காற்றில் விளக்கானது எரியாது. ஆழ்ந்த ஈஷ்வரத் தியானமே இவ்விளக்கை எரிப்பதற்கான தூய காற்று(ஆக்ஸிஜன்) ஆகின்றது; தவத்தின் மீதே ஞானம் நிற்கும்.

ஓய்வடைந்த அந்தக்கரணமே இதற்கு அகலாக அமைகிறது. பெருங்காற்று வீசி தீபத்தை அணைத்துவிடலாகாது. ஆகவே அதற்கு பாதுகாப்பான இடம் அவசியம். விருப்பு வெறுப்பற்ற தெளிந்த மனது அதற்கேற்ற வீடாக அமைகிறது. தங்குதடையற்ற ஒருமுகப்பட்ட தியானத்தினின்று உதிக்கும் நிறைக்காட்சியே இத்தீபத்தின் ஒளிப்பிழம்பாகும். இதுவே பக்தனது உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஞான தீபமாகும். இதனால் அவன் கடவுள் காட்சியை உள்ளபடி அடையப்பெறுகிறான். அதாவது ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை அடைகிறான்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தாணாக்காரன் தனது விளக்கின் வெளிச்சம் எவர்மீது படும்படி திருப்புகிறானோ அவரைப் பார்க்கக்கூடும். ஆனால் அந்த விளக்கைத் தன்மீது திருப்பாதிருக்கும் வரையில் அவனை ஒருவராலும் பார்க்கமுடியாது. அதுபோல ஈஷ்வரன் எல்லாரையும் பார்க்கிறான். ஆனால் தனது கிருபை மூலமாக அவன் தன்னைத் தோற்றுவிக்கும் வரையில் ஒருவராலும் அவனைக் காணமுடியாது.

---------------------------------------------------------------------------------------------------------------------