வியாழன், 24 மார்ச், 2022

ஸந்யாஸ யோகம் 5.14 - 5.15

||5.14|| ‘நைவ குர்வந் காரயந்இங்கு விளக்கப்படுகிறது:

कर्तृत्वं कर्माणि लोकस्य सृजति प्रभु:

कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते ।। १४ ।। 

கர்த்ருத்வம் கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு4:

கர்மப2லஸம்யோக3ம் ஸ்வபா4வஸ்து ப்ரவர்ததே ।। 14 ।।


प्रभु:  ப்ரபு4:  பரமாத்மா  लोकस्य   லோகஸ்ய  உலகத்துக்கு   

कर्तृत्वं   கர்த்ருத்வம்  கர்த்ருத்வத்தை/செயலை செய்பவன் எனும் பாவனையை  உண்டு பண்ணுவதில்லை  कर्माणि   கர்மாணி   கர்மங்களை  உண்டு பண்ணுவதில்லை  

कर्मफलसंयोगम्   கர்மப2லஸம்யோக3ம்  கர்மபலனோடு சேர்த்துவைத்தலையும்   

सृजति   ஸ்ருஜதி   உற்பத்தி செய்யவில்லை   स्वभाव: तु   ஸ்வபா4: து  ஸ்வபாவம்/ இயற்கை / மாயை தான்   प्रवर्तते   ப்ரவர்ததே  பிரவிருத்திக்கின்றது.


வினைத்தலைமை, வினை, வினைப்பயனைப் பெறுதல் போன்றவைகளை இறைவன் உலகுக்கு உண்டு பண்ணவில்லை. இயற்கையே இங்ஙனம் செய்கிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.


விளக்கம்:

கர்த்ருத்வம்என்பது நான் செயல் செய்பவன் எனும் பாவனையைக் குறிக்கிறது. அதாவது வினைத்தலைமை அல்லது செயலுக்கெல்லாம் தானே தலைவனெனும் உணர்வைக் குறிக்கின்றது. ஸ்வபாவம் என்பது இயற்கையை, பிரகிருதியை அல்லது மாயையை குறிக்கின்றது. பிரகிருதியின் செயல் ஆத்மாவின் செயல்போன்று தென்படுவது அக்ஞானத்தால். ஆகையால் அக்ஞானத்தில் இருக்கும் ஜீவாத்மா தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிறான். கர்மத்தைத் தன்னுடையது என்று எண்ணுகிறவனுக்குக் கர்மபலனைச் சார்தலும் உண்டாகிறது. இவையாவும் உண்மையில் மாயையின் செயல்களேயொழிய ஆத்மாவின் செயல்களல்ல. ஆத்மா எதையும் செய்பவனோ(கர்த்தா), செய்யத் தூண்டுபவனோ(காரயிதா) அல்ல. ஆத்மா ஒன்றை அனுபவிப்பவனோ(போக்தா), அனுபவிக்க வைப்பவனோ(போஜயிதா) அல்ல. ஆத்மா எதையும் அடைவதில்லை, அடையவைப்பதுமில்லை. அது அகர்ம சொரூபம்.

ஞானி மற்றும் அக்ஞானி இருவரிடமும் ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை; செய்விப்பதில்லை. ஞானி இந்த ஆத்மாவை தானென உணர்ந்துவிட்டதால் அவன் தன்னை அகர்ம சொரூபமாக பார்க்கின்றான். ஆனால் அக்ஞானிக்கோ இது தெரியாததால் உடல், மனம், புலன்கள் மற்றும் புத்தியினுடையதான கர்த்தா மற்றும் காரயிதா எனும் தன்மையை தானென நினைத்து செயல் செய்து கொண்டும், மற்றவர்களை செய்ய தூண்டிக்கொண்டும் இருக்கின்றான்


=> தலைவன்

இந்த சுலோகத்தில், ஒரு ஞானி உடலில் மகிழ்ச்சியாக இருப்பது எங்ஙனம் என்ற விளக்கத்தை அளிக்கிறார் பகவான். பொதுவாகப்ரபு4:என்பது தலைவனைக் குறிக்கிறது. சுயமான இருப்பையுடைய ஆத்மா இங்குப்ரபு4:என அழைக்கப்படுகிறது. பிரக்ஞையில்லாமல் சுய-இருப்பை நிறுவுதல் சாத்தியமில்லையாதலால், அது சுயமாக வெளிப்படுவதாகவும் இருத்தல் வேண்டும். எதையும் சாராமல் சுயமாக விளங்கி, தானாக ஒளிரும் ஆத்மா இங்குப்ரபு4:என்றழைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட பிரபு, மனிதனுக்கு கர்த்ருத்வத்தை, வினைத்தலைமையை உருவாக்கவில்லை, லோகஸ்ய கர்த்ருத்வம் ஸ்ருஜதி. மேலும் அது யாருக்கும் வினையாற்ற உத்தரவு பிறப்பிப்பதும், மற்றவரிடம் கர்த்ருத்வத்தை தோற்றுவிப்பதும் இல்லை என்கிறார் பகவான்

ஆத்மாவின் இந்த தன்மையை அறிந்தவனை பகவான் சென்ற சுலோகத்தில், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்வசீஎன்றும் ஒன்பது கதவுகளையுடைய உடல் எனும் நகரத்தில் ஒரு ராஜாவைப் போல வீற்றிருக்கிறான் என்றும் கூறினார். சற்று விசாரித்துப் பார்த்தால் இந்த ஒப்பீட்டில் ஒரு குறைபாடிருப்பதை அறிய முடியும். அரச கட்டமைப்பில் எல்லா வேலைகளும் மற்றவர்களால் செய்யப்பட்ட போதிலும், அனைத்தையும் செய்பவராக அல்லது செய்யத் தூண்டுபவராக அந்த ராஜாவே இருக்கிறார். ராஜகிரீடத்துடன் அரச சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோலை கையாளுகிறார். எனில், ஆத்மாவும் இப்படிப்பட்ட கர்த்தாவா? உள்ளே அமர்ந்து கொண்டு மனம் மற்றும் புத்திக்கு கட்டளையிட்டு அவைகளை செயலில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதா? என்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலாக கிருஷ்ணர், ஆத்மா வினைத்தலைமையை உருவாக்கவோ அல்லது மற்றவர்களிடம் ஏற்படுத்தவோ இல்லை என கூறி தெளிவுபடுத்துகிறார்.

இப்போது இனியொரு சந்தேகம் எழலாம். ஆத்மா செய்பவன் அல்ல என்பதை புரிந்து கொண்டாலும், மனதையும் புலன்களையும் செயல்பட வைப்பது ஆத்மா அல்லவா? சுருதியும் கூட ஆத்மாவை, காதுகளின் காது, ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், மனதினுடைய மனம், மநஸோ மந:, கண்ணின் கண், சக்ஷுச சக்ஷு:, என விவரிக்கிறது. அனைத்து செயல்பாடுகளுக்கும் பின்னால் ஆத்மா இருப்பதாகச் சொல்லப்படுவதால், ஆத்மாவின் கட்டளைப்படி இவைகள் வினையாற்றுவதில்லையா? இல்லை! அது அவ்வாறு இல்லை, என இங்கே கிருஷ்ணபகவான் கூறுகிறார்.


=> கர்மங்களை ஆத்மா உருவாக்குவதில்லை:

ஆத்மா எந்த செயலையும் உருவாக்குவதில்லைகர்மாணி ஸ்ருஜதி, அதாவது ஆத்மா எந்த செயலையும் செய்வதில்லை என்பது இதன் பொருள்கர்மாணி கரோதி. ஆகவே, ஸ்ருஜதி, ‘உருவாக்குவதில்லைஎன்பது கரோதி, ‘செய்வதில்லைஎன புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆத்மா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படாது.

கர்மாணிஎனும் வார்த்தையை அதன் இலக்கண அர்த்தத்தில் மொழிபெயர்த்தால், ‘கர்மாணி ஸ்ருஜதிஎன்பது ஆத்மா பொருட்களை உருவாக்குவதில்லை என்று அர்த்தமளிப்பதாகிறது. இலக்கணத்தில்கர்மஎன்பது ஒரு வினைச்சொல்லோடு சேர்ந்து வரும் பொருளைக் குறிக்கிறது. உதாரணமாக, அவர் பானையைச் செய்கிறார், மனைவி உணவை சமைக்கிறார் என்பதில் பானை, உணவு போன்றவை பொருள். இதுபோன்ற பொருட்களை ஆத்மா உருவாக்குவதில்லை. ஆகவேகர்மாணி ஸ்ருஜதி என்பதை, ஆத்மா செயல்களைச் செய்வதில்லை எனவும் பொருட்களை உருவாக்கவில்லை எனவும் புரிந்து கொள்ளலாம்.

ஆத்மா பிரக்ஞை சொரூபமானது, ஆகவே அது எந்தச் செயலையும் செய்யாது. அதே சமயத்தில், ஆத்மா இல்லாமல் எந்த செயலும் சாத்தியமில்லை. இவ்வாறு, ஆத்மா இல்லாமல் பார்ப்பவன் இல்லை, ஆனால் ஆத்மா பார்ப்பவன் அல்ல; ஆத்மா இல்லாமல் கேட்பவன் இல்லை, ஆனால் ஆத்மா கேட்பவன் அல்ல. அறிவின் அடிப்படையில் இதை அறிவதுதான் மனதளவில் துறத்தல், மநஸா ஸந்ந்யஸ்ய. இவ்விதத்தில் ஆத்மா எப்போதும் செயல் செய்வதில்லை என்ற உண்மையை அறிந்து ஒருவன் எல்லா செயல்களிலிருந்தும் விடுபட்டவன் ஆகின்றான்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||5.15|| இங்கு ஈஷ்வரனை பாரமார்த்திக திருஷ்டியில் பேசுகிறார்:

नादत्ते कस्यचित्पापं चैव सुकृतं विभु:

अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तव: ।। १५ ।।

நாத3த்தே கஸ்யசித்பாபம் சைவ ஸுக்ருதம் விபு4:

அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ: ।। 15 ।।


विभु:  விபு4:  எங்கும் நிறைந்துள்ளவர்(ஈஷ்வரன்)   कस्यचित्   கஸ்யசித்  ஒருவனுடைய   

पापम्   பாபம்   பாபத்தை   दत्ते   ஆத3த்தே  வாங்கிக் கொள்வதில்லை   

सुकृतं एव   ஸுக்ருதம் ஏவ  புண்ணியத்தையும் வாங்கிக் கொள்வதில்லை  

अज्ञानेन  அஜ்ஞாநேந  அக்ஞானத்தினால்   ज्ञानं   ஜ்ஞாநம்  ஞானமானது   

वृतं   ஆவ்ருதம்   மூடப்பட்டிருக்கிறது  तेन   தேந  அதனால்   जन्तव:   ஜந்தவ:  ஜந்துக்கள்  

मुह्यन्ति   முஹ்யந்தி   மோஹமடைகின்றன.


யாருடைய பாப புண்ணியத்தையும் ஈஷ்வரன் வாங்கிக் கொள்வதில்லை. ஞானம் அக்ஞானத்தினால் மூடப்பட்டிருக்கிறது. ஆதலால் உயிர்கள் மோஹமடைகின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.


விளக்கம்:

=> ஈஷ்வர தத்துவம்:

சாஸ்திரம் ஈஷ்வரனை அனைத்திற்கும் காரணமானவர் என்றும் கர்ம பலனைக் கொடுப்பவர்(கர்ம 2 தா3தா) என்றும் பாபங்களை நீக்குபவர் என்றும் சொல்கிறது. ஒரு நிலையிலிருந்து பார்க்கும்போது இவைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் இந்த சுலோகத்தில் ஈஷ்வரனை பாரமார்த்திக திருஷ்டியில் வைத்து பகவான் பேசுகிறார்.

ஈஷ்வரன் = ப்ரம்ம தத்துவம் + மாயை

ப்ரம்மத்தின் லக்ஷணம் சத்யம், ஞானம் மற்றும் அனந்தம். எனவே நித்தியமாக, அறிவு சொரூபமாக, பூரணமாகவுள்ள ஒரு தத்துவத்திடம் மாயை என்ற தத்துவமானது சேரும்போது ஈஷ்வரன் எனும் தத்துவம் தோன்றுகிறது. தங்க வளையல் என்பதில், வளையல் எனும்போது அதனுடைய வடிவத்திற்கும், தங்கம் எனும்போது அதனுடைய உபாதான காரணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுபோல

இப்போது ஈஷ்வரனை இரு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் இரு கோணத்தில் பார்க்கலாம்.

(1) ஈஷ்வரனிடமுள்ள மாயையைப் பிரதானமாக வைத்துப் பார்க்கும்போது அவர் மேற்கூரிய தன்மையை உடையவர்இவ்வுலகிற்கு காரணமானவர்; கர்ம பலனைக் கொடுப்பவர்.

(2) மாயையை மித்யா என உணர்ந்து, மாயையை நீக்கி ப்ரம்ம சொரூபமாக பார்க்கும்போது, ஈஷ்வரன் எதற்கும் காரணமானவர் அல்ல. ஆகவே பாரமார்த்திக திருஷ்டியில் பார்க்கும்போது ஈஷ்வரன் யாருடைய பாப புண்ணியத்தையும் வாங்கிக் கொள்வதில்லை; கர்ம பலனை கொடுப்பவருமில்லை. சென்ற சுலோகத்தில் ஜீவனின் பாரமார்த்திக திருஷ்டி பேசப்பட்டதுவினைத்தலைமை, வினை, வினைப்பயனைப் பெறுதல் போன்றவை ஆத்மாவிடம் இல்லை; இந்த சுலோகத்தில் ஈஷ்வரனின் பாரமார்த்திக திருஷ்டி பேசப்படுகிறது.

மாயையே அனைத்தையும் செய்கிறது எனில் அனைத்தும் மித்யா. உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்பது பொருள். உலகம் மித்யா; தோற்றம். எனில் உலகத்திடமுள்ள அதே மித்யாத்வம் ஈஷ்வரனிடமும் செல்கிறது. உலகம் மித்யா எனில், ஈஷ்வரனிடமுள்ளஈஷ்வரத்வம்-காரணமானவர்; தலைவன்என்ற நிலையும் மித்யா தான்; பொய் தான். இருப்பது ப்ரம்மம் மட்டுமே. ஆகவே எங்கும் நிறைந்துள்ள ப்ரம்ம, யாருடைய பாப புண்ணியத்தையும் வாங்கிக் கொள்வதில்லை ஆத3த்தே


=> ஆத்ம அக்ஞானம்:

ஸ்படிகத்துக்கு பக்கத்திலுள்ள மலரின் நிறத்தை, ஸ்படிகம் ஏற்பது போன்று தென்படுகிறது. உண்மையில் நிறம் ஒன்றையும் அது ஏற்றுக் கொள்வதில்லை. அங்ஙனம் ஆத்மாவானது பிரகிருதியின் இயல்பை ஏற்றுக் கொண்டது போன்று காட்சி கொடுக்கிறது. அத்தகைய அக்ஞானத்தினால் ஜீவர்கள் ஏமாற்றமடைகின்றனர். சர்வேஷ்வரன் ஆனந்த சொரூபி; பரிபூரணன். காரண காரியத்தில் அவன் சம்பந்தப்பட்டவன் என்பது அவனது சொரூபத்துக்குச் சிறிதேனும் பொருந்தாது. அவனுடைய இருப்பில் பிரகிருதிக்குச் சர்வ சக்தியும் வந்தமைகிறது. பிரகிருதியோடு இணைத்துக்கொள்கையில் ஜீவன் பந்தத்துக்கு ஆளாகிறான். பிரகிருதியினின்று தன்னை விலக்கிக்கொள்கையில் அவன் விடுதலையடைகிறான். முழு வேதாந்த சாரமும் இக்கோட்பாட்டில் அடங்கியிருக்கிறது.

ஆத்மா என்றும் அடையப்பட்டதாக, நித்தியமாக உள்ளது. ஆனால் அதை நாம் உணராததற்கு காரணம் அறியாமை; தத்துவத்தை புரிந்துகொள்ளும் சக்தி மறைக்கப்பட்டுள்ளதுஅஜ்ஞாநேந ஜ்ஞாநம் ஆவ்ருதம். உண்மையில் தத்துவம் விலகியில்லை. ஆத்மாவை ஒருபோதும் மறைக்க முடியாது. ஆத்மாவைப் பார்க்கும் திறனை அறியாமை மறைக்கிறது அவ்வளவே.

மோஹம் என்பது குழப்பத்தை, மயக்கத்தைக் குறிக்கிறது. ஜீவர்கள், ‘நான் செய்கின்றேன்_கரோமி’, ‘நான் செய்விக்கின்றேன்_காரயாமிஎன்ற பாவனையினால் மோஹத்தில் உள்ளார்கள். இந்த மோஹத்திற்கு காரணம் அறியாமை(அஜ்ஞாநேந). ஆகவே அக்ஞானம் என்பது காரணம், மோஹம் காரியம்(விளைவு). உதாரணமாக மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தெரியும் பாம்பை எடுத்துக்கொண்டால், கயிற்றைப் பார்க்காமலிருப்பது அக்ஞானம்; பாம்பு தெரிவது மோஹம். இரண்டற்ற அத்வைத தத்துவம் தெரியாத காரணத்தினால், அதன்மீது மோஹத்தினால் உலகம் ஏற்றி வைக்கப்பட்டு ஜீவர்கள் சம்சாரத்தை, நிறைவின்மையை அனுபவிக்கிறார்கள். ஆகவே மோஹத்தை நீக்க அதற்கு காரணமாக விளங்கும் அக்ஞானத்தை நீக்குதல் வேண்டும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வெளிச்சத்தை தருவது தீபத்தின் சுபாவம். அதன் உதவியால் சிலர் சமையல் செய்கின்றனர்; சிலர் பொய்ப்பத்திரம் தயார்ப்படுத்துகின்றனர்; வேறு சிலர் பாகவத படனம் பண்ணுகின்றனர். அதுபோல ஈஷ்வரனுடைய நாமத்தின் உதவியால் சிலர் மோக்ஷமடையப் பார்க்கின்றனர். வேறு சிலர் தங்களின் தீய எண்ணங்களைச் சாதித்துக் கொள்ள முயலுகின்றனர். என்றாலும் பகவந்நாமம் ஒருபோதும் அசுத்தமடையாமல் எப்போதும் தூயதாகவே இருக்கிறது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------