செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

புருஷோத்தம யோகம் 15.14 - 15.15

||15.14|| நெருப்பின் ரூபமாக பகவான் என்ன செய்கிறார்:

अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रित:

प्राणापान समायुक्त: पचाम्यन्नं चतुर्विधम् ।। १४ ।।

அஹம் வைச்1வாநரோ பூ4த்வா ப்ராணிநாம் தே3ஹமாச்1ரித:
ப்ராணாபாந ஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்வித4ம் ।। 14 ।।

अहं  அஹம்  நான்     वैश्वानर:  வைச்1வாநர:  வைஷ்வாநரன் என்கிற உதரக்கனல்    

भूत्वा  பூ4த்வா  ஆகி      प्राणिनां  ப்ராணிநாம்  பிராணிகளுடைய     देहम्  தே3ஹம்  தேகத்தில்     आश्रितஆச்1ரித: இருந்துகொண்டு     प्राण अपान समायुक्त:  ப்ராண அபாந ஸமாயுக்த:  பிராணனுடனும் அபானனுடனும் கூடி    चतुर्विधम्  சதுர்வித4ம்  நான்கு விதமான    

अन्नं  அந்நம்  அன்னத்தை      पचामि  பசாமி  ஜீரணம் செய்கிறேன்


வைஷ்வாநரன் என்கிற உதரக்கனலாக நான் உயிர்களின் உடலில் இருந்துகொண்டு பிராண அபான வாயுக்களுடன் கூடி நான்குவித அன்னத்தைச் செமிக்கிறேன்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.


விளக்கம்:

=> அக்னியாய் நான்:

வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவைச் செமிக்கின்ற அக்னிக்கு வைஷ்வாநரன் என்று பெயர். இந்த நெருப்பாக பகவான் மாறி உணவுகளை ஜீரணம் செய்வதாகக் கூறுகிறார். இங்கு சங்கரர் பிருஹதாரண்யக உபநிஷத்தை மேற்கோள் காட்டுகிறார். அயம் அக்3நி: வைச்1வாநர: : அயம் அந்த: புருஷே யேந இத3ம் அந்நம் பச்யதேஇந்த வைஷ்வாநர அக்னி என்பது மனிதனின் உள்ளே இருந்து உணவைச் சமைப்பதாக இருப்பது ஆகும். சமைத்து உட்கொள்ளப்படும் உணவோ அல்லது பழங்கள் உள்ளிட்ட நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும் உணவோ எதுவாயினும், அது ஜீவராசிகளின் வயிற்றினுள் உள்ள வைஷ்வாநரன் எனும் அக்னி வடிவாக இருக்கின்ற பகவானால் மீண்டும் சமைக்கப்படுகிறது. அதாவது, ஜீரணிக்கப்படுகிறது என்பது பொருள். செரிமானத்திற்கு நெருப்பு முக்கிய விஷயம் என்றாலும், அதனைச் சரியாக ஒருங்கிணைக்க வேறு சில விஷயங்களும் தேவைப்படுகின்றன ஆகையினால் அவற்றையும் இங்கு பகவான் இணைத்துக் கொள்கிறார். ‘ப்ராணஎனும் சொல் உள்ளிழுக்கப்படும் காற்று என்பதாக சுவாசம், செரிமாணம், சுழற்சி, செறித்த ஆற்றல் பயன்பாடாக மாறுதல் உள்ளிட்ட பொது பிராண சக்தியைக் குறிக்கிறது. ‘அபாநஎன்பது உடலிலிருந்து கழிவுப் பொருட்களை வெளித்தள்ளும் பிராண சக்தியைக் குறிக்கிறது. இவைகளுடன் கூடி வைஷ்வாநர அக்னி நான்கு வகையான உணவை செமிக்கிறது. 4க்ஷ்யம் - கடித்து சாப்பிடுதல் அல்லது மெல்லுதல், போ4ஜ்யம் - குடித்தல் அல்லது விழுங்குதல், லேஹ்யம் - நக்குதல், சோ1ஷ்யம் - உறிஞ்சுதல் ஆகிய நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது. ரொட்டி போன்ற கடின பதார்த்தம் மெல்லப்படுகிறது. பாயசம் விழுங்கப்படுகிறது; தேன் நக்கப்படுகிறது மற்றும் இளம் நுங்கு போன்றவைகள் உறிஞ்சப்படுகிறது. இவையாவையும் ஜீரணம் செய்வது வைஷ்வாநர நெருப்பு ஆகும்.   

=> உணவை சமர்பித்தல்:

ப்ரம்மமே இந்த அனைத்துச் செயல்பாடுகளின் வடிவமாக இருக்கிறது. அதனால்தான் நமது மரபில் உணவின் முதல் கவளத்தை பிராணன்களுக்கும், இறுதியாக ஹிரண்யகர்ப வடிவாக இருக்கின்ற ப்ரம்மத்திற்கும் சமர்பிக்கிறோம். ஐந்து வகையான பிராணன்கள் பேசப்படுகின்றன. பிராண - சுவாச செயல்பாடு, அபானன் - வெளியேற்றும் செயல்பாடு, வியானன் - சுற்றோட்டம், சமானன் - செரிமான அமைப்பு மற்றும் உதானன் - பிராரப்தம் முடியும் வரை உடலில் பிராணனை வைத்திருக்கும் சக்தி; இந்தப் பிராண சக்தியே மரணத் தருவாயில் உடலைவிட்டு சூக்ஷம சரீரம் வெளியேற உதவும் சக்தியாக உள்ளது. ஒவ்வொரு உயிரிலும் உயிர் சக்தியாக இருப்பது ஹிரண்யகர்பன். உணவின் முதல் கவளம் இவர்களுக்கு சமர்பிக்கப்படுகிறது ஏனெனில் சாப்பிடுவதில் எப்போதும் கொல்லப்படுதல் கலந்தேயுள்ளது. சைவ உணவாக இருக்கும் பட்சத்திலும், பயிர் விதைக்கப்படுவதில் தொடங்கி அறுவடை செய்யப்பட்டு, பல இடங்கள் கடந்து உணவாக நமது உணவுத்தட்டை வந்தடையும் தருணம் வரை பல்வேறு வகையான உயிர்பலிகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு உயிரும் இனியொரு உயிரின் மீது வாழ்கிறது, மேலும் எவ்வகையிலேயும் ஒரு உயிரை எடுப்பதென்பது இயற்கையாகவே பாபத்தை உள்ளடக்கியது. எனவே, நாம் உண்பவர்கள் அல்ல, ஈஷ்வரனே உண்பவனாக இருக்கிறான் என்கிறார் பகவான். அதில் அடங்கியிருக்கிற பாபம் இந்த மனப்பாங்குகினால்  பகவானுக்கு செல்வதாக ஆகிறது. செயல் செய்பவனே பலனை அனுபவிப்பவனாகவும் இருப்பதனால் உணவை உண்பவராக பகவானே    இருக்கட்டும். ஆனால் இங்கு உணவாகவும் பகவானே இருப்பதனால் அவருக்கு எவ்விதத்திலும் பாபம் இல்லை. அவரே உணவாகவும் மற்றும் உணவை உண்பவராகவும் ஆகிறார். இதிலிருந்து அவர் இரண்டுமாகவும் இல்லை என்பதாகவும் ஆகிறது. எனில் அனைத்தும் மித்யா. இவ்விதம் எல்லாமே ஈஷ்வரன்தான் என்று அறியப்படும்போது நாம் அனைத்து பிரச்சனையிலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகிறோம்

---------------------------------------------------------------------------------------------

||15.15|| அனைத்துமாயும் நானே இருக்கிறேன்:

सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्त: स्मृतिर्ज्ञानमपोहनं च।

वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ।। १५ ।।

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி3 ஸந்நிவிஷ்டோ 

மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம்
வேதை3ச்1 ஸர்வைரஹமேவ வேத்3யோ

வேதா3ந்தக்ருத்3வேத3விதே3 சாஹம் ।। 15 ।।


अहं  அஹம்  நான்    सर्वस्य  ஸர்வஸ்ய  எல்லாருடைய     हृदि  ஹ்ருதி3  ஹிருதயத்தில்     

सन्निविष्ट:  ஸந்நிவிஷ்ட:  தங்கியிருக்கிறேன்         மேலும்      मत्त:  மத்த:  என்னிடமிருந்து      स्मृति:  ஸ்ம்ருதி:  ஞாபக சக்தி      ज्ञानम्  ஞாநம்  அறிவு    अपोहनं   அபோஹநம்   மறதி     

सर्वै: वेदै:   ஸர்வை: வேதை3:   எல்லா வேதங்களாலும்    अहम् एव  அஹம் ஏவ  நானே     

वेद्य:  வேத்3:  அறியப்படுபொருள் ஆகிறேன்      वेदान्तकृत्  வேதா3ந்தக்ருத்3  வேதாந்தத்தை செய்தவனும்     वेदवित्   வேத3வித்   வேதத்தை அறிந்தவனும்      अहम् एव அஹம் ஏவ  நானே.


எல்லாருடைய உள்ளத்திலும் நான் வீற்றிருக்கிறேன். நினைவும் ஞானமும் அவற்றின் மறதியும் என்னிடமிருந்து உண்டாகின்றன. வேதங்கள் எல்லாவற்றிலும் அறியப்படுபொருள் நானே. வேதாந்தத்தைச் செய்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.


விளக்கம்:

=> அனைத்துமாய் நான்:

சூரியனின் பிரகாசமாக இருந்து எனது சக்தியால் நானே உலகத்தை தாங்குகிறேன் என்றார். சந்திரனின் ஒளியாக மாறி அனைத்து தாவரங்களையும் ஊட்டச்சத்துடன் போஷிக்கிறேன். இதன்காரணமாக உணவாகவும் நானே ஆகிறேன். அதுமட்டுமல்லாமல், நானே ஜீரணிக்கும் நெருப்பாக ஆவதன் மூலம் ஜீவராசிகளின் உணவைச் செமிக்கிறேன் என்றார். இவ்விதம் வெளி உலகாகவும், உணவாகவும், உணவில் பிறந்த இந்த உடலாகவும் ஈஷ்வரனே ஆகிறார். ஏதேனும் விடுபட்டதா எனில் இல்லை. ஆகவே அனைத்துமே ஈஷ்வரன்தான். இனி இந்த சுலோகத்தில், எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கின்ற அறிவு சொரூபம் நானே என்கிறார்.


=> பிரக்ஞையாய் நான்

அனைவரின் இருதயத்திலும் நான் வீற்றிருக்கிறேன்ஸர்வஸ்ய ஹ்ருதி3 அஹம் ஸந்நிவிஷ்ட:, என்கிறார் பகவான். ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளத்திலும் நானே அறிபவனாக(க்ஷேத்திரஞன்), அதாவது ஆத்மாவாக இருக்கிறேன் என அவர் ஏற்கனவே பதிமூன்றாம் அத்தியாயத்தில் கூறினார். தைத்திரீய உபநிஷத்தில்தத் ஸ்ருஷ்ட்வா ததே3 அநுபிராவிச1த் - சிருஷ்டித்து அதில் அவர் பிரவேசித்தார்எனக் கூறப்படுகிறது. இதன் பொருள், ஆத்மாவாக அவர் தனது சிருஷ்டிக்குள், புத்தியில் நுழைகிறார். அதையே பகவான் இங்குஅஹம் ஸந்நிவிஷ்ட:எனக் கூறுகிறார். உள்ளே நுழைந்ததும் அங்கேயே ஆத்மாவாகவே இருக்கிறேன் என்கிறார். எனில், ஆத்மா என்பது ஈஷ்வரனே ஆகும். ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை. ‘அஹம் ஸந்நிவிஷ்ட: - நான் பிரவேசிக்கிறேன்என பகவான் கூறும்போது, இங்குநான்என்பதன் அர்த்தம் பிரக்ஞையுணர்வு, சைத்தன்யம்.


=> அறிவாய் நான்

இந்த பிரக்ஞையுணர்வு இல்லையெனில், அங்கு அறிபவன் இருக்க முடியாது; அறிபவன் இல்லாமல் அங்கு அறிவு ஏற்படுவதில்லை. ஆகவே பகவான், என்னிடமிருந்தே அறிவு சாத்தியமாகிறது எனக் கூறுகிறார்மத்த: ஞாநம்


=> ஞாபக சக்தியும் மறதியும் நான்:

மேலும், நினைவாற்றலாயும் நானே இருக்கிறேன் என்கிறார். ஈஷ்வரன் அல்லது சைத்தன்யத்தினாலேயே நினைவாற்றல் சாத்தியமாகிறது. ஞாபகபடுத்தும் திறன் எனும் அடிப்படையில் அது ஈஷ்வரனாயும், நினைவுகள் அல்லது ஞாபகங்கள்(ஸ்ம்ருதி) எனும் அடிப்படையில் அது பிரக்ஞையுணர்வான சைத்தன்யமாயும் எடுத்துக் கொள்ளலாம்

அதேபோல, மறதியாகவும் பகவானே இருக்கின்றார். ‘அபோஹநம்எனில் மறதி. நினைவுகளையும் அறிவையும் மறக்கின்ற மறதியாக நான் இருக்கின்றேன் என்கிறார். சங்கரர் இங்கு ஒருவனுடைய புண்ணியத்தினாலும் பாபத்தினாலுமே அவனுக்கு நினைவும் மறதியும் உண்டாகிறது எனச் சுட்டிக்காட்டுகிறார். புண்ணியமிருப்பின் நினைவும் அறிவும் இருக்கும்; பாபமிருப்பின் அவைகள் மறக்கடிக்கப்படும். கர்மம் என்பது உயர்ந்த நிலையில் வைக்கப்படும்போது அது இவ்வாறு பார்க்கப்படுகிறது. உதாரணமாக பரீட்சை அல்லது வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கியமான இடங்களில் ஒருவனுக்கு ஏற்கனவே படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருவதில்லை. அதன் விளைவாக அவன் இழப்பதைப் பார்க்கும்போது, ஏதேனும் சில பாபம் அவனது அந்நிலைக்கு காரணமாகத் தெரிகிறது.

ஆனால் இதை வேறொரு விதத்திலும் விளக்கலாம். புண்ணிய-பாப கர்மபலனைத் தருகின்ற ஈஷ்வரனாக அல்லாமல், சைத்தன்யத்தின் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போதும் நினைவுக்கு வருதலும், அறிதலும் மறத்தலும் பிரக்ஞையுணர்வினாலே சாத்தியப்படுகிறது. பிரக்ஞையின்றி ஒன்றை மறத்தலும்கூட எப்படி சாத்தியப்படும்? ‘நான் மறந்துவிட்டேன்என ஒருவன் கூறும்போது அந்த மறதியும்கூட ஒருவகை அறிவே ஆகும். அவன் மறந்துவிட்டதை அவன் அறிகிறான். அவ்விஷயம் அவனுக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் இப்போது அவனால் அதை நினைவுபடுத்தி மீட்டெடுக்க முடியவில்லை என்பதை அவன் அறிகிறான்.


=> மறதி என்பதும் ஒருவகையில் வரமே:

அபோஹநம்என்பதன் நேரடியான அர்த்தம் மறதி என்றபோதிலும், அதை இனியொரு விதத்தில் விசாரித்துப் பார்க்கும்போது அதுவும் ஒருவகை வரம் என்பதை அறியலாம். ஒருவனுடைய பழக்கப்பட்ட யோசனைகளும் முன்முடிவுகளும் குறிக்கிடாத இடத்தில்தான் அவனுக்கு புதிய அறிவு சாத்தியப்படுகிறது. எனவே அனைத்துவிதமான சிந்தனைக் குறுக்கீடுகளையும் இடைநிறுத்தி அதாவது மறக்கடித்து, தற்போதைக்கு அவைகளைப் பின்னுக்குத் தள்ளி, மனதை சுதந்திரமாக வைக்கும் திறன்அபோஹநம்எனப்படும். ஒரு வேதாந்த மாணவனுக்கு இப்பண்பு மிக முக்கியமானதாக ஆகிறது. ஏனெனில் வேதாந்த ஆய்வின்போது தன்னைப் பற்றியும், உலகம் மற்றும் கடவுளைப் பற்றியும் அவன் கொண்டுள்ள கருத்து மறுக்கப்பட வேண்டும். பழைய கருத்துக்கள் ஒருவனது மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும்போது அவற்றை எப்படி முற்றிலும் நிராகரிக்க முடியும்? பழைய யோசனைகள் ஒருவனின் கேட்கும் திறனை தொந்தரவு செய்யக்கூடாது. அவைகள் இடைநிறுத்தப்படும் போதே, அது புதிய சிந்தனைகள் உள் வருவதற்கும், தற்போதைய யோசனைகள் மாற்றத்திற்கு உட்பட்டு ஒரு புதிய பார்வை ஏற்படுவதற்கும் வழிவகை செய்கிறது. எனவேஅபோஹநம்இல்லையெனில் இது சாத்தியப்படுவதில்லை

அதுபோலவே சாதாரண நோக்கில் பார்க்கும்போதும், ஒருவன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க இந்தஅபோஹநம்தேவையான ஒன்றாக இருக்கிறது. ஒருவன் தனது எல்லா பிரச்சனைகளையும் நினைவில் வைத்துக் கொண்டால், ஒரு கணம்கூட அவனால் சிரிக்க முடியாது. எனவே இது பகவானின் மிகப்பெரிய வரம். இல்லையெனில், நாம் எப்போதும் துயரத்தின் பிடியிலேயே இருப்போம். இதனால் வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கும் சிறிய மகிழ்ச்சிகளை அனுபவிக்க வழியில்லாமல் போய்விடும். எனவேஅபோஹநம்எனும் சொல்லை மறதி என மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் தொடர் யோசனைகளையும் சிந்தனைகளையும் இடைநிறுத்தும் திறன் என எடுத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் இந்த திறனே ஒருவனின் அறிவுக்கும்(ஞாநம்) நினைவுகளுக்கும்(ஸ்ம்ருதி) அடிப்படையாக ஆகிறது. அபோஹநம் இல்லாமல் அவைகள் உண்டாவதில்லை. பிரக்ஞையுணர்வின் காரணமாக, ஒருவன் மறக்கும் திறனுடையவனாக இருக்கிறான்; மேலும் இந்தமறக்கும் மனம்பிரக்ஞையினால் ஒளிர்கிறது. எனவே, சைத்தன்ய-ஆத்மாவான என்னிடமிருந்தே நினைவும் ஞானமும் மறதியும்மத்த: ஸ்ம்ருதி: ஞாநம் அபோஹநம் , என்கிறார் பகவான்


=> வேதங்களின் அறிபடுபொருள் நான்:

அனைத்து வேதங்கள் மூலமாகவும் அறியப்பட வேண்டியவனாக, அறிபடுபொருளாக இருப்பது ஈஷ்வரன் ஆகும். பல்வேறு சடங்குகள், யக்ஞங்கள் மற்றும் பல்வேறு தேவதைகள் குறித்து சொல்லப்பட்டுள்ள வேதத்தின் அறிபடுபொருள் எப்படி ஈஷ்வரனாக மட்டும் இருக்க முடியும்? ‘எல்லா வேதங்களின் மூலமாக நான் மட்டுமே அறியக்கூடியவன்வேதை3: ஸர்வை: அஹம் ஏவ வேத்3:எனச் சொல்வதன் மூலம் வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் ஈஷ்வரனேயன்றி வேறில்லை என்பதை புரிந்து கொள்கிறோம். அக்னி, இந்திரன், வருணன் மற்றும் பிற தேவதைகள் அனைவரும் பரமேஷ்வரனே. வினைப்பயனை அளிக்கும் கர்ம-பல2-தா4தா பரமேஷ்வரனே. கர்ம நியதியாக இருப்பவனும் பரமேஷ்வரனே. வேதத்தின் கர்ம-காண்டம் ஈஷ்வரனை சகுண-ப்ரம்மமாக, அனைத்து வடிவத்திலும் இருக்கின்ற கர்த்தாவாக, அனைத்து உலகமாக காட்டுகிறது. பானை ஒன்று குறிப்பிடப்படும்போது, அது பிரக்ஞையுணர்வினால் நிலைநிறுத்தப்பட்ட பெயர் மற்றும் வடிவமே தவிர, அங்கு உண்மையில் பானை என்ற ஒன்று இல்லை, இருப்பது களிமண் மட்டுமே. அதுபோல ஒரு ஞானிக்கு, ஒவ்வொரு பொருளும் ஈஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாதவை. அப்படிப்பட்ட ஈஷ்வரனே அறிபடுபொருளாக, அறியப்பட வேண்டியவனாக, அறியத்தக்கவனாக அனைத்து வேதங்களினாலும் காட்டப்படுகிறான்.


=> குருவும் நான், சிஷ்யனும் நான்:

வேதங்கள் மூலமாக அறியப்படுபவரை விட அதை இயற்றியவர் பெரியவராக இருக்க வேண்டும். எனில் வேத வேதாந்தங்களை இயற்றியவர் யார் என்பது அடுத்த கேள்வியாக இருக்கும். அதற்கான விடையாக, வேதாந்தத்தின் ஆசிரியனாக இருப்பவன் நான் - வேதா3ந்தக்ருத்3, என்கிறார் பகவான். வேதாந்தத்தை போதிக்கும் சம்பிரதாயத்தை துவக்கியவர் ஈஷ்வரனே. எனில் கண்டிப்பாக வேதத்தின் அர்த்தத்தை அறிந்தவராகவும் அவரே இருக்கமுடியும்வேத3வித். அல்லது, இந்த இடத்தில் வேதத்தை புரிந்து கொள்ளும் சிஷ்யனாகவும் நானே உள்ளேன் எனவும் எடுத்துக் கொள்ளலாம். வேதாந்தத்தை உபதேசிக்கும் குருவாகவும், அதை புரிந்துகொள்ளும் சிஷ்யனாகவும் நான் இருக்கின்றேன். அல்லது, ‘வேதங்களின் மூலம் அறியப்படவேண்டியவன் நான்; வேதங்களைச் செய்தவனும் அதை அறிந்தவனும் நான்என்கிறார் பகவான்

    இவ்விதமாக இந்த தலைப்பு முழுமையை அடைகிறது. தாவரங்களில் இருக்கும் உணவு நான், மாற்றியமைக்கப்பட்ட உணவின் வெளிப்பாடாக விளங்கும் உடலும் ப்ராணனும் நான். உணவை உற்பத்தி செய்யும் பூமி நான், மேலும் சூரியன் மற்றும் கிரகங்கள் அனைத்தும் நானே. என்னால் மட்டுமே அனைத்து செயல்களும் சாத்தியமாகின்றன. நான் இல்லாமல், நினைவு இல்லை, அறிவு இல்லை, மறதி இல்லை. சில முக்கியமான உபாதிகளை குறிப்பிடுவதன் மூலம் ஈஷ்வரனின் மகிமைகள் பற்றிய சுருக்கமான விளக்கம் மேற்கூரிய இந்த நான்கு சுலோகங்களின் மூலம் காட்டப்படுகிறது.  

---------------------------------------------------------------------------------------------