செவ்வாய், 24 நவம்பர், 2020

ஸாங்கிய யோகம் 2.1 - 2.2

இரண்டாம் அத்தியாயம்

ஸாங்கிய யோகம் [सांख्ययोग:]


முழு பகவத் கீதையின் சாரம் இரண்டாம் அத்தியாயமான இங்கும், பதினெட்டாவது அத்தியாயத்திலும் உள்ளது. உபக்ரம பாகம் - முகவுரையில் சாரத்தை கூறுதல். உபஸம்ஹாரம் - முடிவுரை.


இந்த இரண்டாம் அத்தியாயத்தில் வரும் 4 முக்கிய தலைப்புகள்:

 (1) வேதாந்த முகவுரை

 (2) ஞான யோகம்

 (3) கர்ம யோகம்

 (4) ஞானியின் லக்ஷணம் & ஞானத்தின் பலன்.


||2.1||


सञ्जय उवाच

तं तथा कृपयाऽऽविष्टमश्रुपूर्णाकुलेक्षणम्

   विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदन: ।।  ।।


ஸஞ்ஜய உவாச

தம் ததா2 க்ருபயாऽऽவிஷ்டமச்ருபூர்ணாகுலேக்ஷணம்

விஷீத3ந்தமித3ம் வாக்யமுவாசமது4ஸூத3: ।।  1 ।।


सञ्जय उवाच  ஸஞ்ஜய உவாச  ஸஞ்ஜயன் சொன்னது

तथा  ததா2  அங்ஙனம்    कृपया आविष्टम्  க்ருபயா ஆவிஷ்டம்  இரக்கம் ததும்பியவனும்    

अश्रुपूर्ण आकुल ईक्षणम्  அச்1ருபூர்ணா ஆகுல ஈக்ஷணம்  நீர் நிறைந்து பார்வை குறைந்த கண்களுடையவனும் 

विषीदन्तम्  விஷீத3ந்தம்  துக்கப்பட்டுகொண்டிருக்கிறவனும் 

तं  தம் அவனுக்கு   मधुसूदनமது4ஸூத3:  மதுசூதனன்    इदं वाक्यम्  இத3ம் வாக்யம் இந்த வாக்கியத்தை   उवाच  உவாச சொன்னார்.


ஸஞ்ஜயன் சொன்னது

இரக்கம் ததும்பியவனாக, நீர் நிறைந்து, பார்வை குறைந்த கண்களுடன் துக்கப்பட்டுக்கொண்டிருந்த அர்ஜுனனுக்கு, மதுசூதனன் இவ்வாக்கியத்தை சொன்னார்.


பாரதியின் மொழிபெயர்ப்பு

இவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய், நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்கிறார்.


விளக்கம்: 

இரண்டாவது அத்யாயத்தின் ஆரம்ப ஸ்லோகமான இங்குஅவன்(தம்)’ எனும் படர்க்கையின் உபயோகம், யுத்த களத்தில் நிகழ்ந்தவற்றை சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் தொகுத்து கூறிக்கொண்டுள்ளார் என்பதை ஞாபகப்படுத்துகிறது. முதல் அத்யாயத்தில் அர்ஜுனனின் புலம்பலை மிக பொறுமையாக கவனித்த க்ருஷ்ணனை, சஞ்சயன் இங்கு மதுசூதனன், மது என்னும் அரக்கனை கொன்றவன் என்று குறிப்பிடப்படுகிறார்

  அன்பு மற்றும் இரக்கம் மேலெழுந்தவனாய், கருணையினால் மூடப்பட்டவனாக, நீர் நிறைந்த கண்களுடன் நிற்பதாக அர்ஜுனன் இங்கு வர்ணிக்கப்படுகின்றான். தனது குருமார்களையும் உற்றார் உறவினர்களையும் அழிக்க வேண்டிய சூழ்நிலையினால் குழப்பமடைந்தவனாய், கருணையா? கடமையா? என்ற முரண்பாட்டிற்கு பதில் தெரியாதவனாய் துயருற்று நின்றிருந்தான்

ஒருவன் தன் மனதை முற்றிலும் தன் வசம் வைத்துக்கொண்டு பிறர்படும் துக்கத்தை போக்க முயல்வது இரக்கம். இங்கு அர்ஜுனனிடம் தென்படும் இரக்கம் அத்தகையதன்று. உணர்ச்சியானது அவனது உடைமையாயிருப்பதுபோய், அவன் உணர்ச்சிக்கும் மனத்தளர்ச்சிக்கும் அடிமையாகிவிட்டான். இந்நிலையில் நின்றிருந்த அர்ஜுனனை நோக்கி பகவான் பின்வரும் வாக்கியத்தை கூறினார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------

||2.2||


श्री भगवानुवाच  [ஶ்ரீ பகவானுவாச]

ஶ்ரீ - செல்வத்துடன் கூடியவர்

பகவான் - 6 விதமான ஐஸ்வர்யங்களை முழுமையாகக் கொண்டவர்.

(1) ஆள்தல் [Rulership]

(2) தர்மம்

(3) புகழ் [Absolute fame]

(4) செல்வம் 

(5) ஞானம்; அறிவு [All knowledge] 

(6) வைராக்யம்

भग अस्य अस्ति इति भगवान्

एेश्वर्यस्य समग्रस्य वीर्यस्य यशस: श्रिय:

ज्ञानवैराग्ययोश्चैव षण्णां भग इतीरणा ।।  

(விஷ்ணு புராணம்  — 6. 5. 74)

இங்கு பகவான் அர்ஜுனனிடம் ஒரு நண்பனாகவே பேசுகிறார். ஏனெனில் அவன் இன்னும் சிஷ்யனாக மாறவில்லை.

 முகவுரை:

=> எல்லா மனிதர்களும் துயரத்தை(மனதில் குறையை) அடைகிறார்கள். பொறாமை, கோபம் போன்றவை மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கிறது. சோக நிமித்தம்(காரணம்) ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது

=> அப்போதைக்கு துயரமானதை நீக்குவதன்(சூழ்நிலையை மாற்றுவதன்) மூலம் மனிதன் துயரத்தை நீக்குகிறான். Topical problems - நேரடியாக தெரியும் பிரச்சனை.

=> இங்கு அர்ஜுனனின் நேரடிப் பிரச்சனை, தாத்தாவையும் குருவையும் கொல்வது. அதைக் கொண்டு பகவான், அடிப்படை பிரச்சனையை(fundamental problem) விளக்கி அதற்குண்டான தீர்வை சொல்ல இருக்கிறார்.

=> துயரத்திலிருந்து விடுபட கடக்க வேண்டிய 4 படிகள் (சிஷ்ய லக்ஷணம்) :

(1) தான் சம்சாரி என கண்டுகொள்ளுதல் [discovery of samsara]

(2) சம்சாரத்திலிருந்து விடுதலையடையும் இச்சை

(3) தானே இத்துயரத்திலிருந்து விடுபட முடியாது என உணர்தல் [helplessness]

(4) குருவை சரணடைதல்

இதுவரை அர்ஜுனன் 2 படியைத்தான் கடந்துள்ளான்


श्री भगवानुवाच  

कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम्

अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ।। ।।


ஶ்ரீ பகவானுவாச

குதஸ்த்வா கச்1மலமித3ம் விஷமே ஸமுபஸ்தி2தம் ।

அனார்யஜுஷ்டமஸ்வர்க்3யமகீர்த்திகரமர்ஜுன ।। 2 ।।


अर्जुन  அர்ஜுன  அர்ஜுனா    विषमे  விஷமே  நெருக்கடியில்    कुत: குத: எங்கிருந்து    इदं  இத3ம்  இந்த    अनार्यजुष्टम्  அனார்யஜுஷ்டம்  ஆரியனால் செய்யத்தகாத    अस्वर्ग्यम्  அஸ்வர்க்3யம்  ஸ்வர்க்கத்தைத் தடுப்பது   अकीर्तिकरम्  அகீர்த்திகரம்  புகழை போக்குவது    कश्मलम्  கச்1மலம்  கீழ்மை    त्वा  த்வா  உன்னை समुपस्थितम्  ஸமுபஸ்தி2தம்  வந்தடைந்தது.


ஹே அர்ஜுனா! இந்த நெருக்கடியான சமயத்தில், மேலானவர்களால் செய்யத்தகாததும், ஸ்வர்க்கத்தை தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இந்த கீழ்மை உனக்கு எங்கிருந்து வந்தது


பாரதியின் மொழிபெயர்ப்பு :


ஶ்ரீ பகவான் சொல்கிறான்,

இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இது ஆரியருக்கு தகாது. வானுலகை தடுப்பது; அபகீர்த்தி தருவதுஅர்ஜுனா


விளக்கம்: 

இங்கு சொல்லப்படும்ஆரியன்என்னும் சொல், ஒரு தேசம் அல்லது ஒரு ஜாதிக்கு உரியவனை குறிப்பதில்லை. பண்பட்ட மனமும் சிறந்த வாழ்க்கை முறையும் எவனிடத்தில் உள்ளதோ அவன் ஆரியன். சரியான நேரத்தில் சரியானதைச் செய்பவன், அறநெறி நிலை நிற்பவன் ஆரியன். மனத்தகத்து மாசு படிந்திருப்பவன் ஆரியன் ஆகான். அர்ஜுனனுக்கு மனம் கலங்கியிருக்கிறது என்கிறார் பகவான். அவன் இதுவரையில் பேசியதில் பொருள் ஒன்றுமில்லை என்பதற்கு அவனது மனக்கலக்கமே சான்றாகும். அதைக் குப்பையென்று(கச்1மலம்) கண்ணன் ஒதுக்குகிறார். மனக்கிலேசம் அடைபவனுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இல்லை


-----------------------------------------------------------------------------------------------------