பதினாறாம் அத்தியாயம்
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்
[दैवासुरसम्पद्विभागयोग:]
முகவுரை:
ஒன்பதாவது அத்தியாயம் பனிரெண்டாவது சுலோகத்தில்(9.12), ஒரு குறிப்பிட்ட மனநிலையில் வேரூன்றியவர்களை, அதாவது விவேகமற்றவர்களைக் குறித்து பகவான் பேசினார். இவர்கள், வீண் ஆசையுடையவர்களாக - மோகா4சா1:, பயனற்ற செயல் செய்பவர்களாக - மோக4 கர்மாண:, கோணலறிவுடையவர்களாக - மோக4 ஜ்ஞாநா:, மற்றும் விவேகமில்லாதவர்களாக - விசேதஸ:, இருக்கின்றனர் என்றார். அத்தகையவர்களின் மனநிலை ஒரு அசுரன் அல்லது ஒரு ராக்ஷஸனின் மனநிலையாக இருக்கிறது — ராக்ஷஸீம் ச ஆஸுரீம் ப்ரக்ருதி. மாறாக, அடுத்த சுலோகத்தில்(9.13), தெய்வீக அல்லது ஆன்மீக மனநிலையில் உறுதியாக இருப்பவர்களை குறித்து விவரித்தார் — மஹாத்மாந: தை3வீம் ப்ரக்ருதிம் ஆச்1ரிதா:. மனமுதிர்ச்சியை அடைந்தவர்களாக, அவர்கள் எல்லாவற்றின் மெய்பொருளாக விளங்கும் பகவானைத் தேடுகிறார்கள். இந்த தெய்வீக மற்றும் அசுர மனநிலைகள் இந்த அத்தியாயத்தில் மேலும் விளக்கப்படுகிறது.
‘தைய்வீ’ என்றழைக்கப்படுகிற இந்த தெய்வீக மனநிலை ஒருவனை ஸம்சாரத்திலிருந்து விடுதலை பெற உதவுகிறது. அதேசமயம், அசுர மற்றும் ராக்ஷஸனின் மனநிலைகள் ஒருவனை ஸம்சாரத்துடன் பிணைக்கின்றது. இங்கு, ஆன்மீக குணத்தை வளர்ப்பதற்கு துணைநிற்கும் மனநிலைகளாக, சில நற்பண்புகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நாம் தவிர்க்கும் பொருட்டு, அசுர மற்றும் ராக்ஷஸ மனநிலைகளின் குணங்களும் அதன் விளைவுகளும் இங்கு சொல்லப்பட்டுள்ளன.
தெய்வீக மற்றும் அசுர எனும் இருவகை குணங்களும் ஒரு தனிநபரிடம் மிகவும் இயல்பானதாக இருப்பதாகத் தெரிகிறது. ஒரு கொலை குற்றவாளியும்கூட சில சூழ்நிலைகளில் அனுதாபம், நட்பு மற்றும் பாசம் முதலியவற்றைக் கொண்டிருப்பான். சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்படும் நிலையில் இருக்கின்ற சான்றோனிடமும்கூட கோபமும் பொறாமையும் இருக்கும். இவ்விதம் எதிர் குணங்களும் இயல்பானதாகத் தெரிந்தாலும், உண்மையில் அவை அப்படியல்ல. ஏனெனில் அசுர குணங்கள் ஆத்மாவின் இயல்புக்கு ஒன்றிப்போவதாக இல்லை. எனவே அவைகள் இயற்கைக்கு எவ்வளவு மாறானவை என்பதை முதலில் அக்குணங்களைப் புரிந்துகொள்வதன் மூலமும், பின்னர் நற்பண்புகளை வளர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலமும் செய்ய வேண்டும். தனது சரியான புரிதலுக்கு ஏற்ப, ஒருவன் புதிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல பழைய புரிதலில் வேரூன்றியுள்ள பழக்கங்களை உடைக்க வேண்டும். இதைச் செய்தற்கு இந்த பதினாறாவது அத்தியாயம் நமக்கு உதவுகிறது.
=> குணங்கள்:
எந்த குணம் பிரதானமாக இருக்கின்றதோ, அதன் அடிப்படையில் ஒருவனை சத்வகுணப் பிரதானமானவன், ரஜோகுண பிரதானமானவன் மற்றும் தமோகுணப் பிரதானமானவன் எனக் கூறலாம்.
தமோ குணத்தை பிரதானமாகக் கொண்டவனாக ராக்ஷஸன், குரோதம் மற்றும் வெறுப்புடன் கூடியவனாக, மற்றவர்களை ஹிம்சைபடுத்துவதை தனது இயல்பாகக் கொண்டவனாக இருக்கிறான். அவனின் நடத்தை அடுத்தவர்களின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைகிறது.
ரஜோ குணத்தை பிரதானமாகக் கொண்டவனாக அசுரன், தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மற்றவர்களைத் துயரப்படுத்தும் சுயநலவாதியாக இருப்பான். புலன் சார்ந்த பொருட்களில் மட்டுமே இன்பத்தைக் காண்பவனாக இருப்பதால் தனது நேரத்தையும் சக்தியையும் அதிலேயே வீணாக்குகிறான். பெயர், பதவி, புலனின்பம் போன்ற சிறிய நோக்கங்கள் அவனுக்கு மிகவும் முக்கியமானவை. அவற்றைப் பெற, பிறருக்கு தீங்கு விளைவிப்பதை அவன் பொருட்படுத்துவதில்லை. ஒரு அசுரன் அல்லது ஒரு ராக்ஷஸனின் மனநிலையை உருவாக்குவது அவர்களின் சிந்தனை முறைகளும் மற்றும் நற்பண்புகளின் மீது அவர்கள் கொண்டுள்ள குறைமதிப்பும் ஆகும்.
தமோ குணம் மற்றும் ரஜோ குணம் ஆகிய இரு குணப் பிரதானங்களையும் சேர்த்து இங்கு அசுர-சம்பத் என எடுத்துக் கொள்கிறார் பகவான். ‘ஸம்பத்’ என்பதன் நேரடிப் பொருள் செல்வம்.
இந்த அத்தியாயத்தின் நோக்கம், அசுர-சம்பத் எனப்படும் தீய குணங்களை நீக்கி, தெய்வீக-சம்பத் எனும் நற்பண்புகளை, அல்லது ஆன்மீக செல்வத்தை வளர்ப்பதற்கு உதவுவதாகும். சத்வ குணத்தை பிரதானமாகக் கொண்டவனாக தெய்வீக-சம்பத் உடையவன், எதன் பொருட்டும் மற்றவர்களைத் துன்பப்படுத்த மாட்டான். நல்ல சம்ஸ்காரங்களின் துணையுடன் செய்ய வேண்டிய கர்மங்கள் வழியாகச் சென்று செய்யக் கூடாததை நீக்குகிறான். அவனது மனத்தூய்மை ஆத்ம-ஞானத்திற்கு உபாயமாக ஆகிறது.
எனவே ஒரு சாதகன் இங்கு கூறப்படுகிற தெய்வீக-சம்பத்தை, அடையப்பட வேண்டிய குணங்கள் என்றும், அசுர-சம்பத்தை நீக்கப்பட வேண்டிய குணங்கள் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
||16.1|| தெய்வீக இயல்பு:
श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थिति: ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ।। १ ।।
ஸ்ரீப4க3வாநுவாச
அப4யம் ஸத்த்வஸம்சு1த்3தி4ர்க்ஞாநயோக3வ்யவஸ்தி2தி: ।
தா3நம் த3மச்1ச யக்ஞச்1ச ஸ்வாத்4யாயஸ்தப ஆர்ஜவம் ।। 1 ।।
श्री भगवान् उवाच ஸ்ரீ ப4க3வாந் உவாச ஶ்ரீ பகவான் சொன்னது
अभयं அப4யம் பயமின்மை सत्त्व संशुद्धि: ஸத்த்வ ஸம்சு1த்3தி4: உள்ளத்தின் தூய்மை
ज्ञानयोग व्यवस्थिति: ஞாநயோக3 வ்யவஸ்தி2தி: ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல் दानं தா3நம் கொடை दम च த3ம ச புலனடக்கம் यज्ञ च யக்ஞ ச யாகம் स्वाध्याय: ஸ்வாத்4யாய: சாஸ்திரம் கற்பது तप: தப: தவம் आर्जवम् ஆர்ஜவம் நேர்மை.
பயமின்மை, உள்ளத்தின் தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை, புலனடக்கம், யாகம், சாஸ்திரம் படித்தல், தவம், நேர்மை…
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.
விளக்கம்:
முதல் மூன்று சுலோகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு பண்பும் தெய்வ-சம்பத்துடன் கூடியவனது இயல்பைக் குறிக்கிறது. இதில் மொத்தம் இருபத்தி ஆறு பண்புகள் சொல்லப்படுகிறது. இப்பண்புகளுடன் பிறந்தவன் அல்லது இக்குணங்களை வளர்த்துக் கொண்டவனை தெய்வ சம்பத் உடையவன் என்கிறார் பகவான். ஆன்மீக பாதையில் பயணிக்க விரும்புபவர்கள் இந்த ஒவ்வொன்றையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. இப்பண்புகளின் வாயிலாக மனமானது தூய்மையாகி ஆத்ம ஞானத்தை அடையத் தேவையான முதிர்ச்சியை கொடுக்கிறது. இனி இவைகள் குறித்த விசாரணையை துவங்கலாம்.
=> [1] பயமின்மை:
‘அப4யம்’ என்பது அஞ்சாமையைக் குறிக்கிறது. இங்கு கூறப்படும் இந்த பண்பு என்பது இருமை உணர்விலிருந்து விடுபடுவதால் ஒரு ஞானிக்கு இருக்கின்ற முழுமையான பயமின்மையைக் குறிக்கவில்லை. அது ஞானத்தினால் மட்டுமே அடையப்படுவது ஆகும். மாறாக இங்கே ஒரு சாதகனின் மனதின் பண்பை, அல்லது அவன் அடைய வேண்டிய குணத்தை விசாரிப்பதால் முதலில் பயத்தின் தன்மைகளை பற்றிச் சிறிது ஆராயலாம்:
(1) மகரிஷி பர்த்ருஹரி தனது வைராக்ய ஸதகம் எனும் நூலில், இவ்வுலகில் எல்லா பொருள்களும் பயத்துடன் சேர்ந்தே உள்ளது. அடையப்படுகின்ற அந்தந்த பொருள்களின் மதிப்பிற்கு சமமானதாக அந்த பயம் இருக்கிறது என்கிறார். அவர் ஒரு சுலோகத்தில் பலவகையான அச்சங்களைப் பட்டியலிடுகிறார். போகத்தினால் நோய் பயம்(அதிக போகத்தை அடையும் புலன் தேய்வடைந்து நோய்க்கு உள்ளாகிறது), குலப் பெருமையினால் குல-நாச பயம், பணத்தினால் திருட்டு அல்லது வரிகள் குறித்த பயம், புகழினால் அது தன்னை விட்டுச் சென்றுவிடுமோ எனும் பயம், பலத்தினால் பகைவனிடமிருந்து பயம், உடலழகினால் வயோதிக பயம், பண்டிதர்களுக்கு இனியொரு பண்டிதனைக் குறித்தும், நல்ல பண்புடையவர்களுக்கு அதை விரும்பாதவர்கள் யாரேனும் அதற்கு கலங்கம் விளைவித்து விடுவார்களோ என்றும் பயம், எனக் கூறி இறுதியாக வைராக்கியமிருந்தால் அபயம் என்கிறார்.
(2) இனியொரு கோணத்தில் பயத்தை மூன்றாகப் பிரிக்கலாம்:
(i) நாச-பயம்: நமக்கோ அல்லது நமது உடைமைகளுக்கோ அழிவு வந்துவிடுமோ எனும் பயம்.
(ii) துயர-பயம்: துயரத்தை குறித்த பயம். இது பொதுவாக எதிர்காலத்தை குறித்ததாக இருக்கிறது. விரும்புவது சென்றுவிடுமோ அல்லது விரும்பாதது வந்து சேர்வதால் துயரம் வந்துவிடுமோ எனும் அச்சம். உண்மையில் இப்படிபட்ட சூழ்நிலை வரும்போது ஏற்படும் துயரம் 5% எனில், அது நேர்ந்துவிடுமோ எனும் பயத்தினால் வரும் துயரம் 95% -மாக உள்ளது. இது அர்த்தமற்றது ஏனெனில் இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயத்தினால் துன்பப்படுகிறோம்.
(iii) அறியாமை-பயம்: ஒரு விஷயத்தைக் குறித்த அறியாமையினால் உண்டாகும் பயம்.
=> பயமின்மைக்கான உபாயம்:
(1) வைராக்கியம்:
ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ள பற்றே பயமாக வெளிப்படுகிறது. பொதுவாக பற்று மூன்று விதமாக வெளிப்படும்: பயம், லோபம் மற்றும் குரோதம். எனவே பற்றற்ற தன்மை அஞ்சாமைக்கு அச்சாரமாகிறது.
(2) விவேகம்:
அறிவின் துணையுடன் பயத்திலிருந்து விடுபடுதல். எது நிச்சயமாக நடக்குமோ அது குறித்து பயப்படுவதாலோ, அல்லது அதை தடுக்க நினைப்பதாலோ பயனில்லை. உதாரணமாக மரணபயத்தை எடுத்துக் கொண்டால் அதை பின்வருமாறு விசாரிக்கலாம். எது மரணத்தை அடையப் போகிறது? உடல். அது நிச்சயமாக இறக்கத்தான் போகிறது; அதை தடுக்க எதனாலும் இயலாது. மரணிக்கும் இயல்புடைய ஒன்று கண்டிப்பாக மரணிக்கும்; அழியாதது எப்போதும் அழியாது. மரணம் என்பது உடலுக்குத்தான், ஆத்மாவிற்கு அல்ல. இதுபோன்ற அநித்யத்துவ-விசாரம் செய்யப்பட வேண்டும். மேலும் உடல் என்பது திடீரென்று ஒரு நாள் இறந்து விடுவதில்லை. அது தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகி, சிதைவுற்று இறப்பை நோக்கி பயணிக்கிறது; அழிவை அடைகிறது. தோன்றிய எந்தவொன்றும் அழிவை அடைந்தே தீரும் என்பது படைப்பின் நியதி. இதை எந்த அளவு புரிந்துகொள்கிறோமோ அந்த அளவு வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழலாம். ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் ஒரு வரமாக மாற்றலாம்.
(3) அப்யாசம் அல்லது தியானம்:
சரி, உடல் அழிகிறது எனில் ‘நான்’ மரணிக்கிறேனா? கண்டிப்பாக இல்லை. ஆத்மா காலத்திற்குட்பட்டது அல்ல, எனவே அழியாதது. எந்தவொரு உணர்வைப் போலவே பயம் என்பது ஒருவித உணர்ச்சி என்பதால் அது ஒரு எண்ணத்தின் துணை கொண்டு உருவாகிறது. அது கண்டடையப்பட வேண்டும். அந்த குறிப்பிட்ட எண்ணத்தை விசாரணை செய்வதன் மூலம் அந்த பயத்திலிருந்து விடுபடலாம். சாதகன் ஒருவன் தன்னிடம் என்னென்ன பயங்கள் உள்ளன, எவ்வளவு ஆழமாக அவைகள் பதிந்திருக்கின்றன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பின்னர் அவைகளை ஒவ்வொன்றாக எடுத்து, சிந்தித்து, தியானம் செய்து அதைக் கடக்கலாம்.
ஒரு எண்ணத்தையோ அல்லது சிந்தனை முறையையோ எடுத்துக் கொண்டு அதற்கு எதிர்மாறான எண்ணத்தை உருவாக்கி அதை நடுநிலையாக்குவதை ‘ப்ரதிபக்ஷ-பா4வநா’ என்கிறோம். உதாரணமாக மரணபயம் ஏற்படும்போது, ‘நான்’, ஆத்மா, மரணத்திற்குட்பட்டவன் அல்ல என்கிற உண்மையை இங்கு அறிவாற்றலைக் கொண்டு அங்கீகரித்து, பய-உணர்ச்சிக்கு காரணமான எண்ணத்தை நடுநிலையாக்க வேண்டும். ‘நான் இறந்துவிடுவேன்’ என்கிற எண்ணம் எழும்போது கூடவே, ‘உடல் இறந்துவிடும்; அது தவிர்க்க முடியாதது. ஆனால் நான் இன்று உயிருடன் இருக்கிறேன் என்பது கொண்டாட வேண்டிய விஷயம்’ என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். இதுபோன்ற எதிர் எண்ணங்களை உருவாக்குவதன் மூலம் நடுநிலையாக்குதல் நடைபெறுகிறது.
(4) சிரத்தை: பகவானின் மீது, தர்மத்தின் மீது, நேர்மையான வாழ்க்கைமுறையின் மீது, பயமின்மை எனும் பண்பின் மீது நம்பிக்கை வைத்தலின் மூலம் இப்பண்பை அடையலாம்.
=> அபயத்தின் வகைகள்:
இரு வகையான பயமின்மை உள்ளது.
(1) சாதனை ரூப அபயம் - இங்கு பகவானால் பேசப்பட்டுள்ள இந்த பண்பு சாதனை ரூபமான பயமின்மையைக் குறிக்கிறது; ஒரு சாதகனால் அடையப்படவேண்டியது.
(2) சாத்ய ரூப அபயம் - இது லக்ஷியமாக அடையப்பட வேண்டிய மோக்ஷத்தைக் குறிக்கிறது. பயத்தின் மூலகாரணம் இருமை, அதாவது தனக்கு வேறானதாக ஒன்றைப் பார்ப்பதால் வருகிற பயம். அர்ஜுனன் விஷ்வரூபத்தை தனக்கு வேறானதாக பார்த்ததாலேயே பயத்தை அடைந்தான். எனவே, இருமை புத்தியை ஆத்ம ஞானத்தைக் கொண்டு நீக்குவதன் மூலம் அடையப்படுகிற மோக்ஷம், சாத்ய ரூப அபயத்தை தருகிறது.
=> அபயத்தின் பலன்:
அபயத்தின் பயனாக மனசாந்தி கிடைக்கிறது. இது ஒரு சாதகன் ஆத்ம ஞானத்திற்கான சாதனைகளில்(சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனம்) ஈடுபடும் மனநிலையைக் கொடுக்கிறது.
=> [2] உள்ளத்தூய்மை:
‘ஸத்த்வ ஸம்சு1த்3தி4’ என்பது அந்தக்கரண-சுத்தியை, மனத்தூய்மையைக் குறிக்கிறது. பொதுவாக தெய்வீக-சம்பத்தாக கூறப்பட்டுள்ள அனைத்து பண்புகளையும் சரியாகப் புரிந்துகொள்வது மற்றும் அதை அடைவது மனத்தூய்மையாகப் பார்க்கப்படும். ஆனால் இங்கு அது ஒரு தனிப்பண்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது தூய்மையான சிந்தனையைக் குறிக்கிறது. வஞ்சகமும் ஏமாற்றுதலும் பொய்யுமின்றி பிறரோடு இணக்கம் கொள்ளுதலைக் குறிக்கிறது.
நீக்கப்பட வேண்டிய குணத்திற்கு எதிரான குணத்தை வளர்க்கும் ‘ப்ரதிபக்ஷ பாவ4நா’, பகவானிடம் சரணடைதல் மற்றும் சத்சங்கம் ஆகியவை உள்ளத்தூய்மையை அடையும் உபாயங்கள் ஆகும்.
=> [3] ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்:
அடுத்ததாக ‘ஞாநயோக3 வ்யவஸ்தி2தி’ எனும் பண்பு கூறப்படுகிறது. இதில் ‘ஞாந’ என்பது ஆத்ம-ஞானத்திற்கு சாதனமாக விளங்கும் சிரவணம் மற்றும் மநநத்தைக் குறிக்கிறது. ‘யோக3’ என்பது ஞான நிஷ்டைக்கான தியானமான நிதித்யாசனத்தைக் குறிக்கிறது. ப்ரம்மத்தை தியான விஷயமாக எடுத்துக் கொண்டு, புலன்களை அதனதன் விஷயங்களிலிருந்து விலக்கி, மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி அறிவில் இருந்து பழகுதல் நிஷ்டை எனப்படும். அதாவது சாத்யத்தை அடையும் வரை ஞானத்திலும் யோகத்திலும் இருக்கின்ற நிலைத்தன்மையை ‘வ்யவஸ்தி2தி’ எனும் சொல் குறிக்கிறது.
ஞானம் என்பது சாஸ்திரம் மற்றும் குருவிடமிருந்து பெறப்பட்ட ஆத்ம-ஞானம் ஆகும். இங்கு ‘ஆத்மா’ மற்றும் ‘ப்ரம்மம்’ என்பதன் அர்த்தம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பின்னர், அந்த புரிதலுக்குரிய பலனை மறுக்கின்ற அனைத்து தடைகளிடமிருந்தும் அது விடுவிக்கப்பட வேண்டும். இது நிதித்யாசனத்தின் மூலம் நடைபெறுகிறது. தன்னிலிருந்து வேறாக இல்லாததான அந்த அறிவில், ஒருவன் முயற்சியுடன் இருக்கவேண்டிய அவசியமில்லாத ஒரு காலம் வரும் வரை அவன் அதில் இருந்து பழக வேண்டும். அதுவரை முயற்சி தொடர்தல் வேண்டும். தியானத்தில் நேரத்தை செலவிடும் இந்த போக்கு, தெய்வீக-சம்பத்தையுடைய ஒருவனுக்கு மிகவும் இயல்பானது.
* நிலைத்தன்மைக்கான உபாயம்:
(1) முமுக்ஷுத்வம்: தன்னறிவில் இருக்கின்ற தீவர இச்சை முமுக்ஷுத்துவம் எனப்படும். ஆத்ம சாதனத்தில் தொடர்ந்து ஈடுபடுதலில் உருவாகும் தடையின் அளவு என்பது நமது இந்த இச்சையைப் பொறுத்தது. தீவிர இச்சை இருக்கும்போது தடை பெரிதாகத் தெரியாது. ஆகையினால் முமுக்ஷுத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
(2) சத்சங்கம்: இந்தப் பாதையில் இருக்கும் மற்ற நபர்கள், இது குறித்த புத்தகங்கள் என இதை ஞாபகப்படுத்தும் சூழ்நிலையை அமைத்துக் கொள்வதன் மூலம் எப்போதும் இந்த ஞானத்தின் மஹிமையை நினைவுபடுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.
=> [4] தானம்:
தனக்கு பயன்படுகிற பொருளை பிறர்க்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது — தா3நம். ஒருவன் தனது திறனுக்கு ஏற்ப கொடுப்பது, அல்லது சரியான விநியோகம் தானம் என்பதாகிறது என்கிறார் சங்கரர். அதாவது ஒருவன் தனது சக்திக்குட்பட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டுமே கொடுத்தல் வேண்டும். இப்போது கொடுத்துவிட்டு, பின்னர் அவன் தானம் பெற வேண்டிய நிலைக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். கொடுத்தலில் பொறுப்பும் வரம்பும் இருக்க வேண்டும். அதிகப்படியான தானத்தின் காரணமாக, பின்னர் யாராவது அவனுக்கு கொடுக்க வேண்டியிருந்தால், அந்த தானம் அர்த்தமற்றதாகிறது.
* எதைக் கொடுப்பது: தன்னால் இயன்றதை, பிறருக்கு பயன்படும் எதையும் தானமாக கொடுக்கலாம். பணம், அன்னம், மதிப்புமிக்க பொருள்கள் ஆகியவற்றை தானம் செய்யலாம். தனது நேரம் மற்றும் அறிவைக் கொடுத்தலும், தேவைப்படுபவர்களுக்கு அக்கறையும் கவனிப்பும் தருதலும்கூட தானம் ஆகும்.
* யாருக்கு கொடுப்பது: தேவையுடையவர்களுக்கு, தகுதியுடையவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
* எப்படி கொடுப்பது: சிரத்தையுடன் வழங்கப்பட வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது — ச்1ரத்3த4யா தே3யம். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை கொடுப்பவன் அறிந்திருக்க வேண்டும். மேலும் கொடுப்பதில், கொடுப்பவன் மற்றும் பெறுபவன் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக தங்களை உணர வேண்டும். அதுவே தானம் என்றழைக்கப்படுகிறது.
எனவே தானம் கொடுத்தலில் சில மனப்பான்மைகள் முக்கியம். தானம் கொடுத்ததை மறந்து விடுதல் நன்று. தனக்கு தானம் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைவில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் ‘நான் கொடுத்தேன்’ என்கிற பெருமை அதில் இருக்கக்கூடாது. பெறுபவனின் நிலைமையை மாற்றியமைக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி தன்னை அதிர்ஷ்டசாலியாக உணரலாம், ஆனால் பெறுபவனை சிறியவனாகவோ கடமைப்பட்டவனாகவோ உணர வைக்காமல் கொடுப்பதுதான் சிறந்த தானம் ஆகிறது.
* தானத்தின் பலன்: லோபம், கஞ்சத்தனம் மற்றும் பேராசை நீங்கும். மேலும் தானத்தினால் மனம் விரிவடையும். சந்யாசத்திற்கான சக்தியை கொடுக்கும். ஒரு காலத்தில் நாம் அனைத்தையும் விட்டுத்தான் ஆக வேண்டும். மேலும் இது சர்வாத்ம பாவனையை வளர்க்கிறது; ‘நான்’ எனும் பான்மை விரிவை அடைகிறது.
=> [5] புலனடக்கம்(தமம்):
‘ த3ம’ என்பது இந்திரியக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. கட்டுப்பாடு என்பது கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களை ஒழுங்குப்படுத்தல், அமைதிப்படுத்துதல் மற்றும் நல்ல விஷயங்களை கொடுத்துப் பழகுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. புலன்களை போக-விஷயத்திற்கும் தீய சம்ஸ்காரத்திற்கும் பயன்படுத்தாமல் இருத்தலைக் குறிக்கிறது.
மனதின் ஆரோக்கியம் என்பது புலனடக்கத்தைப் பொறுத்தது. மனமானது இரு விதத்தில் சஞ்சலத்தை அடைகிறது:
(1) புலன்கள் அதன் விஷயங்களுடன் சம்பந்தம் வைக்கும்போது,
(2) நினைவுச்சுவடாக இருக்கின்ற சம்ஸ்காரங்களின் மூலம்.
எங்கு இந்திரியத்தை பயன்படுத்தும்போது அது மோஹத்தை அடைகிறதோ, துயரத்தை கொடுக்கிறதோ அங்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அதை பயன்படுத்தாமல் இருந்து பழகுதல் வேண்டும். இந்திரியத்தின் ஈர்ப்பின் வேகத்தை குறைத்துப் பழகுதல் வேண்டும். ஒவ்வொரு இந்திரியமும் நம்மை அதனது விஷயங்களில் ஈர்த்து நமது விவேக சக்தியை எடுத்து விடுகிறது. எனவே இந்திரிய ஈர்ப்பை நெறிப்படுத்த வேண்டும்.
* தமத்திற்கான உபாயம்:
(i) ஆரம்பகாலத்தில், இந்திரியங்களை பலகீனப்படுத்தும் சூழ்நிலைகளைத் தவிர்த்தல்; அந்த சூழ்நிலைகளில் இந்திரியங்களை பயன்படுத்தாமல் இருத்தல். உதாரணம் மெளனம்.
(ii) மோஹத்தை கொடுக்கும் பொருள்களில் வைராக்கியத்துடன் ஈஷ்வர புத்தியைக் கொண்டு வருதல். பகவான் கொடுத்த சூழ்நிலை அல்லது பகவானின் வார்த்தை என அத்தருணத்திற்கு பொருத்தமான ஒன்றை அப்யாசம் செய்து பழகுதல்.
(iii) அல்லது, போக-விஷயங்களில் துவேஷத்தை கொண்டுவருதல். ஆரம்பகாலத்தில் ஒரு குறிப்பிட்ட பிடிப்பு கிடைக்கும் வரை இந்த வழிமுறையை உபயோகிக்கலாம் தவறில்லை.
(iv) அநித்தியத்துவ புத்தி, அதாவது அவ்விஷயம் கொடுக்கும் இன்பத்தில் நிலையற்ற தன்மையைப் பார்த்தல்.
(v) தர்மப்படி இன்பத்தை துய்க்க சாஸ்திரம் அனுமதிக்கிறது. எனவே ஈஷ்வர பிரசாத புத்தியுடன் இருந்து பழகுதல்.
* தமத்தின் பலன்:
(i) சுத்தமான சம்ஸ்காரங்கள், அதாவது மனதிற்கு நல்ல பதிவுகள் கிடைக்கின்றது.
(ii) மனோபலம் அதிகமாகிறது
(iii) மனசாந்தி கிடைக்கிறது.
=> [6] யக்ஞம்:
தான் செய்கின்ற செயல்களின் மூலம் தன்னை கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் எனப்படும். பகவானை வழிபட உதவும் அனைத்துவித செயல்களும் யாகமென்று சொல்லலாம். ‘யக்ஞ ’ என்பது ஒருவன் செய்ய வேண்டிய தினசரி கிருத்தியங்களைக் குறிக்கிறது. அது இரு வகைப்படும்:
(i) ஸ்ரெளத கர்மம் - அக்னிஹோத்ரம் உள்ளிட்ட வேதங்களில் கூறப்படும் சடங்குகள்.
(ii) ஸ்மார்த்த கர்மம் - இது ஸ்மிருதிகளில் ரிஷிகள் கூறும் கர்மங்களைக் குறிக்கிறது. இது பிரார்த்தனைகள், தினசரி பூஜை, மந்திர உச்சாடனம், ஜபம் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.
* பிரார்த்தனையின் பலன்:
அஹங்காரம் குறைகிறது. கடினமான செயல்களைச் செய்கிற சக்தி வளர்கிறது. துயரமான சூழ்நிலைகளைத் தாங்குகிற உறுதி கிடைக்கிறது.
=> [7] சாஸ்திரம் கற்றல்:
வேதங்களை தினமும் ஓதுவது, பாராமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது ‘ஸ்வாத்4யாய’ என்று பெயர் பெறுகிறது. இது புண்ணியத்தை உருவாக்கும் பிரார்த்தனையாகக் கருதப்படுகிறது. சாஸ்திரப்படி புண்ணியமானது ஒருவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லலாம், மேலும் அது ஒருவனின் ஆன்மீகத் தேடலுக்கு தடையாக இருக்கின்ற பழைய பாபங்களை நீக்குவதாக இருக்கிறது. அந்த வகையில் இது ஒரு சாதகன் அடைய வேண்டிய பண்புகளின் பட்டியலில் உள்ளது. ஆன்மீக ரீதியாக ஒருவன் வளரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிற, சிறப்பு வாய்ந்த புண்ணியத்தை கொடுக்கும் ஒரு கர்மமாக வேத பாராயணம் பார்க்கப்படுகிறது. இதை இரு வகையாகக் கூறலாம்:
(1) சப்த கிரஹணம்: இது குறிப்பிட்ட மந்திரங்களையோ சுலோகங்களையோ வெறுமனே மனப்பாடம் செய்து பாராயணம் செய்வதைக் குறிக்கிறது.
(2) அர்த்த கிரஹணம்: இது அவைகளின் பொருளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு படித்தலைக் குறிக்கிறது.
* சுவாத்யாயத்தின் பலன்:
(i) மன ஒருமுகப்பாட்டை வளர்க்கிறது.
(ii) அர்ப்பணிப்புடன் ஒரு விஷயத்தில் ஈடுபடும் உறுதியை உண்டாக்குகிறது.
(iii) புண்ணிய பலனைக் கொடுக்கிறது.
=> [8] தவம்:
உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம். ‘தபதி’ எனில் உருக்குதல் அல்லது உருமாற்றுதல் எனப் பொருள்படும். நற்பண்புகளை அடைய மேற்கொள்ளும் சாதனைகள் தவம், அதன் மூலமாக நம் மனதை உருக்கி நாம் நம்மை உருமாற்றுகிறோம். பொறாமை, கோபம், லோபம் முதலிய தீயகுணங்களை நீக்கி உருமாற்றம் செய்கின்றோம். ‘உண்டோ நம்மைப் போல வஞ்சர்’ என்கிறார் தாயுமானவர்.
தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும்(உற்றநோய் நோன்றல்), மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாதிருத்தலும்(உயிர்க்கு உறுகண் செய்யாமை) ஆகிய அவ்வளவே தவத்தின் இலக்கணமாகும் என்கிறார் திருவள்ளுவர்.
* நான்கு நிலைகளுக்கான தவம்:
(1) பிரம்மச்சரிய ஆஷ்ரமம்(மாணவப் பருவம்) - படித்தல், எளிமை மற்றும் போகத்திற்குச் செல்லாமை.
(2) கிரஹஸ்த ஆஷ்ரமம்(இல்லற வாழ்க்கை) - யக்ஞம், தானம் மற்றும் சில விரதங்களை கடைபிடிப்பது. இங்கு யக்ஞம் என்பது பஞ்ச மஹா யக்ஞங்களைக் குறிக்கிறது — தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், அதிதி யக்ஞம், பூத யக்ஞம்.
(3) வானபிரஸ்தம்(ஓய்வு வாழ்க்கை) - உண்பதில் விரதம், மெளனம் முதலிய தவம்.
(4) சந்யாசம்(துறவு வாழ்க்கை) - புலனடக்கம், மனவடக்கம்.
தவத்தினால் எதையும் அடையலாம் — ஸர்வார்த2 ஸாத4கம். ஒன்றை அடையும்பொருட்டுச் செய்யப்படும் கடின உழைப்பு தவம் ஆகும். எனவே ஒரு பொருளை அடையவும், அதை அனுபவிக்கவும் மற்றும் அதிலிருந்து விடுதலை அடையவும் தவம் தேவை.
* தப உபாயம்:
(1) சிறிதளவு பசியிருக்கும்போது சூக்ஷமமான சில விஷயங்கள் நன்றாகப் புரிகிறது. உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் இருக்கும்போதுதான் உண்ணாமை எனும் விரதத்தை செய்ய இயலும். எனவே தவத்தை மேற்கொள்ள உடல் வலிமை, மன வலிமை மற்றும் அறிவு வலிமை மிக அவசியம்.
(2) அவரவர்களின் சக்திக்குட்பட்டு எதை செய்ய முடியுமோ அதற்கேற்றவாறு தவத்தை ஆரம்பிக்கவும். ஏனெனில் தவம் நம்மை பலப்படுத்த வேண்டுமே தவிர நாசத்தை உண்டாக்கக் கூடாது.
(3) ஒரு வகையில் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களையே தவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்வி, நோய், அவமானம், மனகஷ்டம், விரும்பாத சூழ்நிலை போன்றவைகள் வரும்போது அதை ஒரு தவமாக ஏற்றுப் பழகுதல் வேண்டும்.
* தவத்தினால் அடையப்படும் இரு வகையான பலன்:
(1) முக்கிய பலன் - எதை குறித்து தவத்தில் ஈடுபடுகிறோமோ அது.
(2) அவாந்தர பலன்: நாம் எந்தவொன்றிற்காக தவம் செய்கிறோமோ அதனுடன் பக்க விளைவுகளாகக் கிடைக்கின்ற மற்ற பலன்கள் அவாந்தர பலன் எனப்படும். உதாரணமாக புகழ், பொருள் போன்ற சுகங்கள் கிடைக்கலாம். இந்த அவாந்தர பலனை மனதளவில் தியாகம் செய்யும்போதே தவத்தின் முக்கிய பலன் கைகூடும்.
பதினேழாவது அத்தியாயத்தில் பகவான் மூன்று விதமான தவங்களைக் குறித்து விளக்கமாகப் பேச இருக்கிறார். எனவே அங்கு அதைக் குறித்து மேலும் விரிவாகப் பார்க்கலாம்.
=> [9] நேர்மை:
இந்த சுலோகத்தில் இறுதியாக வரும் பண்பு ‘ஆர்ஜவம்’ ஆகும். சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை எனப்படும். அதாவது, ஒருவன் நினைப்பதைப் பேசுவதும், பேசுவதைச் செய்வதும் ஆகும். பதிமூன்றாவது அத்தியாயத்தில்(13.7) ஞான-சாதனங்களுக்கான பட்டியலில் பகவான் ஆர்ஜவத்தை குறிப்பிடுகிறார். கோணல், கபடம் இல்லாத தன்மை மற்றும் நேர்மை ஆர்ஜவம் — ர்ஜு பா4வோ: அவக்ரத்வம் ஆர்ஜவம், என சங்கரர் அங்கு வரையறுக்கிறார். சாதகனுக்கு இது ஒரு முக்கியமான பண்பாகும், ஏனெனில் ஆர்ஜவத்தில் ஏற்படுகிற எந்தவொரு சமரசமும் விருப்பு-வெறுப்புகளால் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் ஒருவனின் செயல்களை விருப்பு-வெறுப்புகள் தீர்மானிக்கின்ற வரை அங்கு ஞானம் ஏற்படாது. எனவேதான் பகவான் இப்பண்பை முக்கியமானதாகக் கருதி பதிமூன்றாவது அத்தியாயம் மட்டுமல்லாது பதினேழாவது அத்தியாயத்தில் தெய்வீக இயல்புகளின் பட்டியலில் மீண்டும் அதை வலியுறுத்துகிறார்.
---------------------------------------------------------------------------------------------