திங்கள், 22 மே, 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.7 - 8.8

||8.7||  மரணகால ஸ்மரநத்தின் முடிவுரை:

तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य

मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशय: ।। ।।

தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்4

மய்யர்பிதமநோபு3த்3தி4ர்மாமேவைஷ்யஸ்யஸம்ச1: ।। 7 ।।


तस्मात्  தஸ்மாத்  ஆகையினால்    सर्वेषु कालेषु  ஸர்வேஷு காலேஷு  எல்லா காலத்திலும்    

माम् अनुस्मर  மாம் அநுஸ்மர  என்னை நினைப்பாயாக   युध्य   யுத்4   யுத்தமும் செய்(கடமையைச் செய்)    

मयि अर्पित मन: बुद्धि:  மயி அர்பித மந: பு3த்3தி4:  மனம் புத்தியை என்னிடத்தில் அர்ப்பணம் செய்வதால்   असंशय:  அஸம்ச1  சந்தேகமின்றி   माम् एव एष्यसि  மாம் ஏவ ஏஷ்யஸி  என்னையே அடைவாய்.    


ஆகையால் எல்லா காலமும் என்னை நினைத்தவனாக போர் புரிக [கடமையைச் செய்க]. மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.


விளக்கம்:

=> தன்னறம்:

இந்த சுலோகத்துடன் மரண காலத்தில் நினைவுகூர்தலெனும் தலைப்பை முடிவுரை செய்கிறார். இம்மையிலும் மறுமையிலும் நலம் நாடும் ஒருவன் இடையறாது செய்யவேண்டியது என்ன எனும் கேள்விக்கான பதிலை இங்கு உரைக்கிறார்

ஆகையால் எப்பொழுதும் என்னையே நினைதஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அநுஸ்மர. இங்குகாலஎன்ற சொல் காலேஷு எனப் பன்மையில் பயன்படுத்தப்படுகிறது. இது குளிர்காலம், கோடை, இலையுதிர்காலம் போன்ற அனைத்துப் பருவங்களையும் மற்றும் இரவு-பகல் என எல்லா காலத்தையும் குறிக்கும்

பகவான் இங்கு வெறும்ஸ்மர(நினை)’ என்ற சொல்லை பயன்படுத்தாமல் அநுஸ்மர என்ற சொல்லை உபயோகிக்கிறார். இச்சொல்லில் வரும்அநுஎன்ற முன்னொட்டுஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டுஎன்ற பொருளைத் தருகின்றது. சங்கரர், சாஸ்திரத்தை வைத்துக் கொண்டுயதா சாஸ்த்ரம், என அதற்கு விளக்கமளிக்கிறார். ஆகவே பகவான், ‘சாஸ்திரத்தில் எவ்விதம் கற்றாயோ அவ்விதமாக என்னை நினைத்துக் கொள்என்கிறார். இறைவனைப் பற்றிய சரியான அறிவு இல்லாமல் அவரை எப்படி நினைக்க முடியும். ஆகையினால் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது போல பரமேஷ்வரனை அறிந்து, சிரவணம் மநநம் நிதித்யாசனத்தின் மூலம் எல்லா காலமும் அவரை நினைக்க வேண்டும்.

யுத்4 யுத்தமும் செய். இதில்எனும் சொற்பிரயோகத்தின் மூலம் மக்களிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு அணுகுமுறையை நீக்குகிறார். இறைவனை உபாசிக்கின்றவர்கள் பலர் உலகக் கடமைகளைப் புறக்கணிக்கின்றனர். உலக வியவகாரங்களில் ஈடுபடும் பலர் கடவுளை மறக்கவும் செய்கின்றனர். ஈஷ்வர சிந்தனையும் தொழில்புரிதலும் ஒன்றோடொன்று ஒவ்வாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் உடலால் கடமைகளைச் செய்து கொண்டிருக்கையில் மனதை கடவுளிடம் செலுத்தவேண்டும் என்பது கண்ணனின் கோட்பாடு. ஆகவே, என்னை நினைத்தவனாக போர் புரிக, என்கிறார் பகவான். இங்குபோர்என்பது அர்ஜுனனுடைய ஸ்வதர்மத்தைக் குறிக்கிறது. இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லோரும் அவரவர் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதாகிறது. ‘உனது கடமைகளைச் செய், உனது பாத்திரத்தை செவ்வனே செய்தவனாக என்னை நாடுக. அதன்போக்கில் நீ என்னை அறிந்து கொள்வாய்’, என்கிறார் பகவான். அதாவதுகர்மயோகியாக ஆவாயாகஎன்கிறார்


=> அர்ஜுனனின் சூழ்நிலை

ஒருகால் அர்ஜுனன் தான் ப்ரம்ம சொரூபம் என்பதை அறிந்திருந்தான் எனில் அவனுக்கு இந்த அறிவுரையோ அல்லது உபதேசமோ தேவையில்லை. செய்யவேண்டியதை அவனாகவே செய்துவிடுவான். ஆனால் இங்கு அர்ஜுனனுக்கு தெரியும் மற்றும் தெரியாது எனும் நிலை உள்ளது. அர்ஜுனனுக்குத் தெரியும், ஏனென்றால் பகவான் ஆத்மா அழியாதது என்பதை அவனுக்கு முந்தைய அத்தியாயங்களில் விரிவாகக் கற்பித்துள்ளார். எனவே, அவனுக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவனது கேள்விகளிலிருந்து இன்னும் சந்தேகம் உள்ளது என்பது தெளிவாகிறது. ஞானத்தில் நிஷ்டை ஏற்படாததால் இதுபோன்ற ஐயங்கள் எழுகின்றன. இந்த சூழ்நிலையில் யோகம் மிக முக்கியமானது. எனவே கிருஷ்ணர், அர்ஜுனனை ஒரு கர்மயோகியாக இருக்கச் சொல்கிறார். க்ஷத்ரியனின் தன்னறம் தர்மயுத்தம். அர்ஜுனனைப் போன்ற ஒரு க்ஷத்ரியனுக்கு, அறப்போரைக் காட்டிலும் சிறந்தது எதுவுமில்லையென சுலோகம் 2.31-ல் பகவான் தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே உன்னால் எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய். தர்மமே இறைவன், தர்மத்தின் பொருட்டே ஒருவன் செயல்பட வேண்டும். அறத்தின்படி வாழும் ஒருவன் இறைவனுடன் இருக்கின்றான்


=> அர்ப்பணம்:

என்னிடத்தில் அர்ப்பணம் செய்த மனதையும் புத்தியையும் உடையவன்மயி அர்பித மந: பு3த்3தி4:. இங்கு மனம் என்பது சங்கல்ப சக்தியைக் குறிக்கின்றது. விருப்பு-வெறுப்பு குடிகொண்டுள்ள மனதிலிருந்து பிறக்கும் எண்ணங்கள் பெரும்பாலும் அவைகளை பிரதிபலிப்பவைகளாகவே உள்ளன. இங்கு, ‘யாருடைய சங்கல்பமானது இறைவனிடம் அர்ப்பணிக்கப்படுகின்றதோஎன்பது பொருள். உதாரணமாக அறப்போர் செய்தாக வேண்டிய சூழ்நிலையில் நின்றுகொண்டிருக்கும் அர்ஜுனன், ‘என் சொந்தங்களுடன் நான் ஏன் போர்புரிய வேண்டும்?’ என நினைக்கின்றான். இது அர்ஜுனனின் பாசத்தால் உருவான தனிப்பட்ட சங்கல்பம். அதர்மத்தின் பக்கமுள்ள துரியோதனன் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஈஷ்வர-சங்கல்பம். இங்கு அர்ஜுனனின் தனிப்பட்ட விருப்பம், ஈஷ்வர-சங்கல்பத்திற்கு அர்ப்பணிக்கப்படும்போது, அவன் ஒருமயி அர்பித-மநஸ்ஆக மாறுகிறான்.

இங்குபு3த்3தி4என்பது கர்த்ருதுவத்தை, அதாவது நான் செய்கிறேன், இந்த செயலுக்கு நானே காரணம் எனும் பாவனையைக் குறிக்கின்றது. இந்த தானெனும் அஹங்காரத்தையும் பகவானிடம் அர்ப்பித்தவனாய் அவரை பின்தொடர வேண்டும்

இவ்விதமாக மனதையும் புத்தியையும் இறைவனிடம் அர்ப்பித்தவன், தர்மத்தை அனுஷ்டிப்பவனாய் மெய்ப்பொருளை பின்தொடர்கிறான். இவனிடம் எந்த விதமான மனப்போராட்டமும் இருப்பதில்லை. இதனால் உண்டாகும் மனத்தூய்மையையினால், ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தைப் புரிந்து கொள்ள அவனுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை.


=> பலனில் சந்தேகம் வேண்டாம்:

என்னையே அடைவாய்மாம் ஏவ ஏஷ்யஸி, என்கிறார். அவர் ஏற்கனவே கூறியபடி, தனக்கும் பரமேஷ்வரனுக்குமான ஐக்கியத்தை புரிந்த ஞானி அவரிடமிருந்து ஒருபோதும் பிரிக்கப்படாதவனாக உள்ளான். ஆகவே பகவான்அஸம்ச1என்ற வார்த்தையின் மூலம், சந்தேகமில்லாமல் என்னையே அடைவாய், என்கிறார். இது வாக்குறுதியாக இருப்பினும் உண்மையில் இது ஒரு எளிய தர்க்கரீதியான பலனையே காட்டுகின்றது. இது நடக்காமல் போக வாய்ப்பில்லை. ஒரு மலையின் சிகரத்தை அடைய முயல்வது எனில் எதுவும் நடக்கலாம். ஆனால் இங்குஅது நீயேஎனும் அறிவு பேசப்படுகிறது. இந்த ஞானத்தில் தெளிவை அடைந்தவன் கண்டிப்பாக சுய-சொரூபமான பரப்ரம்மத்தை அடைகிறான். எனவே இங்கு அறிவிலுள்ள தெளிவு கேள்விக்குரியதே தவிர, பலன் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாதது.

யாரொருவனும் இறக்கும் தருவாயில் அனைத்தையும் முடித்துவிட்டதாக நினைத்து இறப்பதில்லை. பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தவன், ‘நான் தேவையான பணத்தை எல்லாம் சம்பாதித்துவிட்டேன், இனி நான் இறக்கலாம்என்று நினைத்து மரணிப்பதில்லை. ஆனால், பரப்ரம்மத்திடம் இருந்து தான் வேறானவன் அல்ல என்ற உண்மையையை அறிந்ததனால் ஒரு ஞானி மட்டுமே செய்ய வேண்டியதை செய்து முடித்துவிட்டேன் என்று முழுமையுடன் உடல் உகுக்கிறான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தெருப்பாடகன் இரு கையால் சுருதி மீட்டிக்கொண்டும், மற்றொரு கையால் ஒருவகை மேளத்தைத் தட்டிக்கொண்டும், அதே சமயத்தில் பாடிக்கொண்டுமிருக்கிறான். அதைப்போல உலக பந்தத்துக்குட்பட்ட மனிதன் தனக்கேற்பட்ட காரியங்களைக் கைகளால் செய்துகொண்டிருக்கையிலும் பகவந் நாமத்தை முழுமனதோடு சொல்லி, அவனைச் சிந்தனை பண்ணுவதை மறக்கக்கூடாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.8|| அப்யாஸ யோகம் எனும் சாதனத்தைக் கொடுக்கிறார்:

अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना।

परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ।। ।।

அப்4யாஸயோக3யுக்தேந சேதஸா நாந்யகா3மிநா  

பரமம் புருஷம் தி3வ்யம் யாதி பார்தா2நுசிந்தயந் ।। 8 ।।


पार्थ  பார்த2  பார்த்தா   चेतसा  சேதஸா  சித்தத்தால்    अन्यगामिना  அந்யகா3மிநா  வேறு விஷயங்களில் செல்லாத   अभ्यास योग युक्तेन   அப்4யாஸ யோக3 யுக்தேந  அப்யாஸம் எனும் யோகத்தோடு கூடிய        अनुचिन्तयन्  அநுசிந்தயந்  சிந்தனை செய்கிறவன்   दिव्यं  தி3வ்யம்  அறிவு சொரூபமான/ தேஜோமயமான   परमं पुरुषं  பரமம் புருஷம்  பரம புருஷனை   याति  யாதி  அடைகிறான்.


பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாது அப்யாஸம் எனும் யோகத்தோடு கூடிய சித்தத்தால் அறிவு சொரூபமான பரம புருஷனை சிந்திப்பவன் அப்புருஷனை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.


விளக்கம்:

=> மோக்ஷத்திற்கானத் தடைகளை நீக்குதல்:

மோக்ஷத்திற்கு மூன்று சாத்தியமானத் தடைகள் உள்ளன: (1) அறியாமை (2) அசுத்தம் (3) சஞ்சலம். சுயத்தைப் பற்றிய அறியாமையை நீக்க ஞானம் சாதனமாகின்றது. அந்த ஞானத்தை அடைவதற்கு மனமானது அதற்குரிய தகுதியுடன் இருத்தல் வேண்டும். முற்பிறவியில் சேகரித்த அசுத்தங்கள், இந்தப் பிறவியில் கடினமான சூழ்நிலைகளாக வெளிப்படுகின்றன. மேலும் விருப்பு மற்றும் வெறுப்பின் வடிவிலும் அசுத்தங்கள் ஞானம் ஏற்பட தடையாக உள்ளன. இவற்றை நடுநிலையாக்க கர்மயோகமெனும் சாதனையை தினசரி கடமைகளாகவும் பிரார்த்தனைகளாகவும் செய்யவேண்டும். இனி, அடுத்ததாக  சஞ்சலமான மனதுடன் சாஸ்திர விசாரம் செய்ய இயலாது. ஆத்ம-ஞானத்தில் மன ஒருமுகப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆகவே மனதை ஒருமுகப்படுத்துதல் தியானத்தின் மூலம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு விஷயத்திலிருந்து மற்றொன்றுக்கு நகர்ந்து கொண்டே இருக்கின்ற மனதை, ஒன்றில் நிலைக்க வைப்பதற்கான வழியை புரிந்து கொள்ள முடியும். இந்த செயல்முறையினால் மன உறுதியும் ஒருமுகப்பாடும் அடைய முடிகிறது

மனத்தூய்மையும் மன உறுதியும் ஒருங்கே செல்கிறது. இவைகளில் ஒன்று அதிகரிக்க மற்றொன்றும் அதிகரிக்கும். கர்மயோகம் மனதை தூய்மைப்படுத்துகிறது; தியானம் மன உறுதியை உருவாக்குகிறது. எனவே கர்மயோகம், தியானம் மற்றும் சாஸ்திர விசாரணை மூன்றும் மோக்ஷத்திற்கான மூன்று தடைகளை நீக்கும் வழிமுறைகள் ஆகும்.

இந்த சுலோகத்திலும் அடுத்த சுலோகத்திலும் பகவான் பரமேஷ்வரனைத் தியானிப்பவனைப் பற்றி பேசுகிறார்


=> பரத்தினைச் சாரும் வழி:

தியானிப்பவன் சுயம்-ஜோதியான மேலான புருஷனை அடைகிறான்பரமம் புருஷம் தி3வ்யம். ‘புருஷஎனில் ஒரு நபரைக் குறிக்கின்றது. ‘பரமம்எனில் மேலானது, எல்லையற்றது, வரையறுக்கப்படாதது. இங்குதி3வ்யம்என்பது சுயமாக ஒளிரும் அறிவு சொரூபத்தை குறிக்கின்றது. அதாவது, ‘நான்என்ற சொல்லின் சாரமாக விளங்கும் தேஜோமயமான பரமேஷ்வரனைக் குறிக்கின்றது. அவன் இந்த புருஷனை அடைகின்றான். எப்படி?

  அநுசிந்தயந் விசாரத்தின் மூலமாக என்பது பொருள். ‘சிந்தயந்எனில் சிந்திப்பது, விசாரம் செய்வது, தியானிப்பது. ‘அநுஎனில் சாஸ்திரப்படி, என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். ஆகவே சாஸ்திர பிரமாணத்தினால் புரிந்து கொள்ளப்பட்ட சொற்களைச் சிந்தித்தல், அநுசிந்தயந் ஆகும். இச்சிந்தனையின் விஷயத்தையும்பரமம் புருஷம் தி3வ்யம்என்ற சொற்கள் காட்டிக் கொடுக்கின்றன எனலாம். அந்த விஷயம் ஆத்மாவாகவே இருப்பதனால், இதன் பலனாக அவன் அதே புருஷனிடம் செல்கிறான். பரம புருஷனை தியானிப்பவன், பரம புருஷனை அடைகிறான். சிந்திப்பது என்பது இயற்கையாகவே மனதைக் குறிப்பதனால் எந்த வகையான மனது தேவை என்பதை பகவான் இங்கு சுட்டிக்காட்டுகிறார்அப்4யாஸ யோக3 யுக்தேந அந்யகா3மிநா சேதஸா.


=> எப்படிப்பட்ட மனம்:

சேதஸாஎனில் மனதினால் என்பது பொருள். எப்படிப்பட்ட மனம் என்பதற்கு இரு அடைமொழியைத் தருகின்றார். (1) அப்4யாஸ யோக3 யுக்தேந சேதஸா அப்யாஸம் எனும் யோகத்துடன் கூடிய மனதினால், (2) அந்யகா3மிநா சேதஸாவேறு விஷயங்களில் செல்லாத மனதினால்

அப்யாஸம் எனில் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்தலைக் குறிக்கும். அப்யாஸம் இரண்டு நிலையில் நடைபெறுகிறது. ஒன்று மனதில் செய்வது, ஜபம் - அதே எண்ணம் திரும்ப திரும்ப வருதல் என்கிறார் சங்கரர்துல்ய ப்ரத்யய ஆவ்ருத்தி:. இரண்டாவது புத்தி நிலையில் நடைபெறுகிறது, ஞாநாப்யாஸம்ஒரு கருத்தை அல்லது ஒரு பண்பை மீண்டும் மீண்டும் சிந்தித்தல். இவ்விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தியானப் பொருள் மட்டுமே மனதை ஆக்கிரமிக்க அனுமதிக்கப்படுகின்றது; வேறு எண்ணம் எழும்போது அது நிராகரிக்கப்பட்டு மீண்டும் மனமானது அந்த தியானப் பொருளுக்கே கொண்டு வரப்படுகின்றது. இதை பகவான் சுலோகம் 6.21-ல் விளக்கியுள்ளார்யதோ யதோ நிச்1சரதி.

மேலும் சுலோகம் 6.34-ல், அர்ஜுனன் கிருஷ்ணரிடம் மனதின் சஞ்சலத்தன்மையை பற்றி கூறியபோது, அதை ஒப்புக் கொண்ட பகவான் அதற்கு உபாயமாக 6.35 - ல், வைராக்கியம் மற்றும் அப்யாஸத்தின் மூலம் அதை நிர்வகிக்க முடியும் என்று சொன்னார். அந்த அப்யாஸமே இங்கு முக்கியத்துவத்திற்காக யோகம் என்ற சொல்லோடு சேர்த்துக் கூறப்படுகிறது. அப்யாஸமும் ஒருவகையான யோகமே, மனதை கட்டுப்படுத்துவதற்கான வழி.

-------------------------------------------------------------------------------------------------------------------------