திங்கள், 25 ஏப்ரல், 2022

ஸந்யாஸ யோகம் 5.20 - 5.21

||5.20|| யார் ப்ரம்ம நிஷ்டன்?

प्रहृष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम्

स्थिरबुद्धिरसममूढो ब्रह्मविद्ब्रह्मणि स्थित: ।। २० ।। 

ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்3விஜேத்ப்ராப்ய சாப்ரியம் ।।

ஸ்தி2ரபு3த்3தி4ரஸம்மூடோ4 ப்3ரஹ்மவித்3ப்3ரஹ்மணி ஸ்தி2: ।। 20 ।।


ब्रह्मवित्  ப்3ரஹ்மவித்  ப்ரம்மத்தை அறிந்தவன்   

ब्रह्मणि स्थित:  ப்3ரஹ்மணி ஸ்தி2:  ப்ரம்மத்தில் நிலைபெற்றவன்   

स्थिरबुद्धि: ஸ்தி2ரபு3த்3தி4:  உறுதியான அறிவுடையவன்  

असममूढ: அஸம்மூட4:  மனக்குழப்பம் அடையாதவன்  प्रियम् प्राप्य  ப்ரியம் ப்ராப்ய  பிரியமானதை அடைந்து   

प्रहृष्येत्   ப்ரஹ்ருஷ்யேத்   மகிழ்வடைவதில்லை   अप्रियम् प्राप्य   அப்ரியம் ப்ராப்ய   பிரியமற்றதை அடைந்து    उद्विजेत्   உத்3விஜேத்  துன்பமடைவதில்லை.


ப்ரம்மத்தை அறிந்தவன், ப்ரம்மத்தில் நிலைபெற்றவன், உறுதியான அறிவுடையவன், மனக்குழப்பம் அடையாதவன் பிரியமானதைப் பெற்று மகிழ்வதுமில்லை; பிரியமில்லாததைப் பெற்றுத் துன்பமடைவதுமில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.


விளக்கம்:

=> யாரை ப்ரம்ம நிஷ்டன் என்று அழைக்கமுடியும்?

எப்போது ஒருவனின் மனநிலையானது எந்த வெளிசூழலாலும் பாதிக்கப்படவில்லையோ, மாற்றத்தை அடையவில்லையோ அப்போது அவன் நிஷ்டன். எவனொருவன் தனது மனநிறைவுக்கு, பொருள், இனியொருவனின் சொல் மற்றும் சூழ்நிலை போன்ற எந்த நிபந்தனையும் அற்றவனாக இருக்கின்றானோ அவன் ப்ரம்ம நிஷ்டன். இந்த சுலோகத்தில் பகவான் இப்படிப்பட்டவனை விவரிக்கிறார்.

ஆத்மஞானத்தில் நிலைத்தவர்கள் விரும்பத்தக்க சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது உற்சாகமடைவதில்லைப்ரியம் ப்ராப்ய  ப்ரஹ்ருஷ்யேத். மேலும் விரும்பத்தகாத சூழ்நிலைகளால் வருத்தப்படுவதில்லை உத்3விஜேத். இங்கு உபயோகப்படுத்தப்படும் வினைச் சொல்லான, ‘ப்ரஹ்ருஷ்யேத்மற்றும்உத்3விஜேத்என்பவை பொதுவாக கட்டளைச் சொல்லாக வருபவைகளாகும். கீதையில் இதுபோன்ற வாக்கியங்கள் வரும்போதெல்லாம், சிறு மாற்றமொன்று செய்யப்பட வேண்டும். ஏனெனில் இங்கு ஞானிகளுக்கான நடத்தையை கட்டாயப்படுத்துவது அல்லது விதிகளை வகுக்க வேண்டும் என்பது கிருஷ்ணரின் எண்ணம் அல்ல. ஆகவே ப்ரஹ்ருஷ்யேத்’, ‘ உத்3விஜேத்என்பதை முறையே ப்ரஹ்ருஷ்யதி’, ‘ உத்3விஜதேஎன எடுத்துக் கொள்ளவேண்டும். இதுவே இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய பொருள்.

மனிதர்கள் பொதுவாக, தனக்கு விருப்பமான சூழ்நிலைகள் வரும் போது மிகவும் உற்சாகமடைந்து குளிர்ந்து போகின்றனர்; அதேசமயம், பிடித்தமற்ற நேரங்களின்போது மனக் கொந்தளிப்பை, துக்கத்தை அடைகின்றனர். ஆனால் ஞானியானவன் பிரியமானதைப் பெற்று மகிழ்வதுமில்லை; பிரியமில்லாததைப் பெற்றுத் துன்பமடைவதுமில்லை என்கிறார் கிருஷ்ணர். ஏனெனில் சுயம் முழுமையானது என்ற தன்னறிவில் உறுதியாயுள்ள ஸ்திர புத்தியுடையவர்களாக இந்த ஞானிகள் இருக்கிறார்கள்.

=> நிலையான ஞானத்தையுடையவர்கள்:

அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இருக்கின்ற எந்த குணங்களுமற்ற, மாறாத ஆத்மாவை எவனொருவன் உறுதியாக அறிகிறானோ அவன்ஸ்தி2ரபு3த்3தி4:என சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார்.

सर्वभूतेषु एक: सम: निर्दोष: अात्मा इति स्थिरा निर्विचिकित्सा बुद्धि: यस्य : स्थिरबुद्धि: ।।

ஸர்வபூதேஷு ஏக: ஸம: நிர்தோஷ: ஆத்மா இதி ஸ்திரா நிர்விசிகித்ஸா புத்தி: யஸ்ய : ஸ்திரபுத்தி: ।।

நன்கு வேரூன்றிய மரத்தை பிடுங்குவதைப் போல, அறிவை அசைத்தால் அது வேரோடு பிடுங்கிப்போய்விடும் என ஒருவன் நினைக்கலாம், ஆகையால் ஸ்திரம் என்பதன் பொருளை சங்கரர் தெளிவாக வரையறுக்கிறார். உண்மையில் நிலையான அறிவை அசைக்கமுடியாது. மேலும் அவர்நிர்விசிகித்ஸாஎன்ற ஒரு சொல்லை பயன்படுத்துகிறார். ‘விசிகித்ஸாஎனில் சந்தேகம்; ‘நிர்விசிகித்ஸாஎன்பது முற்றிலும் சந்தேகம் இல்லாததது எனப் பொருள்

எந்தவித சந்தேகமும் தெளிவின்மையும் இல்லாத உறுதியான அறிவே நிலையான அறிவாகிறது. இப்படிப்பட்ட அறிவு ஒருவனை மோஹமற்றவனாக ஆக்குகிறது. அவன் ஆத்மாவைப் பற்றிய எந்தவொரு மனக்குழப்பமும் அற்றவனாகிறான். தேஹத்தை தானென்று எண்ணுபவன் மனக் குழப்பமடைந்தவன்; நான் செயல் செய்பவன், கர்த்தா மற்றும் போக்தா என அவன் நினைக்கிறான். ஆனால் கர்த்ருத்வம், போக்த்ருத்வம், விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம் இவையாவும் உடல் கூற்றோடு சம்பந்தப்பட்டவைகள் என உணர்ந்து ப்ரம்ம திருஷ்டியிலேயே இருப்பவனுக்கு இத்தகைய சித்தவிருத்திகள் உண்டாவதில்லை. இப்படிப்பட்டவனை பகவான் இங்குஅஸம்மூட4:என்றழைக்கிறார்.


=> ஆத்மாவை தவிர வேறு ப்ரம்மன் இல்லை

இந்த அஸம்மூடன் ப்ரம்மத்தை அறிந்தவனாக, ‘ப்3ரஹ்மவித்’, இருக்கின்றான். ஆத்மாவை அறிந்த ஆத்மவித், ப்ரம்மத்தை அறிந்தவனாகவும் இருக்கின்றான் ஏனெனில் ஆத்மாவைத் தவிர வேறு ப்ரம்மம் எதுவுமில்லை. ஆத்மாவே ப்ரம்மம். இவ்விதம் ஆத்மாவையே ப்ரம்மமாக அறிந்தவனாகையால் அவன் ப்ரம்மத்திடம் நிலைத்திருக்கின்றான்ப்3ரஹ்மணி ஸ்தி2:

சுயமானது எப்போதுமே இருப்பதால், சுயத்தை மறப்பது என்ற கேள்வியே இல்லை. ஆகவே ப்ரம்மத்தை அறிந்தவன் ப்ரம்மமாகவே ஆவதால் அவன் ப்ரம்மத்திலேயே நிலைத்திருக்கின்றான்; மரணத்திற்குப் பின்னும் அவன் ப்ரம்மமாகவே இருக்கின்றான்ஸ்தி2ரபு3த்3தி4: அஸம்மூட4: ப்3ரஹ்மவித் ப்3ரஹ்மணி ஸ்தி2:.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

காமமும் காசு ஆசையும் மனதை விட்டகலும்போது ஆத்மாவினிடம் வேறு என்ன தங்கியிருக்கும்? பிரம்மானந்தமே ஆங்குக் குடி கொண்டிருக்கும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||5.21|| வைராக்கியத்தின் மஹிமை:

बाह्यस्पर्शेष्वसक्त्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम्

ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ।। २१ ।। 

பா3ஹ்யஸ்பர்சே1ஷ்வஸக்தாத்மா விந்த3த்யாத்மநி யத்ஸுக2ம்  

ப்3ரஹ்மயோக3யுக்தாத்மா ஸுக2மக்ஷயமச்1நுதே ।। 21 ।।


बाह्यस्पर्शेषु   பா3ஹ்யஸ்பர்சே1ஷு  வெளிவிஷயங்களில்   असक्त्त त्मा   அஸக்த ஆத்மா  மனப்பற்றில்லாதவன்  त्मनि  ஆத்மநி  ஆத்மாவில்  यत् सुखम्   யத் ஸுக2ம்  அந்த சுகத்தை   विन्दति   விந்த3தி  அடைகிறான்   

:  :  அவன்   ब्रह्मयोग युक्तात्मा   ப்3ரஹ்மயோக3 யுக்தாத்மா  ப்ரம்ம தர்ஷணத்தில் நிலைபெற்ற மனதையுடையவன் अक्षयम् सुखम्    அக்ஷயம் ஸுக2ம் அழியாத சுகத்தை  अश्नुते  அச்1நுதே  அடைகிறான்.


புறப்பொருட்களில் மனப்பற்றில்லாதவன் ஆத்மாவில் இன்பத்தை எய்துகிறான். ப்ரம்ம தர்ஷணத்தில் நிலைபெற்ற மனதையுடையவனாய் அழியாத சுகத்தை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.


விளக்கம்:

=> புறப்பொருட்களின் மீதான ஏக்கத்திலிருந்து விடுபட்டவன்:

பொதுவாக, ‘ஸ்பர்சஎன்ற சொல் தொடுதல் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படும்; தொடு உணர்வால் உணரப்படுவது ஸ்பர்சம். ஆனால் இங்கே ஒருவனின் புலன்களினால் தொடர்பு கொள்ளப்படும் எந்தவொரு பொருளும் ஸ்பர்சம் எனப்படுகிறது. சங்கரர் தனது பாஷ்யத்தில்பா3ஹ்யஸ்பர்சே1ஷுஎன்ற கூட்டுச் சொல்லிற்குபாஹ்யாச்1 தே ஸ்பர்சா1ச்1என்று விளக்கமளிக்கிறார். அதாவது வெளிப்புறத்திலுள்ளவைகள், பாஹ்யாஸ், மற்றும் புலன்களுடனான அவைகளின் தொடர்பு ஸ்பர்ஷாஸ்

ஒலி, வடிவம், தொடுதல், சுவை மற்றும் வாசனை உள்ளிட்ட புலன்களால் அறியப்படும் அனைத்து விஷயங்களும் பாஹ்ய-ஸ்பர்சாஸ். இவைகளுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளாத மனதையுடையவன் அஸக்த-ஆத்மா. இங்கு ஆத்மா என்பது மனதைக் குறிக்கிறது. புறப் பொருட்களினால் பந்தப்படாத பிணைக்கப்படாத, அஸக்த, மனதுடன் கூடியவன் ஆத்ம சுகத்தை அடைகிறான்ஆத்மநி ஸுக2ம் விந்த3தி. இந்த இடத்தில் ஆத்மா என்பது ஸத்-சித்-ஆனந்த-ஆத்மா

ஆனந்தம்(ஸுக2ம்) ஆத்மாவின் சுய சொரூபம், இயல்பு. முழுமை என்பது ஆத்மாவின் சொரூபமாக இருப்பதால் உண்மையில் சுகம் எனும் சொல், முழுமை என்ற பொருளைக் குறிக்கிறது. புலனுறுப்புக்கள் தொடர்பு கொள்ளும் வெளிப்புற பொருட்களால் ஆத்மா பாதிக்கப்படாது என்பதை அறிந்த ஞானிகளால், தன்னியல்பாகவே உள்ள இத்தகைய ஆனந்தம் பெறப்படுகிறது.

இங்கு பகவான் ஒரு ஞானியைப் பற்றிப் பேசுகிறார் என்பதை, அடுத்த வரியிலுள்ளப்3ரஹ்ம-யோக3 யுக்த-ஆத்மாஎன்ற கூட்டுச்சொல் உறுதிப்படுத்துகிறது. ஆத்மாவை ப்ரம்மாக அடையாளம் காண்பது ப்ரம்ம-யோக; அதில் நிலைபெற்றவன்,பொருந்தியவன் யுக்த; இந்த கூட்டுச் சொல்லிலுள்ளஆத்மாஎன்பது அந்தக்கரணமான மனதைக் குறிக்கிறது. ஆகவே ப்ரம்மத்தை பற்றிய அறிவில் பொருந்திய மனதையுடைய ஒருவன், தன்னிடத்திலேயே இருக்கும் ஆத்மசுகத்தை அடைகிறான். இத்தகைய சுகம், புலனின்பத்தை போல வந்து செல்பவைகள் அல்ல. இது தேயாதது. இந்த ஆனந்தம் ஒருவனின் சொரூபமாகவே இருப்பதால் இது எந்தவொரு சூழ்நிலையையும் சார்ந்திருப்பதில்லை, ஆகையால் அழியாத சுகத்தை அடைகிறான்அக்ஷயம் ஸுக2ம் அச்1நுதே.


=> சிற்றின்பம் மற்றும் பேரின்பம்:

புறத்தில் பொறிகள் மூலமாக வரும் போக சுகங்கள் நிலையற்றவைகள். அவைகள் சிற்றின்பம் எனப்படுகின்றன. அகத்தில் சுத்தியடைந்த அந்தக்கரணம் ஆத்மானந்தத்தை அனுபவிக்கிறது. அது தேயாது தெளிவடைகிறபடியால் அதற்குப் பேரின்பம் என்று பெயர். புலன்களின் வழியாக கிடைக்கும் சுகத்தை துறந்தவனுக்குத்தான் ஆத்மசுகம் கிடைக்கிறது. இயற்கையாக புறவிஷயங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மனதை யார் அந்தர்முகமாக்குகிறார்களோ அவர்களுக்கே ஆத்மசுகம்


=> புறவிஷயங்களையும் ஆத்மசுகத்தையும் சேர்ந்தே அடைய முடியாதா?

முடியாது. ஏனெனில் புறப் பொருட்களை அனுபவிக்க, அதற்குரிய கருவிகளான உடல், மனம் மற்றும் புத்தியில்நான்என்ற அபிமானம் தேவை. அடர்ந்து இருக்கும் இத்தகைய அபிமானம், அபிநிவேஷம் என்றழைக்கப்படும். ஆகவே அனாத்மாவில் அபிநிவேஷம் கொண்டவனுக்கு, அனாத்மாவை நீக்கிநான் ஆத்மாஎன்ற அறிவினால் கிடைக்கும் மனநிறைவு எப்படி சாத்தியமாகும்! வெறும் கற்றலினால் மட்டும் ஆத்மசுகம் கிடைப்பதில்லை. அதைச் சிந்தித்து, தியானித்து, அனாத்மாவிலிருந்து அபிமானத்தை எடுக்கும் காரியத்தை செய்தவனுக்கே மேலான ஆத்மசுகம் சாத்தியப்படுகிறது


=> வைராக்கியம்

புலன்களால் போகமாகப் பார்க்கப்படும் வெளியேயுள்ள தொட்டு அனுபவிக்கக்கூடிய விஷயங்களில், பொருட்களில் பற்றில்லாத மனதையுடையவனை பகவான் இங்கு வர்ணிக்கிறார். வைராக்கியமுடையவனுக்கே இப்படிப்பட்ட மனநிலை வந்தமைகிறது. விவேக பலம் இந்த வைராக்கியத்தை ஒருவனுக்கு அளிக்கிறது. ப்ரம்ம தர்ஷணத்துடன் சமநிலையில் உறுதியடைந்த இவன் தன்னிடத்திலுள்ள சுகத்தை மனநிறைவை அடைகிறான்.

நம்மிடத்தில் சுகத்தை காண்பது கடினம்தான். ஆனால் வெளியில் சுகத்தை அடைவதென்பது இயலாத ஒன்று. அறியாமையின் பிடியில் சிக்கி, அடைய இயலாத ஒன்றை அடைய முனைவதாலேயே அனைத்து சம்சாரமும்; நிறைவின்மையும். ஆகவே கடினத்துடன், அடையப்படக்கூடிய இன்பத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வெளியில் இருப்பதுசுக ஆபாசம்’; சுகத்தைபோலத் தெரிவது. சமஸ்கிருதத்தில்ஆபாசம்எனில் தோற்றம்; பிரதிபிம்பம்; ஒன்றைப் போல பொய்யாக தெரிவது என்பது பொருள். ‘ஆத்மா ஆனந்த சொரூபம்எனத் தன்னையே சுகசொரூபமாக அறிவதால், மனதில் வரும் நிறைவு இங்கு சுகம் எனக் குறிக்கப்படுகிறது.


=> முமுக்ஷு அல்லது ஜிக்ஞாசுவின் நிலை:

முதலில்உள்சுகம் கிடைக்கட்டும்; பிறகு வெளிவிஷயத்தை விடுகிறேன்என மனம் நினைக்கும். ஆனால், முதலில் வெளிவிஷயத்தை விட்டால் உள்சுகம் தருவதாக பகவான் கூறுகிறார்

வெளிவிஷயத்தை விட்டு, பின் ஆத்மசுகத்தை அடைய சிறிது காலமாகும். இந்த இடைப்பட்ட நிலையே அவன் ஜிக்ஞாசுவாக, முமுக்ஷுவாக இருக்கும் நிலை. மாணவனாகவும் சாதகனாகவும் தன்னறிவை அடைய முயன்று கொண்டிருக்கும் இந்த நிலை, கொஞ்சம் துயரமானதாகத்தான் இருக்கும். ஏனெனில் பழைய வாசனைகள் ஒருவனை வெளிவிஷயத்திற்கு இழுக்கும். உள்சுகத்தை அனுபவிக்காதபோதிலும் சாஸ்திர, குரு வாக்கியத்தின் மீதுள்ள சிரத்தை மற்றும் போகத்தின் மீதுள்ள வைராக்கியத்தின் காரணமாக அதில் வீழ்ந்துவிடாமல் மனக் கட்டுப்பாட்டை பயிலும் அந்த காலம் துயரமாக இருக்கும். எல்லோருமே அந்த நிலையைத் தாண்டித்தான் வந்தாக வேண்டும். சிறிய காலம்தான்; ஆகவே அதை ஒருவனால் கடக்க முடியும். அவ்விதம் கடந்து வந்தவனே ப்ரம்ம தர்ஷணத்தில் நிலைபெறும் தகுதியை அடைகிறான். எல்லாமே ப்ரம்மனாகத் தெரியும்(ப்ரம்ம மாத்ர தர்ஷணம்) ப்ரம்ம யோகத்தில் பொருந்தியவனாகிறான். பூர்ணமான அழியாத சுகத்தை அடைகிறான்.


=> இனியொரு கோணத்தில் இதன் பொருள்விளக்கம்:

பூஜ்யஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் வீடுதோறும் கீதோபதேசத்தில், சுவாமிஜி இந்த சுலோகத்திற்கான பொருள்விளக்கத்தை இனியொரு கோணத்தில் பகுப்பாய்வு செய்கிறார். அதில் அவர் இரண்டு வரிகளையும் தனித்தனியாக எடுத்து முறையே இருவேறு நபர்களைச் சுட்டுவதாக விளக்குகிறார். முதல் வரியானது, மனதின் கற்பனைகளுக்கு இடம்கொடுக்காத, பிரார்த்தனை பாவனையின் மூலம் ராகத்வேஷத்தின் பிடியை தளர்த்திய, தூய்மையான மற்றும் முதிர்ச்சியடைந்த மனதையுடைய கர்மயோகி அல்லது சந்யாசியைக் குறிக்கிறது. இத்தகையவர் தனது மகிழ்ச்சிக்காக புறப்பொருட்களைச் சார்ந்திராததால் ஒரு குறிப்பிட்டவளவு மனமகிழ்ச்சியை அடைகிறார்கள். இது கண்டிப்பாக, விரும்பத்தக்கவைகளின் இருப்பையும் விரும்பத்தகாதவைகளின் இல்லாமையையும் சார்ந்திருக்கும் மனிதர்கள் அடையும் சிற்றின்பத்தைவிட மேலானது

இரண்டாவது வரி, ப்ரம்ம ஞானத்தில் பொருந்திய, ப்3ரஹ்ம-யோக3 யுக்த-ஆத்மா, ஞானியை விளக்குகிறது. விருப்பு-வெறுப்பின் பிடியிலிருந்து விலகுவதன்மூலம் கண்டிப்பாக சுகத்தை அடையமுடியும். ஆனால் அவரே ப்ரம்மனுடன் ஒன்றி, மனதை ப்ரம்மத்தைப் பற்றிய ஞானத்திற்கு இருப்பிடமாக்கும்போது, ​​தேயாத அழியாத ஆத்மசுகத்தை பெறுகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சிலர் ஏற்கனவே விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அறிந்து கொள்வதற்கு அவர்களிடம் சில அடையாளங்கள் இருக்கக் காண்போம். சக்ரவாகம் என்னும் பக்ஷி எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும். ஏழு சமுத்திரங்களிலும் தண்ணீர் இருக்கின்றது. கங்கை, யமுனை முதலிய அநேக ஆறுகளிலும் தண்ணீர் நிறைந்துள்ளது. என்றாலும் அப்பறவை மழை நீரையன்றி இவை யொன்றினின்றும் தண்ணீர் அருந்தாது. எவ்வளவுதான் தாகத்தால் தொண்டை வறண்டு போயினும் மழைநீரைத் தவிர்த்து வேறு எந்த நீரையுமே அது அருந்தவே அருந்தாது. அதுபோல இவர்களும் கடவுளைப் பற்றியும் கடவுள் சம்பந்தப்பட்டவைகளைப் பற்றியுமன்றி வேறு எந்த விஷயங்களைப் பற்றியும் கேட்கவும் பேசவும் மாட்டார்கள்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------