செவ்வாய், 2 செப்டம்பர், 2025

புருஷோத்தம யோகம் 15.16 - 15.17

||15.16|| ஜீவ-ஈஷ்வர-ப்ரம்மம் விளக்கம்:

द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च।

क्षर: सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ।। १६ ।।

த்3வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரச்1சாக்ஷர ஏவ
க்ஷர: ஸர்வாணி பூ4தாநி கூடஸ்தோ2ऽக்ஷர உச்யதே ।। 16 ।।

क्षर:   க்ஷர: க்ஷர என்றும்     अक्षर   அக்ஷர:   அக்ஷர என்றும்    

इमौ द्वौ एव  இமௌ த்3வெள ஏவ  இந்த இரண்டே      पुरुषौ  புருஷௌ புருஷர்கள்(தத்துவங்கள்)     लोके  லோகே  உலகில் (உண்டு)     सर्वाणि भूतानि  ஸர்வாணி பூ4தாநி  அனைத்து படைப்பும்     

क्षर:  க்ஷர:  க்ஷர      कूटस्थ:  கூடஸ்த2:  கூடஸ்த புருஷன்      अक्षर:  அக்ஷர:  அக்ஷர என்று         उच्यते  உச்யதே  சொல்லப்படுகிறது.


க்ஷர என்றும் அக்ஷர என்றும் உலகில் இரண்டே புருஷர்கள்(தத்துவங்கள்) இருக்கிறார்கள். வடிவெடுத்தவர்கள் எல்லோரும் க்ஷர. கூடஸ்தனோ அக்ஷர எனப்படுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.


விளக்கம்:

சுலோகம் பதினாறு முதல் பதினெட்டு வரை நிர்குண ப்ரம்ம தத்துவம் விசாரிக்கப்படுகிறது. இந்த சுலோகங்கள் உபநிஷத்தின் சாரமாக அமைகிறது. இங்கு பகவான் அனைத்தையும், மூன்றுவித புருஷன் என்ற வகையில் மூன்று தத்துவங்களாகப் பிரிக்கிறார் - (1) க்ஷர புருஷன், (2) அக்ஷர புருஷன் மற்றும் (3) உத்தம புருஷன். இந்த குறிப்பிட்ட சுலோகத்தில் பகவான், அழிவிற்குட்பட்ட க்ஷர-புருஷ தத்துவத்தையும், மற்றும் அழியாத தன்மையையுடைய அக்ஷர-புருஷ தத்துவத்தையும் அறிமுகப்படுத்துகிறார். அடுத்த சுலோகத்தில் இவையிரண்டிற்கும் மேலானவனாக, இவைகளுக்கு ஆதாரமாக விளங்குபவனாக உத்தம-புருஷனை விளக்கயிருக்கிறார்

இங்கு அக்ஷர-புருஷன் என்பது வெளித்தோற்றத்திற்கு வராததான மாயையைக் குறிக்கிறது. அதிலிருந்து வெளிவந்த இந்த முழு உலகமும் க்ஷர-புருஷன் எனப்படுகிறது. இதன்மூலமாக அனைத்தும் புருஷ தத்துவமே, அதிலிருந்து வேறானது எதுவுமில்லை எனக் காட்டப்படுகிறது. எனில் உண்மையான புருஷன் யார்? சான்றோர்களாலும் ஞானிகளாலும் புருஷோத்தமன்(உத்தம-புருஷன்) என்று அறியப்படுகிற பரமாத்மாவே எல்லாவற்றின் ஆதாரமாக விளங்குகிறார். க்ஷர மற்றும் அக்ஷரத்தின் குணங்கள் எதுவுமற்று நிர்குணமாக இருக்கிறார். தொடர்ந்து அழிவுக்கு உள்ளாகும் இந்த க்ஷர-தத்துவமானது முடிவில், வெளித்தோற்றத்திற்கு வராத அக்ஷர-தத்துவத்தில் ஒடுங்குகிறது. பின்னர் இந்த அக்ஷர-தத்துவம் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டு, மீண்டும் க்ஷர-தத்துவமாக வெளித்தோற்றத்திற்கு வருகிறது. இந்த சுழற்சி தொடர்கிறது. இதில் தொடர்ந்து மாற்றத்திற்குட்பட்டு அழிகிற தத்துவம்க்ஷரம்என்றும், அவைகள் சென்று ஒடுங்குமிடமாக உள்ள மாயா தத்துவம்அக்ஷரம்என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரு தத்துவத்தையும் நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஆத்மாவானது, தன் மீது ஏற்றிவைக்கப்பட்டதான இவ்விரண்டின் பண்புகளுக்கும் உட்படாது அவைகளுக்கு ஆதாரமாக விளங்குவதால் அது உத்தம-புருஷன் எனப்படுகிறது.

நிலவுலகம் இருக்கும் வரையில் அதில் நீர் உண்டு. அது ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர், மழை நீர், மேகம் என்று வெவ்வேறு வடிவமும் பெயரும் எடுக்கிறது. இந்த வடிவங்களெல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மையுடையவைகள். நீரோ அக்ஷரம் அல்லது பிரளயம் வரும் வரையில் நிலைத்திருப்பது. அதுபோல ஜகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் அழியும் தன்மை கொண்டவைகள்(க்ஷரம்). ஈஷ்வரன் என்ற புருஷனுக்கு உபாதியாகையால் இவைகளும் புருஷன் எனப்படுகின்றன. பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயா சக்தியோ அக்ஷர புருஷன் அல்லது என்றைக்கும் நிலைத்திருப்பது ஆகிறது. பிரம்மஞானம் அடைந்தவனுக்கு மட்டும் அது வியவகாரமயமான தோற்றத்தில் இல்லை. மற்றபடி அது ஈஷ்வரனை சாசுவதமாகச் சார்ந்துள்ளது.


=> க்ஷர-புருஷன்:

க்ஷர-புருஷனை பகவான், அனைத்துப் படைப்பும்ஸர்வாணி பூ4தாநி க்ஷர:, என்கிறார். சிருஷ்டியில் உள்ள அனைத்து மாறுபாடுகளும் க்ஷரம் என்பதாக சங்கரர் வரையறுக்கிறார். சூக்ஷம மற்றும் ஸ்தூல கூறுகளின் கலவையாக இந்த உடல்-மனம்-புலன்கள் பிறக்கிறது. அதாவது, சூக்ஷம உடலுக்கு காரணமாகவுள்ள நுண்ணிய கூறுகள்(சூக்ஷம-பூதாநி), மனம்(அந்த-கரண), புலன்கள்(ஞானேந்திரிய), உடலியல் செயல்பாடுகள்(ப்ராந), செயலுறுப்புகள்(கர்மேந்திரிய) மற்றும் பரு உடலுக்கு காரணமாகவுள்ள பருப்பொருள் கூறுகள்(ஸ்தூல-பூதாநி) அனைத்தும் இதில் அடங்கும். உடல் மட்டுமல்லாது தோன்றிக் கொண்டிருக்கின்ற அனைத்தும் இந்த மாறுபாடுகள் மட்டுமே

எனவே வெளித்தோற்றத்திற்கு வந்தவைகள் அனைத்தும் க்ஷர தத்துவம், மாறக்கூடியவைகள் அழியக்கூடியவைகள் ஆகும். அதாவது இது காரிய-தத்துவத்தைக் குறிக்கிறது. தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு அதன் சொந்த காரண-தத்துவத்தில் கரைந்து போகிறது. பொதுவாக, இந்த ஜகத்தைஜடம்என்பதாகவே கையாளுகிறோம். ஆனால் இங்கே இந்த க்ஷர-தத்துவத்தை ஆத்மாவாகிய புருஷ-வஸ்துவிலிருந்து சுதந்திரமானதாகவோ, சுயாதீனமாக விளங்கும் ஒரு தத்துவமாகவோ பிரித்துக்காட்டுவதில்லை. அனைத்திற்கும் அதிஷ்டானமாக விளங்கும் ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்மத்திற்கு பிரிதாக எதுவுமில்லை. ஆகவேதான்க்ஷரஎனும் சொல்லுடன்புருஷஎனும் சொல் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள க்ஷர-உபாதியானது, மீண்டும் வெளித்தோற்றத்திற்கு வர காரணமாக இருக்கின்ற அக்ஷர-உபாதியில் ஒடுக்கத்தை அடைகிறது. எனவே, க்ஷர-தத்துவம் என்பது ஒடுக்கத்தை அடைவது, இனியொன்றான அக்ஷர-தத்துவம் ஒடுக்கத்திற்கான ஆதாரமாக விளங்குவது ஆகும்.


=> அக்ஷர-புருஷன்:

அக்ஷர-புருஷனுக்கு பகவான்கூடஸ்த2’, மாறாதது எனும் அடைமொழியைக் கொடுக்கிறார். அழியாதது எனும் அர்த்தத்தைக் கொண்டகூடஸ்த2எனும் சொல்லானது, பொதுவாக ஆத்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் இங்கு அது மாயையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது காரியம், அல்லது விளைவு அழிகிறது; அதே நேரத்தில் காரணம் அழிவதில்லை. உதாரணமாக, காரியமாகவுள்ள பானை அழிந்தும், அதற்கு மூலகாரணமாகவுள்ள களிமண் எப்படி அழிவதில்லையோ அப்படி காரியமாக வெளிப்பட்டுள்ள இந்த உலகம் மாற்றத்திற்குட்பட்டு அழியும்போதும் அதன் காரணமாக இருக்கின்ற மாயை அழியாது தொடர்ந்து இருக்கிறது. எனவே இங்கு அச்சொல் ஒரு ஒப்பீட்டு அளவிலான அர்த்தத்துடன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

முதலில் சங்கரர்கூடஎன்பதற்கு அழியாதது எனும் அர்த்தத்தைக் கொடுக்கிறார். பின்னர் மாயைக்கு சம்பந்தப்பட்ட இனியொரு அர்த்தத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார் - வஞ்சனை. ஒரு விதத்தில் இருந்துகொண்டு வெளியில் வேறு விதத்தில் வெளிக்காட்டிக் கொள்வதை நாம் வஞ்சம் என்போம். இங்கு இந்த மாயையும் அப்படியே. அது வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும் மாயக்காட்சிகளும் காட்டவல்லது. அது ஒருவனின் பார்வையை தலைகீழாக மாற்றுகிறது. பல்வேறு வடிவங்களாக பரிணமிக்கும் திறனுடன் இருப்பதால் உண்மையில் இல்லாததை இருப்பது போலக் காட்டி அது ஒருவனை குழப்புகிறது, ஏமாற்றுகிறது.


 -> அக்ஷர-புருஷ சொரூபம்:

   (1) உபாதாந காரணம்: இவ்வுலகின் உபாதான-காரணமாகவுள்ள மாயை, பரிணாமி-காரணம் எனவும் சொல்லப்படுகிறது. அதாவது, மாற்றத்தை அடைந்து காரியமாக ஆகுதல் பரிணாமி-காரணம் ஆகும், பால் மாற்றத்தை அடைந்து தயிராக மாறுகிறது. அதுபோல மாயையில் ஒரு அம்சமே இவ்வுலகாக மாறியுள்ளது

    (2) அதே மாயை, உத்தம-புருஷனின் அறிவின் துணை கொண்டு நிமித்த-காரணமாக உள்ளது. அதாவது, காரியங்கள் உருவாக்கும் அறிவாக, ஈஷ்வரனாக (மாயை + ப்ரம்ம = ஈஷ்வரன்) உள்ளது

   (3) வெளித்தோற்றத்திற்கு வராதது. காரிய அவஸ்தையில் இருக்கும்போது மாயை வ்யக்தமாகவும்(வெளிக் காட்டிக்கொண்டும்), காரண அவஸ்தையில் அவ்யக்தமாகவும்(வெளித்தோற்றமாக  இல்லாமல் விதை வடிவிலும்) இருக்கிறது.

   (4) த்ரிகுணாத்மிகா மாயா - சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும் மூன்று குணங்களைக் கொண்டது. காரண மாயையில் இந்த குண வேற்றுமை தெரிவதில்லை. அது காரியங்களை உண்டுபண்ணும்போது இந்த முக்குண வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது.

   (5) அநாதி - மாயையின் தோற்றத்தை கூற முடியாது

   (6) நிச1த்வா மாயா - சுதந்திர இருப்பு அற்றது. உத்தம-புருஷனைச் சார்ந்து இருப்பது. அதற்கென தனியான இருத்தல் இல்லையாதலால் வியவஸ்தையற்றது எனலாம்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பழத்தின் மேல்தோல், சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூலவிதையினின்றும் உண்டாகின்றன. அதுபோல ஒரே ஈஷ்வரனிடமிருந்து ஜீவ, ஜட, சித்து, அசித்து ஆகிய ஸர்வ சிருஷ்டிப் பொருள்களும் தோன்றுகின்றன.

---------------------------------------------------------------------------------------------

||15.17|| நிர்குண ப்ரம்மம்(பரமாத்மா) பற்றிய விளக்கம்

उत्तम: पुरुषस्त्वन्य: परमात्मेत्युदाहृत:

यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वर: ।। १७ ।।

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதா3ஹ்ருத:

யோ லோகத்ரயமாவிச்1 பி34ர்த்யவ்யய ஈச்1வர: ।। 17 ।।


अन्य: तु  அந்ய: து  மற்றும் க்ஷர அக்ஷரத்துக்கு அன்னியமாக    

उत्तम: पुरुष:  உத்தம: புருஷ:  புருஷோத்தமன் அல்லது ப்ரம்மம் என்றும்     परमात्मा इति  பரமாத்மா இதி  பரமாத்மா என்றும்    उदाहृत:  உதா3ஹ்ருத:  அழைக்கப்படுபவர்     :  :  யாரோ அவர்      ईश्वर:  ஈச்1வர:  ஈஷ்வரன்    अव्यय:  அவ்யய:  மாறுபடாதவர்    लोक त्रयम्  லோக த்ரயம்  மூவுலகத்தையும்      आविश्य  ஆவிச்1   பிரவேசித்து     बिभर्ति   பி34ர்தி  தாங்குகிறார்.


இனி, இவைகட்கு அன்னியமானவர் புருஷோத்தமன். அந்த ஈஷ்வரன் நிர்விகாரப் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் மூவுலகினுட் புகுந்து அதைத் தாங்குகிறார்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் உத்தம-புருஷனைப் பற்றிய விளக்கத்தை அளிக்கிறார்.


=> உத்தம-புருஷன்:

இங்குஅந்யஎனும் சொல், ஏற்கனவே கூறப்பட்ட க்ஷர-புருஷன் மற்றும் அக்ஷர-புருஷன், இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்ட என்பதைக் குறிக்கிறது. அதாவது இரண்டிலிருந்தும் சுயாதீனமாக இருப்பவர்; அவைகளின் உபாதிக்கு சொந்தமான எந்தவித பண்புகளாலும் தொடப்படாதவர் என்பது பொருள். சங்கரருக்கு பிடித்தமான வெளிப்பாடானநித்ய-சு1த்34-பு3த்34-முக்த-ஸ்வபா4:என்பதன்படி, எப்போதும் ஞானத்துடன் கூடியவர், அதாவது அறியாமையிலிருந்து விடுபட்டவர்; புண்ணியம்-பாபம், காரணம்-காரியம், செய்பவன்-அனுபவிப்பவன் எனும் அசுத்தத்திலிருந்து எப்போதும் விடுபட்டவர். யார் அவர்? மிகவும் மேலானவர்உத்தம, என்கிறார் பகவான். அதாவது, இதை தாண்டியதாக எதுவுமில்லை என்பதாக இந்த உத்தம-புருஷ தத்துவமானது, க்ஷர மற்றும் அக்ஷர தத்துவத்திடமிருந்து முற்றிலும் வேறுபட்டது, என்கிறார் சங்கரர். இதை அறிந்தவனாலேயே விடுதலையை அடையமுடியும். முழு ஸம்சாரத்திற்கும் ஆதாரமானதாய் விளங்கி, ஆனால் காரண-காரியத்திற்கு அப்பாற்பட்டதாக இருப்பது இது. இதுவே ஆத்மா. (1) முழுமையானதாக இருப்பதால் இதுபுருஷஎன அழைக்கப்படுகிறது - பூர்ண, (2) உடலில் வசிப்பதினால்புருஷஎனப்படுகிறது - புரெள உஷதி இதி. முழு உலகத்தையும் படைத்து, பின் பகவான் இந்த உடலில் பிரத்யகாத்மாவின் வடிவில் நுழைந்தார்


=> பரமாத்மா:

இந்த உத்தம-புருஷ தத்துவமானது உபநிஷத்துக்களால் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறதுபரமாத்மா இதி உதா3ஹ்ருத:. ‘பரஎனில் அதிஷ்டானம், அதாவது க்ஷர மற்றும் அக்ஷர உபாதிக்கு ஆதாரமாக இருக்கின்ற தத்துவம் ஆகும். வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும்போது உடலிற்குரிய தேஹ-ஆத்மா, உடலியக்கத்திற்குரிய ப்ராண-ஆத்மா, மனதிற்கான மநோ-ஆத்மா என பல்வேறு சுயங்கள் நமக்கு உள்ளன. இவையனைத்தும் ஆத்மாவாக இருந்தபோதிலும் ஆதாரமாக விளங்கும் இந்த உத்தம-புருஷனே பரமாத்மா. இதைக் கொண்டே மற்ற அனைத்து ஆத்மாக்களும்(க்ஷர-உபாதிகள்) அறியப்படுகின்றன. அனைத்தின் இருப்பிற்கும் காரணமான மற்றும் அனைத்து உயிரினங்களின் பிரக்ஞையுணர்வாக விளங்குகின்ற இந்த ஒரே ஆத்மாவே, க்ஷர மற்றும் அக்ஷர உபாதிக்கு மேலானதாக இருக்கிறது. இந்த தத்துவத்தையே நாம் பரமாத்மா என்கிறோம்

அந்த பரமாத்மா, தனது மாயா-சக்தியுடன் மூன்று உலகங்களுக்குள் நுழைகிறார்லோக த்ரயம் ஆவிச்1, எனப்படுகிறது. இங்குலோக த்ரயம்என்பதை மூன்று விதத்தில் பொருள்விளக்கம் அளிக்கலாம்

 (1) பூலோகம்(பூ4:), புவர்லோகம்(பு4:), சுவர்லோகம்(ஸ்வ:) ஆகிய மூன்று புவனங்கள்.

 (2) விழிப்புநிலை(ஜாக்3ரத்), கனவுநிலை(ஸ்வப்ந), ஆழ்ந்த உறக்கம்(சுசுப்தி) ஆகிய மூன்று அவஸ்தைகள்.

 (3) ஸ்தூல சரீரம், சூக்ஷம சரீரம், காரண சரீரம் முதலிய மூன்றுவித உடல்கள்

இந்த உலகத்திற்குள் பரமாத்மா எவ்விதம் நுழைகிறார்? ‘காரணஎனும் மூலாதாரமாக மட்டுமே நுழைகிறார். ஸத்-சித்-ஆனந்த-பரமாத்மா தனது மாயா-சக்தியினால் உள்ளே நுழைந்து முழு உலகமாக மாறுகிறார். எவ்விதம் களிமண்ணானது பானைக்குள் காரணமாக நுழைகிறதோ, அவ்விதம் இந்த காரண-பரமாத்மா காரியத்திற்குள் நுழைந்து, இந்த முழு ஜகத்தையும் அதன்மூலம் நிலைநிறுத்துகிறார்பி34ர்தி. எப்படி? சொந்த இயல்பினால்(ஸ்வரூப-ஸ்வபா4-மாத்ரேந), அதாவது சுத்த-இருத்தலாகவும் சுத்த-அறிவாகவும் விளங்குகின்ற தனது இயல்பினால் மட்டுமே பரமாத்மாவானவர் இந்த மூவுலகிலும் வியாபித்து அதனை தாங்குகிறார்; நிலைநிறுத்துகிறார்


=> தலைவன்

அனுபவிக்கப்படும் எதற்கும் இருப்பை கொடுத்துக் கொண்டிருப்பவராக அந்த பரமாத்மா விளங்குவதால் அவரே தலைவன்ஈச்1வர. அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லைஅவ்யய. உலகத்தினால் பாதிக்கப்படாதவராக இருக்கின்ற இந்த பரமாத்மாவே உத்தம-புருஷன், படைப்பு காரணமாகத் திகழ்பவர். இவ்விதமாக ஆத்மா, அனைத்து படைப்புகளுக்கும் காரணமான ஈஷ்வரனாக மாறுகிறது. வேறு எந்த காரணியும் இல்லை. ஆத்மாவான பரமாத்மாவே ஈஷ்வரன் என்று அழைக்கப்படுகிறார்


 -> உத்தம-புருஷ சொரூபம்:

   (1) காரிய-காரண விலக்ஷணம்: சொரூபத்தில் எந்த மாற்றமும் அடையாமல் ஒன்றை தோற்றுவித்தல் விவர்த-உபாதாந-காரணம் எனப்படும். உதாரணமாக கயிறு தனது சொரூபத்தில் எந்த மாறுதலும் அடையாமல் பாம்பைத் தோற்றுவிக்கிறது. வெளிச்சத்தினால் அறிவு வந்தவுடன் பாம்பு மட்டும் செல்கிறதே தவிர, கயிற்றிற்கு அதாவது ஆதாரத்திற்கு(இருத்தலுக்கு) நாசம் வருவதில்லை. இவ்விதமாகவே உத்தம-புருஷன் மாயாவிற்கு இருத்தலைக் கொடுக்கின்றார்

   (2) அவ்யயம் - மாறாதது

   (3) சாக்ஷி அல்லது ஆத்ம சொரூபம்சாக்ஷியாக, அறிவு சொரூபமாக இருப்பது.

   (4) ஈஷ்வரன் - தலைவன்; இவ்வுலகத்தினால் பாதிக்கப்படாதவன்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சரீரத்தில் ஈஷ்வரன் எவ்வாறு வசிக்கிறான்? பீச்சாங்குழலின் உள்ளேயிருக்கும் கம்பியைப்போல அவன் சரீரத்தில் வாசஞ்செய்கிறான். அதாவது சரீரத்தின் உள்ளேயிருக்கிறான் என்றாலும் அச் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவனல்லன்.

---------------------------------------------------------------------------------------------