திங்கள், 23 நவம்பர், 2020

பகவத் கீதை நமக்கு தேவையான ஒன்றா?

 பகவத் கீதை நமக்கு தேவையான ஒன்றா? 

எந்தவொரு அறிவையும் அடைவதற்கு முன், அந்த அறிவின் தேவை குறித்த விசாரம் செய்யப்பட வேண்டும். பகவான் க்ருஷ்ணர் அருளிய கீதையை பயில ஆரம்பிக்கும் முன், பகவத் கீதையின் தேவை? வாழ்க்கையின் இறுதி காலத்திலன்றி இப்பொழுது கீதையை அறிய வேண்டிய அவசியம் பற்றிய அறிவு, கீதையை ஆர்வத்துடன் படிக்க உதவும்.  


மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு:


आहारनिद्रा भयमैतुनंच सामान्यमेतत् पशुभिर्नराणाम्  

(ஆஹாரநித்3ரா 4யமைதுனம்ச ஸாமான்யமேதத் பசு1பி4ர் நராணாம்)


இந்த முதல் வரியில் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒற்றுமை கூறப்படுகிறது. உணவை உட்கொள்ளுதல், உறக்கம், தன்னைக் காத்துக் கொள்ளும் பயம், இனப்பெருக்கம் இவைகள் அனைத்தும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் பொதுவாக உள்ளது

बुद्धिर्हि तेषां अधिकोविषेष: बुद्याविहीना पशुभि: समाना: ।। 

( பு3த்3தி4ர்ஹி தேஷாம் அதி4கோவிஷேஷ: புத்3யாவிஹீனா பசு1பி4: ஸமானா: ।। )

மனிதனுக்கு விஷேஷமாக கொடுக்கப்பட்டிருப்பது புத்தி. யார் இந்த புத்தியை சரியாக பயன்படுத்தவில்லையோ அவர்கள் மிருகத்துடன் சமமாகின்றார்கள்

ஆகவே புத்தியே மனிதனை மிருகத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது


புத்தி என்றால் என்ன? 

புத்தி என்பது கரணம்(करणम्) அல்லது கருவி என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. புத்தியானது மூன்று விதத்தில் நமக்கு கருவியாக செயல்படுகிறது

(1) தன்னை அறிதல்[self-consciousness] 

(2) தர்ம-அதர்ம ஞானம்

இயற்கையாகவே நமக்கு எது சரி, செய்யத்தக்கது? எது தவறு, செய்யக்கூடாதது? என்ற அறிவு உள்ளது.

(3)  உண்மை-தோற்றம் பற்றிய அறிவு

எது நிஜம்? எது நிழல் என்பது பற்றிய ஞானம். ஒருமுறை கானல் நீரை அறிந்த பின், இது நீர் அல்ல தோற்றம் என்ற அறிவு வந்துவிடுகிறது. ஆனால் மிருகத்தினால் அவ்விதம் அறிய முடிவதில்லை

ஒருகால் ஒரு மனிதன் மேற்கூரிய இந்த மூன்று சக்தியையும் இழந்துவிட்டால் அவனுக்கும் மிருகத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய் விடுகிறது. ஆகவே இந்த புத்தியின் சக்திக்கு ஏற்ற அறிவை கொடுக்கும் போது அவன் கீழ்கண்ட ப்ரயோஜனத்தை அடைகிறான்


புத்தியினால் என்ன பலனை ஒருவன் அடைகிறான்

மனிதன் புத்தியினால் மிருகத்தை காட்டிலும் வேறாக என்ன அதிக லாபத்தை அடைகிறான் எனில்

    (1) அதிக இன்பத்தை அடைகிறான் - .ம்., இசை, கலை, சுவை

    (2) அனைத்தையும் பயன்படுத்தும், கட்டுப்படுத்தும் திறன்

    (3) பாபத்தை தவிர்த்தும், தர்மத்தில் ஈடுபட்டும் புண்ணியத்தை சேகரித்தல். இதன் மூலம் இக லோக சுகம், பரலோக சுகம் அல்லது இறுதி லக்ஷியத்திற்கு முன்னேறுகிறான்

    (4) மோக்ஷத்தை அடைதல்


புத்தியை சரியாக பயன்படுத்தவில்லையெனில்:

புத்திக்கு சரியான அறிவை கொடுக்காத போது

(1) மிருகத்தை காட்டிலும் அதிக துயரத்தை அடைகிறான் - .ம்., உறக்கமின்றி சிரமப்படுதல், மற்றவர்களுடன் ஒப்பிட்டு பொறாமையினால் துக்கப்படுதல், எதிர்காலம் குறித்த பயம்.

(2) அடிமையாக இருத்தல் - மனிதன் தனது புலன்களினால் அவன் உருவாக்கிய பொருளுக்கே அடிமையாகி இருக்கின்றான். .ம்., கைப்பேசி, உணவு, பொழுதுபோக்கு சாதனங்கள்

(3) பாபத்தை சேகரித்தல்

(4) சோகம், சம்சாரம்(பந்தப்படுதல்) இவற்றை அடைகிறான்


ஒருவனுடைய புத்திக்கு தேவையான சரியான அறிவை வேதாந்தம், பகவத் கீதை போன்ற தத்துவ நூல்கள் புகட்டுகிறது. இத் தத்துவ நூல்கள், தர்ம-அதர்மத்திலுள்ள சந்தேகத்தை நீக்கி, உண்மை-தோற்றம்(சத்ய-மித்யா) பற்றிய அறிவை கொடுத்து மனிதனை மனிதனாக வாழ தகுதிப்படுத்துகிறது. பகவத் கீதையின் தேவையை உணரும் போதே அதை அறிவதற்கான நாட்டம் அதிகரிக்கும். இப்போது சிரத்தையுடன் அதை அறிந்து கொள்ள முயல்வோம்.


கீதை பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று:

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய இம்மூன்றும் பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்தின் சாஸ்திரம் என்று கூறப்படும் இந்த பிரஸ்தானத்திரயத்தில் அடங்காத தத்துவ விளக்கம் வேறு எந்த நூலிலும் இல்லையென்று கூறப்படுகிறது. மற்ற சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கோட்பாடுகள் பிரஸ்தானத்திரயத்தில் அடங்கியுள்ள கோட்பாடுகளுக்கு விளக்கமாக வந்து அமையலாம்.


கீதையின் மையக் கருத்து

(1) ஆத்ம ஞானம் - ‘நான் யார்?’ உண்மையில் எப்படிப்பட்டவன் எனும் அறிவு.

(2) தர்மத்தை பற்றிய அறிவு - மனதை எப்படி பண்படுத்தலாம்? எப்படிப்பட்ட சாதனைகளின் மூலம் புத்தியை பயன்படுத்தி மோக்ஷத்தை அடையலாம்? எனும் அறிவு.


மஹாபாரதத்தில் அடங்கியது:

பகவத்கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது. பீஷ்மபர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம். ஆகவே பகவத்கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. மொத்த ஸ்லோகங்கள் எழுநூறு


கதைச் சுருக்கம்

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் யுத்தம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. வியாசர் திருதராஷ்டிரரிடம் யுத்தத்தை காண ஞானக்கண்ணை அளிப்பதாக கூறுகிறார். தன் சொந்தங்கள் அழிவதை தான் பார்க்க விரும்பவில்லை என திருதராஷ்டிரர் கூறியதால் அவரின் தேரோட்டியான சஞ்சயனுக்கு ஞான கண்ணை, அதாவது பார்ப்பதுடன் மட்டுமின்றி மனதில் நடக்கும் எண்ணங்களையும் கிரஹிக்கும் சக்தி கொண்ட கண்களை அளிக்கிறார்

சஞ்சயனிடம் திருதராஷ்டிரர் ஒவ்வொரு நாளின் முடிவை மட்டும் தெரிவிக்குமாறு கூறுகிறார். அப்படியே சஞ்சயனும் செய்கிறார். பத்தாவது நாள் அர்ஜுனனால் பீஷ்மர் வீழ்ந்து விடுகிறார். அதைக் கூறும் போது தனது படையின் மீது நம்பிக்கையிழந்த திருதராஷ்டிரர் சஞ்சயனிடம், ‘முதலிலிருந்து நடந்ததைச் சொல்என கேட்கின்றார். இப்போது சஞ்சயன், போர் ஆரம்பித்த தருணத்தையும், அர்ஜுனனின் மனக் குழப்பத்தினால் விளைந்த கீதையையும் கூற ஆரம்பிக்கிறார்.

முதல் அத்தியாயம் மற்றும் இரண்டாவது அத்தியாயத்தின் முதல் 10 ஸ்லோகங்கள் அர்ஜுனனின் மனதை விளக்குவதாக அமைந்துள்ளது. சங்கரர் தன்னுடைய கீதா பாஷ்ய விளக்கத்தை இரண்டாவது அத்தியாயம் 11 -வது ஸ்லோகத்திலிருந்து ஆரம்பிக்கிறார்



முதல் அத்தியாயம்: 

அர்ஜுன விஷாத யோகம் (अर्जुनविषादयोग:)

(அர்ஜுனனின் சோகத்தை விளக்கும் அத்தியாயம்)

யோகம் - தலைப்பு.

துயரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். அதாவது

(1) துரியோதனன் அனுபவித்த துயரம்: பொறாமையின் காரணமாக எழுந்த இத்துயரம் அவனுக்கும் மற்றவர்களுக்கும் கேடு விளைவித்தது.

(2) அர்ஜுனன் அனுபவித்த துயரம்: கருணையினால் வந்த இத்துயரம் அவன் மனதை பண்படுத்தியது. யோகமாக மாறியது. அர்ஜுனனுக்கும் நமக்கும் கீதை கிடைத்தது.

ஆகவே அர்ஜுனனின் சோகம் கீதை தோன்றுவதற்கு விதையாக இருந்தது. வாழ்க்கையில் எந்த துயரம் நம்மை பண்படுத்தும், எது நம்மை பந்தத்தில் மூழ்கடிக்கும் என்பதை உணரவேண்டும். மனதில் ஏற்படும் நிறைவின்மை பந்தம்(मानस ताप: बन्ध: - மானஸ தாப: பந்த:).

இந்த நிறைவின்மை, பொறாமை கோபம் பயம் வெறுப்பு முதலியவற்றிக்கு வழிவகுக்கிறது