||16.2|| தெய்வீக சம்பத்துக்களின் தொடர்ச்சி:
अहिंसा सत्यमक्रोधस्त्याग: शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ।। २ ।।
அஹிம்ஸா ஸத்யமக்ரோத4ஸ்த்யாக3: சா1ந்திரபைசு1நம் ।
த3யா பூ4தேஷ்வலோலுப்த்வம் மார்த3வம் ஹ்ரீரசாபலம் ।। 2 ।।
अहिंसा அஹிம்ஸா அஹிம்சை सत्यम् ஸத்யம் வாய்மை अक्रोध: அக்ரோத4: கோபமின்மை त्याग: த்யாக3: துறவு शान्ति: சா1ந்தி: அமைதி अपैशुनम् அபைசு1நம் கோள் சொல்லாமை भूतेषु दया பூ4தேஷு த3யா உயிர்களிடத்து இரக்கம்
अलोलुप्त्वं அலோலுப்த்வம் பொருளை விரும்பாமை मार्दवं மார்த3வம் மிருதுத்தன்மை
ह्री: ஹ்ரீ: நாணம் अचापलम् அசாபலம் மனம் சலியாமை.
அஹிம்சை, உண்மை, கோபமின்மை, துறவு, அமைதி, கோள் சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், தீவிர ஏக்கம் இல்லாமை, இனிமை, நாணம், மனம் சலியாமை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை.
விளக்கம்:
தெய்வீக இயல்புகளை உடையவனது பண்புகள் அல்லது ஒரு சாதகன் அடைய வேண்டிய பண்புகளின் பட்டியல் இந்த சுலோகத்திலும் தொடர்கிறது.
=> [10] அஹிம்சை:
அஹிம்சை என்பது எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பதைக் குறிக்கிறது. தீங்கிழையாமை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் வேறாக நினைக்கும்பொழுது அவைகளுக்கு தீங்கு செய்து தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்கிற எண்ணம் எழுகிறது. அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது. அஹிம்சை என்பது மஹா விரதமாகப் பார்க்கப்படுகிறது.
எந்தவொரு செயலையும் போலவே, தீங்கிழைக்கும் செயலும் உடல், வாய் அல்லது மனம் என மூன்று விதமாக நடைபெறுகிறது. பொதுவாக உடல் ரீதியாக எந்த உயிரினத்தையும் துன்புறுத்துவதை நாம் தவிர்க்கிறோம். அதுபோலவே பேச்சினால் ஒருவரை புண்படுத்துவதையும் கவனத்துடன் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாது மன ரீதியாகவும் ஒருவருக்கு தீங்கு எண்ணக் கூடாது. தியானம் மற்றும் பிரார்த்தனை போன்றவற்றின் துணையுடன் இதிலிருந்து வெளிவர வேண்டும்.
=> [11] வாய்மை:
‘ஸத்யம்’ எனில் உண்மையைப் பேசுவதைக் குறிக்கிறது. சொல் தூய்மை வாய்மை, உடல் தூய்மை மெய்மை, மனதில் தூய்மை உண்மை எனப்படுகிறது. வாய்மையே சிறந்த அறம் என திருவள்ளுவர் உரைக்கிறார். வாய்மையின் பல்வேறு நிலைகள்:
(1) யதா2 த்ருஷ்டம் யதா2 ச்1ருதம் ததா2 பா4ஷணம் - எதைப் பார்த்தோமோ, எதைக் கேட்டோமோ அதை அவ்விதமே சொல்லுதல் வாய்மை. நிகழ்ந்ததை அறிந்ததைக் கூறல்.
(2) அந்ருத வர்ஜநம் - பொய் கூறாமை வாய்மை. அதாவது நிகழாததை கூறாதிருத்தல். பார்த்ததை கேட்டதையெல்லாம் அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. கேட்பவரின் தகுதிற்கேற்ப நிகழ்ந்ததைக் கூறுவது வாய்மை. பொய் உரைக்கக் கூடாது என்பதில் முக்கியத்துவம் இருத்தல் வாய்மை.
(3) சத்தியத்தை உரைக்க வேண்டுமென்பதற்காக ஒருவரின் மனதை புண்படுத்தும் விதத்தில் ஒன்றைச் சொல்லலாம் என்பது தவறான புரிதல் ஆகும். இனிமையாகக் கூறுதல் வேண்டும் என ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ளது - ஸத்யம் ப்3ரூயாத் ப்ரியம் ப்3ரூயாத்.
(4) குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்கிறார் திருவள்ளுவர் - பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
(5) கூறுகின்ற விஷயம் நன்மை(ஹிதம்) பயப்பதாக இருந்தால் பொய்மையும் வாய்மை எனப்படுகிறது — ஸத்யம் ப்3ரூயாத் ஹிதம் ப்3ரூயாத். அதாவது நிகழ்ந்ததை கூறுவதன் மூலம் தீமை உண்டாகுமெனில் அது பொய்மை என்று கருதப்படுகிறது.
ஆகவே, வாய்மை என்பது மிக நுட்பமான ஒரு குணம் ஆகும். நடந்ததை மட்டுமே கூறுதல் மற்றும் நடக்காததை கூறாதிருத்தல் என்பதை அளவுகோலாகக் கொண்டு வாய்மையைக் கடைபிடிக்கலாம்.
* வாய்மையின் பலன்:
(1) இது மனத்தூய்மைக்கு வழிவகுக்கிறது. மற்ற நற்பண்புகளை அடைய உதவுகிறது.
(2) உண்மையை மட்டும் உரைப்பதால் மனப்பளு இருக்காது.
(3) வாய்மை எனும் பண்பு புண்ணியத்தைக் கொடுப்பதால் இக மற்றும் பரலோக சுகங்கள் கிடைக்கின்றன.
(4) எதற்கும் அஞ்சாது நேர்மையாக சூழ்நிலைகளை எதிர்கொள்வதால், இப்பண்பு மனோபலத்தை வளர்க்கிறது.
* வாய்மைக்கான உபாயம்:
(1) திருடாமை, மற்றவர்களைக் குறை சொல்லாமை போன்ற குணங்களைப் பின்பற்ற வேண்டும்.
(2) அளவாக பேசுதல் வேண்டும். இது, எந்த நோக்கத்திற்கும் உதவாத சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதிலும், விஷயம் அல்லது சூழ்நிலை என்ன என்பதை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருப்பதைக் குறிக்கிறது.
(3) தன்னளவில் நேர்மையாக இருத்தல் நல்லது. தகுதியில்லாத புகழ்ச்சியை ஏற்காததும், தனது பலகீனத்தை ஏற்றுக் கொள்ளுதலும் இதில் அடங்கும்.
(4) வாய்மை எனும் பண்பை ஒரு விரதமாக எடுத்துக் கொண்டு கடைபிடித்தல் வேண்டும்.
=> [12] சினமின்மை:
‘அக்ரோத4’ எனில் கோபப்படாதிருத்தலைக் குறிக்கிறது. ஒருவன் தான் செய்ய விரும்பாததை, பேச மற்றும் சிந்திக்க விரும்பாததை செய்வதற்காக தூண்டப்படும்போது அவனுக்கு கோபம் உண்டாகிறது. கோபம் என்பது ஒருவனுக்கு பகைமையுணர்வைக் கொடுக்கிறது; குற்ற உணர்வைக் கொடுக்கிறது. அது ஒருவனின் உடல், மனம் மற்றும் புலன்களின் நலன்களைக் கெடுக்கிறது — தன்னையே கொல்லும் சினம்.
* கோபம் உண்டாக எவை காரணங்கள்:
(1) வெறுப்பு - ஒன்றின் மீதுள்ள வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது.
(2) விருப்பு - விரும்பிய ஒன்றை அடைய விடாமல் தடுப்பவர்களின் மீதும், விரும்பிய ஒன்றின் அழிவிற்கு காரணமாக இருப்பவர்களின் மீதும் கோபம் உண்டாகிறது.
(3) பொறுமையின்மை - பொறுமை இல்லாததன் காரணமாகவும், சலிப்பின் வெளிப்பாடாகவும் கோபப்படுதல்.
(4) எதிர்பார்ப்பு - எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லையெனில் கோபப்படுதல்.
(5) ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்க சிலர் கோபத்தை கருவியாகப் பயன்படுத்துவார்கள்.
(6) ஒருவனின் அஹங்காரம் காயப்படும்போது அது கோபத்தை ஏற்படுத்துகிறது.
(7) சாத்விக குணமுடையவர்கள் அதர்மத்தைப் பார்க்கும்போது பொறுத்துக் கொள்ள இயலாமல் கோபப்படுகிறார்கள்.
(8) சிலருக்கு கோபம் என்பது பழக்கமாகவே இருக்கும். ‘நான் கோபக்காரன்’ எனப் பெருமையாக கூறிக் கொள்பவர்களும் உண்டு.
* மேற்சொல்லப்பட்ட காரணங்களை நீக்க உபாயம்:
(1) வெறுப்பை நீக்குதல் (த்3வேஷ நிவ்ருத்தி) - நல்லதைப் பார்த்தல், கேட்டல் என நமக்கு நன்மையைச் செய்யும் புலன்கள் மற்றும் மனதை தேவர்கள் எனலாம். அதே சமயத்தில் தவறான சிந்தனை மற்றும் அதர்மமான செயலில் ஈடுபடும் புலன்கள் மற்றும் மனதை அசுரர்கள் எனலாம். ஒவ்வொருவனுக்குள்ளும் இந்த தேவர்களும் அசுரர்களும் இருக்கிறார்கள். எந்தவொரு செயலின் வெளிப்பாடும் இவ்விருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதாக ஆகிவிடுகிறது. எனவே, சிலரின் சொல்லும் செயலும் அந்த நேரத்தில் அவ்விதமாக வெளிப்பட்டுவிடுகிறது. அங்கு அவனுக்குள் தேவன் வீழ்த்தப்பட்டு அசுரன் மேலெழுந்து விடுகிறான். ஆகையினால் யாரையும் வெறுக்கத் தேவையில்லை. அவர்களின் செயல் வெறுக்கப்பட்டபோதிலும், அது அந்த நபரின்மேல் இருக்காதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். பிராணன் எனும் உயிர்சக்தியானது அனைவருக்கும் பொதுவானது. எனவே அனைவரும் சமமானவர்கள். யாரும் வெறுப்பிற்குரியவர்கள் அல்ல. இதைப் புரிந்துகொண்டு, ‘வெறுப்புணர்வு கூடாது’ என சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும்.
(2) பற்றை விடுதல்(ராகா3த் த்யாக3:) - அளவுக்கு மீறிய பற்றை விட்டுப் பழக வேண்டும். அதிகப்பற்று மிக்க பொருளில் இருக்கின்ற தோஷத்தை பார்த்து, அது நம்மை அடிமையாக்குவதையும் மனஅமைதியைக் குலைப்பதையும் கவனிப்பதன்மூலம் பற்றை விடுதல் வேண்டும்.
(3) பொறுமை - கோபம் ஏற்படுகிற அந்த குறிப்பிட்ட நேரத்தில் அமைதியாக இருந்து பழகலாம். ஜபம் செய்யலாம். மேலும் அவருடைய அந்த சூழ்நிலையில் நாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவரை மன்னிக்கலாம்.
(4) எதிர்பார்ப்பை விடுதல் - எப்பொழுதுமே எதிர்பார்ப்பு என்பது ஏற்றுக் கொள்ளுதலுடன் சேர்ந்து இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த ஒன்று நடக்காத பட்சத்தில், நடப்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஒருவனை கோபத்திலிருந்து விடுவிக்கிறது. மேலும் தவறான எதிர்பார்ப்புகளை நிறுத்திக் கொள்ள பழகவேண்டும். ஒருவன் எந்த அளவு மற்றவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறானோ, அந்த அளவு அவன் அவர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுகிறான்.
(5) கோபம் என்பது பலம் அல்ல; பலகீனம். எனவே கோபத்தினால் ஒரு காரியத்தை சாதிப்பதைவிட அது நடக்காமலிருப்பது நல்லது. ஏனெனில் கோபம் இருபுறமும் பாதிப்பை ஏற்படுத்தும்.
(6) ஒருவன் நம்மிடம் பொய் சொல்லும்போதோ, அல்லது தவறாக நடப்பதன்மூலம் நமது அஹங்காரத்தை காயப்படுத்தும்போதோ, அது அவனின் உண்மைத்தன்மையை நமக்கு காட்டிக் கொடுக்கிறது. இந்த வழியில் சிந்தித்து கோபத்திலிருந்து விடுபடலாம்.
(7) தர்மத்தை நிலைநாட்டும் பொறுப்பு பகவானுடையது. ‘தர்மத்தை பின்பற்றுவது எனது கடமை; ஆனால் மற்றவர்களை மாற்றும் சக்தி எனக்கு கிடையாது’ என்பதை உணர்வதன்மூலம் சாத்விக இயல்புடையவர்கள் கோபத்தை தவிர்க்கலாம். ஒருகால் அதர்மத்தை தடுப்பது தனது எல்லைக்குள் இருந்தால் அதை கண்டிப்பாகச் செய்யலாம்; ஆனால் அங்கும் கோபப்படாமல் பகைமையுணர்வு இல்லாமல் அது செய்யப்பட வேண்டும்.
(8) கோபத்தை பழக்கதோஷமாகக் கொண்டவர்கள் மெதுவாக சத்வ குணத்திற்குச் செல்ல முயல வேண்டும், ஏனெனில் ரஜஸின் வெளிப்பாடே கோபம் ஆகும்.
=> [13] தியாகம்:
‘த்யாக3’ எனில் துறவு. அதன் வினையடியான ‘த்யஜ்’ என்பது விட்டுவிடுதலைக் குறிக்கிறது. தியாகம் என்பது சந்யாச வாழ்க்கை முறை, அல்லது கர்ம-பல-தியாகத்தை குறிப்பதாக சங்கரர் கூறுகிறார். தன்னறிவை அடையும் பொருட்டு அனைத்து செயல்களின் பலன்களையும் விட்டுக்கொடுத்தல் கர்ம-பல-தியாகம் என ஏற்கனவே பார்த்துள்ளோம். வெளியில்(பா3ஹ்யம்) நடைபெறும் தியாகம் துறவு வாழ்க்கையையும், நம்முள்(ஆந்தரம்) நடைபெறும் தியாகம் கர்ம-பல-தியாகத்தையும் காட்டுகிறது.
தியாகம் எனும் இந்த பண்பை சாதகன் ஒருவன் படிப்படியாக வளர்த்துக் கொள்ளவேண்டும். முதலில் மற்றவர்கள் அவனுக்கிழைத்த துரோகங்கள், தவறுகள் ஆகியவற்றையும், பின்னர் அவனுக்கு மற்றவர்களின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பையும் விட்டுப் பழகுதல் வேண்டும். மேலும் தான் அடிமைப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் பழக்கங்களையும் விடுதல் வேண்டும்.
இப்பண்பை அடைந்த ஒருவனுக்கு ‘அர்த்த’ மற்றும் ‘காம’ ஆகிய புருஷார்த்தங்களின்கீழ் வரும் அனைத்து பலன்களிலும் ஆர்மில்லாமல் ஆகிறது. அந்த-கரண-சுத்தி(மனத்தூய்மை) எனும் நோக்கத்திற்காக மட்டுமே அவன் ஒரு செயலைச் செய்பவனாக ஆகிறான். ஒருவன் உடல் ரீதியாக உலகத்தை துறந்தாலும் துறக்காவிட்டாலும், பற்றின்மை மற்றும் பலனில் உரிமையின்மை எனும் பாங்கு இருக்கும்போது அவன் உண்மையான துறவியாகிறான். மன முதிர்ச்சியிலிருந்து, விவேகத்திலிருந்து வைராக்கியத்திலிருந்து தியாகம் பிறக்க வேண்டும். உலகத்திலுள்ள பொருள்களின் நிலையற்ற தன்மை குறித்த விவேகம் ஒருவனுக்கு உண்டாகும்போது அவனுக்கு போகப் பொருள்களின் மீது விலகல் ஏற்படுகிறது. இது வைராக்கியம் எனப்படும். இந்த வைராக்கியத்திலிருந்து உருவாகும் தியாகமே சிறந்த தியாகம் ஆகும்.
மூன்று விதமான தியாகம்:
(1) மோஹத்தின் அடிப்படையில் உண்டாகும் தியாகம் என்பது தமோ குணத்தின் வெளிப்பாடு — தாமஸ தியாகம்.
(2) கஷ்டத்தின் அடிப்படையில் உண்டாகும் தியாகம் என்பது ரஜஸின் வெளிப்பாடு — ராஜஸ தியாகம்.
(3) அறிவு மற்றும் உயர்ந்த அபிமானத்தின் அடிப்படையில் உண்டாகும் தியாகம் என்பது சத்வ குணத்தின் வெளிப்பாடு — சாத்விக தியாகம்.
உயர்ந்த அபிமானம் என்பது ஆத்ம ஞானத்தை அடையும் இச்சையை, அதாவது முமுக்ஷுத்துவத்தைக் குறிக்கிறது. மேலான இடத்தில் வைக்கும் அபிமானம், கீழான விஷயங்களிலுள்ள ஆசையை தியாகம் செய்ய வைக்கும். தியாகத்தின் பலனான மனஅமைதி என்பது சாத்விக தியாகத்தினால் மட்டுமே வந்தமையும்.
=> [14] சாந்தி:
‘சா1ந்தி’ என்பது மனவமைதியை, மனதின்கண் அமைந்துள்ள நடுநிலையைக் குறிக்கிறது. சுய-மதிப்பீடு இல்லாவிட்டால் மட்டுமே இது சாத்தியப்படுகிறது. மனதில் எழுகிற எண்ணங்களைக் கொண்டு ஒருவன் தன்னை மதிப்பிட்டுக் கொள்வானானால் அவன் மனஅமைதியை இழக்கிறான். மனதிற்கு அதற்கென்று சில தர்க்கங்கள் இருக்கும். அதற்கேயுண்டான இயல்புடன் அது திடீரென்று எதற்கும் தொடர்பில்லாத ஒன்றை பற்றி நினைக்கும். எனவே அதை அடிப்படையாகக் கொண்டு ஒருவன் தன்னை மதிப்பீடு செய்து மனசாந்தியை இழக்கத் தேவையில்லை. இந்நிலையை அடைய தனக்கும் மனதிற்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
அனைத்துவித விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத குணங்கள் இருந்தபோதிலும், மனம் இருந்தபோதிலும், எவனொருவனும் ஸத்-சித்-ஆனந்தம் என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும், ஸத்-சித்-ஆனந்தத்தை ஒப்பீடு செய்யத் தேவையில்லை ஏனெனில் இருப்பது ஸத்-சித்-ஆனந்தம் மட்டுமே ஆகும். வேதாந்த ஞானம் இவ்விதம் இருக்க, உபாதியில் இருக்கின்ற பண்புகளை, அதாவது உடல், மனம் மற்றும் புலன்களின் குணங்களை ஒப்பீடு செய்வது இங்கு அர்த்தமற்றதாகிறது. இந்த ஒப்பீட்டின் காரணமாகவே சுய-மதிப்பீடு வெளிப்படுகிறது. இங்கு உபாதியின் இயல்புகள் பொருத்தமற்றவைகள் ஆகின்றன, ஏனெனில் சாஸ்திரத்தின் முழு உபதேசமும் உபாதியை அடிப்படையாகக் கொண்டு ஒருவன் தன்னை மதிப்பிடக் கூடாது என்பதுதான்.
இது தெளிவாக உணரப்படும்போது, இது ஒருவனுக்கு ஒப்பீட்டளவில் ஒரு சிறிய இடைவெளியை அளிக்கிறது. இந்த இடைவெளியின் காரணமாக, அவன் தன்னை சுய-மதிப்பீடு செய்யும்போது அது ஒருவகையான சிந்தனைமுறை என்பதை அவன் தெளிவாகக் காண்கிறான். அப்போது அந்த மதிப்பீடு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கண்டறிகிறான். இதனால் அவன் அதை ஏற்கும் மனநிலையை அடைகிறான். இருக்கின்ற உண்மையை ஏற்க மறுப்பதனாலேயே ஒருவன் மனஅமைதியை இழக்கிறான். உண்மையை ஏற்க மறுக்காதபோது அங்கு சாந்தி என்பது இயல்பானதாக இருக்கிறது.
இனியொரு கோணத்தில் ‘சா1ந்தி’ என்பதை மனவொழுக்கமாக எடுத்துக் கொள்ளலாம். மனதை கர்த்தாவாக அல்லாமல், ஒரு கரணமாக அதாவது நமது புத்தியின் சொல்படி நடக்கின்ற ஒரு கருவியாக வைக்கும்போது மனசாந்தி கிடைக்கிறது. மனம்தான் சம்சாரி; மனம்தான் முக்தன் என்பதால் மனதை நெறிப்படுத்துதல் மனசாந்திக்கு மிக அவசியமானது.
* மனதை நெறிப்படுத்தும் உபாயங்கள்:
(1) வைராக்கியத்தின் துணையுடன் நற்குணங்களை அடைதல்
(2) தியானம் மற்றும் ஜபம். ஏனெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட மனம், சித்த சுத்தியை எளிதில் அடைகிறது.
(3) புலனடக்கம்
=> [15] புறங் கூறாமை:
மற்றவர்களின் சிந்தனை அல்லது நடத்தையில் குறைபாடுகள் மற்றும் பலகீனங்களைத் தேடுவதும், அதை விளம்பரப்படுத்துவதும் ‘பைசு1நம்’ என்றழைக்கப்படுகிறது. வேறு வார்த்தையில் கூறுவதானால், இது கோள் சொல்லுதலைக் குறிக்கிறது. ‘பைசு1நம்’ இல்லாத பண்பு ‘அபைசு1நம்’ ஆகும். ஒருவரின் நற்குணங்களை இனியொருவரிடம் பேசுவதில் தவறில்லை; உண்மையில் அது ஒரு வகையில் நல்லதும்கூட, ஏனெனில் அது பேசுபவன் மற்றும் பேசப்படுபவனின் நற்குணத்தை உறுதிப்படுத்துகிறது. ஆனால் மற்றவரது குறைபாடுகளைப் பற்றிப் பேசுவதும், பிரச்சினைகளைத் தேடுவதும், பின்னர் அவற்றை மிகைப்படுத்தி உரைப்பதும், கிசுகிசுப்பதும் நமக்கு எந்த விதத்திலும் உதவாது. உண்மையில் ஒருவரின் மீதுள்ள பொறாமையே அவரைக் குறித்து தவறான வதந்திகளைப் பரப்பும் உணர்வைக் கொடுக்கிறது. தன்னிடமிருக்கின்ற பொறாமையை கையாளத் தெரியாதவனே, அதிலிருந்து தப்பிக்கும் வழிகளில் ஒன்றாக சம்பந்தப்பட்டவர்களை கோள் சொல்லுதலில் ஈடுபடுகிறான். இது அழிவுகரமானது, ஏனெனில் இது சொல்பவரின் மனதையும் அதைக் கேட்பவரின் மனதையும் கெடுக்கிறது.
ஒருவரின் பலம் மற்றும் பலகீனத்தைப் பற்றிய அறிவு அவசியம்தான். ஏனெனில் அப்போதுதான் நாம் அதற்கு பலியாகாமல் இருக்கலாம். ஆனால் அதை பொழுதுபோக்கிற்காக இனியொருவரிடம் பேசுதல் கூடாது. நாம் ஒருவரை பற்றிப் பேசும்போது, அவர் நம்முன் இருப்பதாகக் கற்பனை செய்து பேசுவதன் மூலம் புறங்கூறாமை எனும் குணத்தை வளர்க்கலாம்.
=> [16] உயிர்களிடத்துக் கருணை:
துயரப்படுகிற எந்தவொரு உயிரினத்தின் மீது வருகிற இரக்கம் ‘த3யா’ எனப்படுகிறது. இங்கு கூறப்படும் கருணை எனும் இந்த பண்பு மரமாக, பறவையாக, அல்லது உயிர்வாழ போராடிக் கொண்டிருக்கின்ற தவளையாக இருந்தாலும் சரி, அல்லது உணர்வு ரீதியாகவோ உடல் வலியினாலோ அவதிப்படும் சக மனிதனாக இருந்தாலும் சரி, அந்த உயிரின் மீது ஏற்படும் அனுதாபத்தைக் குறிக்கிறது. மனம் மிக மென்மையாக இருந்தால்தான் இனியொருவரின் துயரத்தை உணர முடியும். துயரத்தை பார்த்து நாமும் துயரப்பட வேண்டும் என்பது பொருள் அல்ல. அந்த குறிப்பிட்ட உயிரின் கஷ்டத்தைப் புரிந்து கொள்வதன் காரணமாக வெளிப்படும் அன்பின் மற்றொரு வடிவமே கருணை ஆகும். பச்சாதாபம் கொள்ளும் திறன் என்பது ஒரு மனிதனுக்கு இயல்பாகவே உள்ளது. இந்த இயற்கையான குணத்தை அடக்கிவைக்காமல் இருப்பது முக்கியம். அதாவது ஏதேனும் ஒரு வகையில் உதவுவதன் மூலம் நாம் அதை வெளிப்படுத்தலாம். ஒருகால் செயல்பட முடியாத சூழ்நிலை இருக்குமாயின், குறைந்தபட்சம் அந்த நபருக்காக ஒரு பிரார்த்தனை செய்யலாம்.
* கருணையின் பலன்:
(1) மன்னிக்கும் குணம் வளரும். தண்டிப்பதைக் காட்டிலும் மன்னிக்க அதிக மனபலம் தேவை.
(2) அஹிம்சையை பின்பற்றும் விதையாக இருப்பது பரிவு.
(3) சந்யாசத்திற்கு அல்லது தியாகத்திற்கு காரணமாக அமைவது பரிவு.
=> [17] புலன்களின் அமைதி:
இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வராதிருத்தல் ‘அலோலுப்த்வம்’ என்பதாகிறது. இது விரும்பத்தக்க விஷயங்கள் முன்னிலையில் இருக்கும்போதும் அதைக் குறித்து ஏங்காமல் இருக்கின்ற தன்மையைக் குறிக்கிறது. பொருள்கள் இல்லாதபோது மனம் அமைதியாக இருக்கலாம், ஆனால் அவற்றின் முன்னிலையிலும் அப்படியே இருப்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலை ஆகும். உதாரணமாக பெரிய பல்பொருள் அங்காடிக்குச் செல்லும்போது, நாம் வாங்க நினைத்ததை விட அதிகமாகவே வாங்கியவர்களாக வெளியே வருகிறோம். பொருளைப் பார்த்தவுடன் எழுகிற தீவிர ஏக்கத்தின் காரணமாக அதை வாங்கி விடுகிறோம். இன்றைய உலகில், ஒருவன் எதை வாங்குவதற்காக சென்றானோ அதை மட்டும் வாங்குவதற்கு நிறைய சுயக்கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இந்த ‘அலோலுப்த்வம்’ எனும் குணத்தை வளர்ப்பதில் பயிற்சி முக்கியமானது. கடைக்கு பொருள்வாங்க செல்லும்போது, ஒருவனுள் ஏற்படுகிற அனைத்து தூண்டுதல்களையும் அனுமதித்து, ஆனால் உண்மையில் தேவையானதை மட்டும் வாங்கும் பழக்கத்தை வளர்க்கலாம். இது சாத்விகமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இப்படி செய்வதற்கு ஒரு பக்குவப்பட்ட மற்றும் பகுத்தறியும் தன்மையுடைய மனம் தேவைப்படுகிறது. இவ்வாறு நடக்க இயலாமல் ஏக்கத்திற்கு ஆளாகி மனக்கிளர்ச்சியில் வாங்கிக் குவித்தல் என்பது ரஜஸின் வெளிப்பாடு ஆகும். இதுவே ‘லோலுப்த்வம்’ ஆகும். ‘லோலுப்த்வம்’ இல்லாத தன்மை ‘அலோலுப்த்வம்’ எனப்படுகிறது.
=> [18] மிருதுத் தன்மை:
‘மார்த3வம்’ எனில் கடுமையாக இல்லாதிருத்தலை, மிருதுத் தன்மையை, இனிமையைக் குறிக்கிறது. இச்சொல் மென்மையைக் குறிக்கின்ற ‘ம்ருது’ என்ற வார்த்தையிலிருந்து வந்துள்ளது. ஒருவனிடம் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, கடுமையான வார்த்தைகளுக்கு ஆளாகிவிடுவோம் என அச்சமில்லாமல் மற்றவர்களால் பேச இயலவேண்டும். இது ‘மார்த3வம்’ ஆகும். சிலர் அன்பானவர்களாக இருப்பார்கள், ஆனால் மிகக் கடுமையாக தங்களை வெளிப்படுத்துவார்கள். எனவே தவறையும்கூட மென்மையாக சுட்டிக் காட்டுதல் வேண்டும். அதற்கு பொறுமையும் வாக்கு கட்டுப்பாடும் தேவை. மற்றவர்களின் குணங்கள் மற்றும் வரம்புகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவனாலேயே இனிமையாக நடந்து கொள்ளுதல் என்பது சாத்தியப்படுகிறது.
=> [19] நாணம்:
‘ஹ்ரீ’ என்பது ஒரு குறிப்பிட்ட வகையான கூச்சத்தை, வெட்கப்படுதலைக் குறிக்கிறது. மற்றவர்கள் தங்களைப் புகழும்போதும், மேலும் சொந்த மஹிமைகளை பெருமையாகப் பேசிக் கொள்ளும்போதும் உண்டாகிற நாணம் இது. இயல்பான அடக்கத்தை அல்லது பணிவைக் குறிக்கிறது. தகாத செயலில் ஈடுபடவும் நாணுபவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.
=> [20] மனத்திட்பம்:
பயனற்ற செயல்களைச் செய்யாதிருத்தல் ‘அசாபலம்’ ஆகும். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது வைத்திருப்பது ‘அசாபலம்’ எனலாம். நோக்கம் எதுவுமில்லாமல் பேச்சு, கைகள், கால்கள் போன்றவைகள் வீணாக செயல்படாத தன்மை என சங்கரர் வரையறுக்கிறார். இதன் பொருள், நோக்கத்தை புரிந்துகொண்டு செயல்களைச் செய்கிற மிகவும் விழிப்புடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதைக் குறிக்கிறது. இந்த தன்மை மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் ‘சாபலம்’ என்பது மனக்கிளர்ச்சியைக் குறிக்கிறது. தேவையற்ற பேச்சுக்கள், கை மற்றும் கால்களை தேவையில்லாமல் அசைத்துக் கொண்டே இருத்தல் இதன் வெளிப்பாடாகும். ‘சாபலம்’ எனும் தன்மையின் விளைவு கவனக்குறைவு. அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் ‘அசாபலம்’ ஆகிறது. சிறிது கவனுத்துடன் பயிற்சி மேற்கொள்ளும்போது, ‘அசாபலம்’ எனும் குணத்தை எளிதாக அடைய முடியும். சாத்விகமான மனதுக்கு ‘அசாபலம்’ என்பது மிகவும் இயல்பானது.
---------------------------------------------------------------------------------------------