பதிமூன்றாம் அத்தியாயம்
க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம்
[क्षेत्रक्षेत्रज्ञविभागयोग:]
முகவுரை:
கீதையில் மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன. அது மூன்று பாகமாக, அதாவது 6 + 6 + 6 = 18 எனப் பிரிக்கப்படுகிறது. ஆறு அத்தியாயங்கள் கொண்ட ஒவ்வொரு பிரிவையும் நாம் ‘ஷட்கம்’ என அழைக்கிறோம். முதல் ஆறு அத்தியாயங்கள் ‘பிரதம ஷட்கம்’ என்றும், ஏழு முதல் பனிரெண்டு வரையிலான அடுத்த ஆறு அத்தியாயங்கள் ‘மத்யம ஷட்கம்’ என்றும், இறுதி ஆறு அத்தியாயங்கள் ‘சரம ஷட்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. எனவே சென்ற அத்தியாயத்தின் முடிவு, மத்யம ஷட்கத்தின் முடிவைக் குறிக்கிறது. ஆகவே இதுவரையில் பார்க்கப்பட்ட அத்தியாயங்களின் அல்லது ஷட்கங்களின் ஒரு சுருக்கத்தை இங்கு பார்த்த பின்னர், மூன்றாம் ஷட்கத்தினுள் நுழையலாம்.
நமது சம்பிரதாயத்தில் கீதையின் முழு உபதேசம் என்பது ‘தத் த்வம் அஸி - நீ அதுவாக இருக்கிறாய்’ எனும் மஹாவாக்கியத்தின் விளக்கமாகப் பார்க்கப்படுகிறது. வேதாந்தத்தின் முழு போதனையையும் சாரமாகக் கொண்டுள்ள இந்த வாக்கியத்தில், ‘நீ_த்வம்’ என்பது முக்தியை விரும்புகிற ஜீவனைக் குறிக்கிறது. ‘அது_தத்’ என்பது உலகனைத்திற்கும் காரணமாகவுள்ள ஈஷ்வரனைக் குறிக்கிறது. ‘இருக்கிறாய்_அஸி’ என்ற சொல்லின் மூலம் இரண்டும் இதில் சமப்படுத்தப்படுகிறது. அனைத்தையும் அறிந்தவரான(ஸர்வக்ஞ) மற்றும் அனைத்திற்கும் காரணமானவரான(ஸர்வ-காரண) ஈஷ்வரனை, வரையறுக்கப்பட்ட அறிவும்(அல்பக்ஞ) பல்வேறு நியதிகளுக்கு கட்டுப்பட்டவனுமான ஜீவனுடன் எப்படி சமப்படுத்தமுடியும்? அதற்கு ‘நீ’ என்கிற சொல்லின் உண்மையான அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
இதனடிப்படையில் முதல் ஆறு அத்தியாயங்களில் கீதா-சாஸ்திரம் ‘நீ_த்வம்’ என்பதன் பொருளை விரித்துக்காட்டுகிறது. முதல் அத்தியாயம் அர்ஜுனனின் சோகத்தை வெளிப்படுத்துகிறது. இது ஒவ்வொரு தனிமனிதனின் சோகத்தையும் பிரதிநிலைப்படுத்திக் காட்டுவதாக உள்ளது.
இரண்டாவது அத்தியாயத்தில், அர்ஜுனன் தனது சோகத்திற்கான தீர்வைத் தேடி கிருஷ்ணரை குருவாக ஏற்று, ஒரு சீடனாக அவர் பாதம் பணிந்ததை கண்டோம். தன்னிடம் சரணடைந்த அர்ஜுனனைச் சீடனாக ஏற்ற பகவான் தனது உபதேசத்தைத் தொடங்கினார். ‘த்வம்’ என்பதன் உண்மையான பொருளாகவுள்ள பிரத்யகாத்மாவின் தன்மைகளை விளக்க ஆரம்பித்தார். அழிவிற்கு உட்படாதவன்(அவிநாசி), நித்தியமாக இருப்பவன்(நித்யம்), பிறப்பற்றவன்(அஜ), மாற்றமடையாமல் இருப்பவன்(அவ்யய) என்றெல்லாம் விளக்கியருளினார். மேலும் பிரத்யகாத்மாவையும் ஈஷ்வரனையும் சமப்படுத்துகிற இந்த அறிவை ஒருவன் புரிந்துகொள்ள உதவும் வழிமுறையாக கர்ம-யோகத்தை விளக்கினார்.
பின்னர் மூன்றாவது அத்தியாயத்தில் சந்யாச வாழ்க்கையைத் தொடர வேண்டுமா அல்லது கர்மயோகத்தைத் தொடர வேண்டுமா என்ற சந்தேகத்தை அர்ஜுனன் வெளிப்படுத்தினான். அதற்கான விளக்கத்தை அங்கு அளித்தார் கிருஷ்ணர்.
பின்னர் நான்காவது அத்தியாயத்தில், உண்மையான சந்யாசம் என்பது அறிவின் மூலமாக துறப்பது(ஞான-கர்ம-சந்யாஸ) என்றும், உண்மையில் பிரத்யகாத்மா எந்த செயலையும் செய்யாதது(அகர்த்தா) என்றும் கூறினார். எவனொருவன் செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் பார்க்கிறானோ அவனே நிலைபெற்றவன், செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவன்(க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்) என்றார்.
ஐந்தாவது அத்தியாயத்தில், பிரத்யகாத்மா செயல் செய்யாதவன்(அகர்த்தா) மட்டுமல்ல, எதையும் அனுபவிக்காதவனாகவும்(அபோக்தா) இருக்கிறான் எனக் கூறி சந்யாசத்தை மேலும் விரித்துக் காட்டுகிறார். பார்த்தாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், உண்டாலும், போனாலும், உறங்கினாலும், கண் சிமிட்டினாலும், எந்தச் செயலையும் ஆத்மா செய்வதில்லை, என சுலோகம் 5.8 மற்றும் 5.9 -ல் கூறுகிறார்.
ஆறாவது அத்தியாயத்தில், அடைந்த ஆத்ம-ஞானத்தை மீண்டும் மீண்டும் மனதிற்கு கொண்டுவந்து அந்த அறிவிலேயே இருந்து பழகும் நிதித்யாசன தியானம் விரிவாகப் பேசப்பட்டது. தியானத்திற்குமுன் செய்ய வேண்டிய ஏற்பாடுகளில் தொடங்கி, தியானத்தின் சொரூபம் மற்றும் பலன் ஆகியவை விளக்கப்பட்டன.
இவ்விதமாக, ‘அது நீயாக இருக்கிறாய்’ என்கிற வாக்கியத்தில் முதல் ஆறு அத்தியாயங்கள், ‘நீ’ என்ற சொல்லை மையமாகக் கொண்டதாக அமைந்தது.
ஏழு முதல் பனிரெண்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய இரண்டாவது ஷட்கத்தில் ஈஷ்வரனைக் குறிக்கின்ற ‘அது_தத்’ எனும் சொல் விளக்கப்படுகிறது. இதில் ஏழாவது அத்தியாயத்தில் முழு உலகத்திற்கும் காரணமாக ஈஷ்வரன் அறிமுகப்படுத்தப்பட்டு, பத்தாவது அத்தியாயத்தில் ஈஷ்வரனின் மஹிமைகளைப் பற்றி விரிவாகப் பேசினார் பகவான். பதினொன்றாவது அத்தியாயத்தில் அவர் தனது பிரபஞ்ச வடிவமான விஷ்வரூபத்தை காட்டினார். பன்னிரண்டாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் உபாசனைகள் மற்றும் பக்த லக்ஷணங்களைப் பற்றி பேசினார். இவ்வாறு அடுத்த ஆறு அத்தியாயங்கள் ஈஷ்வரனை மையமாகக் கொண்டதாக இருந்தது.
கடைசி ஆறு அத்தியாயங்களை உள்ளடக்கிய இறுதி ஷட்கம், ‘அஸி’ எனும் சொல்லை விளக்கும் விதமாக ஜீவ-ஈஷ்வர ஐக்கியமும் அதை அடைவதற்கான வழிமுறைகளும்(உபாய) பேசப்படுகிறது. ஞானயோகம் விளக்கப்படுகிறது. மெய்ப்பொருளை புரிந்துகொள்ளும் பொருட்டு செய்யப்படுகிற நேரடிச் சாதனமான ஞானயோகம் என்பது சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனம் எனும் மூன்று வழிமுறைகளை உள்ளடக்கியது. இதில், சிரவணம் என்பது கேட்டல் ஆகும்; உபநிஷத்தின் தத்துவம் புரியும்வரை அதை குருவிடம் கேட்டல். அடுத்ததாக மநநம் என்பது சந்தேகம் தெளிதலைக் குறிக்கிறது; கேட்பதற்கும் நமது அனுபவத்திற்கும் உள்ள முரண்பாட்டை நீக்கச் செய்கிற சாதனம் இது. இறுதியாக, நிதித்யாசனம் என்பது அறிவு நிலைத்தலுக்காக செய்யப்படும் தியானத்தைக் குறிக்கிறது; புரிந்த பின்னும் பழக்கத்தினால் அறிவில் நிற்க முடியாமலிருப்பதால், அதில் நின்று பழக செய்யப்படும் தியானம் இது. மேலும் இந்த ஷட்கத்தில் நற்குணங்களையும் தீயபண்புகளையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார் பகவான். தன்னறிவை உள்வாங்க ஒருவனிடம் என்னென்ன மாற்றங்கள் நிகழவேண்டுமென விளக்கமாக கூறப்போகிறார்.
எனவே சுருக்கமாக,
(1) முதல் ஷட்கத்தில் கர்மயோகம், ஜீவசொரூபம், சுயமுயற்சி, சந்யாசம் மற்றும் தியானம்.
(2) இரண்டாவது ஷட்கத்தில் பக்தியோகம், ஈஷ்வர சொரூபம் மற்றும் ஈஷ்வர அணுகிரஹம்.
(3) இறுதி ஷட்கத்தில் ஞானயோகம், ஜீவ-ஈஷ்வர ஐக்கியம் மற்றும் நற்பண்புகள்.
இனி, அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கின்ற இந்த பதிமூன்றாம் அத்தியாயம், ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. பனிரெண்டாம் அத்தியாயத்தில் ஞானியிடம் இருப்பதாக நம்மால் பார்க்கப்பட்ட சத்-குணங்கள், இந்த அத்தியாயத்தில் கூறப்படவிருக்கும் அறிவினால் உண்டானது என்பதாக பகவான் இந்த அத்தியாயத்தை தொடர்வதாக சங்கரர் கூறுகிறார். பொதுவாக, தெளிவற்றதாக உலவிக் கொண்டிருக்கிற சில சொற்களை அல்லது சில தத்துவங்களை பகவான் இங்கு தெளிவாக விளக்கிக் காட்டுகிறார்.
சில கீதை-பதிப்புகள் அர்ஜுனனின் கேள்வியுடன் துவங்கும். சில பதிப்புகள் நேரடியாக பகவானின் உபதேசத்திலிருந்து ஆரம்பமாகும். இனி, அர்ஜுனனின் கேள்வியைப் பார்க்கலாம்.
---------------------------------------------------------------------------------------------
अर्जुन उवाच
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च ।
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ।।
அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச ।
ஏதத்3வேதி3துமிச்சா2மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேச1வ ।।
अर्जुन उवाच அர்ஜுன உவாச அர்ஜுனன் சொன்னது
केशव கேச1வ கேசவா प्रकृतिं ப்ரக்ருதிம் பிரக்ருதியையும்
पुरुषं च एव புருஷம் ச ஏவ புருஷனையும்
क्षेत्रं क्षेत्रज्ञम् च एव க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞம் ச ஏவ க்ஷேத்திரத்தையும் க்ஷேத்திரக்ஞனையும்
ज्ञानं ज्ञेयं च ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச ஞானத்தையும் அறிய வேண்டியதையும் एतत् ஏதத் இவைகளை वेदितुम् வேதி3தும் தெரிந்துகொள்ள इच्छामि இச்சா2மி இச்சிக்கிறேன்.
அர்ஜுனன் சொன்னது: பிரக்ருதி புருஷன், க்ஷேத்திரம் க்ஷேத்திரக்ஞன், ஞானம் ஞேயம் ஆகிய இவைகளை அறிந்துகொள்ள, நான் விரும்புகிறேன்.
விளக்கம்:
பல பதிப்புகளில் இந்த சுலோகம் காணப்படுவதில்லை ஆதலால் இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இது இந்த அத்தியாயத்தில் பகவான் விளக்கயிருக்கின்ற ஆறு தலைப்புகளைப் பற்றிய அறிமுக சுலோகமாக அமைகிறது. இந்த ஆறு தத்துவங்களின் விளக்கத்தை அர்ஜுனன் கேட்டு பகவான் விளக்குவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இவைகளின் பொருளை சுருக்கமாகப் பார்த்தால்,
* பிரக்ருதி, க்ஷேத்ரம் - ஜட தத்துவமான அனாத்மாவை குறிப்பது.
* புருஷன், க்ஷேத்திரக்ஞன், ஞேயம் - பரப்ரம்மத்தை குறிப்பது.
* ஞானம் என்பது இங்கு ஞானத்தை அடைவதற்கு தேவைப்படும் பண்புகளைக் குறிக்கிறது.
இச்சொற்கள் குறித்த விரிவான விளக்கத்தை அத்தியாயத்திற்குள் காணலாம்.
---------------------------------------------------------------------------------------------