||13.5|| க்ஷேத்திரத்தின் பாகுபாடுகள்:
महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च ।
इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचरा: ।। ५ ।।
மஹாபூ4தாந்யஹங்காரோ பு3த்3தி4ரவ்யக்தமேவ ச ।
இந்த்3ரியாணி த3சை1கம் ச பஞ்ச சேந்த்3ரியகோ3சரா: ।। 5 ।।
महाभूतानि மஹாபூ4தாநி மஹாபூதங்கள் अहङ्कार: அஹங்கார: அஹங்காரம்
बुद्धि: பு3த்3தி4: புத்தி अव्यक्तम् एव च அவ்யக்தம் ஏவ ச மூலப்பிரக்ருதியும்
इन्द्रियाणि दश இந்த்3ரியாணி த3ச1 புலன்கள் பத்து एकं च ஏகம் ச மற்றும் ஒன்று (மனது)
पञ्च इन्द्रिय-गोचरा: च பஞ்ச இந்த்3ரிய-கோ3சரா: ச இந்திரிய விஷயங்கள் ஐந்தும் …
மஹாபூதங்கள், அஹங்காரம், புத்தி, மூலப்பிரக்ருதி, புலன்கள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய விஷயங்கள் ஐந்து, …
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,
விளக்கம்:
=> முகவுரை:
சுலோகம் ஐந்து மற்றும் ஆறில் க்ஷேத்திரத்தின் பாகுபாடுகள் குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. க்ஷேத்திரம் என்பது ஜட தத்துவமாகும். ஆகையினால் க்ஷேத்திரத்திலிருந்து உண்டாகின்ற அனைத்தும் ஜடமானதே ஆகும். இந்த ஜட தத்துவம் இரு நிலையில் உள்ளது:
(1) அவ்யக்த அவஸ்தா - இது காரண அவஸ்தை எனவும் அழைக்கப்படும். இது மாயையைக் குறிக்கிறது.
(2) வ்யக்த அவஸ்தா - இது காரிய அவஸ்தை; வெளித்தோற்றத்திற்கு வந்த தத்துவம் ஆகும்.
ஜடமான மாயை அறிவு சொரூபமான ப்ரம்மத்தை சார்ந்துள்ளது. எனவே ப்ரம்மத்தோடு சேரும்போது ப்ரம்மத்தின் அறிவு மாயையில் பிரதிபலிக்கின்றது. அதன் விளைவாக காரண அவஸ்தையிலிருந்து அது வெளித்தோற்றத்திற்கு வருகிறது. இவ்விதம் வெளித்தோற்றத்திற்கு வராத மாயையும், அதிலிருந்து தோன்றிய இந்த முழுவுலகமும் க்ஷேத்திரம் ஆகும்.
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல சிருஷ்டிப் பிரகரணம், வெவ்வேறு உபநிஷத்துக்களில் விதவிதமாகப் பேசப்பட்டுள்ளது. பொதுவாகப் பேசப்படும் ஒன்றைக் குறித்து இங்கு பார்ப்போம்.
பரா பிரக்ருதியான ப்ரம்மத்தை சார்ந்து, ஜட ரூபமான மாயை இரண்டாகத் தோற்றமளிக்கிறது. (1) சமஷ்டி (2) வ்யஷ்டி. சமஷ்டி எனில் சிருஷ்டி காரணமான ஈஷ்வரனும், வ்யஷ்டி என்பது தனியொரு ஜீவனின் காரண சரீரத்தையும் குறிக்கிறது. சமஷ்டி என்பது காடு எனில், வ்யஷ்டி என்பது அதிலுள்ள ஒரு மரத்தைக் குறிக்கிறது. சிருஷ்டி காரணமான ஈஷ்வரனை சார்ந்துள்ள முக்குண மாயையிலிருந்து படிப்படியாக உலகம் தோன்றுகிறது. முதலில், ஐந்து சூக்ஷம பூதங்கள் உண்டாகின்றன. இந்த ஐந்து சூக்ஷம பூதங்களின் சத்வ அம்சத்திலிருந்து நமது மனம் தோன்றுகிறது. இவைகளின் ரஜோ அம்சத்திலிருந்து பிராணனும், தமோ அம்சத்திலிருந்து ஸ்தூல பஞ்ச பூதங்கள் மற்றும் ஸ்தூல சரீரங்களும் தோன்றுகின்றன. எனவே காரண ரூப மாயையிலிருந்து சூக்ஷம பூதங்கள், அதிலிருந்து சூக்ஷம சரீரங்கள், பின் ஸ்தூல பூதங்கள், இறுதியாக ஸ்தூல சரீரங்கள் என்பது வரிசை.
காரண ரூப மாயை —> சூக்ஷம பூதங்கள் —> சூக்ஷம சரீரங்கள் —> ஸ்தூல பூதங்கள் —> ஸ்தூல சரீரங்கள்.
=> எட்டுவிதமாகவுள்ள பிரக்ருதி:
இனி, இந்த சுலோகத்தில் பகவான் க்ஷேத்திரத்தை எவ்விதம் வரையறுக்கிறார் என்பதை விசாரிக்கலாம். ‘தெய்வீகம் பொருந்திய என் மாயை கடப்பதற்கு அரிதானது’ என ஏழாவது அத்தியாயத்தில்(7.14) பகவான் பகர்கிறார். அதே அத்தியாயத்தில் நான்காவது சுலோகத்தில்(7.4), இவைகளைத் தம்முடைய எட்டுவிதப் பிரக்ருதி என்றும் கூறுனார். இங்கு க்ஷேத்திரத்தை வரையறுக்கும்போது முதலில் அவைகளிலிருந்து ஆரம்பிக்கிறார். ஐந்து சூக்ஷம பூதங்கள், அஹங்காரம், புத்தி மற்றும் அவ்யக்தம் சேர்ந்து எட்டுவித பிரக்ருதி ஆகின்றன — அஷ்டதா பிந்ந ப்ரக்ருதி.
மஹாபூதங்கள்:
இங்கு மஹா பூதங்கள் என்பது பஞ்சீகரணத்திற்கு உட்படாத சூக்ஷம பூதங்களைக் குறிக்கிறது. ஆகாசம், வாயு, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களும் நுண்மையானதாக எங்கும் நிறைந்திருக்கிறபடியால் அவைகள் ‘மஹத்’ என்கிற பெயரடையுடன் மஹாபூதங்கள் என்று இங்கு சொல்லப்படுகின்றன. இந்த படைப்பு முழுதும் இவைகளைத் தவிர வேறொன்றுமில்லை. மேலும் இந்த சூக்ஷம பூதங்களே அனைத்து ஸ்தூல பூதங்களுக்கும் ஆதாரமானதாக இருப்பதால், அதன் அடிப்படையிலும் ‘மஹத்’ என்பது பொருத்தமான பெயரடையாகிறது.
அஹங்காரம்:
இது ‘நான் செய்கிறேன்’ எனும் கர்த்ருத்துவத்தை குறிக்கும் தனிப்பட்ட அஹங்காரத்தை குறிக்கவில்லை. இது சமஷ்டி-அஹங்காரத்தை, அதாவது ஹிரண்யகர்பரை, ஈஷ்வரனை, பிரம்மதேவரைக் குறிக்கிறது. இந்த அஹங்காரமே ஐம்பூதங்களுக்குக் காரணமாகிறது. பூதங்கள் மூலமாக எழும் ‘இருக்கிறேன்’ என்ற உணர்ச்சி அஹங்காரம் என்ற பெயர் பெறுகிறது.
புத்தி:
இங்கே மீண்டும் புத்தி என்ற சொல் தனிப்பட்ட புத்தியைக் குறிக்கவில்லை, மாறாக மஹத்-தத்துவம் என்று அழைக்கப்படும் சமஷ்டி-புத்தியைக் குறிக்கிறது. ஸ்ருதியில் சிருஷ்டி என்பது பின்வருமாறு பேசப்பட்டுள்ளது. உதாரணத்திற்காக தைத்ரிய உபநிஷத்தை எடுத்துக்கொண்டு விசாரம் செய்யலாம். முதலில் ஈஷ்வரனிடமிருந்து சங்கல்பம் உண்டாகிறது — ஸோ’காமயத ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேய. ‘நான் பலவாக ஆவேனாக’ என ஈஷ்வரன் விரும்பினார். பின்னர், இந்த படைப்புக்கு தேவையான அனைத்து அறிவையும் அவர் கவனத்திற்குக் கொண்டுவந்தார் — ஸ தபோ’தப்யத. பின்னர் இவைகளனைத்தையும் உருவாக்கினார் — ஸ தபஸ்தப்த்வா இத3ம் ஸர்வம் அஸ்ருஜத. ஈஷ்வரனின் இதே சங்கல்பம் சாந்தோக்ய உபநிஷத்தில், ‘ததைக்ஷத’ எனக் கூறப்படுகிறது. சிருஷ்டிக்கு முன் அனைத்தும் வெளிப்படாமல் இருந்தது - அவ்யாக்ருத. படைப்பு தன்னை வெளிப்படுத்துவதற்கு ஒரு தொடக்கப்புள்ளி இருக்க வேண்டும். அந்த தொடக்கப் புள்ளியான இந்த சங்கல்பம் சமஷ்டி-புத்தியிலிருந்தே உண்டாகிறது. எவ்விதம் அந்தவொரு குறிப்பிட்ட நாளில் நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம-பலன்களால் உந்தப்பட்டவர்களாக நாம் உறக்கத்திலிருந்து விழிக்கிறோமோ, அதுபோலவே அனைத்து ஜீவாத்மாக்களின் சமஷ்டி-கர்ம-பலன்கள், ஈஷ்வரனை உறக்கத்திலிருந்து எழுப்பி இந்த சங்கல்பத்தை உண்டாக்குகிறது. எப்படி இந்த சங்கல்பம் எழுகிறது எனில், ஈஷ்வரன் அனைத்தையும் அறிந்தவராக(ஸர்வக்ஞ) இருப்பதால், சிருஷ்டி வெளிப்படும் நேரம் வந்துவிட்டது என்று முடிவு செய்யலாம் அல்லது சரியான நேரத்தில் சங்கல்பம் அதுவாக எழலாம்.
‘நான் பலவாக ஆவேனாக’ என்கிற எண்ணம் எழுகிறது. இந்த எண்ணம் எழுந்தவுடன், சிருஷ்டி வெளிப்படுவதற்கான அறிவு தேவை, மற்றும் அந்த அறிவுக்கு ஒரு உபாதி தேவை. இந்த அறிவைக் கொண்டிருக்கின்ற ஈஷ்வரனின் உபாதியே மஹத்-தத்துவமான சமஷ்டி-புத்தியாகும். இதற்கு முன் விளக்கப்பட்ட அஹங்காரத்திற்கு, காரணமாக இருக்கின்ற இந்த உபாதியினால் மட்டுமே பரம் ப்ரம்மமானது, சிருஷ்டிக்கு ஆயத்தமாகவுள்ள ஹிரண்யகர்பரான ஈஷ்வரனாக ஆகிறது.
இந்த சமஷ்டி-புத்தியில், முந்தைய சிருஷ்டி எப்படி இருந்தது என்பதன் முழு ஞானமும் இருக்கிறது. ‘ஸ தபோ தப்யத’ என்கிற ஸ்ருதி வாக்கியத்தில் தபஸ் என்பது இந்த அறிவையே குறிக்கிறது. மாறாக, நாம் நினைப்பதுபோல உடலால் செய்யும் தவமோ விரதமோ இங்கு தபஸ் அல்ல; இது ஞான-மயமான தபஸ். இந்த சிருஷ்டி முன்பு இருந்ததைப் போலவே இருக்கத் தேவையான அந்த அறிவைக் கண்டு, அதை கவனத்திற்கு கொண்டுவருதலைக் குறிக்கிறது. பின்னர் ஸ்ருதியானது சிருஷ்டி-கிரமத்தைக் கொடுக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறு படைப்பிற்குத் தேவையான அறிவைத் தொகுக்க பயன்படும் உபாதியை, சமஷ்டி-புத்தியை, மஹத்-தத்துவத்தை இங்கு புத்தி என்று அழைக்கிறார் பகவான்.
அவ்யத்கம்:
மஹத்-தத்துவமான புத்திக்கும் காரணமாக இருப்பது அவ்யக்தம் ஆகும். உண்மையில் அவ்யக்தமே அனைத்திற்கும் காரணம் — ஸர்வஸ்ய காரணம். ஏனெனில் சிருஷ்டிக்கு முன், அனைத்தும் வெளித்தோற்றத்திற்கு வராத நிலையிலே, அதாவது அவ்யக்த நிலையிலேயே இருந்ததால் அது அவ்விதம் சொல்லப்படுகிறது. அவ்யக்தம் வியக்தமாக மாறுவதே சிருஷ்டி ஆகும். எனவேதான் வியக்தமான அனைத்திற்கும் அவ்யக்தமே காரணமாக ஆகிறது. அவ்யாக்ருதம் என்றும் அழைக்கப்படும் இந்த அவ்யக்தமே ஈஷ்வரனின் உபாதி ஆகும். இதுவே மாயா எனவும் அழைக்கப்படுகிறது. எனவே அவ்யக்தம், அவ்யாக்ருதம் மற்றும் மாயை இந்த மூன்றின் பொருளும் ஒன்றேயாம். இதுவே ஈஷ்வரனின் சக்தியாக உள்ளது. சுலோகம் 7.14-ல் ‘எனது மாயை கடப்பதற்கு அரிது’ என்கிற பகவானது சொல்லை, சங்கரர் இங்கு மேற்கோளாகக் காட்டுவதன்மூலம், இந்த மாயை ஈஷ்வரனின் சக்தியாகும் எனக் காட்டுகிறார். பரம் ப்ரம்மத்திற்கு ஈஷ்வரன் எனும் அந்தஸ்து கிடைப்பதற்கு இந்த மாயையே காரணமாகும், மற்றும் அதனாலேயே இங்கு சிருஷ்டிப் பிரகரணமும் கூறப்படுகிறது.
=> சிருஷ்டி-க்ரமம்:
அவ்யக்தம் —> சமஷ்டி புத்தி —> ஈஷ்வரன் —> சூக்ஷம மஹாபூதங்கள் —> சூக்ஷம-ஸ்தூல-பிரபஞ்சங்கள்.
அவ்யக்தத்திலிருந்து மஹாபூதங்கள் வரையிலான அனைத்தும் தம்முடைய எட்டுவிதப் பிரக்ருதி என பகவான் ஏழாவது அத்தியாயத்தில் கூறுவதாகப் பார்த்தோம். இதுவே இந்த சுலோகத்தின் முதல் வரியில் விவரிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டாவது வரியிலும், அடுத்த சுலோகத்திலும் விகாரத்தைப் பற்றி, மேலும் இந்த முழு படைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பற்றிச் சுருங்கச் சொல்லுகிறார் பகவான்.
பத்து இந்திரியங்கள்:
கண் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன. அவ்யக்தமானது ஒருவித மாற்றத்திற்கு உட்பட்டு மஹாபூதங்களாக மாறுகிறது. இந்த சூக்ஷம பூதங்கள் சூக்ஷம-பிரபஞ்சத்திற்கும் ஸ்தூல-பிரபஞ்சத்திற்கும் காரணமாக அமைகிறது. இதனால் அந்தக்கரணமும் புலன்களும் வெளிவருகின்றன.
மனம்:
இங்கு ‘ஏகம்’ என்கிற சொல் மனதைக் குறிக்கிறது. இந்த்3ரியாணி த3ச1 ஏகம் ச — பத்து இந்திரியங்கள் மற்றும் மனம் ஒன்று என்பது பொருள். மனமானது பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. மனம் இல்லாமல் இந்த இந்திரியங்கள் செயல்பட முடியாது, எனவே இது ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. புலனுறுப்புகள் மூலம் கொணரப்படுகின்ற புலனுணர்விற்கு ஏற்ப மாற்றத்திற்கு உட்படுவதால் இது அறிவதற்கான மற்றுமொரு கருவியாக உள்ளது. மேலும், இங்கு இந்த மனம் என்பதில் தனியொருவனின் புத்தியும் அடங்குகிறது.
இந்திரியார்த்தங்கள்:
சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் இவைகளின் வடிவங்களாயுள்ள ஐந்தும் புலனுறுப்புகளின் விஷயங்களாகும் — பஞ்ச இந்த்3ரிய-கோ3சரா:. இவைகள் ஸ்தூல பூதங்கள் அனைத்தையும் உள்ளடக்குகிறது. பார்த்துணரப்படுகின்ற சூரியன், சந்திரன் முதல் பிரபஞ்சத்தில் இருப்பதாக ஒருவனால் ஊகிக்கப்படுகின்ற அல்லது நம்பப்படுகின்ற அனைத்தும் ‘இந்த்3ரிய-கோ3சர’ ஆகும்.
இனி அடுத்த சுலோகத்தில், அந்தக்கரணத்தின் சில மாற்றங்களை பகவான் பட்டியலிட்டு இவைகளும் க்ஷேத்திரம் எனக் கூற இருக்கிறார். பொதுவாக நாம் இவைகளையெல்லாம்தான் நமது சுயம் எனத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். இவைகளெல்லாம் சுயம் அல்ல, அந்த சுயத்தினால் அறியப்படும் க்ஷேத்திரமே என்கிறார். சுயமாகிய க்ஷேத்திரஞன் இந்த எல்லா தன்மைகளிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான்.
---------------------------------------------------------------------------------------------
||13.6|| க்ஷேத்திரப் பாகுபாடுகளின் தொடர்ச்சி:
इच्छा द्वेष: सुखं दु:खं सङ्घातश्चेतना धृति: ।
एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ।। ६ ।।
இச்சா2 த்3வேஷ: ஸுக2ம் து3:க2ம் ஸங்கா4தச்1சேதநா த்4ருதி: ।
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா3ஹ்ருதம் ।। 6 ।।
इच्छा இச்சா2 இச்சை द्वेष: த்3வேஷ: துவேஷம் सुखं ஸுக2ம் சுகம் दु:खं து3:க2ம் துக்கம் सङ्घात: ஸங்கா4த: உடல் चेतना சேதநா அறிவு धृति: த்4ருதி: மனவுறுதி एतत् ஏதத் இது सविकारम् क्षेत्रं ஸவிகாரம் க்ஷேத்ரம் வேறுபாடுகளோடு கூடின க்ஷேத்திரம்
समासेन ஸமாஸேந சுருக்கமாக उदाहृतम् உதா3ஹ்ருதம் உரைக்கப்பட்டது.
விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடல், உணர்வு, உறுதி — இவ்விதம் வேறுபாடுகளோடு கூடின க்ஷேத்திரம் சுருக்கமாக உரைக்கப்பட்டது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே க்ஷேத்திரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.
விளக்கம்:
மனதும் அதில் அனுபவிக்கப்படும் விதவிதமான உணர்வுகளும்கூட க்ஷேத்திரமே என்கிறார் பகவான். அதற்கான உதாரணங்களாக இங்கு சில உணர்வுகளை எடுத்துக்கூறுகிறார்.
=> காணப்படு பொருளாகவுள்ள உணர்வுகள்:
விருப்பு என்பது அந்தக்கரணத்தைச் சேர்ந்த ஒரு எண்ணமாகும்(வ்ருத்தி). இன்பம் தரும் ஒரு பொருளைத் திரும்பவும் பெற எண்ணங்கொள்வது இச்சை ஆகும். இந்த வ்ருத்தியை ‘நான்’ என்பதுடன் சேர்த்து ‘நான் ஆசை உடையவன்’ என்று ஒருவன் நினைக்கிறான். ஆனால் அறியப்படும் தன்மையுடையதாக இருப்பதால் இதுவும் க்ஷேத்திரமே என பகவான் சுட்டிக்காட்டுகிறார்.
‘த்3வேஷ’ எனில் வெறுப்பு. துன்பம் கொடுக்கும் ஒரு பொருளை அல்லது அவ்வினத்தைச் சேர்ந்த ஒன்றைக் காணுமிடத்து அதை விலக்க நினைப்பது வெறுப்பு. ‘ஸுக2ம்’ இன்பமென்று பொருள்படுகிறது. அனுகூலமாகத் தோன்றி அமைதி தந்து ஸத்வகுணத்தை வளர்ப்பது எதுவோ அது சுகம். ‘து3:க2ம்’ எனும் துன்பம், பிரதிகூலமாகத் தோன்றி அமைதியின்மையை வளர்க்கிறது. க்ஷேத்திரஞனாக இருப்பதைப் போலத் தோன்றினாலும் இவைகளனைத்தும் அறியப்படுகின்ற பொருளாதலால் இவைகள் உண்மையில் க்ஷேத்திரம் ஆகும்.
=> ஸங்காதம்:
‘ஸங்கா4த:’ என்பது உடலமைப்பு. உடலையும் இந்திரியங்களையும் ஒன்றாகப் பொருத்தி வைப்பதற்கு சங்காதம் என்று பெயர். பல பாகங்கள் ஒன்றாகப் பொருத்தப்பெற்று ஒரு இயந்திரம் ஆகிறது. அதுபோல வெவ்வேறு அங்கங்கள், அவயவங்கள், புலன்கள் முறையாக அமையப்பெற்று உடல் அல்லது க்ஷேத்திரம் உருவெடுக்கிறது.
=> சேதனம்:
‘சேதநா’ என்பது அறிவை, உணர்வை, அதாவது சிதாபாசத்தைக் குறிக்கிறது. சிதாபாசம் என்பதைப் பற்றி சிறிது விசாரம் செய்யலாம்.
நமது இந்த ஸ்தூல உடலுக்கும், இந்த ஸ்தூல பிரபஞ்சத்திற்கும் சுவபாவமாக அறிவு அல்லது உணர்வு கிடையாது. அது ஜடம் ஆகும்; உணரும் தன்மையற்றது. அவ்வாறே இந்த மனமும்கூட ஜட சொரூபமே ஆகும். ஆனால் அனுபவத்தில் சூக்ஷம சரீரமான இந்த மனதை நாம் எப்போதும் ஜடமாக அனுபவித்தது கிடையாது; அனுபவிக்கவும் முடியாது. எனவே எல்லா காலத்திலும் உணரும் தன்மையுடன் இருக்கின்ற இந்த மனம் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது உடலுக்கும் அது பரவி விடுகின்றது. மனம் உடலோடு உள்ள சம்பந்தத்தை எடுத்துவிட்டால் உடலானது ஜடமாகிறது.
இனி, மனதிற்கு உணர்வு எங்கிருந்து வந்தது? இயற்கையாகவே மனமானது ஜட சொரூபம் எனில் அதற்கு இந்த அறிவு அல்லது அறியும் தன்மை எப்படி வந்தது என்கிற கேள்விக்கும் நாம் சாஸ்திரத்தைத்தான் முழுமையாக நம்பியாக வேண்டும். ப்ரம்ம தத்துவத்தின் உண்மை சொரூபமே ஸத்-சித்-ஆனந்தம் ஆகும். அதாவது வரையறுக்க முடியாத அறிவு மற்றும் இருத்தலுடன் கூடியது ப்ரம்மம் ஆகும். இப்படிப்பட்ட ப்ரம்மத்துடன் ஜடமான மாயை சேரும்போது அதற்கும் ஒரு அறிவு சொரூபம் வருகிறது. இந்த மாயையிலிருந்து வந்த சூக்ஷம பூதத்திற்கும், சூக்ஷம சரீரத்திற்கும் இந்த அறிவை பிரதிபிம்பிக்கும் சக்தி சுவபாவமாக உள்ளது. எனவே சூக்ஷம சரீரம் உற்பத்தியானவுடன் பரம்பொருளின் அறிவான சித்(चित्) அங்கு பிரதிபிம்பிக்கும். ஆ ஸமந்தாத் பா4ஸதே இதி ஆபா4ச: — அதைப் போலத் தோன்றியுள்ளது ஆபா4சம் எனப்படும். ஆகவே சூக்ஷம சரீதத்தில், ‘சித்’-தை போலத் தோன்றிக் கொண்டிருக்கும் இந்த அறிவு சிதா3பா4சம் (चिदाभास:) எனப்படுகிறது. ஸ்தூல சரீரத்திற்கு இயற்கையாக பிரதிபிம்பிக்கும் சக்தி இல்லையாதலால் இது ஸ்தூல சரீரத்திற்கு பொருந்தாது. எனவே சூக்ஷம சரீரம் ஸ்தூலத்தோடு அபிமானம் வைக்கும்போதே அந்த அறிவு உடலுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த சிதாபாசம் மற்றும் சூக்ஷம சரீரத்தின் சேர்க்கையையே நாம் வழக்கத்தில் ‘உயிர்’ என்கிறோம்.
உயிர் = சிதாபாசம் + சூக்ஷம சரீரம் + (காரண சரீரம்).
* இந்த சிதாபாசம் என்பது ஸத்யமா அல்லது மித்யாவா?
அநித்யம் என்பதால் இது மித்யா ஆகும். ஆகவே இதுவும் க்ஷேத்திரமே. மனதிலுள்ள அறிவு என்பது அறிவைப் போல; அதாவது ப்ரம்மத்தின் பிரதிபிம்பம் ஆகையால் இது க்ஷேத்திரம் ஆகும்.
=> உறுதி:
‘த்4ருதி’ என்பது உறுதியாக இருத்தலைக் குறிக்கிறது. உடலும் புலன்களும் சோர்வடையும் தன்மை உடையவைகள் ஆகும். அவைகளைத் தளரவிடாமல் உறுதியாகத் தாங்கிப் பிடிப்பது எதுவோ அது திருதி. இதன் வலிவால் உடல் வாழ்க்கை நெடிது நிலைபெறுகிறது. காணப்படுபொருள் ஆதலால் இதுவும் க்ஷேத்திரத்தோடு சேர்க்கப்படுகிறது. இச்சை முதல் திருதி வரை இவையாவும் அந்தக்கரணத்தின் விகாரங்களாகும். இவைகளோடு பயம், கூச்சம் முதலிய மனதின் மற்ற அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்து நாம் க்ஷேத்திரம் எனப் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த க்ஷேத்திரம் அதன் வேறுபாடுகளோடு சுருக்கமாக உரைக்கப்பட்டது — ஸவிகாரம் க்ஷேத்ரம் ஸமாஸேந உதா3ஹ்ருதம், என்கிறார் பகவான். இந்த உடலை க்ஷேத்திரம் என்று முதல் சுலோகத்தில் சொல்லியதன் முழுவிளக்கமும் இந்த ஐந்து மற்றும் ஆறாவது சுலோகங்களில் வந்தமைகிறது. இதில் மனம் மற்றும் அதன் விகாரங்களை உள்ளடக்கிய சூக்ஷம சரீரம், புலன்களான ஸ்தூல சரீரம் மற்றும் அவ்யக்தமான காரண சரீரம் என மூன்றுவித சரீரங்கள் மட்டுமல்லாது, இந்திரிய-கோசரமான இந்த உலகமும் க்ஷேத்திரம் என பகவானால் கூறப்பட்டது. மிக சுருக்கமாகக் கூறப்பட்டாலும் இதில் எதுவுமே விடுபடவில்லை. இறுதியாக எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று மட்டுமே ஆகும். அது இந்த முழு க்ஷேத்திரத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஆதாரமாகவும் மற்றும் அதை அறிபவனாகவும் இருக்கும் க்ஷேத்திரஞன் ஆகும். அடுத்த சில சுலோகங்களில் இந்த ஞானத்திற்கானத் தகுதிகளை கொடுத்த பிறகு, பகவான் க்ஷேத்திரஞனைப் பற்றி பேச இருக்கிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
இந்தச் சரீரம் உபயோகமற்றதும், அழிந்துபோகக்கூடியதுமானால் ஆத்மசாதகர்கள் ஏன் இதை ஜாக்கிரதையுடன் காப்பாற்றுகிறார்கள்? உள்ளே ஒன்றுமில்லாத வெறும் பெட்டியை ஒருவரும் ஜாக்கிரதையாகப் பாதுகாப்பதில்லை. விலையுயர்ந்த நகைகளும், பணமும், பொருள்களும் உள்ள பெட்டியை எல்லாரும் பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். அதுபோல, பக்தர்கள் ஈஷ்வரன் வாசம் செய்கிற இந்தச் சரீரத்தைப் பாங்குடன் காப்பாற்றுகிறார்கள். இதைப் பராமுகமாக விட்டுவிடமாட்டார்கள். நமது சரீரங்களெல்லாம் ஈஷ்வரனாகிய பொக்கிஷம் நிறைந்த பெட்டிகளாகும்.
---------------------------------------------------------------------------------------------