செவ்வாய், 27 ஜூலை, 2021

கர்மயோகம் 3.42 - 3.43

 ||3.42|| ஆசையை வெல்ல ஆத்ம ஞானத்தை உபாயமாக கூறுகிறார்

इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्य: परं मन:  

मनसस्तु परा बुद्धिर्यो बुद्धे: परतस्तु : ।। ४२ ।।

இந்த்3ரியாணி பராண்யாஹுரிந்த்3ரியேப்4: பரம் மன:  

மனஸஸ்து பரா பு3த்3தி4ர்யோ பு3த்3தே4: பரதஸ்து : ।। 42 ।।


इन्द्रियाणि   இந்த்3ரியாணி   புலன்கள்   पराणि   பராணி   மேலானவைகள் என்று   

अाहु:  ஆஹு:   சொல்கிறார்கள்   इन्द्रियेभ्य:   இந்த்3ரியேப்4:   புலன்களை விட   मन:   மன:   மனது   

परं  பரம்   மேலானது    तु   து   ஆனால்    मनस:  மனஸ:   மனதைவிட    बुद्धि:   பு3த்3தி4:  புத்தியானது   

परा  பரா  உயர்ந்தது   तु  து  ஆனால்   :  :  யார்   बुद्धे:   பு3த்3தே4:   புத்தியைவிட    

परत:   பரத:   மேலானவன்    :   :  அவன்(ஆத்மா).    


இந்திரியங்கள் ஸ்தூலமான உடலைக் காட்டிலும் மேலானது என்பர். அவற்றிலும் மேலானது மனம். புத்தியோ மனதைவிடப் பெரியது. புத்திக்கும் உயர்ந்ததாக ஆத்மா உள்ளது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).


விளக்கம்:

=> ஆத்ம ஞானத்திற்கும் மனதிலுள்ள ஆசை நீங்குவதற்கும் என்ன சம்பந்தம்

* குறையுடைய மனதிலிருந்து(அபூரணத்துவத்திலிருந்து) ஆசை உருவாகிறது. ‘இதை அடைந்தால் திருப்தி; இது நீங்குவதால் மன நிறைவுஎன நிறைவற்ற மனமானது ஏதேனும் ஒன்றிற்கு ஏங்கிக் கொண்டேயிருக்கும்.

* குறை சொரூபமான மனதின் மீது உண்டாகும்நான்எனும் அபிமானத்திலிருந்து, ‘நான் நிறைவற்றவன்; முழுமையற்றவன்என்ற அபூரணத்துவத்தை தன்னுணர்வின் மீது ஏற்றிவைக்கிறோம்.

* ஒருவேளைநான் பூரண சொரூபமானவன்என்று தெரிந்திருந்தால் ஆசை உருப்பெற்றிருக்காது

* ஆகையினால் ஆத்ம-அனாத்ம அக்ஞானத்தினால்தான் உடல் மற்றும் மனதைநான்என நினைக்கிறோம். அதாவது சுயத்தை குறித்த அறியாமையிலிருந்து அனாத்ம(உடல்) அபிமானம் தோன்றி அதனால் வரும் அபூரணத்துவத்திலிருந்து ஆசை உண்டாகிறது.

அறியாமை —> அனாத்ம அபிமானம் —> அபூரணத்துவம் —> ஆசை

* அறிபவனான ஆத்மாவையும்(த்3ருக்), அறியப்படும் பொருளான அனாத்மாவையும்(த்3ருஷ்யம்) ஒன்றையொன்று கலந்துவிட்டு புரிந்து கொண்டுள்ளோம்.

* பஞ்ச கோஷத்திற்கும், மூன்று சரீரத்திற்கும் அப்பாற்பட்டது ஆத்மா. அறிபொருளான இவைகளை பிரகாசப்படுத்துவது ஆத்மா.

* பஞ்ச கோஷம்(ஐந்து கோசங்கள்) - அன்னமய கோஷம்(ஸ்தூல உடல்), பிராணமய கோஷம்(பிராணன்), மனோமய கோஷம்(மனம்), விக்ஞானமய கோஷம்(புத்தி), ஆனந்தமய கோஷம்(ஆனந்தம்). உபநிடத சிந்தனைகள் ஆத்மாவை விளக்கும் பொருட்டு முதலில் நம் உடலை பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்திரீய உபநிடதத்தில் வருகிறது. கோசம் என்றால் உறை

* மூன்று சரீரம்ஸ்தூல சரீரம்(உடல்), சூக்ஷம சரீரம் (19 அங்கங்கள் = 5 வகை பிராணன் + 5 கர்மேந்திரியங்கள் + 5 ஞானேந்திரியங்கள் + மனம் + புத்தி + அஹங்காரம் + சித்தம்), 

காரண சரீரம்(காரண சொரூபம்).


=> தனக்கும் தனது விருப்பத்திற்குமுள்ள இடைவெளியைக் கண்டறிதல்:

ஆசையானது ஒருவனின் ஞானத்தை கொள்ளையடித்துச் செல்வதால் புலனடக்கத்தின் மூலம் அதை அழித்து விடு என்று கூறினார். ஆசையை அடக்கவோ, நசுக்கி ஒடுக்கவோ வேண்டுமென்பது கிருஷ்ணரின் உபதேசமல்ல. சுபாவத்தின் பொருட்டு எழும் ஆசையை தடுக்க முடியாது என்றும் தெளிவாக விளக்கியிருந்தார். மாறாக, இந்த விருப்பு-வெறுப்புக்கள் நம்மை முழுமையாக ஆட்கொண்டு அவைகளின் போக்கில் செலுத்தி விடாமலிருக்க, இந்திரிய மற்றும் மன கட்டுப்பாட்டை உபாயமாகக் கூறினார். ஆசையானது புலன்கள், மனம் மற்றும் புத்தியை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. ஆகவே அவைகளின் மீது ஆதிக்கம் செலுத்த, இரண்டிற்குமிடையேயான இடைவெளியைக் கண்டறிதல் அவசியமாகிறது. மனதிற்குள்ளேயே இருந்துகொண்டு அதன்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. மேலும் ஒருவன் உள்நோக்கிச் செல்லச் செல்ல, தனது இயல்பிற்கான காரணங்களைக் கண்டறிய முடியும். எனினும் இந்த ஆய்வு ஒரு குறிப்பிட்ட புரிதலை கொடுக்குமே தவிர அந்த காரணங்களை அது நீக்கிவிடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதலின் மூலம் ஆசையை கட்டுக்குள் வைக்கலாம். உளவியல் சிக்கலால் கலக்கமடைந்தவர்கள் மனநல மருத்துவர்களை நாடுவதும் இந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டேயாம். ஆக, ஆசையிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைப்பதன் மூலமே நாம் அதை கையாள முடியும்!  


=> மனதை அடக்கி ஆளும் முறை

ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்த அதற்கான வழிமுறையையும் அதை அடையும் வரிசைமுறையும் அறிந்திருக்க வேண்டும். இங்கு கண்ணன் இந்த வரிசைக்கிரமத்தை அர்ஜுனனுக்கு விளக்குகிறார். அதன்படி, முதலில் புலன்களிலிருந்து ஆரம்பிக்கிறார். புலன்கள் உயர்ந்தது என்று சான்றோர்கள் சொல்கிறார்கள்(இந்த்3ரியாணி பராணி  ஆஹு:). ‘உயர்ந்ததுஎனும் சொல் ஒப்பீட்டைக் குறிக்கிறது. எனவேஎதை விட உயர்ந்தது?’ என்ற கேள்விக்கான விடை, ஸ்தூலமான இந்த உடல்.

=> ‘உயர்ந்தது(பரம்)’ என்பதன் பொருள்விளக்கம்:

இந்த சுலோகத்தில் வரும்மேலானது/உயர்ந்ததுஎன்பது கீழ்கண்ட மூன்றையும் குறிக்கிறது.

  (i) சூக்ஷமமானது; நுண்ணியது 

  (ii) அதிகமாக வியாபிப்பது 

  (iii) அருகிலுள்ளது(ஆத்மாவிற்கு அருகில் இருப்பது)

  தனியொரு ஜீவனின் பகுதியான ஸ்தூல உடலைக் காட்டிலும் இந்திரியங்கள் மேலானது. ஏனெனில் கண் உள்ளிட்ட மற்ற புலன்களின் மூலமாகவே உடலை அறிய முடியும். மேலும் உடலைக் காட்டிலும் புலன்கள் நுண்ணியவை. ஆகவே அதனுடைய வியாபிக்கும் திறனும்(வ்யாபகத்வா_व्यापकत्वा) விரிகிறது. உதாரணமாக உடல் தரையில் உள்ளது, அதேசமயம் கண்கள் நட்சத்திரங்களுக்கு செல்ல முடியும். எதையும் செய்ய, உடல் நகர வேண்டும். ஆனால் கண்களைத் திறப்பதன் மூலம் மட்டுமே அவற்றின் பார்வை நட்சத்திரங்களுக்குச் சென்றுவிடுகிறது! உள்நோக்கிய பயணத்தில், ஸ்தூல உடலினுள் இருக்கின்ற சூக்ஷம உடலின் ஓர் அங்கமான புலன்கள் மேலானவைகள்

பின்னர் இந்த சுலோகம் புலன்களைக் காட்டிலும் மனம் உயர்ந்தது(இந்த்3ரியேப்4: மன: பரம்) என கூறுகிறது. ஏனெனில் புலன்களால் செல்ல முடியாத இடத்திற்கும் மனமானது சென்றுவிடும். மனதின் தொழிலாகிய எண்ணத்திற்கு இந்திரியங்களின் தொழிலைவிட அதிக வியாபகமுண்டு. சொர்க்கமோ நரகமோ கற்பனை எனும் திறன் வழியாக மனம் எங்கும் எளிதில் சென்றுவிடும். மேலும் மனம்தான் இந்த புலன்களைக் கையாளுகிறது. மனமின்றி எந்தவிதமான உணர்வும் இல்லை. அகப் பயணத்தில் இந்திரியங்களைக் காட்டிலும் மனமானது ஆத்மாவிற்கு அருகிலுள்ளது.

மனதை விட புத்தி மேலானதாகக் கூறப்படுகிறது(மனஸ: பு3த்3தி4: பரா). சந்தேகமும் சஞ்சலமும் மனதின் குணங்கள். புரிதல் எனும் திறன்கொண்டு புத்தியானது மனதின் சந்தேகங்களையும் சலனங்களையும் நீக்கி மெய்ப் பொருளை நிச்சயிக்கிறது. இதனால் புத்தி மனதைக் காட்டிலும் நுண்ணியதாகவும் ஆத்மாவிற்கு அருகிலும் இருக்கிறது.

* உண்மையில் இங்கு ஆத்மாவிற்கு அருகிலிருப்பது என்பது தூரத்தை பொருத்தது அல்ல; அபிமானத்தை/பற்றை வைத்துச் சொல்லப்படுகிறது. நுண்ணியதைப் பற்றுமளவு ஆசையும் வலிமை அடைகிறது. உதாரணமாக இந்திரியங்களைப் பற்றும் ஆசை உடல் ஆசையை வெல்கிறது. அறிவை வளர்ப்பதற்காக எத்தனை துன்பங்களையும் சகிக்கும் தன்மை மனிதனுக்கு வருகிறது. ஏனெனில் புத்தியைக் கைப்பற்றியுள்ள ஆசையானது மனதின் ஆசையை அகற்றுகிறது. இவ்விதம் நுண்ணியதற்குப் போகப்போக ஆசையின் வலிமையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

புத்தியையும் பிரகாசிப்பதன் மூலம் அதைக் காட்டிலும் மேலானதாக இருப்பது ஆத்மா(: பு3த்3தே4: பரத:). இதை பஞ்ச கோச விவேகத்தின் மூலமும், சரீர த்ரய விவேகத்தின் மூலமும் உபநிடதங்கள் தெளிவாக விளக்குகின்றன


=> தன்னை பூரணமானவனாக அறிபவன் ஆசையை வெல்கிறான்:

ஆசையானது தனது இருப்பிடமான மனதிற்கும் புத்திக்குமிடையே நகர்ந்து கொண்டேயிருக்கிறது. புத்தியும் மனமும் அவற்றிடம் உண்டாகும் எண்ணங்களின்(வ்ருத்தி_वृत्ति) அடிப்படையில் வேறுபடுகிறது. முன் சுலோகங்களில், மனதிலுள்ள ஆசைக்கு புத்தியையே தன்னோடு எடுத்துச் செல்லும் ஆற்றல் இருக்கிறது எனப் பார்த்தோம். ஆகவே ஆசை பதுங்கியிருக்கும் இடத்தை கணிக்க அதிலிருந்து ஒருபடியேனும் வெளியே வருவதன் மூலமே சாத்தியப்படுகிறது. ஆகவேதான் கிருஷ்ணர், புத்தியை விட மேலானது ஆத்மா என்கிறார்அதாவது சுயத்தை பரமாத்மாவாக அறிந்த ஒருவனாலேயே ஆசைகளைக் கையாள முடியும். ஆசையை வெல்ல இந்திரிய மற்றும் மனக் கட்டுப்பாட்டை பயில வேண்டும் என கூறிய போதும், உண்மையில் இந்த மனம், புத்தி, இந்திரியம் நான் அல்ல என்றும், நான் பரமாத்மா; எல்லையற்றவன் என்றும் பார்க்கத் துணிந்தவனாலேயே இந்தகாமஎனும் பகைவனை வீழ்த்த முடியும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

||3.43|| காமத்தை நீக்கும் உபாயத்தின் முடிவுரை

एवं बुद्धे: परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना  

जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् ।। ४३ ।। 

ஏவம் பு3த்3தே4: பரம் பு3த்3த்4வா ஸம்ஸ்தப்4யாத்மாநமாத்மநா । 

ஜஹி 1த்ரும் மஹாபா3ஹோ காமரூபம் து3ராஸத3ம் ।। 43 ।।


महाबाहो   மஹாபா3ஹோ  பெரிய கைகளையுடையவனே  एवं   ஏவம்    இவ்விதம்   

बुद्धे:   பு3த்3தே4:  புத்தியை விட   परं  பரம்  மேலான ஆத்மாவை   बुद्ध्वा  பு3த்3த்4வா  அறிந்து   

अात्मना   ஆத்மநா  ஆத்மாவினால்/அறிவினால்  अात्मनाम्   ஆத்மாநம்  ஆத்மாவில்/ஞானத்தில்   

संस्तभ्य   ஸம்ஸ்தப்4  நிலைத்தூன்றி   कामरूपं   காமரூபம் காமரூபமான   

दुरासदम्   து3ராஸத3ம்  வெல்லுதற்கு அரிய   शत्रुं   1த்ரும்  பகைவனை    जहि   ஜஹி  அழித்துவிடு.


இவ்விதத்தில் புத்தியைக் காட்டிலும் மேலானதாக ஆத்மாவை அறிந்து, புத்தியினால் ஞானத்தில் நிலைத்தூன்றி, வெல்லமுடியாததும் ஆசைவடிவுடையதுமாகிய பகைவனை அழித்து விடுவாயாக


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!


விளக்கம்:

      முன் சுலோகத்தில் கிருஷ்ண பகவான், புத்தியை பிரகாசிப்பதால் ஆத்மா புத்தியை விட மேலானது என்ற உண்மையை வெளிப்படுத்தினார். மேலும் மன முதிர்ச்சியடைந்த ஒருவனாலேயே பரமான ஆத்மாவை அறிய முடியுமாகையால், காமத்தை ஒழிக்கும் வழிமுறையை தொகுத்துக் கூறி இந்த அத்தியாதத்தை நிறைவு செய்கிறார்.

புலன்களையும் மனதையும் விட புத்தி உயர்ந்தது. தனது பகுத்தறியும் திறனின் மூலம் புத்தியானது மெய்ப் பொருளை நிச்சயித்து, சலனமான மனதையும் புலன்களையும் நிலைநிறுத்துகிறது. ஆகவே புத்தியினால் ஞானத்தில் நிலைத்தூன்று(ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்4). இவ்விதமாக புத்தியை அறிந்து காமரூபமான எதிரியை(காமரூபம் 1த்ரும்) அழித்து விடு அர்ஜுனா என்கிறார் பகவான். பெருமை வாய்ந்த பல அஸ்திரங்களைக் கொண்ட அர்ஜுனன் போன்ற வீரனுக்கு, தனக்கு வெளியே உள்ள எதிரிகளை வெல்வது ஒப்பீட்டளவில் எளிதானது; ஆனால் தன்னுள் வாசம் செய்யும் பகைவனான காமத்தை அழிக்க தந்திரம், முதிர்ச்சி, வைராக்கியம், மற்றும் புரிதல் அவசியம். அர்ஜுனனின் அஸ்திர வளங்களை குறிக்கும் விதமாக பெருந்தோளுடையாய், ‘மஹாபாஹோஎன அழைக்கிறார்.  

கோபம், பொறாமை பயம் போன்றவற்றை அடைகாக்கும்ஆசை’-யின் அன்னையாக விளங்குவது அறியாமை. அறியாமையின் வெளிப்பாடே இந்த ஆசை என சென்ற சுலோகத்தின் விசாரத்தில் பார்த்தோம். ஆகவே வெல்லுதற்கரிய(து3ராஸத3ம்) இந்தகாமஎனும் எதிரியை ஒழிக்க வேண்டுமெனில் அதன் மூலக்காரணியான அறியாமை அகற்றப்பட வேண்டும். அது ஞானத்தினால் மட்டுமே இயலும்.

புலன்கள், மனம் மற்றும் புத்தியில்நான்என்ற பற்றுணர்வு இல்லாத போது அதனுடைய குறைகள் நம்முடைய குறைகள் ஆகாது. ஆகவே குறை இருப்பது துயரத்திற்கு காரணமல்ல. அவைகளின் மீது நாம் கொண்ட தவறான பற்றுணர்வே துயரத்தை தருகிறது. புத்தியை, தன்னால் விளக்கப்படும் ஒரு பொருளாக, தனது சுயத்திற்கு அப்பாற்பட்டதாக பார்த்தல் வேண்டும். நான் சாக்ஷியாக இருக்கிறேன் என்ற ஞானத்தின் மூலம் இந்த நோக்கு சாத்தியப்படுகிறது.


இறுதியாக, கர்மயோகியோ அல்லது சந்யாசியோ எவராக இருப்பினும் ஞானத்தைக் காட்டிலும் ஆசையை வெல்லும் மேலான உபாயம் வேறொன்றுமில்லை. ‘கர்மஎன்னும் தலைப்புடன் கூடிய இந்த அத்தியாயத்தை, ஆசை எனும் எதிரியை ஜெயங்கொள்ளும் ஒரே உண்மையான வெற்றி வீரனாக ஞானமே திகழ்கிறது எனக் கூறி முடிப்பதை விட வேறு சிறந்த வழி என்ன இருக்க முடியும்!


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓட்டம் பிடிக்கிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று நீ ஆராய்ந்து கண்டு பிடித்துவிட்டால் அது உன்னிடமிருந்து மறைந்தோடுகிறது



ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोगो नाम तृतीयोऽध्याय: ।।

ஓம் தத் ஸத் ।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 கர்மயோகோ3 நாம த்ருதீயோऽத்4யாய: ||

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் கர்மயோகம் என்ற மூன்றாம் அத்தியாயம்.

-------------------------------------------------------------------------------------

கர்மயோக சாரம்:

(1) அர்ஜுனனின் கேள்வி [1 - 2]

(2) பகவானின் பதில்-ஒன்றையொன்று அனுசரித்து இரண்டு மார்க்கங்கள் உள்ளன [3 - 8]

(3) கர்மயோகம் [8 - 16]

(4) மோக்ஷ சொரூபம்-ஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை [17 - 18]

(5) சாதன தசையில் இருப்பவன் செய்யவேண்டியது-லோகசங்ரஹம் [20 - 29]

(6) கர்மயோகத்தின் சாரம் [30]

(7) கர்மயோக ஸ்துதி [31 - 32]

(8) சுபாவத்துக்கு ஏற்ற சாதனம்-பிரகிருதி_புருஷார்த்த விவேகம் [33 - 35]

(9) பரதர்மத் தியாகம் [35]

(10) அர்ஜுனனின் ஐயம் [36]

(11) பகவானின் பதில்-பாபத்துக்குப் பிறப்பிடம் [37 - 43]

-------------------------------------------------------------------------------------