திங்கள், 26 பிப்ரவரி, 2024

விபூதி யோகம் 10.20 - 10.22

||10.20|| சாரமான சுலோகம்:

अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थित:

अहमादिश्च मध्यं भूतानामन्त एव ।। २० ।।

அஹமாத்மா கு3டா3கேச1 ஸர்வபூ4தாச1யஸ்தி2:

அஹமாதி3ச்1 மத்4யம் பூ4தாநாமந்த ஏவ ।। 20 ।।


गुडाकेश  கு3டா3கேச1  குடாகேச     सर्व भूताशय स्थित:  ஸர்வ பூ4தாச1 ஸ்தி2:  எல்லா உயிர்களின் ஹிருதயத்திலிருக்கிற   आत्मा  ஆத்மா  பரமாத்மா   अहम्  அஹம்  நான்        மேலும்    

भूतानाम्  பூ4தாநாம்  உயிர்களுக்கு   आदि:  ஆதி3:  ஆதியும்    मध्यं   மத்4யம்   நடுவும்  

अन्त:   அந்த:   முடிவும்    अहम् एव  அஹம் ஏவ   நானே.


விழிப்புடையோய், எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே. உயிர்களின் ஆதியும் நடுவும் முடிவும் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே.


விளக்கம்:

இந்த சுலோகத்திலிருந்து தனது விபூதிகளை பகவான் ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பிக்கிறார். உலகைப் பற்றிய முடிவான உண்மைகளை முதலிலேயே தெரிந்துகொள் என்பதான ஒரு சாரமான சுலோகமாக இது அமைகிறது

இங்கு பகவான் அர்ஜுனனைகு3டா3கேச1என அழைக்கின்றார். ‘கு3டா3கேச1எனில் தூக்கத்தை வென்றவன் அல்லது அடர்ந்த கூந்தலையுடையவன் என்று பொருள். சங்கரர்ஜித-நித்3எனக் கூறுகிறார், இதில்நித்3என்பது தமஸைக் குறிக்கிறது. எனவே தமஸை வென்று விழிப்புடன் இருப்பவன் என்பது பொருள். தூக்கத்தை வென்று, ஆன்மபோதத்தில் விழிப்பு அடையப் பெறுபவர்க்கே பரமாத்மாவின் வியாபகம் விளங்கும்.


=> ஒவ்வொரு உயிரின் சுயசொரூபம் நான்:

பகவானை எந்தெந்த பொருட்களில் தியானம் செய்யலாம் என அர்ஜுனன் கேட்டிருந்தான். ஆகவே பகவான், உன்னையே தியானம் செய் ஏனெனில் அர்ஜுனா, நான் நீயேஅஹம் ஆத்மா, என்கிறார். பகவானே அர்ஜுனனின் சுயசொரூபமாக விளங்கும் பிரத்யகாத்மாவாக இருக்கிறார். பெயரும் ரூபமுமான அர்ஜுனன் வெறும் உபாதி மட்டுமே. எனவேஅஹம்என்பது பகவானாகவே இருப்பதால், பகவானுக்கு உரிய மஹிமைகள் அனைத்தும் பிரத்யகாத்மாவுக்கும் உரியமையாகின்றன. சாஸ்திரத்தின் முதன்மையான வாக்கியமாக இதுவே இருக்கின்றதுவஸ்து பிரத்யகாத்மாவாகவே இருக்கிறது. அனைத்து உயிர்களின் மனதில் உறையும் பிரத்யகாத்மாவாக நானே இருக்கின்றேன்ஸர்வ பூ4தாச1 ஸ்தி2: ஆத்மா அஹம். எனவே உன்னை நானாக அடையாளம் கண்டுகொள் என்கிறார்.   

மேலான ஈஷ்வர தியானத்தை விரும்பும் ஒருவன் முதன்மையாக பிரத்யகாத்மாவை நிதித்யாசனம் செய்யலாம். நிதித்யாசனம் என்பது மெய்ப்பொருளை அறிவதற்கான வழிமுறையாக விளங்கும் சிரவணத்தின் மற்றொரு அங்கம். எனவேதான் சங்கரர், பிரத்யகாத்மாவே எப்பொழுதும் தியானிக்கப் படவேண்டும்நித்யம் த்4யேய:, என்கிறார்

மேலும் இவ்வுயிர்கள் அனைத்தும் தோன்றுவதும், நிலைப்பெற்றிருப்பதும் ஒடுங்குவதும் பரமாத்வான என்னிடத்திலேயாம். எனவே இவைகளின் ஆதியும் நடுவும் முடிவும் நானேபூ4தாநாம் ஆதி3: மத்4யம் அந்த: அஹம் ஏவ, என்கிறார் பகவான். ‘ஆதி3:என்பது உயிர்களின் மூலக்காரணத்தைக் குறிக்கிறது. ஈஷ்வரனாகிய நானே, இந்த படைப்பின் நிமித்த மற்றும் உபாதான காரணமாகவுள்ளேன். ‘மத்4யம்என்பது ஸ்திதி-காரணத்தை குறிக்கிறது. எல்லா உயிர்களின் வாழ்வாதாரமாக நானே உள்ளேன். ‘அந்த:என்பது ஒடுக்க-காரணத்தை குறிக்கிறது. பானை உடைந்த பின், தனது பொருள்காரணமான களிமண்ணில் ஒடுங்குவதுபோல அனைத்துயிர்களும் அவைகளின் உபாதான காரணமான என்னில் ஒடுங்குகின்றன. எனவே இந்த படைப்பில் அனைத்துமாக நானே இருப்பதால், எந்தப் பொருளும் நானே, எந்தப் பொருளிலும் என்னை தியானிக்கலாம். இருப்பினும் பகவான் அர்ஜுனனின் வேண்டுகோளுக்கிணங்க, ஈஷ்வரனை எளிதாக தியானிக்கக்கூடிய சில விஷயங்களை இனிவரும் சுலோகங்களில் தொகுத்துக் கொடுக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஏகமாய் இருக்கும் என் தாய் பராசக்தி பல்வேறு தோற்றத்துடன் விளங்குகிறாள். அளவில்லாத சக்தியுடைய அவள் ஜீவனாகவும் ஜகத்தாகவும் பேதப்பட்டு, சரீரம் புத்தி சன்மார்க்கம் ஆத்மார்த்தம் முதலிய வேறுபட்ட சக்திகளை உடையவளாய்க் காணப்படுகிறாள். சக்தி, வேதாந்தத்தில் கூறப்படும் பிரம்மமே தவிர வேறல்ல. கட்புலனாகாத பிரம்மத்தின் பிரத்யக்ஷ ஸ்வரூபமே அவள்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.21|| விபூதிகளின் வெளிப்பாடு:

आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान्

मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ।। २१ ।।

ஆதி3த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்சு1மாந்

மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் 1சீ1 ।। 21 ।।


आदित्यानाम्  ஆதி3த்யாநாம்  ஆதித்யர்களுள்   अहं विष्णु:  அஹம் விஷ்ணு:   நான் விஷ்ணு    

र्ज्योतिषां  ஜ்யோதிஷாம்  ஒளிர்பவைகளுள்   अंशुमान्  அம்சு1மாந்  கதிர்களையுடைய   रवि:  ரவி:  சூரியன்   मरुताम्  மருதாம்  மருத் தேவதைகளுக்குள்    मरीचि:  மரீசி:  மரீசியாக    अस्मि  அஸ்மி  இருக்கிறேன்    नक्षत्राणाम्  நக்ஷத்ராணாம்  நக்ஷத்திரங்களுள்    अहं शशी அஹம் 1சீ1  நான் சந்திரன்.


ஆதித்யர்களுள் நான் விஷ்ணு; ஒளிர்பவைகளுள் கதிர் நிறைந்த சூரியன் நான். மருத் தேவதைகளுள் மரீசி; நக்ஷத்திரங்களுள் நான் சந்திரன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.


விளக்கம்:

விளைபொருள்கள் அனைத்தும் ஒரே பூமியைச் சேர்ந்தவைகள் எனினும், அவைகளுள் மிக முக்கியமானவைகளையே பொருட்காட்சியில் வைத்துக் காட்டுவது வழக்கம். அனைத்தும் பகவானுடைய விபூதி எனினும், எவை விசேஷமாக பகவானை ஞாபகமூட்டுபவைகளாக அல்லது மனதைக் கவர வல்லவைகளாக இருக்கின்றனவோ அவைகளைத் தனியாகப் பொறுக்கியெடுத்துத் தனது சொரூபம் என்று பகவான் சொல்லுகிறார்.


=> ஆதித்யர்களுள் விஷ்ணு:

ஒவ்வொரு மாதத்திற்கான அதிஷ்டான தேவதையாக பன்னிரண்டு மாதங்களுக்குப் பன்னிரண்டு ஆதித்தியர்கள் இருக்கிறார்கள். ஒருவரே பன்னிரண்டு பெயர் பெற்றுப் பன்னிரண்டு விதமாகத் தொழில்புரிகிறார். அவர்களின் வரிசைக் கிரமத்தை பார்க்கலாம். சித்திரைக்கு அம்சு, வைகாசிக்கு தாதா, ஆனிக்கு இந்திரன், ஆடிக்கு அரியமா, ஆவணிக்கு விவசுவான், புரட்டாசிக்கு பகன், ஐப்பசிக்கு பர்ஜந்நியன், கார்த்திகைக்கு துவஷ்டா, மார்கழிக்கு மித்திரன், தைக்கு விஷ்ணு, மாசிக்கு வருணன், பங்குனிக்கு பூஷா என்று அமைந்துள்ளது. இத்தகைய ஆதித்தியர்களுள் தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலத்தை உண்டுபண்ணி, பனியைக் குறைத்து, வெப்பத்தை அளவுபட வளர்க்கும் விஷ்ணுவாகிய ஆதித்யன் எல்லாராலும் பெரிதும் விரும்பப்படுகிறான். மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமம் 258வது பெயர், நகர்வதால் அவர் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார். அதுபோல ஈஷ்வரன் எனும் நோக்கிலிருந்து, உயிர் நிலைபெறுவதற்கான ஸ்திதி-காரணமாக விஷ்ணு இருக்கிறார். மேலும் விஷ்ணுவே சூரியன் ஆனதாகவும் ஐதிகம் உண்டு. இத்தனைச் சிறப்புகளைக் கொண்டிருப்பதால் ஆதித்யர்களுள் நான் விஷ்ணுவாக இருக்கிறேன் என்கிறார் பகவான்.

=> ஒளிர்பவைகளுள் சூரியன்:

உலகத்தின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது வானத்தில் ஒளிர்பவைகளுள் மிகவும் பிரகாசமானது, ஒளிக்கதிர்களைக் கொண்ட சூரியன் ஆகும். நமது சூரிய குடும்பத்தின் மையமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பூமியில் உயிர்கள் வாழத் தேவையான ஆற்றலைத் தரும் முக்கிய காரணியாகவும் சூரியனே உள்ளது. எனவே பகலில் ஒளிர்பவைகளில் சிறந்ததாக விளங்கும் சூரியன் நான்

=> மருத் தேவதைகளுக்குள் மரீசி:

  நமது சாஸ்திரத்தில் பல்வேறு தேவதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் வாயு தேவதைகள் மருத்து தேவதைகள் ஆவர். சில இடங்களில் அத்தேவதைகளின் எண்ணிக்கை எழுபத்தி ஏழு என்றும், சில இடங்களில் அது நாற்பத்தொன்பது என்றும் கூறப்பட்டுள்ளது. அவைகளுள் நான் மரீசியாக உள்ளேன் என்கிறார் பகவான். காற்று வீசுவது உலக நடைமுறைக்குப் பெரிதும் பயன்படுகிறது. அவைகளுள் மிக முக்கியமானது இங்கு அவர் சொரூபமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது


=> நக்ஷத்திரங்களுள் சந்திரன்:

அதிக வெளிச்சத்தை பூமிக்கு தருவதால் இரவில் ஒளிப்பவைகளுள் சிறந்தது சந்திரன். அது உண்மையில் நக்ஷத்திரம் அல்லவெனினும் நாம் அடையும் பயனை முன்னிட்டு அது முன்னிலையில் வைக்கப்படுகிறது

இதற்கு இனியொரு விளக்கமும் உண்டு. குறிப்பிட்ட வைதிகச் சடங்கை செய்வதன்மூலம் ஒருவன் செல்லும் பல்வேறு லோகங்களும் நக்ஷத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றது. அந்த அனைத்து நக்ஷத்திரங்களிலும், சந்திரலோகம் சிறந்த ஒன்றாக உள்ளது. எனவே லோகங்களில் நான் சந்திரலோகமாக உள்ளேன் எனவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சந்திரலோகம் சந்திரனில் இருந்து வேறுபட்டதாகும்

இவ்வாறாக அனைத்திலும் இருப்பவராக பகவானது விபூதி இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. தேவதைகளுடைய மஹிமையோ அல்லது ஒளிர்பவைகளுடைய சிறப்புகளோ அனைத்தும் ஈஷ்வரனின் பெருமையன்றி வேறில்லை. இங்கு எந்த தேவதையை வழிபட வேண்டும் என்பது சுலோகத்தின் கருத்தல்ல; ஈஷ்வரனின் மஹிமையினால் அது அந்தச் சிறப்பைப் பெறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.22|| மேலும் சில விபூதிகள்:

वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासव:

इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ।। २२ ।।

வேதா3நாம் ஸாமவேதோ3ऽஸ்மி தே3வாநாமஸ்மி வாஸவ:

இந்த்3ரியாணாம் மநச்1சாஸ்மி பூ4தாநாமஸ்மி சேதநா ।। 22 ।।


वेदानां  வேதா3நாம்  வேதங்களுள்   सामवेद:  ஸாமவேதோ3:    ஸாமவேதமாக    अस्मि  அஸ்மி  இருக்கிறேன்    देवानाम्  தே3வாநாம்  தேவர்களுள்   वासव:  வாஸவ:  இந்திரனாக   अस्मि  அஸ்மி  இருக்கிறேன்    

इन्द्रियाणां  இந்த்3ரியாணாம்  இந்திரயங்களுள்    मन: अस्मि  மந: அஸ்மி  மனதாக இருக்கிறேன்    

भूतानाम्  பூ4தாநாம்  உயிர்களில்   चेतना अस्मि  சேதநா அஸ்மி  உணர்வாக இருக்கிறேன்.


வேதங்களுள் நான் ஸாமவேதம்; தேவர்களுள் இந்திரன்; இந்திரியங்களுள் மனதும், உயிர்களில் உணர்வும் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.


விளக்கம்:

இங்கும் பகவான் தனது விபூதிகளைத் தொடர்கிறார். மேலோங்கி இருப்பதெல்லாம் எவ்விதம் பகவானுடையதோ அதுபோலவே கீழாக இருப்பதும் பகவானுடையதே ஆகும். ஆனாலும் தியானித்திற்காகவென அவரின் உயர்ந்த வெளிப்பாடுகளாக இருக்கும் சிலவற்றை தனது பெருமைகளாகக் கூறுகிறார். ஆத்ம ஞானத்தை மட்டும் அடைந்தவனாக இருந்தபோதிலும், அவனை அனைத்தையும் அறிந்தவன்(ஸர்வ-வித்) எனக் கூறக் காரணம், புத்தியின் துணைக்கொண்டு எந்தவொரு உயர்ந்த அறிவை ஒருவனால் அடைய முடியுமோ அந்த உச்சநிலையை அவன் அடைந்துவிட்டதனால் ஆகும். எனவே எந்தவொன்றின் உச்சமும் பகவானை நமக்கு விசேஷமாக ஞாபகமூட்டுவதாக உள்ளது.


=> வேதங்களுள் ஸாமவேதம்:

நான்கு வேதங்களும் ஈஷ்வரனின் பெருமைகளைப் பேசுகின்றன. வேதத்தின் முதல் பகுதியான கர்ம-காண்டம், கர்மங்கள் மற்றும் கர்ம-நியதிகளைப் பற்றிப் பேசுகிறது. கர்மவிதிகளுக்கு தலைமை தாங்குபவர் என்றும் கர்மபலனைக் கொடுப்பவர் என்றும் அதில் ஈஷ்வரனைப் பற்றி மறைமுகமாகக் கூறப்படுகிறது. வேதத்தின் இறுதிபாகமான ஞான-காண்டம் ஈஷ்வரனை நேரடியாக வெளிப்படுத்துகிறது. இவ்விதம் அனைத்து வேதங்களும் இறைவனைப் பற்றியே பேசுகின்றன. அவைகளுக்குள் நான் ஸாமவேதம் என பகவான் மொழிகிறார். ஸாமவேதத்தின் அனைத்து மந்திரங்களும் இசை வடிவத்தில் இனிய பாடலாக உச்சாடனம் செய்யப்படுகிறது. இசையோடு கூடியிருப்பதால் இந்த ஸாமவேதம், பொருள் விளங்காதவர்களுக்கும் உள்ளத்தைக் கவர வல்லதாகிறது. ஈஷ்வர எண்ணத்தை விரைவில் கொண்டுவர வல்லதாகையால், இது பாராயணம் செய்யப்படும் மற்ற வேதங்களிலிருந்து தனித்து நிற்கிறது. மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், மஹா விஷ்ணுவுக்கே ஸாமவேதம் ஓதுபவர்ஸாமக’, என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது


=> தேவர்களுள் இந்திரன்:

தேவர்களுக்குத் தலைவனாக இருப்பதால் இந்திரனிடம் ஈஷ்வர சம்பத்து அதிகமாக இருக்கிறது. நூறு யாகங்களைச் செய்தவன் தேவேந்திரன் ஆகிறான் என்பது அவனது மேன்மையை விளக்குகிறது.


=> இந்திரயங்களுள் மனம்:

பல்வேறு வகையான புலனுறுப்புகள் அல்லது இந்திரியங்கள் உள்ளன. அவற்றில் செயல் உறுப்புகளான கைகள், கால்கள், வாய், கருவாய் மற்றும் எருவாய் ஆகியவைகள் கர்மேந்திரியங்கள் எனப்படுகின்றன. அறிவை கொடுக்கும் உறுப்புகளான கண், காது, தோல், நாக்கு மற்றும் மூக்கு போன்றவைகள் ஞானேந்திரயங்கள் எனப்படுகின்றன. இவைகள் அனைத்தும் நானாக இருந்தபோதிலும் இவைகளுள் நான் மனதில் சிறப்பாக வெளிப்படுவதால்இந்திரியங்களுள் நான் மனமாக இருக்கின்றேன்என்கிறார் பகவான். ஏனெனில் எல்லா புலன்களுக்கும் ஆதாரமானதாக மனம் உள்ளது. மனம் இல்லாது மற்ற புலன்கள் அதனுடைய செயலைச் செய்வதில் பயன் இல்லை. மனம் எங்கேயோ இருக்கும்போது காதால் கேட்டாலும் கண்ணால் பார்த்தாலும் ஒன்றும் பொருள்படுவதில்லை. இவ்விதம், ஞானேந்திரயங்களிலிருந்து தரவுகளைப் பெறும் உறுப்பாகவும், ஆசையின் இருப்பிடமாக இருந்து கர்மேந்திரியங்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கானக் கட்டளையை பிறப்பிக்கும் இடமாகவும் இருப்பதால் மனமும் கரணம்(கருவி) என்றே அழைக்கப்படும். எனவே கரணங்களில் மனம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மனதின் உதவி இல்லையெனில் மற்ற எந்த இந்திரியமும் உதவாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மனதின் சிறப்பு ஈஷ்வரனைச் சார்ந்தது.


=> உயிர்களில் உணர்வாக இருக்கிறேன்:

ஜீவ சரீரங்களுக்குள் நான் புத்தியாக இருக்கின்றேன்என்கிறார் பகவான். புத்தி என்பது அறிவாற்றலை, கிரஹிக்கும் உணர்வை, விசாரித்துப் புரிந்து கொள்ளும் திறனைக் குறிக்கின்றது. உயிரற்றதற்கும் உயிர் உற்றதற்கும் வித்தியாசம் இந்த உணர்வில் அல்லது அறிவில் இருக்கிறது. சேதனம் என்றழைக்கப்படுகிற இந்த அறிவு அதிகரிக்குமளவு உயிர் மேலானதாகிறது. இறுதியில் தூய அறிவே தெய்வமாகிறது. உண்மையில் புத்தி என்பது ஜடமான சூக்ஷம பூதம் ஆகும். ஆத்மாவின் பிரதிபிம்பத்தினால் அசேதனமான உடலில் முதலில் சேதனத் தன்மையை அடைந்த அந்த புத்தியாக நான் உள்ளேன், என்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------