||15.18|| ‘கடந்து இருத்தல்’ விளக்கப்படுகிறது:
यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तम: ।
अतोऽस्मि लोके वेदे च प्रथित: पुरुषोत्तम: ।। १८ ।।
யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராத3பி சோத்தம: ।
அதோऽஸ்மி லோகே வேதே3 ச ப்ரதி2த: புருஷோத்தம: ।। 18 ।।
यस्मात् யஸ்மாத் எக்காரணத்தால் अहम् அஹம் நான்
क्षरम् अतीत: க்ஷரம் அதீத: க்ஷரத்தை கடந்தவனோ
अक्षरात् अपि च அக்ஷராத் அபி ச அக்ஷரத்துக்கும் उत्तम: உத்தம: மேலானவனோ
अत: அத: அக்காரணத்தால் लोके லோகே லோகத்திலும் वेदे च வேதே3 ச வேதத்திலும் पुरुषोत्तम: புருஷோத்தம: புருஷோத்தமன் என்று प्रथित: ப்ரதி2த: புகழ் பெற்றவனாக
अस्मि அஸ்மி இருக்கிறேன்.
க்ஷரத்தைக் கடந்து அக்ஷரத்துக்கும் நான் மேலானவனாக இருப்பதால் உலகிலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றிருக்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தம னென்று கூறப்படுகிறேன்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் உத்தம-புருஷனின் ‘கடந்து இருத்தல்’ எனும் தத்துவம் கூறப்படுகிறது. க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம், அக்ஷரம் என்பது உலகுக்கு மூலகாரணமாயிருக்கும் மூலப் பிரகிருதியோடு கூடிய ஈஷ்வரன். நிர்குண நிர்விகாரமாக இருப்பவர் பரப்ரம்மம்.
=> புருஷோத்தமன்:
க்ஷர மற்றும் அக்ஷர உபாதியால் தொடப்படாதவனாக, எல்லாவற்றையும் கடந்து இருப்பவனாக இருப்பதால் நான் உத்தம-புருஷன் அல்லது புருஷோத்தமன் என அறியப்படுகிறேன் என்கிறார் பகவான். ‘அதீத’ எனில் கடந்தவன், தொடப்படாதவன், அசங்கமானவன் அல்லது ஒட்டாதவன் என்பது பொருள். ஆதா4ரத்வே ஸதி அஸங்கத்வம் அதீதத்வம் — ஆதாரமாக இருந்தும் ஒட்டிக் கொள்ளாமல் இருத்தல் அதீதமான நிலை. இந்த அசங்கத்துவ-தன்மை என்பது எப்போது சாத்தியம்? ஆதாரமாக இருக்கின்ற தத்துவமானது எதற்கு ஆதாரமாக உள்ளதோ அது தன்னைக் காட்டிலும் கீழான மெய்மையுடன் இருக்கும்போதே இந்த ஒட்டாத தன்மை சாத்தியப்படுகிறது. எனவே உத்தம-புருஷன் மேலான தத்துவம், பாரமார்த்திகம். மற்றவைகள் கீழான மெய்மை உடையவைகள், வ்யாவஹாரிகம். இதையே நாம் மித்யா அல்லது அஸத் என்கிறோம். உதாரணமாக குழந்தைகள் விளையாடும் வணிக விளையாட்டில், விளையாட்டு-பணத்தைக் கொண்டு ஊரை வாங்குதல், அங்கு வந்து நிற்கும் மற்ற விளையாட்டாளர்களிடம் வட்டி பணம் வசூலித்தல், விற்றல் என அனைத்து விவகாரமும் நடக்கும். ஆனால் இறுதியில் அது ஒரு விளையாட்டு. அந்த பணத்திற்கும் அதில் வாங்கப்பட்ட சொத்துக்கும் எந்த மதிப்பும் இந்த உலகில் கிடையாது. அந்த விளையாட்டு-உலகத்தின் மெய்மையிலிருந்து இந்த உலகம் மேலானது. அதுபோல இந்த வியாவஹாரிக-உலகத்தைக் காட்டிலும் உத்தம-புருஷன் மேலான இருப்பை உடையவர். இவைகளினால் தொடப்படாதவர்.
=> தீண்டப்படாதவர்:
காரண-உபாதியின் நோக்கிலிருந்து பகவான், ‘நான் உத்தமன், அதாவது, நான் அதை தாண்டியவனாக, மேலானவனாக இருக்கிறேன். அது என்னைத் தொட முடியாத அளவுக்கு நான் வெகு தொலைவில் இருக்கிறேன்’ என்கிறார். எவ்வளவு தூரம்? வேதாந்த பாம்பு-கயிறு உதாரணத்தில், கயிறானது அதன் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ள வழவழப்பான பாம்பிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ அவ்வளவு தூரம்! பாம்பு அதன் வழவழப்பான தன்மையை கயிற்றில் விட்டுச் செல்ல முடியாது! சைத்தன்ய-ஆத்மா ஒருவனின் எண்ணத்திலிருந்து எவ்வளவு தூரம் தொலைவிலுள்ளது? அந்த எண்ணம் பிரக்ஞையில் எதை விட்டுச் செல்கிறது? விருப்பமான அல்லது விரும்பத்தகாத எண்ணம் என எதுவாக இருந்தாலும், அது பிரக்ஞையில் எந்த தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை. ஒருவன் சூடான ஒன்றை அனுபவிப்பதாக வைத்துக்கொள்வோம். இதனால் பிரக்ஞையானது வெப்பமடையப் போவதில்லை. அவன் பனியை உணரும்போது அது குளிர்ச்சியடையவும் போவதில்லை. அதாவது வெப்ப-உணர்வு பிரக்ஞையின் வெப்பநிலையை அதிகரிக்காது; குளிர்-உணர்வு பிரக்ஞையின் வெப்பநிலையைக் குறைக்காது. பிரக்ஞையை எதுவும் தொடுவதில்லை; எதுவும் அதில் ஒட்டிக் கொள்வதில்லை. உத்தம, மேலானது என்பதன் பொருள் இதுவே. எண்ணத்திற்கும் பிரக்ஞைக்கும் இடையில் தூரம் எதுவுமில்லை. ஆனால் பிரக்ஞை தீண்டப்படாததாக இருப்பது; அது எல்லாவற்றிற்கும் ஆதாரமாக விளங்குவது ஆகும்.
ஆகையினால் நான் க்ஷர மற்றும் அக்ஷரத்தின் இருத்தலாக, ஆதாரமாக, அவைகளினால் தீண்டப்படாதவனாக புருஷோத்தமனாக இருக்கிறேன். இதனாலேயே உலகத்திலும் வேதத்திலும், கவிகளினாலும் பக்தர்களாலும் புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறேன் — அத: லோகே வேதே3 ச புருஷோத்தம: ப்ரதி2த: அஸ்மி.
---------------------------------------------------------------------------------------------
||15.19|| ஞானத்தின் மஹிமை மற்றும் பலன் கூறப்படுகிறது:
यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ।। १९ ।।
யோ மாமேவமஸம்மூடோ4 ஜாநாதி புருஷோத்தமம் ।
ஸ ஸர்வவித்3ப4ஜதி மாம் ஸர்வபா4வேந பா4ரத ।। 19 ।।
भारत பா4ரத பரதகுலத்துதித்தவனே य: ய: யார் एवम् ஏவம் இங்ஙனம்
असंमूढ: அஸம்மூட4: மயக்கமற்றவனாய் पुरुषोत्तमम् புருஷோத்தமம் புருஷோத்தமன் என்று माम् மாம் என்னை जानाति ஜாநாதி அறிகின்றானோ स: ஸ: அவன்
सर्ववित् ஸர்வவித் முழுதுமறிந்தவனாய் मां மாம் என்னை
सर्वभावेन ஸர்வபா4வேந அனைத்துமாக भजति ப4ஜதி வழிபடுகிறான்.
பாரதா, யார் மயக்கமற்றவனாய் இங்ஙனம் என்னை புருஷோத்தமன் என்று அறிகிறானோ, எல்லாம் அறிந்த அவன் அனைத்துமாக என்னை வழிபடுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்ப தறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் ஞானத்தின் மஹிமையையும் அதனால் அவன் அடையும் பலனையும் கூறுகிறார்.
=> மயக்கமற்றவன்:
மோகத்திலிருந்து விடுபட்டவனை, மதிமயக்கமற்றவனை, அதாவது விவேகமுடையவனை ‘அஸம்மூட4’ எனக் கூறுகிறார். இங்கு கூறப்பட்ட விதத்தில் எவனொருவன் என்னை அறிகிறானோ, என்பதாக பகவான் இச்சொல்லை(அஸம்மூட4) பயன்படுத்துகிறார். ‘ஏவம்’ எனில் ‘இங்கு கூறப்பட்ட விதத்தில்’, முன்னிரு சுலோகத்தில் கூறப்பட்டபடி, இந்த கீதையில் உபதேசித்தபடி என்று பொருள். அதாவது மாறுகின்ற மற்றும் அழிகின்ற க்ஷர-புருஷன், மாறாத மற்றும் அழியாத அக்ஷர-புருஷன், இவைகளிலிருந்து விடுபட்ட புருஷோத்தமனாக பகவானை அறிந்தவனை மயக்கமற்றவன் என்கிறார். ஸம்சார மரத்தின் வேராக, மூலக்காரணமாக, பாரமார்த்திக மெய்மையை உடையவனாக, உத்தம-புருஷனாக என்னை அறிந்தவன் ‘அஸம்மூட4’.
=> முழுதறிந்தவன்:
இவ்விதம் மதிமயக்கமற்றவனாய் எவனொருவன் என்னை புருஷோத்தமன் என அறிகிறானோ, அவன் அனைத்தையும் அறிந்தவனாக ஆகிறான் — ஸர்வவித், என பகவான் இங்கு புருஷோத்தம-ஞானத்தின் பலனைக் கூறுகிறார். புருஷோத்தமனை அறிந்துகொள்வதன் மூலம் எவ்வாறு அவன் அனைத்தையும் அறிந்தவனாக மாறுகிறான்? மின்னணுவியல், பிரெஞ்சு மொழி மற்றும் பிற அனைத்து அறிவுத் துறைகளையும் அறிந்தவன் ஆவானா? என்கிற கேள்வி எழலாம்.
முழுமையறிவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, ஒவ்வொன்றைக் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதைக் குறிக்கிறது — ஸர்வவித்த்வ. மற்றொன்று, பொதுவான யதார்த்தங்களைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது — ஸர்வக்ஞத்வ. இவ்வுலகில் க்ஷர-புருஷனாகவும் அக்ஷர-புருஷனாகவும் விளங்கிக் கொண்டிருப்பது உண்மையில் ஸத்ய-வஸ்துவான புருஷோத்தமன் மட்டுமே. இந்த ஸத்ய-வஸ்துவை அறிந்துகொள்வதன் மூலம் ஒருவன் மித்யாவைப் பற்றிய தெளிவான ஞானத்தை அடைகிறான். இவ்விதம் ஸத்ய-மித்யாவை அங்கீகரிப்பதன் மூலம் அவன் அனைத்தையும் அறிந்தவனாக ஆகிறான். அவனுக்கு ஒவ்வொன்றின் விவரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அனைத்து பெயர்-வடிவங்களும்(நாமரூப) மித்யா. ஒரே ஒரு ஸத்ய-வஸ்து மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது; அது அவனது சுய-சொரூபமாகவே இருக்கிறது.
முண்டகோபநிஷத்தில், ஈஷ்வரன் ‘ஸர்வக்ஞ ஸர்வவித்’ என்று அழைக்கப்படுகிறார். அவர் எல்லாவற்றையும் பொதுவாக அறிந்திருப்பதால் ஸர்வக்ஞ — ஸர்வம் ஜாநாதி ஸாமாந்யேந. மற்றும் அவரது மாயா-உபாதியினால் அனைத்தையும் விரிவாக அறிந்திருப்பதால் ஸர்வவித் — ஸர்வம் ஜாநாதி விசே1ஷேந. ஸர்வக்ஞத்வ என்பது எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருப்பது ஆகும். அதாவது ஸத்ய-மித்யாவை அறிவதன் மூலம் எல்லாவற்றின் உண்மையை அறிவது என்கிற அடிப்படையில் மட்டுமே அது பேசப்படுகிறது. உபநிஷத்துக்களில் வருகின்ற ‘ஒன்று அறியப்படும்போது அனைத்தும் அறியப்பட்டதாகிறது — ஏகஸ்மிந் விக்ஞாதே ஸர்வம் விக்ஞாதம் ப4வதி’ என்பதும் இதன் அடிப்படையில்தான். இங்கே இருப்பதெல்லாம் ஒரு ஸத்ய-வஸ்து; அதனுடன் மித்யாவான பெயரும்-வடிவமும்(நாம-ரூபம்) சேரும்போது அது பலவாகத் தெரிகிறது. எனவே ஸத்யத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை அறிந்த ஞானிக்கு, எந்த நேரத்திலும் எந்த ஆச்சரியமும் ஏற்படப்போவதில்லை. ஒரு புதிய பொருள் அவருக்கு காட்டப்படும்போது, அதில் அவர் ஸத்யத்தையும் நாம-ரூபத்தையும் மட்டுமே காண்பார். ஒருகால், ஈஷ்வர மஹிமை குறித்த கூடுதல் அங்கீகாரம் இருக்கலாம். ஆனால் அது அவரது முழுமையில் எதையும் கூடுதலாக சேர்த்துவிடப் போவதில்லை. இந்த முழுமை குறித்த அறிவை நாம் ஸர்வஞானம் என்று அழைக்கிறோம். இந்த அறிவைப் பெற்றவர் ஸர்வவித். இதை அறிந்தவன், ஸம்சாரத்திலிருந்து விடுபட்டவன், மதிமயக்கமற்றவன் ‘அஸம்மூட4’ ஆகின்றான். ஆத்மாவாகிய தன்னிடமிருந்து பிரிக்கப்படாத ஈஷ்வரன் மட்டுமே இங்கே இருக்கிறார் என்பதை அவன் அறிவான்.
=> ஞான பலன்:
இத்தகைய ஞானத்தின் பலன் என்ன? என்னை அனைத்துமாக வழிபடுகிறான் — மாம் ஸர்வபா4வேந ப4ஜதி, என்கிறார் பகவான். இதன் பொருள் என்னை அடைகிறான் என்பதாகும். அதாவது, அவனையும் என்னையும் பிரிக்காத, பிளவுபடாத பக்தியோடு வழிபடுகிறான், அதனால் என்னை அடைகிறான். ஒருவன் ஏற்கனவே புருஷோத்தமனாக இருக்கின்ற காரணத்தினால், ‘நான் புருஷோத்தமன்’ என்கிற ஞானமே அதன் பலனாக ஆகிறது. தன்னிடமிருந்து எதுவும் வேறாக இல்லை என்கிற தரிசனத்தின் மூலம், அனைத்துயிர்களின் சுய-சொரூபமாக அவன் தன்னையே பார்க்கிறான் — ஸர்வபா4வேந. இதுவே ஜீவன்முக்தி நிலை.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஈஷ்வர தரிசனத்தைப் பெற்ற பிறகு, ஈஷ்வரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும். ஆனால் ஈஷ்வரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது. இன்னும் அதைவிட மேலான தோற்றமோ சுத்தசாத்விக பக்தர்களிடம் இருக்கும்.
---------------------------------------------------------------------------------------------