ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.7 - 4.8

||4.7|| அவதாரத்தின் நோக்கம்

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत

अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ।। ।। 

யதா3 யதா3 ஹி 4ர்மஸ்ய க்3லாநிர்ப4வதி பா4ரத ।

அப்4யுத்தா2நமத4ர்மஸ்ய ததா3த்மாநம் ஸ்ருஜாம்யஹம் ।। 7 ।।


भारत   பா4ரத   பரத வம்சத்தில் பிறந்தவனே   यदा यदा   யதா3 யதா3   எப்பொழுதெல்லாம்   

धर्मस्य  4ர்மஸ்ய   தர்மத்திற்கு   ग्लानि:   க்3லாநி:  நாசம்(குறை)   अधर्मस्य  அத4ர்மஸ்ய  அதர்மத்திற்கு   

अभ्युत्थानम्   அப்4யுத்தா2நம்  மேலெழுதல்   भवति   4வதி    உண்டாகிறதோ   

तदा हि   ததா3 ஹி   அப்பொழுதெல்லாம்   अहम्   அஹம்   நான்   अात्मानम्   ஆத்மாநம்   என்னை   

सृजामि   ஸ்ருஜாமி  தோற்றுவித்துக்கொள்கிறேன்.


பாரதா, எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலெழுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னை பிறப்பித்துக்கொள்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.


விளக்கம்:

கிருஷ்ணரின் பிறப்பு ஓர் அவதாரம் என்பதை முந்தைய சுலோகத்தில் பார்த்தோம். ஒரு ஜீவன் கர்மவினையினால் பிறக்கின்றான், அதேசமயம் அவதாரமூர்த்தி கர்மத்தின் அடிப்படையில் தோன்றுவதில்லை எனவும் பார்த்தோம். இல்லையெனில் அவதாரமும் ஒரு செயல் செய்யும் கர்த்தாவாகவும், செய்பவராக இருப்பதால் அவித்யாவுடனும் இருக்க நேரிடும். இந்த நிலை இருந்திருந்தால், அவதாரமூர்த்தியும் ஈஷ்வரனாக அல்லாமல் ஒரு ஜீவனாகவே இருந்திருப்பார். அப்படியெனில் ஜீவனின் பிறப்பிற்கும் ஈஷ்வரனின் பிறப்பிற்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் ஆகியிருக்கும்

முழு படைப்பும் ஈஷ்வரனாகவே இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இறைவன் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுத்துக் கொள்ளும்போது, அந்த வடிவத்தை அவதாரம் என்று அழைக்கிறோம். கடவுளர்கள் மற்றும் தேவதைகளைப் பற்றி பேசப்பட்டிருந்த போதிலும் அவதாரத்தை பற்றிய எந்தக் குறிப்பும் வேதத்தில் இல்லை. புராணங்கள் கிருஷ்ணரையும் ராமரையும் அவதாரங்களாக வழங்குகின்றன. வியாசர் மஹாபாரதத்தை படைத்த போது கிருஷ்ணரின் வாய்மொழி வழியாக இந்த ஞானத்தை கூறினாரா அல்லது வரலாற்றில் கிருஷ்ணர் உண்மையில் இதை பேசினாரா என்பது தெரியவில்லை. மஹாபாரதத்தை வரலாற்று ரீதியாக ஆராயும் பட்சத்தில் இது கிருஷ்ணரால் பேசப்பட்டதாகவே கருதப்படுகிறது. ‘இதிஹாஸ(इतिहास)’ எனும் சொல்லின் பொருள்இதி ஆஸ(इति अास)’ - இது இப்படி இருந்தது என்பதாகும். மஹாபாரதத்திலுள்ள பல கதைகள் உண்மையான வரலாற்று நிகழ்வுகளைச் சுற்றி வருகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது


=> அவதாரமூர்த்தி ஒரு நடிகரைப் போன்றவர்:

மேடையில் அல்லது திரையில் தோன்றும் நடிகரை உதாரணமாகக் கொண்டு அவதாரமூர்த்தியை நன்கு புரிந்து கொள்ளலாம். அவர் அந்த பாத்திரம் இல்லை என்பது ஒரு நடிகருக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர் மேடையில் அப்பாத்திரத்திற்குத் தேவையான அனைத்து உணர்வுகளையும் தத்ரூபமாக வழங்கிக் கொண்டிருப்பார். அவ்வாறே கிருஷ்ணரும் அவர் ஒரு பாத்திரத்தை வகிக்கிறார் என்பதை அறிந்திருந்ததால் அவரது பிறப்பை முற்றிலும் உண்மையானது, பாரமார்த்திகம் என்றோ அல்லது அனுபவ ரீதியாக உண்மையானது, வியாவஹாரிகம் என்றோ கருத முடியாது. ஆகவே மெய்மையை பொருத்தவரையில் அவதாரமூர்த்தியை மீதமுள்ள ஒரேயொரு தேர்வான பிராதிபாசிகத்தில்தான் சேர்த்தாக வேண்டும். இத்தேர்வு வித்தியாசமானதாக இருப்பினும், ஒருவன் ஒரு பாத்திரத்தை ஏற்றி வைத்திருப்பதும், மேலும் அது உண்மையானதல்ல வெறும் விளையாட்டு என தெளிவாக தெரிந்திருப்பதும் இதை பிராதிபாசிகம், அகநிலை படைப்பாக ஆக்குகிறது. ஈஷ்வரன் ஒரு கொடுக்கப்பட்ட உடலுடன் இருப்பதைப் போல் தோன்றுகிறார். அவர் செய்யும் செயல்களனைத்தும் நிச்சயமாக வியாவஹாரிகத்தில் இருந்தபோதிலும், கிருஷ்ணரின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது அவதாரமூர்த்தி என்பது முற்றிலும் பிராதிபாசிகம், முற்றிலும் மாயை. உதாரணமாக, பார்வையாளர்களுக்கு மந்திரவாதியின் வித்தையில் தோன்றும் விஷயங்கள் உண்மையானது; ஆனால் மந்திரவாதியைப் பொறுத்தவரை அது எல்லாம் மாயமானது, மந்திரம்

அவதாரத்தை போலவே, ஞானியும் தன்னை ஒரு செயல் செய்யும் கர்த்தாவாக பார்ப்பதில்லை. எனில் அங்கும் உண்மையான வியவஹாரம் இல்லை. ஆகவே அவரது நிலைபாட்டிலிருந்து, ஆத்மாவின் நிலைபாட்டிலிருந்து நோக்கினால் அனைத்தும் பிராதிபாசிகம்


=> ஈஷ்வரன் எப்போது ஓர் உடலை எடுக்கிறார்?

மற்ற உயிரினங்களைப் போல அல்லாமல் மனிதர்களுக்கு தனிச் சுதந்திரம்(free will) அனுமதிக்கப்பட்டிருப்பதால் துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்புள்ளது. இது தர்மம் மற்றும் சட்டம் ஒழுங்கை அழிக்க வழிவகுக்கும். இந்த அழிவு நிகழும்போது, மனிதன் முறையான சாத்தியங்களை அடைவதற்கான முறையான மார்க்கத்தை பின்பற்ற முடியாது. மோக்ஷத்தை பெறுவதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற முடியாத அளவு சமூகம் சீர்கேட்டை அடைந்திருக்கும். தனியொருவன் தனது செல்வத்தை தர்மத்திற்குட்பட்டு சட்டபூர்வமாக அனுபவிக்க, அதற்கான உள்கட்டமைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற சாத்தியகூறுகள் இருக்க வேண்டும்; அது  பெரும்பான்மையினரால் பின்பற்ற படவேண்டும். உதாரணமாக கால்பந்து விளையாட்டில் விதிகளை யாரும் பின்பற்றவில்லையெனில் விளையாட்டு இல்லை. வீரர்கள் அவரவர்களின் இஷ்டத்திற்கு பந்தை உதைக்கலாம்; நடுவர்கள் யாரும் இருக்கக்கூடாது எனில் விளையாட்டு எப்படி நடைபெறும்? எதனடிப்படையில், யார் வெற்றி பெற முடியும்? இதேபோல, விதிகள் இல்லாவிடில் வாழ்க்கையெனும் விளையாட்டை அனுபவித்து விளையாட முடியாது. சமநிலை அங்கீகரிக்கப்படாத இவ்வித ஒழுக்கமற்ற சூழ்நிலை அதர்மத்திற்கு வித்தாகிறது. வீடு, சமூகம் என அனைத்து நிலையிலும் இவ்விதிகள் பொருந்தும். எந்தவொரு விளையாட்டிலும் இருப்பதைப் போலவே, விதிகளை மதிக்காமல் அவற்றிற்கு எதிராக செயல்படும் ஆட்களும், சில மோசமான நாடகங்களும் எங்கும் எப்போதும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையான வீரர்கள் விதிகளை பின்பற்ற மறுத்தால், பிரச்சனை மிகப்பெரியதாகி, புறக்கணிக்க முடியாததாகிவிடும். இந்த வகையான சிக்கல், தர்மத்தின் நாசம் அல்லது முறையான வாழ்க்கையின் வீழ்ச்சி(4ர்மஸ்ய க்3லாநி:) என்றழைக்கப்படும்.

மனிதனின் நடத்தை அவனது தனிச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சுதந்திரம் ஒவ்வொரு திருப்பத்திலும் தவறாகப் பயன்படுத்தப்படும் போது அதை ஒழுங்குப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. சமூக முன்னேற்றத்திற்கு துணைபுரியும் கர்மங்கள் தர்மங்களாகின்றன. தடையாயிருப்பவைகள் அதர்மங்களாகின்றன. அதர்மம் தலையெடுத்துப் பெருங்குழப்பங்களை உண்டு பண்ணும் நெருக்கடிகளிலெல்லாம் இறைவன் அவதரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உண்மையில், பகவான் எதையும் முடிவு செய்வதில்லை. எல்லா செயல்களையும் போல, இதுவும் கர்மபலனாக நடைபெறும் விளைவாகும். ஒவ்வொருவரின் பிரார்த்தனை மற்றும் மொத்தப் பிரார்த்தனைகளின் கூட்டுப் பலனாக இது நடைபெறுகிறது.


=> அதர்மமே தர்மத்தின் அழிவிற்கான உண்மையான காரணம்

உண்மையில் தர்மம் என்பது அழிக்கக்கூடிய ஒரு விஷயமல்ல. ஒரு பொருளைப் போல இதை உடைத்து அல்லது எரித்து அழித்துவிட முடியாது. மனிதர்களால் மதித்து பின்பற்றப்படவேண்டிய நியதி இது. ஆகவே மக்கள் தர்மத்தை பின்பற்றவில்லையெனில் தர்மம் அழிக்கப்பட்டதாகிறது(4ர்மஸ்ய க்3லாநி: 4வதி) எனும் விதத்தில் தர்மத்தின் அழிவு புரிந்துகொள்ளப்பட வேண்டும். மேலும் தர்மத்தில் சரிவு நிகழும்போது, அதர்மமத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்(அத4ர்மஸ்ய அப்4யுத்தா2நம்). அப்போது ஈஷ்வரன் தனது மாயையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தன்னை பிறப்பித்துக் கொள்கிறார். வேதாந்தத்தின் புரிதலுக்கு இக்கருத்து அவசியமில்லை. எனினும் சடங்குகள், பிரார்த்தனைகள் போன்ற பல வடிவங்களில் கர்மம் வெளிப்படுகிறது எனும் அறிவை போலவே அவதாரம் என்ற ஒரு விஷயம் இருப்பதையும் இந்த சுலோகத்தின் பொருட்டு அறிந்து கொள்ளலாம். ‘தத் த்வம் அஸி’, சுயத்தின் மெய்மையே அனைத்துமாக இருக்கிறது என்பது வேதாந்தம்; மற்றவை அனைத்தும் இந்த உண்மையைப் புரிந்துகொள்வதை ஆதரிக்கும் வண்ணம் கொண்டுவரப்படுகிறது.

அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன் - அஹம் ஆத்மாநம் ஸ்ருஜாமிஎன கூறி அவதாரத்தின் கருத்தை இங்கே கிருஷ்ணர் முன்வைக்கிறார். அவர் தேவகியின் மைந்தனாக பிறந்திருந்த போதிலும் குறிப்பிட்ட உடலுக்குள் வேண்டுமென்றே நுழைந்தார் என்பதை அவரது வாக்கியம் சுட்டிக்காட்டுகிறது. கிருஷ்ணாவதாரமாக வந்துள்ள விஷ்ணு, ஒரு சந்தர்ப்பத்தில் நரசிம்ம-அவதாரமாக தூணில் இருந்து பிறந்தார் என புராணங்களில் காணலாம். ஆகவே அவரது பிறப்புகள் நிச்சயமாக பிரகிருதியின் விளைவாக இல்லை. அவை பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட குரோமோசோம்களின் தயாரிப்பு அல்ல. அவர் தன்னைத் தானே பிறப்பித்துக் கொள்கிறார் என்று இங்கே தெளிவாகக் கூறுகிறார்

--------------------------------------------------------------------------------------------------------------------

||4.8|| தர்மத்தை எவ்விதம் நிலைநாட்டுகிறார்:

परित्राणाय साधूनां विनाशाय दुष्कृताम्  

धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ।। ।। 

பரித்ராணாய ஸாதூ4நாம் விநாஸா2 து3ஷ்க்ருதாம்

4ர்மஸம்ஸ்தா2பநார்தா2 ஸம்ப4வாமி யுகே3 யுகே3 ।। 8 ।।


साधूनां  ஸாதூ4நாம்   நல்லோரை/தர்மப்படி வாழ்பவர்களை   परित्राणाय   பரித்ராணாய   பாதுகாக்கவும்    दुष्कृताम्   து3ஷ்க்ருதாம்  துஷ்டர்களை/அதர்மப்படி வாழ்பவர்களை   विनाशाय   விநாஸா2   அழிக்கவும்   धर्मसंस्थापनार्थाय  4ர்மஸம்ஸ்தா2பநார்தா2  தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும்   

युगे युगे  யுகே3 யுகே3 யுகந்தோறும்/அந்தந்த காலத்தில்  सम्भवामि   ஸம்ப4வாமி  தோன்றுகிறேன்.  


தர்மப்படி வாழ்பவர்களைப் பாதுகாக்கவும், அதர்மப்படி வாழ்பவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.


விளக்கம்:

அவதாரபுருஷர் எதற்காக அவதரிக்கிறார்? கண்டிப்பாக புண்ணிய-பாபத்தை அனுபவிக்கவோ, அல்லது ஒரு ஜீவனாக சம்சாரியின் வாழ்க்கை வாழவோ அல்ல; இது அவதாரத்திற்கு பொருந்தாது என ஏற்கனவே பார்த்தோம். எனில் அவர் அவதரித்து என்ன செய்கிறார்? மூவிதமான நோக்கத்திற்காக வருகிறார். முதலாவதாக, தர்ம வாழ்க்கைக்கு அர்பணித்த மக்களை பாதுகாக்கிறார்(ஸாதூ4நாம் பரித்ராணாய). அவர்கள் காக்கப்படும் போது தர்மம் காக்கப்பட்டதாகிறது

இப்பாதுகாப்பு பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. அவைகளில் ஒன்று தர்மத்திற்கு இணங்காத செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டித்தல்(து3ஷ்க்ருதாம் விநாஸா2). களையெடுத்தலும், நல்ல செடிகளுக்கு உரம் போடுதலும் சேர்ந்து அமைவது சிறந்த விவசாயமாகிறது. உலகில் கெட்டவர்களின் கூட்டம் பெருகிவிட்டால் அவர்களுக்கிடையில் தர்மம் தலையெடுக்காது. மூக்குணங்களில் ரஜோகுணமும், தமோகுணமும் அதிகரிக்கப் பெற்றவர்கள் அதர்மத்தில் ஈடுபடுகிறார்கள். ஆதலால் அழித்தல் மற்றும் சீர்திருத்துதல் மூலம் அவர்களுடைய தொகையைக் குறைத்து, சத்வ குணத்தில் இருப்பவர்களை ஓம்புதல் நிகழ்கிறது. இவ்விதம் மூன்று குணங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு(தாரதம்யம்) ஓரளவில் சமப்படுவதாகிறது

து3ஷ்க்ருதாம் விநாஸா2என்ற சொல்லின் பொருள், ‘அதர்மத்தைப் பின்பற்றுபவர்களை அழிப்பதற்காகஎன்பதாகும். உண்மையில் இங்கே அழிவு எனும் சொல், அதர்மத்தைப் பின்பற்றுபவர்களை தர்மத்தின் பாதைக்கு மாற்றுதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும். அவதாரமூர்த்தியின் வருகைக்கு இது இரண்டாவது காரணமாகிறது. மேற்கூறிய இரண்டிலுமே அவரது முக்கியப் பணி, தர்மத்தை மீண்டும் அல்லது இன்னும் சரியான முறையில் ஸ்தாபிப்பதே(4ர்மஸம்ஸ்தா2பநார்தா2) ஆகும். இதுவேஅவதாரவருகையின் மூன்றாவது மற்றும் முக்கிய நோக்காகும்.


=> தர்மத்தை எவ்வாறு மீண்டும் நிலைநிறுத்துவது?

தர்ம வாழ்க்கையை வாழ்வதன் மூலம் மட்டுமே தர்மத்தை நிறுவி பாதுகாக்க முடியும். இது சரியாகப் புரிந்துகொள்ளப்படாததால் மக்கள் பெரியப் பெரிய கட்டிடங்களில் இதற்காக பெரிய நிறுவனங்களை உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு மதத்தின் சார்பிலும், தர்மத்தை நிறுவும் ஏராளமான அமைப்புகள் தொடங்கப்பட்டு, அவற்றில் பல இறுதியில் அதர்மத்தில்(அதார்மிகா) வீழ்கின்றன.

ரிஷிகேஷில் சாதுக்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. அவர்கள் தங்கள் நேரத்தை சாஸ்திரம் படிப்பதற்காகச் செலவிட்டனர். ஒருவேளை ஒரு மனிதன் தனது மனைவியையோ, வியாபாரத்தையோ இழந்துவிட்டதாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ சாதுவாக மாற முடிவு செய்திருக்கலாம். சூழ்நிலையினால் சாதுவாக மாறியிருந்தாலும், உண்மையில் அவருக்கு படிப்பில் ஆர்வமில்லாமல் இருக்கும். ஆனால் மற்றவர்கள் படிப்பதைப் பார்த்து அவரும் படிக்கத் தொடங்கி ஆன்மிக வாழ்க்கைக்குள் நுழைவார். ஆனால் இன்று, பெரும்பாலும் தலைகீழான சூழ்நிலை நிகழ்கிறது. ரிஷிகேஷிற்கு செல்லும் ஒரு சாது ஆன்மீகத்தில், படிப்பில் நாட்டம் செலுத்தாதவர்களைச் சந்திக்க நேரிடுகிறது. எல்லோரும் என்ன செய்கிறார்களோ அதை அவரும் செய்யத் தொடங்கி, ஆசிரமத்தை இயக்குவது, இசையை கற்றுக் கொள்வது, யோகாசனம் பயில்வது போன்றவற்றில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார். இவைகளில் எந்தத் தவறுமில்லை. ஆனால் இதைச் செய்ய ஒருவர் சந்யாசியாக மாறத் தேவையில்லை. ஆகவே தர்மத்தை நிலைநாட்ட தர்ம வாழ்க்கை வாழ்வதே ஒரே வழியாகும். அமைப்புகளின் உருவாக்கம், சுயநலன்களுக்கான கூடாரமாக மாறிவிடும் அபாயம் உள்ளது

ஒவ்வொரு யுகத்திலும் நான் பிறக்கிறேன் - யுகே3 யுகே3 ஸம்ப4வாமிஎன்கிறார் கிருஷ்ணர். ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் நிகழும் விதி உள்ளது என்பதை இது குறிக்கவில்லை. இங்குள்ள நியதி என்னவென்றால், தர்மம் குறைந்து அதர்மம் அதிகரிக்கும் போது, எல்லா இடங்களிலும் அதர்மம் பரவலாக இருக்கும் போது, தர்மம் உயிர்வாழ எந்த வழியும் இல்லாதபோது, தர்மத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் ஈஷ்வரன் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுத்துக் கொள்கிறார். இந்த வடிவம் அவதாரம் என்றழைக்கப்படுகிறது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

அவதார புருஷர் ஈசுவரனால் அனுப்பப்படும் மனுஷ்ய தூதர் ஆவர். அவர் ஒரு பெரிய சக்கரவர்த்தியின் பிரதிநிதி போன்றவர். நெடுந்தூரத்துக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் கலகம் நிகழும்போது அதை அடக்குவதற்கு அரசன் தனது பிரதிநிதியை அனுப்புவது போல் உலகத்தில் எங்கேயாவது தர்மம் மலினமடையும்போது அங்கு தர்மத்தைப் பாதுகாத்து அபிவிருத்திக்குக் கொண்டுவருவதற்காக ஈசுவரன் தமது அவதாரபுருஷனை அனுப்புகிறார்.

-------------------------------------------------------------------------------------