||13.1|| ஜீவ-ஈஷ்வர ஐக்கிய ஞானம்:
श्रीभगवानुवाच
इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहु: क्षेत्रज्ञ इति तद्विद: ।। १ ।।
ஸ்ரீப4க3வாநுவாச
இத3ம் ச1ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி4தீ4யதே ।
ஏதத்3யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்3வித3: ।। 1 ।।
श्रीभगवान् उवाच ஸ்ரீ ப4க3வாந் உவாச ஶ்ரீ பகவான் சொன்னது
कौन्तेय கௌந்தேய குந்தியின் மைந்தா इदं शरीरं இத3ம் ச1ரீரம் இந்த சரீரம்
क्षेत्रम् इति க்ஷேத்ரம் இதி க்ஷேத்திரம் என்று अभिधीयते அபி4தீ4யதே இயம்பப்படுகிறது
य: ய: யார் एतत् ஏதத் இதை वेत्ति வேத்தி அறிகிறானோ तं தம் அவனை
क्षेत्रज्ञ: इति க்ஷேத்ரஜ்ஞ இதி க்ஷேத்திரக்ஞன் என்று तद्विद: தத்3வித3: அதையறிந்தவர்கள் प्राहु: ப்ராஹு: பகர்கிறார்கள்.
ஶ்ரீ பகவான் சொன்னது: குந்தி புத்திரா, இவ்வுடல் க்ஷேத்திரம் எனப்படுகிறது. இதை அறிகிறவனை க்ஷேத்திரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை க்ஷேத்திரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.
விளக்கம்:
ஒன்று மற்றும் இரண்டு, இவ்விரு சுலோகங்களிலும் ஜீவ-ஈஷ்வர ஐக்கிய ஞானம் புகட்டப்படுகிறது. எனவே இதனை ‘மஹா வாக்யம்’ என்றும் அழைக்கலாம். மேலான பிரயோஜனத்தை கொடுக்கின்ற வாக்கியம் — மஹத் ப்ரயோஜநவத் வாக்யம் மஹா வாக்யம். மிகவும் பிரசித்தி பெற்ற ‘த்தவமஸி’ எனும், மூன்று சொற்களைக் கொண்டதான இந்த மஹா வாக்கியத்தில்: (1) ஜீவனைக் குறிக்கும் சொல் [த்வம் பதம்]; (2) ஈஷ்வரனைக் குறிக்கும் சொல் [தத் பதம்]; (3) ஐக்கியப்படுத்தும் சொல் [அஸி பதம்].
=> ஜீவ விசாரம்:
மஹா வாக்கியத்திலுள்ள ஜீவனைக் குறிக்கும் சொல்லின் மூலம் ஜீவ தத்துவம் நிர்ணயம் செய்யப்படுகிறது. எப்பொழுதெல்லாம் நாம் ஒரு சொல்லை கையாளுகிறோமோ, அப்பொழுதெல்லாம் அதற்குரிய அர்த்தமானது நம் மனதிலிருக்கும்போது தான் அதைச் செய்ய முடியும். அவ்விதம் நம் மனதிலிருக்கும் அச்சொல்லின் அர்த்தமானது சில சமயம் சரியாகவும் இருக்கலாம், அல்லது தவறாகவும் இருக்கலாம் அல்லது சில சமயங்களில் அது பாதி சரி பாதி தவறாக இருக்கலாம்.
இனி, உள்ளதுக்குள்ளேயே நம்மால் அதிகம் பயன்படுத்தப்படும் ‘நான்’ என்கிற சொல்லினுடைய அர்த்தத்தின் நிலை என்ன எனப் பார்ப்போம். அது, பாதி சரி மற்றும் பாதி தவறு எனும் வகையைச் சார்ந்துள்ளது. அதாவது, ‘நான்’ எனும் சொல்லை நாம் பயன்படுத்தும்போது அதற்கு அர்த்தமாக எதைப் புரிந்து கொண்டுள்ளோமோ அது பாதிதான் சரி, மீதிப் பாதி தவறு ஆகும். எனவே அங்கு சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. என்ன மாதிரியான தவறு செய்துள்ளோம் எனில், சரியான அர்த்தத்தோடு அனர்தத்தையும் சேர்த்து புரிந்துள்ளோம். அதாவது, சரியான பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றையும் அதனுடன் சேர்த்து புரிந்து கொண்டுள்ளோம். எனவே அனர்தத்தை நீக்கி சரியான அம்சத்தை புரிந்துகொள்ள செய்யப்படுகிற விசாரமே ஜீவ-விசாரம் எனப்படும். இதில் சரியான(உண்மையான) அம்சம், ஆத்மா ஆகும். தவறான(பொய்யான) அம்சம், அனாத்மா ஆகும். அனாத்மா எனில் ஆத்மா அல்லாதது எனப் பொருள்படும்.
அஹம்(நான்) = ஆத்மா + அனாத்மா.
எனவே ஜீவ விசாரத்தை ஆத்ம-அனாத்ம விசாரம் எனவும் கூறலாம். இந்த சுலோகத்தில் ‘க்ஷேத்ரஜ்ஞ’ எனும் சொல் ஆத்மாவையும், ‘க்ஷேத்ரம்’ எனும் சொல் அனாத்மாவையும் குறிக்கிறது.
=> எது க்ஷேத்திரம்?
இத3ம் ச1ரீரம் க்ஷேத்ரம் இதி அபி4தீ4யதே, இந்த சரீரம் க்ஷேத்திரம் எனச் சொல்லப்படுகிறது என்கிறார் பகவான். ‘இந்த’ எனும் சொல் பொதுவாக காலத்திலும் இடத்திலும் தொலைவில் இல்லாத, குறைந்த பட்சம் முன்னால் அல்லது அருகே இருப்பதை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணர் தனது சொந்த உடலைத் தொட்டுக்காட்டியும்கூட, ‘இந்த உடல் க்ஷேத்திரம் எனப்படுகிறது’ என்று கூறியிருக்கலாம். இனி, ‘ச1ரீரம்’ என்ற சொல்லை பற்றி சிறிது விசாரிக்கலாம். சரீரம் எனில் அது ஸ்தூல, சூக்ஷம மற்றும் காரண சரீரத்தைக் குறிக்கிறது. இந்த உடலை ‘நான்’ என எண்ணுகிற எண்ணத்தை அஹங்காரம் என அழைக்கிறோம்.
சரீரம் = ஸ்தூலம் + சூக்ஷமம் + காரணம்
=> சரீரம் ஏன் க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது?
இங்கு பகவான் உடலை க்ஷேத்திரம் என்று அழைக்கிறார். அதற்கான காரணங்கள்:
(1) எது தேயுமே அது க்ஷேத்திரம் - க்ஷரணாத் க்ஷேத்ரம் (क्षरणात् क्षेत्रम्). உடலின் தன்மை தேயக்கூடியது என்பதால் அது க்ஷேத்திரம் எனப்படுகிறது.
(2) எது அழிகிறதோ அது க்ஷேத்திரம் - க்ஷயாத் க்ஷேத்ரம் (क्षयात् क्षेत्रम्). உடல் அழியக்கூடியது ஆகையால் அது க்ஷேத்திரம்.
(3) எது அழிவிலிருந்து காப்பாற்றுகிறதோ அது க்ஷேத்திரம் - க்ஷத த்ராணாத் க்ஷேத்ரம் (क्षत त्राणात् क्षेत्रम्). இந்த உடலின் துணைக் கொண்டுதான் ஒரு ஜீவனானவன் வைராக்கியத்தையும் ஞானத்தையும் அடைந்து அதன் மூலம் மோக்ஷத்தை அடைய முடியும். எனவே இந்த உடல் ஒரு ஜீவனை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறது.
‘ஆஹார நித்3ரா ப4யமைத்துநம் ச ஸாமான்யமேதத் பசு1பி4ர் நராணாம்’ - சாப்பாடு, உறக்கம், பயம் மற்றும் இனப்பெருக்கம் இவைகள் மனிதனுக்கும் மிருகத்திற்கும் சமம். வைராக்கியமும் ஞானமுமே மனித உடலை மிருக உடலிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
(4) விளையும் நிலம் அல்லது ஸ்தலம் க்ஷேத்திரம் - க்ஷேத்ரவத் க்ஷேத்ரம் (क्षेत्रवत् क्षेत्रम्). பயிரிடும் பொருட்டு ஒரு விளைநிலத்தில் விதையானது விதைக்கப்படும்போது அந்த பூமி அதற்கான பயிரைக் கொடுக்கிறது. பின்னர் அந்தப் பயிரையே விதையாக விதைத்து மீண்டும் பயிர் அறுவடை செய்யப்படுகிறது. அதுபோல சரீரம் எனும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு பாப புண்ணியம் ஈட்டப்படுகிறது. அந்த பாப புண்ணியத்தைக் கொண்டு அடுத்த உடல் கிடைக்கிறது. அந்த உடலைக் கொண்டு மீண்டும் பாப புண்ணியம் ஈட்டப்படுகிறது. இந்த ஒப்பீட்டை இரண்டாகப் பொருள்படுத்தலாம்:
(i) விளைநிலத்தில், விதை - பயிர் - விதை - பயிர் எனும் சுழற்சி காணப்படுகிறது. இதேபோல உடலைக் கொண்டு, பாப புண்ணியம் - உடல் - பாப புண்ணியம் - உடல் எனும் சுழற்சி நடைபெறுகிறது.
(ii) விளைநிலத்தில், விதை - பயிர் - பலன். உடலில், பாப புண்ணியம் - சரீரம் - சுகதுக்கம். பாப புண்ணியத்தை விதைத்து சுக துக்கத்தை அறுவடை செய்கிறோம். எனவே இது நம்மை சம்சார சக்கரத்தில் வைத்துள்ளது.
=> யார் க்ஷேத்திரஞன்?
மக்கள் பொதுவாக ஸ்தூல உடலை க்ஷேத்திரஞன் என்று தவறாக எடுத்துக்கொள்வதால், இந்த இடத்தில் க்ஷேத்திரஞனும் வரையறுக்கப்பட வேண்டும். அப்படியெனில், க்ஷேத்திரஞன் யார்? யார் க்ஷேத்திரத்தை அறிகிறானோ அவன் க்ஷேத்திரஞன் என அதையறிந்தவர்களால் சொல்லப்படுகிறான் — ய: ஏதத் வேத்தி தம் க்ஷேத்ரஜ்ஞ இதி தத்3வித3: ப்ராஹு:, என்கிறார் பகவான். க்ஷேத்திரத்தை அறிபவன் க்ஷேத்திரஞன்; அதாவது இந்த உடலை அறிபவன், அறிவு சொரூபமானவன் க்ஷேத்திரஞன். வெளியில் உள்ள உலகத்தை அறியப்படும் பொருளாக அறிவது போல, உள்ளிருந்து கொண்டு இந்த உடலையும் ஒரு அறிபொருளாக பொருள்படுத்துபவன் க்ஷேத்திரஞன். எனவே இது ஆத்ம தத்துவத்தைக் குறிக்கிறது.
இந்த அத்தியாயத்தின் தலைப்பு ‘க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்’ ஆகும். அதாவது, ஆத்ம அனாத்ம தத்துவத்தை பிரித்து புரிந்து கொள்ளுதலைக் குறிக்கிறது. உடலையும், உடலை அறிபவனையும் பிரித்து புரிந்து கொள்ளுதல் இரு படிகளில் நடைபெறுகிறது.
(1) ஆத்மா மற்றும் அனாத்மா வேறுபட்டது என பிரித்துப் புரிவது
(2) ஆத்மாவின் தர்மம் அதாவது தன்மையையும் அனாத்மாவின் தன்மையையும் புரிந்து கொள்வது. இவைகளின் சொரூபம் பற்றிய அறிவு கிடைக்கும்போதே, எவ்விதம் முற்றிலும் வேறுபட்ட தன்மையுடைய இரண்டையும் இப்படி கலந்து புரிந்துள்ளோம் என்பது தெரியவருகிறது. இனி, ஆத்மாவின் தன்மை மற்றும் அனாத்மாவின் தன்மை இரண்டையும் பார்ப்போம்.
=> ஆத்மா மற்றும் அனாத்மாவின் சொரூபம்:
(1) எப்போதும் அறிபவன் என்பவன் அறியப்படும் பொருளிலிருந்து வேறுபட்டவனாகவே இருக்கின்றான். இங்கும், அறிபவனாகிய க்ஷேத்திரஞன், அறியப்படும் பொருளாகவுள்ள உடல், மனம் மற்றும் புத்தி போன்ற க்ஷேத்திரத்திலிருந்து வேறுபட்டவனாக இருக்கின்றான். புத்தியிலுள்ள அறிவு மற்றும் அறியாமை இரண்டும் என்னால் அறியப்படுகின்றது. அறிவு என்பது விஷயத்தைப் பற்றிய ஞானத்தையும், அறியாமை என்பது அவ்விஷயத்தைப் பற்றிய ஞானமில்லாததையும் குறிக்கிறது. உதாரணமாக கணிதம் தெரியும் என்கிற விஷயத்தையும், ஜெர்மானிய மொழி தெரியாது என்கிற அறியாமையும் என்னால் அறியப்படுகிறது.
பொதுவாக அறியப்படும் பொருள் என்பது நம்மால் அறியப்படுகிற எந்தவொரு பொருளையும் குறிக்கிறது. ஆனால் இங்கு பகவான் மனுஷ்ய சரீரத்தை குறிப்பாகச் சொல்லக் காரணம், ஒருவன் இந்த உடலைத்தான் ஆத்மா எனத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளான். மாறாக பார்க்கப்படுகின்ற ஒரு பூசணியையோ அல்லது வேறு எதையும் ‘நான்’ எனப் புரிந்து கொள்வதில்லை. எனவே அங்கு நமக்கு எந்த ஞானமும் தேவையில்லை. எங்கு தவறு ஏற்பட்டிருக்கிறதோ அங்கு தான் அறிவு தேவை. எனவே எங்கு விவேகத்தின் அவசியம் உள்ளதோ அங்கிருந்து பகவான் தொடங்குகிறார்.
(2) அறியப்படுவது கண்டிப்பாக ஜடமானதாகத் தான் இருக்கமுடியும்; எனவே அனாத்மாவான க்ஷேத்திரம் ஜடம் ஆகும். அதாவது, உடல் ஐந்து ஸ்தூல பூதங்களின் சேர்க்கை ஆகையால் ஜடம் ஆகும். மனமும் ஐந்து சூக்ஷம பூதங்களின் சேர்க்கை என்பதால் அதுவும் ஜடமாகத்தான் இருக்க முடியும். மேலும் இனியொருவரின் உடலைப் பார்க்கிறோமே தவிர அவரின் அறிவு சொரூபத்தை நாம் பார்க்க முடிவதில்லை; பார்க்க முடியாது.
ஆத்மா சேதனம். பிரக்ஞை சொரூபமான ஆத்மாவை விளக்க வேறு எதுவும் தேவையில்லை. எந்தக் கருவியின் துணையுமின்றி ‘நான் இருக்கிறேன்_அஹம் அஸ்மி’ என்பது விளங்குகிறது; சுயமாக பிரகாசிப்பதாக உள்ளது.
(3) க்ஷேத்திரம் பலவாக இருப்பது, ஆனால் ஆத்மாவோ ஏக ரூபமானது.
(4) பார்த்ததும் உடனடியாக மாறுகின்ற தன்மையுடையது இந்த உலகம் - த்ருஷ்ட நஷ்ட ஸ்வபாவ: ஜகத். உடல், மனம் உள்ளிட்ட அனைத்து வகையான அனாத்ம விஷயங்களும் மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் ஆத்மா என்றும் மாற்றமடையாதது.
(5) மாற்றத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் அனாத்மா நிலையற்றது; தேய்ந்து அழியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஆத்மாவோ எப்போதுமிருப்பது; அழியாதது.
(6) ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்கிற முக்குணங்களுடன் கூடியது அனாத்மா ஆகும். அறியப்படுகின்ற எதுவும், வெவ்வேறு விகிதாசாரங்களில் இந்த மூன்று குணங்களின் கலவையாகவே உள்ளது. ஆனால் ஆத்மா குணங்களற்றது.
(7) எது அனுபவத்திற்கு உள்ளதோ ஆனால் உண்மையில் இல்லையோ அது மித்யா ஆகும். உதாரணமாக, கயிற்றில் தவறாகத் தெரியும் பாம்பு. பாம்பானது அனுபவத்திற்கு தெரிந்தாலும் அங்கு உண்மையில் பாம்பு இல்லை; இருப்பது கயிறு மட்டுமே.
எல்லா காலத்திலும் இருப்பதும், நீக்கப்படாததாக இருப்பதும் ‘ஸத்யம்’ ஆகும். இந்த பாம்பு-கயிறு உதாரணத்தில், பாம்பு தோன்றுவதற்கு முன்பும், பாம்பு தோன்றிக் கொண்டிருக்கும் போதும், சரியான வெளிச்சத்தின் காரணமாக பாம்பு மறைந்த பின்பும் என மூன்று காலத்திலும் அங்கு மாறாமல் இருந்தது கயிறு ஆகும்.
=> தவறான புரிதல்:
இப்படி வெவ்வேறு சொரூபத்தை உடைய ஆத்மாவையும் அனாத்மாவையும் நாம் கலந்து புரிந்து கொண்டுள்ளோம். அனாத்மாவை ‘நான்’ என எண்ணுவதால், ஆத்மாவின் தர்மம் மறைக்கப்பட்டு, அனாத்மாவின் தர்மத்தை தனதாக எடுத்துக் கொள்கிறோம். இதனால் அனாத்மாவின் தன்மைகளான பிறப்பு, மாற்றம், அழிவு இவைகளை நம்முடையதாக நினைத்து சம்சாரியாகத் துயரப்படுகின்றோம்.
‘தத்3வித3:’ என்பது இதைப் பற்றி அறிந்தவர்கள், அதாவது க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரஞனைப் பற்றியும், அதன் தன்மைகளைப் பற்றியும் அறிந்தவர்களை, அவைகளைப் பிரித்து புரிந்து கொண்டவர்களைக் குறிக்கிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மானிட சரீரம் ஒரு பானையைப் போன்றுள்ளது. மனம், புத்தி, இந்திரியங்கள் அப்பானையில் இடப்பட்ட ஜலம், உருளைக்கிழங்கு, அரிசி இவைகளுக்குச் சமானம். இவையெல்லாம் அடங்கிய பானையொன்றை அடுப்பின்மீது வைத்தால், அடுப்பின் நெருப்பு அவைகளை வேகச் செய்யும். அவைகளை ஒருவன் தொட்டால் அவனது விரல்களைச் சுட்டுவிடும். என்றாலும் அவ்வுஷ்ணம் வாஸ்தவத்தில் பானையினுடையதன்று. ஜலம், அரிசி, உருளைக்கிழங்கு இவைகளினுடையதுமன்று. அதுபோலவே மனிதனிடமுள்ள பிரம்மத்தின் சக்தியால்தான் அவனுடைய மனம், புத்தி, இந்திரியங்கள் எல்லாம் தம்தம் வேலைகளைச் செய்கின்றன.
---------------------------------------------------------------------------------------------
||13.2|| ஜீவ - ஈஷ்வர ஐக்கியம்:
क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ।। २ ।।
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு பா4ரத ।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம ।। 2 ।।
भारत பா4ரத பரதகுலத்துதித்தவனே सर्व क्षेत्रेषु ஸர்வ க்ஷேத்ரேஷு எல்லா க்ஷேத்திரங்களிலும் मां மாம் என்னை क्षेत्रज्ञं च अपि க்ஷேத்ரஜ்ஞம் ச அபி க்ஷேத்திரஞனாகவே
विद्धि வித்3தி4 அறிந்துகொள்க क्षेत्र क्षेत्रयो: க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ: க்ஷேத்திர க்ஷேத்திரஞனைப் பற்றிய ज्ञानं यत् तत् ஞாநம் யத் தத் ஞானம் எதுவோ அது
ज्ञानं ஞாநம் ஞானம் (என்பது) मम मतं மம மதம் என்னுடைய கொள்கை.
அர்ஜுனா, எல்லா க்ஷேத்திரங்களிலும் என்னை க்ஷேத்திரஞன் என்றறிக. க்ஷேத்திர க்ஷேத்திரஞனைப் பற்றிய அறிவே ஞானம் என்பது எனது கொள்கை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர். க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.
விளக்கம்:
இந்த சுலோகத்தின் முதல் வரியில் ஜீவ - ஈஷ்வர ஐக்கியமும், இரண்டாவது வரியில் ஞானத்தின் பெருமையும் பேசப்படுகிறது.
=> ஈஷ்வர விசாரம்:
சென்ற சுலோகத்தில் ஜீவ-விசாரம், அதாவது ஆத்ம-அனாத்ம விசாரத்தை மேற்கொண்டோம். மஹா வாக்கியத்தின் முறைப்படி அடுத்ததாக ஈஷ்வர விசாரத்தை செய்து பின்னர் ஐக்கிய ஞானத்தைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கலாம்.
நாம் ஏற்கனவே பல முறை பார்த்ததைப் போல, தோன்றிக்கொண்டிருக்கின்ற அனைத்திற்கும் காரணமான தத்துவம் ஈஷ்வர தத்துவம் ஆகும். உலகிற்கு காரணமாக விளங்குபவர் ஈஷ்வரன் - ஜகத் காரணம் ஈஷ்வர:. ஜீவனைப் போன்று ஈஷ்வர தத்துவத்தை இரு கூறுகளாகப் பிரிக்கலாம்.
ஈஷ்வர: = அபரா பிரக்ருதி + பரா பிரக்ருதி
= [கீழான தன்மை(மாயை) + மேலான தன்மை (ப்ரம்ம)]
மாயையும் ப்ரம்மமும் சேர்ந்த தத்துவம் ஈஷ்வர தத்துவம் ஆகும். இனி இவைகளின் தன்மைகள் அல்லது சொரூபத்தை பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.
=> ஜீவ - ஈஷ்வர சம்பந்த விசாரம்:
ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்கும் இரண்டு விதமான சம்பந்தம் பேசப்படுகிறது:
(1) காரிய-காரண சம்பந்தம்: ஜீவன் படைக்கப்பட்டவன் (காரியம்), மற்றும் ஈஷ்வரன் படைத்தவர் (காரணம்). சென்ற சுலோகத்தில் நாம் பார்த்த ஜீவனின் அனாத்ம சொரூபம் மற்றும் இங்கு சொல்லப்பட்ட ஈஷ்வரனின் அபரா பிரக்ருதியான மாயையின் நோக்கில் பார்க்கும்பொழுது, ஜீவன் படைக்கப்பட்டவனாகவும் ஈஷ்வரன் படைப்புக் காரணமாகவும் இருக்கிறார்.
(2) ஐக்கிய சம்பந்தம்: ஜீவனின் ஆத்மா மற்றும் ஈஷ்வரனின் பரா பிரக்ருதி திருஷ்டியில் பார்க்கும்பொழுது, இரண்டும் ஒன்றுதான். ப்ரம்மன் ஆத்மாவை படைக்கவில்லை; மாறாக, இந்த ப்ரம்மமே ஆத்மாவாக உள்ளது. இரண்டும் ஐக்கியம். பெயர் மற்றும் வடிவத்தின் அடிப்படையில் கடல் மற்றும் அலைகள் எனக் கூறப்பட்டாலும், அடிப்படைத் தத்துவமான நீரின் நோக்கில் இரண்டும் ஒன்றுதான். அதுபோல உபாதியின் வசத்தால், ஈஷ்வரன் மற்றும் ஜீவன் போன்ற பேதங்களை ஏற்றிவைத்தாலும் சொரூபத்தின் அடிப்படையில் ஜீவனும் ஈஷ்வரனும் ப்ரம்மமே ஆகும்.
=> இவை இரண்டில் எதை எடுத்துக்கொள்வது?
அட்டவணையிலுள்ள ஏழாவது கருத்தில் கூறப்பட்டுள்ளதுபோல, பொய்யான அம்சத்தின் அடிப்படையில் காரண-காரிய பா4வம். உண்மையான அம்சத்தின் அடிப்படையில் ஐக்கியம். இனி தேர்வானது தனிப்பட்ட ஒருவனுடையது. வைராக்கியம், மனமுதிர்ச்சி, மனத்தூய்மை ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹனுமன் கூறுகிறார், ‘உடல் அடிப்படையில் நான் பக்தன் - ராமன் என் தலைவன்; ஆத்ம பாவனையில் நானே ராமன், ராமனே நான்’. எனவே ‘நான்’ எனும் புத்தியானது அஹங்காரத்திலிருந்து விலகி, ஆத்மாவில் செல்லும்வரை ஒருவனுக்கு ஈஷ்வர-பக்தி முக்கியம். அதுவே ஒருவனை ஆத்மாவில் நிலைபெறுவதற்கானத் தகுதியை அளிக்கிறது.
=> மநநம்:
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை மேலோட்டமாக பார்க்கும் ஒருவனுக்கு பின்வரும் சந்தேகங்கள் வருகின்றன. சம்சாரியாக இருக்கும் இந்த ஜீவனும், ஈஷ்வரனும் ஒன்று எனும்போது ஈஷ்வரனும் சம்சாரி ஆகிவிடுகிறாரே! அப்படியெனில் அந்த ஈஷ்வரன் எப்படி எனது லக்ஷியமாக முடியும்? ஒருகால் ஈஷ்வரன் துக்கமற்றவர்தான், அசம்சாரியானவர்தான் எனில் அப்போதும் ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை ஏற்க முடியாதே! ஏனெனில் ஜீவனின் துக்கம் என்பது அனுபவ சித்தி, நாம் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லது ஒருவேளை ஜீவன் ஒரே காலத்தில் சம்சாரியாகவும் அசம்சாரியாகவும் இருக்கின்றான் எனவும் கூற முடியாது. ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு முரண்பட்ட குணத்துடன் இருக்க முடியாது என்கிறார் சங்கரர்.
எனில் இவ்வாறு தென்படக் காரணம் யாது? ‘அக்ஞாநாத் உபபத்3யதே’ என விளக்கமளிக்கிறார் சங்கரர். அதாவது அறியாமையினால் இவ்விதம் நிகழலாம். தன்னைப் பற்றிய சரியான அறிவில்லாத காரணத்தால் இந்த முரண்பாடு தெரிகிறது. அறியாமையினால் சம்சாரியாக தோன்றும் ஜீவனானவன், அறிவின் நோக்கில் ப்ரம்மனாக உள்ளான். அறியாமையினால் கடலானது காரணமாகவும், அலை காரியமாகவும் தென்படலாம். ஆனால் இரண்டின் ஆதாரமும் நீர் எனும் அறிவின் அடிப்படையில் இரண்டும் ஒன்றேயாம். 5 + 4 மற்றும் 10 - 1 என்பதை மேலோட்டமாக பார்க்கும்போது, முதல் தொகுப்பில் 5 மற்றும் 4 என்ற எண்களும் இனியொன்றில் 10 மற்றும் 1 என்ற எண்களுமாக வித்தியாசம் தெரிந்தாலும், இவைகள் அடிப்படையில் வேறுபாடற்றது.
5 + 4 = 10 - 1.
ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தில் இந்த இரண்டு முரண்படுகிற கருத்தை நன்கு விசாரித்து எந்த மனமானது இரண்டு கோணத்திலிருந்தும் முரண்பாடற்றதாகப் புரிந்து கொள்கிறதோ அதுவே அதி சூக்ஷமமான மனம் ஆகும்.
=> முதல் வரி:
எல்லா க்ஷேத்திரங்களிலும் பரமேஷ்வரனான என்னையே க்ஷேத்திரஞன் என்றறிக — ஸர்வ க்ஷேத்ரேஷு மாம் க்ஷேத்ரஜ்ஞம் வித்3தி4. எல்லா ஜீவராசிகளின் உடல்களுக்குள்ளும் உடலை அறிந்து கொண்டிருக்கும் ஆத்ம தத்துவத்தை நானாக அறிவாயாக, என்கிறார் பகவான். இங்கு ‘நான்_மாம்’ எனும் ஒருமைத்தன்மையானது பரமேஷ்வரனைக் குறிக்கிறது. சங்கரர் தனது பாஷ்யத்தில் யார் அந்த பரமேஷ்வரன் என்கிற கேள்வியைக் கேட்டு அதற்கு விடையாக, சம்சாரத்திற்கு ஆளாகாதவர் எனக் கூறுகிறார். பொதுவாக மக்கள் க்ஷேத்திரஞனை ஒரு சம்சாரி என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் க்ஷேத்திரஞன் ஈஷ்வரனுக்கு ஒப்பானவன் என்கிறது சாஸ்திரம். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே சாஸ்திரத்தின் முதன்மையான மற்றும் முக்கிய நோக்கமாகும்.
மேலும் பகவான் ஒரு குறிப்பிட்ட உடலில் மட்டும் க்ஷேத்திரஞனாக இல்லை, எல்லா ஜீவராசிகளின் உடலிலும் தானே க்ஷேத்திரஞன் என்கிறார். ‘இது எனது உடல்’ என்கிற உணர்வு இருக்கின்ற இடத்திலெல்லாம், சைத்தன்யமாக விளங்கும் இந்த க்ஷேத்திரஞன் உள்ளான். இதை வேறுவார்த்தையில் கூறுவதானால், ‘நீ நானே; ஒவ்வொரு ஜீவனும் பரமேஷ்வரனான நானே’ எனக் கூறி ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தைச் செய்கிறார்.
இந்த ஒரு க்ஷேத்திரஞனே பிரம்மதேவரில் தொடங்கி புல் பூண்டு வரை எண்ணற்ற வடிவங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரிவதாக சங்கரர் கூறுகிறார். ஒன்றுதான் எனில் வெளித்தோற்றத்தில் ஏன் இத்தனை பிரிவுகள்? உபாதியின் அடிப்படையில் அப்படித் தெரிகிறதே தவிர, உண்மையில் எந்தப் பிரிவும் இல்லை. ஒரு சூரியன் பல கண்ணாடிகளில் பிரதிபலிக்கும்போது, பல சூரியன்கள் இருப்பதைப்போல தோன்றினாலும், உண்மையில் அது ஒன்று மட்டுமே ஆகும். அதுபோல, பிரம்மதேவர், இந்திரன், வருணன், அக்னி, கந்தர்வர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள், மரங்கள், தாவரங்கள் போன்ற பல உபாதிகள் காரணமாக பிரிக்கப்பட்டதைப் போல தோன்றினாலும் உண்மையில் பரமேஷ்வரன் ஒருவரே. க்ஷேத்திரஞனான இந்த பரமேஷ்வரன் பிரிக்கப்படவே இல்லை. அது உபாதியினால் ஏற்படும் அனைத்துவிதமான வேறுபாடுகளிலிருந்தும் விடுபட்டதாக, ஆத்மாவாக இருக்கிறது. எனவே எல்லா க்ஷேத்திரங்களிலும் இருக்கின்ற அந்த ஒரே ஒரு க்ஷேத்திரஞனான பரமேஷ்வரன், ஆத்மாவாக, நீயாக இருக்கிறாய் என்கிறார் பகவான்.
மேலும் அதை, இருத்தல்(ஸத்) மற்றும் இல்லாமை(அஸத்) போன்றவற்றை குறிக்கின்ற வார்த்தைகளால் அறிய முடியாது என்கிறார் சங்கரர். முயல் என்பது ஸத்; ஏனெனில் அது இருக்கின்ற ஒரு பொருளாக நமக்கு தெரிந்து கொண்டுள்ளது. அதேசமயம் அந்த முயலினுடைய கொம்பு என்பது அஸத்; இல்லாத ஒன்றும் நமக்கு அவ்வாறே விளங்குகிறது. ‘இருக்கிறது’ மற்றும் ‘இல்லை’ என்கிற இந்த இரு வகையான அறிவுமே பிரமாணத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த முயல்-முயற்கொம்பு உதாரணத்தில் கண் பிரமாணமாக செயல்படுகிறது. இந்த பிரமாணத்தை இயக்குபவன், அறியப்பட்ட பொருளிலிருந்து வேறானவனாக இருக்கிறான். அப்படிப்பட்ட இந்த க்ஷேத்திரஞன் இதுபோன்ற அறியப்படுகின்ற பொருட்களில் ஒருவன் அல்ல; சுய-இருத்தலும் சுய-ஒளிர்வும் கொண்ட அவனாலேயே அனைத்தும் அறியப்படுகிறது. எனவே அவன் ‘இருக்கிறது’ மற்றும் ‘இல்லை’ என்ற அறிவிற்கு அப்பாற்பட்டவனாக, இவை இரண்டையும் ஒளிர்விக்கின்ற அறிவு-சொரூபமாக இருக்கின்றான். தயவு செய்து என்னை அப்படிப்பட்ட க்ஷேத்திரஞனாக அறிவாயாக — க்ஷேத்ரஜ்ஞம் மாம் வித்3தி4, என்கிறார் பகவான்.
=> மூன்றுவித பொருள்விளக்கம்:
‘என்னையே_ச அபி மாம்’ என்கிற இந்த சொல்லை மூன்றுவிதமாக பொருள்படுத்தலாம்.
(1) பரமேஷ்வரனாகிய என்னையே, அதாவது ப்ரம்மத்தையே க்ஷேத்திரஞனாக அறிவாயாக.
(2) விஷ்வரூப தரிசன யோகத்தில் கூறப்பட்ட மற்றும் இனிவரும் சுலோகங்களிலும் விளக்க இருக்கிற ஜடப் பிரபஞ்சமான க்ஷேத்திரம் மட்டும் நான் அல்ல; இந்த பிரபஞ்சத்தை அறிகின்ற க்ஷேத்திரஞனாகவும் என்னையே அறிவாயாக.
(3) சரீரத்தை அறிபவன் க்ஷேத்திரஞன் என்று முதல் சுலோகத்தில் என்னால் உபதேசிக்கப்பட்டது. அந்த க்ஷேத்திரஞனாகவும் என்னையே புரிந்து கொள்க.
=> இரண்டாம் வரி:
க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரஞனை குறித்த இந்த அறிவே ஞானம். இது எனது தரிசனம் — யத் தத் ஞாநம் மம மதம், என்கிறார் கிருஷ்ணர். இங்கு ‘மத’ என்பது விவாதத்திற்குரியதையோ அல்லது கருத்தையோ குறிப்பது அல்ல; இது உண்மையை அங்கீகரிப்பதை குறிக்கிறது.
ஈஷ்வரனே அனைத்துமாக இருப்பதால், ஈஷ்வரனாக இருக்கின்ற க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரஞனின் உண்மையைக் கூறும் இந்த அறிவில், மேலும் அறியப்பட வேண்டியதாக வேறெதுவும் எஞ்சவில்லை. இந்த பௌதிக உடல், மனம் மற்றும் புலன்கள் மட்டுமல்ல, இந்த முழு பௌதிக உலகமும்கூட க்ஷேத்திரம்தான். இங்கு மறைமுகமாகச் சொல்லப்பட்ட இந்த கருத்தை பகவான் இனிவரும் சுலோகங்களில் விளக்கமாகப் பேச இருக்கிறார். இந்த பெளதிக உடலை ஆத்மாவாகிய ‘நான்’, அதாவது க்ஷேத்திரஞன் என்று நினைத்திருந்தோம். மேலும் பல க்ஷேத்திரஞன்கள் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் நம்மால் பார்க்கப்படுகின்ற இந்த உலகம் மட்டுமல்ல இந்த உடலும் க்ஷேத்திரம் எனக் கண்டறிந்தோம். ஆகவே அறியப்படுகிற பொருளாகவுள்ள அனைத்தும் க்ஷேத்திரம் என்றும், அதை அறிகிற சைத்தன்ய சொரூபம் க்ஷேத்திரஞன் என்றும் கூறும் இந்த ஞானம், இங்கு வேறு எதையும் விட்டுவைக்காது அனைத்தையும் உள்ளடக்கிவிட்டது. இதனால், இந்த அறிவை மட்டுமே அறிவு எனக் கருதமுடியும் ஏனெனில் இதில் அறியப்பட வேண்டியதென வேறெதுவுமில்லை. அல்லாமல், க்ஷேத்திரமான இந்த உலகைப் பற்றி மட்டுமே அறியப்படுகிற அறிவில், எவ்வளவு அறியப்பட்டாலும் விடுபட்டதென நிறைய எஞ்சி நிற்பதாகவே இருக்கிறது.
க்ஷேத்திரத்தை பற்றிய வித்யை அபரா-வித்யை எனப்படுகிறது. இது வேதங்கள், வியாகரணம், கலை ஞானங்கள், பூத பெளதிக சாஸ்திரங்களைக் குறிக்கிறது. க்ஷேத்திரஞனைப் பற்றிய வித்யை பரா-வித்யை ஆகும். இது ப்ரம்ம ஞானத்தைக் குறிக்கிறது. அபராவித்யையில் துவங்கிப் பராவித்யையில் ஆராய்ச்சி முற்றுப்பெறுவதே உண்மையான ஞானமாகும். தனியாக க்ஷேத்திரத்தை ஆராய்ந்து அதை மட்டும் கையாளுவது என்பது உலோகாயதம். மேலும் தோற்றத்திற்கு மட்டுமே இருக்கக்கூடிய பொருள்களைப் பற்றிய அறிவு என்பது உண்மையான அறிவல்ல. ஏனெனில் மித்யாவான இந்த க்ஷேத்திரத்தை பற்றிய அறிவானது மாறக்கூடியதாக, அநித்தியமானதாக இருக்கிறது. ஆனால் ஸத்ய வஸ்துவைப் பற்றிய ஞானமானது என்றும் மாறாதது. மேலும் க்ஷேத்திரத்தைப் பற்றிய அறிவு என்பதில் அறிந்ததைக் காட்டிலும் இன்னும் அறியப்பட வேண்டியது நிறைய இருப்பதால், அது மனதை நிறைக்காது. அறியப்பட வேண்டியதைக் குறித்த பதட்டமும், அறியாமையைக் குறித்த கவலையும் தொக்கி நின்று கொண்டேயிருக்கிறது. ஆனால் க்ஷேத்திரஞனை பரமேஷ்வரனாகவும் மற்றும் க்ஷேத்திரமும் ஈஷ்வரனிடமிருந்து வேறானதாக இல்லை எனவும் புகட்டும் இந்த அறிவில் எஞ்சுவது எதுவுமில்லையாதலால் இது முழு நிறைவை அளிக்கிறது. எனவே இந்த அறிவே முழுமையான ஞானம் ஆகும். இதுவே ஈஷ்வரனான எனது தரிசனமாகும், என்கிறார் கிருஷ்ணர்.
=> சங்கர பாஷ்யம்:
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, இந்த சுலோகம் ஒரு மஹாவாக்கியமாகும். ஸ்தூல, சூக்ஷம மற்றும் காரண உடலுடன் சேர்த்து இந்த முழுவுலகமும் க்ஷேத்திரம் ஆகும். இவைகளனைத்தையும் சாட்சியாக இருந்து அறிகிற பிரத்யகாத்மாவான க்ஷேத்திரஞன் ஈஷ்வரனிடமிருந்து வேறானவனாக இல்லை எனக் கூறி ஈஷ்வரனுடன் ஐக்கியப்படுத்தப்பட்டது. மேலும் மக்களின் புரிதலான பல க்ஷேத்திரஞன்கள் உண்டு என்கிற பொதுவான கருத்தையும் பகவான் இங்கு தவறு என சுட்டிக் காட்டுகிறார். ‘எல்லா உடலிலும் நானே அறிபவனாக இருக்கிறேன்’ எனக் கூறி அறிபவனான ஆத்மா பல அல்ல; ஒன்று என்றும் தெளிவுபடுத்துகிறார். இந்த சுலோகம் ஒரு மஹா வாக்கியம் என்பதால் சங்கரர் தனது பாஷ்யத்தில் இதற்கு மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். முழு சாஸ்திரத்தின் சாராம்சமாக விளங்கும் இந்த சுலோகத்தை குறித்து விரிவான விசாரம் தேவை என்பதை உணர்ந்தவராக அவர் இதை மேற்கொள்கிறார். பூர்வ-பக்ஷம் எனப்படுகிற, இந்த ஞானத்திற்கு எதிரான பார்வையை உடையவர்களின் தரப்பிலிருந்து எழுகிற கேள்வியை, பல்வேறு சர்ச்சைகளை இப்பகுதியில் கொண்டுவந்து அதற்கான முழு விளக்கத்தையும் அளிக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பணத்தை வைத்திருப்பதாலேயே ஒருவன் பணக்காரனாகிவிட மாட்டான். பணக்காரனுடைய வீட்டிற்கு அடையாளம் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் விளக்குகள் எரிவதாகும். ஏழைக்கு எண்ணெய் கிடைக்காதாகையால் அத்தகைய விளக்குகளை ஏற்ற மாட்டான்.
பகவானது ஆலயமாகிய இச்சரீரத்தை அந்தகாரத்தில் வைத்திருக்கக்கூடாது. அதில் ஞான விளக்கு ஏற்றப்படவேண்டும். உன் ஹிருதயமாகிய அறையில் ஞானவிளக்கை ஏற்றித் தெய்வத்தின் திவ்விய முகத்தைக் காண்பாய். ஒவ்வொருவரும் ஞானத்தை அடையமுடியும். நான் என்கிற குறுகிய ஆன்மா என்றும், விசாலமான பரமான்மா வென்றும் இரண்டுவகையுண்டு. ஒவ்வொரு சிறு ஆன்மாவும் அதாவது ஜீவான்மாவும் பரமான்மாவோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரசக்தி இருக்கிறது. இந்த மின்சாரம் கம்பெனியிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் செலுத்தப்படுகிறது. தகுந்த அதிகாரிகளிடம் மனுச் செய்ய வேண்டியதுதான். அப்போது உன் வீட்டில் மின்சார விளக்கைப் பெறுவாய். பரஞானம் உனது உடல் வாழ்க்கையையும், உன்னையும், உனது தெய்வத்தையும் விளக்கும்.
---------------------------------------------------------------------------------------------