சனி, 20 நவம்பர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.27 - 4.29

 ||4.27|| ஆத்ம ஸம்யம யக்ஞம்:

सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे

अात्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते ।। २७ ।। 

ஸர்வாணீந்த்3ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே

ஆத்மஸம்யமயோகா3க்3நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீ3பிதே ।। 27 ।। 


अपरे  அபரே  வேறு சிலர்   ज्ञान-दीपिते  ஜ்ஞாந-தீ3பிதே  ஞானத்தினால் தூண்டிவிடப்பட்ட  

अात्म-संयम-योग-अग्नौ  ஆத்ம-ஸம்யம-யோக3-அக்3நௌ  மனதை அடக்குதல் என்ற யோகத்தீயில்  

सर्वाणि   ஸர்வாணி   எல்லாவிதமான   इन्द्रियकर्माणि  இந்த்3ரியகர்மாணி  இந்திரிய கர்மங்களையும்   

प्राणकर्माणि  ப்ராணகர்மாணி   பிராண கர்மங்களையும்   जुह्वति    ஜுஹ்வதி  ஆகுதியாக கொடுக்கிறார்கள்.


இன்னும் சிலர் இந்திரிய கர்மங்களையும் பிராண கர்மங்களையும், ஞானத்தினால் தூண்டிவிடப்பட்ட மனதை அடக்குதல் என்ற யோகத்தீயில் ஆகுதியாக கொடுக்கிறார்கள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச் செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.


விளக்கம்:

=> ஆத்ம ஸம்யம யக்ஞம்:

இங்கு மனக்கட்டுப்பாடு(1:) எனும் சாதனை பேசப்படுகிறது. இந்திரியார்த்தங்கள் மனதினுள் புகும் முன்பே அதைத் தடுப்பது புலனடக்கம். இச்சாதனையின் இருவேறு வகைப்பாட்டை சென்ற சுலோகத்தில் பகவான் விளக்கினார். ஒருகால், தேவையில்லாத விஷயங்கள் மனதினுள் சென்றுவிட்டால், அப்பொழுதும்கூட அது ஒருவனை பந்தப்படுத்தாமலிருக்க ஒரு வழி உள்ளது. அவ்விதம் நம்மையறியாமல் உள்ளே சென்ற விஷயங்களை சங்கல்பம் செய்யாத வரை, அதாவது திரும்பத் திரும்ப நினைக்காத வரை(ஆவ்ருத்தி) நமக்கு அதன்மீது பற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

* மனதைக் கொண்டு மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே அதை இரண்டாகப் பிரிக்கிறோம். (1) மனம் மற்றும் (2) புத்தி.

* இப்போது நமது கவனத்தை(‘நான்எனும் அபிமானத்தை)

 புத்தியிடம் வைத்து, புத்தியைக் கொண்டு மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

* மேலும் வாசனைகள் எனக் கூறப்படும் ஏற்கனவே அனுபவித்த விஷயங்கள், சம்ஸ்காரங்கள் மற்றும் தவறான சுபாவங்கள் போன்ற நம் சித்தத்தில் பதிந்தவைகள் மனதை சஞ்சலப்படுத்தலாம். இவைகளிலிருந்து மனதை காப்பாற்ற விவேக சக்தியினால் தூண்டிவிடப்பட்ட மனக்கட்டுப்பாடு எனும் நெருப்பில், மனம் மற்றும் புலன்களின் தவறான செயல்களை ஆகுதியாகக் கொடுத்து மனவொழுக்கத்தை பழகுதல் எனும் சாதனை இங்கு பேசப்படுகிறது.

சாதனை = ஆத்ம ஸம்யம யக்ஞம்

அக்னிமனக்கட்டுப்பாடு(1:)

ஹவிஸ் = மனம் மற்றும் புலன்களின் தவறான நடவடிக்கைகள்


=> விவேகம்:

இங்கு, ‘ஜ்ஞாநதீ3பிதேஎனில் அறிவினால் ஒளிர்வது என அர்த்தம்; எது சரி - எது தவறு, எது நித்தியமானது - எது அநித்தியமானது மற்றும் எது உண்மையானது - எது உண்மையற்றது பற்றிய அறிவு. எண்ணெய் வார்க்குமிடத்துத் தீபம் பிரகாசிக்கிறது. அதுபோல விவேகம் உதயமாகுமிடத்து ஞான தீபம் பிரகாசிக்கிறது. ஒரு குறிப்பிட்ட பொருள் தனது சுகத்திற்கு காரணம் என முடிவெடுப்பது ஒருவனின் புத்தி. ஆகையினால் அறிவின் மூலமே அநித்தியமான, தவறான பொருட்களிடத்தில் உள்ள மதிப்பை எடுக்க முடியும்; அது சுக சாதனம் அல்ல என காட்ட முடியும். மனது வெளி விஷயங்களுக்கு மட்டுமே உரியதல்ல; ஆத்மாவுக்கே உரியது என்ற ஞானம் வலுக்குமிடத்து அது விவேகமாகிறது. அறிவுதான் வெளியில் சஞ்சரித்துக் கொண்டுள்ள மனதை நம்மிடம் கொண்டு வரும். பின் நாமஜபத்தினால் அதை கட்டுப்படுத்தி, தியானப் பயிற்சியளிக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------------------------

||4.28|| ஐந்து சாதனைகளைக் கூறுகிறார்:

द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे

स्वाध्यायज्ञानयज्ञाश्च यतय: संशितव्रता: ।। २८ ।। 

த்3ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோக3யஜ்ஞாஸ்ததா2பரே

ஸ்வாத்4யாயஜ்ஞாநயஜ்ஞாச்1 யதய: ஸம்சி1தவ்ரதா: ।। 28 ।।


तथा  ததா2  அப்படியே  अपरे   அபரே  சிலர்  द्रव्ययज्ञा:  த்3ரவ்யயஜ்ஞா:  திரவிய யக்ஞம் செய்பவர்கள்  तपोयज्ञा:  தபோயஜ்ஞாத:  தபசை யாகமாகச் செய்பவர்கள்   

योगयज्ञा:  யோக3யஜ்ஞா:  யோகத்தை யாகமாகச் செய்பவர்கள்   

संशितव्रता:   ஸம்சி1தவ்ரதா: கடுமையான விரதத்தையும் உடையவர்கள்   

यतय:  யதய:  உறுதியாக உள்ளவர்கள் स्वाध्याय-ज्ञान-यज्ञा:  ஸ்வாத்4யாய-ஜ்ஞாந-யஜ்ஞா  சாஸ்திரம் கற்றல், ஞானம் பெறுதல் ஆகியவைகளை யாகமாக உடையவர்கள்.  


திரவிய யக்ஞம், தபோ யக்ஞம், யோக யக்ஞம் செய்பவர்கள் சிலர். உறுதியும் கடுமையான விரதத்தையும் உடைய மற்றவர்கள் சாஸ்திரம் கற்றல், ஞானம் பெறுதல் ஆகியவைகளை யாகமாகச் செய்வர்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.


விளக்கம்:

=> திரவிய யக்ஞம்(தானம் செய்தல்):

நல்வழியில் பொருளை ஈட்டுதல், அதைப் பொது நன்மைக்கென்று பயன்படுத்துதல் இங்கு பேசப்படுகிறது. பணம் மற்றும் பொருட்களின் வடிவத்தில் செல்வத்தை விநியோகிப்பவர்கள் அல்லது தர்மமாக வழங்கப்படக்கூடிய வேறு எதையும்த்3ரவ்யயக்ஞம்என்று அழைக்கிறார்கள். இறையின் அருள்பெறும் பொருட்டு தெய்வத்திற்கு வழங்கும் படையலாக, சிலர் தானத்தை வேள்வியாக செய்கிறார்கள் என பகவான் கூறுகிறார்.

சாதனை = திரவிய யக்ஞம்

அக்னிதானம் பெறுபவர்

ஹவிஸ் = கொடுக்கப்படும் பொருள்


=> தபோ யக்ஞம்(தவம் செய்தல்):

இந்த சுலோகத்தில் விவரிக்கப்பட்டுள்ள அடுத்த யக்ஞம், தபோ யக்ஞம், தவம். எந்த சாதனை ஒரு சாதகனை இந்திரிய விஷயத்திற்கு அடிமையாகாமல் பாதுகாக்குமோ அது தவம். ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளும் தவம் எனப்படும். நோன்பு, தியானம், விரதங்கள், பாதயாத்திரை, தீர்த்த யாத்திரை, பூஜை, ஜபம், ஓதுதல் முதலியன தவத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். மொத்தத்தில் தவம் என்பது ஒருவகை ஒழுக்கம். ஒரு சாதகன், சங்கல்பம் அல்லது சபதத்தின் பொருட்டு ஒரு குறிப்பிட்ட விரதத்தை எந்தச் சூழ்நிலையிலும் விடாமல் தொடர்கிறான். உதாரணமாக, சிலர், ஒவ்வொரு மாதமும் சந்திரனின் பதினொன்றாம் நாளான ஏகாதசி அன்று சாப்பிடக்கூடாது என்று சபதம் எடுத்து, அந்த நாளை ஜபத்தில் செலவிடுகிறார்கள். அத்தகையவர்கள்தபோ யக்ஞர்கள்என்று அழைக்கப்படுகிறார்கள். இங்கு தபம் என்பது அந்த-கரண-சுத்திக்காக செய்யப்படும் ஆன்மீக மற்றும் பிரார்த்தனை சம்பந்தமான ஒழுக்கம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஜாகிங் மற்றும் ஏரோபிக்ஸ் கூட வேள்விகளாக மாறும்

மேலும் தவம் என்பது நம்மை நாசப்படுத்தாத அல்லது பலகீனப்படுத்தாத வண்ணம் செய்யப்பட வேண்டும்(அநாசகேன தபஸா). தபஸ் என்பது பலத்திற்காகச் செய்வது; பலகீனப்படுத்துவதற்காக அல்ல.

சாதனை = தபோ யக்ஞம்

அக்னிதவம் செய்ய வேண்டுமென்ற நிச்சயம்

ஹவிஸ் = ஒழுக்கமின்மை


=> யோக யக்ஞம்(பதஞ்சலியின் அஷ்டாங்க யோகம்):

எட்டு படிகளைக் கொண்ட அஷ்டாங்க யோகத்தை அனுஷ்டிப்பது சிலருக்கு யாகமாகிறது

(1) இயமம்(யம:) - செய்யக் கூடாத செயல்கள்; .கா., ஹிம்சை, பொய், பேராசை.

(2) நியமம்(நியம:) - செய்ய வேண்டியதைச் செய்தல்; .கா., தூய்மை, தவம்.

(3) ஆசனம் - ஆசனங்கள்; .கா., யோகாசனம்.

(4) பிராணாயாமம் - மூச்சுப் பயிற்சி; பிராண வாயுவைக் கட்டுப் படுத்துவது. ஏதாவது ஒரு ஆசனத்தில் இருந்தவாறு இதைச் செய்ய வேண்டும்.

(5) பிரத்தியாகாரம்(ப்ரத்யாஹார:) - வெளி நோக்கிச் செல்லும் மனத்தை அடக்கி உள்ளேயே நிறுத்துவது பிரத்தியாகாரம்; இந்திரிய ஒழுக்கம்.

(6) தாரணை(தா4ரணா) - உள்ளே இழுத்த மனதை நிலைபெறச் செய்தல்; மன ஒருமுகப்பாடு.

(7) தியானம் - ஒரே சிந்தனை; தாரணையின் முடிவு தியானம்.

(8) சமாதி - மனதை அமைதியாக வைத்திருத்தல்; மனம் கரைந்த மெளன நிலை.


=> சுவாத்யாய யக்ஞம்(சப்த கிரஹணம்):

சுவாத்யாய யக்ஞம் என்பது தாங்கள் படிக்க விரும்பும் கிரந்தங்களையும், வேதத்தையும் உச்சரிக்க அல்லது ஓதக் கற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. அர்த்தத்தை புரிந்து கொள்ள முயலும் முன் முதலில் அதை மனப்பாடம் செய்தலை சப்த கிரஹணம் என்றழைப்பர். உதாரணமாக சமஸ்கிருத இலக்கணவிதிகளை உள்ளடக்கிய நான்காயிரம் சூத்திரத்தை கொண்ட பாணினி வியாகரணத்தை முதலில் மனப்பாடம் செய்த பின்னரே அதை கற்றுக் கொள்ளும் மரபு இருந்தது. இந்த வழியில் வேதத்தைக் கற்றுக்கொண்ட சிலர், தினமும் ஒரு பகுதியை ஓதுவதை வேள்வியாக செய்கின்றனர்.  


=> ஞான யக்ஞம்(அர்த்த கிரஹணம்):

வேதத்தின் இறுதி அங்கமான வேதாந்தத்தை படித்து, சிரவணம் மற்றும் மனனத்தின் மூலம் அதை விசாரம் செய்பவர்கள்ஜ்ஞாந-யஜ்ஞாஎன்றழைப்படுகின்றனர். இவர்கள் ஞானத்தை பின்தொடர்பவர்களாக, கேட்டல், கற்றல், விசாரம் செய்தல் மற்றும் தர்க்கம் இவற்றின் மூலம் அர்த்தத்தை புரிந்து கொள்வதால் இங்கு அர்த்த கிரஹணம் நடைபெறுகிறது

அறிவின் பொருட்டு உறுதியான முயற்சியுடன்(யதய:), தன்னை முழுமையாக அர்ப்பணித்த(ஸம்சி1தவ்ரதா:) சாதகர்கள் இந்த இருவகையான வேள்விகளிலும் ஈடுபடுவதாக பகவான் இந்த சுலோகத்தில்ஸ்வாத்4யாய-ஜ்ஞாந-யஜ்ஞாஎன்ற சொல்லின் மூலம் குறிக்கிறார்

-------------------------------------------------------------------------------------

||4.29|| பிராணாயாமம் என்ற சாதனையைப் பற்றி விளக்குகிறார்:

अपाने जुह्वति प्राणं प्राणेऽपानं तथापरे  

प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणा: ।। २९ ।। 

அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததா2பரே

ப்ராணாபாநக3தீ ருத்3த்4வா ப்ராணாயாமபராயணா: ।। 29 ।।


तथा   ததா2  அப்படியே   अपरे   அபரே  சிலர்  अपाने   அபாநே  அபாநனிடத்தில்  प्राणं   ப்ராணம்  பிராணனை   प्राणे   ப்ராணே  பிராணனிடத்தில்  अपानं   அபாநம் அபாநனை  जुह्वति   ஜுஹ்வதி  ஆஹுதி செய்கிறார்கள்   प्राणापानगती  ப்ராணாபாநக3தீ   பிராண அபாநனின் போக்கை  रुद्ध्वा  ருத்3த்4வா  தடுத்து   प्राणायाम-परायणा:  ப்ராணாயாம-பராயணா:  பிராணாயாமம் செய்வதில் கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.


விளக்கம்:

=> மனதுக்கும் பிராணனுக்குமான தொடர்பு:

பஞ்ச கோசத்தில் பிராணமய கோசமானது(பிராணன்), அன்னமய கோசத்திற்கும்(ஸ்தூல உடல்) மனோமய கோசத்திற்கும்(மனம்) இடையிலுள்ளதால், பிராணனை ஒழுங்குப்படுத்துவதால் மனமும் உடலும் கட்டுப்படும்

மனதுக்கும் பிராணனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் ஒடுங்குமிடத்து பிராணன் ஒடுங்கும்; பிராணன் ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்கும். மனதில் பயம், காமம், குரோதம் போன்ற விகாரங்களின் போது சுவாசம் தடுமாற்றாமடைவதையும் அமைதி, மகிழ்வு, அன்பு ஆகிய நல்ல விருத்திகளின் போது சுவாசம் சீராக இருப்பதையும் பார்க்க முடியும். ஆகவே சுவாசத்தின் போக்கை ஒழுங்குபடுத்தினால் அதற்கு ஏற்றபடி மனம் தெளிவடைகிறது. இத்தத்துவத்தை அறிந்து இதை அனுஷ்டிப்பவர்கள் பிராணாயாமத்தில் ஈடுபடுபவர்கள் ஆகின்றனர்.

இந்த சுலோகத்தில் சுவாசக் கட்டுப்பாட்டை யக்ஞமாக மேற்கொள்பவர்கள்ப்ராணாயாம-பராயணா:என்று அழைக்கப்படுகிறார்கள். எனில், இவர்கள் பிராணாயாமப் பயிற்சியை முதன்மையான சாதனையாக கடைப்பிடிப்பவர்கள். ப்ராணாயாம = ப்ராண: + ஆயாம:. இதில்ப்ராண:என்றால் வாழ்வாற்றல் அல்லது மூச்சோட்டம்; ‘ஆயாம:என்றால் நிறுத்தி வைத்தல் அல்லது கட்டுப்படுத்தி வைத்தல். ஆகவே மூச்சுக் கட்டுப்பாடு எனும் ஒழுக்கம் பிராணாயாமம் ஆகும்


=> பிராணன் என்பதன் பொருள்:

ப்ராண:என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இவையனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் வாழ்வதையோ அல்லது சுவாசிப்பதையோ குறிக்கிறது. வாழும் வாழ்க்கையேப்ராணஎன்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில், பிராணன் என்பது வளர்சிதை மாற்ற செயல்பாடு அல்லது முழு உடலியல் செயல்பாட்டையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் செரிமானம், சுழற்சி  போன்றவைகளும்ப்ராண:எனலாம்.

இவ்வகை அர்த்தங்களுக்கு மேலாக, அச்சொல் ஒரு குறிப்பிட்ட பிரத்யேகப் பொருளையும் கொண்டுள்ளது. மூச்சை வெளியேற்றுவது அல்லது வெளிச்செல்லும் மூச்சுப்ராணஎன்றும், உள்ளிழுத்தல் அல்லது உள்வரும் மூச்சுஅபாநஎன்றும் அழைக்கப்படும். प्राक् गमनवान् वायु: प्राण: अधोगमनवान् वायु: अपान:

இந்த சுலோகத்தில் பிராணன் மற்றும் அபாநன், அதாவது மூச்சை வெளியேற்றுதல் மற்றும் உள்ளிழுத்தல் எனும் சுவாசச் செயலை, யக்ஞமாகச் செய்யும் சாதனை பேசப்படுகிறது.


=> மூச்சுக் கட்டுப்பாடு எனும் சாதனை:

சுவாசத்தை உள்ளிழுப்பதன் மூலம் நுரையீரலை நிரப்புவது பூரகம் என்றும் சுவாசத்தை வெளியேற்றுவதன் மூலம் நுரையீரலை காலியாக்குவது ரேசகம் என்றும் அழைக்கப்படுகிறது. இழுத்த மூச்சை உள்ளே நிறுத்தி வைக்கலாம். பூரகம் அல்லது ரேசகம் செய்தான பிறகு வாயுவை உள்ளே அல்லது வெளியில் அடக்குதல் கும்பகம் என்று அழைக்கப்படுகிறது. ‘கும்பஎனில் பானை. பானையில் தக்கவைக்கப்பட்ட நீரைப் போல நுரையீரலில் சுவாசத்தை தக்கவைத்தல் கும்பகம். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனத்துடன் செய்யப்படும் போது அது சாதனையாகிறது. மூன்று வகையான பிராணயாமப் பயிற்சி, இங்கு பகவானால் வேள்வியாகப் பேசப்படுகிறது.

1. இதில் மூச்சை வெளிவிடுதல், பிராணன், மூச்சை உள்ளிழுத்தல் எனும் அபாநனுக்கு ஆஹுதியாக வழங்கப்படுகிறதுஅபாநே ஜுஹ்வதி ப்ராணம். இவ்வகையான பூரக-பிராணாயாமத்தில் சுவாசத்தை உள்ளிழுத்தலுக்கு அதிக கவனம் தரப்படுகிறது.

சாதனை = பூரக-பிராணாயாமம்

அக்னிஅபாநன்

ஹவிஸ் = பிராணன்


2. இரண்டாவதில் அபாநன், பிராணனுக்கு ஆஹுதியாக வழங்கப்படுகிறதுப்ராணே ஜுஹ்வதி அபாநம். இந்த ரேசக-பிராணாயாமத்தில் மூச்சை வெளிவிடுதல் ஆதிக்கம் செலுத்துகிறது.

சாதனை = ரேசக-பிராணாயாமம்

அக்னி = பிராணன்

ஹவிஸ் = அபாநன் 


3. மூன்றாவதான கும்பக-பிராணாயாமத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மூச்சை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் நிறுத்தப்பட்டு, மூச்சுக் காற்றைத் தக்கவைத்தல் நடைபெறுகிறது. இங்கு சுவாசத்தை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடல் இரண்டும் தக்கவைத்தலுக்கு ஹவிஸாக தரப்படுகிறதுப்ராண-அபாந-3தீ-ருத்3த்4வா


இவ்விதமாக சிலர் மூச்சுக் கட்டுப்பாட்டுப் பயிற்சியை(ப்ராணாயாம-அப்யாஸ), யாகமாகச் செய்கின்றனர். இந்த பிராணாயாம யக்ஞத்தின் மூலம் குறிப்பிட்டளவு மனவமைதி, நிலைத்தன்மை மற்றும் விழிப்புணர்வு அடையப்படுகிறது

சுவாசத்தின் தன்னிச்சையான செயலை ஒரு தன்னார்வ செயலாக மாற்றுவதன் மூலம் ஒருவன் தன்னிடம் வருகிறான். வெறும் சுவாசித்தல் மட்டுமே நடைபெறுகிறது என்றாலும், கவனத்துடன் செய்யும்போது அது ஒரு குறிப்பிட்ட ஒழுக்கமாக, நிலைத்தன்மையுடன் கூடிய மனதை அடைய உதவும் சாதனையாக மாறுகிறது.

-------------------------------------------------------------------------------------