சனி, 10 அக்டோபர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.66

||18.66|| முடிவுரை சுலோகம்:

सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज ।

अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: ।। ६६ ।।

ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ச1ரணம் வ்ரஜ ।

அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா சு1ச: ।। 66 ।।


सर्वधर्मान्  ஸர்வத4ர்மாந்  எல்லா தர்மங்களையும்     परित्यज्य  பரித்யஜ்ய  பரித்தியாகம் செய்துவிட்டு     माम् एकं  மாம் ஏகம்  என்னை ஒருவனையே     शरणं व्रज  ச1ரணம் வ்ரஜ  சரணடைவாயாக     अहं  அஹம்  நான்      त्वा  த்வா  உன்னை      सर्वपापेभ्य:  ஸர்வபாபேப்4ய:  எல்லாப் பாபங்களிலிருந்தும்      मोक्षयिष्यामि   மோக்ஷயிஷ்யாமி  விடுவிப்பேன்       मा शुच:  மா சு1ச:  வருந்தாதே.


தர்மங்களையெல்லாம் அறவே விட்டுவிட்டு என்னையே சரணடைக. பாபங்களனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப்பேன்; துயருறாதே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னயே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே.


விளக்கம்:

இறுதியாக ஞானத்தின் வாயிலாகச் செயல்களைத் துறத்தல் மற்றும் ஒரு வாழ்க்கை முறையாகிய சந்யாசம் ஆகிய இரண்டும் இந்த சுலோகத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இது சந்யாசத்தை ஒரு யோகமாகவோ அல்லது ஒரு சாதனமாகவோ (கர்மயோக வாழ்க்கை முறையின் விளைவாக அமையும் ‘விவிதிஷா-சந்யாசம்’ எனும் வாழ்க்கை முறையாக) விளக்குகிறது. அத்துடன் அந்த சந்யாசத்தின் இறுதி பலனாகிய ஞான-கர்ம-சந்யாசத்தையும் இது விவரிக்கிறது. அதாவது, ‘நான் செயலைச் செய்பவன் அல்ல’ என்பதை உணர்ந்து, ஞானத்தின் வாயிலாக அனைத்துச் செயல்களையும் துறத்தலையும் விளக்குகிறது. இந்த இரண்டும் இந்த சுலோகத்தில் கூறப்பட்டுள்ளன. அதனால் இது சந்யாசம் என்ற தலைப்பின் முழுமையான சுருக்கமாக உள்ளது. முந்தைய சுலோகம் கர்மயோகத்தைச் சுருக்கமாக விளக்கியது; இங்கோ, தூய ஞானம் விளக்கப்படுகிறது.


=> உபதேசத்தின் முடிவுரை:

இது உபஸம்ஹார சுலோகம் எனப்படுகிறது. கீதையின் உபதேசம் இத்துடன் முடிவு பெறுகிறது. முகவுரை மற்றும் முடிவுரை இரண்டும் ஒரே கருத்தாக இருக்கவேண்டுமென்பது ஒரு நியதி. கீதையின் முகவுரை சுலோகம்(2.11), துயரப்படத் தகாத ஒன்றைக் குறித்து நீ துயருறுகிறாய் — அசோ1ச்யாந் அந்வசோ1சஸ்த்வம், என்று தொடங்கியது. துயருறாதே — மா சு1ச:, என்ற போதனையுடன் இங்கு நிறைவை அடைகிறது. அதாவது, துயரப்பட வேண்டிய அவசியமில்லை எனத் தொடங்கி, அறிவு கொடுக்கப்பட்டு, இதை அறிந்தால் நீ துயரப்படத் தேவையில்லை எனவே துயரப்படாதே என்று முடிவடைகிறது. எனவே, துயரத்தைப் போக்குவதே கீதையின் முழுமுதற் குறிக்கோள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 


=> தர்மத்தை விட்டுவிடு:

எல்லா தர்மங்களையும் துறந்து — ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய, என்னையே சரணடை — மாம் ஏகம் ச1ரணம் வ்ரஜ, என்று கூறப்படுகிறது. இங்கே ‘தர்மம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதை முதலில் நாம் விசாரணை செய்ய வேண்டும். 

அனைத்து தர்மங்களையும் துறத்தல் என்பதன் பொருள் ஞானத்தின் வாயிலாக அனைத்துச் செயல்களையும் துறத்தலாகும். எனவே தர்மம் என்பது இங்கு நேரடியாக கர்மத்தைக் குறிக்கிறது. இந்த முழு சுலோகத்தையும் நாம் கூர்ந்து ஆராயும்போது ​​இங்கு ஞான நிஷ்டையே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறியலாம். ஏனெனில் ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இரு நூற்பிரிவுகளும் ‘நைஷ்கர்ம்யம்’ எனப்படும் கர்மத்திலிருந்து விடுதலை பெறுவதையே உட்கருத்தாகக் கொண்டுள்ளது. ஒருவன் கர்மங்களுக்கு உட்பட்டிருக்கும் வரை, அவன் சம்சாரச் சுழலிலேயே சிக்கியிருப்பான். சம்சாரத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமாயின், அவன் அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபட வேண்டும். பகவத் கீதை ஒரு ‘மோக்ஷ சாஸ்திரம்’ என்றால், அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரு வழியை அது நிச்சயம் வழங்கியிருக்க வேண்டும். எல்லா கர்மங்களையும் அனுபவித்துத் தீர்ப்பதன் மூலம் அவற்றை முழுமையாக ஒழித்துவிடுவது இயலாத காரியம்; ஏனெனில் அக்கர்மங்கள் எண்ணற்றவை. அதுமட்டுமின்றி, ஒரு நொடியும் செயல் செய்யாமல் இருப்பது எவராலும் இயலாது — ந ஹி கச்1சித்க்ஷணமபி ஜாது திஷ்ட2தி அகர்மக்ருத், என சுலோகம் 3.5-ல் கூறப்பட்டது. எனவே இதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது, ஞானத்தின் வாயிலாகவே செயல்களைத் துறத்தல். இதுவே ஞான-கர்ம-சந்யாசம் எனப்படும். ஆத்மா கர்த்தா(செயல் செய்பவன்) அல்ல; அது எந்த செயலின் கர்மப் பொருளும் அல்ல; மேலும், எந்த வகையிலும் எந்தச் செயலுடனும் அதற்குத் தொடர்பில்லை. அதுவே ஆத்மாவின் இயல்பு. ஆகையினால் அது இயற்கையாகவே அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுபட்ட நிலையில் உள்ளது. ஆக, செயலின்மை அல்லது செயலற்ற நிலை என்பதே மோக்ஷம் என்று கூறப்படுகிறது. 


=> அதர்மமும் அடக்கம்:

மேலும் எல்லா தர்மங்களையும் கைவிடு(ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய) என்று சொல்லும்போது, இங்கு ‘தர்மம்’ என்ற சொல்லானது தர்மம் மற்றும் அதர்மம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகவே உள்ளது என்று ஆதிசங்கரர் விளக்குகிறார். இங்கு தர்மங்களை கைவிடுதல் என்பது அதர்மத்தை துறக்காமலிருப்பதை குறிப்பதல்ல என்று தெளிவுபடுத்துகிறார். முறையற்ற செயல்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளாத ஒருவனுக்கு ஆத்ம ஞானம் கைகூடுவது சாத்தியமில்லை என்று கூறி கடோபநிஷத்(1.2.24) இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது - நாவிரோதோ து3ச்1சரிதாத்.


=> சந்யாச வாழ்க்கைமுறை:

இங்கு அனைத்துச் செயல்களையும் துறப்பது என்பது சந்யாச வாழ்க்கை முறையான விவிதிஷா சந்யாசத்தையும் குறிக்கலாம்.

தர்மம் மற்றும் அதர்மம் இரண்டும் செயல்களையே(கர்ம) குறிக்கின்றது. இங்கு, சரியானவை என்று கருதப்படும் செயல்களையும்(தர்ம), தவறானவை என்று கருதப்படும் செயல்களையும்(அதர்ம) துறக்குமாறு நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். நமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் பொதுவாகச் செய்யும் அனைத்துச் செயல்கள்(காம்ய கர்ம) என்று எடுத்துக்கொண்டாலும் கூட, இக்கூற்று உண்மையாகவே இருக்கும். இவற்றுள் ஸ்ருதிகளால் கட்டளையிடப்பட்ட வைதிக(ச்1ரெளத) கர்மங்களும், ஸ்மிருதிகளால் விதிக்கப்பட்ட ஸ்மார்த்த கர்மங்களும் அடங்கும். ஏற்கனவே அதர்மத்தை விட்ட ஒருவன், தர்மத்தின் பலனான மனத்தூய்மையும் அடைந்த பிறகு, புத்தியை தூய்மைப்படுத்த ஞானயோகத்திற்கு செல்லும் விதமாக கர்மங்களைத் துறத்தல் பேசப்படுகிறது. ஈஷ்வரனைப் பற்றிய அறிவைத் தேடும் நோக்கில் ஒருவன் சந்யாச வாழ்க்கையை மேற்கொள்ளும்போது இச்செயல்கள் அனைத்தும் துறக்கப்படுகின்றன. அப்போது ஈஷ்வரன் மட்டுமே புகலிடமாக உள்ளார். அதையே பகவான் இங்கு என்னை ஒருவனையே சரணடை —  மாம் ஏகம் ச1ரணம் வ்ரஜ, என்று கூறுகிறார்.


=> ‘என்னையே’ என்பதன் பொருள்?

இங்கு தன்மை-பயன்பாட்டை உபயோகித்து, ‘என்னை ஒருவனை மட்டும் சரணடை’ என்று பகவான் கூறுவதை சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். பகவான் ‘நான்’ என்று கூறும்போது, அனைத்தின் சொரூபமாகத் திகழ்பவராக அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த உலகிலுள்ள அனைத்தையும் நாம் உணர்வுள்ளவை(சேதனம்) மற்றும் உணர்வற்றவை(அசேதனம்) என இரு வகைகளாகப் பிரிக்கலாம். காரண-காரிய விசாரணையின் அடிப்படையில், ‘இவைகளனைத்தின் சொரூபமாகவே நான் இருக்கிறேன்’ என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஏன்? இங்குள்ள அனைத்துப் பொருட்களுக்கும் நானே காரணமாகத் திகழ்கிறேன் — ஸர்வஸ்ய காரணத்வாத். இந்த சேதனம் மற்றும் அசேதனம் இரண்டும் பஞ்ச பூதங்களைத் தவிர வேறில்லை. அனைத்தும் இந்த பஞ்ச பூதங்களின் சூக்ஷம-அம்சமாகவோ அல்லது ஸ்தூல அம்சமாகவோ இருக்கிறது. 

இனியொரு கோணத்தில், பிரக்ஞையின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தால், சைதன்ய ஆத்மாவை தவிர அனைத்தும் உணர்வற்றவை(அசேதனம்). இங்கு உண்மையில் பார்த்தால், நாம் சூக்ஷம-சரீரம் இருப்பனவற்றை உணர்வுள்ளவை என்றும், சூக்ஷம-சரீரம் இல்லாதவைகளை உணர்வற்றவை என்றும் அழைக்கிறோம். ஆனால் அனைத்திலும் இருப்பது ப்ரம்மம் எனும் ஒரே சைதன்யம். நாம் ‘இது ஜடம்’ என்று சொன்னாலும், அதை அறிந்து கொண்டிருப்பது சைதன்யம் என்பதால், அது சைதன்யத்திலிருந்து பிரிந்ததல்ல. அங்கு சைதன்யத்தின் இருப்பு(ஸத்தா) மட்டும் வெளிப்படுகிறது. ஆனால், உணர்வுள்ளவைகளில் சூக்ஷம-சரீரம் இருப்பதால், சைதன்யம் அறிபவனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எனவே சைதன்யம் எங்கும் நிறைந்திருக்கிறது. ப்ரம்மமாகத் திகழும் சைதன்யத்திலிருந்து வேறான ஒன்று இருப்பதாகக் கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை. அதனாலேயே சங்கரர் ஈஷ்வரனை, ஸர்வாத்மா - அனைத்திற்கும் ஆதாரமான சைதன்ய-ஆத்மா என்று போற்றுகிறார். ‘அந்த ஈஷ்வரனாக நானே இருக்கிறேன்’ என்கிறார் கிருஷ்ணர்.   


=> சரணடைதல்:

அந்த ஈஷ்வரனிடம் மட்டுமே சரணடைவது என்பதன் பொருள் என்ன? ஆத்மாவாகிய ‘நான்’, ஈஷ்வரனின் சொரூபத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டவன் அல்ல என்பதை அறிந்துகொள்வதும் புரிந்துகொள்வதும் ஆகும். ஆத்மாவிற்கும் ஈஷ்வரனுக்கும் இடையே எவ்விதப் பிரிவும் இல்லை. உண்மையில் ஈஷ்வரனைத் தவிர வேறு எதுவும் இல்லை; மேலும் அந்த ஈஷ்வரன் ஆத்மாவிலிருந்து வேறானவன் அல்ல. இதையே வேதாந்தம் ‘தத் த்வம் அஸி — நீ அதுவாகவே இருக்கிறாய்’ எனும் மஹா வாக்கியத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறது. அனைத்தின் இயல்பாக(ஸ்வரூப) இருப்பவரும், அனைத்தின் ஆத்மாவாகத் (ஸர்வாத்ம) திகழ்பவரும், அனைத்திலும் வியாபித்திருப்பவரும் (ஸர்வ-பூ4தஸ்த), சமமானவரும் (ஸம), அழிவற்றவரும் (அச்யுத), பிறப்பு-இறப்பு முதலானவற்றிலிருந்து விடுபட்டவருமான அந்த ஈஷ்வரனிடம் சரணடைவது என்பது, அந்த ஈஷ்வரனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வதே ஆகும். இதன் பொருள் என்னவென்றால், நீ அந்த ஈஷ்வரனிடமிருந்து வேறானவன் அல்ல என்பதேயாகும்.

‘சரணடைதல்’ என்பதற்கு இந்த விளக்கத்தையே சங்கரர் அளிக்கிறார். உண்மையில் இது மட்டுமே தர்க்கரீதியாக சரியான பொருளாக இருக்கமுடியும். இதைத் தவிர, பகவானின் பாதத்தில் பக்தியின் மூலம் சரணடைதல் போன்ற வேறு எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், ‘அனைத்து தர்மங்களையும் துறத்தல்’ என்பது ஒரு சிக்கலாகவே அமையும். கீதை ஒரு மோக்ஷ-சாஸ்திரம் ஆகும். எனவே முழு உபதேசத்தின் சாரத்தையும் அர்ஜுனனுக்குக் கொடுக்கின்ற இந்த சுலோகத்தில், எதன் மூலம் மோக்ஷம் சித்திக்கும் என்பது பற்றியே பேசப்பட வேண்டும். ஆகையால், பகவானிடம் சரணடைதல் என்பதற்கான சாத்தியமான பல்வேறு பொருள்களை கூர்ந்து ஆராய்ந்தால், சங்கரர் இங்கே அளித்துள்ள இந்த விளக்கத்தைத் தவிர வேறு எதையும் தர்க்கரீதியாக நிலைநிறுத்த இயலாது என்பதை உணரமுடியும். மேலும் அனைத்து கர்மங்களையும் துறப்பதும், ஈஷ்வரனிடம் மட்டுமே அடைக்கலம் புகுவதும் ஏறக்குறைய ஒன்றே ஆகும். உதாரணமாக ஒரு மரக்கட்டையை வெட்டி இரண்டாகப் பகுப்பதை எடுத்துக் கொள்ளலாம். வெட்டுவதும், மரம் இரு துண்டங்களாகப் பிரிவதும் இரண்டும் தனித்தனி செயல்கள் அல்ல. மரம் வெட்டப்படும் அதே சமயத்தில் பிளத்தல் என்பதும் நிகழ்கிறது. அதேபோல இங்கும் அனைத்து கர்மங்களையும் துறத்தல் என்பது ஈஷ்வரனை ஆத்மாவாகவும், ஆத்மாவை ஈஷ்வரனாகவும் உணர்வதையே குறிக்கிறது. இதுவே ஞான-நிஷ்டை என்று அழைக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தப் பொருளைக் கொண்டாலும் அது ஏற்புடையதாகாது. மேலும் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்ட, அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலை — ஸர்வபாபேப்4யோ: மோக்ஷ:, என்கிற பலனையும் அது அளிக்காது.


=> அனைத்துப் பாபங்களிலிருந்தும் விடுதலை:

கிருஷ்ணர், ‘நான் உன்னை சகல பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன்’ என்று கூறுவதன் பொருள் என்ன? அனைத்து தர்மங்களையும் துறந்து, என்னை சரணடையும்போது உங்களின் அனைத்துப் பாபங்களிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார், என்கிறாரா? அல்லது ‘கவலைப்பட வேண்டாம்; தொடர்ந்து கொலை செய்யுங்கள், திருடுங்கள், சமூகத்தின் மீது அனைத்து விதமான கொடுமைகளையும் இழைத்திடுங்கள்; குழப்பங்களை விளைவித்து, மக்களைத் துயரத்தில் ஆழ்த்துங்கள். பிறகு என்னிடம் சரண்புகுந்தால் பாவங்கள் அனைத்தையும் நான் பார்த்துக்கொள்வேன், என்கிறாரா?

இந்த சுலோகம் தவறாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், எத்தகைய ‘உன்னை(த்வா)’ பகவான் விடுவிப்பதாகக் கூறுகிறார் என்று சங்கரர் விளக்கமளிக்கிறார். அனைத்திற்கும் மூலக்காரணமாக இருக்கின்ற ஈஷ்வரனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்னும் தெளிவான புரிதலை(நிச்1சித-புத்3தி4) கொண்ட ஒருவனே இத்தகைய விடுவிப்புக்கு உரியவன் ஆகிறான். அந்தவொரு மூலக்காரணத்தைத் தவிர, வேறு எந்தக் காரியமும் இங்கு அறவே இல்லை. ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்மமாக இருக்கின்ற அந்த ஈஷ்வரனே ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக இருக்கிறார் என்பது தெளிவாகப் புரிந்து கொள்ளப்படும்போது நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள். இது புரிந்துகொள்ளப்பட்டால், என்னைத் தவிர வேறு எதுவும் இல்லை — மத்த: அந்யத் கிஞ்சித் நாஸ்தி, என்பது இயல்பாகவே தெரிகிறது. இது குறித்து எவ்விதமான தெளிவின்மையோ அல்லது தவறான-அறிவோ இல்லாதவன் ‘நிச்1சித-புத்3தி4’ என்று அழைக்கப்படுகிறான். இத்தகைய உறுதியான புத்தியைக் கொண்ட உன்னை நான் விடுவிப்பேன் — அஹம் த்வா மோக்ஷயிஷ்யாமி.

எதிலிருந்து விடுவிக்கிறார்? அனைத்து பாபங்களிலிருந்தும் — ஸர்வ பாபேப்4ய:. ‘ஸர்வ-பாப’ என்பவை பந்தத்தின் வடிவமாக அமைந்திருப்பவை என்றும், அவை தர்மம் மற்றும் அதர்மம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை என்றும் சங்கரர் விளக்குகிறார். 

நான்கு வகையான பாபம்:

   (1) பாபம் - அதர்மத்தின் பலனாக கிடைப்பது.

   (2) புண்ணியம் - தர்மத்தின் விளைவாக உண்டாவது. இந்த பாபம் மற்றும் புண்ணியம் இவையிரண்டும் துக்கத்தையும் சுகத்தையும் கொடுக்கின்ற கர்ம பந்தம் ஆகும். உலகை, உடலை, சம்பந்தத்தை கொடுத்த பின் இவைகள் நீங்கும். 

   (3) அக்ஞானம் - அறியாமையும் ஒருவித பாபம் ஆகும்.

   (4) மோஹம் - ஸத்ய-மித்யா விஷயத்திலும் தர்ம-அதர்ம விஷத்திலும் இருக்கின்ற விபரீத ஞானம், அல்லது குழப்பம் மோஹம் எனப்படுகிறது.  

இந்த அனைத்து வகையான பாபங்களிலிருந்து நான் உன்னை விடுவிக்கிறேன். ஆகையினால் நீ துயரப்படாதே — மா சு1ச:, என்கிறார் பகவான். துயரம் எனில் இங்கு அது சம்சாரத்தைக் குறிக்கிறது. மேற்கூறப்பட்ட நான்கு பாபங்களும் அதற்கு காரணங்களாகின்றன. காரண-காரிய விசார நோக்கில், அந்த நான்கு காரணத்திலிருந்து வருகிற காரியமே இந்த சம்சாரம்(துயரம்) ஆகும். ஆத்ம-அக்ஞானத்தை நீக்குகிற ஞானத்தின் மூலம், ஈஷ்வரன் ஆத்மாவிலிருந்து வேறானவன் அல்ல என்ற உறுதியான புத்தியுடன் அனைத்து கர்மங்களையும் ஞானத்தினால் துறந்து, அத்வைதமான அந்த ஈஷ்வரனை சரணடையும்போது, அனைத்துமாக விளங்கிக்கொண்டிருக்கிற சைதன்ய-சொரூபமான ஈஷ்வரன் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறார் என்பதால் நீ துயரப்படாதே.  

கீதைக்கு அதிகாரி யார் என்பதறகான விடை அடுத்த சுலோகத்தில் வருகிறது. 

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு தலையணையின்மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய்ப் புகைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.

————————————————————————————————


சனி, 3 அக்டோபர், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.65

||18.65|| பகவான் புகட்டும் நலன் யாது?

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।

मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ।। ६५ ।।  

மந்மநா ப4வ மத்3ப4க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு ।

மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே ।। 65 ।।


मन्मना:  மந்மநா:  என்னிடம் மனம் வைத்தவனாய்      मद्भक्त:  மத்3ப4க்த:  என்னிடம் பக்தி வைத்தவனாய்      मद्याजी  மத்3யாஜீ  என்னை ஆராதிப்பவனாய்      भव  ப4வ  ஆவாய்     मां  மாம்  என்னை      नमस्कुरु  நமஸ்குரு  நமஸ்காரம் செய்      माम् एव  மாம் ஏவ  என்னையே      एष्यसि  ஏஷ்யஸி  அடைவாய்      ते  தே  உனக்கு     सत्यं  ஸத்யம்  உண்மையாக          प्रतिजाने  ப்ரதிஜாநே  உறுதி கூறுகிறேன்       मे प्रिय: असि  மே ப்ரிய: அஸி  எனக்கு பிரியமானவனாக இருக்கிறாய்.


என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய். என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு உறுதி கூறுகிறேன். எனக்கு பிரியமானவன் நீ.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே. உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் கர்மயோகத்தின் சாராம்சம் பகரப்படுகிறது. 


=> கர்மயோக சாரம்:

   (1) எனக்காகவே அனைத்து கர்மங்களையும் செய்வாயாக — மத்3யாஜீ. ‘யாஜீ’ எனில் யாகம் செய்பவன். கர்மயோகியிடமிருந்து உருவாகிற அனைத்து கர்மங்களும் ஈஷ்வரனுக்காகவே இருக்கிறது. அவனது சடங்குகள், யாகங்கள் மற்றும் அனைத்துக் கர்மங்களும் இறைவனுக்காக மட்டுமே செய்யப்படும்போது அவன் ‘மத்3யாஜீ’ எனப்படுகிறான்.

   (2) என்னையே மனதில் நினைத்திரு — மந்மநா:. பரமேஷ்வரனையே இலக்காகக் கொண்டவனாக இருப்பவன் கர்மயோகி. அதாவது மோக்ஷத்தை புருஷார்த்தமாகக் கொண்டிருப்பவன். 

   (3) என்மீது பக்தி கொண்டிரு — மத்3ப4க்த:. அவனது பக்தியும் அர்ப்பணிப்பும் ஈஷ்வரனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கின்றன. உணர்ச்சி ரீதியாகவும் இறைவனையே சார்ந்திருப்பவன் பக்தனாகிறான். 

   (4) என்னை வணங்கு — மாம் நமஸ்குரு. ஈஷ்வரனையே அவனது புகலிடமாகவும், சரணாகதியின் மையமாகவும், ஒரே ஆதாரமாகவும் கொண்டவன். சரணடைதல் என்பது இறையின் மீதான சிரத்தையை ஆதாரமாகக் கொண்டு அஹங்காரத்தை பலகீனப்படுத்துவது ஆகும். 


=> கர்மயோகப் பலன்:

இத்தகைய நிலை கைகூடும்போது, ‘நீ என்னையே வந்தடைவாய் — மாம் ஏவ ஏஷ்யஸி’ என்று கிருஷ்ணர் இங்கு உறுதிமொழி அளிக்கிறார். நான் உனக்கு சத்தியமாக உறுதியளிக்கிறேன் — ஸத்யம் தே ப்ரதிஜாநே. சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப்பொருளாகிய பகவான் பகர்கிறார். 

வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி(சாதனம்). ஊரை அடைவது குறி(சாத்யம்). கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே; சாதனமும் சாத்யமும் ஒன்றே. ஈஷ்வரனைத் துணையாகக் கொண்டு ஈஷ்வரனை அடைகிறோம். அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம். அவன் எப்போதும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம். இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நமது பண்படாத மனம் நிற்கிறது. பல ஜென்மங்களில் வேறு பல காரியங்களுக்கு அந்த மனது உதவி வந்தது. விழலுக்கு நீர் இறைத்தவாறு அது நிலையில்லாப் பொருள்களை நாடி நின்றது. ஆனால் இறைவனை அடைவதற்கான கருவியாக மனம் அமைவது அவசியம். ஈசனுக்கான இடமாக உள்ளம் வைக்கப்பட வேண்டும்; மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாகும். இறையின் மீது பக்தி செலுத்துமளவு மனமானது உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான். பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால் செயல்கள் அனைத்தின் வாயிலாக அவன் இறைவனுக்கு இடையறாது நமஸ்காரம் செய்கிறான். கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அதுபோல இத்தகைய மனப்பான்மையைப் பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார். உறுதிமொழி கூறுகிறார். ஒன்பதாவது அத்தியாயத்தில்(9.31) என்னுடைய பக்தன் அழிவதில்லை — ந மே ப4க்த: ப்ரணச்1யதி, என்பதைப் பிரகடனம் செய்யும்படி அர்ஜுனனிடம் கூறினார். இங்கு அவரே அப்பேருரையைப் பகரவும் செய்கிறார்.  


=> கர்மயோகி:

கர்மம் என்பது பலதரப்பட்ட காரியங்களுக்காக உள்ளது. ஆனால் கர்மயோகம் என்பது ஞானத்தின் பொருட்டு தேவைப்படுகிற அந்தக்கரண-சுத்தியை அடைகிற ஒரே ஒரு காரியத்திற்காக மட்டுமே உள்ளது. கர்மயோகிக்கு தனது வாழ்க்கையின் நோக்கம்(புருஷார்த்தம்) குறித்த எந்தவொரு குழப்பமும் இல்லை. ஈஷ்வரனுடனான தனது ஐக்கியத்தை கண்டறிவதைத் தவிர வேறெதுவும் தனது பிரச்சினையைத் தீர்க்காது என்பதை அவன் அறிவான். எந்த ஜீவனும் இதைவிடக் குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான், ஏனெனில் மற்றவை எதுவும் அவனுக்கு தேவையான பலனை அளிக்கப் போவதில்லை. அவன் எதைச் செய்தாலும், மேலும் தொடர்ந்து எதையோ தேடுபவனாகவே இருப்பான். அந்த தேடல் முடிவடைவது எப்போது? அவனது தனிமையுணர்வு கைவிடப்படும்போதுதான் அது நிகழும். ‘நானே அனைத்துமாக இருக்கிறேன்’ என்பதை உணர்வதன் மூலமே அது சாத்தியப்படும். அதுவரை, எந்தவொரு ஜீவனும் திருப்தியுடன் ஓய்வெடுக்க முடியாது என்பதால் ஈஷ்வரனே அவனது இறுதி இலக்கு.

ஆகவே கிருஷ்ணர், ‘நீ என்னையே வந்தடைவாய் — மாம் ஏவ ஏஷ்யஸி’ என்கிறார். இங்கு கூறப்படும் இந்த பிரிவின்மை அல்லது ஏகமாதல் என்பது உருவாக்கப்பட்ட ஒன்றல்ல; அது கண்டறியப்பட வேண்டிய ஒன்றாகும். செயற்கையாக உருவாக்கப்படுகிற எந்தவொரு சேர்த்தலும், மரணம் அல்லது ஏதேனுமொரு காரணத்தினால் ஒருகாலத்தில் பிரிவில் முடிவடையும். ஏதேனும் ஒரு வகையான சிதைவுச் செயல்முறை அந்தப் பிரிவை நிகழச் செய்யும். ஆனால் இங்கே, இந்த ஒற்றுமை என்பது ஏற்கனவே முழுமையாக நிலைபெற்றுள்ளது. ஆத்மாவே ப்ரம்மம் — ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்ம. அதுவே பிரக்ஞையுணர்வின் ஒரே மூலமாக உள்ளது. அது அறிபவன், அறியப்படுபொருள் அல்லது அறிதற்கான கருவி ஆகியவற்றுள் ஒன்றல்ல. மாறாக, அம்மூன்றிலும் பொதுவாகவும், அம்மூன்றிற்கும் அடிப்படையாகவும், அம்மூன்றிலும் மாறாமல் திகழும் உணர்வாகவும் அந்த ஆத்மாவே இருக்கிறது. ஏற்கனவே நிலைபெற்றுள்ள இந்த ஒற்றுமையை உணர்வதே மோக்ஷம் என்றும், அல்லது ஈஷ்வரனை அடைதல் என்றும் அழைக்கப்படுகிறது.


=> உறுதிமொழி:

இங்கே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நீ என்னையே அடைவாய் என்று வாக்குறுதி அளிக்கிறார் — ஸத்யம் தே ப்ரதிஜாநே. இப்படிப்பட்ட உறுதிமொழியை பகவான் அளிக்க முடிவதற்கான காரணம் என்ன? உண்மையில் அவரே நீங்களாக இருப்பதால் உங்களால் அவரைத் தவறவிட முடியாது என்பதால் அவரால் அத்தகைய வாக்குறுதியை அளிக்க முடிகிறது. பகவான் இங்கு சொல்வதைப் பின்பற்றினால் நீங்கள் அவரை அடைவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனதைத் தயார்படுத்தி, ஞானத்தை தேடுவது மட்டுமே ஆகும். அப்போது மோக்ஷம் என்பது அங்கு தவிர்க்க முடியாததொரு விளைவாகக் கிட்டும். மேலும் அந்தக்கரண-சுத்தியைத் தவறவிடுவதற்கான கேள்விக்கே இடமில்லை ஏனெனில் ஈஷ்வரன் மீதான பக்தி ராக-த்வேஷங்களைக் கவனித்துக் கொள்ளும். கர்மயோகத்தில் நீங்கள் ஒரு செயலை விருப்பப்படி என்றல்லாமல் கடமைப்படி செய்வதாலும், அதை பக்தியுடன் செய்வதாலும் விருப்பு-வெறுப்புகள் நடுநிலையாக்கப்படுகின்றன. இதனால் மனத்தூய்மை நிகழும்; மோக்ஷமும் வெகு தொலைவிலிருக்காது. ஆகையினால், ஞானத்தேடல் என்பது கர்மயோக வாழ்வின் ஒரு பகுதியாகும். ராக-த்வேஷங்களின் பிடியிலிருந்து மனம் விடுபடும்போது ஞானத்தின் தெளிவு அதிகரிக்கிறது. ஈஷ்வரனிடம் பக்தி கொண்டவனுக்கு இந்த முடிவு உறுதியானது. ஈஷ்வரனே அடையப்பட வேண்டிய இலக்கு; மேலும் அவருடனான எனது ஐக்கியத்தை நான் உணர்ந்துகொள்ள உதவும் அருளும் அவருடையதே ஆகும்.

அர்ஜுனனுக்குள் சிரத்தையை உருவாக்கும் பொருட்டு இந்த உறுதிமொழியை பகவான் அளித்து, அதற்கான காரணத்தை கூறுகிறார், நீ எனக்குப் பிரியமானவன் — மே ப்ரிய: அஸி. உண்மையில் ‘நீ எனக்குப் பிரியமானவன்’ என்பதை ஒரு மகாவாக்கியம் எனலாம். ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குவதற்கான பரிபாகம் வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை. இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாகும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈஷ்வரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ளவேண்டும். 

————————————————————————————————