||13.3|| அடுத்த சில சுலோகத்திற்கான முகவுரை:
तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे श्रृणु ।। ३ ।।
தத்க்ஷேத்ரம் யச்ச யாத்3ருக்ச யத்3விகாரி யதச்1ச யத் ।
ஸ ச யோ யத்ப்ரபா4வச்1ச தத்ஸமாஸேந மே ச்1ருணு ।। 3 ।।
तत् क्षेत्रं தத் க்ஷேத்ரம் அந்த க்ஷேத்திரம் यत् च யத் ச யாது என்றும்
यादृक् च யாத்3ருக் ச எத்தன்மைகளை உடையதென்றும் यत् विकारि யத் விகாரி என்ன விரிவுகளை உடையதென்றும் यत: च यत् யத: ச யத் எதிலிருந்து எது உண்டாகிறதென்றும்
स च य: ஸ ச ய: அந்த க்ஷேத்திரஞன் யார் என்றும் यत् प्रभावश्च யத் ப்ரபா4வச்1ச என்ன மஹிமையுடையவன் என்றும் तत् தத் அதை समासेन ஸமாஸேந சுருக்கமாக
मे மே என்னிடமிருந்து श्रृणु ச்1ருணு கேள்.
அந்த க்ஷேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது, என்ன பிரிவுகளையுடையது, எதிலிருந்து எது உண்டானது, அந்த க்ஷேத்திரஞன் யார், அவன் மஹிமை யாது? — இவைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அந்த க்ஷேத்திரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.
விளக்கம்:
இந்த சுலோகத்தை ஒரு ‘ப்ரதிக்ஞா’ சுலோகம் எனக் கூறலாம். என்னென்ன சொல்லப்படப்போகிறது என கூறப்படுவது அல்லது உறுதிமொழியளிப்பது ‘ப்ரதிக்ஞா’ எனப்படுகிறது. இங்கு பகவான் இவற்றையெல்லாம் நான் சுருக்கமாகச் சொல்லப்போகிறேன் என்பதை முகவுரையாகக் கூறுகிறார்.
=> முகவுரை:
க்ஷேத்திரம் என்று என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த தத்துவம் யாது(யத்) என்று கூறப்போகிறேன். அதன் கூறுகளை விவரிப்பதன் மூலம் அதனுடைய தன்மைகள் என்ன(யாத்3ருக்) என்பதையும் விளக்கப்போகிறேன். அது மட்டுமின்றி, அது எந்தெந்த வேறுபாடுகளை உடையதாக உள்ளது என்றும்(யத் விகாரி) எதனிடமிருந்து எது தோன்றியுள்ளது என்கிற காரண-காரிய சம்பந்தத்தையும்(யத: ச யத்) சொல்லப்போகிறேன்.
மேலும் ஆத்ம தத்துவமான க்ஷேத்திரஞனின் மஹிமைகள் என்னென்ன(ஸ ச ய: யத் ப்ரபா4வ:) என்பதையும் சுருக்கமாகச் சொல்லப்போகிறேன் என்கிறார் பகவான். இங்கு ‘ய:’ என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல்லாக இருப்பதால் இது க்ஷேத்திரஞனைக் குறிக்கிறது என அறியப்படுகிறது. ஏனெனில் க்ஷேத்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் நடுநிலைப் பாலினத்தைக் குறிக்கும் சொல்லாகும். க்ஷேத்திரஞன் என்பது ஸத்யம்-ஞாநம்-அநந்தம் ப்ரம்ம ஆகும். அது எதையும் உருவாக்குவது இல்லை. ஆனால் மாயா-உபாதியின் துணையுடன் அது எல்லாமுமாக ஆகிறது. இப்படி பலவிதமான உபாதிகளுடன் கூடிய அந்த க்ஷேத்திரஞனின் பெருமைதான் என்ன? இவைகளனைத்தையும் சுருக்கமாக சொல்லப்போகிறேன், கேள் அர்ஜுனா, என்கிறார் கிருஷ்ணர். மிகச் சுருக்கமான விளக்கம் என்பதால் கவனமாகக் கேட்டு புரிந்துகொள் என அர்ஜுனனைத் தயார்ப்படுத்த இவ்விதம் உரைக்கிறார்.
வேத வேதாந்தம் புகட்டுவதெல்லாம் இவ்விரண்டு தத்துவங்களே ஆகும். இவ்விரண்டின் நிலைகளை விளக்குவதற்கென்று அமைந்தவைகளெல்லாம் கலைகளாகின்றன. இத்தகு பெருமைவாய்ந்த க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரஞனின் தன்மைகளைக் கேட்பவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அதன் மஹிமை அடுத்த சுலோகத்தில் உரைக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------
||13.4|| இவைகளைப் பற்றிய உண்மை வெளியாகிய விதம்:
ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधै: पृ़थक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितै: ।। ४ ।।
ருஷிபி4ர்ப3ஹுதா4 கீ3தம் ச2ந்தோ3பி4ர்விவிதை4: ப்ருத2க் ।
ப்3ரஹ்மஸூத்ரபதை3ச்1சைவ ஹேதுமத்3பி4ர்விநிச்1சிதை: ।। 4 ।।
ऋषिभि: ருஷிபி4: ரிஷிகளால் विविधै: छन्दोभि: விவிதை4: ச2ந்தோ3பி4: விதவிதமான சந்தஸ்களால் पृ़थक् ப்ருத2க் பாங்காக बहुधा ப3ஹுதா4 பலவகைகளில்
गीतं கீ3தம் பாடப்பெற்றிருக்கிறது विनिश्चितै: விநிச்1சிதை: நிச்சய புத்தியைத் தருகிற हेतुमद्भि: ஹேதுமத்3பி4: யுக்தியோடு கூடிய ब्रह्मसूत्रपदै: एव च ப்3ரஹ்மஸூத்ரபதை3: ஏவ ச ப்ரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும் (பாடப்பெற்றிருக்கிறது).
(இவ்வுண்மை) ரிஷிகளால் விதவிதமான சந்தஸ்களில் பாங்காகப் பலவகைகளில் பாடப்பெற்றிருக்கிறது. யுக்தியால் நிச்சய புத்தியைத் தந்து, ப்ரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும் (பாடப்பெற்றிருக்கிறது).
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அது (க்ஷேத்திரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.
விளக்கம்:
இந்தச் சுலோகம் ஞானத்தின் மஹிமையை விளக்கும் சுலோகமாகும். யாரால் எந்த விதத்திலெல்லாம் இந்த ஞானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இங்கு ‘கீ3தம்’ எனில் பாடப்பட்டது, சொல்லப்பட்டது, உபதேசிக்கப்பட்டது எனப் பொருள்படும். மந்திரங்களிலும் அல்லது இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் ரிஷிகளால் பல வழிகளில் இது கூறப்பட்டுள்ளது — ருஷிபி4: ப3ஹுதா4 கீ3தம். ‘ச2ந்த3ஸ்’ என்பது யாப்பிலக்கணத்தை, ஒரு மந்திரப் பிரயோகத்தின் ஒலி வடிவத்தை, வேறு வார்த்தையில் கூறுவதானால் மீட்டரைக் குறிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட சந்தத்தில் பாடுவது ஆகும். காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருகதீ, பங்க்தீ, த்ரிஷ்டுப், ஜகதீ முதலிய பலவகைகள் இதில் உள்ளன. மேலும், ‘ச2ந்த3ஸ்’ என்பது வேத மந்திரச் செய்யுளிலக்கணத்தைக் கூறுவதாலும் அனைத்து வேதங்களும் சந்தஸின் அடிப்படையில் அமைவதாலும் வேதத்திற்கே ‘சந்தஸ்’ என்கிற பெயருமுண்டு.
எனவே நான்கு வேதங்களிலுள்ள மந்திரங்களாலும் இது பல்வேறு வழிகளில் பாடப்பட்டுள்ளது. உதாரணமாக தைத்ரிய உபநிஷத், க்ஷேத்திரமாகிய இந்த சிருஷ்டி ஐம்பூதங்களுடன் கூடியதாகவும் மற்றும் ஸத்யம்-ஞானம்-அநந்தம் ப்ரம்ம க்ஷேத்திரஞன் எனவும் கூறுகிறது. மற்ற உபநிஷத்துக்களில் சிருஷ்டிப் பிரகரணமும் ஆத்ம தத்துவமும் வித்தியாசமான வழிகளில் சொல்லப்படுகிறது, ப3ஹுதா4. ஒன்று ஆத்மா; மற்றொன்று அநாத்மா. ஒன்று ஸத்யம்; மற்றொன்று மித்யா. இதுவே அடிப்படை சாரம் ஆகும். மேலும், வேதத்தின்(ஸ்ருதி) கருத்து ரிஷிகளால் கூறப்படும்போது அது ஸ்மிருதி ஆகிறது. இப்படிப்பட்ட ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றிலும் இது விதவிதமாகப் பாடப்பட்டுள்ளது.
=> யுக்தியுடன் கூடியது:
ப்ரம்மத்தை குறிக்கிற பதங்களாலும் இது பாடப்பட்டிருக்கிறது — ப்3ரஹ்ம ஸூத்ர பதை3:. ‘பத3’ எனில் எதன் துணைக்கொண்டு ஒன்று அறியப்படுகிறதோ அது, பத்3யதே ஞாயதே அநேந. பரம்பொருளை விளக்குகின்ற இடங்களில், அதாவது உபநிஷத்துக்களில், இந்த வார்த்தைகள் ப்ரம்மனின் தன்மைகளை விளக்குவதாக உள்ளன. வெறுமனே ஒரு அறிக்கையாகக் கூறப்படாது, ப்ரம்மத்தை காட்டுகின்ற இந்தச் சொற்கள் சந்தேகத்திற்கிடமின்றி புரிந்துகொள்ளப்பட வேண்டும். எனவே உபநிஷத்தே அதற்கான தர்க்கத்தையும் யுக்தியையும் அளிக்கிறது, ஹேதுமத்3பி4:. ப்ரம்மத்தின் சொரூபத்தை ‘ஸத்யம்-ஞானம்-அநந்தம்’ என வெறுமனே கூறாமல் அதை நிரூபித்துக் காட்டுகிறது தைத்ரியோபநிஷத். ப்ரம்ம மட்டுமே ஸத்யம் இந்த உலகம் மித்யா என்பதை நிரூபிக்க, களிமண்-பானை, தங்கம்-ஆபரணம், இரும்பு-நகவெட்டி என பல உதாரணங்களைக் கொடுக்கிறது சாந்தோக்ய உபநிஷத். இவைகளின் மூலம் பெயரும் வடிவமும் மித்யா அதற்கு ஆதாரமாக இருக்கின்ற அந்த ஒரு பொருள் மட்டுமே ஸத்யம் எனக் காட்டப்படுகிறது. எங்கெல்லாம் உதாரணங்கள் கொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அது காரணங்களுடன் யுக்தியை அளிக்கிறது. எனவே வேதங்கள் என்பது வெறும் போதனையின் சாராம்சம் மட்டுமல்ல; மோக்ஷத்திற்குத் தேவையான பல்வேறு வழிமுறைகள் மற்றும் விஷயங்கள், உதாரணங்கள், யுக்திகள், தர்க்கங்கள் என பலவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இவ்விதம் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாது, ஆராய்ச்சி செய்து நிச்சயிக்கப்பட்டதாக(விநிச்1சிதை:), வேதமானது க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரஞனின் தன்மையைப் பற்றிப் பேசுகிறது என்கிறார் பகவான். அதில் யுக்தியுடன் கூடிய, முரண்பாடு இல்லாத, மற்றும் தர்க்கத்தினால் நீக்க முடியாத வழிமுறைகளால் நிலை நாட்டப்பட்டதாக இந்த ப்ரம்மத்தைக் குறிக்கிற சொற்கள் அமைந்துள்ளன. ‘அஹம் ப்ரம்ம அஸ்மி’ என்கிற திட்டவட்டமான ஞானத்தை அளிக்கும் வல்லமை உடையதாக அந்த வாக்கியங்கள் உள்ளன; க்ஷேத்திரஞனே ஈஷ்வரனாக இருக்கின்றார் என்கிற உண்மையைத் தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வாக்கியங்களாக உள்ளன.
க்ஷேத்திரஞனின் மஹிமையை பின்னர் விளக்க இருக்கிற பகவான், அதன் பெருமையை கூறியவராக இங்கு அர்ஜுனனின் கவனத்தை ஈர்க்கிறார். இனி முதலில் அவர் க்ஷேத்திரத்தின் பாகுபாடுகள் குறித்த விளக்கத்தை அடுத்த இரு சுலோகத்தில் அளிக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
நாரத மஹரிஷியினிடத்திருந்தது போன்று ஞானமிச்ர பக்தி, அதாவது ஞானத்தோடு கலந்துள்ள பக்தி சாதகர்களுக்கு முற்றிலும் வேண்டப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------