வியாழன், 5 டிசம்பர், 2024

பக்தி யோகம் 12.18 - 12.20

||12.18|| இருமைகளில் சமமாயிருப்பவன் ஞானி:

सम: शत्रौ मित्रे तथा मानापमानयो:

शीतोष्णसुखदु:खेषु सम: सङ्गविवर्जित: ।। १८ ।।

ஸம: 1த்ரௌ மித்ரே ததா2 மாநாபமாநயோ:

சீ1தோஷ்ணஸுக2து3:கே2ஷு ஸம: ஸங்க3விவர்ஜித: ।। 18 ।।


शत्रौ   1த்ரௌ   நண்பனிடத்தும்    मित्रे   மித்ரே   பகைவனிடத்தும்   तथा  ததா2  அப்படியே   मान अपमानयो:  மாந அபமாநயோ:  மான அவமானத்திலும்    सम:  ஸம:  சமமாயிருப்பவன்         शीत उष्ण सुख दु:खेषु  சீ1 உஷ்ண ஸுக2 து3:கே2ஷு  குளிர், உஷ்ணம், இன்பம், துன்பத்திலும்    सम:  ஸம:  சமமாயிருப்பவன்     सङ्गविवर्जित:  ஸங்க3விவர்ஜித:  பற்றற்றவன்.


பகையையும் நட்பையும், அங்ஙனமே மானத்தையும் அவமானத்தையும் நிகராக்கிக் குளிர் வெப்பம், இன்பதுன்பம் இவைகளை ஒப்பாக்கிப் பற்றற்றவனாக இருப்பவன்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.


விளக்கம்:

=> சமமாயிருப்பவன்:

இங்கு பகவான் மீண்டும் ஞானியின் சமநிலையை வர்ணிக்கிறார். நண்பனிடத்தும் பகைவனிடத்தும் சமமாயிருப்பவன்1த்ரௌ மித்ரே ஸம:, என்கிறார். ஒருவன் மேலுள்ள அன்பினால் அவனது நலனை விரும்புபவன் நண்பன், மித்ர. ஏதேனும் ஒருவகையில் காயப்படுத்த விரும்புபவன் பகைவன், 1த்ரு. இரு தரப்பினரிடையேயும் சமமாயிருப்பவன் சரி, ஆனால் ஒரு ஞானியால் எப்படி பகைவனை உருவாக்கமுடியும் என்கிற சந்தேகம் வரலாம். நிச்சயமாக ஒரு ஞானி இவன் என் நண்பன், இவன் எனது பகைவன் என யாரையும் பார்ப்பதில்லை. அவன் அவனாகவே இருப்பதனால், பொறாமையினால் எரிச்சலடைந்து சிலர் அவனை பகைவனாகவும், அவனது இயல்பில் மகிழ்ந்து சிலர் அவனை நண்பனாகவும் பார்க்கின்றனர். ஒருவனுக்கு, ஞானியிடமிருக்கும் ஏதோ ஒன்று(முகஜாடை, நடை, சில பழக்கவழக்கங்கள்) தனக்கு தீங்கு செய்த ஒருவனை பற்றிய நினைவுகளைக் கொடுக்கலாம். இதுபோன்ற காரணமற்ற பகைமை அல்லது உள்நோக்கமற்ற பகைமை என ஏதேனும் ஒரு வகையில் பகை தூண்டப்படலாம். அப்படிப்பட்ட பகைவனை ஞானி எப்படி கையாளுகிறான்? ‘ஸமஎன்கிறார் பகவான். நண்பனோ எதிரியோ யார் அணுகினாலும் ஞானியின் அந்தகரண வ்ருத்தியில் எந்த மாற்றமும் இல்லை. இருவரிடமும் சமமாகப் பழகுகிறான். எதிரியின் வருகை அவனுக்கு இடையூறுகளையோ அல்லது நண்பனது வருகை அவனுக்கு பாதுகாப்பையோ மகிழ்ச்சியையோ உருவாக்குவதில்லை. இருவரிடத்தும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டவனாக இருப்பவன் ஞானி.

இங்கு ஒரு கருத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பகைவனிடம் ஞானிக்கு துவேஷமில்லை என்பதனால், ஞானி அவனது தவறான அதர்மமான செயல்களை பொறுத்துக்கொண்டோ அல்லது கண்டும் காணாமலோ இருப்பான் என்பது அர்த்தமல்ல. கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலை ஞானி கண்டிப்பாக விமர்சிப்பான்; ஏற்றுக்கொள்ள முடியாத செயலை ஏற்க மறுப்பான்; அதற்காகவென ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருந்தால் அதையும் செய்வான்; ஆனால் மனதில் ஒரு சிறு துளியும் துவேஷம் இல்லாமல் இவைகளைச் செய்வான். ஒரு தாய் குழந்தையை தண்டிக்கும்போதும் அக்கறை இருக்குமே தவிர வெறுப்பு இருக்காது என்கிற உதாரணத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். எனவே ஒரு ஞானியின் இரக்கம் மற்றும் கருணை என்கிற பண்பை, முட்டாள்தனத்தை சகித்துக்கொள்வதாக தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது

அதுபோலவே, மானம் மற்றும் அவமானம் எனும் இருமையையும் அவன் சமநிலையுடன் எதிர்கொள்கிறான்ததா2 மாந அபமாநயோ: ஸம:. வழிபாட்டுக்குரியவன் என்று மரியாதை செய்யும்போதும், அல்லது தனக்கெதிரான கருத்தை உடையவன் எனத் தூற்றி அவமரியாதை செய்யும்போதும் அவன் அதை சமமாகவே எடுத்துக் கொள்கிறான்


=> இருமைகளிலும் சமமானவன்:

சீ1எனில் குளிர்; ‘உஷ்ணஎனில் வெப்பம்; ‘ஸுக2எனில் சாதகமான சூழ்நிலைகள்; ‘து3:2எனில் பாதகமான சூழ்நிலைகள். சுருக்கமாகச் சொன்னால், இது இருமைகளைக் குறிக்கிறதுத்3வந்த்3வம். உண்மையில் வாழ்க்கை என்பது இருமைகளால் ஆனது. பிறப்பு இருப்பின் அங்கு இறப்பும், வளர்ச்சி இருப்பின் சிதைவும், ஆரோக்கியம் இருந்தால் உடல்நலக்குறைவும், ஆதாயம் இருந்தால் இழப்பும், சேர்க்கை இருந்தால் பிரிவும் என ஒருவனது வாழ்க்கை, தப்பிக்க முடியாத இருமைகளால் சூழப்பட்டுள்ளது

இப்படியிருக்க ஒரு சம்சாரியோ வானிலையையும்கூட புகார் கூறிக்கொண்டே இருக்கிறான். கோடை மிக சூடாக இருக்கிறது என்றும் குளிர்காலம் வரும்போது குளிரைப் பற்றியும் புகார் கூறுகிறான். மழை பெய்தாலும் குறை, வரண்டு காணப்பட்டாலும் குறை. ஆனால் ஞானியோ இந்த எல்லா எதிர்நிலைகளுக்கும் சமமாகவே இருக்கிறான். எனில் அவற்றை அவன் வேறுவிதமாக அனுபவிக்கிறான் என்பது பொருள் அல்ல; ஞானிக்கும் வெப்பம் சூடாகவும் பனி குளிராகவும் இருக்கிறது. ஆனால் அவற்றைப் பற்றி அவன் மனம் கலங்குவதில்லை.

=> பற்றற்றவன்:

எல்லா விதமான பற்றுதலிலிருந்தும் விடுபட்டவன் ஞானி, என்கிறார் பகவான். பல வகையான பிணைப்புகளுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒரு சந்யாசியும்கூட, அவரது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டாலும், இன்னும் அவர்களின் நலனைப் பற்றி  நினைத்து கவலைப்படலாம். ‘ஸங்க3விவர்ஜிதஎனில் மக்களின் மீதோ அல்லது பொருள்களின் மீதோ என எந்தவிதமான உணர்ச்சிரீதியான சார்பும் இல்லாத நிலை; பற்றற்ற நிலை. இதில் அவனது சொந்த உடலும்கூட அடங்குகிறது. உடலின் மீதுள்ள மோஹமே பின்னர் மனைவி, குழந்தைகள், வீடு, வாகனம் என விரிந்து கொண்டே செல்கிறது. சேதந அசேதந சோ1பநா அத்4யாஸ ரஹித: - அறிவுள்ள மற்றும் ஜட பொருள்கள் என்னை கவர்கிறது என்கிற ஏற்றிவைத்தலிலிருந்து விடுதலை அடைந்தவன் ஞானி; மோஹமற்றவன் ஞானி.

---------------------------------------------------------------------------------------------

||12.19|| ஞானியின் இலக்கணங்கள் குறித்த இறுதி சுலோகம்:

तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित्

अनिकेत: स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नर: ।। १९ ।।

துல்யநிந்தா3ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித்

அநிகேத: ஸ்தி2ரமதிர்ப4க்திமாந்மே ப்ரியோ நர: ।। 19 ।।


तुल्य निन्दा स्तुति:  துல்ய நிந்தா3 ஸ்துதி:   இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராக்கி     

र्मौनी  மெளநீ  மெளனி    येन केन चित्  யேந கேந சித்  எதைக்கொண்டாவது    

सन्तुष्ट:  ஸந்துஷ்ட:  திருப்தியடைபவன்      अनिकेत:  அநிகேத:  இருப்பிடம் இல்லாதவன்    स्थिरमति:  ஸ்தி2ரமதி:  உறுதியான அறிவை உடையவன்    भक्तिमान् नर:  4க்திமாந் நர:  பக்திமானாகிய அம்மனிதன்     मे  மே  எனக்கு      प्रिय:  ப்ரிய:  பிரியமானவன்.


இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மெளனி, கிடைத்ததில் திருப்தியடைபவன், இருக்க இடம் தேடாதவன், உறுதியான உள்ளம் உடையவன்பக்திமானாகிய அம்மனிதன் எனக்கு பிரியமானவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்.


விளக்கம்:

=> இகழிலும் புகழிலும் சமத்துவமானவன்:

சென்ற சுலோகத்தில் பகவான், மான அவமானங்களை சமமாக எடுத்துக்கொள்பவன் ஞானி எனக் கூறியிருந்தார். அடுத்ததாக இங்கு இனியொரு இருமையைப் பற்றிப் பேசுகிறார். ‘நிந்தா3எனில் இகழ்ச்சி, விமர்சனம்; கண்டனம். ‘ஸ்துதி:எனில் புகழ்ச்சி. மான-அவமானம் என்பது செயல் மட்டத்தில் நடைபெறுவதைக் குறிக்கிறது, காயிகம். இங்கு சொல்லப்படும் நிந்தையும் ஸ்துதியும் சொற்களின் தளத்தில் நடைபெறுகிறது, வாசிகம். இரண்டிலும் ஞானி சமபாவனையுடன் இருக்கின்றான். அக்ஞானிகளால் கிடைக்கப்பெறும் புகழும் இகழும் ஒரு ஞானிக்கு அர்த்தமற்றவை. எதன் நிமித்தமாக இவை வருகின்றனவோ அதில் அவனுக்கு ஸத்யத்துவ-புத்தி கிடையாது. மேலும் அவன் பரமேஷ்வரனிலிருந்து வேறானவனாக தன்னை பார்க்காததால், ஒருவன் தன்னை என்னதான் புகழ்ந்தாலும் அதையும்விட தான் மேலானவன் என்பதை ஞானி அறிவான். ஞானிக்கு அடையப்பட வேண்டியது என எதுவுமில்லாததால் எந்த முகஸ்துதியும் அவனை மயக்காது. மேலும் எந்த விமர்சனங்களைக் கூறவும் யாருக்கும் சுதந்திரம் உண்டு எனப் பார்ப்பதால் எந்த நிந்தனையும் அவனை பாதிப்பதில்லை. எனவே பாராட்டு மற்றும் கண்டனம் இரண்டும் அவனுக்கு ஒரே மாதிரியானவை.

சில சமயங்களில் வெளிப்புறமாக அவன் சிரித்து மகிழ்ச்சியுடனோ அல்லது தீவிர அமைதியுடனோ காணப்படலாம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஒரு குறிப்பிட்ட மனநிலை ஏற்பட்டிருக்கலாம், வ்ருத்தி-விஷேச. இவ்வகையானத்ருஷ்ட-சுகமற்றும்த்ருஷ்ட-துக்கஎனும் நிலை ஞானிக்கும் உண்டாகிறது என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனாலும் வந்துசெல்கிற இந்த எல்லா வகையான மனநிலைகளுக்கும் ஆதாரமாக இருக்கின்ற பூரணமானநான்மாறாதவன் என்பதில் உறுதியுடன் இருப்பதால்தான் ஒரு ஞானியின் மனமானது கடலுடன் ஒப்பிடப்படுகிறது. சில நேரங்களில் அமைதியாகயும், சில நேரங்களில் அலைகளுடன் ஆர்பரித்தும் இருந்தபோதிலும் கடலினுடைய முழுமை என்பது தன்னில் வந்து கலக்கும் ஆறுகளையோ அல்லது மழையையோ சாராததாக இருக்கிறது. அதுபோலத்ருஷ்ட-சுக-துக்க போன்ற மனதின் நிலைகள் எதுவாயினும், அக்ஞானிகளைப் போல அதை தனது சொரூபமாக அவன் ஏற்றிவைத்துக் கொள்வதில்லை. பூரணத்துவத்தை தனது சுயமாக பார்ப்பதால் நிந்தையிலும் ஸ்துதியிலும் அவன் சமமானவனாக இருக்கின்றான்.  


=> அளவாகப் பேசுபவன்

மெளநீஎனில் மெளனியாயிருப்பவன். இது ஒரு ஞானிக்கு இருக்கும் மிகப் பெரிய தகுதி ஆகும். மெளனி எனில் அவன் பேசுவதேயில்லை என்பது இங்கு பொருளல்ல; அளவாகப் பேசுபவன் என்பதைக் குறிக்கிறது. ஏனெனில் பேசவில்லை எனில் அங்கு கற்பித்தல் நடைபெறுவதில்லை. எனவே இப்பண்பு, ஞானியினது பேச்சு உறுப்பு நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது; அவன் சொல்லும் ஒவ்வொன்றையும் அவன் உண்மையில் பொருள்படுத்துகிறான் என்பதைக் குறிக்கிறது. அதிகமாகப் பேசுதல் என்பது மனதின் அமைதியின்மையின் வெளிப்பாடாகும். உள்ளழுத்தம் அதிகரிப்பதால் அது அரட்டை வடிவத்தில் வெளிப்படுகிறது. அர்த்தமற்றபோதிலும் ஏதேனுமொன்றை பேசுவதன்மூலம் அது குறைக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஞானிக்கு இதுபோன்ற மனவழுத்தங்கள் கிடையாது என்பதால் அவன் பேச வேண்டிய அவசியமிருப்பதில்லை. இப்பண்பை வேதாந்த சாதகன் ஒருவன் முக்கியமான சாதனையாக பயிற்சி செய்ய வேண்டும். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல், நியாயமானதாக மற்றும் பயனுள்ளதாகப் பேச்சு அமைய வேண்டும்.  


=> கிடைப்பதில் திருப்தியடைபவன்:

ஒரு ஞானியினுடைய மனதின் தனித்தன்மை என்னவெனில் அது எளிதில் மகிழ்வடையக் கூடியது; கிடைப்பதில் திருப்தியடைவதாக இருப்பதுயேந கேநசித் ஸந்துஷ்ட:. தன்னிடத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்ற காரணத்தினால், இவ்வுலக வாழ்க்கை என்ற வழியில் கிடைக்கின்ற எதைக்கொண்டும் அவன் திருப்தியடைகிறான். தன்னிடம் உள்ளதைக் கொண்டு எளிதில் மகிழ்ச்சியடைகிறான்.

உடலைப் பேணுவதற்குத் தேவையான சிலவற்றைச் செய்தபோதிலும் அதற்காக உலகின் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்தும் திட்டமெதும் அவனிடம் இல்லை. எந்த ஒரு உயிருள்ள மனிதனுக்கும் அவசியமாகவுள்ள அடிப்படை விஷயங்கள் என்னவோ அவைகள் மட்டுமே அவனுக்கு தேவைப்படுகின்றன. அவை எதுவாக இருந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும், அதில் முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்கிறான் ஞானி. எவ்வித புகாரும் எதிர்பார்ப்பும் இல்லாதவன்.

பொதுவாக மக்கள் மகிழ்ச்சியாக இருக்க பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. விரும்பும் உணவு, இசை, நண்பர்குழு மட்டுமல்லாது தங்களுக்குள் நிகழ்கிற உரையாடல் தலைப்புகளும் தங்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். மாறாக, ஞானி மகிழ்ச்சியாக இருக்க பெரிய வசதிகள் எதுவும் வழங்கப்படத் தேவையில்லை. தன்னிடத்தில் திருப்தியாயிருக்கும் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்த உலகம் அதிகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. மேலும் அது எதைச் செய்தும் அவனை அதிருப்திபடுத்தவும் முடியாது. நன்றே வரினும் தீதே வரினும் அவனுக்குத் தொல்லையொன்றுமில்லை


=> இருக்க இடம் தேடாதவன்:

அநிகேத:எனில் வசிப்பிடம் இல்லாதவன் என்பது பொருள். எனில் ஞானி தலைக்கு மேல் கூரை இல்லாமல் இருக்க வேண்டுமென்பது இங்கு பொருளல்ல. தனக்கென்று ஒரு வீடற்றவனாக அல்லது வசிப்பிடத்தில் என்னுடையது எனும்மமபுத்திஇல்லாதவனாக இருப்பவன் அநிகேதன். தான் வசிக்குமிடத்தை தனக்கென்று அவன் உரிமைப்படுத்துவது கிடையாது. அகப்பட்ட வளையில் சர்ப்பம் சிறிது காலம் சுருண்டிருப்பது போல தற்செயலாய் நேர்ந்த இடத்தை பராபக்தன் தங்குகிடமாக்குகிறான்


=> உறுதியான உள்ளத்தையுடையவன்:

ஸ்தி2ரமதி:எனில் எந்தவித தெளிவின்மையோ அல்லது சந்தேகமோ இல்லாமல் தனது அறிவில் உறுதியுடன் இருப்பவனைக் குறிக்கிறது. ஏற்கனவே பதினான்காவது சுலோகத்தில் பகவான்த்3ருட4நிச்1சய:’, தனது ஞானத்தில் உறுதியாக இருப்பவன் என ஞானியைக் கூறியிருந்தார். அதை இங்கு மீண்டும் ஒருமுறை உறுதி செய்து ஞானியின் இலக்கணங்கள் குறித்த இந்த தலைப்பை முடிக்கிறார். செல்வத்தை ஈட்டுவதில் உறுதியுடன் இருப்பவனும் ஸ்திர புத்தியுள்ளவன் எனக் கூறலாமே என்ற சந்தேகம் எழலாம். ஆத்மாவைத் தவிர வேறெந்த விஷயத்துடனும் ஏற்படும் உறுதி என்பது அஸ்திரமானதாகவே இருக்கிறது. ஏனெனில் எங்கு விஷயம் நிலையானதாக உள்ளதோ அங்குதான் புத்தி ஸ்திரமானதாக இருக்கும். ஆத்மா ஒன்று மட்டுமே நித்யமானது; பூர்ணமானது; பரமார்த்த வஸ்துவாக இருப்பது; சத்யமானது. இறுதியாக சொல்லப்படும் இந்த பண்பு ஒருவனிடம் ஞானம் இருக்கிறதா என்பதை தீர்மானிப்பதாக அமைகிறது. ஆத்மாவே ப்ரம்மம் என்கிற அறிவில் உறுதியுடன் இருக்கிற ஞானியின் மனம் எவ்வித சந்தேகங்களாலும் தாக்கப்படுவதில்லை

பக்திமானாகிய அந்த மனிதன்4க்திமாந் நர:. ‘நரஎன்பதன் பொதுவான பொருள் மனிதன் என்பதாகும். ஆனால் சொற்பிறப்பியலின் அடிப்படையில் இதுமரணிக்காதவன்என்கிற பொருளைத் தருகிறது ரீயதே இதி நர:. இது பரமாத்மா என்பதற்கான அடைமொழியாகும். ஞானி அவனது ஆத்ம-ஞானத்தின் காரணமாக நரனாக ஆகிறான்

மேலும், இந்த பக்திமான் எனக்கு பிரியமானவன், மே ப்ரிய:, என்கிறார் பகவான். பக்தியுடையவன் பக்திமான்; இங்கு அது ஞான-ஸ்வரூப-பக்தியைக் குறிப்பதால் அச்சொல் பராபக்தனை, ஞானியைக் குறிக்கிறது. பிரியமானவன் என்பது நாம் ஏற்கனவே பார்த்தபடி, ‘என்னிடமிருந்து வேறானவன் அல்ல. எனது ஆத்மாவாக இருப்பவன்’, என்பதைக் குறிக்கிறது

இத்துடன் பகவான் இந்த தலைப்பை முடிக்கிறார். கடைசி சுலோகத்திற்கான அறிமுக உரையில் சங்கரர், ‘உண்மையான வஸ்துவைப் பற்றிய தெளிவான அறிவைக் கொண்ட, செல்வம் சந்ததி மறுவுலகம் எனும் மூன்றுவித ஆசைகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்ட, அக்ஷர-ப்ரம்மத்தை தொடர்வதில் உறுதிகொண்ட சந்யாசிகளின் பண்புகளின் பட்டியல் இப்போது முடிவிற்கு வருகிறதுஎன்கிறார். உண்மையில் சங்கரர் இந்த பண்புகள் அனைத்தையும் சந்யாசிக்குரிய பண்பாகவே எடுத்துக் கொள்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உலகத்தைப்பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனத்தைச் சஞ்சலப்படுத்தும்படி செய்துகொள்ளாதே. செய்யவேண்டிய காரியம் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் ஈஷ்வரனிடம் நிலைத்திருக்கட்டும்

---------------------------------------------------------------------------------------------

||12.20|| ஞான நிஷ்டையை அடைந்தவனைப் புகழ்கிறார்:

ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते।

श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रिया: ।। २० ।।

யே து 4ர்ம்யாம்ருதமித3ம் யதோ2க்தம் பர்யுபாஸதே  

ச்1ரத்33தா4நா மத்பரமா 4க்தாஸ்தேऽதீவ மே ப்ரியா: ।। 20 ।।


तु  து  நிச்சயமாக     ये भक्ता:  யே 4க்தா:  எந்த பக்தர்கள்    

श्रद्दधाना:  ச்1ரத்33தா4நா:  சிரத்தையோடு கூடியவர்களாய்      

मत्परमा:  மத்பரமா:  என்னையே குறிக்கோளாகக் கொண்டு    

यथा उक्तं  யதா2 உக்தம்  இங்கு உரைத்தபடி     इदं  இத3ம்  இந்த    

धर्म्य अमृतम्  4ர்ம்ய அம்ருதம்  அம்ருதம் போன்ற தர்மத்தை    

पर्युपासते  பர்யுபாஸதே  நன்கு அனுஷ்டிக்கிறார்களோ     ते  தே அவர்கள்      

मे  மே  எனக்கு       अतीव प्रिया:  அதீவ ப்ரியா:  மிக அதிக பிரியமானவர்கள்.        


சிரத்தையுடைய எந்த பக்தர்கள் என்னையே கதியாகக் கொண்டு அமிர்தம் போன்ற இத்தர்மத்தை இங்குரைத்தபடி கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே எனக்கு மிகவுமினியவர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.


விளக்கம்:

=> ஞான நிஷ்டையை அடைந்தவன்:

அமிர்தத்துவத்திற்கு காரணமான இந்த தர்மத்தை பின்பற்றுபவர்கள்இத3ம் 4ர்ம்ய அம்ருதம் பர்யுபாஸதே, என்கிறார் பகவான். தர்மத்திற்கு முரண்படாதது, தர்மத்தை விட்டு விலகாதது4ர்ம்யஆகும். இது வேதத்தில் சொல்லப்பட்டதற்கு எதிரானது அல்ல என்பதையும் குறிக்கிறது. வேத-உபதேசங்களோடு ஒத்துப் போகிற எந்தவொரு இலக்கியமும் ஸ்மிருதி என்றழைக்கப்படுகிறது. எனவேதான் வேத கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ள பகவத் கீதையும் ஸ்மிருதி எனப்படுகிறது. அழியாமையெனும் அமிர்தத்துவத்திற்கு காரணமாக இருப்பதுஅம்ருதம்ஆகும். இங்கு சொல்லப்பட்ட விளக்கத்தின்படி ஞானிகளுக்கான குணங்களை அடைதல் மற்றும் அக்ஷர ப்ரம்மத்தின் மீது தியானம் செய்தல் என்கிற இந்த தர்ம வாழ்க்கையே முக்திக்கு வழிமுறையாக விளங்குகிறது. இங்கு விளக்கப்பட்ட ஞானியின் மனநிலையை அறியும் ஒவ்வொருவனும் அதை அடையவே விருப்பப்படுவான். எல்லா பிணைப்புகளிலிருந்தும் விடுபட்டு, எதற்கும் அஞ்சாதவனாக இருக்கின்ற அந்த நிலை என்பது கண்டிப்பாக ஒரு சாதகனை வசீகரிக்கிறது. ஞானியின் இயல்புகள் ஒரு சாதகனுக்கு அடையப்பட வேண்டிய சாதனங்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். எனில் அவனுக்கு இயல்பாக இந்தக் கேள்வி எழுகிறதுஇத்தகைய மனநிலையை நான் எப்படி அடைவது? அவன் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட பக்தி-யோகத்தின் ஐந்து படிநிலைகள் வழியாகச் செல்லவேண்டும். ஸகாம-பிரதான கர்மயோகம், நிஷ்காம-பிரதான கர்மயோகம், ஏக-ரூப உபாசனம், அநேக-ரூப உபாசனம் மற்றும் நிர்குண-ஈஷ்வர ஞானம். அல்லது சுருக்கமாக, கர்மயோகம், உபாசன-யோகம் மற்றும் ஞான-யோகம் என்றும் கூறலாம். இதனால் ஞானிக்கு இயல்பானதாகவுள்ள கருணை, நட்பு, சமபாவனை, துவேஷமில்லாத நிலை, எதையும் சாராத நிலை, மனவழுத்தமற்ற நிலை முதலியன சிறிது சிறிதாக வந்தமைகின்றன. மேலும் உபாசனையில் படிப்படியாக உயர்ந்து அக்ஷர-ப்ரம்மத்தை தியானிக்கும் முமுக்ஷுக்களும் இக்குணங்களை படிப்படியாகப் பெறுகின்றனர்


=> சிரத்தையுடன் கூடியவர்கள்:

எல்லா வகையான சாதனங்களுக்கும் சிரத்தை இன்றியமையாததால் அது இங்கு பக்தியுடன் இணைத்து இயம்பப்படுகிறது. சிரத்தையுடன் கூடியவர்களாக, மிகுந்த ஆர்வத்துடன் அவர்கள் இதை பின்பற்றுகிறார்கள். தன்மீது, குருவின் மீது, சாஸ்திரத்தின் மீது மற்றும் ஈஷ்வரனின் மீது என இவர்கள் சிரத்தை இருக்கிறது. சாதகன் ஒருவனுக்கு இந்த நான்கின் அருளும் தேவைப்படுவதால் அவைகளின்மீதான சிரத்தை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பக்தி மற்றும் பிரார்த்தனையின் மூலம் ஈஷ்வர அருள்(ஈஷ்வரக்ருபா) பெறப்படுகிறது. சாஸ்திரத்தை சிரத்தையுடன் அணுகும்போது உண்டாகும் சாஸ்திர-கிருபையினால், அவை சரியாக புரிந்து கொள்ளப்படுகின்றன. இல்லையெனில் சாஸ்திரம் வேறுவிதமாக புரிந்துகொள்ளப்படும், அதனால்தான் ஒரே சாஸ்திரத்தை மையமாகக் கொண்டு எழுந்துள்ள பல பிரிவுகள் அல்லது சிந்தனைப் பள்ளிகளை நம்மால் பார்க்கமுடிகிறது. மூன்றாவதாக, குரு-கிருபையும் மற்றும் இறுதியாக ஆத்மக்ருபா எனப்படும் தனது சொந்த அருளும் ஒருவனுக்கு கண்டிப்பாகத் தேவை. இந்த நான்கும் ஒருவனுக்கு சரியாக அமையும்போது ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தேவையான சாதகமான சூழ்நிலைகள், தன்மீதான நம்பிக்கை மற்றும் ஞானத்தின் மீதான சிரத்தை அடையப்படுகிறது. உண்மையில் சிரத்தை என்பது மிகவும் விரிவான சொல்லாகும். அதை வைத்திருப்பவர்கள்ச்1ரத்33தா4நாஎனப்படுகிறார்கள்.


=> என்னையே கதியாகக் கொண்டவர்கள்:

கிருஷ்ணர் இங்கு முடிவுரை செய்கிறார் ஆகையால், ‘என்னிடம் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள்என்று மிகத் தெளிவாக கூறுகிறார்மத்பரமா:. ஒருவன் தனது ஆரோக்கியத்திற்காகவோ அல்லது பொருளாதார நலனுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ இறைவனின் அருளைப் பெற பிரார்த்திக்கிறான் எனில், அவனது அர்ப்பணிப்புணர்வு என்பது அந்த குறிப்பிட்ட விஷயங்களில்தான் இருக்கிறதே தவிர ஈஷ்வரனிடம் அல்ல. அதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால்மத்பரமாவாக இருப்பவன் ஈஷ்வரனை அறிய விரும்புகிறான் என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். மோக்ஷ-சொரூபமான ஈஷ்வரனைத் தவிர வேறெந்த மோக்ஷமும் இல்லையாதலால் அவன் முமுக்ஷு ஆகிறான். எனவே, மத்பரமாக அல்லது ஈஷ்வரபரமாக இருக்க ஒருவன் பரமேஷ்வரனை புரிந்து கொள்ளவேண்டும்

இத்தகையவர்களும் பக்தர்கள் என்றே இங்கு பகவானால் அழைக்கப்படுகிறார்கள்யே 4க்தா:, பரமார்த்த-வஸ்து குறித்த ஞானத்தினால் பக்தனானவர்கள். இந்த ஞானத்தை பெற்றவர்கள் எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்தே மே அதீவ ப்ரியா:, என்கிறார். ‘அதீவஎன்கிற இச்சொல், பகவான் இங்கு பேசுவது கண்டிப்பாக ஞானியைப் பற்றித்தான், வேறு பக்தர்களைக் குறித்து அல்ல என்பதை தெளிவாக்குகிறது. மற்ற பக்தர்களும், கர்மயோகிகளும் பகவானுக்கு பிரியமானவர்கள்தான் எனினும், ஞானி மிக அதிகப் பிரியமானவன் ஏனெனில் அவன் பகவானிடமிருந்து வேறானவனாக இல்லை. அவர்களின் பக்தியானது ஞானத்தினால் பரிபூரண நிலையை அடைந்துவிட்டது. முழுமையை அடைந்துவிட்ட பக்தியும் பக்திதான் என்பதால் ஞானியும் பக்தன் என்றே அழைக்கப்படுகிறான். அவனது தேடல் ஞானத்தில் தொடங்கி, ஞானத்தில் முடிவடைகிறது

சாஸ்திர சிரவணத்தை மேற்கொள்வதற்கும், இந்த அறப்பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வதற்கும் என்னென்ன முயற்சி தேவையோ அவைகளனைத்தையும் இவன் செய்தவனாகிறான். இப்பண்புகள் தானாக வந்தமைவதில்லை. இவைகளை வளர்த்துக்கொள்ள இச்சா-சக்தியெனும் விருப்பத்தை பயன்படுத்த வேண்டும். அதுவும் தற்செயலாக நடந்துவிடாது; அதற்கும் முயற்சி தேவை. ஞானத்தை அடைய வேண்டும் என எண்ணியவுடன் அதற்கான சரியான கருவி நம் முன் தோன்றிவிடாது. ஞானசாதனத்தை கண்டறிய ஒரு குறிப்பிட்ட அருள் தேவை. மேற்கண்டதுபோல ஈஷ்வர, குரு, சாஸ்திர மற்றும் தனது சொந்த அருள் தேவை. எவ்வளவோ பேர் கண்டும்காணாமல் கடந்துசென்ற, அல்லது கேட்டு அலட்சியப்படுத்திய ஒன்றை நோக்கி ஒருவன் செல்ல முயல்கிறான் எனில் அதற்கு பெரிய புண்ணியம் தேவை. எனவே இந்த பாதையில் வரக்கூடிய சில கடினங்களைச் சமாளிக்க ஒருவன் பழகுதல் வேண்டும். எந்தவொரு முயற்சியிலும் கடினங்களும் சிரமங்களும் இருக்கத்தான் செய்கின்றன; ஞானம் அதற்கு விதிவிலக்கல்ல. தாங்கள் எதை விரும்புகிறோம் என்பது தெளிவாக இல்லாததால், மக்கள் இத்தகைய தடைகளால் உற்சாகத்தை இழந்து, அதை எதிர்கொள்வதிலிருந்து விலகுகிறார்கள். ஆனால் முயற்சியுடனும் விருப்பத்துடனும் இத்தடைகளை எதிர்கொண்டு ஒருவன் முன்னேற வேண்டும். தன்னிலிருந்து வேறாக இல்லாத மற்றும் தனக்கு மிகப் பிரியமானதான அந்த மேலான இறுதி நிலையை அடைய விரும்புபவன் கண்டிப்பாக அதற்கான முயற்சியை செய்பவனாக இருக்கவேண்டும்

இப்படிப்பட்ட சிரத்தையுடன் கூடிய, என்னையே கதியாகக் கொண்ட எந்த ஞானிகள், அம்ருதத்துவத்திற்கு காரணமாகவுள்ள இந்த தர்மத்தை இங்குரைதபடி பின்பற்றுகிறார்களோ அவர்களே எனக்கு மிக அதிகப் பிரியமானவர்கள், எனக் கூறி இந்த அத்தியாயத்தை முடித்தருள்கிறார் பகவான்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பக்தியில்வைதிக பக்திஎன்பது ஒன்று. அதாவது சாஸ்திரங்கள் விதிக்கிறபடி பக்தி பண்ணுதலாம். பகவந் நாமத்தை பல தடவை உச்சாரணம் பண்ணுதல், உபவாசமிருத்தல், தீர்த்த யாத்திரை போதல், வேண்டிய ஸாமக்கிரியைகளைக் கொண்டு பூஜை பண்ணுதல் முதலியன வைதிக பக்தியில் சேர்ந்தவை. இப்படி நெடுங்காலம் பக்தி செய்தால் ஈஷ்வர பக்தியில் இன்னும் உயர்ந்த நிலையாகியராக பக்தியைப் பெறக்கூடும். எல்லாவற்றிற்கும் பிரேமைதான் முக்கியம். உலகப்பற்று முற்றிலும் அகலவேண்டும். முழுமனதும் ஈஷ்வரனிடம் பொருந்தவேண்டும். அப்போதுதான் அவனை அடையமுடியும். ராக பக்தியில்லாமல் அவனை அடைய முடியாது.

---------------------------------------------------------------------------------------------

ऒं तत्सत्। इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादशोऽध्याय: ।।

ஓம் தத் ஸத்।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 4க்தியோகோ3 நாம த்வாதசோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் பக்தி யோகம் என்ற பன்னிரெண்டாம் அத்தியாயம்.

---------------------------------------------------------------------------------------------

பக்தியோகம் - சாரம்:

(1) அர்ஜுனனின் கேள்வி [1]

(2) பகவானின் பதிலின் துவக்கம் [2]

(3) ஐந்தாவது படிநிலை - ஞானயோகம் [3 - 5]

(4) நான்காவது படி - விஷ்வரூப பக்தன் [6 - 8]

(5) மூன்றாவது படி - இஷ்ட தேவதா பக்தி [9]

(6) இரண்டு மற்றும் முதலாம் படிநிலை - கர்மயோகம் [10 - 11]

(7) முதல் படிநிலையிலிருப்பவனை உற்சாகப்படுத்துகிறார் [12]

(8) பராபக்தன் அல்லது ஞானியின் பேரியல்புகள் [13-19]

(9) ஞானத்தின் பெருமை [20]

---------------------------------------------------------------------------------------------