||4.11|| ஏன் எல்லோரும் ஈஷ்வரனை அடையவில்லை என்ற சந்தேகத்திற்கான பதில்:
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् ।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्थ सर्वश: ।। ११ ।।
யே யதா2 மாம் ப்ரபத்3யந்தே தாம்ஸ்ததை2வ ப4ஜாம்யஹம் ।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த2 ஸர்வஸ2: ।। 11 ।।
ये யே யார் यथा யதா2 எப்படி मां மாம் என்னை प्रपद्यन्ते ப்ரபத்3யந்தே வழிபடுகிறார்களோ
तान् தாந் அவர்களுக்கு अहम् அஹம் நான் तथा एव ததா2 ஏவ அப்படியே
भजामि ப4ஜாமி அளிக்கிறேன் पार्थ பார்த2 பார்த்தா मनुष्या: மநுஷ்யா: மனிதர்கள்
सर्वश: ஸர்வஸ2: எல்லாவற்றிலும் मम மம என்னுடைய वर्त्मा வர்த்மா மார்க்கத்தை
अनुवर्तन्ते அநுவர்தந்தே அனுசரிக்கிறார்கள்.
யார் என்னை எப்படி அணுகுகிறார்களோ அவர்களுக்கு நான் அப்படியே அருள்புரிகிறேன். பார்த்தா, மக்கள் எப்போதும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
விளக்கம்:
மீண்டும் கிருஷ்ணர் இங்கு தன்னை ஈஷ்வரனாகக் கொண்டு பேசுகிறார். இறைவனை எவ்வாறு வணங்க வேண்டுமென்ற கேள்விக்கு பதிலளிப்பதால் இது மிக முக்கியமான ஒரு சுலோகமாகிறது. எந்த அளவு பக்தியுடன், எந்த உள் அர்ப்பணிப்புடன், எந்த நோக்கத்துடன், எந்த வடிவத்தில் மக்கள் அவரை வணங்குகிறார்கள்?
கிருஷ்ணரின் கூற்றுப்படி, ‘மக்கள் என்னை எந்த வடிவத்தில் வேண்டினாலும், அவர்களின் பிரார்த்தனையின் படியும், அவர்களின் கர்மத்தின் படியும் நான் அவர்களை ஆசிர்வதிக்கிறேன்’ என்கிறார்.
ஒரு பக்தர் இறைவனை கிருஷ்ண வடிவில் வணங்கினால், அந்த வடிவிலேயே அவர் இறைவனைக் காண்பார். வேறு வார்த்தையில் கூறுவதானால் இறைவனை கிருஷ்ணனாக, முருகனாக, யேசுவாகப் பார்ப்பது என்பது முற்றிலும் தனிப்பட்டது; அவரவர்களின் அகநிலைக்கு ஏற்றார்போல இது அமைகிறது. ஆகவே பகவான், ‘நான் எந்த வடிவத்தில் வணங்கப்படுகிறேனோ, அந்த வடிவத்திலேயே தோன்றுகிறேன்’ என்கிறார்.
=> வினை விதைப்பவன் வினையறுப்பான்:
முன் சொல்லப்பட்ட வாக்கியம் நோக்கத்திற்கும் பொருந்தும்: ‘நான் எந்த நோக்கத்திற்காக வணங்கப்படுகிறேனோ, அந்த நோக்கத்திற்காகவே சேவை செய்கிறேன். உலகின் பல்வேறு வளங்கள், சக்திகள், நியதிகள் மற்றும் சாத்தியங்கள் என நான் உங்களுக்கு கிடைக்கிறேன். எதை விரும்பி, எந்த வடிவத்தில் அழைக்கிறீர்களோ அப்படியே தோன்றப்போகிறேன்’. மக்கள் பொதுவாக குறுகிய, வரையறுக்கப்பட்ட பலன்களை மட்டுமே விரும்புகிறார்கள். உதாரணமாக, அவர்கள் துன்பத்திலிருக்கும் போது, அதிலிருந்து நிவாரணம் பெறவும், விஷய சுகத்தை அடையவும் விரும்புகிறார்கள். அதாவது ஒருவர் பைசெப்ஸை(மேற்கைத் தசை) அடைய விரும்புபவனாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று எடைதூக்கி பயிற்சியில் ஈடுபடுகிறார் என வைத்துக் கொள்வோம். மேற்கைத் தசையை விரும்பி, இறைவனை அவ்வடிவத்திலேயே அழைப்பதால், இறைவன் அவருக்கு மேற்கைத் தசையை(biceps) அளித்து ஆசிர்வதிக்கிறார். வினை விதைத்தவன் வினையறுப்பான். திணை விதைத்தவன் திணையறுப்பான். ஆகவே பைசெப்ஸை குறிக்கோளாகக் கொண்டு ஒருவரது வாழ்க்கையை அர்பணித்தால் அதையையே பலனாக அடைகிறார்.
=> பிரார்த்தனை என்பது பொதுவானது:
ஒவ்வொரு மதத்திற்கும் அதற்கேயுரிய பிரார்த்தனை வடிவங்கள் மற்றும் செயல்முறைகள் இருந்தாலும், எந்த ஒன்றும் மற்றொன்றை விட திறமையானது அல்ல. உதாரணமாக பழங்குடியினர் மழைக்காக நடனம் ஆடும்போது மழை வருகிறது. இதேபோல், ஒருவர் ஒரு குறிப்பிட்ட, மிக விரிவான, பண்பட்ட வேத சடங்கைச் செய்யும்போதும் மழை வரும். வேதத்தை அனுசரிப்பவர்களாக இருந்தாலும், பழங்குடியினராக இருந்தாலும், நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் இவ்விரு சடங்குகளும் ஒரே பலனைத் தருகின்றன.
பிரார்த்தனை என்பது ஒரு குறிப்பிட்ட வடிவில், ஒரு குறிப்பிட்ட மொழியில் வெளிப்படுத்தப்படும் ஓர் உணர்வு. சில சமயங்களில் மொழி புலப்படாமலோ அல்லது புரியாமலோ கூட போகலாம். ஆனால் அதில் உணர்வு மற்றும் நோக்கம் நிச்சயமாக இருக்கிறது. இதுவே இறைவனிடம் ஒருவரது வேண்டுகோளைக் கொண்டு செல்கிறது.
=> கடவுளுடன் தன்னை இணைத்துக் கொள்ளாதவர்களும் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்:
இங்கு பகவான், மதத்துடன் தொடர்பு இல்லாரவர்களும் கூட தன்னால் அருளப்படுகிறார்கள் என்கிறார். சிலருக்கு பணம் மற்றும் அதிகாரமே அவர்களது மதம். ஒரு கம்யூனிஸ்டைப் பொறுத்தவரை பொதுவுடைமைச் சார்ந்த சித்தாங்களும் அவர்களது பொருளாதார கொள்கைகளுமே மதம். எந்த மதமாக இருந்தாலும் அந்த வடிவத்தில் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள், அதாவது அவர்கள் கண்டிக்கப்படுவதில்லை. ஏனெனில் எல்லா மனிதர்களும் என்னை மட்டுமே பின்பற்றுகிறார்கள் — மம வர்த்மா அநுவர்தந்தே. அதாவது என்னைத் தான் தேடுகிறார்கள் என்பது தெரியாமல் அவர்கள் எனது பாதையிலேயே இருக்கிறார்கள் என்கிறார் பகவான். ‘எந்தப் பாதையின் முடிவிலும், நானே இருக்கிறேன். பணம், பதவி மற்றும் சக்தி என அவர்களின் இலக்கு எதுவாக இருந்தாலும், அனைத்துமாக நானே இருப்பதால் என்னையடையும் பாதையிலேயே இருக்கிறார்கள்’.
தெரிந்தோ தெரியாமலோ உண்மையில் எல்லா மக்களும் பரமாத்மாவுடனான தனது அடையாளத்தையே நாடுகிறார்கள். குறுகிய வட்டத்திலிருந்து, சிறுமையிலிருந்து, அற்பமானவன் என்ற அடையாளத்திலிருந்து விடுபட விரும்புபவர்களாக, எதையோ தேடுபவர்களாக இருக்கிறார்கள். முழுமையை நாடுவது அற்பத்திலிருந்து சுதந்திரம் தேடுவதிலிருந்து வேறுபட்டதல்ல; இரண்டும் ஒன்றே. சிறியதாக இருப்பதிலிருந்து விடுதலை என்பதை முழுமை, பூரணத்துவம்(पूर्णत्व) எனப் பொருள்படுத்தலாம். அனைவரும் முழுமையானவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புகிறார்கள். மது அருந்துபவர்களும்கூட தனது மகிழ்ச்சிக்காகவே அக்காரியத்தை செய்கிறார்கள். சிறிதேனும் மகிழ்ச்சியோ, சுகமோ இல்லையெனில் எவரும் அச்செயலை செய்யமாட்டார்கள்.
முழுமையும் மகிழ்ச்சியும் இறைவனுடைய இயல்பு; ஈஷ்வரனே பூரண-சொரூபம், ஆனந்த சொரூபம். மனிதர்கள் அனைவரும் இந்த முழுமையையும், மகிழ்ச்சியையும் தேடுவதால், அவர்களை அறியாமலேயே அவர்கள் இறைவனை அடையும் பாதையில் தான் இருக்கிறார்கள்.
=> எப்படி அணுகுகிறார்களோ, அப்படியே அருள்புரிகிறேன்:
மக்கள் பகவானிடம் எந்த பாவனையுடன் வேண்டுகிறார்களோ அதை அவர்களுக்கு கொடுப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார். உதாரணமாக சித்த-சுத்தி, வைராக்கியம் வேண்டும் என கேட்கும்போது பகவான் அதற்கேற்ற சூழ்நிலையையும், கஷ்டத்தையும் கொடுத்து ஒருவனை பக்குவப்படுத்தி அதை தருகிறார். முக்தியை நாடுபவர்களுக்கு முக்தியையும், இவ்வுலக சுகத்தை நாடுபவர்களுக்கு போகத்தையும் கொடுக்கிறார். இவ்விரு வகையினருமே கர்ம மார்க்கம் அல்லது ஞான மார்க்கம் என அவர் வகுத்துக் கொடுத்த பாதையில்தான் இருக்கிறார்கள்(மம வர்த்மா அநுவர்தந்தே) என பகவான் கூறுகிறார். போகப் பொருளாய் பரிணமிப்பதும் பகவானேயாதலால் போகத்தை நாடுபவர்களும் தம் அறிவுக்கு எட்டியபடி பகவானையே நாடுகிறார்கள். ஈஷ்வரன் கற்பக விருக்ஷம் போன்றவன். கற்பக விருக்ஷத்தின் அடியில் இருந்துகொண்டு யார் எதை விரும்புகிறார்களோ அதை அடைகின்றனர்.
=> எல்லா மார்க்கங்களும் இறைவனையே சென்று சேருகின்றன:
உலகில் பல மதங்கள் உண்டு. மக்களின் இயல்பு வேறுபாடிற்கேற்ப மத வேறுபாடும் உள்ளது. யார் யார் எந்த எந்த மதத்தின் மூலம் எப்படியெப்படி இறைவனை வணங்குகின்றார்களோ அப்படியெல்லாம் இறைவன் மக்களுக்கு ஊக்கம் கொடுத்து, பக்தியை வளர்த்து அவர்கள் தம்மை வந்தடைவதற்கு வழிகாட்டித் தருகிறார். அனைத்து மதங்களுக்கும் அவரது அனுகிரஹம் உண்டு. அவரவர் மதத்தை ஆழ்ந்து அனுஷ்டிப்பதற்கிடையில் மதங்களுக்குள் சமரசம் காண்பது முற்றிலும் அவசியமாகிறது. சமரசம் காண்பதென்பது இறைவனது பெருந்திட்டத்தை போற்றுவதாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------||4.12|| மக்களனைவரும் மோக்ஷத்தை நாடாததற்கு காரணம்:
काङ्क्षन्त: कर्मणां सिद्धिं यजन्त इह देवता: ।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा ।। १२ ।।
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்3தி4ம் யஜந்த இஹ தே3வதா: ।
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்3தி4ர்ப4வதி கர்மஜா ।। 12 ।।
कर्मणां கர்மணாம் கர்மங்களுடைய सिद्धिं ஸித்3தி4ம் பலனை काङ्क्षन्त: காங்க்ஷந்த: விரும்பியவர்களாக इह இஹ இந்த உலகில் देवता: தே3வதா: தேவதைகளை
यजन्ते யஜந்தே போற்றுகிறார்கள் हि ஹி ஏனென்றால்
मानुषे लोके மாநுஷே லோகே மனுஷ்ய லோகத்தில் कर्मजा सिद्धि: கர்மஜா ஸித்3தி4: கர்மபலனானது
क्षिप्रं க்ஷிப்ரம் விரைவில் भवति ப4வதி உண்டாகிறது.
கர்மபலனை விரும்புபவர்கள் இம்மையில் தேவதைகளை வழிபடுகிறார்கள். ஏனென்றால் மனித உலகத்தில் வினைப்பயன் விரைவில் கிடைக்கிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!
விளக்கம்:
பலர் தன்னை வந்தடைந்ததாக, அதாவது இறைவனுடனான தங்களது அடையாளத்தை கண்டுகொண்டதாக முந்தய சுலோகத்தில்(4.10) கிருஷ்ணபகவான் கூறினார். ஆனால் மக்கள் அனைவரும் ஏன் அவரிடம் வரவில்லை? பகவான் சிலரை மட்டுமே விரும்பி, மற்றவர்களை விட்டுவிடுகிறாரா என்ன?
=> பகவானை எவ்வாறு வரித்துக் கொள்வதென்பது அவரவர் விருப்பம்:
இந்த கேள்விக்கு பகவான், அவர் யாருக்கும் எதையும் மறுப்பதில்லை என்பதை பதிலாக உரைக்கிறார். ஒருவன், ஒரு ஜீவனாக ஈஷ்வரனின் படைப்பிற்குள் இருப்பதை மட்டுமே தேர்வுசெய்தால் அந்த அளவுக்கு மட்டுமே அவனும் கிடைக்கப் பெறுகிறான். அவருடைய மிகப் பெரிய பக்தரும் கூட அவரை எந்த வடிவத்தில் அழைக்கிறாரோ அப்படியே ஆசிர்வதிக்கிறார். பகவான் எவ்விதத்திலும் நடுநிலை தவறுவதில்லை. அதாவது, நீங்கள் இறைவனை அழைக்கும் வடிவம் உங்களுக்கு இறைவனாகிறது. உதாரணமாக இந்திர தேவனை கடவுளாக வரித்துக் கொள்பவர்களுக்கு இந்திரன் தெய்வமாகிறார். எந்த பலனுக்காக அவர் வணங்கப்பட்டாரோ அந்த பலனைத் தரும் தேவதையாக அவர் மாறுகிறார். சிலர், அவர்களின் ஜாதகம் தொடர்பாக குரு, சுக்கிரன், சனி அல்லது செவ்வாய் போன்ற கிரகங்களாக தேவதைகளை வரித்துக் கொள்வர். குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரகங்கள் ஒருவருக்கு, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் அல்லது பிரச்சினைகளைக் குறிக்கின்றன. இங்கு ஈஷ்வரன் கிரகமாகவே, பிராரப்த-கர்ம-அதிஷ்டான-தேவதையாகவே நாடப்படுகிறார். இதுபோன்ற அனைத்து பிரார்த்தனைகளிலும் இறைவன் எந்த நோக்கத்திற்காக அழைக்கப்படுகிறாரோ அவ்விதமாகவே அவர் செவிசாய்க்கிறார். ஏற்கனவே பார்த்தது போல, பணம், பதவி ஏன் பைசெப்ஸை(மேற்கைத் தசை) விரும்புபவர்களுக்கும் பகவான் அந்த வடிவத்திலேயே அருள்புரிகிறார்.
மக்கள் ஏன் இறைவனை இவ்விதம் தவறாக புரிந்து கொள்கிறார்கள்? அவர்கள் ஏன் முக்தியை விரும்பும் முமுக்ஷுக்களாக பகவானை அணுகக்கூடாது? ஏனென்றால், எது விரைவில் அகப்படுகிறதோ அதில் பற்று வைத்து அதையையே நாடுகிறார்கள். இவ்வுலக சம்பந்தமான பலன்களைப் பெற விரும்பியவர்களாக அவர்கள் வெவ்வேறு தெய்வங்களை வணங்குகிறார்கள்— இஹ யஜந்தே தே3வதா:. அதற்கு அப்பால் அவர்களால் சிந்திக்க முடிவதில்லை. அவர்கள் மொத்தத்திற்கும் அதிஷ்டானமாக பரமேஷ்வரனை நாடுவதில்லை. அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் கஷ்டங்களை நீக்க ஒரு உபாயமாகத்தான் தன்னை நாடுகிறார்கள் என்கிறார் கிருஷ்ணர். ‘அவர்கள் என்னைத் தேடுவதில்லை. என்னைப் பின் தொடர்வதுமில்லை. அவர்கள் என்னை அறிய விரும்பவில்லை. அவர்களும் எனது பக்தர்கள்தான் என்றாலும், என்னை சிறிய தெய்வங்களாக மட்டும் வணங்குகிறார்கள். அவர்கள் உடனடியாக பார்த்து அனுபவிக்கக்கூடிய இந்த சிறிய பலன்களை மட்டுமே பெற விரும்புகிறார்கள்’.
அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் தங்களை சுயாதீனமானவர்களாகக் கருதுவதால், ஒரு சில பலன்களைப் பெறுவதற்குத் தேவையானதை தாங்களாகவே செய்துகொள்ளும் வல்லமை கொண்டவர்களாக நினைக்கிறார்கள். கர்த்ருத்துவத்தை(‘நான் செயல் செய்பவன்’ எனும் பாவனை) அடிப்படையாகக் கொண்டு செயலைத் தேர்ந்தெடுக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது. விலங்குகளுக்கு இந்த ‘கர்த்ருத்துவ’ உணர்வு இல்லை; தேவர்களுக்கும் இல்லை. அவர்களுக்கு அனுபவிக்கும் உணர்வு(போக்த்ருத்துவ பாவனை) மட்டுமே உள்ளது. ஆகவே மக்கள் அவரவர்களின் இயல்பிற்கு ஏற்றார்போல் தேவைகளையும், முடிவுகளையும் தேர்ந்தெடுத்து அதை அடைவதற்கான வழிகளைத் தீர்மானித்து அதன் பின்னால் செல்கிறார்கள்.
=> மனிதன் மோக்ஷத்தை நாடாததற்கு என்ன காரணம்?
(i) கடினம். எல்லோர்க்கும் ஞானத்தை அடைதல் என்பது கடினம். உயர்ந்த இலக்கை அடைவிக்கும் இந்தப் பாதையில் பயணிக்கும் தகுதி அனைவருக்கும் இருக்காது. மேலான பொருளுக்கு ஆசைப்படுவதும் ஒருவித சக்தியே. இதை இச்சா-சக்தி என்பர். முமுக்ஷுத்வம் இச்சா-சக்தியின் வெளிப்பாடாகும்.
(ii) எளிதில் அடைய முடியாதது. மனித மனதின் பொதுவான இயல்பானது, விரைவாகக் கிடைக்கும் பலனை விருப்புவதாகவே உள்ளது. ஆத்ம ஞானத்தைவிட மிக எளிதில் அடையப்பெறுவது கர்மபலன். ஞானத்தில் வரும் தீர்வு முழுமையானது. கர்மத்தினால் வரும் பலன் அப்போதைக்கானது. ஆகவே அப்போதைக்கு அதாவது இம்மைக்கு தேவையான விஷயத்தில்தான் பெரும்பாலான மக்கள் எப்போதும் ஈடுபடுவார்கள். இம்மை என்றும் மனுஷ்யலோகம் என்றும் சொல்லப்படுவது இந்திரியங்களுக்குப் புலனாகும் இவ்வுலகம்.
-------------------------------------------------------------------------------------