சனி, 18 ஜூன், 2022

ஆறாம் அத்தியாயத்தின் முகவுரை

 ஆறாம் அத்தியாயம்

தியான யோகம் [ध्यानयोग:]


தியான யோக முகவுரை:

தியானம் என்பது மனதினால் செய்யப்படும் செயல் (மானஸ வ்யாபார:). இது ஒரு பிரார்த்தனையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தொடர்ந்து சிந்திப்பதாகவோ அல்லது ஓர் உள் ஒழுக்கம் மற்றும் நற்பண்பை கடைபிடிப்பதாகவோ இருக்கலாம். எந்தவொரு உடலுறுப்பும் அல்லது பேச்சுறுப்பும் சம்பந்தப்படாதது; முழுக்க முழுக்க உள்நிலையானது.


=> சம்சாரம்:

வேதாந்தத்தில், மனதில் அனுபவிக்கும் நிறைவின்மையை சம்சாரம் என அழைக்கிறோம். இந்த நிறைவின்மைக்கு காரணமாக அமைவது அறியாமை; தன்னைப் பற்றிய அறியாமை. பொதுவாக அறியாமை என்பது அதைப் பற்றிய அறிவை அடைவதனால் நீங்குகிறது. எந்தவொன்றின் சரியான அறிவும், அதற்குரிய சரியான பிரமாணத்தின், அதாவது அறிவைக் கொடுக்கும் கருவியின் மூலமே கிடைக்கிறது; ப்ரமா - அறிவு. உதாரணமாக ஒரு பொருளின் நிறத்தை பற்றிய அறிவை கண்களும், வாசனையைப் பற்றிய அறிவை மூக்கும் கொடுக்கின்றன. அதுபோல சுயத்தை பற்றிய சரியான ஞானத்தை அடைய சாஸ்திரமும் அதை உபதேசிக்கும் குருவும் பிரமாணம்

மன நிறைவின்மை -> காரணம் அக்ஞானம் -> அறியாமையை நீக்குவது ஞானம் -> ஞானத்தின் தேவை சரியான பிரமாணம்.


=> தியானத்தின் பங்கு:

ஞானத்தை பொருத்தவரையில், தியானத்தின் பங்கு என்ன? தியானம் என்பது ஞானத்தை கொடுக்கும் சாதனம் அல்ல. ஒருவன் ஞானத்திற்கான சரியான பிரமாணத்தை பயன்படுத்தினாலும், அவனிடம் தேவையான தகுதி இல்லையெனில் பலன் கிடைக்காது. வேறு வார்த்தையில் கூறுவதானால், அதிகாரித்துவம் இல்லையெனில் பிரமாணம் பலனைக் கொடுக்காது. இந்த சூழ்நிலையில் தியானம் இரண்டு வகையில் ஒருவனுக்கு உதவி புரிகிறது

(i) உபாசனா ரூப த்யாநம்(உபாசனை): மனத்தூய்மையும், மன முதிர்ச்சியையும் அளிப்பதன் மூலம் இது ஒருவனை சாஸ்திரம் கேட்பதற்கு தகுதிப்படுத்துகிறது

(ii) நிதித்யாசன ரூப த்யாநம்(நிதித்யாசனம்): ஞான நிஷ்டைக்காக செய்யும் தியானம் இது. மனத் தகுதியை அடைந்து, சாஸ்திரம் கேட்டு, ஞானத்தை அடைந்த பின்னும், ஆழ்ந்த சம்ஸ்காரங்கள் மீண்டும் ஒருவனை ராக-த்வேஷத்தில் ஈடுபடுத்தும்போது, தியானம் மூலம் அதை மாற்றுவது நிதித்யாசனம். இது சாஸ்திர சிரவணத்திற்கு பின் செய்யும் தியானம் ஆகும்.


=> தியானத்தை எதற்காகப் பயன்படுத்தக் கூடாது:

* ஞானம் வரும் என்ற எண்ணத்துடன் தியானம் செய்யக்கூடாது; ஞானத்திற்காக தியானம் செய்யப்படுவதில்லை.

* எந்தவொரு மர்மமான அல்லது மாய அனுபவத்தை எதிர்ப்பார்த்தும் இதை செய்ய வேண்டாம்.

* மனதை குவிக்க குவிக்க, சில சித்திகள் வரலாம்; ஆனால் அவைகள் மோக்ஷத்திற்கு தடைகள் என்பதை மனதில் கொண்டு அதன்மீதும் வைராக்கியத்துடன் இருக்க வேண்டும்


=> உபாசனை:

உபாசனை மற்றும் நிதித்யாசனம் என தியானத்தை இரு வகையாகப் பிரிக்கலாம் என பார்த்தோம். இங்கு உபாசனையை மேலும் நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கிறோம்.

(1) அமைதிப்படுத்தும் தியானம்

(2) ஒருமுகப்படுத்தும் தியானம்

(3) மனதை விரிவுபடுத்தும் தியானம்

(4) நற்பண்புகளை தியானித்தல்

(1) அமைதிப்படுத்தும் தியானம்[Relaxation meditation]:

கண்களை மூடி தியானத்திற்கு அமர்ந்தவுடன், மனம் சஞ்சலமற்ற நிலையை அடைய வேண்டுமென எதிர்ப்பார்ப்பது மிகப் பெரிய தவறு. முதலில் அமைதிப்படுத்துதலை உடலிலிருந்து ஆரம்பித்தல் வேண்டும். இதில் அமர்ந்து பழகுதல் முதல் படி; இது ஸ்தூல சரீரத்தை செயலற்று இருக்க பழக்குதலைக் குறிக்கிறது. ஆகவே அமர்ந்து, உடலில் எந்தவித செயற்பாடும் இல்லை என பார்த்து, பின் கண் காது போன்ற இந்திரியங்கள் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அடுத்ததாக பிராணனை சமப்படுத்தப் பழகி, பிறகுதான் மனதிற்கு வர வேண்டும்

பொதுவாக, மனமானது இரண்டு விதமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.

(i) கர்த்தா - மனதைநான்என நினைப்பது.

(ii) கரணம் - மனதை கருவியாகப் பார்ப்பது.

ஆரம்பத்தில் மனதைக் கொண்டு மனதைப் பார்த்துப் பழகவேண்டும். இதன்மூலம் மனதை அஹங்காரத்துடன் கூடிய கர்த்தாவிலிருந்து, நம்மால் பார்க்கப்படும் ஒரு பொருளாக அதாவது கரணமாக மாற்ற வேண்டும். மனதில் ஓடுகின்ற எண்ணங்களை வேடிக்கை பார்ப்பதன்மூலம் இது அடையப்படுகிறது. நல்ல எண்ணங்களை உற்சாகப்படுத்தவோ அல்லது தீய எண்ணங்களை கண்டிக்கவோ கூடாது. இதன்மூலம் இரு காரியத்தை செய்கிறோம்.

(i) மனதைநான் வேறு; மனம் வேறுஎன பிரித்து விடுகிறோம்.

(ii) நம் மனம் நமக்கு அறிமுகமாகிறது. அதாவது மனதின் பலம் மற்றும் பலகீனம், எதை அதிகமாகச் சிந்திக்கிறோம் முதலிய பல விஷயங்களை அறிகிறோம்.

இவ்விதம் நம் எண்ணங்களையே விருப்பு வெறுப்பற்று பார்க்கும்போது மனமானது தன்னைத் தளர்த்தி அமைதியை அடைகிறது. அடுத்ததாக புத்திக்கு வர வேண்டும். திட்டமிடுதல் தீர்மானித்தல் மற்றும் ஒன்றை நிச்சயம் செய்தல் போன்றவை புத்தியில் நடைபெறுகிறது. மனம் தணிந்து அமைதியை அடையும்போது புத்தி வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது புத்திக்கு, ‘இந்நேரத்தில் எதையும் திட்டமிடாதேமுதலிய கட்டளைகளைக் கொடுத்து அதையும் அமைதிப்படுத்த பழகுதல் வேண்டும். இவ்விதம் உடலில் ஆரம்பித்து புத்தி வரை அமைதிப்படுத்தி பழகுதல் இந்த தியானத்தில் செய்யப்படுகிறது.   


(2) ஒருமுகப்படுத்தும் அல்லது குவிக்கும் தியானம்[Concentration meditation]:

இது முழுமையாக மனதைக் குறித்தது. வேறு எண்ணங்களில்லாமல், எடுத்துக் கொண்ட எண்ணத்தில் மனதை நிலைநிறுத்தி குவித்துப் பழகுதல் இந்த தியானத்தில் செய்யப்படுகிறது. இதனால் மனோபலம் அதிகரிக்கிறது

இதில் நாமாக ஒரு காரியத்தை மனதிற்கு கொடுத்து, அதைத் தவிர வேறு எதையும் சிந்திக்க கூடாது என ஒருமுகப்பாட்டைப் பழக்குகின்றோம். உதாரணமாக நாம ஜபத்தைக் கூறலாம். இவ்விதம் மனதை குவிக்க குவிக்க மனதிற்கு அதிக சக்தி கிடைக்கிறது. ஒருவன் மரணகாலம் வரை இவ்வகை தியானத்தைச் செய்யலாம்.

இதை பின்வரும் படிகளில் ஒருவன் செய்து பழகலாம்:

   (1) மானஸ பூஜா - நாம் பார்த்து அல்லது செய்த பூஜையை மனதில் செய்தல்.

   (2) மானஸ பாராயணம் - நன்கறிந்த ஏதேனும் மந்திரம், சுலோகம் அல்லது ஸ்தோதிரத்தை மனதில் பாராயணம் செய்தல்.

   (3) மானஸ ஜபம் - ‘ஓம் நமச்சிவாயபோன்ற இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு ஜபிக்குமாறு மனதை பழக்குதல்


(3) மனதை விரிவுபடுத்தும் தியானம்[Expansion meditation]:

இயற்கையாகவே மனிதர்கள் அனைவரும்நான்’, ‘எனதுஎன்ற குறுகிய வட்டத்திற்குள் சுயநலத்துடன் வாழ்கிறார்கள். ஆகவே இந்த தியானத்தின் மூலம் மனதை விரிவுபடுத்தும்போது அடர்ந்து கிடக்கும் ஒருவனது அஹங்காரம் தனது வீரியத்தை குறைத்து தளர ஆரம்பிக்கும். இதனால் மனமானது விரிவடையும். உதாரணமாக குழந்தை அனுபவிப்பதை பார்க்கும் பெற்றோர்கள் தானே அனுபவித்ததாக எண்ணி மகிழ்கிறார்கள்; தன் குழந்தை எனும்போதுநான்என்ற தனித்துவம் அங்கு தளர்ந்து, இனியொரு உபாதியை உள்ளடக்கி விரிவடைகிறது.

இந்த தியானமும் அடுத்து கூறப்படவிருக்கும் நற்பண்புகள் குறித்த தியானமும் சாஸ்திரத்தின் துணைகொண்டு செய்யப்பட வேண்டியது. விசாரத்திற்காக இங்கு ஒரு எடுத்துக்காட்டை காண்போம்.

 ‘ஸர்வம் கலு இதம் ப்ரம்ம தத்ஜலான் இதி ஷாந்த: உபாஸீதஎன்பது உபநிஷத் வாக்கியம். இவை அனைத்தும் ஈஷ்வரனின் சொரூபம் எனக் கூறுகிறது. இவ்விதமான சாஸ்திர வாக்கியத்தின் மூலம் பேதத்தை நீக்கி அனைத்தையும் ஒன்றாகப் பார்த்து பழகுதல் ஒருவகை தியானம். பிரபஞ்சம் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டதாக, இறைவனாகவே பார்த்தல் போன்றவை இதில் அடங்கும். வியஷ்டி-சமஷ்டி தத்துவம், விஷ்வரூப தரிசணம் போன்ற சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைத் தியானித்து மனதை விசாலப்படுத்துவது இங்கு செய்யப்படுகிறது. இதனால் விருப்பு வெறுப்பு முதலிய மன அசுத்தங்கள் நீங்கும்.


(4) நற்பண்புகளை தியானித்தல்[Value meditation]:

உபநிஷத் வாக்கியங்களை கிரஹித்துக் கொள்ள என்ன என்ன பண்புகள் நமக்கு தேவை என சாஸ்திரம் கூறுகிறதோ அதை தியானித்தல் இங்கு செய்யப்படுகிறது. பொதுவாக சம்பிரதாயத்தில் ஞானயோக சாதனைக்கான தகுதிகளாகசாதன சதுஷ்டய சம்பத்திஎனும் தலைப்பில் தொகுக்கப்படும் ஒன்பது பண்புகள் உள்ளன. இத்தகுதிகளைப் பொறுத்து ஒருவனது அதிகாரித்துவம் அமைகிறது. மேலும் நற்பண்புகளைதெய்வீ சம்பத்என்ற பெயரில் பதிமூன்றாவது மற்றும் பதினாறாவது அத்தியாயத்தில் பகவான் விரிவாகப் பேசுகிறார்


* தியானத்தின் மூலம் பண்புகளை அடைதல் என்பதை எப்படி புரிந்து கொள்வது?

பொதுவாக ஒரு பண்பின் மீதான நமது மதிப்பே, அதை நாம் அடைய வேண்டும் எனும் எண்ணத்தை தூண்டும். தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய அறிவு அனைவரிடமும் உள்ளது. ஆனால் அந்த பண்பின் மீதுள்ள மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒருவன் அதை பின்பற்றுகிறான். தர்மத்தின் மீது எந்த மதிப்புமில்லாதவன் அதர்மத்தை பின்பற்றுவதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. உண்மையில் தர்ம சாஸ்திரங்கள் இருப்பது தர்மத்தை போதிக்க அல்ல. பதிலாக, அவை தர்மத்தின் மீதான நன்மதிப்பை நமக்கு உண்டாக்கி அதன் முக்கியதுவத்தை அதிகரிக்கச் செய்கின்றன

இனி தியானத்தின் மூலம் ஒரு பண்பை எவ்விதம் அடைவது என விசாரம் செய்வோம். பொய் பேசாமை என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். தர்மசாஸ்திரங்கள் பொய் பேசுவதை பாவ காரியம் என்றும், எந்தவொரு பாபத்திற்கும் பலன் துக்கம் என்றும் அது இம்மையிலோ அல்லது மறுமையிலோ கிடைத்தே தீரும் என்றும் கூறுகிறது. மேலும் பொய் கூறுவதினால் அவன் அனுபவித்த சங்கடங்கள், மன உறுத்தல்கள், அதை மற்றவர்கள் கண்டுபிடுத்து விடுவார்களோ என்ற அச்சம், அவ்விதம் மாட்டிக்கொண்டு அவன் அனுபவித்த அவமானங்கள் ஆகியவைகளும் உள்ளன. இவைகளை சிந்தித்து, சத்தியத்தை பேசுவதனால் இத்துணை சிக்கல்களிலிருந்தும் விடுபடுவதையும், எவருக்கும் பயப்படாமல் நிம்மதியுடன் வாழ்தலையும், அவமானம் எனும் வேதனையைத் தவிர்க்க முடிவதையும், மனநிறைவுடன் இருக்க முடிவதையும் தியானித்து சத்தியத்தின் மீதான மதிப்பை உயர்த்தமுடியும்

ஆகவே ஒவ்வொரு நற்பண்பின் மீதான மதிப்பீட்டை உயர்த்தவும், அதன் மீது பற்று உருவாகி அதை கடைபிடிக்கத் தூண்டவும் இந்த தியானம் செய்யப்படுகிறது. மேலும் பண்புகளை பொறுத்தவரையில் முக்கிய சிக்கல் ஒன்று உள்ளது. பண்பை பின்பற்றினால்தான் பலனை அனுபவிக்க முடியும். அதேசமயம், பலன் தெரிந்தால்தான் அப்பண்பை பின்பற்ற முடியும். இவ்விதம் பின்பற்றுதலும் அதன் பலனும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. இது அந்யோன்ய ஆஷ்ரயம் என்றழைக்கப்படும். இதற்கு தீர்வாக இத்தியானம் அமைகிறது.


* தியானத்திற்கான படிகள்:

-> ஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டு, நான் அந்த பண்புடன் இருப்பதாகவும், அதன் பலனை அனுபவிப்பதாகவும் தியானிக்க வேண்டும். இவ்விதம் இந்த பண்போடு நான் இருந்தால் அந்த வாழ்க்கை எப்படியிருக்கும் என சிந்தித்து, பலனைத் தியானிக்க தியானிக்க அந்த பண்பின் மீதான மதிப்பு உயர்கிறது.

-> துஷ்ட குணத்தை நீக்க, அதற்கு எதிரான நற்குணத்தை தியானத்தல். இது பிரதிபக்ஷ பாவனா என அழைக்கப்படும். உதாரணமாக கோபம் என்ற துற்குணத்தை நீக்க அதற்கு எதிரான சாந்தம் எனும் பண்மை தியானிப்பது.


நிதித்யாசனம்:

பொதுவாக, மனதில் இரண்டு தோஷங்கள் உள்ளன.

1. அசுத்தி -> மனதைப் பொறுத்தவரையில் இதில் இரு வகையான அழுக்குகள் பேசப்படுகின்றது. ஒன்று, ராக-த்வேஷ-காம-குரோதம் முதலிய அழுக்குகள். மற்றொன்று, விக்ஷேபம். மனதின் அலைபாயும் தன்மையும் அதன் அசுத்தியே.

2. அறியாமை(சொரூப அக்ஞானம்) -> ஒவ்வொரு ஜீவனும் இயற்கையாகவே தன் சுயத்தைப் பற்றிய அறியாமையோடே பிறக்கிறான்.

ஞானயோகத்தில் சாஸ்திரத்தைக் கேட்டலை சிரவணம் என்றும், சிந்தித்து விசாரம் செய்வதன் மூலம் சந்தேகத்தை நீக்குதலை மனனம் என்றும் அழைக்கிறோம். ‘நான் இந்த உடலல்ல; மனம் அல்ல; அத்வைதமான ஆத்ம சொரூபம்எனப் புரிந்த பின்னும் ஒருவன் மீண்டும் மீண்டும் அதிலிருந்து விழுந்து, இந்த உண்மையில் நிற்க சக்தியில்லாமல் இருக்கின்றான். இதன் முக்கிய காரணம், கர்ம வசத்தினால் அனாத்மாவிடம் சேர்ந்து விவகாரத்தில் ஈடுபட வேண்டி இருப்பதால் இந்த ஞானத்தில் நிற்க முடிவதில்லை. மன உறுதி இருப்பதில்லை. இந்நிலையில் அந்த முமுக்ஷு இருமடங்கு துக்கத்தை அனுபவிக்கிறான். உதாரணமாக, கோபம் ஒரு துயரம் மற்றும்நான் கோபப்படுகிறேனே!’ என்ற துயரம். இவ்வித துயரமே அவனை அடுத்த சாதனையான நிதித்யாசனத்திற்கு தள்ளிவிடும். ஆகவே ஞானத்தில் நிலைபெறவும் மீண்டும் இந்த உடல் மற்றும் மனதில் அபிமானம் வைக்காமலிருக்கவும் செய்யும் தியானம் இது. இந்த தியானத்திற்கு விஷயமாக இருப்பது நிர்குணம் ப்ரம்ம, அதாவது நிர்குண-ப்ரம்ம-விஷய-மானஸ-வ்யாபார: நிர்குண ப்ரம்மத்தின் சொரூபத்தைப் பற்றிய தொடர்சிந்தனை நிதித்யாசனம் எனப்படும். ‘நான் பூரணமானவன்’, ‘எனது சொரூபம் சத்யம்-ஞானம்-அனந்தம்’, ‘நான் அழியாதவன்; என்றுமிருப்பவன்போன்ற வாக்கியங்களை மனதில் கொண்டுவந்து அதன் பொருளைச் சிந்திக்க வேண்டும்

விக்ஞானமய கோஷத்தில் ஏற்பட்ட இந்த ஞானம் மனோமய கோஷமான மனதில் அமர வேண்டும். ஆனால் பழக்க தோஷத்தின் காரணமாக அது அவ்விதம் அமர்வதில்லை. இதை விபரீத பாவனை என்று அழைக்கிறோம். இதனால் நமக்கு நாமே தடையாக இருக்கின்றோம்.


நாம் அடைந்த ஞானத்தை மீண்டும் மீண்டும் மனதிற்கு கொண்டுவந்து அந்த அறிவிலேயே இருந்து பழகுதல் நிதித்யாசனம். இது இரு வகைப்படும்:

(1) எப்போதெல்லாம் இந்த ஞானத்தை மனதிற்கு கொண்டு வருகிறோமோ அது நிதித்யாசனம். உதாரணமாக நடைப் பயிற்சி அல்லது யோகாசனப் பயிற்சியின் போது, பேருந்துப் பயணத்தின் போது என எந்தவொரு செயலின்போதும் இந்த அறிவை மனதில் கொண்டு வருதலைக் கூறலாம். ஞானத்திற்கு பின் செய்யும் சிரவணமுமே ஒருவித நிதித்யாசனம்தான். இந்த அறிவில் விழிப்புடன் இருத்தலைக் குறிக்கிறது.

(2) நிதித்யாசனத்தில் இவ்வகை தியானமே முதலில் செய்யப்படுதல் வேண்டும். ஓர் இடத்தில் அமர்ந்து தியானிப்பதன் மூலம் இந்த அறிவை மனதில் நிறுத்திப் பழகுதல் வேண்டும்

தனியொருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆழ்ந்த மனக்காயங்கள் மற்றும் துயரங்களைப் பொறுத்து அவரவர்கள் அந்தந்த விஷயங்களிலிருந்து விடுபட அதிக முயற்சியை கொடுக்க வேண்டும்


=> மனம் சஞ்சலமானது:

அலைகின்ற மனம் தியானத்தின் ஒரு பகுதியாகும். மனம் தியானப் பொருளிலிருந்து விலகிச் செல்லும்போது, ​​​​அதை மீண்டும் தியானப் பொருளுக்குக் கொண்டு வர வேண்டும். ‘திரும்ப கொண்டு வருதல்என்பது தியானத்தின் ஒரு லக்ஷணமாகவே சொல்லப்படுகிறது. தியானப் பொருளிலிருந்து விலகிச் செல்வது தியானத்திற்கு இடைஞ்சலாகாது. உண்மையில் அதை பிரச்சனை என்று நினைப்பதுதான் பிரச்சனை. வெறுமனே மனதை மீண்டும் தியான விஷயத்திற்கு கொண்டுவர வேண்டும் அவ்வளவே.


=> உபாசனை மற்றும் நிதித்யாசனத்திற்கு இடையிலுள்ள வேற்றுமை:

  


உபாசனை

நிதித்யாசனம்

விதிகள்

கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்

அவசியமில்லை

விஷயம்

சகுண ப்ரம்மம்

நிர்குண ப்ரம்மம்

உபாசகன்

ஆத்ம அக்ஞானி

ஆத்ம ஞானி

பலன்

ஷகாம பலன்: லெளகிக ஐஸ்வர்யம்; சித்திகள்.

நிஷ்காம பலன்: அதிகாரித்துவம்

ஜீவன் முக்தி அல்லது ஞான நிஷ்டை


—-----------------------------------------------------------------------------------------