சனி, 30 நவம்பர், 2024

பக்தி யோகம் 12.16 - 12.17

||12.16|| ஞானியின் பண்புகள் மேலும் கூறப்படுகின்றன:

अनपेक्ष: शुचिर्दक्ष: उदासीनो गतव्यथ:

सर्वारम्भपरित्यागी यो मद्भक्त: मे प्रिय: ।। १६ ।।

அநபேக்ஷ: சு1சிர்த3க்ஷ உதா3ஸீநோ 3தவ்யத2:

ஸர்வாரம்ப4பரித்யாகீ3 யோ மத்34க்த: மே ப்ரிய: ।। 16 ।।


अनपेक्ष:  அநபேக்ஷ:  எதையும் சாராதவன்     शुचि:  சு1சி:  தூய்மையானவன்     

र्दक्ष:  3க்ஷ:  திறமை வாய்ந்தவன்    उदासीन:  உதா3ஸீந:  சம பாவனையுடன் இருப்பவன்   

गतव्यथ:  3தவ்யத2:  மனத்துயரமற்றவன்    सर्व आरम्भ परित्यागी  ஸர்வ ஆரம்ப4 பரித்யாகீ3  எல்லா காமிய கர்மங்களையும் துறந்தவன்    :  :  யார்    मद्भक्त:  மத்34க்த:  என் பக்தனோ     

:    அவன்     मे  மே எனக்கு    प्रियப்ரிய:  பிரியமானவன்.


எதையும் சாராதவனாய், தூயவனாய்த் திறமையுடையவனாய் சம பாவனையுடன் கூடியவனாய் மனத்துயரமற்றவனாய் காமிய கர்மங்களைத் துறந்தவனாய் என்னிடத்து பக்தி செய்பவன் எனக்கினியவன் ஆகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்.


விளக்கம்:

ஞானியின் இலக்கணத்தை மேலும் தொடர்கிறார் பகவான். இந்த சுலோகத்தில் அவர் ஆறு குணங்களை வர்ணிக்கிறார்.

-> வேண்டுதலில்லாதவன்:

இந்திரியங்கள் வாயிலாக வரும் இன்பங்களில் ஆசையற்றவன் அநபேக்ஷனாகிறான். ‘அநபேக்ஷ:எனில் எதையும் சாராதவன் என்பது பொருள். தனது நல்வாழ்வுக்கு உடல் மற்றும் புலனுறுப்புகளைச் சாராதவன்; மற்றும் தனது மனநிறைவுக்கு உணர்வுறுப்புகள் எதையும் சாராதவன். நம் செயலை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என நாம் விரும்புவோம். ஆனால் ஞானி இதுபோன்ற எந்த வேண்டுதலும் அற்றவனாய் இருக்கின்றான். சாதாரணமாக ஒருவனது தேவைக்கு அதிகமாக இருக்கின்றவைகளை நாம் ஆடம்பரம் என்கிறோம். ஆனால் ஞானி, இந்த உடல் மனம் மற்றும் அதைச் சார்ந்தவைகள் அனைத்தையும் ஆடம்பரமாகத்தான் பார்க்கின்றான். அவனுடைய இருத்தலுக்கு இவைகள் எதுவும் முக்கியமற்றவையே ஆகும். ஆகையினால் இவைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனிடம் எந்த விகாரமும் இல்லை.

தன்னை சுய-இருத்தலுடன் கூடியவனாக அறிந்தவனாகையால், தனது இருப்புக்கு வேறு எந்த காரணியையும் அவன் சார்ந்திருக்கவில்லை. உடல் உயிருடன் இருந்தால் மட்டுமே நான் இருக்கிறேன் என்கிற மாயையால் அவன் பாதிக்கப்படுவதில்லை. ஆத்மா என்பதுஸத்ய-வஸ்து’, பூரணமான இருத்தலுடன் கூடியது; ஆகவே அது தனது இருப்புக்கு பிராணன், உடல், மனம், புத்தி அல்லது வேறு எதையும் சார்ந்து இல்லை. மாறாக, இவைகளனைத்தும் தனது இருப்புக்கு இந்த சைத்தன்ய-ஆத்மாவை சார்ந்துள்ளன. இந்த ஞானம் ஒரு ஞானியை அநபேக்ஷனாக, எதையும் சார்ந்தில்லாதவனாக, எந்த வேண்டுதலும் அற்றவனாக, எல்லா வகையிலும் விடுதலையடைந்தவனாக ஆக்குகிறது

முழுவுலகின் அதிஷ்டானமாக விளங்கும் ஆத்மாவிலேயே அனைத்தும் அமைந்துள்ளன என தனது சுயசொரூபத்தை அறிந்தவனாகையால், நான் எங்கே எப்படி வாழ்வேன்? உள்ளிட்ட புறநிலைகள் குறித்த கவலைகள் அவனுக்கு இல்லை. இது வெறும் வாய்மொழியாக அல்ல; ஆத்மாவின் இயல்பாக அவன் பார்ப்பதால் சூழ்நிலைகள் மீதான எந்தச் சார்ப்பும் அவனுக்கு இல்லை


-> தூய்மையானவன்:

எதையும் சாராதவன், எது குறித்தும் கவலை கொள்ளாதவன் என ஞானியின் இலக்கணங்களைப் பார்த்துவருகிறோம். எனவே ஞானி, எப்படியும் வாழலாம் என்பதாக விஷயங்களில் கவனக்குறைவாக இருக்கிறான் என நினைத்துவிடலாகாது. அவன் இயல்பிலேயே தூய்மையானவனாக இருக்கிறான். அதை பகவான்சு1சி:என்கிற சொல்லால் குறிக்கிறார்; செளசத்தை உடையவன்சு1சி’. இது புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை இரண்டையும் குறிக்கின்றது. உடலில் தொடங்கி, உடுத்தும் உடை, வசிக்கும் இடம், பயன்படுத்தும் பொருள் என அனைத்திலும் கொண்டிக்கும் தூய்மை புறத்தூய்மையாகிறது. கர்மயோகம் மற்றும் ஞானயோகத்தின் துணையுடன் அடையப்பட்ட மனம் மற்றும் புத்தியின் தூய்மை அகத்தூய்மையாகிறது. ஞானி அனைத்து விதத்திலும் சுத்தமானவனாக இருக்கின்றான்


-> திறமையானவன்:

3க்ஷ:, திறமையுடன் கூடியவன் என்பது இங்கு விஷயங்களை உள்ளபடியே சரியாகப் புரிந்து கொள்ளும் திறன் வாய்ந்தவன் என்பதைக் குறிக்கிறது. ஒப்பீட்டளவில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை விரைவாக மதிப்பீடு செய்து, அதற்கெனச் செய்யப்பட வேண்டியதை அவனால் திறனாகச் செய்ய முடியும். பொதுவாக திறமையான செயல் என்பது, ஒரு கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்யப்பட வேண்டும் என்கிற ஒருவனது மதிப்பீடு மற்றும் புரிதலைப் பொருத்ததாக அமைகிறது. அந்த மதிப்பீடு அவனது விருப்பு-வெறுப்பு, எதிர்பார்ப்பு மற்றும் பயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு ஞானி எந்தவொரு சூழ்நிலையையும் பாரபட்சமின்றி நடுநிலையோடு புரிந்து கொள்வதால், அவன் தக்ஷனாக இருக்கின்றான்.

மேலும் அவன், காரணத்தை காரணமாகவும், எல்லா காரியங்களும் வெறும் பெயர் மற்றும் வடிவமாக, நாம-ரூபமாக, மித்யாவாக அறிந்துள்ளான். ஆகவே தோன்றிக்கொண்டிருக்கும் அனைத்தும் ஒரு அனுபவபூர்வ-இருப்பை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் அவைகள் அனைத்தும் தனது சுயசொரூபமே என்பதையும் அவன் அறிந்துள்ளான். இவ்விதம் தனது சுயத்திற்கும் ஈஷ்வரனுக்குமான ஐக்கியத்தை புரிந்து கொண்ட ஒருவன்3க்ஷஎனப்படுகிறான். இறைவனின் பெயர்களில் ஒன்று3க்ஷஆகும்; சிருஷ்டி, ஸ்திதி மற்றும் லயத்தை உண்டாக்கும் திறனுடையவன் என்பதை இச்சொல் குறிக்கிறது. அல்லது, சாஸ்திரத்தில் நல்ல அறிவை உடையவன்3க்ஷஎன்று அழைக்கப்படுகிறான். ஸ்ருதி-ஸ்ம்ருதி-புராண-இதிஹாசாதி3ஷு 3க்ஷ:வேதங்களிலும், புராண இதிகாசங்களிலுளிலும் நிபுணத்துவம் உடையவன். இவ்விதமாக தக்ஷ என்கிற இந்த அழகான சொல்லிற்கு பல அர்த்தங்கள் உள்ளன.


   -> நடுநிலையாயிருப்பவன்:

உதா3ஸீந:எனில் சம பாவனையுடன் இருப்பவன்; எந்த பக்கமும் சேராதவன்; நடுநிலையானவன் என்பது பொருள். ஞானி செயலாற்றுவதில் திறமையானவனாக இருக்கின்றான் எனப் பார்த்தோம். செயலாற்றும் வல்லமையைத் தனக்கு ஒத்தவர்களுக்கு ஒருவிதமாகக் செய்தலும் ஒவ்வாதவர்களுக்கு வேறு விதமாகச் செய்தலும் அவனிடத்து இல்லை. நிறைகோல் போல ஓரம் சாராது எல்லார்க்கும் பொதுவாக நடந்துகொள்வதனால் உதாஸீனன் ஆகின்றான். பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைமுறை, ஒழுக்கநெறிகள் என எந்தவொரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கேயுரிய சாதக பாதகங்கள் உள்ளன. ஒருவன் அதை எப்படி அணுகுகிறான் என்பதைப் பொறுத்து நிலைகள் மாறுபடுகின்றன. எனவே சட்டென ஒரு நிலைப்பாட்டை எடுப்பதென்பது சரியானதாக இருக்காது. ஒரு வேதாந்த சாதகனுக்கு சமபாவனை என்பது மிக முக்கியமான ஒரு பண்பாகும். எந்தவொரு விஷயத்திற்கும் ஓரம் சாராமல், நடுநிலையிலிருந்து விசாரம் செய்யும் மனதினாலேயே மேலான மெய்மையை புரிந்து கொள்ளமுடியும். இதையறிந்த ஞானி, உதாஸீனனாக நடுநிலை வகித்து அனைத்தையும் கையாளுகிறான்

-> மனத்துயரமற்றவன்:

3தவ்யத2:எனில் மனவழுத்தமற்றவன் என்பதைக் குறிக்கிறது. எந்தவிதமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தாலும் அது குறித்து மனவழுத்தமோ துயரமோ அடையாதவன் ஞானி. இங்கு ஒரு பொதுநியதியை புரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் ஞானியும்கூட தனது அனுபவங்களின் மீது எந்த கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் அனுபவங்கள் என்பது தேசம், காலம் மற்றும் பிராரப்தம் எனும் மூன்று விஷயங்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது குளிர்காலத்தில் குளிர் இருக்கும்; கோடையில் வெப்பமாக இருக்கும்; மழைக் காலங்களில் மழை பெய்யும். இவைகள் அனைத்தும் தேச காலத்தைப் பொறுத்தது. இதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அடுத்ததாக, பிராரப்தம் என்பது சாதகமான மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகளைக் கொண்டுவருகிறது. ஞானியின் வாழ்க்கையும்கூட பிராரப்தத்தால் நிர்வகிக்கப்படுவதே ஆகும். ஞானம் சாதகமற்ற அனைத்து சூழ்நிலைகளையும் நீக்கிவிடுகிறது எனச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். வேதாந்தத்தால் உலகத்தையும் சூழ்நிலையையும் மாற்ற முடியாது. ஆனால் எந்தவிதமான சூழ்நிலையையும் ஆரோக்கியமான மனநிலையோடு அணுக வேதாந்தம் உதவுகிறது. இத்தகைய மாற்றம் வெளிப்புறமாக இருக்காது. சூழ்நிலை அனைவருக்கும் பொதுவானதே ஆனால் அதை அணுகும்முறையில் ஞானி மாறுபடுகிறான். இதனால் அவன் மனவழுத்தம் அற்றவனாக, துயரமற்றவனாக இருக்கிறான்

பகவான் அளிக்கும் எந்த அனுபவமும் தனது ஆன்மீக முன்னேற்றத்திற்காக என்பதை சாதகன் ஒருவன் புரிந்து கொள்ளவேண்டும். வெவ்வேறு வகையான விதைகள் வளர வெவ்வேறு சூழ்நிலைகள் தேவை. ஒரு விதைக்கு நிறைய மழை தேவைப்படலாம்; மற்றொன்றுக்கு வறண்ட வானிலை தேவைப்படலாம். அதுபோல, நம் ஒவ்வொருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கும் வெவ்வேறு வகையான அனுபவங்கள் தேவைபடுகின்றன. சில நேரங்களில் ஆரோக்கியம்; சில நேரங்களில் நோய்; சில நேரங்களில் குடும்பத்தில் உறுப்பினர்கள் சேர்வது; சில நேரங்களில் யாரோ மரணித்து நீக்கத்தை அடைவது என விதவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. எனவே, ‘ஒவ்வொரு அனுபவமும் ஈஷ்வரனால் எனக்காக சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனது ஆன்மிக வளர்ச்சிக்காக அளிக்கப்பட்டது. ஆகையினால் பகவான் கொடுக்கிற எல்லாவித அனுபவத்திலிருந்தும் நான் ஏதாவது கற்றுக் கொள்ளவேண்டும்என்கிற பாவனை ஒருவனை மேம்படுத்துகிறது. கீதையிலும் அர்ஜுனனின் துயரமான சூழ்நிலையே அவனை கர்மயோகம், பக்தியோகம் உள்ளிட்ட இந்த ஆன்மிகப் பாடத்தை கற்றுக் கொள்ளத் தயார்படுத்தியது. எனவே மிகவும் துயரமான அனுபவத்திலிருந்தும்கூட ஆன்மீகப் பாடம் கற்றுக்கொள்ள ஒருவன் தயாராக இருக்கும்போது எந்த அனுபவமும் விரும்பத்தகாதது எனக் கூற முடியாது. ‘ஏன் நான்?’ என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்தவனாக, ஒரு ஞானியைப் போல அவன் எல்லா அனுபவங்களையும் வரவேற்கலாம்.


-> காமிய கர்மங்களைத் துறந்தவன்:

ஸர்வ ஆரம்ப4 பரித்யாகீ3எனில் எல்லாவிதமான ஆரம்பத்தையும் துறந்தவன். இங்கேஆரம்ப4என்பது திட்டமிட்டு துவக்கப்படுவதைக் குறிக்கிறது. எல்லா கர்மங்களும் ஒருவகையில் ஆரம்பங்களே, ஏனெனில் அவைகளனைத்தும் ஒரு சங்கல்பத்தின் காரணமாகத் தொடங்கும். சங்கரர் பாஷ்யத்தை எழுதியதும், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கத் தொடங்கியதும் ஒரு குறிப்பிட்ட ஆரம்ப புள்ளியிலிருந்தே ஆகும். ஆனால், ‘நான் செய்கிறேன்; என்னால் செய்யப்படுகிறதுஎன்கிற கர்த்ருத்துவதை கைவிட்டவன்ஸர்வ ஆரம்ப4 பரித்யாகீ3ஆகிறான். இது ஞானத்தினால் மட்டுமே சாத்தியப்படுகிறது

உண்மையில், ‘ஆரம்ப4என்பதை பிணைக்கும் கர்மங்கள், பந்தக-கர்மாணி, எனக் கூறலாம். எந்தவகையான செயல்கள் ஒருவனை பிணைக்கிறது? இந்த செயல் வெற்றியடைந்தால் எனது வாழ்வு முழுமை பெற்றுவிடும் என எண்ணி துவங்கும் எந்தவொரு செயலும் பந்தத்தை உண்டாக்குவது ஆகும். ‘இதைச் செய்தால் நான் நிறைவடைந்து விடுவேன்எனச் செய்யப்படும் எந்தவொரு செயலும் ஒரு போராட்டமாக அல்லது அடிமைதனமாகவே இருக்கிறது. இந்த உண்மையை புரிந்துகொண்டவன் ஞானி ஆகையினால் அவன் முழுமையை அடையும் பொருட்டு எதையும் ஒருபோதும் செய்வதில்லை. மாறாக அவனது எந்தவொரு செயலும் முழு நிறைவிலிருந்து வெளிவருகிறது. ‘நான் பூர்ணமானவன்என்கிற ஞானம் அவனிடம் நிலைபெற்றிருக்கிறது. எனவேநான் பூர்ணமானவன்; ஒரு புதிய முயற்சியை மேற்கொள்கிறேன்; இது வெற்றியடையலாம் அல்லது தோல்வியடையலாம்; அது எனது பூர்ணத்துவத்தை ஒன்றும் செய்யாதுஎன்கிற அறிவு அவனிடம் எப்போதும் இருக்கிறது. அவனுக்கு பூர்ணத்துவம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகிறதே தவிர அது அவனது வாழ்க்கையின் இலக்கு அல்ல

இப்படிப்பட்ட ஞானி, பரா-பக்தன் எனக்குப் பிரியமானவன், மத்34க்த: மே ப்ரிய:, என்கிறார் கிருஷ்ணர். அவன் நானே(மம ஆத்மா) என்பதால் எனது பிரியத்திற்குரியவனாகிறான் என்பது பொருள். இந்த குணங்களனைத்தும் ஒரு ஞானிக்கு இயல்பானவை, ஆனால் ஒரு சாதகனுக்கோ இவைகள் அடையப்பட வேண்டிய சாதனைகளாக இருப்பவை.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தன் மனதை ஏமாற்றாத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும் உண்மையான அன்பும் பரமனை அடைய உற்ற பாதைகளாகும்.

---------------------------------------------------------------------------------------------

||12.17|| ஞானி இருமைகளால் தாக்கப்படாதவன் என்கிறார் பகவான்:

यो हृष्यति द्वेष्टि शोचति काङ्क्षति

शुभाशुभपरित्यागी  भक्तिमान्य: मे प्रिय: ।। १७ ।।

யோ ஹ்ருஷ்யதி த்3வேஷ்டி சோ1சதி காங்க்ஷதி

சு1பா4சு14பரித்யாகீ3 4க்திமாந்ய: மே ப்ரிய: ।। 17 ।।


:  :  யார்    हृष्यति  ஹ்ருஷ்யதி  மகிழ்வடைவதில்லை    

द्वेष्टि  த்3வேஷ்டி  வெறுப்பதில்லை    शोचति  சோ1சதி  துயரப்படுவதில்லை      

काङ्क्षति  காங்க்ஷதி   ஆசைப்படுவதில்லை     

शुभ अशुभ परित्यागी  சு14 அசு14 பரித்யாகீ3  நலன் கேடுகளை விட்டவன்   

: :  யார்   भक्तिमान्  4க்திமாந்  பக்திமான்     :    அவன்     

मे  மே எனக்கு    प्रियப்ரிய:  பிரியமானவன்.


மகிழ்தலும், வெறுத்தலும், துன்புறுதலும், ஆசையுறுதலுமின்றி, நன்மை தீமைகளைத் துறந்த பக்தனே எனக்குப் பிரியமானவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.


விளக்கம்:

ஒரு ஞானியானவன் எந்தவித இருமைகளினாலும் தாக்கப்படாதவன் என்கிறார் பகவான். உலகம் இருமைகளினால் ஆனது - த்3ந்த்3வாத்மகம் ஜகத். ஒருவனது உள்ளத்துளிருக்கின்ற சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு போன்ற இருமைகள் மற்றும் வெளியிலிருந்து வருகிற இருமைகள் இரண்டையும் ஞானி சமமாக பாவிக்கிறான்


=> இன்பத்திலும் துன்பத்திலும் மூழ்குவதில்லை

எந்தவொரு சூழ்நிலைக்கும் தீவிரமான உணர்ச்சிகளின் மூலம் எதிர்வினையாற்றுவதிலிருந்து விடுபட்டவன் ஞானி. ஹ்ருஷ்யதி சோ1சதி, இன்பத்தில் மூழ்கிவிடுதலோ அல்லது துயரத்தில் மூழ்கிவிடுதலோ ஞானியிடம் கிடையாது. இங்கு, ‘ஹ்ருஷ்யதிமற்றும்சோ1சதிஇரண்டையும் ஒரு இணையாக எடுத்துக் கொள்ளவேண்டும். பொதுவாக மக்கள், சாதகமான சூழ்நிலை வரும்போது அதிக மகிழ்ச்சியில் திளைப்பதையும், பாதகமான நிகழ்வுகளில் மிகவும் சோர்வடைந்து விடுவதையும் தங்களது இயல்பாகக் கொண்டுள்ளனர். ஆனால் ஞானியோ விரும்பியது கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியில் மூழ்கிவிடுவதோ, அது கிடைக்கவில்லை அல்லது கைவிட்டுச் சென்றுவிட்டதே என துயரப்பட்டுக்கொண்டு கிடப்பதோ கிடையாது. மனுஷ்யலோகமான இவ்வுலகம், சுகம் மற்றும் துக்கத்தின் சேர்க்கையினால் கிடைக்கப்பெற்றது; அதை பிராரப்தத்தின்படி அனுபவித்துதான் தீர வேண்டும். இந்த அறிவினால் அவன் எந்தவித தீவிர உணர்ச்சியிலும் மூழ்கிவிடுவது கிடையாது

இழப்புகள் படைப்பின் இன்றியமையாத அங்கம் என்பதை உணர்ந்து, தனக்குப் பிடித்தமானவை பறிக்கப்படும்போது அவன் துன்பப்படுவதில்லை. அவனது பார்வையில், அதுவும் முழுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு நாளும் இழப்புகள் ஏற்படுகின்றன; எங்கோ யாரோ எப்பொழுதும் துக்கத்தில் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பை அனுபவிக்கும் வரை இதை ஒருவன் அடையாளம் காண்பதில்லை. அத்தகைய இழப்பினால் வருகிற துயரமும் இந்த ஞானிக்கு இல்லை. அனுதாபம் இருக்கலாம் ஆனால் வருத்தம் இல்லை. இங்கு ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். ‘துயரம் வேண்டாம்என்று கீதை சொல்லவில்லை; துயரம் இருந்தால், அது ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் அதற்காகச் செய்ய வேண்டியவை செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது உளவியல் சிக்கல்களை உருவாக்கிவிடும். ஆனால், இங்கு பேசப்படும் பராபக்தனுக்கோ உண்மையில் எந்த வருத்தமும் இல்லை என்கிற யதார்தத்தை கீதை சொல்கிறது அவ்வளவே


=> விரும்புவதுமில்லை, வெறுப்பதுவுமில்லை:

காங்க்ஷதிஎன்பது விருப்பிலிருந்து விடுபட்டவன் என்பதையும், ‘ த்3வேஷ்டிஎன்பது வெறுப்பிலிருந்து விடுபட்டவன் என்பதையும் காட்டுகிறது. எப்போது மனம் ஒரு சமத்துவ நிலையை அடைகிறதோ அப்போதுதான் இந்த பக்குவம் சாத்தியப்படுகிறது. அதுவரை நாம் ஏதேனும் ஒரு உணர்வின் உச்சத்தில் கட்டுண்டு இருப்போம். குணங்களை ஒழுங்குபடுத்துதலே சமநிலைப்படுத்துதல் ஆகும். சாதகன் ஒருவன் இந்த சமநிலையை அடையத்தான் முயற்சிக்க வேண்டும். இங்கு, மகிழ்ச்சியோ துயரமோ விருப்போ அல்லது வெறுப்போ இவைகளை அடையவே கூடாது என்பதாக புரிந்து கொள்ளத் தேவையில்லை. இவைகளனைத்தும் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள்தான். ஆனால் அச்சூழ்நிலைகளில் இவ்வுணர்ச்சிகள் உச்சகட்டத்தை அடையும்போது அது ஒருவனின் பகுத்தறியும் சக்தியை மழுங்கச் செய்கிறது. ஒரு மனிதனின் மிகப் பெரிய செல்வம் என்பது விவேகசக்தி ஆகும். ஆகவே இதுபோன்ற நேரங்களில் அதிக எச்சரிக்கையுணர்வுடன் இருக்க சாதகன் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதிர்பார்ப்புகள் இருக்கலாம், ஆனால் அவை நிறைவேறலாம் அல்லது நடக்காமல் போகலாம். சிறந்தது நடக்கட்டும் என்கிற நம்பிக்கையும், மோசமானதை எதிர்கொள்ளும் தயார்நிலையும் இருக்கவேண்டும். ஏனென்றால் ஒருவனால் எதிர்காலத்தை திட்டமிட முடியும்; அதற்கேற்ற பங்களிப்பை அளிக்க முடியும்; ஆனால் கட்டுப்படுத்த முடியாது.


=> நலன் கேடுகளை விட்டவன்:

சு14 அசு14 பரித்யாகீ3எனில் புண்ணிய பாபத்தை துறந்தவன் என்பது பொருள். ‘சு14எனில் புண்ணியம்; ‘அசு14எனில் பாபம். வேதாந்தத்தின் அடிப்படையில் இரண்டும் பிணைப்பையே உண்டாக்குகிறது. புண்ணியத்தினால் சொர்க்கம் மற்றும் இன்பம் முதலிய பலன் கிடைப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எனவே சுகத்தை கொடுக்கும் சூழ்நிலையை உண்டாக்கி புண்ணியம் ஒருவனை பந்தப்படுத்துகிறது. மேலும் இயல்பில், புண்ணிய பலனும் முடிவிற்குட்பட்டதுதான். ஆகையினால் அது அனுபவித்து தீர்க்கப்பட்டு, பூஜ்ஜியமாகிறது. இதனால், பாபம் இரும்பினாலான கைவிலங்கு எனில் புண்ணியம் என்பது தங்கத்தினாலான விலங்காகும். எனவே ஞானி புண்ணியத்தையும் துறக்கின்றான். கற்பித்தல் முதலிய பல வகையான புண்ணிய அல்லது சுப காரியங்களை அவன் செய்தபோதிலும், ‘நான் செய்கிறேன்என்கிற சங்கல்பத்தை துறப்பதால் அவன் அதனுடைய பலனைப் பெறுவதில்லை

கிடைக்கின்ற பலன்கள் குறித்து மோஹமடைந்தவர்களே பாபச் செயலை செய்கின்றனர். ஞானிக்கு, ஒன்றைச் செய்து அடைய வேண்டிய பலன் என எதுவுமில்லையாதலால் அவன் இயல்பிலேயே பாப-கர்மத்தை செய்வதில்லை. மேலும் ஞானியின் பார்வையில் புண்ணியமும்கூட தேவையில்லை ஏனெனில் தனது சுயத்தையே அவன் சுக-சொரூபமாகப் பார்க்கின்றான். இதனால் அனைத்து புண்ணியங்களும் அவனது இந்த ஞானத்தில் ஒடுக்கத்தை அடைகின்றன. பாபம் மற்றும் புண்ணியம் இரண்டிற்கும் ஆதாரமாக அக்ஞானம் விளங்குகிறது. அக்ஞானம் நீக்கப்பட்டுவிட்டதால் ஒரு ஞானி இவ்விரண்டிலிருந்தும் விடுதலை அடைகிறான். எனவே அவன் சு14 அசு14 பரித்யாகீ3

இப்படிப்பட்ட பராபக்தன் எனக்கு பிரியமானவன்; நானாகவே இருப்பவன்: 4க்திமாந் மே ப்ரிய:, என்கிறார் பகவான்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

விருப்பு, வெறுப்பு, அச்சம் இவைகள் குடிகொண்டிருக்குமிடத்துக்கு ஈஷ்வரன் வருவதில்லை.

---------------------------------------------------------------------------------------------