செவ்வாய், 16 செப்டம்பர், 2025

புருஷோத்தம யோகம் 15.20

||15.20|| முடிவுரை:

इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ।

एतद् बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत ।। २० ।।

இதி கு3ஹ்யதமம் சா1ஸ்த்ரமித3முக்தம் மயாநக4

ஏதத்3 பு3த்3த்4வா பு3த்3தி4மாந் ஸ்யாத் க்ருதக்ருத்யச்1 பா4ரத ।। 20 ।।


अनघ  அநக4  பாபமற்றவனே     इति  இதி  இங்ஙனம்     गुह्यतमं  கு3ஹ்யதமம்  ஆழ்ந்த ரகசியமான    इदम्  இத3ம்  இந்த     शास्त्रम्  சா1ஸ்த்ரம்  சாஸ்திரம்     मया  மயா  என்னால்      

उक्तं  உக்தம்  உரைக்கப்பட்டது    भारत  பா4ரத  அர்ஜுனா     

एतद् बुद्ध्वा  ஏதத்3 பு3த்3த்4வா  இதை அறிந்து     बुद्धिमान्  பு3த்3தி4மாந்  புத்திமானாகவும்      

कृतकृत्य:   க்ருதக்ருத்ய:   செய்ய வேண்டியதை செய்து முடித்தவனாகவும்      

स्यात्  ஸ்யாத்  ஆகிறான்.


குற்றமற்றவனே, இங்ஙனம் ஆழ்ந்த ரகசியமாகவுள்ள இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப்பட்டது. அர்ஜுனா, இதை அறிபவன் ஞானியும், செய்யத்தக்கதை செய்துமுடித்தவனாகவும் ஆகிறான்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.


விளக்கம்:

என்னால் சொல்லப்பட்ட இந்த உபதேசம் மிக மிக ரகசியமானதுஇத3ம் சா1ஸ்த்ரம் மயா உக்தம் கு3ஹ்யதமம்’, என்கிறார் பகவான். எதன் காரணமாக புருஷோத்தமனை குறித்து பகவான் அளித்த இந்த உபதேசம் ரகசியமானது எனக் கூறப்படுகிறது என்பதை சிறிது விசாரம் செய்யலாம்.


=> ரகசியம்:

உலகில் பல ரகசியங்கள் இருந்தாலும், அதனுடைய இயல்பு, மதிப்பு மற்றும் புனிதத்தன்மையின் அடிப்படையில் இந்த ரகசியத்தைப் போன்று முழுமையானது எதுவுமில்லை. எனவே, இது மிகவும் ஆழ்ந்த ரகசியம்கு3ஹ்யதமம்.

புருஷோத்தமன் என்றால் என்ன? அதுவே எல்லாமுமாக இருக்கிறது எனப் பார்த்தோம். இவ்வுலகில் அழிகிற தன்மையுடைய க்ஷர-புருஷனாகவும், அது சென்று ஒடுங்கும் அழியாத அக்ஷர-புருஷனாகவும் விளங்கிக் கொண்டிருப்பது உண்மையில் ஸத்ய-வஸ்துவான புருஷோத்தமன் மட்டுமே. எனவே இயல்பினால் இது முழுமையானது

புருஷோத்தமனை பற்றிய இந்த அறிவு ஒருவனுக்கு முக்தியை(விடுதலையை) அளிப்பதால் இதை விட மதிப்புமிக்கது எதுவுமில்லை. இந்த அறிவு ஒருவனை பாதுகாப்பின்மை, துயரம், மற்றும் அனைத்து வகையான வரம்புகளிலிருந்தும் விடுவிக்கிறது. ஒவ்வொருவரின் ஆனந்தமும் இந்த ஆனந்தத்தின் ஒரு பகுதியே என்பதால் இதனுடைய மதிப்பு முழுமையானதாக இருக்கிறது.

புனிதத்தின் அடிப்படையிலும் இது முழுமையானது. புனிதமான எந்தவொன்றும் தூய்மைப்படுத்தும் சாதனமாக இருக்கிறது. இந்தம்சார உலகில் பலவகையான தூய்மைபடுத்தும் சாதனங்கள் இருக்கின்றன. ஆனால் புருஷோத்தமனை பற்றிய இந்த அறிவு ஒருவனின் அறியாமையை நீக்குவதால் அது அவனைம்சாரத்திலிருந்தே தூய்மைப்படுத்துகிறது, அக்ஞாந. இதனால், இந்த ஞானத்தைக் காட்டிலும் தூய்மைப்படுத்துவது இங்கே எதுவும் இல்லை ஹி ஜ்ஞாநேந ஸத்3ருச1ம் பவித்ரமிஹ வித்3யதே. எனவே புனிதத்தன்மையைப் பொறுத்தவரை, இது புனிதமான அனைத்திற்கும் தங்குமிடமாக இருக்கிறது. எல்லாப் புனிதமும்நான்என்பதிலிருந்து மட்டுமே வருகிறது, இந்தநான்என்பதே புருஷோத்தமன்.

பொதுவாக, எந்த வகையிலும் கண்டுபிடிக்க முடியாமல் நன்றாக மறைக்கப்பட்ட ரகசியமே மிகச் சிறந்த ரகசியமாக கருதப்படும். அந்த வகையில் சிறப்பான மறைவிடம் எது? எவனொருவன் ஒன்றைத் தேடுகிறானோ அவனைவிட சிறப்பான மறைவிடம் இருக்க முடியுமா என்ன! எனில் வாழ்க்கை முழுதும் தேடப்படுபவரான பகவானுக்கான சிறந்த மறைவிடம், தேடுபவனாகவே உள்ளது. உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும் தேடுபவன்தான் அவன் தேடிக்கொண்டிருப்பவனாக ஆகிறான். அதனால்தான் ஸ்ருதிகள் அவனை தடுத்து, ‘நீயே அந்த தேடப்பட்டவனாக இருக்கிறாய்என்கின்றன. தேடுபவனிடமிருந்து வேறாக புருஷோத்தமன் இல்லை என்கின்றன.  

தேடப்படுவது கண்டறியும் வரை அவனால் தேடலை கைவிட முடியாது; ஆனால் தேடிக் கொண்டேயிருக்கும்வரை, அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. இங்கு உதவியற்ற தன்மை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், முழு தேடலையும் நிறுத்திவைத்து, ‘நீயே தேடப்பட்டவன்என்பதை அவனுக்கு காட்ட வெளியில் இருந்து ஏதாவது உதவி தேவைப்படுகிறது. அது பிரமாணத்தின் வாயிலாக கிடைக்கிறது. அது உருவாக்கும் ஞான-விருத்தியானது, தேடப்படுபவர் குறித்த அறியாமையை அழிக்க வழிவகுக்கிறது. இப்படிப்பட்ட இந்த அறிவு மிக ரகசியமானது, கு3ஹ்யதமம்


=> சாஸ்திரம்

பகவான் இங்குஇந்த சாஸ்திரம்எனக் குறிப்பிடுகிறார்இத3ம் சா1ஸ்த்ரம். பொதுவாகநான்என்பதன் இயல்பை பற்றிய அறிவை கொடுக்கும் பிரமாணமாகிய உபநிஷத்துக்கள் சாஸ்திரம் எனப்படுகிறது. கீதையின் கருப்பொருளும் அதுவாகவே இருப்பதால் இதுவும் உபநிஷத்தாக, சாஸ்திரமாகக் கருதப்படுகிறது. உபநிஷத்துக்கள் யாராலும் இயற்றப்படவில்லை, அது ஈஷ்வரனிடமிருந்து வந்தது. கீதை கிருஷ்ணரால் இயற்றப்பட்டது, கிருஷ்ணரை ஈஷ்வரனாக சிரத்தையுடன் ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதுவும் ஒரு உபநிஷத்தே. அல்லாமல், வியாசனின் ஒரு படைப்பாக மட்டுமே கிருஷ்ணரை பார்ப்பவர்களுக்கு இது ஸ்ருதி-யாக இல்லாமல் ஸ்மிருதி-யாக ஆகிறது. ஆனால், உபநிஷதங்களின் கருப்பொருள் கிருஷ்ணரின் வாயிலாக மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் வழங்கப்படுவதால், கீதையும் ஒரு உபநிஷதம் போன்றதே ஆகும். அதனால்தான் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும்பகவத் கீதை என்னும் உபநிஷத்’ — 43வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு, எனக் கூறப்படுகிறது

பகவத்கீதை முழுதும் சாஸ்திரம் எனப்படுகிறதெனினும் இந்த அத்தியாயம் மட்டும் சிறப்பாக சாஸ்திரம் எனப்படுகிறது ஏனென்றால் வேதாந்தத்தின் சாரம் முழுதும் இதில் இருக்கிறது. இங்கு ஈஷ்வரனை குறித்த முழு விசாரணையும், அந்த ஞானத்தை அடையத் தேவையான தகுதிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறதுநிர்மாநமோஹா ஜிதஸங்க3தோ3ஷா அத்4யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:. மேலும் ஸம்சாரம், அதன் ஆதாரம், அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அது தன்னை எப்படி நிலைநிறுத்துகிறது என்பது குறித்தும் ஆல மரத்தை உதாரணமாகக் கொண்டு தெளிவாக விளக்கப்படுகிறதுஅச்1வத்த2ம் அவ்யயம். மேலும் அந்த ஸம்சாரத்தை பற்றின்மை எனும் ஆயுதத்தால் எப்படி வெட்டி வீழ்த்துவது எனவும் கூறப்படுகிறதுஅஸங்க31ஸ்த்ரேண த்3ருடே4 சி2த்த்வா

அதேபோல, சூக்ஷமமான உடல்(ஜீவன்) எவ்விதம் இடம் விட்டு இடம் நகர்கிறது என்றும், ஜீவனைப் பற்றிய உண்மையை விவேகமற்றவர்கள் பார்ப்பதில்லை, ஞானக் கண்களை உடையவர்களே பார்க்கிறார்கள் என்றும் பகரப்படுகிறதுஜ்ஞாநசக்ஷுஷ: பச்1யந்தி.

பின்னர், ஆத்மாவே அனைத்தும், எனக் காட்டப்படுகிறது. ‘சூரியனிலும் சந்திரனிலும் நெருப்பிலும் பிரகாசமாக நான் இருக்கிறேன், தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை அருளுபவன் நான்புஷ்ணாமி ஓஷதீ4: ஸர்வா. உணவை உண்பவனும் நான்; உயிரினங்களில் செரிமான நெருப்பாக இருந்து நானே நான்கு வகையான உணவை ஜீரணிக்கிறேன்அந்நம் சதுர்வித4ம் பசாமி. பின்னர், சூக்ஷம சரீரம் உட்பட உணவில் இருந்து பிறந்த உடலும் நானே, புலனுறுப்புகள், நினைவாற்றல், அறிவு மற்றும் மறதி அனைத்தும் என்னிடமிருந்தே வருகின்றனமத்த: ஸ்ம்ருதி: ஞாநம் அபோஹநம் . இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாற்றத்திற்கு உள்ளாகி அழியக்கூடியவனாக இருப்பவனும், எப்போதும் மாறாமல் இருப்பவனும் நானேக்ஷர: அக்ஷர: . எல்லாமுமாக இருப்பவனும், எல்லாவற்றையும் அறிபவனுமாகிய உத்தம-புருஷன் நான். எல்லா வேதங்களாலும் அறியப்படுபவன் நானேவேதை3: ஸர்வை: அஹம் ஏவ வேத்3:’, என்கிறார் பகவான்

இதற்கு மேலும் கூற இங்கு எதுவுமில்லை. முழு வேதாந்த சாஸ்திரமும், முழு கீதையின் சாரமும் இந்த அத்தியாயத்தில் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. எனவேதான் பகவான் அர்ஜுனனிடம், ‘இந்த சாஸ்திரம் என்னால் உனக்கு சொல்லப்பட்டதுஎன்கிறார்


=> புத்தியுடையவன்:

இந்த சாஸ்திரத்தை இங்கு கூறியுள்ளபடி புரிந்து கொண்டவன் புத்தியுடையவன்ஏதத்3 பு3த்3த்4வா பு3த்3தி4மாந், என்கிறார் பகவான். ஒவ்வொரு மனிதனும் புத்தியுடன் கூடியவன்தான். எனில் ஏன் பகவான் இங்கு குறிப்பாக இந்த அறிவை புரிந்து கொண்டவனை புத்தியுடையவன் எனக் கூறுகிறார்? புத்தி என்பது வெறும் அறிதிறன் மட்டுமல்ல, அது இங்கு பகுத்தறியும் மதிநுட்பத்தைக் குறிக்கிறது. பசு ஒன்றிற்கு அதனுடைய செயல்நிரல் என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அதற்கு விவேகம் தேவையில்லை. எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் அது செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்யும். ஆனால் மனிதனைப் பொறுத்தவரை அங்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், மதிநுட்பத்தை சரியாக பயன்படுத்தும்போதே அங்கு தேர்வும் சரியானதாக ஆகிறது. எனவே, என்ன செய்ய வேண்டும், மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதைக் குறித்த பகுத்தறியும் திறன் விவேகம் எனப்படும். இந்த விவேகத்தை உடையவன் புத்தியுடையவன் ஆகிறான். இந்த விவேகமே, உண்மையில் ஒருவன் வாழ்க்கையில் எதை அடைய விரும்புகிறான் என்பது பற்றிய தெளிவுக்கும்(புருஷார்த்த விவேகம்), எது உண்மையானது மற்றும் உண்மையற்றது(நித்ய-அநித்ய விவேகம்) என்கிற அறிவிற்கும், எதுநான்மற்றும்நான்-அல்லாதது’(ஆத்ம-அனாத்ம விவேகம்) என்கிற ஞானத்திற்கும் இட்டுச் செல்கிறது. இவை அனைத்தையும் கொண்ட ஒருவன் புத்திமான்பு3த்3தி4மாந்.


=> செய்யத்தக்கதைச் செய்தவன்:

இப்படிப்பட்ட புத்திமான், கிருதார்த்தனாக, அதாவது செய்ய வேண்டியதை செய்து முடித்தவனாக ஆகிறான்க்ருதக்ருத்ய. பரமாகிய ப்ரம்மத்தை அறிபவனே ஞானியாகிறான். அவனுடைய கடமைகளெல்லாம் ப்ரம்மஞானத்தைப் பெறுதலில் முற்றுப்பெறுகின்றன. மெய்ப்பொருளை அறிய முயலுவதைவிட மேலான கடமை மனிதனுக்கு இல்லை; இதைக்காட்டிலும் மேலான புருஷார்த்தம் எதுவுமில்லை. பரத்தை அறிபவன் பரத்தை அடைகிறான். பரத்தை அறிபவன் பரன் ஆகிறான். அவனே முக்தனாகிறான். அவனே முழுமையான மனநிறைவை அடைந்தவன் ஆகிறான்.  

இதைச் செய்யாமல் சாதிக்க வேண்டிய அனைத்தையும் சாதித்துமுடிக்க வழி இல்லை எனக் கூறி சங்கரர், கீதையின் நான்காவது அத்தியாயத்தில்(4.33) சொல்லப்பட்டதை மேற்கோள் காட்டுகிறார், ‘ பார்த்தா, எல்லா கர்மங்களும் ஞானத்தில் முற்றுப்பெறுகிறதுஸர்வம் கர்மாகி2லம் பார்த2 ஜ்ஞாநே பரிஸமாப்யதே’.

மேலும் அவர் மனுஸ்மிருதியை(12.93) மேற்கோள்காட்டுகிறார், ‘ஒரு முமுக்ஷுவுக்கு, உண்மையில் இந்த ஞானமே அவரது பிறப்பின் முக்கிய குறிக்கோளாகும். அவர் பல விஷயங்களைச் சாதித்திருக்கலாம், ஆனால் இரு முறை பிறந்தவரான அந்த முமுக்ஷு வேறு எந்த வழியிலும் அல்லாமல், ஞானத்தினால் மட்டுமே செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துமுடிக்கிறார்’.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பெறுதற்கரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப் பிறவியிலேயே ஈஷ்வரனை அறிய முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனேயாவான்.

---------------------------------------------------------------------------------------------

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे पुरुषोत्तमयोगो नाम पञ्चदशोऽध्याय: ।। १५ ।।

ஓம் தத் ஸத்।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 புருஷோத்தமயோகோ3 நாம பஞ்சத3சோ1ऽத்4யாய: ।। 15 ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் புருஷோத்தம யோகம் என்ற பதினைந்தாம் அத்தியாயம்.

---------------------------------------------------------------------------------------------

புருஷோத்தம யோகம் - சாரம்:

(1) ஸம்சார வர்ணனை, அரச மர உதாரணம்  [1 - 2]

(2) ஸம்சார விருக்ஷத்தை நீக்க உபாயம் [3 - 5]

(3) ப்ரம்ம சொரூபத்தின் லக்ஷணம் [6]

(4) ஜீவ சொரூப விசாரம் [7-11]

(5) ப்ரம்ம தத்துவம் ஈஷ்வரனாகவும் உலகாகவும் விளங்குகிறது [12 - 15]

(6) உபநிஷத்தின் சாரம் - க்ஷரம், அக்ஷரம், உத்தமம்  [16 - 18]

(7) ஞானத்தின் மஹிமை மற்றும் பலன் [19 - 20]

---------------------------------------------------------------------------------------------